Advertisement

அரவிந்திற்கே தன் நிலை மிகக் கொடூரமாகத் தெரிய தலையலடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். மனைவி… தாய் …மகன்… அவன் நிலை மிகப் பரிதாபகரமாகியது … கண் விழித்த ஜானகியிடம் ,

“ம்மா சாரிம்மா….. எனக்காக உங்களயும் இங்க அழைச்சிட்டு வந்து கஷ்டப்படுத்துறேன்னு புரியுதுமா … நீங்க பேரனை அழைச்சிட்டு நாளைக்கு ஊருக்குப் போயிருங்க , ரமேஷும் அனுமாவும் வந்துட்டு இருக்காங்க….”

அவன் கைப்பிடித்தவர் , “நீ எப்படி இப்படி பேசலாம் … எனக்கு அனுவும்… ராதாவும் வேற வேறயா… என் மருமக குணமாகாம நான் இங்கயிருந்து எங்கயும் போகமாட்டேன். நீ பேரன கவனி… எனக்குப் பரவாயில்ல.”

அன்று இரவு முழுவதும் அரவிந்தால் அவர்களை விட்டு நகர முடியவில்லை …. ரமேஷ் விமானத்தில் ஏறி விட்டோம் என்ற தகவல் தந்தவன் , இந்நேரம் வந்து இறங்கிவிட்டானா எனக் கேட்க ஃபோனை எடுக்க அது எப்போதோ ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒரு வழியாக ரமேஷ் அனன்யாவையும் தாயம்மாவையும் அங்கு அழைத்துக் கொண்டு வந்து சேர அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது.

ரமேஷ் வந்தவன் அரவிந்தை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து , “அரவிந்த் உன் ஃபோன் ஸ்விட்ச் ஆப் … ஆகி ரொம்ப நேரம் ஆகிருச்சுப் போல … ” என்றவன் தனக்கு வந்த தகவலை அவனிடம் பகிர்ந்து ஆயுர்வேத மையத்துக்கு அழைத்துச் சென்றான்.

ராதிகாவைக் காணவில்லை என்றத் தகவல் தான் அது. அதிலும் அவர்கள் அளித்த விவரமோ…. அரவிந்திற்கு மகிழ்ச்சி துக்கம் இரண்டையும் ஒரு சேர அளித்தது. அங்கிருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்க்க , மழையில்  , மெல்லிய வெளிச்சத்தில் , அந்தக் குடிலை விட்டு மெல்ல சோர்வுடன் வெளியேறும் ராதிகா …. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நடக்கிறாள். பின் வெளிவாசலில் அவள் சாலையைக் கடந்து இருளில் போவது மட்டுமே தெரிகிறது. அதன் பின் அவள் எங்கு சென்றாள் என்ன ஆனாள் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவள் எழுந்து நடமாடியதால் அவளுக்கு காவல் வைத்த பெண்ணை ஒன்றும் சொல்லாது விட்டு விட்டான். பத்து நிமிடம் மெழுகுவர்த்தி எடுக்கச் சென்ற நேரத்தில் ராதிகா எழுந்து செல்வாள் என்று அந்தப் பெண்ணுமே நினைக்கவில்லை … அங்கு மழையில் ஒதுங்கி அமர்ந்திருந்த காவலாளியும் நினைத்திருக்கவில்லயே ….

அது ஒரு சிறிய மீன்பிடி கிராமம்தான் … வீடுகளும் அவ்வளவாக கிடையாது , தென்னை மரங்களும் , சிறு சிறு ஓடைகளுமே சாலையின் இரு மருங்கிலும் , அங்கு முழுவதும் தேடிப் பார்க்க ராதிகா கண்ணிலேயேப் படவில்லை. தண்ணீரில் விழுந்து விட்டாளோ… இல்லை இருக்காது …ஒரு வேளை வீட்டிற்கு சென்று விட்டாளோ எனப் பேருந்து வழியாக ரயில் வழியாக என ஆட்களை அனுப்பி விட்டு , அவர்கள் அனைவரும் விமானம் மூலம் கோவை வந்தடைய … ராதிகா தான் வருவதாக இல்லை.

அவர்களது நிறுவன நம்பிக்கைக்கு பாத்திரமான டிடெக்டிவ் மூலமாகவும் தேடிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்பொழுதுதான் அரவிந்த்  தான் செல்வந்தனாக பிறந்ததை நினைத்து மனம்  வெறுத்துப் போனான்.

அவன் மனைவியை வெளிப்படையாக காணவில்லை என்று சொல்லி தேடுவது அவர்களுக்கும் , அவளுக்கும் மிகப் பெரியச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே நடைமுறை உண்மை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் குழந்தையின் ஒரு வயதுவரை அவனின் முகத்திற்காகவே, அவன் உயிருடன் இருந்தாலே போதும் எனத் தன்னைத் தேற்றிக் கொண்ட அரவிந்த் அவளைக் கொச்சினில் காணும் வரை நரக வேதனை அனுபவித்தான் என்பதே உண்மை.

கண்ட பின்னும் உயிரும் உடலுமாக இருந்தவனையே யார் என்று அவள் கேட்ட போதோ …..

உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்

கனவாய் என்னை மூடுதடி

யரென்று நீயும் என்னை பார்க்கும் போது

உயிரே உயிர் போகுதடி’

 அப்படித்தான் இருந்தது அரவிந்துக்கு …..தன் நிலை யாருக்குமே வரக்கூடாது என்றுதான் நினைத்தான் அந்த காதல் கணவன்.

               இப்படி ஒரு பிரளயத்தையே வாழ்க்கையில் உருவாக்கி அவள் மீது அன்பு வைத்திருந்த அத்தனைப் பேரையும் நிலை குலையச் செய்து விட்டு ….இன்று தூங்கி எழுந்தவள் போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார் என்று தான் நினைத்தான்.

அதுவும் அவனை இழுத்து முத்தம் தந்து ‘ஐ லவ் யூ’ என்ற போது  கண்கள் கலங்கியவன் , மகளோடு சேர்த்து மனைவியையும் அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தவன் , ஒரு நிமிஷம் என அறையை விட்டு வெளியேறி அந்த அமைதியான இரவு நேரத்தில்  கட கடவென்று படியேறி எட்டாவது தளத்தில் இருந்த மொட்டை மாடிக்குச் சென்று …. வந்த வேகத்தில் அப்படியே முழங்கால் மடித்து கீழே அமர்ந்து …..

“டேய் அழுகை வருதுடா ….. இங்க வந்து பார் என்ஹார்ட் எப்படித் துடிக்குதுனு….. நீ சொன்னது போல தொலைஞ்சுப் போன நினைவுகளை தொலைச்ச இடத்துலயே மீட்டுட்ட ….. ஐ லவ் யூ டியர்…. ஐ லவ் … ..யூ… இப்படி என்னை செத்து பிழைக்க வைக்கிறேியேடா .… “

 என்று  மகிழ்ச்சியில் கண்களில் நிரம்பியக் கண்ணீரை இரு கரம் கொண்டு அழுந்தத் துடைத்தவன் ஃபோனை எடுத்து அனைவருக்கும் சொல்லலாம் என நினைக்க , காலையில் சொல்லலாம் என்று வைத்து விட்டு , எழுந்து லிப்டில் தரை தளம் சென்றவன் , இரவு பணியில் இருந்த மருத்துவரைச் சந்தித்து விவரம் கூற … அவர் இப்பொழுது அவளிடம் எதுவும் கூறாமல் இயல்பாக இருங்கள் , மறுநாள் அதற்கான நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வந்தப் பிறகு அவளிடம் என்னப் பேசலாம் என முடிவெடுப்போம்… என்று விட்டார்.

எனவே அமைதியாகவே கீழே வந்தவன் , அவளருகில் சென்று அமர்ந்து தோளோடு சாய்த்துக் கொண்டான்.

“பாஸ் …. இந்த நேரம் எங்க போய்ட்டு வாறீங்க….. “

“அது …..உனக்கு சாப்பிட கேன்டின் ல எதாவது வாங்கலாம்னு போனேன் டா”

“எனக்கு பசிக்கல… காலையில சாப்பிட்டுக்கலாம்… பாஸ்”

“சொல்லுடா”

“.இனி நான் எங்கம்மாவ திட்ட மாட்டேன் பாஸ்.. இவ்வளவு நாள் சொல்லத் தோணாத காதல இப்ப சொல்லத் தோணுது …. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் …. தனியா அடுத்து என்ன செய்யனு முழிச்சுட்டு இருந்த எனக்கு தாலி கட்டி , மனைவிங்கிற அடையாளம் கொடுத்து , காதல அள்ளி அள்ளிக் கொடுத்து ….. இப்போ இப்போ ….இந்த தேவதையை எனக்குத் தந்து ‘தாய்’ங்கிற பெரிய ஸ்தானத்த தந்து காதல் இல்லாம இது சாத்தியமில்லனு….. ‘காதல் அழகானதுனு ‘ புரிய வச்சீட்டீங்க பாஸ்….. yes Love is beautiful …..”

அதற்குள் குழந்தை உறங்கியிருக்க ….வாங்கி தொட்டிலில் படுக்க வைத்தவனிடம் ,

“மூணாறுலருந்து எப்ப வந்தீங்க ….குட்டிமா பிறந்ததும் வந்தீங்களா ,முதல்லயே வந்துட்டீங்களா …. ஊருக்கு போய்ட்டு வந்து இன்னும் ஹான்ட்ஸம் ஆகிட்டீங்க …. நாளைக்கு ஷேவ் பண்ணிடுங்க ….அப்புறம் உங்கப் பொண்ணு அழப்போறா…..” அவளது இந்த இலகுவான பேச்சில் மகிழ்ந்தவன் ,

” என் பொண்ணு அழுவாங்கனு சொல்றியா …. இல்ல உனக்கு தாடி டிஸ்டர்பன்ஸா இருக்கும்னு சொல்றியா ….ம்….” என புருவம் ஏற்றி இறக்கியவனின் பேச்சில் முகம் சிவந்தவள் ….

“பா…. ஸ்…” என்ற சிணுங்கலுடன் …. நைட் ரெண்டு மணிக்கு பேசிட்டு இருக்கோம் … அவங்க திரும்பக் கூப்பிடுறதுக்குள்ள ( குழந்தையைக் காட்டியவள் )ஒரு தூக்கம் போடுங்க … எனக்கு என்னமோ தூக்கமே வரல … நான் ஃபோன் பார்க்கிறேன் … கொடுங்க என் ஃபோனை ….”

இலகு பேச்சில் அவளின் நிலையை மறந்திருந்தவன் ஞாபகம் வர , நீ  கொஞ்ச நேரம் படுடா.. நான் உன் பக்கத்துலயே இருக்கேன்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் மடியில் படுக்க , அவளது கலைந்திருந்த தலையை ஒதுக்கியவனிடம் ,

“பாஸ் எப்போ வீட்டுக்கு போகணும் … நம்ம மருமகன் எப்படி இருக்காரு… அனு மூணாவது நாளே வீட்டுக்கு வந்துட்டாளே … அப்ப நாமளும் நாளைக்கு போயிரலாமா … “

“ம்… நாளைக்கு டாக்டர்ஸ் வந்து உன்னையும் பாப்பாவையும் செக் பண்ணிட்டு என்ன சொல்றாங்கப் பார்த்துட்டு கிளம்பலாம் சரியா…. இப்ப தூங்குடா…”

“தூங்கணுமா இவ்வளவு நேரம் தூங்குனது போதாதா…. இத்தனை நாள் கழிச்சு வந்துருக்கீங்க … வழக்கமா தர்ற ஸ்வீட் கூட தரல …. நான் தான் தந்துருக்கேன்.”

“வீட்டுக்கு வா …. நீ போதும் போதும் சொல்ற அளவுக்கு திகட்ட திகட்ட தாறேன்…”

முகம் சிவந்தவள் … “சரி உங்க கார் எங்க சர்வீஸ் போயிருக்கா … “

” இ… இல்லயே ஏன் கேட்கிற … ” என்று பதட்டமடைய ,

“ம் … அதுதானே … அது வெளிநாட்டுக் கார் …. அந்த வசதி… இந்த… வசதி எனக்கு ஒன்னும் ஆகாதுனு சொல்லி என்னை சமாதானபடுத்தி வச்சுருந்தீங்களே…..உங்க கார் ஆக்ஸிடென்ட்னு கேட்டதும் எனக்கு உயிரே போயிருச்சு…..வலில மயக்கமாகிட்டேன்….அப்புறம் நீங்க .. வந்து இங்கப் பாரு உன் பாஸ் ஒரு நகக்கீறல் கூட இல்லாம வந்துட்டேன்னு சொன்னப் பிறகு தான் நிம்மதியா தூங்குனேன்….”

வியந்து விழித்தவன் , ” அடிப்பாவி  என்னைய தூங்கவிடாம பண்ணிட்டு நீ நிம்மதியா தூங்குனியா … ” என்று ஆதங்கப்பட்டவன்…

“ஏன்டா அப்ப நான் பேசினது எல்லாம் கேட்டுச்சா … “

“ஆமா… பாப்பா அழுதப்போ நீங்க நம்ம ஃபேமிலி சாங் கூட பாடூனீங்களே….அதுதான் ….பூவிலே மேடை” என்று வாய் விட்டு நகைத்தவள்…

“பாஸ்  எந்த திருவிழா கூட்டத்துலயாவது நாம தொலைஞ்சுப் போய்ட்டா …. மேடையில மைக்ல ‘பூவிலே மேடை ‘ பாட்டு பாடுனோம்னு வைங்க …. சினிமால வர்ற மாதிரி எல்லோரும் வந்து அசெம்பிள் ஆகிடுவோம்…” என மறுபடியும் பொங்கி பொங்கி சிரித்தவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ,

“பாப்பாவும் உடனே அழுகைய நிறுத்திடுச்சே .. உங்க கிட்ட பாப்பாவ தாங்கனு சொல்லனும் போல இருந்தது … ஆனா ரொம்ப மயக்கம் போல முடியல … ஆமா நான் தூங்கி எழுந்ததும் எல்லாம் சொல்ல வேண்டியது தான ….அதுவும் சொன்னதையே சொல்லி காமெடி பண்ணிட்டு …..போங்க பாஸ்”

இப்பொழுது வாய் விட்டு சிரிப்பது அரவிந்தின் முறையானது. நெடுநாள் சிரிக்காத சிரிப்பையெல்லாம் தேக்கி வைத்து சிரித்தான் …. ” அடிப்பாவி கடைசில என்னை காமெடி பீஸாக்கிட்டியே ” என்று நினைத்து நினைத்து நகைத்தவனை ,

“ஐயோ ….மெதுவா…  மெதுவா… இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறீங்க …. குட்டிமா எழுந்துக்குவாங்க பாஸ்….” என்று சிணுங்கிய ராதிகா … அவன் சிரிப்பை அடக்க அந்த இரவு நேரத்தில் தன் இதழ் என்னும் ஆயுதத்தை தான் எடுத்தாள். தன் இதழை அவன் இதழோடு சேர்த்ததுதான் தெரியும்….தன் காதல் மொத்தத்தையும் அவளிடம் இதழின் வழியே சொல்லுவது போல் அரவிந்தின் இறுக்கிய  உடல் அணைப்பிலும்  இதழ் அனணப்பிலும் தான் ராதிகா இருந்தாள்.

‘வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

 

தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ……’

                                    காதலுக்கு எது ஆரம்பம் எது முடிவு என்று தெரியாது….. அழகிய காதலுக்கு முடிவு தேவையில்லைதான்….. ஆனால் ….

                  ‘ காதல்   அழகானது’

Advertisement