Advertisement

வீட்டிற்கு வந்த ராதிகா முதலிலிருந்த கலக்கம் எல்லாம் போய் குழந்தையைப் பற்றியேப் பேசிக் கொண்டிருந்தாள். அரவிந்தும் அவளது மகிழ்ச்சியில் பங்குக் கொண்டு , அவளது கலக்கங்களை போக்கும் விதமாக நடந்துக்கொண்டான்.

அனன்யாவிற்கு இன்னும் பத்து நாட்கள் கழித்து தான் மருத்துவர் பிரசவ தேதி அறிவித்திருந்தார். எனவே ரமேஷை அனன்யாவோடு இருக்க வைத்துவிட்டு அரவிந்த் மட்டும் கிளம்புவதாக இருந்தது.

அனன்யாவிற்கு குழந்தைப் பிறந்த மூன்றாம் நாளே, அரவிந்த் மூணாறு செல்ல வேண்டி இருந்ததால் அவன் அதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்ள, ராதிகாவிற்குத் தான் அனன்யா குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியையும் மீறி மனதினுள் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.

அரவிந்த் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருக்க , அவனையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்டவன் , மருத்துவர் வேறு அப்படிச் சொல்லியிருக்க , போகாமல் இருந்து விடலாமா என்று தான் யோசித்தான் . எடுத்து வைத்துக் கொண்டிருந்ததை அப்படியே வைத்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்து தோளைச் சுற்றிக் கைப் போட்டுக் கொண்டு ,

“மூணு நாள்தான் டா …. எல்லாம் சரியா முடிஞ்சதும் ஓடி வந்துற மாட்டேன். அதுக்குப் போய் முகத்தை இப்படி வச்சுட்டு இருந்தா …. என்னால எப்படிடா கிளம்ப முடியும் … “

“அது என்னவோ தெரியல பாஸ்…. நீங்க என் பக்கத்துலயே இருக்கனும் போலத் தோணுது. வேற யாரும் போக முடியாதா…. “

“இல்லயே … நான் இல்லன ரமேஷ் தான் போயாகணும்… இதனால நமக்கு பெரிய லாஸ் எதுவும் இல்ல தான். ஆனா நம்மள நம்பி இந்தியா முழுசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் , அவங்க குடும்பங்களும் இருக்கே …. நாம இதுல எடுக்க முடியாத இலாபத்த வேற பிஸ்னஸ்ல எடுத்துரலாம்தான்….ஆனா ….. சொல்லுடா நீ வேண்டாம்னா நானும் போகல….”

“அப்படிலாம் எதுவும் வேண்டாம்ங்க…. நீங்க போய்ட்டு வாங்க … “

“டியர் உன்னை நான் எவ்வளவு வவ் பண்றேன்ங்கிறது உனக்குப் புரியும் நினைக்கிறேன். என்னால நீ தான் முக்கியம்னு உங்கூடவே இருந்து உனக்கும் சந்தோஷம் தர முடியும் தான். ஆனா வாழ்க்கையின் யதார்த்தத்தையும் நாம புரிஞ்சுக்கணுமே டியர். நான் எங்க இருந்தாலும் என் நினைப்பு உங்கிட்ட தானே இருக்கும். அந்த வேலைய நல்லபடியா முடிச்சா நம்மள நம்பி இருக்கிறவங்களுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம் தானே.”

புன்னகையோடு , “பாஸ் இப்ப மனப்பூர்வமா சொல்றேன் , நீங்க அந்த வேலைய எந்த சஞ்சலமும் இல்லாம முடிச்சுட்டு வாங்க… நான் என் பாஸ்க்காக காத்திட்டுருப்பேன். எப்படியும் நீங்க வந்தப் பிறகு தான் நம்ம பிள்ளை நம்ம கிட்ட வருவாங்க. சரி நீங்க எப்படி எதுல போறீங்க .”

“நான் கார்லதான்டா கிளம்புறேன். போய்ட்டு உடனே கிளம்பணும்னு நினைச்சாலும் ,மலைப்பாதைக்கும் நம்ம கார்தான் டா வசதி “

“என்ன நம்ம காரா….. அப்ப நீங்க டிரைவர் போட்டுக்க மாட்டீங்களே…. மலைப்பாதை வேற… நீங்க ஊட்டி , கொடைக்கானல்ல டிரைவ் பண்றத நான் பார்த்திருக்கேனே …. ரொம்ப ஸ்பீடா ட்ரைவ் பண்ணுவீங்களே” என்று கண்களில் பயத்தை தேக்கிக் கேட்ட வளின் , கண்களுக்கு முதலில் அவன் உதடு ஒற்றி பதிலளித்தவன் ,

“நான் மெதுவா ட்ரைவ் பண்றேன் போதுமா…. நீ கவலைப்படாம காத்துட்டு இரு…”

ஆனாலும் கண்களில் மிரட்சியுடன் , “பாஸ் இந்த காதல் சொல்றீங்களே அதுக்கும் மேல் ஏதாவது வார்த்தைகள் இருக்கா பாஸ்….”

வாய் விட்டு சிரித்தவன் , ” காதல் வார்த்தைய சொல்லிட்டியா…. எனக்குத் தெரியலயே டா” என ,

“எனக்கும் தெரியாது பாஸ்…. உங்கள எனக்கு எவ்வளவு பிடிக்கும்ங்கிறத எனக்கு நிரூபிக்கத் தெரிஞ்ச வழி சாகுறது மட்டும் தான்….. “

உன் கனவுகள் நிஜமாக

எனையே தருவேன்

உன் வாழ்வு மண்ணில் நீள

என்னுயிர் தருவேன்…

ஏதோ பேச வந்தவன் வாயைக் கைக்கொண்டு மூடியவள்,

” நான் பேசிக்கிறேன் ….. நான் கடவுள்கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்டு வேண்டிட்டு இருக்கேன். அது என்னனா ….. என் சாவு உங்களுக்கோ ….. உங்க ……( சொல்ல இயலாது கண்களில் இருந்து நீரைப் பொழிந்தவள் ) ம …. ம… மறைவு எனக்கோ தெரியக்கூடாதுனுதான்…… எனக்குத் தெரியும் உங்க சந்தோஷம் நான் தான்னு … ஆனா எனக்கு என் உயிர் , உலகம் எல்லாமே நீங்க தான் …. நீங்க இல்லாத உலகத்துல என்னால இருக்கவே முடியாது. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா அடுத்த நொடி இந்த உலகத்தை விட்டு என் உயிர் போய்டும். இது நிஜம் …. எனக்காக. …. நான் இந்த உலகத்தை விட்டுப் போறவரை நீங்க எனக்கு வேணும் பாஸ்…. ப்ளீஸ் பாஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க… என் உயிர் உங்க கிட்ட தான் அதனால கவனமா கார் ஓட்டுங்க … ” என்று அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்த வார்த்தையின்றி இருந்தான்.

” இவ்வளவு அன்பையும் காதலையும் என் மேல வச்சிட்டு … ” என்று மனதினுள் புழுங்கியவன் , அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து,

” என் வேலை நேரம் போக உன்னை வீடியோலப் பார்த்துட்டே தான் பேசுவேன் சரியா … நீ நம்ம மருமகன் கூட விளையாட நம்ம ஸ்ரீயத் தயார்படுத்துடா நான் சீக்கிரம் வாறேன்.”

அவனிடமிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தவள் அவனுக்கு தலையாட்டி விட்டு , ” பாஸ் குளிர்ற மாதிரி இல்ல ….”

“அப்படியா ஏசிய குறைச்சிறலாம்…” என ஏசி ரிமோட்டை எடுக்கப் போக … “அதை வாங்கி குளிரை அதிகப்படுத்தியவள் ,

“பாஸ் ….. இப்போ ரொம்ப குளிருது பாஸ் ….போர்வை போர்த்திக்கவா…. ” என கண் சிமிட்ட ,

மனையாளின் தந்திரம் புரிந்தவனோ , “ஆன் ….. டியர் … இது நிறை மாசம் …. எப்ப வேணும்னாலும் டெலிவரி இருக்கலாம் …..”

“ம்….ஆமா…. நீங்க எதுக்கு ஃபோன் வாங்கித் தந்தீங்க …. எல். . . . . லாம் தெரிஞ்சுக்கத் தானே … நானும் எல்….லாம் தெரிஞ்சுதான் கேட்கிறேன் …” எனப் புன்னகைத்தவள்…. நொடியில் கண்களில் நீரைத் தேக்கி …. “நீங்க வேணும் … இப்பவே வேணும் பாஸ் ” என கேட்க …. மனையாளை இதற்கு மேல் தவிக்க விடுவானா அரவிந்த்.

அன்று மாலையே அனன்யா குழந்தையோடு வீடு வர… தன் பிரிவைத் தாங்காது அரவிந்தை ஏக்கத்தோடுப் பார்த்த  மனையாளை அணைத்து ஆறுதல் படுத்தி அரவிந்த் கிளம்ப…

ஜானகி இதைக் கவனித்தவர் , “அரூ முடிஞ்ச அளவு சீக்கிரமே வந்துருப்பா…. அவளைப் பார்த்தா நான் உங்கப்பாகிட்ட நடந்துக்கிற மாதிரியே இருக்கு ….என் அண்ணன் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பா….. புருஷனே உலகம்னு இருக்கப் போய் தான் … அவர் இல்லாத உலகம் எனக்கும் இல்லாம போயிருக்கு …. நீ அவளுக்காக சீக்கிரம் வரப் பாருப்பா”

அரவிந்த் ஜானகியிடம் ,

“ம்மா … அவளுக்கும் நான் தான் உலகம், ஆனா அவளுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ற தைரியம் இருக்கு. முதல்ல அவகிட்ட என்னைக் கவர்ந்ததே தைரியமும் , இக்கட்டான சூழ்நிலையையும் நொடில முடிவெடுத்து தீர்வுக் காண்கிற எண்ணமும் தான் ….அதனால நீங்க போட்டு மனச குழப்பிக்காதீங்க … நான் வாறேன் மா” என்றுக் கிளம்பிவிட்டான்.

அவளது தன்னம்பிக்கை , தைரியம் எல்லாம் அரவிந்தின் முன் தோற்றுப் போகும் என்பதை அவன் அறியாது போய் விட்டான்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவளை வீடியோவில் பார்த்து பேசித்தான் மூணாறு வந்தடைந்தான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘வீடியோ காலில்’ பேசி அவளுக்கு நம்பிக்கை தந்தான்.

அவன் வந்த வேலை அவர்களுக்கு சாதகமாக முடிய , அதை மனைவியிடமும் குடும்பத்தாரிடமும் பகிர்ந்துக் கொண்டவன் , தான் கிளம்பி விட்டதாக அறிவிக்கவும் , ராதிகாவிற்கு  கணவனை நேரில் காணும் ஆவல் அதிகரிக்க மிகுந்த மகிழ்ச்சியோடு காத்திருந்தாள்.

கணவன் வந்துக் கொண்டிருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் வரவேற்பறையில் அமர்ந்து அனன்யா குழந்தையைக் கொஞ்சிக் கொண்டும் அனைவரோடும்     மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க ராதிகாவின் ஃபோன் ஒலித்தது.

எடுத்து வீடியோ காலில் அம்மாவிடம் தங்கையிடம் எனப் பேசியவன் கடைசியாக மனைவியிடம் பேச ஆரம்பித்தான். அது ஒரு மாலை நேரம் , எனவே மெதுவாக எழுந்து தோட்டத்தில் சென்று அமர்ந்தவள் ,

“என்ன பாஸ் இவ்வளவு நேரம் ஃபோன்ல… டிராஃபிக்ல நிக்கிறீங்களா ….”

” ம் ஆமாம் டா…. கொஞ்சம் மழை அதனால மண்சரிவு … அது கிளியர் பண்ணி வர லேட்டாகும் போல ….சோ நீ என்னைய எதிர்பார்க்காம நைட் தூங்கு … நான் வந்துருவேன்….”

“ஓ…. அப்ப அவசரம் வேண்டாம் நீங்க மெதுவா வாங்க… நீங்கதான் கேகேனு சொல்லி கிண்டல் பண்ணுவீங்களே …அது போல தான் இப்பலாம் தூங்க கூடாது நினைச்சாலும் தூங்கிடுறேன்.” என்று சிணுங்கியவளை சமாதானப்படுத்தி ஃபோனை வைத்து விட்டான்.

மறுபடியும் வீட்டுக்குள் வந்தவள் எல்லோரிடமும் பேசினாலும் அவளது அறைக்குச் செல்லாது அமர்ந்திருக்க , கேட்ட ஜானகியிடம் “அத்த அவர் வர இன்னும் நேரமிருக்கு தான் …. கொஞ்ச நேரம் கழிச்சு படுக்கப் போறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க , நான் டிவி பார்க்கிறேன்”

“சரிமா ….அனு பிள்ளைய தூங்க வைக்கிறா , நானும் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்” என மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டே டிவிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சியில் முக்கியச் செய்தியாக மூணாறில் மழை …மண்சரிவு… எனக் காட்ட , பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அடிவயிற்றிலிருந்து சுளீர் என வலிக் கிளம்பியது. பல்லைக் கடித்துப் பொறுத்தவள் … அடுத்தடுத்து வந்த வலியில் ,

“அத்தை ” என அழைக்க , அவள் முகம் பார்த்துப் பதறியவர் அது பிரசவ வலி தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டு ரமேஷை அழைக்க , அவன் நேரே மருத்துவமனை வருவதாகச் சொன்னதும், தாயம்மாவை அனன்யாவுக்கு துணைக்கு வைத்து விட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு ஜானகி கிளம்பினார்.

வலியிலும் மொபைலில் கணவனை அழைக்க அவன் எடுக்கவில்லை என்றதும் , பயத்துடன் “அத்தை அவர்கிட்ட சொல்லணும் … ” என்பதற்குள்ளாக அடுத்தும் வலியெடுக்க கணவனின் அருகாமையை எதிர்பார்த்து கண்ணீர் வரத் துவங்கியது.

அதற்குள் அவனிடமிருந்து அழைப்பு வர , ஜானகி எடுத்து மருமகளைக் காண்பிக்க ,

“பா…. அத்தான் … மெதுவா வாங்க… வெய்… வெய்ட் பண்ணுவோம் .. ” என்பதற்குள்ளாகவே வலி எடுக்க ஆரம்பித்தது. மனைவியின் முகத்தைப் பார்த்தவனோ என்ன செய்வதென்று அறியாது .. பேச வார்த்தைகள் இன்றி தவித்தவன் …,

“கவலைப்படாதடா… நான்  .. நான் ஃபிளைட்ல அங்க வந்துருவேன்… நீ அம்மாகிட்ட கொடு” என ,வாங்கிய ஜானகியிடம் பதட்டத்தோடு ,

“ம்மா நான் இங்கயிருந்து கொச்சின் போய் அங்கிருந்து பிளைட்ல வந்துடுறேன் …” என்றவன் தொண்டை அடைக்க ” பார்த்துக்கங்கமா “என்றான்.

மகனைச் சமாதானப் படுத்தியவர் மருமகளோடு மருத்துவமனை சென்று இறங்க , காத்திருந்த மருத்துவர்கள் அவளை பிரசவ வார்டு அழைத்துச் செல்ல , மருத்துவரோ… குழந்தை பிறக்க இன்னும் நேரமாகலாம் … ஆனால் பிரஷர் அதிகமிருப்பதால் அதைக் குறைப்பதற்கான மருந்துகளை செலுத்தினார் .

வலி கொஞ்சம் குறைவது போல் தோன்ற , அருகிருந்த ஜானகியிடம் , “அத்தை அவருக்கு ஃபோன் போட்டுத் தாங்க”

“இல்லமா “…. “ப்ளீஸ் அத்தை ” எனவே அவர் ஃபோன் போட, “ம்மா … கொச்சின்லயும் ஒரே மழை வெள்ளமாம் … ஃபிளைட் கிடையாது… நான் மதுரை போய்ட்டு அங்கிருந்து வர பார்க்கிறேன்” என “நீ அவகிட்டயே சொல்லுப்பா” என அவளிடம் கொடுக்க ,

 “ஸ்வீட்டி…. அழாதடா…. பொறுத்துக் கோடா நான் இதோ இதோ வந்துட்டே இருக்கேன்.. கொச்சி ஏர்போர்ட் போய்ட்டு இருக்கிறேன் ” தலையை அசைத்தவள் ஜானகியிடம் தந்து விட்டாள்.

உனது உயிரை எனது வயிற்றில்

ஊற்றி கொள்வேன்

உனது வீரம் எனது சாரம்

பிள்ளைக்கு தருவேன்

மறுபடியும் வலி எடுக்க, டாக்டர்கள் நர்ஸ்கள் ஏதோ பேசுவது கேட்கிறது. யாரோ கொச்சினில் மழை வெள்ளம் என்கிறார்கள் . திடீரென ஜானகி அழுது புலம்புவது கேட்கவும் … வலியோடு எழ முற்பட … நர்ஸ்கள் பிடியிலிருந்து கட்டிலை விட்டு இறங்கி வெளியே கதவை திறக்க ,

“அரு….. உங்கப்பா மாதிரியே நீயும் எங்கள விட்டு போய்ராத….” ஜானகியின் பேச்சில் அதிர்ந்து நின்றவள் … நர்சிடம் “என்னாச்சு” என , அவர் ஒன்றும் சொல்லாது இருக்க …, திரும்பவும் அவர்களிடம் இருந்து திமிற கையிலிருந்த வென்பிளான் பிய்ந்து ரத்தம் பீறிடவும் பயந்த நர்ஸ்கள் ,

“அவங்க பையன் கார் ஆக்ஸி….. மேம்… மேம்”

உயிர்போகும் வலி எடுக்க “போய்ட்டீங்களா ….. நீங்களும் போய்ட்டிங்களா…. நான் … நானும் வாறேன் பாஸ்…”

மிகப் பெரும்  பிள்ளை வலியில் “பா……ஸ்” என்ற வார்த்தையோடு ராதிகா தன் பேச்சை நிறுத்திக் கொள்ள , தன் தந்தையை மட்டுமே நினைத்து,  தன்னையே மறந்துப் போன தன் தாயைக் காண இவ்வுலகிற்கு வந்தான் அவள் தனயன்.

என்னருகிலே கண்ணருகிலே

நீ வேண்டுமே

மண்ணடியிலும் உன்னருகிலே

நான் வேண்டுமே

 

சொல்ல முடியாத காதலும்

 

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

 

 அதிசயனே பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தது

 

எனது நினைவில் இன்று உனது முகம்

தவிர எதுவுமில்லையே அன்பே

 ஒரு கணமே உன்னை பிரிந்தால்

 

உயிர் மலர் காய்ந்து போகுமே….

                                  காதல் …. காதல் ….. காதல் …

 

Advertisement