Advertisement

   அழகு 38

     அந்த உறக்கத்திற்கான காரணம்….

ராதிகா நிறை மாதமாக இருக்கையில்  அனன்யாவிற்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அன்று அறையில் லேப்டாப்பில் பார்வை பதித்து இருந்தவனிடம் ,

          “பாஸ்…. சாப்பிடுங்க நீங்க சாப்பிடல நான் டாக்டர் எது எல்லாம் சாப்பிடக்கூடாது சொன்னாங்களோ எல்லாம் சாப்பிட்டுருவேன்….”

“என் ஸ்வீட்டி அப்படி செய்ய மாட்டாளே … சரிவா கொஞ்சமா சாப்பிடுறேன் “

“பாஸ் …. எனக்கு அப்பா அம்மா இருந்தாக்கூட இப்படி கவனிச்சிருக்க மாட்டாங்க…. என்னால நீங்களும் எதுவும் சாப்பிடலனா எப்படி ….. ப்ளீஸ் எனக்காக சாப்பிடுங்க… நான் உங்க பிள்ளைய நல்லபடியா பெத்து உங்க கைல தருவேன்கிற நம்பிக்கை எனக்கு இருக்குங்க… “

“என்னப் பேச்சுடா பேசுற… எனக்கு நம்ம குழந்தை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீயும் எனக்கு முக்கியமில்லயா , டாக்டர் நீ ரொம்ப வீக்கா இருக்கனு சொல்றாங்க … இரத்த அழுத்தம் வேற இருக்குது… நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பாம… அவங்க சொன்னதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுபோதும் … ” என்ற அரவிந்த் அவனுக்காக அவள் எடுத்து வந்த உணவை உண்ண ஆரம்பித்தான்.

” வளைகாப்புக்கு முதல் நாள் நைட்டே கிளம்புறோம் டா. அம்மாவும் தாயம்மாவும் தேவையானது எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க , நீ வளையல் போட்டு விட்டா மட்டும் போதும் சரியா…. எந்த வேலையும் இழுத்துப் போட்டுக்காத….”

“முன்ன ரூமுக்குள்ள மட்டும் தான் தூக்கிட்டு இருப்பீங்க ….இப்ப எங்க நடக்க விடுறீங்க … அனு ரொம்ப கிண்டல் பண்றா…. அப்புறம் எங்க நான் இறங்கி வேலை செய்றது … ” என்று குறைபடுவது போல் கணவனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்ட ராதிகாவும் ஒன்பதாம் மாத துவக்கத்தில் தான் இருந்தாள்.

“பாஸ் பாஸ்… இங்க கை வைங்க , இதுதான் தலைபோல இருக்கு …. ஸ்ரீ குட்டி சீக்கிரம் வெளிய வரத் துடிக்கிறாங்க…” என்று கணவனின் கையை வயிற்றின் மேல் வைத்துப் பேசிக் கொண்டிருந்தவளிடம் ,

“அன்னைக்கு ஸ்கேன் பார்த்தப்போ பொண்ணு போல அதாவது ஸ்ரீரஞ்சனி தான் நினைக்கிறேன் … அப்படியே உன்னைப்போல அழகா இருந்தாங்க….”

“பாஸ் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல … பொண்ணுதான் ஆசைனா சொல்லுங்க … அதை விட்டுட்டு ஸ்கேன்ல பார்த்தாராம்” என்று புன்னகைத்தவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் ,

“ஸ்ரீரஞ்சனி யோ…. ஸ்ரீராமோ….. ஸ்ரீ நல்ல ஆரோக்யத்தோட இந்த உலகத்துக்கு வந்தாப் போதும்.சரிடா  நேரத்தோட தூங்கு … ரெண்டு நாள்ல திருப்பூர் போறதால நானும் ஆஃபிஸ்ல பென்டிங் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு தூங்குறேன்.”

“பாஸ்… இன்னைக்கு மொபைல்ல பாட்டுக் கேட்கல நீங்க பாடுங்க …. நான் தூங்குறேன்.”

“அவ்வளவுதானே …  இதோ..” என்றவன் , அவளை கைகளில் ஏந்த ,

“பாஸ் … இத்தனை நாள் பரவால்ல … இப்ப நைன்த் மன்த் வெய்ட் ஜாஸ்தி….”

” என் மனைவியையும் என் பிள்ளையையும் சுமக்கிறது எனக்கு கஷ்டமா என்ன … நீ தூங்கு… “புன்னகையோடு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு விழி மூட …. அரவிந்த் ,

 “பூவிலே மேடை … ” என பாடல்  பாட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உறங்கிய மனைவியை கட்டிலில் வசதியாக படுக்க வைத்து , அவள் அருகிலேயே அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தான்.

இரு நாட்களில் அனைவரும் திருப்பூர் சென்று அனன்யாவிற்கு சீமந்தம் செய்து கோவைக்கு அழைத்து வர … கூடவே கிளம்பிய ரமேஷை தாயம்மா ,

” ரமேஷய்யா … ஒரு சாஸ்திரத்துக்குத் தான் வளைகாப்பு போட்டு கிளம்பும்போது புருஷன பார்க்கக் கூடாது சொல்வாங்க … நீ கொஞ்சம் உள்ளயே இருப்பா … பாப்பாவ கார்ல உட்கார வச்சதும் வாய்யா … “

அதிர்ந்த ரமேஷோ…. “தாயம்மா …. அதெல்லாம் முடியாது…. அவள அங்க கூட்டிட்டு வரப் போறதே நாந்தான் …. நீங்கல்லாம் போய் கார்ல ஏறுங்க….”

“ராசா…” என தயங்கியவரிடம் ஜானகி ,

 “தாயம்மா ரமேஷ் விருப்பம் போல செய்யட்டும் … அப்பா சாஸ்திரம் சம்பிரதாயம் இதெல்லாம் எப்படி பார்ப்பார்…. கடைசில ….. நல்ல நேரத்துல எதுவும் பேச வேண்டாம்…. எல்லாம் நல்லதே நடக்கும் …. அதுவும்  வயித்துல பிள்ளையோட இருக்கிற மனைவிக்கும் , அவள அன்பா பார்த்துக்கிற புருஷனுக்கும் இப்படி நேரத்துல பிரிய மனசு இருக்காது …. அப்ப ரெண்டு பேர் மனசுலயும்  ஏக்கம் வரக்கூடாது சந்தோஷமா பிள்ளை பெத்துக்க கிளம்புனும்னு அந்த காலத்துல இப்படி சொல்லி வச்சுருக்காங்க … இப்ப உள்ள டெக்னாலஜி அப்ப இல்ல…. இப்ப அப்படி இல்லயே …அதனால ரெண்டு பேரும் குழப்பிக்காம கிளம்புங்க…. ” என்றுப் புன்னகைக்க ரமேஷின் முகம் மலர்ந்த விதத்தில் அருகில் வந்த அரவிந்த் ,

“மாப்ள இங்க ஆஃபிஸ் பார்க்கணுமே … “

” நான் இன்னும் ரெண்டு நாள்ல எந்தங்கச்சிக்கு வளைகாப்பு நடத்தி இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்னு நினைக்கிறேன் …நீ என்ன மச்சான் நினைக்கிற … “

விழித்த அரவிந்த் “மாப்ள …. சும்மா கேட்டேன்டா … அதுக்கு இப்படிலாமா குண்டத் தூக்கிப் போடுவ , ” அவன் காலரை சரி பண்ணிக்கொண்டே ,

“மச்சான்…தாயம்மா கிட்ட சொல்லிராத… இது தான் சம்பிரதாயம்னு சொன்னா … உந்தங்கச்சி அதையே பிடிச்சிட்டான்னா போச்சு …..”

“அப்புறம் இங்க உள்ள வேலைய யார் பார்ப்பானு கேட்டீங்க மிஸ்டர் அரவிந்த் … நான் பார்க்க வேண்டாமா….”

“மாப்ள….. வேண்டாம்…. என்னைய …. விட்டுருடா…”

புன்னகைத்த ரமேஷ்…. “ஆன் …. அது ” என நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர். இரு நாட்களிலேயே ராதிகாவின் சீமந்தமும் சிறப்பாக நடைப்பெற்றது. வந்தவர்களை எல்லாம் அனுப்பி விட்டு இரவில் அறைக்கு வந்த கணவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டவள்.

“பாஸ் அடுத்த வாரம் மூணாறுல ஏதோ டீ பேக்டரி ஓனர்ஸ் மீட்டிங்னு பேசிக்கிட்டீங்களே …. கண்டிப்பா போகணுமா…. “

“ம் … கட்டாயம் போகணுமே டா … நிறைய கான்ட்ராக்ட்வேற சைன் ஆகுது. அனுமாவுக்கு எப்ப வேணும்னாலும் டெலிவரி இருக்கலாம்.” என்றதும் ராதிகா அமைதியாகி விட்டாள்.

வந்த ஒரு வாரத்திலயே அனன்யாவுக்கு பிரசவ வலி எடுக்க , குடும்பமே மருத்துவமனையில் கூடி விட்டனர். ரமேஷின் முகம் பார்த்த அனன்யாவோ வலியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தாலும்  அவளால் முடியாது போக , அவனை அருகழைத்து ,

“அத்தான்…. பயப்படாதீங்க….. நான் … “

“ஷ் நீ ஒன்னும் சொல்லாத …. நீ வெளிய நம்ம பிள்ளைய தூக்கிட்டு வர்ற  வரைக்கும்…. நான் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன்….” என்றவன் உள்ளே அழைத்துச் செல்லும் வரை கைப் பிடித்துக் கொண்டே வந்து அந்தக் கரங்களில் முத்தமிட்டுத்தான் அனுப்பினான்.

ரமேஷின் தவிப்பைப் பார்த்த அனைவரும் அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தனர். அரவிந்துக்கோ  எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று பரிசோதனையின் போது சொல்லப்பட்ட தங்கையே இவ்வளவு வேதனை அனுபவிக்கையில் , ராதிகாவிற்கு இரத்த அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்பட அவள் எப்படித் தாங்குவாள் என்ற கவலையும் வர, ரமேஷிற்கு அவனாலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இருவருமே அருகருகே அமர்ந்திருந்தனர்.

ரமேஷின் தவிப்பையும் அனன்யாவின் வலியையும் பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவுக்குள் சொல்லெனா உணர்வுகள் … ஜானகியின் அருகே அமர்ந்திருந்தவள் கணவனின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

தரையைப் பார்த்தே யோசித்துக் கொண்டிருந்தவன் , மனைவி அருகில் அமரவும் அவளைப் பார்க்க , முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த அறையில் அவள் நெற்றி முழுவதும் வியர்வைத் துளிகள் ,

சட்டென்று எழுந்துக் கொண்டவன் , மற்றவர்கள் கவனம் அவர்கள் புறம் வராமல் அவளைக் கைப்பிடித்து எழுப்பி சற்றுத் தள்ளி நின்று , “என்னடா இப்படி வேர்க்குது … வா டாக்டரைப் பார்க்கலாம் … “

சிறிது மூச்சு வாங்க , “பாஸ் … நீங்களும் இப்படி என் பக்கத்துலயே இருப்பீங்கல்ல …… எனக்கு எனக்கு பயமா இருக்கு பாஸ்….”

“அது எப்படி உன் பக்கத்துல இல்லாம போவேன் …. நீ இப்படி பயப்படுவனுதான் அம்மா உன்னைய வீட்லயே இருக்கச் சொன்னாங்க…. பாரு எப்படி வேர்க்குது … வா டாக்டர் பார்க்கலாம்….” எனக் கைப்பிடிக்க,

“குழந்தை பிறந்ததும் போகலாம்…. ” என்றவள்… மறைவாக இருந்த இடத்தில் நின்று அவனைக் கட்டிக் கொண்டு ,

“பாஸ்…. எனக்கு அப்பா அம்மா … எல்லாமே நீங்க தான் …. நீங்க என் பக்கத்துலயே இருக்கணும் .நீங்க சொல்வீங்களே … நீ தூங்குற வரை என்னைத் தூங்க விட மாட்ட ,முழிச்சிட்டா  என்னையும் எழுப்பி விட்டுருறேன்னு. அப்படித்தான் பாஸ்…. எனக்கு நீங்கதான் உலகம் …. நான் கண்ண மூடுற வரை என் கண் முன்னால நீங்க தான் இருக்கணும்.” என்றவளை , வயிறு இடிபடாமல் கட்டிக் கொண்டவன்.

“ப்ச் இப்படிலாம் பேசாதனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ….” அவனுமே தங்கையின் வலிநிறைந்த முகம் பார்த்து துடித்துக் கொண்டிருந்தான்….ராதிகா அதற்கு மேல் பயந்து விட்டாள் என்பதை உணர்ந்தவன்.

“நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு….பேபி ” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , குழந்தையின் அழுகுரல் கேட்க இருவரும் அங்கு சென்றனர்.

ஜானகி குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டிருக்க , ரமேஷும் தாயம்மாவும் அருகில் நின்றுக் கொண்டிருந்தனர்.

ஜானகி அரவிந்த் ராதிகாவைக் கண்டதும் , “அரூ இங்கப் பார் உனக்கு மருமகன் பிறந்திருக்கான். அப்படியே எங்க அண்ணன எங்கேனு இருக்கான் என் பேரன் ….” என்றுப் பூரித்துக் கொண்டிருந்தார்.

ரமேஷை கட்டிக் கொண்ட அரவிந்த் , ” வாழ்த்துக்கள் மச்சான் … ” என ரமேஷ் இறுக்கி கட்டி தன் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினான்.

ராதிகாவை அனன்யாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவரிடம் பரிசோதனை செய்ய அழைத்துச் செல்ல , அவளது BP அளவு கூடியிருப்பதைப் பார்த்தவர் , அவளை வெளியே அனுப்பி விட்டு ,

“மிஸ்டர் அரவிந்த் … அவங்க ரொம்ப பயப்படுறாங்க போல… இந்த அளவு BP இருக்க கூடாது. இப்போதைக்கு டேப்ளட்ஸ் போதும்….ஆனாலும் அவங்கள கொஞ்சம் எதையும் நினைச்சு பயப்படாம சாதரணமா இருக்கச் சொல்லுங்க… ரொம்ப எமோஷனல் ஆகாம பார்த்துக்குங்க…” என்றவர் சில பல ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு ஜானகியும் ரமேஷும் இருக்க அரவிந்த் மனைவியையும் தாயம்மாவையும் அழைத்துக் கொண்டு வீடு செல்ல , அறைக்கு மாற்றப்பட்ட அனன்யாவைப் பார்த்த ரமேஷிற்கு தன்னையும் அறியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

அனன்யா தன்னருகில் வந்து அமர்ந்தவனிடம் , “என்னத்தான் உங்கம்மாவ கூட்டிட்டு வரலனு ஃபீல் பண்றீங்களா….. அடுத்த தடவை கண்டிப்பா கூட்டிட்டு வாறேன்…”

அவள் கையைப் பிடித்துக் கொண்ட ரமேஷ் , ”  பப்ளி … எனக்கு நீயும் நம்ம பையனும் போதும்…. நீ வெளிய வரதுக்குள்ள …. நீ கத்தி அழுதுட்ட …. நான் அழல அவ்வளவுதான் வித்தியாசம்….. “

கணவனின் அன்பில் நெகிழ்ந்தவள், அவனது இந்த கலங்கியத் தோற்றம் பொறுக்காது , “அது எப்படி … எங்கப்பா கூடப் பிறந்த எங்கத்தைய நானும் பார்க்கனுமே ….அதுனால சீக்கிரமே அதற்கான முயற்சி செய்வோம் … சரியா அத்தான்…. ” எனக் கண்ணடித்துக் கேட்க , அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தவன் ,

” பப்ளி…..தேறிட்ட ” எனப் புன்னகைக்க,

“நான் திருமதி ரமேஷ்…..தேறாம…” அதற்குள் அவர்கள் மகன் அழுது பெற்றோரை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

Advertisement