ஜானகியும் தாயம்மாவும் திருப்பூர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். உறவினர்கள் யாரையும் இங்கு அழைக்கவில்லை அங்கிருந்த வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சிலர் வெகுகாலமாக அங்கேயே வேலை செய்பவர்கள் என்பதால் ஜானகி அவர்களோடு இயல்பாய் பேசிக் கொண்டு இருந்தார்.
பகல் பதினொன்றை நெருங்கிக் கொண்டு இருக்கவும் தான் அனன்யா அறையைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். வந்தவளுக்கு மேலிருந்து கீழே பார்க்க அம்மாவும் தாயம்மாவும் அமர்ந்திருப்பது தெரிய கீழே செல்லவேக் கூச்சமாக இருந்தது. சென்று தான் ஆக வேண்டும் என்பதால் மெதுவாக படியிறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.
கொலுசொலி கேட்கவும் இருவரும் அனன்யாவை திரும்பிப் பார்த்தனர். எப்பொழுதும் துள்ளிக் கொண்டு நடந்து வரும் அனன்யாவுக்கும் , இன்றைய அனன்யாவுக்கும் வித்தியாசத்தைக் கண்ட தாயம்மா , அவள் அருகில் வந்ததும் தன் கைகளைக் கொண்டு நெட்டி முறித்தார்.
மகளின் முகச் சிவப்பைக் கண்ட ஜானகியும் மகளின் வாழ்வு செழிக்க கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டார்.
“வா கண்ணு பூஜை அறைக்குப் போய் சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றார்.
விளக்கேற்றி விட்டு வந்தவள் தாயம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, கண் கலங்கிய அவர் , ” இந்தக் குடும்பம் தழைக்கணும் கண்ணு அது உன் கைல தான் இருக்கு ” என்றவர் குங்குமம் வைத்து ஆசிர்வதித்தார்.
வந்து ஜானகி காலிலும் விழுந்து வணங்கியவளை அரவணைத்துக் கொண்ட ஜானகி ” என் மருமகன நல்லாப் பார்த்துக்க மா , அவங்கம்மா சேலையை பிடிச்சிட்டே சுத்தி வருவார். பாவம் பிள்ள எப்படிதான் தாங்குச்சோ ” என்று கண்ணீர் விட்டவரை,
“ம்மா உங்க மருமகன நான் நல்லாப் பார்த்துக்கிறேன் , அண்ணன் எனக்கு அப்பா இல்லாத குறையே தெரியாம என்னைப் பார்த்துகிட்டாங்கமா , ஆனா அண்ணன் … அப்பாவும் இல்லாம , உங்க அன்பும் இல்லாம … சின்ன வயசிலயே பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டும் …. சொல்லிட்டே போகலாம் … எனக்குத் தெரிஞ்சு அண்ணன் அவருக்குனு விரும்பி செய்து கிட்டது அண்ணிய விரும்பி கல்யாணம் பண்ணது மட்டும் தான் … இன்னும் ஆச்சரியமா தான் இருக்குமா ….. அண்ணி இதை விட அதிகமா துன்பம் அனுபவிச்சவங்க …நீங்க அண்ணன் அண்ணியப் பாருங்கம்மா , அண்ணன் உங்க அன்புக்காக ரொம்ப ஏங்கிப் போய்ட்டாங்க… “
“கல்யாணம் ஆன மறுநாளே என் பொண்ணு வளர்ந்துட்டாங்க தாயம்மா , எனக்கு சொல்லித் தாறாப் பாருங்களேன்” என்றுப் புன்னகைத்தார்.
“ம்மா….” என்று செல்லம் கொஞ்சிய மகளிடம் , “போ போய் மருமகனுக்கு காஃபி எடுத்துட்டுப் போம்மா” என்று அனுப்பி வைத்தார்.
அதே நேரம் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்த ராதிகா ஜானகியிடம் வந்து அமர்ந்துக் கொண்டாள். அவளுக்கு ஜானகி தன் தந்தையின் உடன் பிறந்தவர் என்ற செய்தியால் மரியாதையும் , பாசமும் அதிகமானது போல் தோன்றியது.
“அத்தை சாப்டீங்களா…. லேட்டா தூங்கினதால இவ்வளவு நேரம் ஆகிருச்சு “
“பரவல்லமா.. நாங்க சாப்பிட்டாச்சு , நீ போய் உனக்கும் உன் அத்தானுக்கும் சாப்பிட எடுத்துட்டுப் போ…. “
“என் அத்தானா … “
தாயம்மாவுக்கு சிரிப்பு வர , அவள் தாடைப் பிடித்தவர் , ” உன் புருஷனத்தான் அம்மனி சொல்றோம்”
” ஓ அப்படியா , சாரி அத்தை எனக்கு சட்டுனு இது போல உறவு சொன்னது புரிபடல”
“இதுக்குப் போய் சாரி சொல்வியா, தெரிஞ்சுக்கோ அவ்வளவுதான் …. உங்கம்மாவ நான் போட்டோல தான் பார்த்திருக்கேன். ஒரு தடவை போன்ல பேசிருக்கேன். அந்த ஒரு தடவை லயே அஞ்சுவ எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு , அப்ப எங்கம்மாவ போலவே ஒரு பொண்ணுப் பெத்துக் கொடு என் பையனுக்குனு சொன்னேன். நான் கேட்ட மாதிரியே உன்னைய என் பையனுக்கு தந்துட்டா … அதே போல நீயும் அரவிந்த் அப்பாவ மறுபடி குழந்தையா என் கைலக் கொடுமா…” என்ற போது அவர் கண்கள் கலங்கி , ராதிகா கையைப் பிடித்துக் கொண்டவர் ,
” நான் பத்திரமாப் பார்த்துக்குவேன் ராதாம்மா” என்று அழுதவர், “நீ என் அம்மா மா எங்க ராதாம்மா ” பூஜை அறை அழைத்துப் போய் காண்பித்தவர் , “பாரேன் என் அம்மா போலவே கண்கள் உனக்கும் எனக்கும் ” என்றார்.
திகைத்து விழித்த ராதிகா , “ஓ எப்பவும் என் கண்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு … இது தான் காரணமோ ” என்று கணவனின் நினைவில் புன்னகைத்துக் கொண்டாள்.
அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த அரவிந்த் வெளியே செல்ல தயாராகி வந்திருந்தான். எதிரே காஃபியோடு வந்த தங்கையைக் கண்டவன் முகத்தில் அப்படியொரு பூரிப்பு , “பாப்பா ரமேஷ் எழுந்துட்டான்னா எனக்கு போன் பன்னச்சொல்லுமா, நான் இப்ப வெளிய போய்ட்டு வந்து கோவைக் கிளம்பணும்”
அண்ணனைக் கண்டதும் சங்கடத்தில் நின்றவள் , “ம்…. சரிங்கண்ணா என்றவள் தலை குனிந்துக் கொண்டே அறைக்குச் சென்றாள்.
ரமேஷோ இன்னும் நல்ல உறக்கத்தில் , அருகில் சென்ற அனன்யா , அவன் தோள்களை அசைத்து எழுப்பப் பார்க்க அவன் அசையவே இல்லை ,
“அத்தான் ப்ளீஸ்… கீழே எல்லோரும் வந்துட்டாங்க , எழுந்து சீக்கிரம் ரெடியாகுங்க” என்று அவன் காதருகில் சென்று கூறவும் ,
அவளை அப்படியே இழுத்து கட்டிலில் அமர வைத்து மடியில் தலை வைத்துக் கொண்டவன் , “எங்க ரெடியாகனும் … எனக்கு ஒரு மாசம் வீட்ல தான் வேலை , சோ நான் தூங்குறேன்.”
” அத்தா…ன்ன் ” என்றவளை சரித்து அணைத்து கழுத்தில் வாசம் பிடித்தவனை தள்ளிவிட்டுக் கொண்டே , ” கீழே போய் யாரைப் பார்க்கவும் கூச்சமாருக்குத்தான்… இப்ப … இப்ப “பேச்சுவராமல் தடுமாறியவளிடம்,
“இப்ப ” என்றவன் , தன் கைகளும் உதடுகளும் செய்யும் வேலைகளுக்கு ஓய்வளிக்காமல் இருந்தான்.
“பப்ளி…. நைட் சரியா தெரியல … இப்ப வெளிச்சத்துல செக் பண்றேன் ….”
“நான் கண்ல பார்த்துதானே சொல்றேன்னு சொன்னேன் …. நீ என்ன நினைச்ச சொல்லு சொல்லு….” எனக் குறும்புடன் பேசியவனை,
தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள். எழுந்து கொண்டவளை பிடிக்க முயன்றவனிடமிருந்து தப்பித்துக் கதவருகே சென்றவள், ” நான் ஒன்னும் நினைக்கல ….அண்ணன் உங்கள போன் பன்னச் சொன்னாங்க , சீக்கிரம் வாங்க ” என்று கதவடைத்துச் சென்று விட்டாள்.
“உங்கண்ணன இன்னும் ஒரு மாசத்துக்கு என் ஞாபகமே வராத மாதிரி செய்து வைக்கிறேன்” என்றவன் எழுந்து குளிக்கச் சென்றான்.
ஜானகி இங்கு வந்திருக்கிறார் என்றதால் அவர்களது உறவுகள் சிலர் வந்திருந்தனர்.. அவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போதே அரவிந்த் திரும்பி வந்து விட்டான்.
மனைவியை விழிகளால் அழைத்துக் கொண்டே அறைக்கு சென்றுக் கொண்டு இருந்தவன் எதிரே வந்த ரமேஷைப் பார்த்தான். ரமேஷும் அரவிந்தைப் பார்க்க , மச்சினர்களாக அல்லாது நண்பர்களாகப் புன்னகைத்துக் கொண்டவர்கள், சட்டென்று இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.
தங்கைக்காகவா , நண்பனுக்காகவா அரவிந்துக்கு தெரியாது , அதேபோல் மனைவியின் அண்ணனுக்காகவா, இல்லை நண்பனுக்காகவா ரமேஷுக்கும் தெரியாது. ஆனால் அந்த அணைப்பு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத மகிழ்ச்சியை இருவருக்குமே தந்தது.
புன்னகைத்துக் கொண்டே , “மச்சான் போன் பண்ணச் சொன்னீயாம், என்னடா “
“இங்க சிவா மச்சான் ஒரு மாசம் ஹாண்டில் பண்றேன் சொல்லிட்டாங்க… சோ நீ புது மாப்பிள்ளையா ஒரு மாசம் வலம்வா. நான் அங்கப் பார்த்துக்கிறேன். எல்லா வேலையும் பெண்டிங் டா. நான் இப்பவே எல்லாரையும் கூட்டிட்டுக் கிளம்புறேன்”
“அது சரிதான். ஆனா கிளம்புறதா இருந்தா நீயும் தங்கச்சியும் கிளம்புங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு உயிர் வந்த மாதிரி இருக்குடா. நான் அத்தைய ஒரு வாரம் கழிச்சு தான் அனுப்ப போறேன். இந்த வீடு இப்படி ஆகாதானு ஏங்கிட்டு இருந்தவன் டா நான்…. “
“அதுகில்லடா அம்மா ஹெல்த் நினைச்சுதான் … “
கீழே உறவினர்களோடு பேசிக் கொண்டு இருந்த ஜானகியை காட்டிய ரமேஷ் ,
“அங்க பாரு அவங்க எப்படி பேசிட்டு இருக்காங்கனு , இப்படி பேச மாட்டாங்களானு எதிர்பார்த்தோமே மச்சான்.. இப்ப நாம ஆசைப்பட்டது நடக்குது. நீ கவலையேப்படாதே நான் பார்த்துக்கிறேன்.”
நண்பன் சொல்வது சரியே என்றுத் தோன்ற அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவியுடன் மாலையில் கிளம்பினான்.
கிளம்புகையில் அனன்யாவிடம் வந்த ராதிகா”அண்ணி நான் கிளம்புறேன் , எங்கண்ணன பார்த்துக்கோ…” என கண் சிமிட்டவும் ,அனன்யாவும்
“அப்படிங்களா அண்ணி , நீங்க எங்கண்ணனப் பார்த்துக்கோங்க” என்று கண் சிமிட்டவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய் விட்டு சிரித்தனர். தத்தம் மனைவியரின் சிரிப்பில் அந்த இளம் கணவர்கள் சித்தம் கலங்கித்தான் போயினர்.
சிவா வீட்டிற்குச் சென்று குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தவளிடம் வந்த சிவாவின் அப்பா , ” ராதிகா மா அன்னைக்கு நான் தந்த கவர் நீ பிரிச்சுப் பார்த்தியா தெரியாது .ஆனா உங்கம்மாப்பா மேல வருத்தம் வச்சுக்காத … உங்கம்மா நீ வயித்துல வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டுருந்துருக்கா அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும் “
அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டவள் யோசனையில் ஆழ்ந்தாள். கிளம்பி நெடுஞ்சாலையை அடையும் வரையுமே இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
காரின் வேகத்தைக் குறைத்தவன் , “ஸ்வீட்டி மாமா சொன்னதையே யோசிக்கிறியா … எதுவானாலும் கோபப்படாதே … நாம சொந்தம்னு முதல்லயே தெரியாது தானே , அது போல நம்ம குடும்பத்துல நடந்த நிகழ்வுகளும் , இப்படித்தான்னு அந்தக் கடவுள் எழுதி வச்சப் பிறகு என்ன செய்றது டா.”
அவனைத் திரும்பிப் பார்த்தவள் கரம் கோர்த்தவன் , ” சோ பாஸ்ட் இஸ் பாஸ்ட் .நடந்தது அப்படியே மறந்துட்டு இனி நடக்கப் போறது மட்டும் யோசிப்போமா மை டியர்” என்றான்.
அவளும் அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவள் , ” கண்டிப்பாங்க , நீங்க சொல்றது போல இனி நடக்கப் போற விஷயங்கள மட்டும் பார்க்கப் போறேன் . பழைய விஷயங்களை மறக்கப் பார்க்கிறேன்.”
புன்னகைத்தவன் , கோவைக்கு சென்று அவர்கள் வீட்டின் முன்பு தான் காரை நிறுத்தினான். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது மணி பத்தை நெருங்கி கொண்டிருந்தது. வீட்டில் சமையல் செய்யும் இருவர் இவர்கள் காரை விட்டு இறங்குவதைப் பார்த்ததும் அருகில் வந்தவர்கள் ,
“தம்பி , ஊர்ல இருந்து ரமேஷ் தம்பியும் பாப்பாவும் இது இது செய்ங்க சொன்னதுல எல்லாம் செய்து வச்சிட்டேனுங்க, திரும்ப காலையில வந்து செய்ய சொல்லிருக்காருங்க. நாங்க அங்க வீட்டுல இருக்கோம்ங்க , நீங்களா போன் பன்றவரை வீட்டுல உங்கள தொந்திரவு செய்ய வேண்டாம்னு சொன்னாங்க , நாங்க வாறோம்ங்க” என்றவர்கள் அவர்கள் வீட்டு வளாகத்தில் அவர்களுக்காக கட்டித் தரப்பட்டு இருந்த வீட்டிற்கு சென்று விட்டனர்.
மனைவியுடன் வீட்டினுள் சென்றவன் , கதவை தாழிட்டதுமே ராதிகாவை கையில் தூக்கிக் கொண்டு மாடியேற ஆரம்பித்தான்.