அழகு 34

    ராதிகாவும் அனன்யாவும் நடுவில் நிற்க இரு ஓரங்களிலும் அரவிந்தும் ரமேஷும் நின்றுக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ரமேஷும் அனன்யாவும் ராதிகா அரவிந்த் போலவே ஆடைகள் அணிந்திருந்தனர். நிறம் மட்டுமே வேறு வேறாக இருந்தது.

காலை திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்க அவர்களுடன் ஜானகியும் தாயம்மாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.ஜானகிக்கு வைத்தியம் செய்யும் மருத்துவரும் வந்திருந்ததால் அவரிடம் தாயின் உடல்நிலை மனநிலை மாற்றத்தை தெரிவிக்க , அவர் அந்த வாரத்தில் ஓர் நாள் மருத்துவமனை அழைத்து வரும்படி கூறி விட்டார்.

ராதிகாவிற்கு பகலில் இருந்த இதமான மனநிலை இப்போது இல்லை. ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்ட ,

“என்னாச்சுடா டயர்டா இருக்கா ” என்றுக் கேட்டவனிடம், “இல்லை” என்பதாக தலையசைத்தவள், அதன் பின் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.இரவு பதினொன்றுக்கு மேல் தான் அனைவரும் திருப்பூர் கிளம்பினர்.

ரமேஷுக்கும் அனன்யாவுக்கும் மட்டும் ஓட்டுனர் வைத்துக் கொண்டவன். தங்களுக்கு அவனே காரைச் செலுத்த ஆரம்பித்தான். மனைவியை அருகில் வைத்துக் கொண்டும் , அம்மாவையும் தாயம்மாவையும் வசதியாக பின்னிருக்கையில் அமர வைத்தவன் , மிதமான வேகத்தில் காரைச் செலுத்தினான்.

தாயம்மாவும் ஜானகியும் சிறிது நேரத்திலயே உறங்கிவிட , ராதிகாவையும் உறங்கச் சொன்னான்.

“நீங்க ட்ரைவ் பன்னும் போது நான் எப்படி தூங்குறது ,பரவால்ல  நான் முழிச்சிட்டுருக்கேன்”

“எனக்கு இப்படி நைட் ட்ரைவ் பன்றது பழகிடுச்சு, அதனால நீ நல்லா வசதியா சாய்ந்து ரெஸ்ட் எடு” என்றவன் ஒரு கையால் அவள் இருக்கையை சாய்த்துவைக்க அவள் புறம் கையைக் கொண்டு வந்தவன் , “ஷ்… ” என்ற சத்தத்துடன் கையை இழுத்துக் கொண்டான். பதறியவள் என்னாச்சு என அவன் இடக்கரத்தை திருப்பி பார்க்க , நீண்ட கோடாக கீறல் விழுந்து சிறிது இரத்தமும் தென்படவும் ,

“ஐயோ என்னாச்சுங்க” என்றவள் துடைக்க தன் உடையைத் தொட அது முழுதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தவன் சத்தமில்லாமல் சிரித்தவன் அவள் காதருகில்” இந்த மாதிரி டிரஸ்லாம் வெஃய்ப்க்கு போட்டுப் பார்த்து ரசிக்க மட்டும் தான் … கட்டிப்பிடிக்க வந்தா இந்தக் கதை தான். உன் டிரஸ்தான் என் கைய கீறி விட்டுச்சு… “

அதற்குள் அங்கிருந்த டிஷ்யூ பேப்பர் எடுத்து துடைத்தவள் … முதலுதவி பெட்டி எடுத்து அதிலிருந்த மருந்தை போட்டு விட்டாள்.

அவன் சொல்லவும் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தவளிடம் “இந்த முகம்தான்டா நல்லாருக்கு , ஏன் ஏதோ யோசிச்சுட்டே இருக்க…. என்னனு என்கிட்ட சொல்லு … முடிஞ்சா சரி பன்றேன்.” என்றவன் காரை ஓரமாக நிறுத்தினான்.

அவளும் அவர்கள் தூங்குகிறார்களா என்றுப் பார்த்து விட்டு ,

“ஒன்னுமில்ல , நீங்க கார் எடுங்க .. வீட்ல போய் சொல்றேன். ரொம்ப நேரமாகுது .. அவங்கள்ளாம் காத்துட்டு இருப்பாங்க.”

அவனும் அவள் சொல்வது சரிதானே என்றெண்ணியவன் , அவள் வலக்கையில் தன் இடக்கரத்தைக் கோர்த்துக் கொண்டவன் , ” எதுவானாலும் நான் இருக்கேன். எதையும் போட்டு மனசக் குழப்பிக்காத … இனி நம்ம வாழ்க்கைய எப்படி ஆரம்பிக்கிறது அப்படினு மட்டும் யோசி சரியா” என்றவன் அவள் புறங்கையில் முத்தமிட்டுத்தான் கையை விடுவித்தான்.

“சரி” என்பதாக தலையசைத்தவளிடம் , “அப்போ கூகிள்ல செக் பன்னியா”

“என்ன ” என்று கேட்டவளிடம் ,

“ம் … புது மனைவி கணவனுக்கு என்ன என்ன செய்யலாம்… அப்படினு “

“இல்லையே …. நான் அப்புறம் பார்க்கிறேன்”

அவள் முகம் பார்த்தவன் முறுவலோடு , ” உனக்கு தியரி படிக்க டைம் தந்தேன் .நீ யூஸ் பண்ணல … சோ நேரடியா பிராக்டிகல் கிளாஸ் தான் “

“ஓ… ஆமாங்க எதையும் படிச்சு தெரிஞ்சுகிறத விட அனுபவமா தெரிஞ்சிக்கிறது தான் நல்லது “

அரவிந்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை , வாயைப் பொத்திக் கொண்டவன் , அவள் தலையைத் தொட , தலையில் அலங்காரத்திற்காக குத்தப்பட்ட கொண்டை ஊசி ஒன்று அவன் கையில் மறுபடியும் குத்தி விட , மறுபடியும் “ஷ் ” என்றவன் ,

“ஸ்வீட்டி… இப்படி உன்னையத் தொட்டாலே இப்படி ஆனா ப்ராக்டிக்கல் கிளாஸ் எப்படி போறது ” என்று சிரித்துக் கொண்டே சொல்லவும் தான் , அவன் பேச்சு புரிபட ,

“உங்கள….”என்றவள் மீசையை வேகமாக இழுத்துவிட்டு  சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இப்பொழுது சஞ்சலங்கள் குறைவது போல் ஓர் எண்ணம். சிறிது முகம் வாடினாலும் கண்டு அதனைப் போக்கும் கணவனை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது ராதிகாவுக்கு …. கண்களை மூடிக் கொண்டவள் தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் , கவலையாக இருந்தாலும் ‘முருகா நன்றி ‘ என்பாள். இன்றும் அதையே சொன்னவள் திரும்பி அவனைப் பார்க்க ,

” இப்படி வண்டி ஓட்டும் போது நீ சைட் அடிச்சா நான் எப்படி ஓட்டுறது.”

” என்ன சைட் அடிக்கிறேனா ” என்றவளிடம் ,

“அப்ப  நீ சைட் அடிக்கலயா , தூங்குனு சொன்னா தூங்க மாட்ட , அப்ப நீ சொல்ற அசிங்கமா பேசுறதுனா என்னனு கிளாஸ் எடுக்குறேன் “

“பா….. ஸ்…. என்னை விட்டுருங்க … நான் தூங்கறேன்”

என்றவள் நன்கு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“இதெல்லாம் அநியாயம் இல்லையா டியர் , உன்னை டச் பண்ணாலே ஷாக் அடிக்குற மாதிரி டிரஸ் போட்டுருக்க… இதுல என்னை விட்டுருங்க வா…” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனின் வாயை கைக்கொண்டு மூடியவள் , “ப்ளீஸ்ஸ்.…..ஸ்” என்று சொல்லி கண்களாலயே இறைஞ்சவும் ,

அவள் கையை எடுத்து விட்டு அணைத்துக் கொண்டவன் “தூங்கு… இப்படியே தூங்கு” என கிசுகிசுக்கவும் ,

“அத்தை தாயம்மாலாம் இருக்காங்க , கூச்சமா இருக்கு ” என்று விலகியவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அதன் பிறகு திருப்பூர் வந்து அவன் எழுப்பவும் தான் விழித்தாள். திருப்பூர் வீடோ அரண்மனைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. திருமணத்திற்காக புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த அந்த வீட்டைக் கண்டதும் ஜானகிக்கு கண்ணீர் வர , தாயம்மா தோளில் கை வைத்து ,

 “ஜானு அழாத அங்க பாரு நம்ம பிள்ளைங்க முகத்துல எவ்வளவு சந்தோஷம் … அதுங்க இன்னைக்குத் தான் வாழ்க்கையத் தொடங்கப் போகுதுங்க …அதனால அழாம இனி வருங்காலத்துல நம்ம குலம் விருத்தியடையனும்னு கடவுள வேண்டிக்கோ , நீ அழற தப்பார்த்தா பிள்ளைங்க மனசு கஷ்டபடும் இல்லையா”

“நீங்க சொல்றது சரிதான் தாயம்மா ….இனி அழல வாங்க போவோம் “

நால்வரையும் வெளியே நிறுத்தி வைத்து ஆரத்தி எடுத்த ராணி ,

” ராதிகா இங்க வா , உங்க அண்ணன் அண்ணிக்கு நீ தான் ஆரத்தி எடுக்கனும் , ” என்றவள் அவள் கையிலும் ஒரு தட்டைத் தந்து ஆலம் சுற்றச் சொல்ல ,

தயங்கிக் கொண்டே ஆரத்தி சுற்றியவள் அரவிந்த் அருகில் சென்று நின்று கொண்டாள்.

உள்ளே வந்தவர்கள் முதலிலேயே அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறைகளுக்குச் சென்றார்கள்.

குழந்தைகளை வசதியாக படுக்க வைத்து விட்டு வந்த ராணி அந்த நேரத்திலும் அனன்யாவின் தலை அலங்காரத்தையும் , உடைகளையும் களைவதற்கு உதவியவள் அனன்யாவை குளிக்க வைத்து அவளை அவளை முதலிரவு அறைக்கு தயார்படுத்த அமர்ந்திருந்தாள்.

ராதிகாவும் அங்கயே இருக்கவும், “ராதிகா நீயும் இன்னைக்கு ரொம்ப நேரம் நின்னுட்ட , போ போய் இந்த டிரஸ் மாத்திட்டு தூங்கு .. நான் அனன்யாவ ரெடி பன்னிட்டு உன்னைக் கூப்பிடுறேன்”

“அது ….அது …அண்ணி… இந்த பட்டன்ஸ் ரிமூவ் பன்னி விடுங்களேன் ” என்று  சொல்ல ,  அவளும் அதை பாதி வரை அவிழ்த்துக் கொண்டிருக்கவும் ,அனன்யா வெளியே வரவும் சரியாக இருந்தது ,அனன்யா தலைக்கு குளித்து வரவும் , “என்ன அனு தலைக்கு இந்நேரம் குளிச்சிருக்க , உடம்புக்கு எதுவாது ஆகிறப்போகுது , வா டிரையர் போடலாம் …” என  ராணி அனன்யாவுக்கு உதவி செய்ய சென்று விட்டாள்.

“அக்கா தலை முழுசும் ஜிகினா ஸ்பிரே பன்னது என்னவோ போல இருந்துச்சு அதான்…. “அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க ,

 அவர்களைத் தொந்திரவு செய்ய மனமின்றி, அரவிந்த்   இருந்த அறைக்குச் சென்றவள் கண்ணாடி முன் அமர்ந்து தலை அலங்காரத்தை களைத்துக் கொண்டு இருந்தாள். அரவிந்த் குளியலறையில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு தானே ஆடை களைய முற்பட , குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க , சட்டென்று தன் கூந்தலை அவிழ்த்து முதுகு முழுவதும் படரவிட்டுக் கொண்டாள்.

அரவிந்த் வேறு உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்தவன் ,

“செம டயர்ட் , நீயும் வந்துப் படு … ” எனவுமே கதவு தட்டும் சத்தம் கேட்க , “இதோ வாறேன் அண்ணி … ” என்று வெளியில் சென்று விட்டாள்.

அங்கு அனன்யாவை பூஜை அறையில் நிற்க வைத்து தாயம்மாவும் ஜானகியும் ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருக்க, அனன்யாவை அறையில் விட ராதிகாவை ராணி அழைத்திருந்தாள்.

” என்ன ராதிகா இவ்வளவு நேரம் தலை அலங்காரம் கலைக்கவே சரியா இருந்துச்சா …சரி வா அனுவ ரூம்ல விட்டுட்டு நீ போ ” என அனன்யா கையைப் பிடித்துக் கொண்டு அவள் காதில் ரகசியம் பேசிக் கொண்டு வர , அவள் முகம் சிவந்துக் கொண்டே வந்தது.

அவளை ரமேஷின் அறையில் விட்டவுடன் , ” ராதிகா இனிதான் உனக்கு பொறுப்பு அதிகமாகுது. காலையில நாங்க வீட்டுக்கு கிளம்பிடுவோம். நீயும் டயர்டா இருக்க .. நாங்க கிளம்புறோம்னு அவசரமா எழுந்திரிக்காத… நீங்க கிளம்பும்போது ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டுப் போங்க சரியா”

“சரி அண்ணி … அண்ணி ஒரு நிமிஷம் “

“சொல்லு ராதிகா” , ” இந்த டிரஸ்…” என ஆரம்பிக்கவுமே சிவா அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வர , ராணி குழந்தையை வாங்கிக் கொண்டு சமாதானப்படுத்த துவங்கினாள்.