Advertisement

அவன் மேடை ஏற ஆரம்பித்ததும் மெதுவாக பின்னோக்கிச் சென்றவள் அவன் கண்ணில் படாமல் கூட்டத்தில் மறைந்து நின்றுக் கொண்டாள்.

அனன்யாவுக்கு நலங்கு வைத்தவன் அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த ராதிகா , ” அனு அவங்கண்ணன் புகழ் பாடுறது சும்மா இல்ல போல … கண்ணுலயே பாசத்தை தேக்கி வச்சுருக்காங்க ….அனு கொடுத்து வச்சவ” என்று நினைத்துக் கொண்டவள் கண்ணில் , மேடையை விட்டு இறங்கும் போதே விழிகளை அங்கும் இங்கும் சுழற்றும் கணவனைக் கண்டு புன்னகை வந்தது.

” தேடுங்க … தேடுங்க…. என்னையத்தானத் தேடுறீங்க …. இத்தனை நாள் என்னைத் தேடவிட்டீங்கள்ள ….” முறுவலித்துக் கொண்டவள் விழிகள் அவனைத் தவிர  வேறு எங்கும் திரும்பவில்லை.

அரவிந்தோ வந்தவர்களை கவனித்தாலும் பார்வையைச் சுழற்றிக் கொண்டே இருந்தான். ஒரு சமயத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ” ராதிகா எங்கே” என்றுக் கேட்க ஆரம்பித்து விட்டான்.

அத்தனையையும் அவனுக்கு முகம் காட்டாது மறைந்து மறைந்து கவனித்தவளிடம் வந்த ராணி, ” ராதிகா நீ இங்க தான் இருக்கியா , அங்க அரவிந்தண்ணா தேடிட்டே இருக்காங்க , போ போய் என்னனு கேளு , இங்க நான் பார்த்துக்கிறேன்”, ராணியிடம் தலையசைத்து விட்டு அவன் கண்ணில் படாமல் நழுவியவள் ஜானகியின் அறைக்குச் சென்றாள். அவளைப் பார்த்த தாயம்மா ,

“என்ன கண்ணு இங்க வந்துட்ட ,அங்க நீ தான் கண்ணு முன்ன நின்னு எல்லாம் செய்யணும் “

“ஆமா தாயம்மா இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன். அத்தைய ஏன் அங்க கூட்டிட்டு வரல”

“இல்லகண்ணு ஜானகி கடைசியா ….அந்தக் கூட்டம் தான் பார்த்துருக்கு, அதற்கப்புறம் கூட்டத்தைப் பார்த்தாலே மனசும் உடம்பும் சரியில்லாமப் போயிருது. பெரியவர் போனப்பக் கூட ஆஸ்பத்திரிலயே பார்க்க வச்சு தம்பி கூட்டிட்டு வந்துருச்சு.. இப்பவும் வீட்ல உறவுக் கூட்டத்தைப் பார்த்து என்னமோ யோசிச்சுட்டே இருக்குதுங்க அம்மனி … அது தான் வெளியே கூட்டிட்டு வரல”

“தாயம்மா நாம இப்படி பயந்துட்டே இருக்கிறதால தான் அவங்க அப்படியே இருக்காங்க. நீங்க இப்ப அத்தையரெடி பண்ணி வைக்கிறீங்க. அவங்க பொண்ணுக்கு நடக்கிற முக்கியமான விசேஷம் அவங்க இல்லன எப்படி … எனக்குத் தான் யாரும் இல்ல… அனுவுக்கு நாம அந்தக் குறைய வைக்கக் கூடாது. … அவங்களுக்கு ஒன்னும் ஆகாது, நான் பார்த்துக்கிறேன்.” என்று எழுந்தவள்,

ஜானகியிடம் வந்து , “அத்தை நம்ம அனுவுக்கு கல்யாணம் தானே அப்ப நீங்க இப்படி உள்ள இருக்கலாமா … வாங்க கிளம்புங்க நாம நலங்கு வைக்கிற இடத்துக்குப் போகலாம் ….”

“அஞ்சு அனுவுக்கு கல்யாணம் … அப்ப என் அருக்குட்டி வளர்த்திருப்பானே ….” அவரதுப் பேச்சில் மகிழ்ந்தவள் ,

தினமும் அரவிந்த் அவர் மகன் என்பதை பல விதத்தில் பதிய வைத்துக் கொண்டு இருந்ததால் ,

“அத்தை நான் சொன்னா சரியா இருக்கும் தானே … நான் சொன்னா கேட்பீங்க தானே”

தலையாட்டி ஆமோதித்தவரிடம் , புன்னகைத்துக் கொண்டே , ” நான் யார் தெரியுமா “

“அஞ்சு … என் அண்ணி “

“அதுதான் இல்லை … நான் உங்க அண்ணி போலவே இருக்கிறதால நீங்க என்னை அப்படிக் கூப்பிடுறீங்க … நான் அஞ்சுவோட பொண்ணு ராதிகா… . அது மட்டுமில்ல உங்க அருக்குட்டி வளர்ந்து பெரியவனாகி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க .. அப்ப நான் உங்க மருமகள் தானே…. “

சட்டென்று எழுந்தவர் … ” ராதிகா….. ராதா …. எங்கண்ணன் மகளா நீ … எனக்குப் பொண்ணுப் பிறந்தா அம்மா பெயர் தான் வைப்பேன் சொன்னாங்க. அப்ப நீ ….” என்றவருக்கு உடல் வியர்த்துக் கொண்டு வரவும் , அவரை அமர வைத்து முகம் துடைத்தவள் தண்ணீர் அருந்த தந்தாள்.

ராதிகாவுக்கு அவரின் நிலை சற்று பயம் தந்தாலும் மருந்து கசப்பாக இருந்தாலும் கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற முடிவில் “ஆமா அத்தை அதேதான். நான் உங்க அண்ணன் பொண்ணு ராதிகா தான் உங்க பையன் அரவிந்தோட மனைவிதான் … இப்ப வாங்க அனுவ ஆசிர்வாதம் பன்னிட்டு வந்து மற்றது சொல்றேன்” என்றவள் அவரை கிளம்ப வைத்து கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

தாயம்மாவுக்கோ சந்தோஷம் பிடிபடவில்லை அவரும் தினமும் ராதிகா ஜானகியிடம் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பவர் தானே ….அவரும் உடன் கிளம்பினார்.ஜானகியை அழைத்து வர வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவளுக்கு தான் கணவனிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம் என்பதே மறந்துவிட்டது.

மேடையை நோக்கி அவரை ஏதோ சொல்லிக் கொண்டே அழைத்து வந்தவளை அனன்யா கண்ணில் நீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் அரவிந்தும் ரமேஷும் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வேகமாக அவரிடம் செல்ல முயன்ற அரவிந்தை கைப்பிடித்து தடுத்து விட்டான் ரமேஷ். அதற்குள் மேடையை அடைந்த ஜானகி ராதிகா சொல்ல சொல்ல சடங்குகளை செய்து விட்டுத் திரும்பி கீழே இறங்கியவரிடம் அவர்கள் உறவில் உள்ள வயதான பெண்மணி

” என்ன ஜானகி … நல்லாருக்கியா, மருமக உன்னை நல்லாப் பார்த்துக்கிறாப் போல , கொடுத்து வச்சவ நீ , உன் அப்பா வீட்லயே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துட்ட …. சீக்கிரம் பேரன் பேத்தி பார்த்து சந்தோஷமா இரு” என்றார்.

அதே நேரம் அரவிந்தும் ரமேஷும் அருகில் வந்திருந்தனர்.

“சரிங்க பெரியம்மா ” என்ற ஜானகி “பூங்கோதை நல்லாருக்காளா ” எனவும் ,

“அவ பையனுக்கு போன வாரம் தான் பையன் பொறந்தான் .என் கொல்லுப் பேரனப் பார்க்கப் போனதாலதான் உன் மக கல்யாணத்துக்கு வர முடியல .. பேரன் பொறந்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கா” ராதிகாவைப் பார்த்து , ” நீயும் சீக்கிரம் பேரனப் பெத்து உங்கத்தக்கையில கொடுத்துரு அம்மிணி ” எனவும் ராதிகாவின் முகம் சிவந்து கணவனைப் பார்க்க , அவனும் மனைவியை தான் பார்த்தான்.

அதுவரை தாயை நினைத்து கலக்கத்தில் இருந்தவனுக்கு மனைவியின் இந்த முகச் சிவப்பு அந்தக் கலக்கத்தை எல்லாம் போக்கும் விதமாக இருந்தது.

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தவள்” பாட்டி அத்தைக்கு கால் வலி இருக்குது , நான் அவங்களக் கூட்டிட்டுப் போறேன் ” என்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

உள்ளே வந்த ஜானகி ஒரு வித பதட்டத்திலயே இருந்தவர் ராதிகாவிடம் திரும்பி , ” ராதிகா … நான்… நான் அரவிந்தைப் பார்க்கணும்”

ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டு அவரது கணவர் புகைப்படமாக மாட்டப்பட்டு இருந்த சுவரருகே சென்றவள் , ” அத்தை இது யார் “

அரவிந்த் அம்மாவிற்கு தன்னைத் தெரியவில்லை என்று வருந்திய நாள் முதல்  இது போன்ற கேள்வியை கேட்டு அவருக்கு பதில் சொல்லி என  ஜானகியிடம் அவர் கோபமடைந்தாலும் பரவாயில்லை என்று அரவிந்த் தான் அவர் மகன் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு இருந்தாள். அதே போல் இன்றும் கேட்கவும் அவர் ,

“அத் .. அத்… அத்தான் ” என்று அதை வெறித்துப் பார்த்தவரிடம் ,

“ம்…. மாமா எப்படி கம்பீரமா இருக்காங்க. அவங்க பையன் அதே போல தான் இருக்காங்க .. இங்க கண்ண மூடி உக்காருங்க  இன்னைக்கு நான் கூட்டிட்டு வாறேன்” என்றவள் , அறைக்கு வெளியே வேகமாகச் சென்று கூட்டத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த அரவிந்தின் கைப்பிடித்தவள் அங்கிருந்தவர்களிடம் “எக்ஸ்க்யூஸ் மீ” என்று விட்டு அழைத்துச் சென்றாள்.

“ஹே ..ஸ்வீட்டி இதென்ன இவ்வளவு பப்ளிக்கா இழுத்துட்டுப் போறளவுக்கு முன்னேறிட்டியா… வாவ்… இந்த புடவைல பயங்கர செக்ஸியா வேற இருக்க …ம்.” என்று பளீரென்று தெரிந்த இடுப்பை பார்க்கவும் ,

நின்று இடுப்பில் நழுவியிருந்த சேலையை மேலேற்றி விட்டவள் அவனை முறைத்து பார்த்தாள் .”பார்ரா இவ்வளவு நேரம் தங்கச்சியப் பார்த்து ஃபீல் ஆனது என்ன ….என் கிட்ட பேசுற பேச்சென்ன” வாய் மீது ஒற்றை  விரல் வைத்து , “மூச்…. பேசாம வாங்க” என,

அந்த விரலை எடுத்துத் தன் உதட்டின் மீது வைத்து முத்தம் தந்தவனிடமிருந்து விரலை உருவிக்கொண்டு , “பா….ஸ்” என்று சிணுங்கினாள்.

” இப்படி … சிணுங்கினா எப்படி….. ” என்றவனை

 புன்னகையோடு  ஜானகியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ஜானகின் முன் நிற்க வைத்தவள் , “அத்தை கண்திறந்து பாருங்க … அப்படியே மாமா போலவே இருக்கார் பாருங்க உங்க புள்ள” என்றாள் .

கண்களைத் திறந்துப் பார்த்த ஜானகிக்கு வழக்கம் போல் அரவிந்தைக் கண்டவுடன் வரும் கோபம் இன்று வரவில்லை மாறாக கண்ணீர் வர ஆரம்பித்தது.

அவர் கோபத்தையும் அவர் அடித்தால் அடியையும் தாங்கிக் கொண்டவனுக்கு இந்தக் கண்ணீரைத் தாங்க முடியவில்லை.

அவர் அருகில் சென்று கண்ணீரைத் துடைத்தவன்” ம்மா பளீஸ் அழாதிங்க… நீங்க நம்ப வேண்டாம் … நான் உங்க புள்ளயே இல்ல … நான் உங்க அருக்குட்டி இல்ல தான் நீங்க அழாதிங்கமா ” என்றவனுக்கு கண்கள் சிவக்க ஆரம்பித்துவிட்டது.

உணர்ச்சிகளை அடக்கப் பெரும்பாடுபட்டவன் , “தாயம்மா அம்மாவ பார்த்துக்கோங்க , நான் வெளியப் போறேன்” என்று திரும்பியவன் காதில் ,

தேம்பிக் கொண்டே “அரு … அருக்குட்டி அம்மா  மேலக் கோபமா “என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.

வேகமாக திரும்பியவன் அவர் தன் கையை நீட்டவும் வந்து மண்டியிட்டு மடியில் படுத்து இடுப்பை அணைத்துக் கொண்டான். அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை ”ம்மா” என்ற தேம்பலோடு மடியில் தலை புரட்டி அழுகையில் குலுங்கினான்.

ஜானகியும் அவன் தலைக் கோதிக் கொண்டே அவன் பெயரை உச்சரித்துக் கொண்டு இருந்தார்.

பார்த்துக் கொண்டு இருந்த தாயம்மாவும் அரவிந்தின் முதுகை தடவிக் கொடுத்து தன் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீரில் வெளிப்படுத்தினார் என்றால் … ராதிகாவோ  அரவிந்திடம் தன்னை  தொலைத்துக் கொண்டு இருந்தாள்.

ஆண்களும் அழுவார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். தாய் மீதும் தங்கை மீதும் அவன் காட்டும் அன்பு சொல்லில் அடங்காது…. தன்னிடமும் அதே அளவு அன்பை காட்டும் கணவனை ராதிகாவிற்கு பிடித்தது .தாயையே வெறுத்துக் கொண்டு இருந்தவளுக்கு அரவிந்தின் தாயன்பு அவன் மீது அபரிமிதமான அன்பை பொழியச் செய்தது.

அந்த அன்பிற்குப் பெயர் காதலா… அது தெரியாது…. ஆனால் அரவிந்தின் மீதான பிடித்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

காலை அணைப்பின் வாசமும்

காத்தில் கிறங்கும் சுவாசமும்

சாகும்போதும் தீர்ந்திடாது

வா உயிரே…

           காதல் அழகானது…..

Advertisement