Advertisement

        அழகு 32

        விழி மூடியிருந்தவளுக்கு போர்வையே இல்லாது கதகதப்பாக இருப்பது போன்று உணர்வு. அவன் போர்வை தேவையில்லை என்ற நாளிலிருந்து ராதிகாவிற்கு அது அவசியமில்லாது போயிற்று.

மெதுவாக கண்ணைத் திறந்தவள் முன் கணவனின் நெஞ்சோடு முகம் வைத்து படுத்திருப்பது போல் தோன்றவும் , தலையை நிமிர்த்திப் பார்க்க ,   சுகமான நித்திரையில் இருந்த கணவனின் முகம் தான் தெரிந்தது.

சில நாட்களாக அவனையே நினைத்துக் கொண்டு இருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்ற எண்ணம் தோன்ற மெல்ல அவன் மீசையை இழுக்க ,

” ஷ்… ஆ..” என்று கத்தி விட்டான்.

“சாரி …சாரி ….” என்றவள் முகம் அருகிலிருக்க , அந்த விழியில் விழுந்தவன் ….” ஸ்வீட்டி… ரொம்ப நாள் கழிச்சி புருஷனப் பார்க்கும் போது இப்படி தான் வரவேற்பு இருக்குமா , இல்ல இது ஒரிஜினலா டூப்ளிகேட்டானு டெஸ்ட் பன்றியா, ஒரிஜினல் மேடம் ஒரிஜினல் …. ” என்றவன் அவள் காதருகே மீசையை வைத்துக் கூச்சமூட்டினான்.

விழிகளை அகலத் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் காதினில் கூச்சமெடுக்க , முகம் சிவந்தவள் , அவனைக் கழுத்தோடயே கட்டிக் கொண்டு…. “பாஸ்…. நீங்கதானா” என்றாள்.

இது நாள் வரை அவனாகத்தான் அவளை அணைப்பது , முத்தமிடுவது என்று இருந்தவனுக்கு அவளே வந்து இறுக கட்டிக் கொண்டது வானில் பறக்கும் உணர்வைத் தந்தது.

“நானே தான் மேடம்… ஆமா நான்  கனவில அடிக்கடி வாரேனோ அதான் இப்படி மீசைய இழுத்துப் பார்த்தியா”

அவன் சொல்வது போல் தானே அவள் செய்தது. எனவே நாணத்தில் மேலும் அவனை இறுக தழுவ ,

“கொஞ்ச நாள் பார்க்காம இருந்ததுக்கே இப்படி வரவேற்புனா … ரொம்ப நாள் கழிச்சு வந்தா …. பெரிய விருந்தே கிடைக்கும் போலயே ” என்று அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டே சொல்லவும் … நிகழ்வுக்கு வந்தவள் , அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

“நோ டா… இரு .. இரு” என்றவன் அவளை எழவிடவில்லை.

அவளைக் கீழே சரித்து , அவள் இடைப்பிடித்து அணைத்து, கண்களோடு கண்கள் கலக்க விட்டவன். ” தேடுனியா என்னை “

விழிகளை தாழ்த்தியவள் ஒன்றும் பேசாது அமைதியாக  அவன் கரத்தை விலக்கி எழ முற்பட,

“நீ பதில் சொல்றவரை விடமாட்டேன்.. இப்படி இருக்கிறது பிடிச்சிருக்குனா ஓகே … இப்படியே இருப்போம்…. இல்ல பதில் தர மாட்டன்ன அன்னைக்கு  போகும் போது கொடுத்துட்டுப் போனத இப்ப திருப்பிக் கொடுத்துட்டுப் போ ….” என்றவன் பெரு விரல்கொண்டு அவள் இதழ் வருடி…. முகம் நெருங்க…

மயக்கும் விழிகளை மலரச் செய்தவள் .. ஏதோ சொல்ல வாய்திறக்க கதவு தட்டப்பட்டது. இருவருக்குமே மயக்கத்தில் இருந்து விடுபட்ட உணர்வு , ராணிதான் அழைத்துக் கொண்டு இருந்தாள்.

“இதோ வர்றேன் அண்ணி ” என்றவள் கணவனைக் படுக்கையில் தள்ளிவிட்டு விட்டு ஓர் மயக்கும் புன்னகையை அவனை நோக்கி சிந்திக் கொண்டே சென்று கதவு திறந்தாள்.

” ராதிகா.. உனக்குகாலையிலயே சேலைக்கட்டி விட சொல்லி அனு சொன்னா , நீ இன்னும் குளிக்கலயா … பசங்க எந்திரிக்கிறதுக்குள்ள கட்டி விட்டுரலாம்னு வந்தேன்.”

“இதோ குளிச்சிட்டு வந்துடுறேன் அண்ணி , நீங்க உள்ள வாங்க” என்றவள் , உள்ளே சென்று அரவிந்தைப் பார்க்க கண்களை மூடிக்  கொண்டுப் படுத்து இருந்தான்.

அவனைத் தொட்டு எழுப்ப எழவேயில்லை. வெளியில் வந்தவள், “அவங்க நல்லா தூங்குறாங்க அண்ணி …, “என்ன சொல்ல என தடுமாறிக் கொண்டு இருந்தவளிடம் ,

“நீ குளிச்சிட்டு வந்து எனக்கு போன் பண்ணு , நான் வாறேன்” என்று சொல்லிவிட்டு செல்லவும் உள்ளே வர , கட்டிலில் நன்கு சாய்ந்து அமர்ந்து அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவனைக் காணவும் ,

“நான் தூங்கிட்டேன்” என்று கண் சிமிட்டியவனின் குறும்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு , ” நீங்க கொஞ்சம் வெளிய இருங்க , அண்ணி வருவாங்க”

“ஹேய் ஸ்வீட்டி உனக்கு சேலை கட்டத் தெரியாதா… “

“நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா … நேரம் ஆகுது … “

“நான் அப்ப சொன்னதுதான் … நான்   அவசரமா கொடுத்தத நீ மெல்ல நிதானமா கொடு நான் வெளிய போறேன். இல்ல இங்கதான் இருப்பேன்”

         அங்கு டேபிளில் இரவு அனன்யா வைத்து விட்டுப் போன பொருட்களை எடுத்தவள் , ” நான் அனுரூம்க்குப் போறேன். நீங்க இங்கயே இருங்க” என்று கிளம்பவும் வேகமாக எழுந்து அவள் முன் வந்து நின்றவன்,

“என்னமா கோபம் வருது உனக்கு …ம் … சரி சரி நான் வெளிப் போறேன் நீ ரெடியாகு “என்று கிளம்பவும் ,

“சா… சாரி … “மென் குரலில்….” உன் முகத்தை பார்க்காம இருக்கிறது முடியுமா தெரியல அப்படி இப்படினு சொல்லிட்டு என்னைய இங்க தனியா விட்டுட்டு போய்ட்டீங்க .. ஒரு போன் கூடப் பன்னல … எல்லாரும் இருக்காங்க தான் ஆனா நீங்க பக்கத்துல இருக்கும் போது ஒரு கம்ஃபர்ட் (comfort) ஃபீலிங்… அது .. அது ஏன்னு தெரியல… “கண்ணில் நீர்த்துளி இறங்க ,

“இத்தனை நாளா நான் எப்படி இருக்கேன்னுக் கூட கேட்காம … இப்ப வந்து இப்படிலாம் பேசி என்னை சங்கடப்பட வைக்கிறிங்க … “

“நான் இங்கயிருந்து கிளம்பின நேரத்துலருந்து நீ என்னப் பன்னினனு சொல்லட்டா…” என்றவன் அவளின் நடவடிக்கைகளை அவன் சென்ற நாளிலருந்து சொல்லிக் கொண்டே வந்தவன் …,

“இதோ இந்தப் புடவை உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது … பார்த்துட்டு வச்சிட்ட .. நான் எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். … அப்புறம் இதெல்லாம் நீ வெளிய இருத்தப்ப நடந்த விஷயங்கள் … இங்க நம்ம ரூம்ல நீ என்ன செய்துருப்பனு சொல்லட்டா ” என்று குறும்புடன் கேட்டவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“ஐயோ….வேண்டாம் வேண்டாம் … எப்படிங்க அப்படியே எல்லாத்தையும் சொல்றீங்க”

“ம்… கேமரா செட் பன்னிப் பார்த்தேன்… “

” என்ன … ” என்று மிரண்டவளை, சிரித்துக் கொண்டே ” என் அறிவாளிப் பொண்டாட்டி … என் இதயம் கிறகேமரா உன்னை எப்போதும் படம் பிடிச்சிட்டே தான் இருக்கும் … என் மனம் முழுதும் நீதான் நிறைஞ்சிருக்க நொடியும் உன்னையே நினைச்சிட்டு இருக்கும் போது உன்னைய பத்தி எந்த விதத்திலாவது தெரிஞ்சுக்குவேன் … பிகாஸ் ….ஐ லவ் லவ் யூ சோமச் டியர் (because I Love Love Love you so much dear).

காதல் அப்படித்தான்… நீ என்னைத் தேட மாட்டியா , ஒரு போன் நீயா கூப்பிடமாட்டியானு காத்துட்டு இருந்தேன். நீ எனக்கு கால் பன்னவா வேண்டாமாங்கிற குழப்பத்துல தந்த மிஸ்டுகால் பார்த்ததும் தேடி ஓடி வந்துட்டேனா இல்லையா இப்ப சொல்லு நீ என்னை தேடுன தானே … ” என்று கைகட்டிக் கொண்டு கேட்கவும் ,

” தேடுனேன் …, ரொம்ப ரொம்ப தேடினேன் … எங்க அத்தைய தவிர யார்கிட்ட பேசினாலும் என்னை ராதிகாங்கிற ஒரு பெண்ணா தனி மனிஷியா என்னைய யாரும் பார்க்கல … என்னை அப்பா அம்மா இல்லாத அனாதை பொண்ணா பரிதாப பார்வை பார்ப்பாங்க …. இல்லையா என் அம்மா பத்தி தெரிஞ்சா பைத்தியகாரி பெத்தவனு பார்த்தாங்க … பேசினாங்க….இன்னும் சிலர் அப்பன் பெயர் தெரியாதவனு என் காதுபடவே பேசுவாங்க….”

அவள் அருகில் ஏதோ சொல்ல வந்தவனிடம் “அதனாலயே நான் எல்லாருகிட்டயும் ஒதுங்க ஆரம்பிச்சேன் .. அத்தைய தவிர நான் யாரையும் தேடுனது கிடையாது. ஆனா இப்ப கொஞ்ச நாளா நீங்க காட்டுற அன்பும் பாசமும்  புதுசா இருக்கு … என்னைய பெத்தவங்க மேல மட்டும் தான் கோபம் வரும்….வேற யார் மேலயும் சுலபத்துல கோபம் வந்தது இல்ல.… ஆனா இப்போ நீங்க போன் பன்னல , என்கிட்ட பேசல.. அப்படினு உங்க மேல கோபம் வருது….. நீங்க மட்டும் தான் நான் யார் என்னனு தெரியாமலே நிறைய   அன்பு காட்டுறீங்க , அனு , ரமேஷண்ணா , அத்தை , தாயம்மா எல்லோரும் உங்க மனைவி நான் அப்படிங்கிறது மட்டும் பார்த்து அன்பு காட்டுறாங்க…அதனாலயே உங்கள பிடிக்குது…. எனக்கு… எனக்கு இதுக்கு மேல என்ன சொல்லத் தெரியல….

நீங்க சொல்ற காதல்னால தேடுனேனா கணவன்கிற நினைப்புல வந்த உரிமைல தேடினேனானு தெரியல …. ஆனா தேடினேன் ரொம்ப ரொம்ப தேடினேன். நீங்க பக்கத்துல இல்லாதப்போ ரொம்ப மிஸ் பன்னின ஃபீல் …ஐ மிஸ் யூ .. ஐ மிஸ் யூ லாட்… ” சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கதவு தட்டப்பட ,

முறுவலோடு அருகில்  நெருங்கி வந்தவன் , அவள் கன்னங்களைத் தாங்கி ,

“நாம நிறைய பேசணும் , அப்புறம் பேசலாம் .. ” என்றவன் நெற்றியில் மென்மையான முத்தம் பதித்து விட்டு சென்று விட்டான்.

அதன் பிறகு வேலைகள் இழுத்துக் கொள்ள அரவிந்தை ராதிகாவால் பார்க்க முடியவில்லை. வீட்டின் கூட்டத்தைக் கண்டவளுக்கு ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. யாராவது தன்னிடம் வந்துப் பேசி விடுவார்களோ என்ற பயத்திலயே சிவாவின் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

அதுவும் சேலைக்கட்டிப் பழகியிராதவளுக்கு நடக்கும்போது தட்டி விடுமோ என்ற பயத்திலேயே அமைதியாக  அமர்ந்து விட்டாள். ராணி வந்தவள் பிள்ளைகளை வாங்கிக் கொண்டு அனன்யாவை அழைத்துக் கொண்டு வந்து அவர்களது தோட்டத்து வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர வைக்கச் சொன்னாள்.

தயங்கிக் கொண்டே சென்றவள் ராணி சொன்னது போல் அனன்யாவை அழைத்துச் சென்று அமர வைத்து விட்டு மேடையை விட்டு இறங்கப் போனவள் கையை அனன்யா இறுகப் பிடித்து ‘ போகாதே ‘ என்பது போல் கண்ணசைக்கவும் ராதிகாவும் நின்று விட்டாள் மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அவள் தான் முறைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்றதும்  ராதிகா அங்கேயே நின்று பெரியவர்கள் சொல்வதை செய்துக்கொண்டு இருந்தாள்.

எல்லோரும் வந்து நலங்கு வைத்துச் சென்றுக் கொண்டு இருக்க ,அரவிந்தைக் காண முடியவில்லை. விழிகளைச் சுழற்றி தேடிக் கொண்டு இருந்தவளுக்கு அப்போதுதான் அந்த தோட்டத்து வளாகத்துள் நுழைந்த அவனது கார் கண்ணில் பட்டது.

ரமேஷிடம் பேசிச் சிரித்துக் கொண்டே இறங்கியவனைத்தான் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் அலுவலகத்தில் ஃபார்மல் ஆடையிலயேப் பார்த்தவனை இன்று கருநீல நிற காட்டன் சட்டை, க்ரீம் கலர் காட்டன் பேன்ட் அணிந்து கம்பீரமாக வசீகரிக்கும் புன்னகையோடு மேடையை நோக்கி வந்தவனை விழி விரித்துப் பார்த்தாள்.

அவளுக்கு தெரிந்து கணவனை ,ஏன் ஒரு ஆண் மகனையே இன்று தான் ரசித்துப் பார்க்கிறாள். அவனது கம்பீரமும் ஆண்மையும் அவளை வாய்க்குள்ளயே “ம்….ஹேன்சம் ” என்று சொல்ல வைத்து  புன்னகையைத் தந்தது. அரவிந்தையேப் பார்த்துக் கொண்டு இருந்தவள் ,தங்கையைக் கண்டு அவன் கண்களில் பொங்கிய பாசத்தைப் பார்த்து அசந்து தான் போனாள்.

Advertisement