Advertisement

அவனுக்குப் பிடித்தது , பிடிக்காதது , தாய் , தங்கை , ரமேஷ் மூவரிடமும் அவன் காட்டும் அக்கறை பாசம் ,  தாத்தா இறந்ததும் இருபத்தி இரண்டு வயதிலயே தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டது … என்று அவள் அவனை நினைத்து வியக்க , மகிழ, வருந்த .. என்று எப்போதும் எண்ணம் முழுவதும் அரவிந்தே .

“கல்யாணம் பண்ணி கணவனானதால இப்படி அவங்க நினைப்பாவே இருக்குமோ… ” என்று தானே ஒரு காரணம் ஏற்படுத்திக் கொண்டாள்.

இடையில் வந்த ஓர் நாள் இரவில்  எல்லோரும் நல்ல உறக்கத்தில் இருக்கும் போது வந்த ரமேஷ் … அனன்யாவுக்கு போன் செய்தான் ,

நேரம் இரவு ஒன்று என்று காட்டவும் “அத்… அத்தான் .. என்ன இந்த நேரத்துல “

” பப்ளி பயப்படாத … எல்லாம் குட் நியூஸ் தான் … சீக்கிரம் மொட்ட மாடி வா , உங்கண்ணன் வர்றவரை நம்ம எடுத்துக்குவோம் டெரஸ் கார்டன “

அவன் சொல்லி முடித்து போனை வைக்கப் போகவுமே மாடிக் கதவை திறந்து வந்து விட்டாள் அனன்யா.

மகிழ்ச்சியில் ஒடிச் சென்று அவளை அணைக்கப் போக , சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள் ஓடிச் சென்று அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

வேகமாக அவளருகில் வந்தவன் ஒன்றும் பேசாது , அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

அவள் முகம் பார்த்தவன் “ஏன் ஓடி வந்துட்ட”

“அது…. அது அத்தான் நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஆனாலும் … மற்றதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் ….அம்மாவுக்கு நான் அவங்க பொண்ணுங்கிறது மட்டும் தான் ஞாபகம். அவங்க என்னை வளர்க்கும் போது நிறைய சொல்லித் தந்தாங்க , இப்ப கல்யாணம் பண்ணப்போறேன்னு தாயம்மாவும்  நிறைய அட்வைஸ் தந்துட்டாங்க…. அதுல இதுவும் ஒன்னு… ” என்று முகம் சிவக்க கூறியவள். இந்த நேரம் நான் இங்க தனியா வர்றது தப்புதானே.”

“சோ… இப்ப ஒன்னும் கிடையாதா” என்று அவள் கை விரல் கோர்த்து விளையாடியவனிடம் , ” சீக்கிரம் என்ன குட் நியூஸ்னு சொல்லுங்க … நான்..கீழ போகனும்”

உடனே எழுந்தவன் தன் மொபைலை எடுத்து அவளிடம் கொடுத்துப் “பார்” என்றான்.

அதிலிருந்த விஷயத்தைப் படித்தவளுக்கு நம்பவே முடியவில்லை.

“இது … இது நிஜமா அத்தான்…. என்னால நம்பவே முடியலிங்க….அதுதான் அன்னைக்கு காலேஜ்ல ராதிகாவப் பார்க்கவும் எங்கேயோ பார்த்த ஃபீல் வந்துச்சோ… அம்மாக்கூட அதான் அவள அஞ்சுனு சொல்றாங்கப் போல…” என்று மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டேப் போனாள்.

” இருக்கலாம்…. ஏதோ ஒன்னு ராதிகாவ நம்மக்கிட்ட சேர்த்துருக்கு. இந்த விவரங்கள் தெரிஞ்சுக்கத்தான் உங்கண்ணன் கொடைக்கானல் போயிருந்தான்.”

அவளருகில் நெருங்கி அமர்ந்து கொண்டவன் “யாருமில்ல எனக்கு அப்படினு நினைச்சுட்டு இருந்த எனக்கு என் தங்கச்சி இருக்கானு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு… என் மனைவியா நீ…. எனக்கே எனக்குனு குடும்பம் வரப்போகுது … “

அவனது மகிழ்ச்சியைப் பார்த்தவள் புன்னகைத்துக் கொண்டே … “சரிங்கத்தான் நான் கிளம்புறேன் , நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க… ஆமா இந்த விஷயம் ராதிகவுக்குத் தெரியுமா… அண்ணன் சொல்லிருப்பாங்களா”

“ஹேய் சொல்ல மறந்துட்டேன்….. நீயா ஒன்னும் சொல்லாத … அரவிந்த் எப்படி எப்போ சொல்லனுமோ அவன் சொல்லிக்கட்டும்…. “

“ம்… அதுவும் சரிதான்…. சரி வாங்கப் போகலாம்” என்று எழுந்தவளை கைப் பிடித்து அமர வைத்தவன்.

” பப்ளி … அன்னைக்கு என்ன கேட்ட உங்கண்ணன் சொன்னதால தான் நான் ப்ரபோஸ் பண்ணினேனானு   கேட்ட … அதுக்கு பதில் தெரிய வேண்டாமா “

அமைதியாக இருந்த அனன்யாவின் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டவன்,

“தாத்தா, என்னை பாப்பா பெரியவளாயிட்டா , நீ தான் முறை செய்யனும்னு சொல்லி சென்னைலருந்து வர சொன்னப்ப எனக்கு ஒரு சாதாரண விஷயமா தான் தெரிஞ்சது .., ஆனா ஆனா பாவாடை தாவணில உன்னைப் பார்த்தப்போ என்ன உணர்ந்தேன் தெரியாது.. உன்னைச் சேலைகட்டி உட்கார வச்சப்போ எங்கம்மாவப் பார்த்தது போலவே இருந்துச்சு , பத்தாததுக்கு நம்ம சொந்தக்காரங்களும் , எங்கம்மா வயசுப் பெண்ணா இருந்தப்போ உன்னைப் போல தான் இருந்தாங்கனு சொல்லி சொல்லி உன்னையே என்ன பார்க்க வச்சு நினைக்க வச்சாங்க….

அதே சொந்தக்காரங்க தான் … இனி அவளத் தொட்டுப் பேசாத அப்படி இப்படினும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.… என்னால முடியல , உன்னை பார்த்துட்டே இருக்கணும் போலதான் இருந்துச்சு … மற்றவங்க எதுவும் சொல்லிடக் கூடாதுனு உங்கிட்ட கோபமா பேச ஆரம்பிச்சேன். ஆனா அந்த கோபம் உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சதாலதான் ….. “

அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த அனன்யா முகத்தை கைகளில் தாங்கியவன்,

“ஆனா உங்கண்ணன் உனக்கு கல்யாணம்னு பேசினதும் , குழந்தைங்ககிட்ட இருந்து அவங்க எப்பவும் கைல வச்சுட்டுருக்க பொம்மைய பிடுங்கினா எப்படி இருக்கும் அப்படி தான் இருந்துச்சு எனக்கு , உன்னைய யார்க்கும் விட்டுக் கொடுக்க மனசு வரல.. அது ஏன்னு எனக்குத் தெரியல… ஆனா நண்பன் நண்பன் தான் …. அவன் கண்டுபிடிச்சிட்டான் .. எனக்கு உன்னைய பிடிக்கும் … அந்த பிடித்தத்துக்கு பேர் ‘காதல்’னு ,,,அதனால தான் உனக்கு அனுப்பின போட்டோல என் முகம் பார்த்ததும் வந்த படபடப்பு …. அப்படியே இங்க வேக வேகமாக துடிச்சது … அப்படி ஒரு நிம்மதி … என் அனு எனக்குத்தான் அப்படினு ..” என்று அவள் வலது கரம் எடுத்து இதயத்தில் வைத்தவன் ,

” ஊட்டிக்குப் போய் யோசிச்சதுல கண்டுபிடிச்சிட்டேன் … இப்படிப்பட்ட அழகான உணர்வுகளுக்குப் பெயர் காதல்னு…. நீ எனக்குத் தான் அப்படிங்கிற நிம்மதில தான் அன்னைக்கு உன் மடியிலயே படுத்து தூங்கியிருக்கேன்.இப்ப சொல்லு நான் தானே உன்னை முதல்லருந்து லவ் பன்னிருக்கேன்… ம் … ஐ லவ் யூ பப்ளி….என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா … ” கேட்டுக் கொண்ட அவன் முன்பே பறித்து வைத்திருந்த சிவப்பு ரோஜாவை அவளிடம் தந்தான்.

அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை … கண்ணில் நீருடன் ” சரி” என்பது போல் மெளனமாக தலையாட்டியவள் , அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு ஓடி விட்டாள்.

    மறுநாள் தாயம்மாவிடம் இதனைப் பகிர்ந்துக் கொண்ட அனன்யா ராதிகாவிற்கு அண்ணனே சொல்லிக் கொள்வார் என்று விட்டாள். முன்பு சில போட்டோக்களை பார்த்து பார்த்து ஜானகி அழுவார் என்பதால் அதனை எல்லாம் ஒரு பெட்டியில் இட்டு தாத்தா இருந்த அறையில் வைத்திருப்பதாக தெரிவிக்கவும் ,இருவரும் அங்கு சென்று அதனை ஆராய முற்பட்டனர். ராதிகாவும் அறைக்குள் வந்து விட்டதால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்.

அவளைப் பார்த்த அனன்யாவுக்கு உணர்ச்சி மிகுதியில் அழுகை வர … ஏனென்று புரியாமல் பார்த்த ராதிகாவிடம் ஏதோ சொல்லி சமாளித்து வைத்தாள்.

திருமண வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க அவர்களுக்கான திருமணப் பத்திரிக்கை வரவும் அதை எடுத்துக் கொண்டு ராதிகாவிடம் வந்த அனன்யா , ” அண்ணி, இது எல்லாம் நம்மவரவேற்பு பத்திரிக்கை உனக்கு யார்க்கெல்லாம் தர தோணுதோ அவங்களுக்கெல்லாம் அனுப்பிடு … நாம நேர்ல தான் தரணும்னு நினைக்கிறவங்களுக்கு அட்ரஸ் தா , அண்ணா போய்ட்டு வருவாங்க”

அந்த பத்திரிக்கைகளையும் , அனன்யா சொன்னதையும் கேட்டவளுக்கு, இத்தனை நாட்களாக போன் பேசவில்லை , இடையில் வரக்கூட இல்லை … அதிலும் அவளுக்கு முந்தைய இரவில் தான் பெண்களுக்கே உரிய மாதாந்திர வயிற்று வலி பிரச்சினைகளும் ஆரம்பித்து இருந்ததால் அவளுக்கு கோபம் ,ஆதங்கம், எல்லாம் கலந்து ஒரு வித எரிச்சலில் இருந்தாள். அந்த எரிச்சலை கோபத்தை  இப்படி எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக அந்த பத்திரிக்கையின் மீது திருப்பியவள் , அனன்யாவிடம் அமைதியாக

” அனு எனக்கு யாரும் கிடையாது. உங்கண்ணா  விருப்படியே யாருக்கு தரணுமோ தர சொல்லு” என்றவள் அதில் ஒன்றைக் கூட எடுத்துப் பாராது சென்று விட்டாள்.

அனன்யாவிற்குத் தான் அவளது பேச்சு புதியதாக இருந்தது , உடனே அரவிந்துக்கு அழைப்பு விடுத்து விவரம் தெரிவிக்கவும் , நான் பேசிக் கொள்கிறேன் என்று வைத்து விட்டான்.

தங்கையின் பேச்சைக் கேட்ட அரவிந்திற்கு புன்னகை அரும்பியது , “ஸ்வீட்டி … நான் உன்னைய பார்க்கல , பேசலங்கிற கோபத்தைத் தானே நீ இப்படிக் காட்டுறே … அப்போ என்னைத் தேடுற …. இந்த தேடல்க்கு  நீ என்ன பெயர் தாறியோ தெரியல … ம் பார்க்கலாம் ….” .

ஜானகியின் உடல்நிலையைக் கொண்டு நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து இதோ இரண்டே நாளில் திருமணமும் வந்துவிட்டது.திருப்பூரிலிருந்து சிவா குழந்தைகள் வரவும் , இத்தனை நாள் இருந்த மன சஞ்சலங்கள் அனைத்தும் காணமல் போனது போல் உணர்ந்தாள் ராதிகா .

ஆனாலும் கண்கள் கணவனை தேடிக் கொண்டே இருந்தது. இரு தினங்களுக்கு முன் வந்து விடுவேன் என்றவனை இன்னும் காணவில்லை. நாமே ஃபோன் செய்வோமா என்று எண்ணம் செல்ல ஆரம்பித்தது.

வீட்டில் உறவுகளைக் கண்ட ஜானகிக்கு மனம் ஏதேதோ நினைவுகளைத் தூண்ட “தாயம்மா , வீட்ல ஏன் இவ்வளவு கூட்டம் … ” என்றுக் கேட்க ஆரம்பிக்கவும் …

“அனன்யாவுக்கு கல்யாணம் அதுதான் எல்லோரும் வந்துள்ளார்கள் ” எனவும் ,

“பாப்பாவுக்கு கல்யாணம்….அப்ப என் அரு அருக்குட்டி வளர்ந்து இருப்பானே …. எங்க எங்க அரவிந்த் … ” என்று கேட்க ஆரம்பித்தவர் தனக்குள்ளேயே உழன்றுக் கொண்டு இருந்தார் .அவரை அமைதிப்படுத்தி வைத்தாலும் ஏதோ யோசனையிலயே இருந்தார்.

அன்று இரவு வரை அரவிந்த் வருவதாக இல்லை என்றதும் .. ராதிகாவின் கை தானாக கணவனின் எண்ணிற்கு அழுத்தியது. ஒரு ரிங் தான் போயிருக்கும். உடனேயே ஏதோ தோன்ற ஃபோனை அணைத்து விட்டுப் படுத்து விட்டாள்.

சிறிது நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து ஆவலோடு கதவைத் திறந்தாள். ஏனென்றால் இரவு எல்லோரும் உறங்கிய பின் என்பதால் அரவிந்த் தான் வந்து விட்டான் என்ற உற்சாகத்தில் “வந்துட்டீங்களா” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு அனன்யாவைக் கண்டதும் பெரும் ஏமாற்றமாகி விட்டது.

“ஹேய்… என்ன அண்ணன எதிர்பார்த்துட்டு இருக்கியா …. அவங்க ரெண்டு பேரும் கல்யாண வேலை , கல்யாண வேலைனு வீட்டுப் பக்கமே வரல … உங்கிட்ட வரேன்னு சொன்னாங்களா …அண்ணி நாளைக் காலையில இந்தப் புடவை கட்டனுமாம் தாயம்மா சொன்னாங்க . இதெல்லாம் இங்க வச்சுட்டுப் போறேன்.. எழுந்து கட்டிக்கோ சரியா…”

” என்ன … புடவை கட்டணுமா… எனக்கு கட்டத் தெரியாது அனு.. ” என்றவளிடம்,

“வாவ் …. நீயும் என்னைப் போல தானா … நாளைக்கு ஏதோ நலங்கு வைப்பாங்களாம் , பார்லர்ல இருந்து வருவாங்க , அவங்க கட்டி விடுவாங்க கூல் அண்ணி கூல் … இல்லைனா ராணி அக்கா ஃப்ரீயா இருந்தா கட்டி விடச் சொல்றேன் .… ஒரு நிமிஷம் … இதுக்கு மேட்சிங்கா ஒரு செட் நகை கொடுத்தாங்க … நான் எடுத்துட்டு  இதோ வந்துடுறேன்” என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்.

அனன்யாவுக்காக காத்திருந்தவள் எப்போது உறங்கினாளோ தெரியாது காலை எழும் போது கணவனின் கையணைப்பில் தான் கண் விழித்தாள்.

 காதலை வெறுத்தவள் காதலை அபரிமிதமாக நேசிக்க போகிறாள்….., காதலை நேசிக்க கற்றுக் கொடுத்தவனோ காதலையே வெறுக்க போகிறான் என்பது தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்திருந்தனர்.

          காதல் அழகானதே ……

Advertisement