Advertisement

 

         அழகு 31

        ” இந்த  உளறலுக்கு பெயர் ‘காதல் ‘அப்படினா ‘நான் உளறிட்டே இருப்பேன்டா. எனக்கு இந்த ஃபீலிங்க்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று காதல் பெருக சொன்னவன் ,

“ஆமா மச்சான் நான் கேட்கனும்னு நினைச்சேன் …. எப்படிடா எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குனு கண்டுபிடிச்ச “

” எல்லாம் உன் தங்கச்சியாலதான் … எப்போ அவளப் பார்த்தேனோ அப்பவே காதல் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டேன். அப்படி தான் உனக்கும் அனுவுக்கும் இடையில ஏதோ இருக்குனு  தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைச்சிகிட்டாலும் அதுல இருக்கிற அக்கறை,அன்பு ,பாசம் எல்லாம் கவனிச்சிட்டுத் தானேடா இருக்கேன் ….

உனக்கு தெரியுமா உன் சம்பந்தமா எந்த விஷயமும் அவதான் ஞாபகப்படுத்துவா ….அதுவும் உன்னைத் திட்டுறது போல “வாய் விட்டு சிரித்தவன் , “நீயும் அப்படித்தான் அவள சீண்டிட்டே இருப்ப … இப்ப தானே தெரியுது  எனக்கு சீனியர் டா நீங்க ரெண்டு பேரும் ….இந்த சீண்டலும் … சண்டையும் காதல மறைக்க யூஸ் பண்ண முகமூடி அப்படிங்கிறது  என் மரமண்டைக்கு லேட்டா தான் புரிஞ்சது… அதுவும் உங்க ரெண்டு பேர் காதலும் செம போ… இப்ப ஓகேயா மிஸ்டர் ரமேஷ் “

” மச்சான்…”

“சொல்லுடா”

“அரவிந்த் “

” சொல்லு மாப்ள “

“எனக்கும் காதல் வந்துருச்சுடா….”

“அதைத்தானே நான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கேன் … முதல்ல அனுகிட்ட லவ்வ சொல்லு ரொம்ப சந்தோஷப்படுவா”

” சொல்லணும்டா … ஆனா ஒன்னு எனக்கு காதல் வந்துருச்சுங்கிற சந்தோஷத்தை விட …. நான் காதலிக்கபடுறேன் அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தருதுடா …. எங்கம்மாவுக்கு அப்புறம் என்னைய அதே அளவு ….. சொல்லப் போனா அதை விட அதிகமா நேசிக்க ஒருத்தி இருக்காங்கிறது ……. மச்சான் நீ நம்புவியா என் கண்ல கண்ணீர் டா” என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன ரமேஷின் உணர்வுகளை உணர்ந்த அரவிந்த் ,

“மாப்ள நீயாவது உன் தங்கச்சி போல இல்லாம காதல உணர்ந்தேன்னு சொன்னியே அது வரை சந்தோஷம் டா மாப்ள…. நான் என் காதல புரிய வைக்க எவ்வளவு சிரமப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும் … சரிடா அனுகிட்ட பேசு … ரொம்ப நேரம் ஆகிருச்சு … காலைல கிளம்பு … இப்ப நீ கிளம்புனனு தெரிஞ்சது அனு நைட்டெல்லாம் தூங்காம உன்னை கண்லப் பார்த்தப் பிறகு தான் தூங்குவா….. எத்தனை தடவ தெரியுமாடா …. நீ பைக் எடுத்துட்டு கிளம்புறன்னைக்குத் தான் அவளுக்கு எழுத நிறைய இருக்கும்னு சொல்லுவா …,  நீ வர்ற வரை புராஜக்ட் வொர்க்னு ஹால்ல உட்கார்ந்து பன்னு வா….. சோ மாப்ள … இனி உன் விருப்பம்”

அரவிந்த் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்துக் கொண்டு இருந்தவன் , ஞாபகம் வந்தவனாக .., “மச்சான்… நான் என்னைய யோசிச்சுட்டே இருந்துட்டேன் .நீ போன காரியம் என்னாச்சு … ஏதும் தகவல் கிடைச்சுதா ….அப்புறம் ஒரு விஷயம் டா ராதிகா எப்படியானாலும் என் தங்கை தான் … உன் மனைவி தான் .. சோ ரொம்ப போட்டுக் குழப்பிக்காத … “

“நீ சொல்றது சரிதான் மாப்ள … நான் அவ யார் அப்படினு நிருபிக்க வரலடா … அவங்கம்மாப்பா காதலிச்சு கல்யாணம் பன்னாங்கனு காதலயே வெறுத்துட்டு இருக்காடா… காதல் இல்லாத மண வாழ்க்கை எப்படி டா… அதான்…. பார்ப்போம் ..வந்தவுடனே சிவா மச்சான் அப்பா கிட்ட சில தகவல் கேட்டு டீடெய்ல் கலெக்ட் பன்ன சொல்லியிருக்கேன். பார்க்கலாம் நாளை பதில் கிடைக்கலாம் … நான் வரும் வரை கோவைய விட்டு நகராத… ” என்று வைத்து விட்டான்.

         அனன்யா அறையில் இருந்த தன் பொருட்களை எல்லாம் அரவிந்தின் அறைக்கு பகலிலேயே மாற்றிக் கொண்ட  ராதிகா , அனன்யாவுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள். இருவரும் வார இறுதி நாட்களில் கல்லூரி செல்வதைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர்.. அனன்யாவின் போன் அடிக்கவும் அரவிந்தின் எண்ணைக் கண்டுப் பேசினாள். அவள் பேசிவிட்டு வைத்ததும் தனக்கு அழைப்பான் என்றுக் காத்திருந்த ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சிறிது நேரத்தில் ரமேஷ் அனன்யாவுக்கு அழைக்கவும் , ராதிகா அருகில் இருப்பதால் பேச சங்கடப்பட்டு எடுக்காமல் இருந்தாள்.

அவளின் நிலை உணர்ந்த ராதிகா , ” நேரமாகிருச்சு அனு , தூங்கலாம் குட் நைட் என்றுக் கிளம்பி விட்டாள்.

ரமேஷ் விடாது அடிக்கவும் எடுத்தவள் , “சொல்லுங்கத்தான்  … கிளம்பிட்டீங்களா”

” பப்ளி நான் ஊட்டி தான் வந்திருப்பேன்னு எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச ….”

” என் அத்தானை எனக்குத் தெரியும் … சும்மாவா எத்தனை வருஷமா உங்களை மட்டுமே நினைச்சுட்டுருக்கேன்… உங்க ஒவ்வொரு அசைவும் ஏன்னு கண்டு பிடிச்சிருவேன்….”

” அனு….உன் கிட்ட ஒன்னு சொல்லணும்”

“ம்… சொல்லுங்கத்தான்..” அவன் தன் காதலைச் சொல்வான் என்று எதிர்பார்த்திருக்க,

“நான் நாளைக்கு காலையில தான் கிளம்பி வருவேன். நீ படுத்து தூங்கு…..சரியா”

” இதைச் சொல்லத்தான் இவ்வளவு பில்டப்பா ” என்று சினுங்கவும்,

“வேற என்ன சொல்லணும்” என்றுக் குறும்புடன் கேட்க ,

“ம்… தூக்கம் வருது… குட் நைட்” என்று வைத்து விட்டாள்.

              அறைக்குள் நுழைந்த ராதிகாவிற்கு .. அரவிந்த் இரு நாட்களாக அவளை அறைக்குள் அழைத்து வந்த விதம் நினைவில் வந்து முகத்தில் சிவப்பை பரவ விட்டது. வந்தவள் அந்த பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து அலைபேசியையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் .அவன் அழைப்பான் அழைப்பான் என்றுக் காத்திருந்தவன். நேரம் நள்ளிரவை நெருங்கவும் இதற்கு மேல் பேச மாட்டான் என்றறிந்து போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

இரு நாட்களாக அவனோடு பேசி , சிரித்து உறங்கியதையே அசை போட்டவள் எப்போது தூங்கினாளோ ஆனால் அதிகாலையிலயே விழிப்பு வந்து விட்டது.இந்த அதிகாலை விழிப்பும் அரவிந்தையே ஞாபகப்படுத்த .. போனை எடுத்துப் பார்த்தவள் அவனது அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

கீழே ஜானகியின் அறைக்குப் போக , அங்கு அனன்யா அவளண்ணனோடு தான் பேசிக் கொண்டு இருந்தாள். இவள் ஆர்வமாக அருகில் போய் நிற்க , பேசிவிட்டு வந்த அனன்யா , “அண்ணி , அண்ணா டிசைனர் வர சொல்லி இருக்காங்களாம். நம்ம ரெண்டு பேரையும் பிடிச்ச மாடல் டிசைன் பன்னித்தர சொன்னாங்க…வா, வா சாப்பிட்டு ரெடியா இருப்போம்.” என்றழைத்துச் சென்றாள்.

ராதிகாவிற்கோ முகமே விழுந்துவிட்டது.”நேத்திலருந்து தங்கச்சிட்டப் பேச நேரமிருக்கும் , என்கிட்ட பேச நேரமில்ல போல ” என்று முனங்கிக் கொண்டாள்.

இவர்கள் சாப்பிட்டு முடித்துக் காத்திருக்கவும் , அரவிந்த் அனுப்பிய டிசைனர்கள் நால்வர் வரவும் சரியாக இருந்தது .பெண்கள் குழுவினர் என்பதால் , அவர்களிடம் தங்களுக்கு பிடித்தவற்றை காண்பித்துக் கொண்டு இருந்தனர்.

வெளியே பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் முகம் மலர்ந்த அனன்யா வாசலையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டு வந்த ரமேஷும் , வந்திருப்பவர்களைப் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்து கொண்டான். அவன் அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர , அவனாக எதுவும் உடை பற்றி சொல்லவில்லை.

அவனை முறைத்துக் கொண்டே அண்ணனுக்கு ‘வீடியோ கால்’ செய்தவள், அவன் திரையில் வந்ததும் “அண்ணா நீங்க சொன்னது போல அண்ணி எதுவுமே செலக்ட் பண்ண மாதிரி இல்ல … நீங்க தான் அவங்களுக்கு செலக்ட் பண்ணனும் , கண்டிப்பா நீங்க எடுக்கிறது அவங்களுக்கு பிடிக்கும் ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த டிசைன்ஸ் எல்லாவற்றையும் காட்டினாள். “

கணவன் வீடியோ காலில் இருக்கிறான் என்றதும் பரபரப்போடு அவன் முகம் காண ஆவல் பட ,அனன்யாவோ அவளே பேசி வைத்துவிட்டாள்.

ராதிகாவிடம் திரும்பி” அண்ணி , அண்ணா உனக்குப் பொருத்தமா தான் செலக்ட் பன்னிருக்காங்க , அழகா இருக்கு” என்றவள் , ரமேஷைப் பார்த்துக் கொண்டே ,

” ரூபா மேம் , உங்களுக்கு பிடிச்சதையே எனக்கு டிசைன் பன்னிருங்க , அப்புறம் போன்ல எது எதுனு அனுப்பி விட்டுருங்க …, வா அண்ணி அம்மாகிட்ட போகலாம் ” என்று  அழைத்துச் சென்று  விட்டாள்.

அவளையே கவனித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது தெரியாமலா போகும். அவர்களை நிறுத்தி வைத்தவன் அவனுக்குப் பிடித்த சிலவற்றை தேர்ந்தெடுத்து கொடுத்து அனுப்பி வைத்தான்.

அன்றே அவனுக்கும் வெளியூர் செல்லும் வேலை இருந்ததால் அனன்யா மட்டுமே அலுவலகம் சென்றாள்.

ராதிகாவிற்குத் தான் இருப்புக்கொள்ளவில்லை. “என்னால் உன் முகம் பார்க்க முடியாமல் இருக்க முடியாது என்றவன் … கிளம்பும்போது உயிரையும் உறிஞ்சி விடுவானோ என்றளவிற்கு முத்தமிட்டு சென்றவன் ஒரு போன் கூட பண்ணவில்லை… இதுக்குப் பேர் காதலாம் … “மனதினுள் பேசிக் கொண்டவளுக்கு ,அவளாக அழைத்துப் பேசவும் மனது வரவில்லை.

இதோ அதோ என்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ரமேஷ் சென்றவன் அரவிந்தோடு இணைந்து கொள்வதாகச் சொல்லி விட்டான். திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அதற்கென்று இருப்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரவிந்தோ மனைவிடம் மட்டும் தான் பேசவில்லை. மற்ற எல்லோரோடும் தொடர்பில் இருந்தான். அதுவும் ராதிகா அருகில் இருக்கும் நேரம் தெரிந்தே அவளிடம் பேசிவிட்டு வைப்பான்.

அனன்யாவோ அரவிந்த் ராதிகாவிடம் தனியாகப் பேசிக் கொள்கிறான் என்ற எண்ணத்தில் ராதிகாவிடம் கொடுக்காமல் வைத்து விடுவாள். அனன்யா அலுவலகம் சென்றதும் ஜானகியோடும், தாயம்மாவோடும் நேரம் செலவழித்தவளுக்கு , தாயம்மா அரவிந்தைப் பற்றிப் பேசிபேசியே அவன் நினைவில் எப்போதும் இருக்கச் செய்து விட்டார்.

Advertisement