Advertisement

பள்ளி வளாகம் முழுவதும் அன்று மாணவர்களாகவும் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபராக , அரசு அதிகாரிகளாக , ஆசிரியர்களாக என அவதாரம் எடுத்தவர்கள் குழுமி இருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

உள்ளே இருந்த ஆடிட்டோரியம் ஒன்றில் தான் அரவிந்த் ரமேஷுடன் படித்த மாணவர்கள் கூடியிருந்தனர். அவர்களோடு சென்று அரவிந்தும் ரமேஷும் ஐக்கியமாகினர். தன் கவலையை முகத்தில் காட்டாது அனைவரோடும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த்.ரமேஷிற்கும் அவனை அழைத்து வந்தது திருப்தியளித்தது.

ஜெனிஃபர் தண்ணீர் பாட்டில்களை அடுக்கும் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள். அங்கு வந்து சோர்வாக அமர்ந்த மேரியின் முகத்தைப் பார்த்த ஜெனி , “என்னக்கா ரொம்ப வேலையா “

“ஆமா ஜெனி , எப்படியும் இன்னைக்கு வேலை அதிகம்னு தெரியும். ஆனா இவ்வளவு அதிகம்னு தெரியாது. காலையிலருந்து இங்கயும் அங்கயும் அனலஞ்சது கொஞ்சம் மூச்சு வாங்குது. இன்னும் அந்த மேட்டுல இருக்கிற ஆடிட்டோரியத்துக்கு சாப்பிட எடுத்துப் போகணும்….”

“மேரிக்கா , நீங்க கொஞ்ச நேரம் இங்க உள்ள இருக்கிற வேலையப்பாருங்க, நான் அங்க எடுத்துட்டுப் போறேன். அங்க சுஜாக்கூட இருப்பா , அதனால நான் அங்க பார்த்துக்கிறேன்” என்றவள் , பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

இவளோடு சேர்த்து ஆறேழு பேர் அங்கு பணியில் இருந்தனர். மேடையில் சிலர் ‘மைக்’ல் பேசி தங்கள் நினைவுகளை நகைச்சுவையாக பகிர்ந்துக் கொண்டிருந்தனர். தன் வேலையிலயே கவனமாக இருந்தவள் எதையும் கேட்கவில்லை. அனைவருக்கும் டீ கப்புகளும் , பர்கர் .. சண்ட்விச் போன்ற சிற்றுண்டிகளையும் எடுத்துச் சென்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அரவிந்த் அருகில் கொடுத்துக் கொண்டிருக்கையில் ரமேஷ் பார்த்துவிட்டு, “மச்சான் நீ ஒன்னும் சாப்பிடாம இருக்க , அவங்க எடுத்துட்டு வர்றதசாப்பிட்டுட்டு டேப்லட் போட்டுக்கோ.” என்றவன் அவனுக்கு தந்தவளிடம் ”தேங்க்யூ சிஸ்டர்” என்றான். அடுத்து அரவிந்த் எடுக்கப் போகயில் “தேங்க்யூ சி… ” என்றுச் சொல்லப் போனவன் அந்த சீருடையை காலையில் பார்த்த நினைவில் அவள் முகம் பார்க்க , அவள் கண்களும் அவனைத்தான் விழி விரித்துப் பார்த்தது….”

மறக்கக்கூடிய விழிகளா அது … எண்ணிலடங்கா முத்தங்களை அவனிடமிருந்து பெற்று அவனை உயிர்ப்புடன் வைத்திருந்த விழிகள் அல்லவோ அது…… அவன் பார்த்துக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்திரிக்க ,

ஜெனிஃபரும் “இவர எங்கயோ பார்த்திருக்கிறேனே….” என்று நினைத்துக் கொண்டே அவன் கோப்பையை எடுக்க வந்த கையைப் பார்க்க , அது கட்டுப் போடப்பட்டு இருந்தது. ஞாபகம் வந்தவளாக , “ஓ காலையில ஹாஸ்பிடல்லப் பார்த்தேன்” என எண்ணும் போதே , அரவிந்தின் நண்பர்கள் கூட்டம் அவனைத் தள்ளிக் கொண்டு மேடைக்குச் சென்றது.கூட்டத்தை திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் மறுபடி கண்களில் படவில்லை.

காலியான காஃபி கோப்பைகளை சேகரித்து அட்டை பெட்டியில் போட்டுவிட்டு , தன் கையுறை , தலையுறை ,மொத்தத்தில் கண்கள் மட்டுமே தெரியும்படி போட்டிருந்த மாஸ்க் , அனைத்தையும் குப்பைத்தொட்டியில் போட்டு கைகளை கழுவி விட்டு ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறப் போனாள் ஜெனிஃபர்.

நண்பர்கள் அவனிடம் , “அரவிந்த் நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டனு எங்களுக்குத் தெரியும் , உனக்கு வந்திருக்கிற டாபிக்… ‘காதல்’ , நச்சுனு ஒரே வரில அதைப் பத்தி சொல்லு ” என அவனிடம் சொல்லவும் ,

                 “ரதி “

என்றான். எல்லோரும் அமைதியாகவும் , ” என் மனைவி ‘ரதி’ , கதலை நான் உணரக் காரணமானவள்.’ ரதி’ன்னா ‘ காதல்’ , ‘காதல்’ ன்னா ‘ ரதி’…. இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியாது ப்ரண்ட்ஸ்” என மேடையை விட்டு இறங்கப் போனவனை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

நண்பன் பிரேம் அருகில் வந்து “அரவிந்த் நீ நல்லாப் பாடுவேனு எங்களுக்குத் தெரியும் , இப்ப எங்களுக்காக பாட்டுப் பாடிட்டு தான் இறங்கணும்” என வற்புறுத்த , அதே வேளையில் தங்கையிடமிருந்து அழைப்பும் வர , அதை ஆன் செய்தவன் ,

 “பூவிலே .. மேடை நான் போடவா…”ஃபோனில் அழுகைச் சத்தம் கேட்ட மகன் அழுகையை நிறுத்தியது தெரிந்தது. தொடர்ந்து பாடி முடித்தவன், நண்பர்களின் கரவொலியுடன் , மனைவியின் நினைவில் தொண்டை கரகரக்க கீழே இறங்கி வந்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேற படியில் கால் வைத்தவளுக்கு அந்தப் பாடல் காதுகளில் ஒலித்து எதையோ ஞாபகப்படுத்த முயல , அதனால் தலைவலிக்க ஆரம்பிக்க … அந்த வளாகத்தில் உயரத்தில் அமைந்திருந்த தேவாலயத்தை நோக்கி ஓடினாள்.

ஏனென்றே தெரியாமல் அழுதவள் அப்படியே அங்கிருத்த இருக்கையில்  தலையைப் பிடித்து அமர்ந்து  விட்டாள். சிறிது நேரம் கண்களை மூடிமனதை ஒருநிலைப்படுத்திய பின் கேன்டீனுக்குச் சென்றாள்.

ஜெனிஃபரைப் பார்த்தப் பொறுப்பாளர், “ஜெனி வந்துட்டியாமா, டேபிள் நம்பர் அஞ்சுக்கு இதை கொண்டு போய் கொடு எனவும் , அந்த உணவு வகைகள் இருந்த ட்ரேயை எடுத்துக் கொண்டு சென்றவள் அந்த டேபிளை நெருங்க , அங்கு ஒருவர் மட்டுமே , இருக்கையில் தலையை பின்னாடி சாய்த்து கைகளை கட்டி கண்மூடி அமர்ந்திருக்கவும் அருகில் சென்று பார்க்க , காலையில் பார்த்தவனும் மேடையில் பாடியவனுமான அரவிந்த் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவனது மெளனம் கலையாவண்ணம் டேபிளில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள். வைத்ததுக்கூட தெரியாமல் அவன் அப்படியே அமர்ந்திருக்கவும்,

“சார் ” என்றாள் , கண் திறக்கவில்லை , மறுபடியும் சத்தமாக” சார்” எனவும் ,கன்களை மட்டும் திறந்தவன் அவளைப் பார்த்து புன்னகைப் புரிந்தான். பதிலுக்கு புன்னகைத்தவள்,

“வேற எதுவும் வேணுமா சார்” எனவும் ,

“எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதா…. காலையில இருந்து என் கண் முன்னாடி வந்து நின்னு நின்னு என்னைக் கொல்றடா நீ….” எனப் பிதற்றவும்,

அவனை “லூசாப்பா நீ ” என்ற ரேஞ்சில் பார்த்து விட்டு,

“ஒருவேளை தூங்கிட்டு இருந்தவங்கள எழுப்பினதுல கனவு கண்டு இப்படி புலம்புறாங்களோ … ” என எண்ணியவாறு நகர்ந்து சென்றாள் .

கோபமாக ஏதாவது பேசியிருந்தால் கோபமாக பேசியிருக்கலாம். இப்படி மென்மையாக பேசுபவனை பைத்தியக்காரனாகத்தான் எண்ண முடிந்தது அவளால் .

அதன் பிறகு சாப்பிட்டு முடித்தவன் நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டே கிளம்பி விட்டான். அன்று இரவு நண்பர்கள் அனைவருமாக அவர்கள் தங்கியிருந்த ரிசார்டில் பார்டிக்கு அழைக்கவும் , மறுநாள் காலை கிளம்பலாம் என்று முடிவு செய்தனர்.

இரவு விருந்து முடித்து பதினொரு மணி போல் வீடு வந்த இருவரையும் வாசலிலயே வரவேற்றான் சக்திவேல்.

“அண்ணா , மாமா … எல்லாமே பக்காவா இருக்குது. நமக்கு நூறு கோடி லாபம் தான். அதுதான் நேர்லயே சொல்லிட்டு கிளம்பலாம்னு வெய்ட் பண்ணேன்.” என்றுப் புன்னகைத்தவாறு கூறியவன் அவன் கொண்டு வந்த கோப்புகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

அவன் பொறுப்புணர்சியைக் கண்டு மகிழ்ந்தவர்கள் , அவனது இருப்பிடம் செல்ல இன்னும் கொஞ்சம் தூரம்  செல்ல வேண்டி இருப்பதால் அங்கயே தங்கச் சொன்னார்கள்.

அரவிந்த் “ராமண்ணா சக்திக்கு சூடா சாப்பிட ஏதாவது செய்துட்டு எனக்கு கொஞ்சம் தண்ணி தாங்க” என்று சக்தி எதிரில் அமர்ந்தான்.

அரவிந்த் ரமேஷ் இருவரும் அப்படி தான் என்பது அவனுக்கு தெரியுமே ,முறுவலோடு அமர்ந்தவனுக்கு அப்போதுதான் அந்த விஷயம் ஞாபகம் வர , “அண்ணா .. அது வந்து ” என்று ஆரம்பிக்கவும் , ரமேஷிற்கு ஃபோன் வர , அவன் எழுந்து சென்று பேசிக் கொண்டிருந்தான்.

சோஃபாவில் சாய்ந்து அமர்ந்த அரவிந்த் “சொல்லு சக்தி, ஏதோ சொல்ல வந்த ” என குளிருக்கு அணிந்திருந்த கோட்டை கழட்டி சோஃபாவில் போட்டவாறு கேட்டான். “

“அதுங்கண்ணா , அண்ணி… அண்ணி அமெரிக்காலருந்து வந்துட்டாங்களாங்கண்ணா”

எப்போதுமே இப்படி குடும்ப விவரங்கள் அதிகம் பேசாத சக்தி இப்படி கேட்கவும் , பட்டென்று எழுந்து அவனருகே வந்தான். அரவிந்த் இப்படி எழவும் தான் கேட்டது தவறோ என்று மிரண்டப்பார்வைப் பார்த்த சக்திவேலிடம் ,

“ஏன் என்னாச்சு சக்தி அண்ணியக் கேட்கிற , அவ சைன் எதுக்கும் தேவைப் படுதா”

அவனும் எழுந்து நின்று , ” அப்படி எதுவும் இல்லீங்கண்ணா…. அண்ணிக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இருக்காங்களானு கேட்கத்தான் … “

பேசி முடிக்க விடவில்லை அவனை , அவன் வலது கையை பற்றியவன்…” என்ன இப்படி ஒரு கேள்வி .. என்னாச்சு தெளிவா சொல்லு”

“அது ….அதுங்கண்ணா … அண்ணி போலயே இங்க….. “

“எங்க .. பார்த்த ” என்று உணர்ச்சி மிக கத்தியவனிடம்,

பள்ளியின் பெயரைச் சொல்லி “அங்க வேலைப் பார்த்தவங்க அண்ணிப் ….. ” சக்தி வேலை இறுக கட்டிக் கொண்டவன் அவனை விடுவித்து விட்டு  அந்தக் குளிரில் காரை கைகட்டோடு ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

அவன் ஸ்டியரிங்கில் கை வைக்கவுமே கையிலிருந்து ரத்தம் கட்டையும் மீறி கசிய ஆரம்பித்தது.ஊட்டி மலைச்சாலைகளை அந்த இரவில் சாகச பயணம் செய்வது போல் ஓட்டிக் கொண்டு  சென்றுஅந்த பள்ளி முன்பு வண்டியைக் கொண்டு நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கி வந்து செக்யூரிட்டியிடம் தான் ஒருவரைத் தேடி வந்திருப்பதாக தெரிவிக்க , அவர் இப்பொழுது அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள் காலையில் வரும் படி தெரிவித்தார். அப்பொழுதுதான் தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க அது இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது.

தலையில் கைவைத்து காரில் சாய்ந்துக் கொண்டவனிடம் வந்த காவலாளி , ” சார் விடிகாலையில ஜெபத்துக்கு எல்லாரும் இந்த சர்ச் க்கு ஹாஸ்டல்ல இருந்து வெளிய வருவாங்க , அப்ப வந்தீங்கன்னா மடத்துல பெரிய ‘மதர்’ பார்க்கலாம். அவங்கள கேட்காம இங்க யாரையும் பார்க்க முடியாதுங்க. இப்ப போய்ட்டு காலையில வாங்க” என்றார்.

அதற்குள் அந்த இரவு நேரக் குளிரில் சக்திவேலை பின்னால் அமர்த்தி ரமேஷ் அவன் பைக்கை ஓட்டிக் கொண்டு அரவிந்த் அருகில் வந்து நிற்பாட்டினான்.

“மச்சான் .. சக்தி விஷயத்தை சொன்னதும் கிளம்பிட்டேன் .. எப்படிடா எனக்கு ஒன்னும் புரியல….” என்ற ரமேஷைப் பார்த்தவனுக்கு பேசவே முடியவில்லை.

“அவதானடா ” என்று ஏக்கத்துடன் கேட்டவனைப் பார்த்த ரமேஷிற்கும் பேச்சு வரவில்லை.

சக்திவேலிற்கு இவர்கள் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று புரியாத போதும் , அவர்கள் அருகில் வந்து ,

“அண்ணா , மாமா … அவங்க பேரு ஜெனிஃபர்னு இங்க இருக்கிறவங்க சொன்னாங்க…. அப்புறம்… அப்புறம் அவங்க இங்க கேன்டீன் ஹெல்ப்பர்… அது தான் அண்ணியோட ட்வின் சிஸ்டரா இருக்கலாமோனு ஒரு சந்தேகத்துல கேட்டேன்”

அரவிந்தும் ரமேஷும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பிப் போய் நின்றனர். குழப்பத்திற்கு காரணமானவளோ  நிம்மதியாக உறங்கி அதிகாலை ஜெபத்திற்காக குளித்து வெள்ளை நிற சுடிதார் அணிந்து துப்பட்டாவை தலையில் போர்த்தி தேவதையாக தேவாலயத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

 

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

 

பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

                        காதல் அழகானது…..

Advertisement