Advertisement

        அழகு 3

அரவிந்தின்    தோளை உலுக்கி , ” நைட் என்ன சாப்டீங்க… “

தூக்கத்திலிருந்தவன்… “ஏதோ சாப்பிட்டேன் டியர்… தூங்க விடுறா…. நைட் ரொம்ப நேரம் கால் பிடிச்சு விட்டேனா … தூங்க நேரமாகிருச்சு….” என்றவாறே தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான்.

“ஷ் …. வலிக்குதுடா…. என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலயே “, அவன் மீசையைப் பிடித்து இழுத்தவளிடம் புலம்பிக் கொண்டே எழுந்தவனிடம், “ம்…. பொய் சொன்னீங்க…”

” என்ன பொய்யா … நான் ஹரிச்சந்திரன் வாரிசாக்கும்… நோ பொய் … ஆல்வேஸ் மெய் …. அதுவும் இந்த மெய்ய தீண்டுறது….ஷ்…. “அவளது கழுத்தை வாசம் பிடிக்க வந்தவன் மீசையைத் திரும்பவும்  பிடித்து இழுத்தவளின் கையை பிடித்து வைத்து முத்தம் பதித்து மீசையை வைத்து அவள் கழுத்தில் உரசியும், கை கொண்டு மேடிட்ட வயிற்றை மென்மையாக தடவிக் கொண்டும்,

சிந்திய வெண்மணி சிற்பியில் முத்தாச்சு என்….கண்ணம்மா…

  வெண்ணிற மேனியில் என் மனம் பித்தாச்சு ….ஹ்ம்”

என்று பாடலை பாடியவனிடம் ,

“எப்படிங்க இப்படி சிச்சுவேஷன் சாங் கண்டுபிடிக்கிறீங்க”

“நான் எங்க கண்டுபிடிச்சேன்… இளையராஜா  ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு பாட்டு போட்டு வச்சுருக்கார்…. நான் அதை பாடிட்டு இருக்கேன்…. நைட் பாடக் கூட ஒரு பாட்டு அன்னைக்கு பாடினேனே … ஞாபகம் இருக்கா … இல்லைனா இப்ப பாடட்டா….

“விடிய … விடிய … ” அவன் வாயை மூடி கழுத்தில் முகம் புதைத்திருந்த அவனைத் தள்ளிவிட்டவள், “இப்ப விளையாட்ட நிறுத்துறீங்களா ….” அவள் கையை எடுத்து விட்டு ,

“இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலயே… ” என்று கரங்களை அவள் முதுகுப்புறம் கொண்டு போனவனின் கையை நறுக்கென்று கிள்ளிய ராதிகா ,

“பா….ஸ் நீங்க இப்படி விளையாடுனீங்க , அப்பளம் ,ஊறுகாய் , சிப்ஸ் இப்படி சாப்பிட ஆரம்பிச்சிடுவேன்….”

“ஐயோ …. இதோ கை கட்டிட்டேன் சொல்லு” என்று கைகளைக் கட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அரவிந்தைப் பார்த்தவள் , அந்தக் கைகளை தளர்த்தி மெல்ல நகர்ந்து வயிறு இடிக்கா வண்ணம்  அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“ஏன் பாஸ் பொய் சொன்னீங்க… நைட் நீங்க வெறும் இடியாப்பம் மட்டும் சாப்பிட்டு இருக்கீங்க … அத்தை எவ்வளவு ஆசையா உங்களுக்குப் பிடிக்கும்னு ஆட்டுக்கால் பாயா செய்தாங்க தெரியுமா…. நீங்க விரும்பி சாப்பிடணும்னு தானே… ஆனா நீங்க… ” என்று அவன் நெஞ்சில் அடித்து அழவும்…

“ப்ளீஸ் ப்ளீஸ் அழாதடா…. இன்னும் ஒரே மாசம் நம்ம செல்லம் வெளிய வந்ததும் நாம நார்மலா சாப்பிடலாம் சரியா….. நீ சாப்பிடாத எதுவும் எனக்கு வேண்டாம்”

“ப்ச்…. நீங்க இப்படி இருக்கிறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு.”

“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறேன் தெரியுமா.நீ எதையும் போட்டு குழப்பாம என்ஜாய் பண்ணு…. டியர் டியர் இங்க இருந்து அங்க போறாங்க” என்று அவள் வயிற்றில் அசைந்த குழந்தையை தொட்டு மகிழ்ந்தவன் வயிற்றில் முத்தமிட்டு கொண்டே ,

“இப்ப அம்மாவுக்கு கொடுப்பமா ” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட ,

“பாஸ் … ” , “ம்”

“இந்த காஃபி குடிங்க…”

“வேண்டாம் … ” , “நானே போட்டேன் உங்களுக்காக ” , ” இப்ப வேண்டாம் டா… நம்ம பேபி வந்த பிறகுதான் எல்லாமே … “.

வேகமாக உலுக்கப்பட விழித்தவன் அருகில் ரமேஷும் , அங்கு சமைத்து தரும் ராமரும் கையில் காஃபி கோப்பையுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.

“மச்சான் … எழுந்து குளிச்சு ரெடியாகு .. இன்னைக்கு ஈவ்னிங் வரை அங்க தான். கொஞ்சமா சூடா காஃபி சாப்டுக்கோ….”

படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்டே “காஃபி வேண்டாம் மாப்ள சாப்பிட்டு கிளம்புவோம்” என்றவன் குளியலறையில் புகுந்து கொண்டான்.

ஷவரை திறந்து நின்றவனிடம் “எனக்குத்தான் சுடு தண்ணீ வேண்டாம்… நீங்க கீஸர் ஆன் பண்ணி ஹாட் வாட்டர் எடுத்துக்குங்க.”

“நீயும் வா , சேர்ந்து குளிப்போம் … கூல் … வாட்டர் கூட …. செம ஹாட் வாட்டர் ஆகிடும் … “

“அடடா… நீங்க பச்சத் தண்ணிலயே குளிங்க… நான் வெளியே போறேன்பா”

“உன்னை யார் வெளிய விடுவா….” அவளையும் சேர்த்து ஷவரில் நனையவைத்து….. நினைவுகளின் பிடியில் சிக்கித் தவித்தவன்…

அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்து ஓங்கி குத்தியதில் , கையிலிருந்து ரத்தம் வழிய துவங்கியது.

“எங்கடா போன … சீக்கிரம் வந்துருடா…. ” என்றவன் குளித்து முடித்து வெளியே வர , அவ்வளவு நேரம் தெரியாத வலி கையில் தெரியவும்,

” ராமண்ணா , இதக் கொஞ்சம் போட்டு விடுங்க ” என்று பேன்ட் எய்ட் எடுத்துக் கொடுத்தான்.

காயத்தைப் பார்த்து பதறியவர்”என்னதம்பி இது  இப்படி காயமாக்கி வச்சிருக்கீங்க , இந்த சின்ன பேன்டேஜ்லாம் போதாது … நான் போய் ரமேஷ் தம்பியை கூட்டிட்டு வாறேன்” என்றவர் அவனை அழைத்து வந்தார்.

பார்த்ததும் அதிர்ந்த ரமேஷ் , அவன் கையைப் பிடித்து எழுப்பி … “மச்சான் வாடா … தங்கச்சி வந்துருவாடா இப்படி அடிக்கடி உடம்பெல்லாம் புண்ணாக்கிரியேடா. தங்கச்சி வந்து கேட்டா என்ன சொல்லுவேன்….” என்றவன் அவனை காரில் அமர வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றான்.

” இங்க வலிக்கிறத விட இந்த வலியெல்லாம் ரொம்ப கம்மிடா…. “இதயத்தை தொட்டுச் சொன்னவன் கண்களை மூடி சாய்ந்துக் கொண்டான்.

 மருத்துவமனை கார் நிற்குமிடத்தில்  வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற இருவரும் மருத்துவரைப் பார்க்க வெளியே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அருகில் நின்றிருந்த செவிலிப் பெண் , ” ஜெனி அக்கா , ஒன்னு பண்ணுங்க இப்ப எனக்கு டியுட்டி முடிஞ்சு ஹாஸ்டல் கிளம்பிட்டேன். நீங்க ஹாஸ்பிடல் வந்துட்டீங்கனா , பார்வதியம்மா டேப்லட்ஸ் உங்க கைல கொடுத்துட்டு நான் கிளம்புறேன். நீங்க பாய்ஸ் ஸ்கூல் காம்பஸ்ல இன்னைக்கு வேலைனு சொன்னீங்களே ….”

அந்தப்புறம் என்ன சொல்லப்பட்டதோ ,அரவிந்திடம் வந்த நர்ஸ்” சார் நீங்க உள்ளேப் போகலாம் “எனவும் உள்ளே செல்ல மருத்துவர் அவனுக்கான சிகிச்சை முறைகளை அங்கிருந்த நர்சிடம் தந்து  , ” ஸ்விட்டீ சிஸ்டர பார்க்கச் சொல்லுங்க என்றார்.

“ஸ்வீட்டி” என்ற பெயரில் திரும்பிப் பார்த்தவன் முன் செவிலியர் உடையில் அழகாக சிரித்தப்படி நின்றாள் ராதிகா . சட்டென்று கையை இழுக்க , “சார் சார் … கண்ணாடி துண்டுகள் இருக்கு சார். வலிக்கும் பொறுத்துக்குங்க” என்றவளைப் பார்த்தவன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

“என்னடா எங்க பார்த்தாலும் நின்னு என்னை வதைக்கிற “

“மச்சான் இன்ஜக்ஷன் போட்டுட்டு வெளிய வா, நான் கார் எடுத்துட்டு வாறேன்”

கையில் கட்டோடு வெளியே வந்தவன் எதிரே ஒல்லியாக ஒரு  சீருடைப் போன்ற சுடிதாரில், பொட்டில்லாத நெற்றியுடன் , காதுகளில் சிறிய பிளாஸ்டிக் கம்மலுடன் , கழுத்தில் சிலுவைக் குறியிட்ட ஓர் மெல்லிய வெள்ளி சங்கிலியுடனும் , குட்டை கூந்தல் உயரே தூக்கிப் போடப்பட்டுக் கொண்டு ராதிகா வந்துக் கொண்டிருந்தாள்.

அவளையே வைத்தக் கண் வாங்காமல் அரவிந்த் பார்க்க , எதிரே தன்னையேப் பார்த்துக் கொண்டு வந்தவனை ஜெனிஃபரும் கடந்து சென்றாள். சட்டென்று திரும்பிப் பார்த்த அரவிந்த் அவளைக் காணாது திகைத்தவன் , தன்னையே நொந்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

ஜெனிஃபரோ அனிதா இருந்த அறையினுள் நுழைந்தவள்… தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு பள்ளிக்கு கிளம்பி விட்டாள்.

ரமேஷ் கொண்டு வந்து நிறுத்திய காரில் வேகமாக ஏறி படு வேகமாக கதவைச் சாத்தினான். “இதுக்குத் தான்டா… இதுக்குத் தான் …. நான் எங்கயும் வரலனு சொன்னேன். அங்க இருந்தா ஏதாவது ஒரு வேலைய மாத்தி மாத்தி செய்துட்டு இருந்திருப்பேனில்லயா”

என்று கார் சீட்டில் தலையை சாய்த்து அடிபட்ட கையால் தலையைப் பிடித்துக் கொண்டான் “

நண்பனின் அடிபட்ட கரத்தை மெதுவாக விலக்கி அவன் தோள் தட்டிய ரமேஷ் , “நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்னு தான் கூட்டிட்டு வந்தேன் மச்சான். இதுக்கு மேலயும் ஃபோர்ஸ் பண்ண விரும்பலடா, வா கோயம்புத்தூர் கிளம்பலாம்.”

ஒரு கையால் தலையைக் கோதி கட்டுக்குள் வந்தவன் , “சாரி டா மாப்ள…. ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல. காலைல ராமண்ணா காஃபியோட நிக்கல … உன் தங்கச்சி தான் நிக்கிறா , நர்ஸ்  இன்ஜக்ஷன் போடல , உன் தங்கச்சி தான் போடுறா …சரினு வெளிய வந்தா எதிர்தாப்புல வர்ற பொண்ணுக்கூட அவளா தான் டா தெரியறா…. ஸ்ரீக்காக மட்டும்தான்டா உயிரோட திரிஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம் தெளிவா இருக்கிறதும் ” அப்பா’னு கூப்பிடுறத கேட்கப் போய் தான். இல்லைனா அவ நினைவுகள்ளயே இந்த உலகத்தமறந்து இருந்துருப்பேன்….. ஐ மீன் பைத்தியகாரனா ஆகிருப்பேன்.”

“இந்நேரம் விளையாடிட்டு தான் இருப்பாங்க பேசு…. நாம வந்துட்டே இருக்கோம்னு சொல்லு…. “அதே நேரம் அவனது மொபைல் அடிக்க எடுத்து அரவிந்தைப் பார்க்க , ‘யார்’ என்பதாக புருவம் உயர்த்தியவனிடம் ,

“பிரேம் டா … நம்மள மீட் பண்றதற்காகவே கனடாலருந்து வந்துருக்கான் டா . அவன் தான் நம்மள காணோம்னு கூப்பிடுறான் போல , வரலனு சொல்லிடுறேன்டா” என்றவன் ஃபோனை வாங்கிப் பேசிய அரவிந்த்  தாங்கள் வந்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்தான்.

” வண்டிய ஸ்கூலுக்கு விடு மாப்ள… “

“நீ இன்னும் சாப்பிடலயே மச்சான்.இந்த டேப்லட்ஸ் வேறப் போடணும் , ஏதாவது ஹோட்டல் போய் சாப்பிட்டு போவோமா “

“ம்ச்… வேண்டாம் மாப்ள…. வேணும்னா ஸ்கூல் கேன்டீன்ல சாப்பிட்டுக்கலாம்…” கார் அந்த மிகப் பிரபல உண்டு உறைவிட பள்ளியை நோக்கிச் சென்றது.

Advertisement