அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க, மெத்தையில் குப்புறப் படுத்து கையால் ஃபோனை துழாவிக் கொண்டிருந்த அரவிந்தின் கையில் மொபைலைக் கொடுக்கவும் , தூக்கத்திலயே வாங்க முற்பட்டவன் இரவின் நினைவில் , போன் தந்த கையை பிடிக்கப் போக “ஸ்வீட்டி” என்று கண்மூடிக்கொண்டே அழைத்தான்.
ஆனால் கையைப் பிடிக்க முடியவில்லை எனவும் , கண்களை சிரமப்பட்டுத் திறக்க , அரவிந்த் தலை வைத்திருந்த பக்கத்தில் இருந்த சிறிய மேசை மீது சாய்ந்து கைகட்டி அரவிந்தையே ரமேஷ் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ரமேஷைக் காணவும் நன்றாக விழிப்பு வர எழுந்தமர்ந்த அரவிந்த் , “என்ன மாப்ள அதுக்குள்ள ரெடியாகிட்ட … மதியம் லன்ச் முடிச்சுட்டு ரெண்டு பேரும் கிளம்பலாம் சொன்னேன்ல … எனக்கு திருப்பூர்ல சில வேலைகள் பார்க்கணும்..” எழுந்து அங்கிருந்த துவாலையை எடுக்க , இரவின் நினைவு முகத்தில் தானாக புன்னகை உண்டாக்கியது.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷிற்கு முகத்தில் முறுவல் தோன்ற , அதை மறைத்துக் கொண்டு ” என்னமோ நேத்து டையலாக்காப் பேசின… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிச்சப் பிறகு தான் என் லைப் ஸ்டார்ட் ஆகும்னு சொன்ன .. தங்கச்சிக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்தாச்சு , கல்யாணமும் முடிவு பன்னியாச்சு , எனக்கும் பார்த்து வச்சுட்டியா மச்சான்.” என்று சொல்லிக் கொண்டே அவனருகில் வந்தான்”.
“மாப்ள நீ ரெடியாகிட்ட .. நான் ரெடியகிட்டு வந்துப் பேசுறேன்.. சிவா மச்சான் வெய்ட் பண்ணுவார் டா” என்று திரும்பப் போனவனை பிடித்து நிறுத்திய ரமேஷ் ,
“அவர் இன்னேரம் அவர் ஆபிஸ்ல இருப்பார் மச்சான் … நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு”
சட்டென்று மணிப் பார்த்தவன் , டேய் மணி பதினொன்னாகப் போகுது .. இவ்வளவு நேரமா தூங்கினேன் .. அப்பவே எழுப்பி விட்டுருக்கலாம்ல” என்றவன் ரமேஷ் கையை விடுவிக்கப் பார்க்க ,
“மச்சான் புது மாப்பிள்ளை நைட் முழுசும் தூங்காம இருந்துருப்ப… எப்படிடா எழுப்ப .. அவங்க உங்களை தொந்திரவு பண்ண வேண்டாம் நாங்க போய்ட்டு போன்ல பேசிக்கிறோம்னு கிளம்பிட்டாங்க… நீ டயர்டா இருப்பல மச்சான் “
என்ற ரமேஷ் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
கடுப்பான அரவிந்த் “ஏன்டா ஏன்டா … உன் தங்கச்சிக்கு ‘காதல்’ங்கிறது கெட்ட வார்த்தையாம் ….அதை விட ரொமான்டிக்கா பேசுனா அசிங்கமா பேசுறீங்க அப்படிங்கிறா… போடா ஒரு கன்னிப்பையன ரொம்பத்தான் கிண்டல் பன்ற… நானே நொந்து போய் இருக்கேன்” என்று சலித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவனைப் பார்த்து சிரித்த ரமேஷ் ,
“ஓகே நான் நம்பிட்டேன்.. போய் கண்ணாடிப்பாரு அதப் பார்த்தா யாரும் நம்ப மாட்டோம்… பனைமர அடியில உக்காந்து நீ பால்தான் குடிச்சனு” என்று வாய் விட்டு மறுபடியும் சிரித்தவன் , “சரி சீக்கிரம் கிளம்பி வா சாப்டுட்டு கிளம்பனும் ” என்று அறையை விட்டு வெளிச்சென்றான்.
ரமேஷ் சொன்னதும் கண்ணாடியைப் பார்த்தவனுக்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. இரவில் புரண்டு படுத்து அவனருகில் வந்தது அவனுக்குத் தெரியவில்லை தான் .. ஆனால் அதற்கு சாட்சியாக அவள் விட்டுச் சென்ற அவள் நெற்றிப் பொட்டு அவன் கன்னத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தது.
“அடப்பாவி இதைப் பார்த்து தான் அப்படி சொல்லிட்டுப் போறீயா, பச்சைத் தண்ணிக்கே வழியில்லயாம் இதுல பாலாம். கள்ளாம் …” என்றவன் அந்தப் பொட்டை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“இதெல்லாம் எனக்கு பிடிச்சிருக்க காதல் கிறுக்குக்கு அடையாளம் ” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
அனன்யா அறையில் குளித்து விட்டு வெளியே வந்த ராதிகாவிற்கு அனன்யாவைப் பார்க்க ஏதோப் போல இருக்க அவளுக்கு முகம் காட்டாது தலைகாய வைத்துக் கொண்டு இருந்தவள் அருகே வந்த அனன்யா , “அண்ணி குளிச்சிட்டியா , வா வா… உன்னையத் தேடுன குட்டீஸக்கூட சமாளிச்சாச்சு , அம்மாவ சமாளிக்கத்தான் முடியல .. ஒரு நிமிஷம் .. ஒரு நிமிஷம் … உன் காலக் காட்டு “
ராதிகாவும் காலைக் காண்பிக்க , “அண்ணி இது உன் கொலுசுதான … அண்ணன் வாங்கித் தந்தது இல்லையே”
“ம் … அண்ணன் வாங்கினா இப்படி ஒரு பக்கம் சலங்கை இருக்காது ..மொத்தமா ஜல் ஜல்னு சத்தம் வர்ற மாதிரி போட்டா தான் அவங்களுக்கு பிடிக்கும் … காலேஜ்க்கு சிம்பிளா போட்டாலும் , வீட்டுக்கு வந்ததும் இதைப் போட்டுக்க சொல்வாங்க ” என்றவள் தன் கால் கொலுசைக் காட்டினாள்.
அதைப் பார்த்த ராதிகாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“பார்த்தியா பார்த்தியா … நீயே சிரிக்கிற , ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் ஃபிரண்ட்ஸ் எவ்வளவு கிண்டல் பன்னுவாங்க தெரியுமா”
“ஹேய் அனு சாரி சாரி … இவ்வளவு சலங்கையோட சிவாண்ணன் பொண்ணுதான் போட்டுப் பார்த்து ருக்கேன், நீயும் அதே போல போட்டுருக்கவும் சிரிப்பு வந்துடுச்சு வேறொன்னுமில்ல “
“சரி சரி வா கீழப் போகலாம்…” என்று அழைத்துப் போனாள்.
அங்கு ஜானகியின் அறைக்குச் சென்றவர்களை வேகமாக வந்த ஜானகி , “அஞ்சு … எங்கப் போன நீ .. உங்க வீட்ல எல்லோரும் கிளம்பிட்டாங்க. எப்போ வரவேற்புனு உங்கப்பா கேட்டாரு, நான் அண்ணன்கிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டேன்.”
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அரவிந்தும் ரமேஷும் கீழே இறங்கி வந்து விட, “ம்மா வாங்க நாம சாப்பிடலாம் , நான் ரமேஷ் கூட திருப்பூர் கிளம்புறேன்”
“அரவிந்த் அஞ்சு அப்பா வரவேற்பு எப்ப வைக்கனும்னு கேட்கிறார், நீ அண்ணன்கிட்ட போன் பன்னி கேட்டுச் சொல்லு சரியா.. என்ன தான் தாலி கட்டிட்டாலும் .. ஊரறிய
மனைவினு காண்பிச்சாதான் ஒரு பொண்ணுக்கு மதிப்பு. அப்படித் தெரிய வைக்கலனா ஆம்பிள்ளைகளுக்கு ஒன்னும் பிரச்சினையில்ல… பொண்ணுங்கதான் தேவையில்லாதப் பேச்செல்லாம் கேட்க்க வேண்டியிருக்கு …” என்று நிறுத்தியவர் ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு ,
“நான் எவ்வளவோ சொன்னேன் .. அப்பா கொஞ்சம் கெளரவம் அது இதுனு பார்த்தாலும் பிள்ளைகளுக்கு விட்டுத் தருவார்னு … கேட்காம … இப்ப பெரியவங்க ஆசிர்வாதம் இருந்திருந்தா… இருந்திருந்தா” என்றவர்…தலையைப் பிடித்துக் கொண்டு “அத்தான்… பாலாண்ணா , அண்ணி,, ராமண்ணா ….. “வீல் … என்று கத்தியவர் அப்படியே சரிய இருக்க அரவிந்த் வந்து பிடித்துக் கொண்டவன் , மெல்லத் தூக்கிச் சென்று படுக்க வைத்து , ” பாப்பா அந்த டேப்ளட் பாக்ஸ் எடும்மா” என்று இது போன்று ஆகும் சமயங்களில் தரும் மாத்திரையை எடுத்து அவர் வாயில் வைத்து தண்ணீர் அருந்த வைத்தான்.
அவரை தாயம்மாவை கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றவர்களை வெளியே அழைத்து வந்தவன் , “அனுமா திருப்பூர் போய்ட்டு வந்துடுறேன் அம்மாவப் பார்த்துக்கோங்க” , என்றவன் மனைவியைப் பார்க்க , அவள் கண்கள் கலங்க நின்றுக் கொண்டு இருந்தாள்.
ரமேஷும் ராதிகாவையும் அரவிந்தையும் பார்த்தவன் , நான் சாப்பிட்டுட்டு காருக்குப் போறேன் , நீ தங்கச்சிட்டப் பேசிட்டு வா” என்று நகர்ந்து விட்டான்.
அனன்யாவும் ரமேஷின் பின்னாலயே சென்றவள் , அவனுக்கு அங்கிருந்த சாப்பாடை பரிமாறி அவளும் அருகில் அமர்ந்து உண்ணலானாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மொத்தத்தில் இரவின் நினைவில் காலை எழுந்த நேரத்தில் இருந்து வந்த இதமான மனநிலை நால்வருக்குமே தொலைந்து போனது.
ராதிகா அருகில் வந்தவன் , “சாரி … நான் நிறையத் தப்பு பன்னிருக்கேன்னு தோணுது , அம்மா சொன்னதுக்கப்புறம் தான் நிறைய விஷயங்கள் புரியுது , ப்ளீஸ் அழாத .. இன்னும் எவ்வளவு மன்னிப்புக் கேட்கப் போறேன்னு தெரியல … ஆனா நான் யாருக்கும் தெரியாம தாலி கட்டலயே …உங்க வீட்டு சொந்தங்கள் முன்னாடி தான் கட்டுனேன்.”
கண்ணீரைத் துடைத்து விட்டு ஏதோ சொல்ல வந்தவளை , ” நான் சொல்லிக்கிறேன் ” என்றதும் அமைதியானவளிடம் “இந்த மாசத்துலயே ஒரு நல்ல நாள் பார்த்து ….” ரமேஷையும் அனன்யாவையும் கண்களால் காட்டியவன் ..” அவங்க ரெண்டு பேருக்கும் கோவில்ல வச்சு கல்யாணம் பன்னிட்டு … “விழி விரித்துப் பார்த்தவளிடம் , “அவங்களுக்கே அது தெரியாது” என்று புன்னகைத்தவன் “அன்னைக்கு நைட்டே நம்ம வரவேற்பையும் வச்சுக்கலாம். இப்பவே உங்க பெரியப்பா கிட்டயும் பேசிட்டு வாறேன் சரியா… எனக்காக அழாதடா… நீ அழுதா எனக்கு என்னமோ போல இருக்கும் , அப்புறம் வேலைய சரியா பன்ன முடியாமப் போயிரும் “
கண்களை நன்கு துடைத்துக் கொண்டவள் “நான் இப்ப என்னைய நினைச்சோ , உங்கள நினைச்சோ அழலைங்க….. அத்தை சொல்ற விஷயங்கள் எல்லாம் எங்கம்மா வாழ்க்கைல நடந்துச்சாம்… அதனாலயே காதல் , கல்யாணம் எல்லாம் மேல வெறுப்பு… ஆனா எனக்கும் அதே போல வரும்னு நினைக்கல.. “
அன்று அவள் அத்தையிடம் பேசிய போது ஃபோனில் கேட்ட விஷயம்தான். ஆனால் நேரில் கேட்க என்னவோப் போல இருந்தது அவனுக்கு. ஒன்றும் சொல்லாமல் ,
“நான் கிளம்புறேன் ” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தவனை , கைப் பிடித்து தடுத்து ,
“ஒரு நிமிஷம் சாப்பிட்டுட்டு கிளம்புங்க”
காலையில் இருந்த இதம் அரவிந்திற்கு திரும்ப வந்ததுப் போல் தோன்ற , அவள் பிடித்திருந்த கையைப் பார்த்து புன்னகைத்தவன் ,
“இப்ப எனக்கு என்ன சொல்ல தோணுது தெரியுமா ….. என் பொண்டாட்டி என் கையப் பிடிச்சிட்டா … என் பொண்டாட்டி என் கையப் பிடிச்சிட்டா… அப்படினு கத்திசொல்லனும்னு தோணுது”
சட்டென்று கையை விட்டவள் “ஷ் … அனுவும் அண்ணாவும் இருக்காங்க , வாங்க சாப்பிடலாம் ” என்று புன்னகையோடு அழைத்துச் சென்றாள்.
இவர்கள் வரவும் அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்ததால் எழுந்து சென்று விட்டனர். அரவிந்த் சாப்பிட அமரவும் அவனுக்குப் பரிமாறியவள் , அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
சாப்பிட ஆரம்பித்தவன் “நீ சாப்பிடல …ஒரு வேளை நைட் போல சாப்பிடலாம்னு ஒரு தட்டு தானா” என்று கேட்கவும் , அவளின் இயல்பான குணத்தில் அவன் கையில் கிள்ளி , ” வாய மூடிட்டு ….. ஐயோ அதுக்கும் ஏதாவது சொல்வீங்க … பேசாம சாப்பிடுங்க”
உடனே சைகையாலயே “உனக்கு சாப்பாடு ” எனவும் ,
வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள். இது நாள் வரை சிரிப்பு என்ற ஒன்று தெரியாதது போல் இருந்தவள் இன்று இப்படி சிரிக்கவும் அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.
அரவிந்திற்கோ சிரிக்கும் இதழ்களை இதழ் கொண்டே சிறை செய்யும் ஆவல் கிளர்ந்தது.