“மாப்ள என்ன செய்வியோ தெரியாது. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு இங்க வர்ற, என் வாழ்க்கைல இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற போல ஃபீல் பன்றேன். அது நீ இருந்தா இன்னும் அதிகமானது போல இருக்கும் … ” என்ற அரவிந்திடம்,
” இவ்வளவு சொன்ன பிறகு வராம இருப்பேனா … கிளம்பிட்டே இருக்கேன் டா… ” என்றான் ரமேஷ்.
சிவாவை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுப் பேசிக் கொண்டு இருக்கும்போது, ராதிகாவின் பெற்றோர் பற்றிய பேச்சைத் துவக்கிய சிவாவை தடுத்த அரவிந்த் “சீனிய.. சாரி சாரி.. மனைவியோட அண்ணன மச்சான்னு தானே சொல்லனும் … சோ மச்சான் … கரெக்ட்” என்றவன் ,
“எனக்கு என் மனைவி ராதிகா அப்படிங்கிறது போதும். அவள பத்தின எந்த விஷயமும் அவகிட்ட இருந்து தெரிஞ்சுக்கவே விரும்புறேன். அதனால ” என்று நிறுத்தியவன் , அதைப் பற்றி பேச விரும்பாது ,
” ….அப்புறம் ஒரு விஷயம் நீங்க வந்ததிலிருந்து … உங்கள கவனிச்சிட்டே தான் இருக்கேன். ராதிகா கிட்ட ஏதோ தயக்கத்தோடயே பேசுற போல இருக்கு. உங்களுக்கு அந்த தயக்கம் வேண்டாம் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” எனவும் ,
அரவிந்த் க்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சிவா எழுந்து வந்து அரவிந்த் கையைப் பற்றிக் கொண்டான்.
“அரவிந்த் “
“மச்சான் .. முறை சொல்லியே என்னைக் கூப்பிடுங்க … உறவுகள் இழந்து தனிமைலயே இருந்த எங்களுக்கு உங்களால தான் ராதிகா எனக்குக் கிடைச்சா.. அதனால தங்கச்சி கணவர எப்படிக் கூப்பிடனுமோ அப்படியே கூப்பிடுங்க … உறவுபெயர் சொல்லும் போது அது நம்ம நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கும்”
அவனது பேச்சில் மேலும் நெகிழ்ந்த சிவா” மாப்ள … ராதிகாவுக்கு என் மேல வருத்தம் இருக்கலாமோனு ஒரு எண்ணம். உங்கள தப்பாச் சொல்லல… இருந்தாலும் கூடப் பிறந்தவனா இருந்திருந்தா இப்படி இருந்து இருப்பானா அப்படிங்கிற நினைப்பு ராதிகாவுக்கு இருக்கும் இல்லையா ….” என்று மிக வருத்தத்தோடு சொன்ன சிவாவின் கையில் அழுத்தம் கொடுத்த அரவிந்த் ,
அரவிந்த்தின் அன்பான பேச்சினால் சமாதனமடைந்த சிவா அதன் பிறகு தான் நிம்மதியடைந்தான். அவனை அழைத்துக் கொண்டு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் கடைக்குச் சென்றவன், கண்ணில் பட்ட அத்தனைப் பொருட்களையும் வாங்கி குவித்தான். சிவா போதும் என்ற போதும் விடவில்லை.
“மச்சான் , நான் உங்க தங்கச்சியப் பார்க்கும் போதெல்லாம் அவ உதடுகள் சிரிக்கும் , ஆனால் கண்கள் சிரிச்சுப் பார்த்ததில்ல … ஆனா உங்கப் பசங்களப் பார்த்ததும் அவ கண்களும் சேர்ந்து சிரிச்சதப் பார்க்கனுமே வாவ்… ” என்று கண்கள் மின்ன சொன்னவனை முன்புறம் சொடுக்கிட்டு இயல்புக்கு அழைத்த சிவா , புன்னகையோடு …
“மாப்ள எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் இப்ப நீங்க நின்ன ஸ்டைல்ல காணமப் போய்டுச்சு.. போதும் வாங்க கிளம்பலாம் .. ” என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.
வீட்டு காம்பவுண்டிற்குள் கார் நுழைய இருக்கையில் ரமேஷிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவும் , காரை போர்டிகோவில் நிறுத்தி ரமேஷின் அழைப்பை ஏற்றுக் கொண்டே , “மச்சான் நீங்க உள்ள போங்க , நான் பேசிட்டு வாறேன்” என்றவன் , அங்கு தோட்ட வேலை செய்யும் பழனியை அழைத்து , “பழனியண்ணா” என்று கை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற பழனியின் பின்னேயே சென்ற அரவிந்த் , “சாரி மாப்ள , சொல்லு வந்துட்டியா”
“நான் வர்றது இருக்கட்டும் , யாருடா அது , என்னைத் தவிர உனக்கு புதுசா முளைச்ச மச்சான் “
ரமேஷ் கேட்ட தொனியில் முறுவல் உண்டாக , அவனிடம் சிறிது விளையாடிப் பார்க்க எண்ணிய அரவிந்த் .. “என்ன மாப்ள இப்படி சொல்ற தங்கச்சி மாப்ளய மச்சான்னு சொல்றது தப்பா”
சிறிது நேரம் மவுனமாக இருந்தவன் “இல் .. லயே.. நீ தாராளமா கூப்பிடலாம் … ” என்றுத் திக்கித் திணறியவன் ….”மச்சான் காலையில தான் மாப்ள பார்க்கனும் சொன்ன அதுக்குள்ள பார்த்திட்டியா”
கேட்ட அரவிந்துக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை ,முயன்று கட்டுப்படுத்தியவன் …”ஆமாடா … பாப்பாவுக்கு பொருத்தமா நல்ல வளர்த்தியா .. அப்படியே நம்ம.. நம்ம.. பாகுபலி பிரபாஸ் போலவே செம ஹான்சம் டா.. அப்புறம் ..”
“பாப்பாவாம் பாப்பா .. பாப்பாவுக்கு எதுக்கு கல்யாணமாம் … அப்படியே தொட்டில்ல போட்டு ஆட்ட வேண்டியதுதான… “புலம்பிக் கொண்டே காரை நிறுத்தியவன் , எரிச்சல் மிக வீட்டு வாசல் படியேறினான்.
அவன் உள்ளே சென்ற போது வீடே திருவிழா கண்டது போல் இருந்தது. வீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்க , அனன்யா சிவாவின் மகனை சிறிய காரில் அமர வைத்து அவனுக்கு அதை ஓட்டக் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். ராதிகா குட்டி பொம்மை போன்ற சிவாவின் பெண்குழந்தையை மடியில் வைத்து பொம்மைகள் காட்டி விளையாடிக் கொண்டே ராணியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
சிவாவும் அரவிந்தும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். எப்பொழுதும் வீடு வந்தால் அமைதியாக ஆளரவமே இல்லாது இருக்கும் இடம் இன்று இப்படி கலகலவென்று இருந்தது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
உள்ளே வந்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்த அரவிந்த் , “மாப்ள இங்க வந்து உட்காரு” என்று அழைத்து அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்துக் கொண்டான்.
“அடப்பாவி மச்சான் , மச்சான்னு சீனியரத்தான் சொன்னியா … என்னை டென்ஷன் ஆக்கி விட்டுட்ட..” என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே பொம்மைக் காரை ஓட்டி வந்த சிவாவின் மகன் ரமேஷின் கால் மீது இடிக்க ,
“ஷ் ” என்று ரமேஷ் சத்தம் தரவும் , பார்த்துக் கொண்டு இருந்த சிவா” செல்லக்குட்டி சித்திக் கூட அந்தப் பக்கம் போய் கார் ஓட்டுங்க … பாருங்க சித்தப்பா கால் ல அடிப் பட்டுருச்சு” என்றான்.
கால் சிறிது வலி தந்தாலும் சிவா சொல்லிக் கொடுத்த சித்தப்பா சித்தி என்ற உறவு முறையில் நெகிழ்ந்தவன் ,
“என்னங்கண்ணா நீங்க , குழந்தை தானே .. நீங்க சித்தப்பாக்கூட வாங்க … நாம அந்தப்பக்கம் போய் கார் ஓட்டலாம்” என்று எழுந்தவன் குழந்தையை அழைத்துக் கொண்டு விளையாட சென்றான்.
இரவு குழந்தைகள் சாப்பிடும் நேரம் நெருங்கியதால் அவர்களுக்கு ஒரு கிண்ணத்தில் உணவு எடுத்து வந்த ராணி அவர்களுக்கு ஊட்ட முற்பட , குழந்தைகளோ விளையாட்டு மும்முரத்தில் உணவை வாங்க மறுத்தனர்.
இதைக் கவனித்த ராதிகா “அண்ணி தாங்க நான் குழந்தைகளுக்கு ஊட்டுறேன்” என்றவள் ,சின்னவளை இடுப்பில் வைத்துக் கொண்டு , பெரியவனிடம் சென்றவள் ” அனு .. நான் பாப்பாவக் கூட்டிட்டு மாடி ல இருக்கிற தோட்டத்துல வச்சு சாப்பிடக் கொடுக்கப் போறேன் … நீயும் வர்றீயா ” எனவும், பெரியவனும் “அத்தை அத்தை நானு நானு” என்று ஓடி வந்தான்.
அனன்யாக் கைப்பிடித்த குழந்தைக்கோ காரை விடவும் மனதில்லை , அதைப் பார்த்துக் கொண்டே மாடியேறப் போனக் குழந்தையிடம் “நீங்க மேல போங்க , சித்தப்பா காரை அங்க எடுத்துட்டு வாறேன்” எனவும் குதூகலமான குழந்தை அனன்யாவுடன் மேலே சென்றான்.
அதுவரை சிவாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாலும் பார்வை தன் மனையாளின் மீது தான் இருந்தது அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் .. என்ன முயன்றும் அங்கு இருக்க முடியவில்லை , எப்படி அவளிருக்கும் இடம் செல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் ‘அஞ்சு’ என்ற அழைப்பு அரவிந்த்க்கு அமுத கானமாய் ஒலித்தது.
தாயம்மாவுடன் வந்த அம்மாவிடம் ” ம்மா அவ அண்ணன் பசங்கள மாடியில சாப்பிட கூப்பிட்டுப் போயிருக்கா , நான் போய் கூப்பிட்டு வரவா” என்றவாறு எழுந்து வந்தான்.
” என்ன மாடியில கூப்பிட்டுப் போய் சாப்பிடக் கொடுக்கிறாளா. எங்கண்ணன் அஞ்சுக்கும் பழக்கி விட்டுட்டாரா … தாயம்மா சாப்பாட மாடிக்கு எடுத்துட்டு வர சொல்லுங்க, “சிவாவைப் பார்த்தவர் , “நீங்க எல்லோரும் மாடிக்கு வாங்க … அங்க சாப்பிடலாம் .” என்றவர் பழைய பழக்கத்தில் வேகமாக மாடியேறப் போக , படியில் கால் எடுத்து வைக்கவும் “ஆ… தாயம்மா கால் வலிக்குது” என்றார்.
அவர் வேகமாக படியருகில் செல்லவு மே அருகில் வந்திருந்த அரவிந்த் “ம்மா வாங்க அந்தப் பக்கம் லிப்ட் வச்சு இருக்கேன் பாருங்க அதுல போகலாம் ” என்றவன் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு லிப்டினுள் சென்றான்.
அருக்குட்டிக்கு சாப்பாடு ஊட்டணும் மாடிக்கு போகனும் என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டதால் அவன் வீட்டினுள் லிப்ட் வசதியை செய்து வைத்து இருந்தான். மேலே போய் விட்டு அவர்களை காணாது நிறைய நாட்கள் கடந்து போன நாட்களை நினைவுக்கு கொண்டு வரவும் உடல் நிலை சரியில்லாது போயிற்று எனவே அதிகம் அழைத்துச் செல்லவில்லை.
ஆனால் மருத்துவரின் ஆலோசனைப் படி அவர் தற்போது என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்ய அனுமதிக்க சொல்லியிருந்ததால் அவனும் அழைத்துச் சென்றான்.
குழந்தைகளை பொம்மை காரில் வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்த அனன்யாவும் ரமேஷும் , லிப்ட் திறந்து இவர்கள் வெளியே வரவும் அதிசயத்து நின்றனர்.
ஆம் அதிசயத்து தான் நின்றனர். ஜானகி மாடிக்கு போகலாம் என்று சொல்லும் போதெல்லாம் தவிர்த்து விடுவான் அரவிந்த் இன்று அவனே அழைத்து வரவும் அப்படி நின்றனர்.
மேலே வந்தவர் ராதிகாவிடம் சென்றுப் பேசிக் கொண்டு இருந்தார். அதற்குள் சிவா வீட்டினரும் மேலே வந்து இருக்க .. மேலே போடப்பட்டு இருந்த புல்வெளி தோட்டத்தில் இருந்த மேசை மீது உணவுகள் அனைத்தும் கொண்டு வந்து வைக்கப்பட்டு அனைவரும் சாப்பிட தயாராக இருந்தது.