அறையினுள் வந்து படுக்கப் போன ரமேஷ் தன் மொபைல் ஒலிக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தான் .. அது ஒரு முக்கியமான வெளிநாட்டு அழைப்பு .. சரியாக கேட்கவில்லை என்றதும் , அறையின் பால்கனியில் நின்றும் சரியாக கேட்கவில்லை என்றதும் பேசிக் கொண்டே மொட்டை மாடி படியேறினான். அவன் முதலிலேயே அறைக்கு வந்ததால் அரவிந்தும் ராதிகாவும் அங்கே போனதை அறியவில்லை.
பேசிக் கொண்டே கதவை தள்ளியவன் கண்களில் பட்டது ராதிகாவை அரவிந்த் அணைத்துக் கொண்டு இருந்த காட்சி தான்.
முகத்தில் புன்னகைப் பூத்தாலும் .. உடனே கதவை மூடிவிட்டு படியில் இறங்கப் போனவன் மேல் , அங்கு ஏறிவந்துக் கொண்டு இருந்த அனன்யா மோதி நிலைத் தடுமாறி விழப்போனாள்.
அனிச்சையாக விழுந்து விடுவோம் என்று நினைத்த இருவருமே ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தனர். ஒருவர் கையெடுத்தாலும் இருவரும் கீழே விழ வேண்டியிருக்கும். எனவே அனன்யாவும் கையெடுக்கவில்லை , ரமேஷும் கையெடுக்கவில்லை.
அனன்யாவை மெல்லப் பிடித்துக் கொண்டே நகர்ந்து ஏணிப்ப்டி கம்பியைப் பிடித்துக் கொண்டவன் நிலைக்கு வந்தாலும் மென்மையான பெண்ணின் தேகம் கையெடுக்க விடவில்லை.
நன்றாக நின்ற பின்புதான் , தான் நிற்கும் நிலை உணர்ந்த அனன்யா , அவன் கையை எடுக்க முயன்றாள்.
ரமேஷிற்கோ அனன்யாவின் அருகாமையா … இல்லை மாடியில் தற்போது கண்ட காட்சியா எதுவென்று தெரியாவில்லை .. ஆனால் ஏதோ ஒரு மயக்கம் கொடுத்தது இந்த நெருக்கம்.
அவன் கையெடுக்காமல் கண்களை மூடி இருந்த நிலையைக் கண்ட அனன்யாவுக்கும் ஏதோ போலத் தோன்ற … மெல்ல அவன் கையை விலக்கிக் கொண்டே “அத்.. , அத் .. அத்தான் ” எனத் திக்கி கொண்டே அழைக்கவும் … கண்களைத் திறந்தவன் இருக்கும் நிலை உணர்ந்து பட்டென்று “சாரி” என்று சொல்லி கைகளை எடுத்தான்.
அவள் ஒன்றும் பேசாது தலை குனிந்துக் கொண்டே மேலே ஏற முற்படவும் .. அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் ” இப்ப ஏன் அங்கப் போற ” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“இது என்னடா அதிசயமா இருக்கு … எப்ப பாரு புலி மாதிரி உறுமிட்டு .. இப்ப பூனை மாதிரி மியாவ் .. மியாவ்ங்குது” என்று நினைத்துக் கொண்டே.. “அது அத்…” என்று சத்தமாகப் பேசப் போனவளை , ” ஷ்” என்று உதட்டின் மேல் விரல் வைத்து சைகை செய்தவன் , பிடித்த கையை விடாது கீழே அழைத்து வந்தான்.
அவனது பிடி இரும்பு பிடியாக இருக்க , அவனிடமிருந்து கையை விடுவித்து மறுகை கொண்டு தேய்த்துக் கொண்டே… “ஷ்.. ஆ… இப்படியா கைப் பிடிப்பீங்க … எப்படி ஆகிருச்சுப் பாருங்க” என்று சிறு குழந்தைப் போல் தேய்த்துக் கொண்டே பேசியவளிடம் ,
“இப்ப உனக்கு அங்க என்ன வேலை “
” ராதி .. ம் அண்ணியக் கூப்பிடப் போறேன். கீழே அம்மா ‘அஞ்சு ‘ ..” ‘அஞ்சு ‘ னு அவங்களை தேடுறாங்களாம் ,தாயம்மா சமாளிக்க முடியாம என்னைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க … அதான் போறேன்” என்று திரும்பப் போனவளை ,
“லூசு , லூசு ஆளுதான் வளர்ந்துருக்க… மூளை வளரவே இல்ல … இன்னைக்குத் தான் கல்யாணம் ஆகிருக்கு .. கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்னு நினைக்க மாட்டாங்களா “
தலையில் கை வைத்து , நாக்கைக் கடித்துக் கொண்டவள் “அட.. ஆமா… சரிதான்…” என்று திரும்பப் போனவள் ,
“அதுக்கு என்னைய லூசுனு சொல்வீங்களா … ஆமா நான் பார்க்கும் போது நீங்க அங்க இருந்து தான் வந்துட்டு இருந்தீங்க.. அப்ப நீங்க … “
“அதுனாலதான் சொன்னேன் இப்ப அங்க போகதனு… ” என்று எங்கோப் பார்த்துக் கொண்டு செல்லவும் … அவளுக்கும் புரிந்து முகம் சிவந்து ஓடி விட்டாள்.
அவளின் சிவந்த முகம் ரமேஷ்க்கு ஒரு வித இதமான மனநிலையைத் தர அவனும் அறைக்குள் சென்று விட்டான்.
இவ்வளவு நேரம் மனதில் பாரமாக இருந்த ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தவள் அழுது ஓய்ந்து தேம்பிக் கொண்டே இருந்தவள் , உடலில் இறுக்கத்தை உணரவும் திடுக்கிட்டு விடுபட முயன்றாள்.
உடனே விடுவிக்காது மெதுவாக கையை தளர்த்தியவனிடம் இருந்து விடுபட்டு செல்ல முயன்றவளின் வதனத்தை இரு கரம் கொண்டு தாங்கி அவனைப் பார்க்க வைத்தவன்.
“இப்ப நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அது உனக்கு தப்பா தான் தெரியும். எப்ப என் மேல நம்பிக்கை வருதோ .. அப்போ நான் ஏன் இப்படி பன்னினேன்னு மட்டுமில்லாம என் காதலயும் புரிஞ்சுக்குவங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. இப்ப ஒன்னு மட்டும் சொல்றேன் … நான் உனக்குப் போட்டுவிட்ட தாலி எங்கம்மா சொன்னது போல அவங்க பார்த்து பார்த்து செய்தது இல்ல …ஏன்னா அவங்க பையன் ஏழு வயசு அருக்குட்டி தான் அவங்க மனசில நிக்கிறான்…. நான் இல்ல”
அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் கண்கள் கலங்கியதோ என்பது போல தோற்றம் தான்.. அவள் அதைப் புரியும் முன்னேயே அந்தக் கண்கள் சிரிக்க ” எனக்குத் தான் அந்த பாக்கியம் இல்ல.. ஆனா உனக்கு அப்படி இல்ல ..இந்த தாலி அன்னைக்கு ரமேஷ் உன்னை ஹாஸ்பிடல்ல விட வந்தப்போ நீ வீசி எறிஞ்ச உங்கம்மா தாலி போல.. அதைக் கொடுத்துட்டு உன்னை சிவா கிட்ட பொண்ணு கேட்கலாம்னு தான் வந்தேன். ஆனா அங்க ஒரு அம்மா உன்னைய வேற யாருக்கோ கல்யாணம் பன்னிகொடுக்கிறத பத்திப் பேசிக்கிறதக் கேட்டதும் … சாரிடா ….. உன்னைய யாருக்கும் விட்டுத் தர நான் தயார் இல்ல….அப்புறம் ….” தன் பெருவிரல்கள் கொண்டு அவள் கன்னத்தை வருடிக் கொண்டே ….
“ஐ கான்ட்… ஐ கான்ட்….” என்று சொல்லிக் கொண்டு இருந்தவன்… தன்னை மயக்கிக் கொண்டு இருக்கும் மாய விழிகளுக்கு அழுத்தமாக இரு முத்தங்களை கொடுத்தவன் …. கைகளையும் உதட்டினையும் பட்டென்று விலக்கி , “வா போகலாம்” என்று ஏணிப்படி அருகே சென்றான்.
அவளோ சிலையென நின்றுக் கொண்டு இருந்தாள். ஆணின் ஸ்பரிசம் புதிது ….அதுவும் இந்த இதழொற்றல்…….முத்தம் வாங்கிய கண்கள் திறந்து தான் இருந்தன. ஆனால் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் மறுபடியும் இரு விழிகளிலும் இதழொற்றப்பட திகைத்து இயல்புக்கு வந்தவளின் மிக அருகில் அவன் முகம் இருக்கவும்” என்ன பன்றீங்க நீங்க ” என்று குரலே எழும்பாமல் கேட்டாள்.
“ம் … ரிலீஸ் பன்னேன். நான் போலாம் சொல்லி அஞ்சு நிமிஷம் இருக்கும் ..நீ அசையவே இல்ல … சரி லாக் பன்ன மாதிரியே ரிலீஸ் பன்னுவோம்னு பன்னினேன்.”
“ஆ… ன் ” என்று திரும்பவும் கண்களை விரித்தவளிடம் , புன்னகைத்துக் கொண்டே , “மறுபடியும் ரிலீஸ் பன்னனுமோ” என்று நெருங்கவும் ,
கன்னங்களில் சிவப்பேற அவனைச் சுற்றிக் கொண்டு ஓடி விட்டாள். மூச்சிரைக்க கீழே ஓடி வந்தவள் அறைக்குள் நுழைந்து கதவடைத்து விட்டு அதன் மேலேயே சாய்ந்து மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தாள்.மேனியில் நடுக்கம் குறையாமல் இதயம் படபடவென துடித்து அவளுக்கே கேட்கும் போல் இருந்தது.
குழந்தையில் அவள் பேச ஆரம்பிக்கவும் அம்மாவின் அப்பாவை தாத்தா , தாய்மாமனை மாமா என்று அழைக்கத்தான் பழக்கியிருந்தனர். அவளது மூன்று வயதில் தாத்தாவை இழந்ததும் அவர்களது உறவினரும் ராதிகாவின் அம்மாவிற்கு தோழியுமான அவளது அத்தையை மாமன் மணமுடித்ததும் அத்தை என்றே கூப்பிடப் பழகியவளுக்கு , பள்ளி செல்ல ஆரம்பித்ததும் மற்ற தோழியர் போல் தனக்கும் அப்பா அம்மா என்ற உறவு வேண்டும் போல் தோணவும் தன் மாமா அத்தையிடம் கேட்டாள். முதலில் புரியாமல் இருந்தவளுக்கு வயது ஏற ஏற அக்கம் பக்கத்தினர் பேச்சு புரிய ஆரம்பித்தது.
அவள் தெரிந்து கொண்ட விஷயம் , தன் அம்மா யாரையோ காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணமும் செய்து ஏமாற்றபட்டு இருக்கிறார்… என்பதே … அன்றிலிருந்து தன் தாய் மாமனைத் தவிர எந்த ஆண்களையும் அவள் நம்பியதும் இல்லை … அதிகம் பேசியதும் இல்லை.
விடுமுறை நாட்களில் திருப்பூரில் உள்ள சிவா வீட்டிற்கு வரும் போது அழகிய பெரிய கண்களோடு பொம்மையாய் வலம் வரும் ராதிகாவை சிவா வீட்டில் எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும். பெண் பிள்ளை இல்லாத வீட்டில் குட்டி தங்கையை சிவா அதிகம் தூக்கிக் கொண்டு இருப்பான். அதனால் அவனோடு சகஜமாக பேசுவாள்.
இப்படிச் சூழ்நிலையில் இருந்தவளுக்கு புதிதான ஆணின் தொடுகையும் , நெருக்கமான பேச்சும் ஏதோ செய்யவே இந்தப் பதற்றம்.
ஏதோ காதில் சத்தம் கேட்கவும் தான் கண்களை திறந்துப் பார்க்க , அனன்யா இடுப்பில் ஒரு கையும் , மறு கையால் அவள் காதருகில் சொடுக்கிட்டும் கொண்டு இருந்தாள்.
ராதிகா கண் திறக்கவும் சொடுக்கிட்ட கையால்” என்ன?” என்பது போல் சைகை செய்ய, திகைத்து விழித்த ராதிகாவும் , “என்ன ” என்றுக் கேட்டாள்.
உதட்டை பிதுக்கி , ” சரியா போச்சு ….அண்ணி உன் காதுல இவ்வளவு நேரம் நான் பேசுனது விழலயா”
“ம் .. ஆன் .. விழுந்து … சாரி … கேட்கல அனு என்ன சொன்ன … ” என்று பாவம் போல் கேட்கவும் ,
“ம் உன் பக்கத்துல பல்லி நிக்குது சொன்னேன் ” என்று சொன்னது தான் தாமதம் , ” பல்லியா” என்று கத்திக் கொண்டே அவள் புறம் வந்து நின்றாள்.
அவள் பயந்து ஓடி வந்து அவளைப் பிடித்துக் கொண்டு நின்ற விதத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்ட அனன்யா” எங்கண்ணனுக்கு மட்டும் நீ பல்லிக்கு பயப்படுறவனு தெரிஞ்சது அவ்வளவுதான ” … என்று சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தாள்.