அரவிந்த் அருகில் வந்தவன்” எல்லோரும் வந்துட்டுருக்காங்கமா… வாங்க நீங்க உட்காருங்க என்று கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.

“அப்படியா , எப்ப வருவாங்க” என்றபடி ராதிகாவின் அருகில் வந்தவர் , “அஞ்சு … இந்த தாலி பிடிச்சிருக்கா …. நாந்தான் இதை நம்ம குடும்ப ஆசாரிட்ட குடுத்து செஞ்சேன் … என்ன இதை உன் கழுத்துலப் போடும் போது நானும் கூட இருக்கனும் நினைச்சேன் …முடியாமப் போச்சு”என்றவர், வெளியே கிடந்த தாலியை எடுத்து அவள் ஆடைக்குள் போட்டவர் , ” இப்படி தான் போட்டுக்கனும் சரியா , அண்ணன் சொல்லிட்டே இருந்தாங்க … அஞ்சு ரொம்ப சின்னப் பொண்ணு நீ தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கனும்னு … நான் உனக்கு எல்லாம் சொல்லித்தாறேன்” என்ற வர் ,தாயம்மாவிடம் திரும்பி ,

“தாயம்மா நீங்க தந்த மாத்திரைக்கு ரொம்ப தூக்கம் வருது .. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.அருக்குட்டி போன் பன்னா சொல்லுங்க” என்றவர் படுத்து விட்டார்.

“ம்மா நீங்க தூங்குங்க , நாங்களும் போய் தூங்குறோம்” என்றவன் அனைவரிடமும் கண் ஜாடைக்காட்டி வெளியே வர சைகை செய்தான்.

வெளியே வந்த அனன்யா”அண்ணா அம்மாவப் பாருங்களேன் .. நம்மக்கிட்டக் கூட இவ்வளவு பேசினது இல்ல … ஆனா ஆனா ” என்றவள் அழுது கொண்டே ராதிகாவிடம் வந்து ,

“அண்ணி அம்மா உன்கிட்ட எவ்வளவு பேசுனாங்க , இத்தனை வருஷத்துல அவங்க இவ்வளவு பேசி இன்னைக்குத் தான் கேட்கிறேன்..”

அரவிந்தும் அதே நிலையில் தான் இருந்தான் , அருகே வந்த ரமேஷ் , “மச்சான் எதுனாலும் அப்புறம் யோசிக்கலாம் , முதல்ல போய் ரெப்ரஷ் ஆகிட்டு சாப்பிடலாம்.. வா…” என்றவன் அவனை அழைத்துச் சென்றான்.

அரவிந்த் அனன்யாவிடம் திரும்பி” அனுமா அண்ணிய உன் ரூம்க்கு கூட்டிட்டுப் போய் ரெப்ரஷ் ஆகிட்டு சாப்பிடக் கூட்டிட்டு வா” என்றவன் ராதிகாவைப் பார்க்க, அவள் வேறு எங்கோப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் பார்த்த திசையில்  அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த அதே புகைப்படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருக்கவும் , அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அனன்யா அவளைக் கைப் பிடித்து அழைத்துச் சென்று யார் யார் என்பதை தெரிவித்தாள் .ரமேஷிற்கும் தன்னைப்போல் பெற்றவர்கள் இல்லை என்றதும் அவன் மீது  ஓர் இரக்கம் சுரந்தது. எல்லாம் சொல்லி முடித்த அனன்யா ,

“எங்கம்மாவுக்கு இந்த இழப்புகள ஏத்துக்க முடியல. அவங்க மனம் அன்னைக்கு எல்லாரும் எங்க மாமா விரும்பி கல்யாணம் பன்னிக்கிட்ட பொண்ண கூப்பிடப் போயிருக்காங்க அப்படிங்கிறதோட நின்னுடுச்சி…… சொன்னா சொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் , வாங்க ரூமுக்குப் போகலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

இத்தனை நேரம் ஏதோ சிந்தனையில் இருந்ததால் அரண்மனைப் போன்ற அந்த வீட்டின் அழகை கவனிக்காமல் இருந்தாள். இப்பொழுது அனன்யா அழைத்து வந்ததும் கவனித்த அந்த அறையின் அழகு அவளை மிகவும் கவர்ந்தது.

அந்த இடத்திற்கு தான் அணிந்திருக்கும் ஆடையும் பொருந்தாது , தான் கொண்டு வந்திருக்கும் ஆடையும் பொருந்தாது என்று நினைத்தவள் , விரக்தியாக புன்னகைத்துக் கொண்டே “நானே பொருந்த மாட்டேன். இதுல ட்ரஸ் பொருந்தலனு பெரிய கவலை தான் எனக்கு “

இரவில் அணிந்து கொள்ள இலகுவான சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டவள் , குளித்து முடித்து வெளியே வந்தாள் .அவளுக்காகவே காத்திருந்த அனன்யா அவளை சாப்பிட அழைத்துச் சென்றாள்.

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ரமேஷும் அரவிந்த்யும் ஏதோப் பேசிக் கொண்டு இருக்க, அரவிந்தின் அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு அடுத்தாற்போல் அனன்யா அமர்ந்து கொண்டாள்.

” என்ன சாப்பிடுறீங்க அண்ணி “

அனன்யா கேட்டதும் அரவிந்தின் புறம் பார்வையைத் திருப்பினாள். சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு ராதிகா தன்னைப் பார்த்ததும் அந்தக் கண்களின் வீச்சில் மயங்கியவனுக்கு புரையேற ஆரம்பித்தது. இயல்பாக அருகிலிருந்த தண்ணீரை அவன் புறம் நகட்டிவிட்டு “உங்கண்ணா என்ன சொல்றாரோ அதான்” என்றாள்.

அனைவருமே ஆச்சரியமாக பார்க்க , எல்லோரும் தங்களைப் பார்ப்பது உணர்ந்து , “உனக்கு என்ன பிடிக்குதோ சாப்பிடு”

” அனு அவர் என்ன சாப்பிடுறாரோ அதையே எனக்கும் தா” என்றாள்.

“அடடா… கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட முடியல …. அதுக்குள்ள இப்படியா..” என்ற அனன்யாவின் பேச்சிற்கு , ராதிகாவிற்கு இட்லி வைத்துக் கொண்டே , “புருஷன் கையால தாலி வாங்கின அடுத்த நிமிஷமே  பொண்ணுங்க அப்படித்தான் கண்ணு” என்று தாயம்மா பதிலளித்தார்.

“அது என்ன கல்யாணம் ஆனா நமக்கு பிடிச்சத சாப்பிட கூடாதா.. நானெல்லாம் அப்படி இருக்க மாட்டேன் பா”

 கேட்டுக் கொண்டு இருந்த ரமேஷ் ” இது தெரிஞ்ச விஷயம் தானே அணுகுண்டு … ” என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.

சாப்பிட்டுவிட்டு வந்த ரமேஷ் அரவிந்த்திடம் “மச்சான் நீ கல்யாண வாழ்க்கைய எப்ப ஆரம்பிக்கப் போறனு  தெரியாது. ஆனால் வந்ததிலிருந்து தங்கச்சிமுகம் சரியே இல்ல.எதுவானாலும் பேசிக்கோ, ஆல் த பெஸ்ட் … நான் காலையிலயே கிளம்பி திருப்பூர் போறேன் .இந்த வாரம் முழுதும் நான் அங்கப் பார்த்துக்கிறேன். நீ இங்கப் பாரு.. குட் நைட்” என்று சென்று விட்டான்.

தாயம்மாவிடம் திரும்பியவன் “தாயம்மா … ராதிகா கிட்ட கொஞ்சம் பேசணும், நீங்க அனுரூம்ல அவளுக்கு படுக்க எல்லா ஏற்பாடும் பன்னுங்க” என்று சொல்லவும் ,

“கண்ணு என்ன சொல்றீங்க”

“கொஞ்ச நாள் ஆகட்டும் தாயம்மா , முதல்ல எல்லாருக்கும் எங்க கல்யாணத்த அறிவிக்க ஒரு வரவேற்பு ஏற்பாடு பன்னுவோம் .. அப்புறம் மற்றது பேசிக்கலாம். ” என்று அறிவித்தவன் ராதிகாவிடம் “வா” என்பதாக தலையசைத்தான்.

அவன் பின்னாலயே சென்றுக் கொண்டு இருந்தவள் எங்கு செல்கிறான் என்று கவனிக்கவில்லை. அவன் சென்று நின்ற இடம் அந்த வீட்டின் மொட்டை மாடி. அவன் அந்தக் கதவை அடைக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தவள் .. அந்த அழகான மாடித் தோட்டத்தைக் கண்டு வியப்படைந்தாள். மலை பிரதேசத்தில் புற்களோடும் , பூக்களோடும் வளர்ந்தவளுக்கு இங்கும் அதே உணர்வு வர … அங்கு வளர்ந்திருந்த செடிக் கொடிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.

“அங்க உட்கார்ந்து பேசலாமா” என்ற அவனின் குரல் காதுக்கருகில் கேட்கவும், பட்டென்று திரும்பியவள் அவன் மீது மோதி தடுமாறினாள்.

தடுமாறியவளை ஒரு கைகொண்டு பற்றியவன், “நான் தான் ஏன் இவ்வளவு பதற்றம்” என்றவன் , அப்படியே பிடித்துக் கொண்டே அங்கிருந்த  மூங்கில் நாற்காலியில் அமர வைத்தான்.

அவன் என்ன செய்வான் தான் விரும்பிய பெண் இன்று தன் உரிமையுள்ள மனைவியாக அருகில் நிற்கவும ஆசையில் நெருங்கி அருகில் சென்று விட்டான். அவள் இப்படி பதட்டமடைவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அமர்ந்தவள் அவனிடமிருந்து கையை மெல்ல விடுவித்துக் கொண்டு தரையைப் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே “சாரி” என்றான். தரையிலிருந்து பார்வை மீட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனைக் கவர்ந்தக் கண்கள் …. அவனால் அந்தக் கண்களை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை. “மயக்குதே  ரதி … “எண்ணிக் கொண்டு இருக்கையில் …அவள் பார்வையை தாழ்த்தவும் இயல்புக்கு வந்தவன் ,

” நீ என் கூட வந்ததிலிருந்து ஒரு வார்த்தைக்கூடப் பேசல… முதல்ல இப்படி திடீர்னு கல்யாணம் பன்னதுல அதிர்ச்சில இருக்கிற அதனால பேசாம இருக்கனு நினைச்சேன். இப்ப நீ கீழ சாப்பிடும் போது ‘நான் சொல்றத சாப்பிடுறேன்னு ‘சொன்னப்போ தான் .. நீ என் மேல கோபத்துல இருக்கனு புரிஞ்சது….அப்படித்தானே” என்றதும் பட்டென்று எழுந்தவளை திரும்பவும் கைப்பிடித்து அமர வைத்தான்.

“ப்ளீஸ்டா நான் சொல்றத கேட்டுட்டுப் போ” என்றவன் பிடித்த கையை விடாமலே பேச ஆரம்பித்தான்.

“அன்னைக்கு லிப்ட்ல என் கூட வந்தப்பவே ஏதோ ஒரு ஈர்ப்பு உன் மேல வந்துருச்சு. அப்புறம் உன் பேச்சு ..இப்படி ஒவ்வொன்னா என்னை ஈர்த்தாலும் … இந்தக் கண்கள் …” என்றவன் மிக நெருங்கி அமர்ந்து அவள் கண்களை உற்றுப் பார்த்தான்.

அவனது பார்வை ஏதோ செய்ய மறுபடியும் கீழே பார்த்தவளிடம் , ” இப்படி உன்னைப் பார்க்கிற நேரமெல்லாம் ஏதோ என்னை உன்கிட்ட இழுத்துட்டே இருந்துச்சு. யோசிச்சதுல நான் உன்னை விரும்புறேன்கிறது புரிஞ்சது. அதுவும் இந்த ஃபாரின் டிரிப் போனப்போ , எப்படா உன்னைப் பார்ப்போம்னு ஆகிருச்சு.

சரி வந்ததும் உன் கிட்ட என் மனச சொல்லலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள என்ன என்னமோ ஆகிருச்சு”

திரும்ப அவனைப் பார்த்தவள்” நீங்க சொல்ல வேண்டியத எல்லாம் சொல்லிட்டிங்களா , அப்போ நான் கீழ போகட்டுமா”

அவளைப் பார்த்தவன் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்கேன் இவப் போறேங்கிறா ” என்று நினைத்தவன்.

“அப்போ கோபம் போகலயா , நான் தான் சாரி கேட்டுட்டுட்டேனே”

“நான் ஒன்னு கேட்டா பதில் சொல்வீங்களா”

“கண்டிப்பா … என்ன கேட்கனுமோ  கேளு .. நான் பதில் சொல்றேன்”

” அனுவுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்து இது போல யாராவது அவள கேட்காமலயே தாலிய கழுத்துல போட்டு விட்டா நீங்க என்ன செய்வீங்க”

அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்.

“ம் …சொல்லுங்க, என்ன செய்வீங்க….

அவன உயிரோட விட்டுருக்க மாட்டீங்க… குறைஞ்சபட்சம் அவன் கையாவது இல்லாம போயிருக்கும் … ஆனா எனக்கு யாருமில்லயே… நீங்க நல்லவனாவே இருக்கலாம் … ஆனா யாருமே எனக்காக உங்ககிட்ட வந்து … ஏன் இப்படி பன்னுனீங்கனு கேட்கலயே “கண்ணில் பொல பொலவென நீர் கொட்ட அரவிந்திடம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் அழுவது தாளாமல் அருகே செல்ல முயல … அவள் பின்னடைந்தாள். சிவாண்ணாவும் அண்ணியும் நல்லவங்க தான் இல்லைனு சொல்லலைங்க … ஆனா அவங்க கூடப்பொறந்தவளா இருந்தா இப்படி விட்டுருப்பாங்களா அப்படிங்கிற எண்ணம் தாங்க வந்துச்சு.

அட்லீஸ்ட் என்னை விரும்புறதா சொல்ற நீங்களாவது (தாலியை தூக்கிக் காட்டியவள் ) இதை என் கழுத்துல போடுறதுக்கு முன்ன , சம்மதமானு ஒரு வார்த்தைக் கேட்டு இருக்கலாம் … இல்லீங்களே … இது தான் காதலுங்களா .. என் மனச நேசிச்சிருந்தா என் மனசு உங்களுக்குப் புரிஞ்சுருக்குங்களே….ஒரு வேளை என் உட… “மேலே பேசாதே என கண்களால் இறைஞ்சிக் கொண்டே அவள் வாயை  அவனது கைக்கொண்டு மூடியிருந்தான் .

அவன் கையை தன் கரங்கள் கொண்டு அகற்றியவள் அழுது கொண்டே ,

“நீங்க மட்டுமில்ல … யாரும் என்னை உயிருள்ள மனுஷியா பார்க்கலீங்களே… ,எனக்கு இது வேண்டாம்னு தூக்கி போட முடியும் தான் … ஆனா நான் செய்ற காரியம் என்னை வளர்த்த எங்க மாமா அத்தைய அசிங்கப்படுத்திடக் கூடாது..

” மொத்தத்துல எனக்கு உங்க மேல பெரிசா கோபம் இல்லைங்க … என் மேல .. என்னைப் பெத்தவங்க மேல தாங்க கோபம் இருக்கு. அவங்களால தான இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை ” என்று கண்ணீரை அடக்கியவள் “நான் கீழ போறேனுங்க என்று அழுது கொண்டே செல்ல முற்பட்டவளை,

இறுக்கமாக நெஞ்சோடு அணைத்திருந்தான். இடக்கை இடுப்பைச் சுற்றி இருக்க , அவனது வலக்கை அவளது தலையை தன் நெஞ்சோடு அழுத்திப் பிடித்திருந்தது.

” என்னை மன்னிச்சிருடா . ப்ளீஸ் …சாரிடா … நான் செய்தது தப்புதான். அழாத டா ப்ளீஸ்… ப்ளீஸ்… ட்ரஸ்ட் மீ … ஐ லவ் யூ டா … ஐ லவ் யூ ….”

 உன் மேல் காதல் காதல் என்று துடித்துக் கொண்டு இருந்த அவன் இதயத்தின் ஓசையை எப்படியாவது அவள் உணர்ந்து கொள்ள மாட்டாளா என்பது போல் இருந்தது அவன் அணைப்பு .

         புரிய வைத்து விடுவானா…