அரவிந்தின் பேச்சிலயே அவன் ராதிகாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்றுப் புரிந்து விட ரமேஷ் ,
“மச்சான் என்னடா இப்படி சொல்ற , ஒருவேளை அழகான பொண்ணைப் பார்த்ததும் வர்ற ஈர்ப்பா இருக்கப் போகுது.”
“ம்ச் … போடா அதெல்லாம் உனக்கும் காதல் வந்தா தான் புரியும். அது எப்படி சொல்றது …..ம்… ஆன்… , ‘காதலுக்கு மரியாதை’படத்துல விஜய் சொல்வாரே .. முன்ஜென்ம விட்ட குறை தொட்ட குறை.. அப்படி தான் போல … அவ கண்கள் என்னை ரொம்ப ஈர்க்குது டா… அவ பேச்சு ..”
“அடடடடா….”
“சரியா அடுத்த லைன்”
” என்ன அடுத்த லைன்…”
“ம் நீ சினிமா டையலாக் , சினிமா பாட்டா சொல்ற “
“ஓ அப்படியா … அப்ப சினிமா பாடல் வரிலாம் நிஜம் தான் போல டா… “
” யப்பா … இப்படி உன்னைய உளற வச்ச காதல் எனக்கு வரவே வேண்டாம் சாமி …. நீ வேணும்னா காதல்ல விழு , உருளு, புரளு … எனக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் வராது என்னைய விட்டுரு சொல்லிட்டேன். …. பாவம் அம்மா அப்பா இல்லாதப் பொண்ணு , நீ நல்லபடியா பார்த்துக்கிட்டா சரிதான்.”
அங்கு இன்னும் விடியாத நேரத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டே ரமேஷிடம் பேசிக் கொண்டு இருந்தவன், ரமேஷின் அப்பா அம்மா இல்லாதப் பெண் என்ற வார்த்தையில் பட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான்.
“மச்சான் என்னடா சொல்றா , நம்ம சீனியர் சிவா சிஸ்டர்னு சொன்ன, அவங்கப்பாவக் கூட நான் அன்னைக்கு நைட் பார்த்து பேசினேனே”
“சீனியர் கஸின் சிஸ்டர்டா… என்னைப் போல அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லடா , அதுதான் எனக்குத் தெரியும் “
“இங்கப் பார் அவளுக்கு அண்ணன் நீ இருக்க, கல்யாணம் பன்னப் பிறகு புருஷன் நான் இருக்கேன் , உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.”
ரமேஷின் மனநிலையை மாற்றும் பொருட்டு,
” சரி இப்ப உன் தங்கச்சி திருப்பூர் தான போறா”
” அப்படி தான் போல டா , பஸ் ஸ்டாப்ல நிக்கிற மாதிரி தெரியுது”
“ஓகே இப்போ இருந்து அவள நான் கல்யாணம் பன்னி மனைவியாக்குற வரை அவளைப் பார்த்துக்க வேண்டியது அண்ணன் உன் பொறுப்பு ..இப்போ நான் சொல்றது செய்வியா”
“சரிங்க மச்சான் சொல்லுங்க மச்சான் ” என்று புன்னகைத்துக் கொண்டே சொல்லவும் ,
“இப்ப நீ திருப்பூர் ஆபிஸ்ல முக்கியமான ஃபைல் எல்லாம் சைன் பண்ண வேண்டி இருக்கு …”
“என்னது … டேய் எல்லாமே பக்காவா முடிச்சுட்டு தான் டா இங்க வந்தேன்.. “
“ஏன்டா அவசரப்படுற, நான் சொன்னத அப்படியே அனுகிட்ட சொல்லு , உன் பிரண்ட் அங்க தான போகணும் , நீயும் கூட வந்தா அவளையும் கூட்டிட்டுப் போறேன் சொல்லு”
“இரு இரு … பிளான்லாம் சூப்பரா தான் போடுற , ஆனா வரும் போது அங்க இருந்து ‘அணுகுண்டு ‘ கூட எப்படி தனியா வர்றது.”
“அது தான தள்ளி நின்னுப் பேசுறோம், சரி மச்சான் என் தங்கச்சிய பத்திரமா கொண்டு போய் திருப்பூர் ல விட்டுருவேன் , நான் பத்திரமா திரும்பி கோவை வர்றது உன் தங்கச்சி கைல தான் இருக்கு சொல்லி வை”
என்றவன் சில விஷயங்கள் பேசிவிட்டு காரை நோக்கி வந்தான்.
அங்கு அனன்யா காரில் ஏறி அமர்ந்து இருந்தாள். காரினுள் அமர்ந்தவன் , சாலையைப் பார்த்துக் கொண்டே “எனக்கு திருப்பூர் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு , நீயும் வரதா இருந்தா ராதிகாவையும் கூட்டிட்டுப் போகலாம் , இல்லனா பரவால்ல , உன்னை வீட்ல விட்டுட்டு நான் கிளம்பிடுவேன்”
முதலில் ரமேஷ் பேச ஆரம்பித்ததும் அவன் தன்னிடம் தான் பேசுகிறானா , இல்லை வேறு யாரிடமும் பேசுகிறானா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்பதை உறுதி படுத்திக் கொண்டவள் , நன்கு திரும்பி அமர்ந்து ரமேஷைப் பார்த்தாள்.
அவன் சொல்லி முடிக்கவும் பதில் ஒன்றும் அனன்யாவிடம் இருந்து வரவில்லை என்றதும் , அவன் அவள் புறம் திரும்ப ,அனன்யாவின் பார்வையில் என்னக் கண்டானோ மறுபடியும் சாலையில் பார்வையைப் பதித்தான்.
ரமேஷ் அவர்களது அத்தை பையன் .ஒரு விபத்தில் குடும்பத்தில் பாதி பேர் இல்லாமல் போக , எஞ்சியவர்கள் அரவிந்த், அவனது அம்மா , ரமேஷ் , அரவிந்த் அம்மா வயிற்றில் அப்பொழுதுதான் உதித்து இருந்த அனன்யா மட்டுமே. இவர்களை காக்கும் பொறுப்பு ,அரவிந்தின் தாய் வழி தாத்தா கோபாலகிருஷ்ணனின் வசம் வந்தது.
ஏற்கனவே வியாபரத்தில் நட்டம் ஏற்பட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட தன் அண்ணன் மகன் பாலகிருஷ்ணனையும் தன் முதல் மகனாகவே, அவரது பிள்ளைகள் ராமகிருஷ்ணன் , இளைய மகள் ஜானகியோடு வளர்த்தார்.
திருமண வயது வந்ததும் தன் தூரத்து உறவில் இருந்த தங்கையின் பிள்ளைகள் சத்தியநாராயணனையும் , பத்மாவதியையும் , தன் வீட்டிற்கு மருமகன் , மருமகளாக ஆக்கிக் கொண்டார்.
அரவிந்த்யும் ரமேஷும் அறிந்து கொண்ட விஷயம் என்னவெனில் அது அரவிந்தின் தாய் மாமனும் , ரமேஷின் சித்தப்பாவுமான ராம கிருஷ்ணனுக்கு பெண் பார்க்கச் சென்ற போது விபத்தில் அனைவரையும் இழந்தது தான்.
அனன்யா வயிற்றில் உருவான நேரம் என்பதால் ஜானகியையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு கோபாலகிருஷ்ணன் இருந்து விட்டார்.
அரவிந்த் தந்தையை மட்டும் இழந்ததால் அந்த வயதில் தாயை பிடித்துக்கொண்டே இருப்பான்.
ஆனால் ரமேஷ் இருவரையும் இழந்து தன் ஆசை சித்தப்பாவையும் இழந்து ஒரு வித இறுக்கமான மனநிலையிலயே இருப்பான்.
அவனிடம் அதிகம் பேசும் ஒரே நபர் அரவிந்த் மட்டுமே… அவனால் தான் ஓரளவிற்கு தெளிந்தான். அனன்யா பிறந்ததும் ‘பாப்பா பாப்பா’ என்று சுற்றி வருவான்.
ஓர் நாள் அவர் தாத்தா அரவிந்தையும் ரமேஷையும் விடுதியில் இருந்து வரவழைத்து ,அனன்யா பெரியவளாகி விட்டதைக் கூறி ரமேஷை அத்தனை முறைகளையும் செய்ய வைத்தார்.
அன்றிலிருந்து அனன்யாவிடம் ஓர் ஒதுக்கத்தையே காண்பித்தான். அவள் ‘அத்தான் ‘என்று அழைத்து பேச வந்தாலும் முகத்தை ‘உர்’றென்று வைத்துக் கொள்வான்.
ஆனால் அனன்யாவோ அதைக் கண்டுகொள்ளாமல் அவனிடம் வழியச் சென்று பேசுவாள். அது இன்று வரைத் தொடர்கிறது .அப்படிப்பட்டவன் ஓர் பெண்ணிடம் மென்மையாகப் பேசுவது தான் அவளுக்கு ஆச்சரியத்தை தந்தது.
அனன்யா ராதிகாவிடம் போகச் சொல்லி பேசிமுடித்ததுமே காரை எடுத்துக் கொண்டு ராதிகா முன்பு போய் நிறுத்தினான். அனன்யா இறங்கிச் சென்று விவரம் தெரிவிக்கவும் முதலில் மறுத்தவள் , அனன்யாவின் வற்புறுத்தலாலும் ரமேஷ் கேட்டுக் கொண்டதாலும், காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். அனன்யாவும் அவளருகே அமர்ந்து கொள்ள காரை திருப்பூரை நோக்கிச் செலுத்தினான் ரமேஷ்.
அனன்யா யாரிடமும் உடனே பேசி விடும் குணம் என்பதால் , ராதிகாவிடமும் அவள் படித்த பள்ளி ஊர் என்று கதையளந்து கொண்டு வந்தாள். ரமேஷ் அமைதியாக அவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தான்.
அப்படி அவன் அறிந்து கொண்டது , அவள் கொடைக்கானல் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்றதும், தன் தாய்மாமா வீட்டில் வளர்ந்தவள் என்பதும்.
திருப்பூர் வந்ததும் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கு இறங்கி கொள்வதாக சொன்னாள்.
சரியாக அவன் மருத்துவமனை வாசலில் வண்டியை நிற்பாட்டவும் அரவிந்தின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
எல்லோரும் கீழே இறங்கவும் ராதிகாவிடம் “நீங்க உள்ள போங்க நான் இதோ வந்துடுறேன்” என்றவன் அவர்களை உள்ளே அனுப்பி விட்டு அரவிந்தின் அழைப்பை எடுத்தான்.
“மச்சான் அது எப்படிடா , கரெக்டா வந்து இறங்கினதும் போன் போடுற “
“அது..… நீ சொல்வியே பிஸ்னஸ்ல இப்படி ஜெயிச்சு அடுத்து அடுத்துனு போறியே அத தவிர உன் எண்ணத்துல வேற ஒன்னுமில்லயானு … இப்போ அப்படியே உல்டானு வச்சுக்கோயேன் … ராதிகாவ தவிர இப்ப என்னோட எண்ணங்கள் வேற எங்கயும் போக மாட்டிக்குது … அதான் நீங்க ரீச் ஆகிற டைம்க்கு சரியா போன் போட்டுட்டேன்.”
“அடப்பாவி பிஸ்னஸ கோட்ட விட்டுறாத டா”
“அது தான் நீ இருக்கியே .. அப்புறம் நான் ஏன் கவலைப்படனும்…. சரி சரி எனக்கு இப்ப அவ குரல கேட்கனும் போல இருக்கு… அதனால நீ போனை கட் பன்னாமலயே பாக்கெட்ல போட்டுட்டு போய் அவகிட்ட பேச்சுக் கொடுக்கிற.. ஒரு ரெண்டு நிமிஷம் பேச்சுக் கொடுத்துட்டு அப்புறம் கிளம்புறீங்க ஓகே… பாக்கெட் ல போட்டுக்கோ மச்சான் “
காதில் ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டே..
“என்னை இப்படி ஆக்கிட்டியேடா ” என்றவாறு போனை சட்டைப் பாக்கெட்டில் போட்டவாறு உள்ளே சென்றான் ரமேஷ்.
ராதிகா வரவும் அவளது பெரியப்பா வெளியே கடைக்குச் சென்றிருந்தார். ரமேஷ் ,சிவா எண்ணிற்கு விவரம் கேட்டு விட்டு , மறுபடி அரவிந்த் க்கு அழைப்பு விடுத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டே அந்த அறையைத் தட்டி விட்டு திறக்கவும் இவன் காலடியில் ஓர் கனமான தங்கச் சங்கிலி வந்து விழவும் சரியாக இருந்தது.
ரமேஷ் அதிர்ச்சியுடன் குனிந்து அதை எடுத்துப் பார்க்கும் போதே ராதிகா படுத்திருந்த அவள் அத்தையின் கைப்பிடித்து முகம் கவிழ்ந்து அழுது கொண்டு இருந்தாள்.
திகைத்துப் பார்த்துக் கொண்டு இருந்த அனன்யாவும் சுதாரித்து ராதிகாவின் தோள் தொட்டு ஆறுதலாக நின்று கொண்டாள்.
“உங்களுக்கு ஒன்னும் ஆகாது , நான் ஒன்னும் ஆக விட மாட்டேன். எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம். கடைசி வரை உங்க கூட வே இருந்துருவேன்… காதலாம் காதல். கன்றாவி காதல் … ச்சை….காதல் கல்யாணம் அப்படிங்கிற பேர்ல என்னைய வயித்துல கொடுத்துட்டு எவனோ போய்ட்டான். இப்ப இப்படி அத்தனை அசிங்கப் பேச்சையும் கேட்டுட்டு இருக்கிறது யாரு … நான் தானே… இப்படி என்னை ‘அப்பன் பேர் தெரியாத வங்கிற ‘ பேர் வாங்கிக் கொடுத்த அவங்க பொருள் எதுவுமே எனக்கு வேண்டாம்…” என்று அழுது கொண்டு இருந்தாள்.