Advertisement

“உனக்கு என்ன தான் தெரியுது. வந்ததிலிருந்து அமைதியா கொடுக்கிற வேலைய செய்ற.., பத்தாததுக்கு டப்பா நிறைய ஏதோ வயசானவங்க சாப்பிடுற மாதிரி டெய்லி மாத்திரை போடுற, எதுக்கு இவ்வளவுனு கேட்டா , தெரியல மதர் போடச் சொன்னாங்க சொல்ற … கிளிப்பிள்ளை போல இருக்க தெரியுமா .. எதையாவது யோசிச்சுட்டே இருக்க.. என்னனு கேட்டா தெரியல ஏதோ மண்டைக்குள்ள செய்யுதுங்கிற .சரி  கொஞ்சமாவது வெளி உலகம் பார்த்தா  உனக்கு நல்லதுனுதான் உன்னைய துணைக்கு கூட்டிட்டு வந்தேன்.. இங்க வந்தா இந்த குரங்கு இப்படிப் பார்க்குது.”

“அம்மு …. விடு நானே டென்ஷனாகல , நீ ஏன் இப்படியாகிற “

அதன் பிறகு தோழிகள் இருவரும் சென்று விட்டனர். யோசனையோடே வெளியே வந்த சக்திவேல் , “அண்ணி படிக்க அமெரிக்கா போயிருக்கிறதா சொன்னாங்க.. இங்க அவங்களப் போலவே ‘குப்பம்மாவா’. ஒரு வேளை எனக்கு அப்படித் தோணுதோ “அதற்கு மேல் சிந்திக்காமல் தன் வேலையைப் பார்க்க போய் விட்டான்.

கோவையில் வீட்டில் காரில் ஏறவிடாமல் தந்தையைக் கட்டிக் கொண்ட குட்டி அரவிந்திடம் ,

       “அப்பா வரும் போது நிறைய சாக்லேட்ஸ் எடுத்துட்டு வருவேனாம் , நீங்க பாட்டிக்கு அத்தைக்கு தொல்லைத் தராம ஆதிக்கூட விளையாடுவீங்களாம்” இப்படி மகனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் அரவிந்த்.

ஒரு வயது குழந்தைக்கு என்ன புரியும் , தகப்பன் எங்கோ தன்னை விட்டு கிளம்புகிறான் என்பதை மட்டும் புரிந்துக் கொண்ட குழந்தை அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘ இறங்க மாட்டேன் ‘ என்று அடம் பிடித்தது.

அரவிந்துக்கும் மனதே இல்லை, ரமேஷைப் பார்த்தவன் , “டேய் மாப்ள நீ மட்டும் போயேன் … இப்படி அழற பிள்ளைய எப்படி டா விட்டு வர்றது “

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கையில் அனன்யா முன்னே வந்து மருமகனைத் தூக்கிக் கொண்டு , ” வாங்க நாம மாடிக்கு போய் பட்டர்பிளை பார்க்கலாம்” எனவும் யோசித்த குழந்தை அத்தையிடம் தாவியது.

விருப்பமேயின்றி நண்பனோடு உதகைக்கு பயணமானான் அரவிந்த்.

தான் நேரடியாக போகத் தேவையில்லைதான் , ஆனாலும் ஓர் ஆவலில் அந்தப் பள்ளி உணவக மேற்பார்வையாளரைப் பார்க்கச் சென்றான் சக்திவேல். அவரைப் பார்த்துப் பேசிவிட்டு  அவர்கள் கேன்டீன்களை பார்வையிடுவதாகக் கூறவும் அவரும் அழைத்துச் சென்றார்.

சக்திவேல் வருவதை தூரத்திலேயே பார்த்து விட்ட அமுதா , ” இந்தக் குரங்கு இங்க எதுக்கு வருது” என்று யோசித்துக் கொண்டிருக்கைலையே, அருகில் வந்தவன் இவளைப் பார்த்து விட்டு ” குப்பம்மாவப் பார்கணும் , ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு போயிடுறேன்.” என்றான்.

“இதோ அனுப்புறேன் சார். நீங்க வெளிய அந்த தோட்டத்து டேபிள்ள வெயிட் பண்ணுங்க” எனவும் அவனும் வெளியே சென்று அமர்ந்துக் கொண்டான். அது கொஞ்சம் மறைவாக இருந்தது.

சிறிது நேரத்தில் கையில் துடைப்பத்தோடு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்கு வரவும் , ” இங்கு குப்பம்மாள்கிறது ….”

” என்ற புருஷனே என்னைய முழுப்பேரச் சொல்லி கூப்பிட்டதில்ல … யாருய்யா நீ எம் பேரை முழுசா சொல்ற… “

“ஐயோ உங்கள இல்லீங்க… இன்னொரு குப்பம்மாங்க”

” என்ன இன்னொரு குப்பம்மாவா , எனக்குத் தெரியாம யாரு அது … அமுதாம்மா சொன்னாங்க அங்க ஒரு நெட்ட குரங்கு உன்னை கேட்டுச்சு , அப்புறம் நீ இல்ல வேறனு சொல்லும்.அப்படி சொல்லி இங்க உள்ள பொம்பளபுள்ளைகள நோட்டம் விடுதுனு ..உன்னைய இந்த விளக்குமாத்தாலயே….” என்று நெருங்கவும் ,

“குப்பக்கா  நில்லுங்க … நான் பேசிக்கிறேன் .. நீங்க போய் உள்ளே பெருக்குங்க.” என்று அவரை உள்ளே அனுப்பி வைத்த அமுதா , சக்திவேலைப் பார்த்து ,

“ஏன் சார் , நல்ல வேலைல இருக்கீங்க , பார்க்க டீசன்டாவும் தெரியறீங்க .. ஆனா இப்படி சில்லியா நடந்துக்கறீங்க”

“ஹலோ மேடம் வார்த்தையஅளந்து பேசுங்க. அப்படி சில்லியா என்ன பிகேவ் பண்ணினாங்களாம்” என்றுக் கோபத்தோடு கேட்கவும் ,

சற்று மிரண்டாலும் , “அது … என் ஃபிரண்ட அன்னைக்கு அப்படிப் பார்த்தீங்க, இன்னைக்குத் தேடியே வந்துட்டீங்க … “

“ஏங்க ஒருத்தர எங்கயோ பார்த்தது போல இருக்கு , அது அவங்கதானானு தெரிஞ்சுக்க நினைக்கிறது தப்பாங்க. அவங்க எங்க அண்ணி போலயே இருக்காங்க அதான் கேட்க வந்தேன்… அதுக்குப் போய் ச்ச…” என்று கோபமாக பேசவும் ,

” என்ன அண்ணியா ” என்று திகைத்தவளிடம் ,

“ஆமாம்ங்க … எங்க அண்ணன் மனைவி போலயே இருக்காங்க…. அதைவிட நீங்க வந்தீங்களே அந்த எஸ்டேட், பேக்டரி ஓனரே அவங்க தாங்க … இன்னும் நம்பலயா … இங்க பாருங்க” என அவன் மொபைலை எடுத்து , அவன் கலந்து கொண்ட அவர்களது வரவேற்பு ஃபோட்டோவைக் காட்டினான்.

பார்த்த அமுதா திகைத்துப் போய் நின்று விட்டாள். அவ்வளவு அழகாக , அவள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களே அவளது செழுமையைக் காட்டியது. அதிலும் அவள் கணவனின் கண்ணில் தெரிந்த காதல் , எந்தப் பெண்ணையும் காதல் கொள்ளத் தூண்டும்.

திகைத்து நின்றவள் முன் சொடுக்கிட்டு அழைத்த சக்திவேல் , “கொஞ்சம் பேசலாமா” என அங்கிருந்த இருக்கையைக் காட்டவும் ,

போய் அமர்ந்தவள் எதிரே அமர்ந்தவனிடம் , “சாரி” என்று தலை குனியவும் ,

“பரவால்லங்க .. அடி கொடுக்க விடாமா காப்பாதிட்டீங்க… அது போதும்..”

முகத்தில் முறுவல் மலர” இல்ல ஜெனிஃபர் ரொம்ப அமைதியான பொண்ணு , யாரும் அவள நோகடிச்சுடக்கூடாதுனு தான்…. ஐ… ம் …வெரி சாரி சார்”

” என்ன ஜெனிஃபரா…. அண்ணி பேரு ராதிகா …அப்ப இவங்க அவங்க டிவின்சிஸ்டரா… ஒரே குழப்பமா இருக்கே”

“ஓ அப்படியா … என்னைப் போல யாரும் இல்லாதவனு நினைச்சேன் , ஜெனிக்கு குடும்பம் இருக்கா,  அங்க உங்க ஆஃபிஸ்ல இருந்த ஃபோட்டோ பார்த்து எங்கயோ பார்த்தது போல இருக்குனு சொன்னா , நான் தான் அவங்க வி.ஐ.பி குடும்பம் அதனால தெரிந்திருக்கலாம்னு சொல்லிட்டேன்….ம்…. ,என்ன இங்க இருக்கிறவங்க பல பேருக்கு , (அங்கிருந்த தேவாலயத்தைக் காட்டியவள் ) அது தான் வீடு … கடவுள் தான் உறவு … “விரக்தி புன்னகை சிந்தியவள் , “ஆனா…. எதுக்கும் உங்கண்ணிக்கே போன் பண்ணிக் கேளுங்க “

‘அவள் சொன்ன என்னைப் போல யாரும் இல்லாதவள்’

என்ற வார்த்தையில் அமுதாவையை பார்த்தவன் , அவள் ஃபோன் செய்ய சொல்லவும் ,

“இல்லைங்க அண்ணி இப்ப அமெரிக்கால படிக்கப் போயிருக்கிறதா சொல்லிக்கிட்டாங்க …, அதோட நானும் யாரும் இல்லாதவன் தாங்க … என்னைய படிக்க வச்சு , இங்க வேலையும் போட்டுக் கொடுத்த குடும்பம்ங்க அவங்க குடும்பம் … யாரோ ஒருத்தன் தான் நான்.. என்னையும் உறவு சொல்லி அழைக்க வச்சு , யாருமில்லாதவன்ற நினைப்ப இல்லாம பண்ணிட்டாங்க”

எழுந்து கொண்டே “சரிங்க நான் வரேனுங்க .. அண்ணன் இங்க பிஸ்னஸ் விஷயமா வரார் அப்ப அவருகிட்ட பேசிக்கிறேன்.”

“கண்டிப்பா பேசுங்க சார் … உங்கண்ணியபெரிய கோடீஸ்வரர் வீட்டு பொண்ணுனு சொல்றீங்க… பாவம் இங்க அந்த பொண்ணு சாதரண வேலை செய்துட்டு இருக்கிறா. அவகிட்ட நான் எந்த விவரமும் கேட்டுக்கல, எதுவும் உங்களுக்கு தெரியணும்னா மதர் வெனிஸ்தாவ  பாருங்க சார்”

“ஓகே .. மேம்… அப்புறம் நீங்க இனி யாருமில்லாதவள் அப்படிங்கிற வார்த்தைய சொல்லாதிங்க. உங்களுக்கும் சொந்தம்னு , ஏன் உங்களை மட்டுமே சொந்தம்னு நினைக்கிற யாரும் வரலாம் இல்லையா…வாறேங்க..” என்றவன் சென்று விட்டான்.

அவன் சொல்லி சென்றதில் புன்னகை மலர” வருவாங்க வருவாங்க” என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவள் ஜெனிஃபரிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அவர்களது ஊட்டி விட்டுக்கு வந்த அரவிந்தும் ரமேஷும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

இதே போன்ற அமைப்புதான் அவர்களது கொடைக்கானல் வீடும், எப்பொழுதும் பால்கனியிலயே இருந்து ரசிப்பவளுக்காகவே முழுதும் கண்ணாடிக் கொண்டு ஜன்னல் அமைத்திருந்தான்.

“பாஸ் குளிருது பாஸ்…. போர்வை போத்திக்கப் போறேன்…” என்று சிணுங்கிய மனைவியிடம் , போர்வையாகவே மாறிய நாட்கள் ஞாபகம் வரவும்,

எழுந்தவன்  அறையை விட்டு வெளியே  சென்று விட்டான்.

அமுதா ,இரவில் அறைக்கு வந்த ஜெனிஃபரிடம் சில விவரங்கள் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்றுக் காத்திருக்கையில், அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு அறிவிக்கப்பட்டது என்னவென்றால் , பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆண்கள் பள்ளியில் நடைபெறவிருப்பதால் அங்கு ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் கூடுதல் பொறுப்பாளர்களையும் , உதவியாளர்களையும் அனுப்ப முடிவு செய்து அவர்களது பெயர்கள் வாசிக்கப்பட்டது .அதில் ஆண்கள் பள்ளி உணவக உதவியாளராக ஜெனிஃபரின் பெயரும் இடம் பெற்றது.

அனைவரும் அதனைப் பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டு , அது முடிந்து அறைக்கு வரவே தாமாதமானது .வந்ததும் படுத்துறங்கி விட்டனர். மறுநாள் காலை அமுதா எழுகையில்  ஜெனிஃபர் அங்கு இல்லை.

 ரமேஷும் அரவிந்தும் அவர்களது தொழிற்சாலைகளுக்கு மேற்பார்வையிடச் சென்றனர். சக்திவேல் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்ததால் இவர்களது வேலை சுலபமாக முடிந்தது.

சக்திவேல் அவர்களது தூரத்து உறவினனே. பெற்றோரை இழந்தவனுக்கு அவர்களது அறக்கட்டளை மூலம் படிக்க வைத்து , இதோ உதகை தொழிற்சாலையில் வேலையிலும் வைத்திருக்கிறார்கள்.

சில அரசாங்க அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்காக அவனிடம் சில கோப்புகளை தந்து கோவைக்கு அனுப்பி வைத்தனர். அதனால் அவனுக்கு ஜெனிஃபர் விஷயம் பேச முடியாமல் போனது.

அறையில் போனைப் பார்த்துக் கொண்டிருந்தவனை அழைத்துச் சென்ற ரமேஷ் வரவேற்பறையில் குழுமியிருந்த நண்பர்கள் முன் நிறுத்தினான்.

அனைவரும் அரவிந்தைக் கண்டு ஆர்பரித்துக் கத்திவரவேற்கவும் திகைத்த அரவிந்த் இது ரமேஷின் ஏற்பாடு என்பதைப் புரிந்துக் கொண்டான்.

அவர்களிடம் பேசும் போது தான் இது ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்பு என்பதை அறிந்து அதிலிருந்து வேலையைக் காரணம் காட்டி நழுவப் பார்த்தான்.

அவர்கள் அதற்கு இடம் கொடுக்காததால் அவன் படித்த பள்ளியில் நடைபெறவிருக்கும் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக தெரிவித்தான்.

வாழ்க்கை தொலைந்ததாக நினைத்தவன் வாழ்க்கையை மீட்டெடுக்க , ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளிக்குத் தான் சென்றான்.

          காதல் அழகானது….

Advertisement