Advertisement

அழகு 2

        கண்களை திறக்க முடியாமல் திறந்த ஜெனிஃபர், மருத்துவமனை படுக்கையில் இருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்தமர்ந்தாள். அவளுக்கு துணையிருந்தவர் , ” இப்ப பரவாலயா ஜெனிஃபர். திடீர்னு மயங்கி விழுந்துட்ட , அப்புறம் மதர் வெனிஸ்தா கிட்ட பேசினதுல உன் பாடி கண்டிஷன் தெரிஞ்சு சில இன்ஜக்ஷன் போட்டாங்க… இப்ப நல்லாருக்கா”

“ஓ ,தேங்க்யூ சிஸ்டர் , நான் ஓகே தான் … பார்வதியம்மா எப்படி இருக்காங்க…” என்று படுக்கையிலிருந்து கீழிறங்கினாள்.

“அவங்க நல்லா இருக்காங்க , உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டி போக கேப்(cab) ரெடியா இருக்கு. நீ எழ தான் வெய்டிங்.. “பேசிக்கொண்டே பார்வதியம்மாவைப் பார்க்கப் போனவர்கள் அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று ஊட்டிக்கு கிளம்பினர்.

கோவை மாநகரின் முக்கியப் பகுதி …

           கோவை வீட்டில் பூஜையறையில்  ஜானகி கண்களை மூடி அமர்ந்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் அணியும் சத்தம் தரும் காலணியின் சத்தம் கேட்டு கண்களை திறந்தவர் , தளிர் நடையிட்டு வந்துக் கொண்டிருந்த ஒரு வயது நிரம்பிய தன் வாரிசுகளை அள்ளி அணைத்துக் கொண்டார்.

கையில் பொம்மைகளுடன் வந்தவர்கள் மழலை மொழியில் தங்கள் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பின்னோடு வந்த அனன்யா ,

“ம்மா ரெண்டு பேருக்கும் ஊசி போட்டதுல ஊரையே கூட்டிருச்சுங்க… ” என்றவாறு ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

” தடுப்பூசி கட்டாயம் போட்டாகணும் …சரி பிள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுத்து தூங்க வைமா”

“ம்மா இவர் அவங்கப்பா பாடினதும் தூங்கிட்டார். இவர் தான் மா இன்னும் தூங்கல. நான் போய் தூங்க வச்சுட்டு வாறேன்.” என்றவள் மகனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

சோபாவில் அமர்ந்தவரின் மடியிலிருந்து இறங்கிய பேரன் கையில் பொம்மைகள் தந்து விளையாட விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கையில் , காரை நிறுத்திவிட்டு சோர்வுடன் உள்ளே வந்த அரவிந்த் , தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

அதைப் பார்த்தக் குழந்தையும்” ப்பா, ப்பா ” என்று அவன் மேலேறி படுத்துக் கொண்டான் . மகனை அணைவாகப் பிடித்துக் கொண்ட அரவிந்த் அமைதியாக குழந்தையின் தலையைக் கோதிக் கொடுக்க , தன் குழந்தையின் தலையைக் கோதிக் கொடுத்தார் ஜானகி.

சிறிது நேரம் கழித்து அரவிந்தைப் பார்க்க , நன்கு உறக்கத்தில் இருந்தான் , பேரனைப் பார்க்க , அவனும் தந்தையின் அணைப்பில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான். மகனை உறங்க வைத்து விட்டு வந்த அனன்யா இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு தாயின் அருகில் அமர்ந்து,

“ம்மா கவலைப் படாதிங்க அண்ணன் சந்தோஷம் திரும்ப வந்துரும்.”

“ஏன் கடவுள் இப்படி பண்ணுராரு அனுமா , வாழ்க்கைல நான் கொஞ்ச காலம் கூட சந்தோஷமா இருக்கணும்னு நினைக்க மாட்டிக்கிறாரே … “கண்ணீரை புடவையில் துடைத்துக் கொண்டே, அரவிந்தின் தலைகோதியவர் ,

“எம்புள்ளைய பாரு … தூக்கம் இல்லாம இப்ப என் மடியில தூங்குறான். துணைய இழக்கிறது பெரிய கொடுமை, அது எனக்குத் தான்னு இல்லாம எம்புள்ளைக்கும் இந்த சாபம் வந்துருச்சே … தாயில்லாம இந்தப் பச்சைப் புள்ளை படுற பாடு அந்தக் கடவுளுக்கு கேக்கலயா…. “

“ஷ் .. ம்மா நீங்க அழுது அண்ணன எழுப்பிறாதீங்க… “

அப்பொழுது யாரோடோ போனில் பேசிக் கொண்டே வந்த ரமேஷ் இவர்களைப் பார்த்து விட்டு மனைவியிடம் கண்ணைக் காட்டி அழைத்தவாறே அறைக்குச் சென்றான்.

அறைக்குள் வந்தவள் , “அத்தான் ஏதாவது தெரிஞ்சதா , அண்ணன இப்படிப் பார்க்க முடியல ” என்று கண்ணீரோடு சொன்னவளை மார்போடு அணைத்துக் கொண்டவன்,

“எனக்கு மட்டும் எப்படியிருக்கும் சொல்லு , நீ சொல்லி அழுதிடுற … நான்…. ப்ச்…. இன்னும் ஒரு தகவலும் இல்லடா … அந்த சைட் சிசிடிவி எல்லாமே செக் பண்ணியாச்சு , ஓரளவுக்கு மேல தகவலே இல்ல .. எங்களால முடிஞ்சவரை தேடிட்டேதான் இருக்கும். என்ன ஒரு நம்பிக்கைனா .. எங்கயோ உ… உயிரோடு இருப்பாங்கிறதுதான்.”

அவன் சட்டையிலிருந்த மொபைல் ஒலிக்க , மெல்ல அவனை விட்டு விலகியவள் , “அங்க போய் பேசுங்க , உங்க பையன் இப்பதான் தூங்கினார் “

பால்கனியில் நின்று பேசிவிட்டு வந்தவன், “இவங்க வேற புரிஞ்சிக்காம… “

“என்னாச்சுத்தான் எதுவும் பிரச்சினையா”

” பிரச்சினைனு சொல்ல முடியாது … எங்க ஸ்கூல்மேட்ஸ்… அதான் ஊட்டி கான்வென்ட்ல ஒல்டு ஸ்டூடன்ட்ஸ் மீட் (old students Meet) க்கு எல்லோரும் அடுத்த வாரம் வாறாங்க. ஒரு வாராம எல்லாரும் மாத்தி மாத்தி ஃபோன் போட்டுட்டாங்க வர சொல்லி … இப்ப நம்ம சூழ்நிலைல….அதான் ஒரே யோசனையா இருக்கு”

“ஓ .. கட்டாயம் போய்ட்டு வாங்க , அண்ணன கண்டிப்பா கூட்டிட்டுப் போங்க … ஒரு ரெண்டு நாள் எல்லாரையும் பார்த்துப் பேசினா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.”

“உங்க அண்ணன் ஒத்துக்கணுமே , அதைவிட உன் மருமகன் ஒரு நாள் அவங்கப்பாவ பார்க்கலனாலும் என்ன ஒரு ஆர்ப்பாட்டம்”

“அவர நான் சமாளிச்சுக்குறேன், நீங்க அண்ணன்கிட்ட பேசுங்க…”

” அவனக் கூப்பிட்டா உடனே வருவான்கிற… ம் …. என்ன செய்யலாம் .. ” என்று யோசித்தவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாக மொபைலை ஆன் செய்து , “சக்தி ” என , அந்தப்புறம் இருந்து , “சொல்லுங்க மாமா” என்றான் சக்தி என்கின்ற சக்திவேல்.

“சக்தி , இன்னொரு பழ எஸ்டேட்டும், தேயிலை எஸ்டேட்டும், அவங்க பேக்டரி எல்லாம் விலைக்கு வருது சொன்னல்ல அதுக்கான ஏற்பாடுகளை பண்ணு, அடுத்த வாரம் நாங்க அங்க வர மாதிரி இருக்கும்.”

“ஒகே மாமா … அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிடுறேன்.” என்றவனிடம் மேலும் சில விஷயங்களை பேசிவிட்டு வைத்தான் ரமேஷ்.

அரவிந்த் அறையில் சத்தம் கேட்கவும் , தட்டிவிட்டு உள்ளே சென்ற ரமேஷ் , “மச்சான் அந்த மீட்டிங் கிளம்புறியா.. இரு நானும் ரெடியாகுறேன்”

“நான் மட்டும் போய்ட்டு வாரேன். நீ வீட்ல இரு .. சொல்லுமாப்ள என்ன விஷயம் “

சக்தியிடம் பேசியதைச் சொன்னவன் , “அடுத்த வாரம் ஊட்டிக்கு கிளம்பணும் ,இங்க எல்லா வேலையும் முடிஞ்சளவுக்கு பார்த்துரு.”

“ஏன்டா , நீயே போய் எல்லாம் பார். நான் எங்கயும் வரல .பிஸ்னஸ் ..பிஸ்னஸ்னு ஓடி என்ன சாதிச்சேன். என் வாழ்க்கைய தொலைச்சதுதான் மிச்சம்.”

“மச்சான் … தங்கச்சி வந்துருவாடா… தமிழ்நாட்டில மட்டுமில்லடா … இந்தியா முழுசும் தேட ஏற்பாடு பண்ணிருக்கேன். சீக்கிரம் தகவல் வந்துரும் நீ நம்பிக்கையோட இரு … இந்த ஒருதடவை எனக்காக ஊட்டிக்கு வா … அப்புறம் நீ எங்கயும் வரவேண்டாம். வெளியூர் போற வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். “

எப்படியோ அவனைப் பேசி சம்மதிக்க வைத்து விட்டுத்தான் மறுவேலைப் பார்த்தான் ரமேஷ்.

         ஊட்டியின் பிரபலமான தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகம், அமுதாவும் ஜெனிஃபரும் ஒரு வேலையாக அங்கு வந்திருந்தனர்.அத் தொழிற்சாலை அலுவலகத்தில் இருவரும் அந்நிறுவன மேலதிகாரியை சந்திப்பதற்காக காத்திருந்தனர்.

அவ் வரவேற்பறையை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஜெனிஃபர் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

” என்ன ஜெனி… ஃபோட்டோஸ இப்படி வச்சக் கண்ணுவாங்காம பார்க்கிற “

“இல்ல இந்த ஃபோட்டோஸ்லாம் நான் ஏற்கனவே பார்த்த நியாபகம்”

” இவங்க ரொம்ப பிரபலமான கம்பெனிக்காரங்க ஜெனி , இந்த பிஸ்னஸ்னு இல்ல இவங்க கால் பதிக்காத துறையே இல்லனு சொல்லலாம். இந்தியால மட்டுமில்ல உலகம் முழுசும் பிஸ்னஸ் நடக்குது. நீ கொச்சின்லக் கூடப் பார்திருக்கலாம்.”

அதற்குள் இவர்களுக்கு அழைப்பு வர, உள்ளே நுழையவும் , அங்கிருந்த இளைஞன் இவர்களைக் கண்டதும் பட்டென்று எழுந்து நின்றான். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் , அவனிடம் தாங்கள் வந்தக் காரணத்தைச் சொன்னார்கள்.

பள்ளி விடுதி உணவகத்தில் முக்கியப் பொறுப்பாளராகவும் இருக்கும் அமுதா , இந்த தொழிற்சாலையில் இருந்து  தேயிலை , காஃபி, சாஸ், ஜாம் போன்றவற்றை நேரடியாகப் பெறுவதால் அதன் விலைமாற்றம் குறித்துப் பேச வந்திருந்தாள்.அமுதாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை ஜெனிஃபரிடமே இருக்கவும் தோழிகள் இருவருக்கும் சங்கடமாக இருந்தது.

பேசி முடித்து வெளியே கிளம்பும்போது , ” மேம் ஒரு நிமிஷம் ” என்றான்.

” என்ன என்பதாக இருவரும் பார்க்கவும்”

“இல்ல மேம் , நீங்க அமுதவள்ளி ஜூனியர் செஃப் கம் மேனேஜர் , இவங்க பேர் என்னனு சொல்லலியே “

ஜெனிஃபர் “என் பேர் எதுக்கு இவங்களுக்கு ” என்று யோசிக்கைலையே,

“அவங்க பெயர் குப்பம்மாள் சார் , எங்க கேன்டீன்ல ஹெல்ப்பரா இருக்காங்க “

” என்ன குப்பம்மாளா “

“ஆமா சார் , நாங்க வாறோம் என்றவள் ஜெனிஃபர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

” என்ன அம்மு இப்படி சொல்லிட்டு வர்ற “

” பின்ன அவனுக்கு உண்மையான பேரையா சொல்ல முடியும் .. ஆளு பாக்க நல்லா இருந்தா நாம மயங்கிடுவோம்னு நினைப்பு , போனதுலருந்து உன்னைய உத்து உத்துப் பார்க்கிறான் .. நானும் கவனிச்சிட்டுதானே இருந்தேன். இங்க பிஸ்னஸ் பேசிட்டு உன்னையவே பார்த்துட்டு இருக்கிறான்.”

“எனக்கு அப்படித் தெரியலயே அம்மு “

Advertisement