வேதனையுடன் அந்த வார்த்தைகளை கேட்டவர் ” அப்படிச் சொல்லாத மா , நீ கல்யாணம் பன்னி குழந்தை குட்டி னு குடும்பமா வாழ்றத நான் பார்க்கனும்”

“ஷ் … அத்தை .. இந்தப் பேச்சு இனிப் பேச வேண்டாம். அப்புறம் .. இங்க உங்களப் பார்த்துக்கநிறையப் பேர் இருக்கோம் … அதனால நான் நாளையிலருந்து தைரியமா வேலைக்குப் போய்ட்டு வருவேன்.. ” என்று பேச்சைமாற்றிக் கொண்டு போய் விட்டாள்.

அவளது மனக்காயங்களை நன்கு அறிந்தவர் ஆதலால் லட்சுமியும் அதன் பிறகு வேறு ஒன்றும் பேசவில்லை.

     கிருஷ்ணா இன்டஸ்ட்ரீஸ் வாசலில் காரைச் செலுத்திய சிவா , அந்த மிகப் பெரிய வளாக காவலாளியிடம் தன் நண்பனின் கார்டைக் காட்டினான். அவன் அந்நிறுவனத்தின் ஜி.எம் என்பதால் , அவர்களை உடனே உள்ளே அனுப்பினார்.

பார்ப்பதற்கு ஓர் கண்ணியத் தோற்றத்தை தரும் ஒர் வான் நீல நிறத்தில் வெள்ளைப் பூக்கள் போட்ட சுடிதார் அணிந்து , தன் நீண்டக் கூந்தலை ஒற்றைப் பின்னல் இட்டு , கையில் தன் படிப்புச் சான்றிதழ்களுடன் இறங்கி அந்த மிகப் பெரிய அலுவலகத்தை அண்ணாந்து பார்த்தாள்.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் இருந்தது அந்த அலுவலகம் .இவள் வருவதாக இருந்தால் அந்தக் கம்பெனி பேருந்து திருப்பூரில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதாக இருக்கும்.

உள்ளே வரவேற்பு அறைக்குச் சென்று ஜி.எம்.ரமேஷைப் பார்க்க வேண்டும் என்றதும் அவர்களை காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே தகவல் தந்தாள் அந்தப் பெண் வரவேற்பாளர்.

சிவாவிற்கு ஏதோ போன் வரவும் அவளை அமர வைத்து விட்டு வெளியே பேச சென்றான். சோபாவில் அமர்ந்து அந்த அலுவலகத்தை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள் ராதிகா . பிரமாண்டம் என்றால் பிரமாண்டம், அப்படி ஒரு பணச் செழுமையை அந்த வரவேற்பறையில் மட்டும் கண்டாள்.

ஆளுயரப் புகைப்படங்கள் வரிசையாக மாட்டப்பட்டு மாலைகள் போடப்பட்டு இருந்தன. அதனைப் பார்த்தவள், அதில் போடப்பட்டு இருந்த ஆண்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அதில் இருந்த ஒரு பெரியவர் மட்டும் சமீபத்தில் தவறி இருப்பார் போல , மற்ற அனைவரும் இள வயதிலயே மண்ணை விட்டுச் சென்றிருந்தனர்.

” இவ்வளவு சின்ன வயசுலயா..” என்று யோசித்தவள் ” ம் எங்கம்மாவுக்கு மட்டும் சாகற வயசா , இருபது வயசுல என்னைப் பெத்துட்டு அடுத்த நிமிஷமே உலகத்த விட்டுப் போய்ட்டாங்க..” விரக்திப் புன்னகை புரிந்தவள் அந்த நினைவை ஒதுக்கிவிட்டு திரும்ப அங்கிருந்த அலங்காரப் பொருட்களில் பார்வையை பதித்தாள்.

     ராதிகா இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் எழுந்து “குட் மார்னிங் சார்” என்று எழுந்து மாறி மாறி சொல்லவும் இவளும்  தானாகவே எழுந்து திரும்பிப் பார்த்தாள். இவள் பார்க்கும் போது தெரிந்தது தனிப்பட்ட லிப்ட் அருகே சென்றுக் கொண்டு இருந்த ஓர் நெடிய உருவத்தின் பின்புறம் தான். அவன் பின்னோடு சென்ற இரு ஊழியர்களும் லிப்டினுள் அவனுடன் நுழைந்துக் கொண்டனர்.

எல்லோரும் ஆசுவாசமாக அமரவும் அவளும் அமர்ந்தாள். சிவாவும் பேசி முடித்துவிட்டு உள்ளே வந்துக் கொண்டு இருந்தான்.

“என்னம்மா பெரிய ஆபிஸா இருக்குனு பார்கறியா, என் காலேஜ் ஜுனியர் தான் எம்.டி. ,அவன் கஸின் தான் ஜி.எம். , நாங்க எல்லாம் அப்ப காலேஜ் பேஸ்கட் பால் டீம்ல இருந்தோம் .அப்படி தான் பிரண்ட்ஸ் ஆனோம் ., இங்க நீ பயப்படாம வேலைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு இங்க எல்லாமே பெர்பெக்ட் “

“அண்ணா , அப்ப நீங்க ஏன் இங்க வொர்க் பன்னல … உங்க கம்பெனியும் இதே போல தானே”

சிரித்துக் கொண்டே “பிரண்ட்ஸா மட்டும் இருந்தா போதும்னு நினைச்சேன் அதான்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்தான் ரமேஷ்.

வந்தவன் “சீனியர் ” என்றுக் கை கொடுத்துக் கொண்டே, “நீங்க வந்தா நேரா வர சொல்லி இருக்கேன் .. நான் இல்லனா என் ரூம்ல வெயிட் பன்னுங்க ” என்றவன் அந்த வரவேற்பாளரிடம் ஏதோ சொல்லிவிட்டு அவர்களை அழைத்துச் சென்றான்.

ஏழு தளங்கள் கொண்ட அந்தக் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் லிப்ட்டில் சென்று இறங்கியவர்கள் , ரமேஷ் கிருஷ்ணா என்ற பெயர்ப் பலகைப் போடப்பட்டு இருந்த அறையினுள் அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்று அவர்களை அமரச் சொல்லிவிட்டு அவர்களுக்கு பழச்சாறு ஆர்டர் செய்தவன் அவர்களிடம் திரும்பி” அப்புறம் சீனியர் , இப்பதான் ஜூனியர் ஞாபகம் வந்துச்சா , கல்யாணத்துக்கு இன்வைட் பன்னதோட சரி , அதற்கப்புறம் பார்க்கவே முடியல. ஏதோ வாட்சப், பேஸ்புக் ‘பேஸ்கட் பால்’ குரூப் போட்டதால கொஞ்சமாச்சும் டச் ல இருக்கோம்னு நினைக்கிறேன்”

” உண்மை தான் ரமேஷ் , கல்யாணம் குழந்தைகள்னு ஆனதும் லைப் ஸ்டைலே மாறிப்போச்சு “

“இப்பவாது என் நியாபகம் வந்துச்சே , சரி சொல்லுங்க , இவங்கதான் உங்க சிஸ்டரா, உங்கள தான் இந்த கம்பெனில பிடிச்சுப் போட முடியல, உங்க சிஸ்டர் சேவையாது எங்களுக்கு கிடைக்கட்டும் ” என்றவன் ராதிகாவைப் பார்த்து ” சிஸ்டர் உங்க நேம் சொல்லுங்க ப்ளீஸ்”

” ராதிகா சார்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிவாவிற்கு போன் வரவும் , அனுமதிக் கேட்டு வெளியே சென்றான். சிறிது நேரத்தில் உள்ளே வந்தவன்” சாரி ரமேஷ் ஆபிஸ்ல ஒரு முக்கியமான கால் பேசனும், அதற்கான டீடெய்ல்ஸ் கீழே என் லாப்டாப்ல இருக்கு …ப்ளீஸ் ராதிகா கிட்ட பேசிட்டு அனுப்பி வை … நான் கீழவெய்ட் பன்றேன்” என்று அனுமதி வாங்கிச் சென்று விட்டான்.

” ராதிகா உங்க ரெசியூம். பார்த்தேன். கோர்ஸ் சர்டிபிகேட் வச்சு இப்ப சேர்ந்துக்கோங்க, டிகிரி சர்டிபிகேட் வந்ததும் மற்ற பார்மாலிடிஸ் பார்த்துக்கலாம்.” என்றவன் அவளுக்குத் தேவையான தகவல்களைத் தந்து கீழே வரவேற்பில் இருக்கும் பெண்ணிடம் அப்பாய்ன்ட்மென்ட் கடிதம் பெற்றுக் கொள்ளும் படிக் கூறினான்.

“ஒரு விஷயம் கேட்கலாமா.. சிஸ்டர்” என்று தயங்கிக் கொண்டே கேட்டான்.

“இல்ல எல்லாத்திலயும் கார்டியன் பெயர் தான் இருக்கு.. அப்பா அம்மா ..” என்று அவன் சங்கடப்படவும் ..,

“எனக்கு அப்பா அம்மா கிடையாது. எங்க மாமா அத்தை தான் வளர்த்தாங்க , சிவாண்ணா என்னோட கஸின் பிரதர் தான் “

“ஓ சாரி சாரி சிஸ்டர்”

“பரவால்ல சார்” என்றவள் , அறையை விட்டு வெளியே வந்தாள். அந்த தளத்தில் யாருமே இருப்பது போல் தெரியவில்லை. லிப்ட் அருகே சென்றவள் யாரும் இருக்கிறார்களா என்றுப் பார்த்தாள். இரண்டு லிப்ட் அருகிலும் ஒருவரும் இல்லை. கையில் மணியைப் பார்த்தவள் “அச்சோ படில இறங்க டைம் ஆகுமே” என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது ஒரு லிப்டின் கதவு திறந்தது. உள்ளேப் போகப் பார்த்தவள் அங்கு யாருமில்லை என்றதும் வெளியேவே நின்று விட்டாள்.

வேறு வழியில்லாது படி வழியே இறங்கலாம் என்று திரும்பி நடக்கவும் , மொபைலில் ஏதோ பேசிக் கொண்டே இன்னொரு லிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டு இருந்தவனை காணவும் அவன் பின்னால் போய் நின்றுக் கொண்டாள்.

லிப்ட் திறந்ததும் உள்ளே சென்றவன் திரும்பவும் … அதே நேரம் உள்நுழைந்த ராதிகா அவன் மீதே மோதவும் சரியாக இருந்தது.

இதை எதிர்பார்காத அவன் தன் மீது மோதி நிலைத் தடுமாறியவள் முழங்கையை  அனிச்சையாய் இறுகப் பிடித்து நிறுத்தினான்.

அதற்குள் ஒரு நிலைக்கு வந்தவள் ” சாரி சாரி சார் , கதவு மூடிருமோனு வேகமா வந்தேன்” என்றவாறே லிப்ட் ஓரம் சாய்ந்து கொண்டாள்.

கண்களில் பயத்தைத் தேக்கிக் கொண்டு சொன்ன அவளின் கண்களைப் பார்த்து ,

பட்டென்று அவள் கையை விட்டவன் ஒன்றும் பேசாது ஏழாவது தளம் செல்வதற்கான பட்டனை அழுத்தினான். அந்தக் கண்கள் .. எங்கோ பார்த்தது போல் … எங்கே … அவன் யோசனையிலும் ,

ராதிகாவோ அவன் பிடித்த முழங்கையை தேய்த்து விட்டுக் கொண்டே இருந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அது அடுத்த தளம் போகிறது என்பதனை .

அவள் பார்த்து கொண்டு இருக்கவுமே அந்த தளத்தில் வெளியேறியவன் பின்னோடு அவளும் வெளியேறினாள்.

ஒன்றும் புரியாது அவளைப் பார்க்கவும் சங்கடப்பட்டுக் கொண்டே “சார் எனக்கு லிப்ட் ல வர்றது இதுதான் முதல் தடவை .தனியா போக பயமாயிருந்துச்சு , அதான் உங்க கூட வந்தேன். நீங்களும் இங்க இறங்கறீங்க .. அதான் பேசாம படியிலயே இறங்கப் போறேன்” என்றவள் திரும்பிப் படி இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

” இவ்வளவு பெரிய கம்பெனி .. ஒரு லிப்ட் ஆப்ரேட்டர் வச்சுக்க கஷ்டமா இருக்குப் போல ” என்று புலம்பிக் கொண்டே படி இறங்க ஆரம்பித்தாள்.

அவள் நெஞ்சில் மோதியதில் இருந்தே ஏதோ பூங்கொத்து உடலில் உரசும் உணர்வில் இருந்தவன், அவளது அந்தப் பேச்சிலும் பார்வையிலும்  மனதிலும் ஏதோ பூ உரசும் மென்மையை உணர்ந்தான் அந்த மிகப் பெரிய தொழில் நிறுவனத்தின் எம்.டி. அரவிந்த் நாராயணன்.

தன் மொபைலை எடுத்து ” டேய் ரமேஷ் யார் டா அந்தப் பொண்ணு”

“எந்த பொண்ணு மச்சான். “

“ம் .. இந்த ப்ளோர் ல உன்னையும் என்னையும் தவிர வேற யார் இருக்காங்க …இப்ப உன் கேபின்ல இருந்து வெளியப் போன பொண்ணதான் கேட்கிறேன்.”

“ஓ அந்தப் பொண்ணா , நம்ம சீனியர் சிவாவோட தங்கச்சி , நம்ம கம்பெனில வேலைக்கு வரப்போறாங்க.…. ஆமா இவ்வளவு கூர்ந்து கவனிச்சுக் கேக்கிற என்ன விஷயம் “

“ம் லிப்ட் ல போகப் பயந்து ஏழாவது மாடியில இருந்து படில இறங்கிப் போறா அதான் கேட்டேன். அப்புறம் சீக்கிரம் இந்த பில்டிங் லிப்ட் க்கும் லிப்ட் ஆப்ரேட்டர் போட ஏற்பாடு பன்னு” என்றவன் போனை கட் செய்து விட்டான்.

” என்ன படில இறங்கிப் போறாங்களா.. ஆமா இது ஆறாவது தளம், இவன் ஏழுங்கிறான். இவனுக்கு என்னாச்சு”

அவனுக்கு என்ன ஆனது என்பது அவனுக்கே தெரியவில்லை எனும் போது ரமேஷ்க்கு எப்படித் தெரியும் …

ஏழாவது தளத்தில் இருந்த தங்கள் குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்தும் ஓய்வறைக்குச் செல்ல வந்தவன் , ஏதோ தோன்றவும் திரும்பவும் லிப்டினுள் நுழைந்து ஒவ்வொரு தளமாக திறந்து அவள் ஏறுகிறாளா என்றுப் பார்த்துக் கொண்டேக் கீழ் தளத்திற்கு வந்து விட்டான்.

ஏன் இப்படி என்று அவனுக்கு தெரியவில்லை .ஆனால் என்ன இப்படி என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் யோசனையின் நாயகியும் மூச்சு வாங்க அந்தப் படிகளின் முடிவில் வந்து நின்றாள்.

வந்தவள் கண்களில் அரவிந்த் படவும் , கண்களில் கோப பாவங்களைக் கொண்டு வந்தவள் அவன் அருகில் வந்து “ஏன் சார் கீழ வர்றதா இருந்தா நானும் வந்து இருப்பேன்ல, தனியா வர பயம்னு சொன்னேன்ல,  ” என்றவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

அவள் பேச்சில் புன்னகை சிந்திய அவன் உதடுகள் ” தனியா வர பயமா , என் கூட வந்தா பயம் போயிருமா … சொல்லு காலம் பூரா வரத் தயரா இருக்கேன்” என்று முனுமுனுத்தன.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவன் , ” என்ன இது ஒரு பெண்ணைப் பார்த்ததும் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுமா”

தலை முடியை இரு கை கொண்டு கோதிக் கொண்டு தன்னைச் சமன்படுத்தியவன்  திரும்ப லிப்டினுள் சென்றான்.

                    காதல் அழகானது.….என்றுமே.