நெஞ்சில் சாய்ந்து தன் ஆசையை கணவனிடம் பகிர்ந்துக் கொண்டிருந்த தன் இல்லாளின் உச்சியில் தலை வைத்திருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முடிந்த வரை இப்படி ஒரு எண்ணம், அவளுக்கு வந்து விடாதபடி பார்த்து நடந்துக் கொண்டான் தான் . ஆனாலும் பெண் மனதை கடவுளாலும் அறிய முடியாது என்பது உண்மை தான் போல.
“நீ கேட்டு நான் எப்படி மாட்டேன் சொல்வேன். ஆனா ஸ்ரீக்கு இப்ப தானேடா ரெண்டு வயசு முடிஞ்சிருக்கு… கொஞ்ச நாள்….”
அவன் நெஞ்சிலிருந்து தலையை தூக்கிப் பார்த்தவள் , “உங்க மருமகனுக்கு எத்தனை வயசு முடிஞ்சிருக்காம்….அனு சுமக்கும் போது நான் சுமக்கக் கூடாதா…… “
“அது” என்றவனிடம் ,
“எனக்கு தெரியும் …நீங்க என் உடம்பு அதுனால பாதிக்கப்படுமோனு பயப்படுறீங்க …. அதெல்லாம் ஒன்னும் ஆகாது …. நான் இன்னொரு குழந்தைப் பெத்துக்கிற அளவு நல்லா ஹெல்த்தியா இருக்கேனாம்…. நான் கேட்டுட்டேன்” என்று முகம் ரோஜா வண்ணம் பூச சொன்னவள் , மறுபடியும் அவன் நெஞ்சில் புதைந்துக் கொண்டாள்.
“ஸ்வீட்டி….என்ன சொல்ற … எனக்குத் தெரியாம எப்ப டாக்டர் பார்த்த ….”
“நான் ஒன்னும் டாக்டர்லாம் பார்க்கல … அனி இருக்காள்ல அவகிட்ட என் ரிபோர்ட்ஸ் அனுப்பிக் கேட்டேன் .. அவ அவங்க டாக்டர் கிட்ட கேட்டு சொன்னா … அவ தான் முதல்ல எனக்கு ஃபுல் செக் அப் பண்ணப்போ என்னைய பத்தி தெரிஞ்சு வச்சுருந்தா…”
” எப்போ இந்த வேலையெல்லாம் பார்த்த டா….”
” எப்போ குழந்தைப் பெத்துக்க ஆசை வந்துச் சோ அப்பவே ….”
“ம்….. ஸ்வீட்டி பயங்கர ஃபாஸ்ட்டா இருக்கியே….. “
“ச்சு….போங்கத்தான் …..” என்றுச் சிணுங்கியவள் ,
“அத்தான் அங்க பாருங்களேன் இருட்டுலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு …. ஜெனிஃபரா நான் இங்க அதாவது கொச்சின்ல புதுசா பிறந்து வளர்ந்தேன்னு தான் சொல்வேன் …. வெளிச்சத்துல இருந்தாலும் நான் யார் என்னனு தெரியாம இருட்டுல இருந்த உணர்வுதான் …. நான் தங்கியிருந்த ரூம்ல இருந்துப் பார்த்தா கடல் நல்லா தெரியும் …பகல்ல சூரியனால தகதகனு மின்னுற கடல் ஒரு அழகை கொடுத்து என்னை ரசிக்க வச்சதுனா , இருளுல நிலவொளில மின்னும் போதும் அது ஒரு தனி அழகை கொடுத்து என்னை லயிக்க வச்சது…
இந்த கடல்போல தான் அத்தான் நானும்… வெளிச்சத்துல தொலைந்து போன என் நினைவுகள மீட்டெடுக்க முடியாம போன எனக்கு, இருட்டும் அழகுதான்னு எனக்கு புரிய வச்சாங்க இங்க உள்ளவங்க…
நீங்க சூரியனா இருந்து என்னை பிரகாசிக்க வச்சிருந்திருக்கிங்க … ஆனா அந்த இருண்ட நாட்கள் ” தேம்பலோடு அவனை இறுக்கிக் கொண்டவள் ….
…….ஆமாம்த்தான் இருட்டுல நிலவொளியா வந்தது மதரும் , நான்சியும் தான் … அவங்க என்னைய புதுசா பிறக்க வச்சு , எனக்கு நினைவுல இருக்கிறத மட்டும் போதும்னு அதாவது தமிழ் ஆங்கிலம் பேச தெரியுது , எழுத தெரியுது ஆனா என்னப் படிச்சேனு ஞாபகத்துல இல்ல … ஆனா அவங்க அதை வச்சே என்னைய புது மனுஷியாக்கினாங்க.. லைப்ரரில வேலை போட்டுத் தந்தாங்க ….அதுல மற்றத யோசிக்க நேரமில்ல… யோசிச்சா தலைவலி தான் மிச்சம் , அதனால யோசிக்கிறதயே நிறுத்திட்டேன்….தானா ஞாபகம் வந்தா போதும்னு….
நீங்க சொன்னது போல இந்த ஊர் எனக்கு நிறைய நல்ல மனிதர்களை காட்டிக் கொடுத்துச்சு, நிறைய கத்துக்கிட்டேன் … இங்க எங்கப் பார்த்தாலும் அழகு … அப்படிப்பட்ட அழகான ஊர் பெயரைச் சொன்னதும் நீங்க எல்லாம் முகத்தை முகத்தை பார்த்து ஏதோ ஒரு வருத்தத்தை கண்ல பகிர்ந்துக்கிறீங்க …..வேண்டாம் அத்தான் ….இந்த ஊர நினைச்சா சந்தோஷம் தான் வரணும்….
ஒரு வேளை என் நினைவுகள் தவறினதுக்கு காரணம் இந்த ஊர்தான்னா …. நினைவுகள் திரும்புறதுக்கும் இந்த ஊரே காரணமாகலாமே….அதனால இங்கிருந்து கிளம்பும்போது சந்தோஷமா மனம் முழுசும் நல்ல நினைவுகள சுமந்துட்டு கிளம்புவோமே…… நீங்க இப்படி யோசிச்சுட்டே இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல அத்தான் …..”
மனையாள் மனதிலுள்ளதை பகிர்ந்துக் கொள்ள … அதுவரை தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு அவளது கடைசி வார்த்தைகள் ஓர் எதிர்பார்ப்பைக் கொடுத்தது.
அவள் ஒன்றை நினைத்து அந்த வார்த்தையைச் சொன்னாலும் தொலைத்த பொருளை தொலைந்த இடத்தில் தேடுவது தானே சரியானது … நினைவுகளும் எங்கு தொலைந்ததோ எப்படித் தொலைந்ததோ அப்படியே கிடைத்தால்….. இந்த எண்ணம் வந்ததும் மனதில் உற்சாகம் பிறக்க ,
“ஏன் டியர்… நீ இவ்வளவு சொன்னப் பிறகு நான் இனி யோசிப்பேனா …. ஸ்ரீக்கு வருஷத்துக்கு ஒரு தம்பி தங்கச்சிய ரெடி பண்ணி கொடுத்துட்டே இருக்க மாட்டேன்….. “
” என்ன….. வருஷத்துக்கு ஒன்னா … ” என்று நாணம் கொண்டவளிடம்,
“வேண்டாமா …. அப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒன்னு ஒகே …” என்று பேசிக் கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்து, படுக்கையில் மனைவியை சரித்தவன் ,
காதில் ரகசியமாக , “ஏன் டியர்.. நான் வேற தேடித் தேடி ஃபிளேவர் ஃபிளேவரா வாங்கி வச்சுருக்கேனே… அத என்ன செய்ய வேஸ்டா போய்டுமே….”
முதலில் புரியாமல் , “என்ன ஃபிளே… “புரிந்தவுடன் உங்கள ….. என்றவள்.. வழக்கம் போல் அவன் மீசையை பிடித்து இழுத்து …..” அசிங்கமா பேசாதிங்கனு எத்தனை தடவை சொல்றது .”
தன் மனையாளின் செய்கையில் அவளின் பழைய குணங்கள் திரும்புகிறது என்ற உற்சாகத்தில் , மேலும் குறும்பு பேச்சு பேசி அவளிடம் இருந்து தலையணையால் அடி வாங்கினாலும் … அவள் கேட்டதை செய்யாமல் இல்லை… மனதிலும் உடலிலும் எந்த விதமான தடையுமின்றி மனைவியை நாடினான்.
கொச்சினிலிருந்து வந்தவர்கள் முகங்கள் பிரகாசிப்பதிலிருந்தே மகனும் மருமகளும் சாதாரணமாக இருப்பதை அறிந்துக் கொண்ட ஜானகியும் , மற்றவர்களும் அதன் பிறகு எந்தக் கவலையுமின்றி நாட்களைச் செலுத்தினர்.அனன்யா மசக்கையில் துவண்டதால் மனைவி மகனோடு ரமேஷூம் கோவையில் வந்து தங்கிக் கொண்டான்.
வீட்டில் அத்தனை பேரும் அனன்யாவை மாற்றி மாற்றிக் கவனித்துக் கொண்டாலும் , ரமேஷ் வீட்டிலிருக்கும் நேரம் அனன்யாவுக்கு தேவையானது அத்தனையும் அவனே செய்தான். அவள் முதல் குழந்தை சுமக்கும் போதே அவன் அப்படித்தான் இருந்தான் என்பதால் மற்றவர்களுக்கு அது புதிதாகத் தெரியவில்லை. ஆனால் ராதிகாவுக்கு அனைத்தும் புதிதாகவும் , ஓர் ஆவலையும் உண்டு பண்ணியது.
அனன்யாவிடம் , ” அனு…. அண்ணன் இதுக்கு உன்னைய அங்கயே வச்சுக்கலாம் போல…. இங்க எங்க யாரையும் உன் கிட்ட கூட விடுறதில்லை….” என்று புன்னகைத்துக் கொண்டே கூறவும்,
அனன்யா , “அண்ணி கீழ குனிஞ்சு என் கால்கள் தரையில இருக்காப்பாரு….”
“ஏன் ” என்பது போல் பார்த்தவளிடம் , “ம் ….என் காலாவது தரையில இருக்கு , நீ ஸ்ரீய வயித்துல வச்சுருக்கும் போது உன் கால்கள் தரையிலயே இருக்காது ,,, காத்துல மிதந்துட்டுத்தான் இருப்ப …. ஏன்னா எங்கண்ணன் உன்னைய தரையிலயே விடாது ….கேட்டா என் பொண்டாட்டி கால் வலிக்கும்… அவ கால் வலிச்சா என் பிள்ளை கால் வலிக்கும்னு டையலாக் வேற …. நாங்க உங்க ரெண்டு பேரையும் கலாய்க்காத நாளே இல்ல போ …. உங்கண்ணாவிட எங்கண்ணாதான் வொஃய்ப் கவனிச்சுக்கிறதுல அவார்டே வாங்கலாம் … அடுத்து உண்டானதும் நீயே தெரிஞ்சுக்குவ… உன் பழைய போன் அண்ணாகிட்டதான் இருக்கும் … போய்ப் பாரு நீ பிரக்னன்ட்டா இருந்தப்போ நான் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம உங்க போட்டோஸ் , வீடியோஸ் நிறைய எடுத்து உனக்கு அனுப்பி உன்னை கிண்டல் பண்ணுவேன்….” என்றாள்.
அவள் சொன்னதும் அதைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு பதினொரு மணியளவில் அலுவலகம் கிளம்புவாள். எனவே அறைக்கு வந்தவள், அரவிந்தின் கபோர்டை நோண்ட ஆரம்பித்தாள் , மேலே பூட்டப்பட்டிருந்த சிறிய அறையின் சாவியை அந்த கொத்து சாவியில் போட்டு போட்டுத் திறந்து விட்டாள். திறந்தவள் கையில் அகப்பட்ட ஒரு கவரை எடுத்து வந்து கட்டிலில் கொட்டியவளுக்கு கண்ணீர் அருவி போல கொட்ட ஆரம்பித்துவிட்டது.
அவன் அன்று சொன்ன அவள் கொலுசு , அந்த டப்பா மேல் அவள் பொட்டு , காலி காஃபி கோப்பைகள் ….. இப்படி பொருட்கள் எல்லாம் அவளுடையதாகத்தான் இருக்கும். மொபைலை எடுத்து சார்ஜ் போட்டு விட்டாள். ஒரு கவரை பிரித்தவள் அதிர்ந்துவிட்டாள். அது அவளது வெட்டபட்ட நீண்ட கூந்தல். அதை செயற்கை தலைமுடி செய்பவரிடம் கொடுத்து பதப்படுத்தி இருப்பான் போல….. இப்படியே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் சென்றுக் கொண்டிருப்பது தெரியவில்லை போல , சார்ஜ் ஏறியது போல் தெரியவும் மொபைலை எடுத்து ஆன் செய்தவள்… முழுக்க முழுக்க அரவிந்த் போட்டோ தான் வால்பேப்பர் … அது அவள் அவனுக்குத் தெரியாமலே எடுத்தவையாக இருந்தது. சிறிது நேரம் கணவனைப் பார்த்து ரசித்தவள் ,கேலரி சென்று மற்ற போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தாள்.
மகன் சிணுங்கவும் எழுந்தவள் அவனுக்கு உணவு கொடுத்து விட்டு , தான் இன்று அலுவலகம் செல்லவில்லை என்று விட்டு மகனை ஜானகியிடம் விட்டு திரும்பவும் ஃபோனை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டாள். வாய்ஸ் ரெக்கார்டரில் அவனது குரலில் பாடல் ஒலிக்க அடுத்துக் கேட்கப் போவதற்குள் , வேகமாக உள்ளே வந்த அரவிந்த், அவளதருகில் வந்து அமர்ந்திருந்தவளை எழுப்பி தலை கழுத்து என்றுத் தொட்டுப் பார்த்தவன் ,
“ஏன்டா ஏன்டா ஆஃபிஸ் வரல … உடம்புக்கு எதுவும் செய்யுதா ….”
அந்த மொபைலை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு , அப்படியே அவனை இறுக கட்டிக் கொண்டவள் ….. ஐ லவ் யூ அத்தான் …..ஐ லவ் யூ.….ஐ லவ் லவ் யூ வெரி மச் என்றவள் எக்கி அவன் முகம் முழுவதும் முத்தம் பதிக்க ஆம்பித்தாள். மனைவின் இந்த செயலில் மகிழ்ச்சியடைந்தவன்,
“என்னடா உனக்கு ஒன்னுமில்லனு தெரியுது…சொல்லு ஏன் ஆஃபிஸ் வரல , ஃபோனும் எடுக்கலனுதும் பயந்து ஓடி வாறேன்.”
அழுது கொண்டே ஒரு கையால் கட்டிலைக் காட்டினாள். புரிந்து கொண்டவன் , ” எல்லாம் என் ரதிகுள்ளதுதான்….அதற்கப்புறம் எத்தனை வாங்கினாலும் ஃபர்ஸ்ட்ங்கிறது ஸ்பெஷல் தானே …..” என்றவன் நினைவு வந்தவனாக ஃபோனைப் பார்க்க அது அருகில் கிடந்தது , சட்டென்று அவளை அணைத்தவாறு திரும்பி அதை எடுத்து பேன்ட் பையில் வைத்துக் கொண்டான்.
“சரிவா…. நான் மேல இப்படி ஓடி வர்ற வேகம் பார்த்து பயந்துட்டாங்க …. கீழே போகலாம்.”
விலகி அந்த போனைத் தேட , “அது சார்ஜ் சரியா ஏறல… அப்புறம் போடலாம்… வா” என்று அழைத்துச் சென்றததோடு அது ஞாபகமே வராமல் அவளை சமாளித்தான்.