வந்தவன் சாப்பிட அமர ஒரே தட்டில் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, லேப் டாப்பில் ஏதோ டைப் செய்துக் கொண்டிருந்தவன் அருகில் வரவும் ,

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் டா, திடீர்னு கொடைக்கானல் பிளான் போடவும் , சிலது பென்டிங் , இதோ முடிச்சுடுவேன் … அதுக்குள்ள நீ சாப்பிடு… ” அவன் வாயில் சூடான உணவை ஊட்டினாள். இதை எதிர்பார்க்காதவன் அவள் கண்களைப் பார்க்க ,

“நீங்க உங்க வேலையப் பாருங்க , நான் என் வேலையப் பார்க்கிறேன்…” என்றவள் அடுத்தக் கவளத்தையும் எடுத்து ஊட்டிக் கொண்டிருந்தாள். அவர்களுக்குள் இப்படி எப்போதும் நடப்பதுதான் என்பதால் தான் அவளைப் பார்த்தான். எப்படியாவது அவள் நினைவுகள் திரும்பி விடாதா என்ற ஏக்கம் வராமல் இல்லை. எதையும் ஞாபகப்படுத்தி அவளை வேதனைப் படுத்தக் கூடாது என்று முடிவு செய்து இயல்பாக வாங்கிக் கொண்டு இருந்தான்.

அவன் உண்டு முடிக்கவும் ,அனன்யாவிடமிருந்து ஃபோன் வரவும் சரியாக இருந்தது .உறக்கத்தில் இருந்த மகன் சிணுங்குகிறான் எனவும் , ஃபோனிலேயே , “பூவிலே மேடை ….” எனப் பாட ஆரம்பிக்க , குழந்தை அமைதியாக மறுபடியும் உறங்க ஆரம்பித்தது.

புன்னகைத்துக் கொண்டே மனைவியைப் பார்க்க , “இந்தப் பாட்டு கேட்டாலே உடனே அமைதியாகிடுறார் எப்படி அத்தான். நீங்க ரொம்ப நல்லா பாடுறீங்க , எனக்கும் அந்தப் பாட்டைப் பாடுங்க ப்ளீஸ்…”

திடுக்கிட்டவன் , “இந்தப் பாட்ட உனக்கு பாடமாட்டேன்…. பாடமாட்டேன்….பாட மாட்டேன்” என்று மனதில் நினைப்பதாக நினைத்து ‘பாட மாட்டேன்’ என்ற வார்த்தையை உரக்க கத்தி சொல்லவும்,

“ஏன் அத்தான்…. எனக்குப் பாடமாட்டீங்களா….” என ஏக்கமாகக் கேட்டவளிடம், அவளிடமிருந்த தட்டை வாங்கி ஊட்டிக் கொண்டே ,

“சாப்பிட்டுட்டு உனக்குப் பாடுறேன்…. ஆனா அந்தப் பாட்டக் கேட்டா நீ தூங்கிடுவியே … தூங்கவா இங்க வந்துருக்கோம் ….ம்” என்று குறும்புடன் கேட்டு ,

“உனக்கு பாட வேற பாட்டு வச்சுருக்கேன் … அது பாடட்டுமா ..” என அவள் சிவந்த காதுகளில் முத்தமிட்டுக் கேட்கவும் … படபடவென அடித்த இதயத்தின் ஓசை அவனுக்கு கேட்டு விடாதபடி அவன் கையிலிருந்த காலியான தட்டினை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடினாள்.

அவள் ஓடவும் தான் தன் நினைவுக்கு வந்தவன் , அந்த அறையில் இருந்த கண்ணாடியால் சூழப்பட்ட பால்கனிக்குச் சென்று கைகளைக் கட்டிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

அவளை இங்கு அழைத்து வந்தது , அவள் பிறந்து வளர்ந்த இடத்தைக் காண்பித்து , அவளிடம் சகஜமாக பேசி அவளிடம் இருக்கும் தயக்கங்களை போக்கத்தான். மற்றபடி வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தான் இருந்தான். ஆனால் அவளை அருகில் வைத்துக் கொண்டு தன் மனதையும் உடலையும் கட்டுப்படுத்துவது என்பது அவனுக்குச் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அரவிந்த் இப்படி யோசித்துக் கொண்டிருக்க ,

ராதிகாவோ அவனது பேச்சாலும் , செயலாலும் … புதிதாய் உணர்ந்த உணர்வுகளாலும் முகத்தில் நாணம் பொங்க வெளியே சென்று தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு தயாராக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

வந்தவளுக்கு அவன் பால்கனியில் நின்ற தோற்றம் என்னவோ செய்ய , தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து போயிற்று. அவளுக்காகத்தான் அவன் பார்க்கிறான் என்பது புரிய, கணவனை பெருமையாகப் பார்த்தவள் , அவன் பின்னால் வந்து நின்று முதுகோடு சாய்ந்து , முன்புறம் கைகளைக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டாள்.

ராதிகாவின் இச் செயலால் யோசனைகள் தடைபட்டவன், “ஸ்வீட்டி” என மென்மையாக அழைக்கவும் ,

“எனக்கு ரொம்ப குளிருது ….”

“வா போய் படுக்கலாம்…” என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல , அப்பொழுதும் அவனைக் கட்டிப்பிடித்தவாறே அமர்ந்தவள்,

“எனக்கு வேற பாட்டு பாடுவேன் சொன்னீங்களே ….அது பாடுங்க” என்றாள். அவளை படுக்கையில் கிடத்திக் கொண்டே , போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தப் போக,

அதை ஒற்றைக் கையால் தடுத்துக் கொண்டே அவன் டீ ஷர்டைப் பிடித்து இழுத்தவள்,

“ம்ஹூம் … எனக்கு அந்தப் போர்வை வேண்டாம்….இந்தப் போர்வை தான் வேணும்…..” என அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதிற்குப் பின், அரவிந்தின் தயக்கங்கள் எல்லாம் பின்னால் ஓடி விட்டது. அவர்களுக்கு மட்டுமேயான அந்தரங்க வார்த்தைகளைக் கேட்டவன் ….அவள் காதருகே உரசிக் கொண்டே ,

“ஸ்வீட்டி”

“ம்”

“பாடட்டுமா” … “ம்” … அவளுக்கு பேச்சு வரவே இல்லை , அவனது கைகளின் வித்தையில் மயங்கிக் கொண்டிருந்தவள் காதுகளில் ….

“முன்னாடி சொல்லித் தந்த எதுவுமே ஞாபகம் இல்லையா…. “

“அத்தா….ன்ன்ன் ” எனச் சினுங்கியவளிடம்,

“அப்ப ….புதுசா சொல்லித்தரவா ….”, “ச்சு போங்கத்தான்….” என்றவள் வாய் தான் “போ” என்றது , அவளது கைகள் அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு ‘ போகாதே ‘ என்றது.

தாம்பத்தியத்தில் மனையாளின் போங்க என்பதற்கும் , ‘வேண்டாம்’ என்பதற்கும் அர்த்தம் புரியாதவனா அரவிந்த் ….. அதன் பின் கொடைக்கானல் குளிரை இருவரும் உணரவே இல்லை. பழைய பாடங்களை புதிதாகக் கற்றுக் கொடுத்தான்.

‘விடிய விடிய சொல்லித் தருவேன்….

 

 பொன்மாலை நிலாவினில் வேதங்கள் …. என்

 

மார்பில் உலா வரும் தாகங்கள்…. இன்னும்

என்னென்னவோ என் எண்ணங்கள் ….

அவன் விழிக்கும் போது , மெத்தையில் கையில் அகப்படாதவளைத் தேட ,கையில் அடிப் பெற்றுக் கொண்டவனிடம் ,

“உங்க புள்ள உங்ககிட்ட பேசணுமாம் …” என்று அவன் முகத்தை ஃபோனில் காட்ட , அனன்யா மடியில் அமர்ந்து தந்தையிடம் யானை பொம்மைக் காண்பித்து ,

“ப்பா நாணப் பாத்தன் … நாணப் பாத்தன்….” என்ற மகனின் மழலை மொழியில் தங்களை மறந்து பேச்சுக் கொடுத்த இருவரும் ,அனன்யா எழுந்துப் போவதையும் ரமேஷ் மகனை வாங்கிக் கொண்டதையும் கவனிக்கவில்லை.

ரமேஷ் அலுவலகம் செல்லும் உடையில் தயாராக இருந்ததைப் பார்த்த அரவிந்த் , “மாப்ள என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட “

“ம் வாய்ஸ் கால் வா சொல்றேன்…. “

” நான் போய்க் காஃபி எடுத்துட்டு வாறேன்” என்று ராதிகா நகரவும் , ஃபோனில் வாய்ஸ் காலில் வந்த அரவிந்திடம் ,

“மச்சான் மணி என்னத் தெரியுமா , ஒன்பதரை … இன்னைக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு….நீ அங்க உட்கார்ந்து என்ஜாய் பண்ணிட்டு என்னைக் கடுப்பேத்திட்டு இருக்கியா…”

“என்னடா கடுப்பேத்துறாங்க … டைம் தெரியாம கேட்டுட்டேன் .. “

“ம்… உன் பாசமலர் வந்து … அத்தான் அண்ணன பொட்ட நெத்தில வைக்கச் சொல்லுங்க , கன்னத்துல வச்சுருக்கார்னு சொல்லிட்டுப் போறா…. “

“ஆன் … என்ன பொ… மாப்ள. பைடா நான் அப்புறம் பேசுறேன் “என்றவன் ஃபோனைக் கட் செய்து அங்கிருந்த கண்ணாடிப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

காஃபி எடுத்துக் கொண்டு வந்தவள் , கண்ணாடி முன் நின்றவன் அருகில் வந்து முகம் தாழ்த்திக் கொண்டே , “காஃபி” எனவும் , அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, இடுப்போடு கைப் போட்டு அணைத்துக் கொண்டவன் ,

“விடிய .. விடிய ” என ஆரம்பிக்கவும் அவன் வாயைக் கைக்கொண்டு மூடியவளின் விரல்களில் முத்தமிட்டுக் கொண்டே , ” சொல்லித் தந்தது ஞாபகமிருக்கானு கேட்க வந்தேன்… “

“அத்தா….ன் …. ” என அவன் மீசையை இழுத்தவளிடம் ,

” ஷ்… வலிக்குதுடா…”

“வலிக்கட்டும்… அத்தான் … “

“சொல்லுங்க மேடம்” , “வீட்டுக்குப் போகலாமா ….குட்டிபையன  நேர்ல பார்க்காம என்னவோ போல இருக்கு…. “

“அது தானே பார்த்தேன் … எங்கடா இன்னும் ஆரம்பிக்கலயேனு…. போகலாம் லன்ச் முடிச்சிட்டு கிளம்பலாம்…. ஒரு நிமிஷம் ” என்றவன், ஃபோன் எடுத்து , விஜயாவையும் சேகரையும் வெளி வேலையாக அனுப்பி விட்டு கதவடைத்து வந்தவன் ,

“ஸ்வீட்டி வா வா… நாம குளிச்சிட்டு சாப்பிட்டு கிளம்பலாம்… இருட்டறதுக்குள்ள மலையவிட்டு இறங்கிறலாம்….” என அழைத்துக் கொண்டே அறைக்கதவை சாத்தியவனிடம் ,

” நான் குளிச்சிட்டேன் , நீங்க குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் ….”

சட்டென்று அவளை கைகளில் ஏந்தி , ” நான் என்ன சொன்னேன் …. நாம குளிச்சிட்டு சாப்பிடலாம்னு சொன்னேன் … கொடைக்கானல் வந்து தனியா குளிக்கிறதா…. நெவர் டியர்….சோ நாம குளிக்கப் போறோம்” என்றவன் குளியலறை சென்று தான் அவளை இறக்கி விட்டான்.

மாலை மலையை விட்டு மன நிறைவோடு இறங்கிக் கொண்டிருந்தார்கள். ராதிகாவின் மனம்” எனக்கு பழைய நினைவெல்லாம் வேண்டாம்… இந்த நொடி மகிழ்ச்சி மட்டுமே போதும் “என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

 இந்த நிறைவும், சந்தோஷமும் காதலால் மட்டுமே தர முடியும். காரில் கேட்ட பாடல் இருவரையும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ளச் செய்தது. அது…

இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம்

 

ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்

 

சொர்க்கத்திலே இது முடிவானது

 

சொர்க்கம் என்றே இது முடிவானது

 

காதல் ஒரு வேதம் அதில் தெய்வம் தரும் கீதம்

 

தாலாட்டுதே

 

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

 

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

 

இது கார்கால சங்கீதம்

 

தாலாட்டுதே….

 

 

                         காதல் அழகானது…..