தன் கதகதப்பான கரங்களில் உதட்டையும் கன்னத்தையும் வைத்து … கண்ணீரால் தன் காதலை , நேசத்தை கணவனிடம் பகிர்ந்து விட்டோம் என்ற நிம்மதியில் விழிகள் மூடி இருந்தவளையேப் பார்த்த அரவிந்த் என்ன சொல்லுவான்……அரவிந்த் பேசவே வராது என்பது போல் ஊமையாகி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சொல்லு… சொல்லு…. ப்ளீஸ் ஒரு தடவை சொல்லு…. ” என்று இந்த வார்த்தைக்காக அவள் பின்னோடு அலைந்தது ஞாபகம் வந்தது.
“பிடிவாதக்காரி….இந்த வார்த்தைய உன் வாயிலிருந்து கேட்க துடியாதுடிச்சேனடா….. என்னால வெறும் வார்த்தையால சொல்ல முடியாதுனு …. செயலால உணர்த்திட்டு ….. இப்ப … “
எப்போதுமே நாம் ஒருவரை விரும்புகிறோம் என்பதைக் காட்டிலும் நாம் ஒருவரால் விரும்பப்படுகிறோம் … என்பதே அளவில்லா ஆனந்தத்தைத் தரும் ….அரவிந்தும் அந்த ஆனந்தத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
மெல்ல அவன் உதட்டோரம் புன்னகை மலர ….. அவளுக்கு பதிலாக, ஓசை இல்லா வார்த்தைகளை இதழில் எழுத முடிவு செய்தவன் …..அவள் கன்னத்தில் கொடுத்திருந்த அவன் கைகளை எடுக்காது , அப்படியே முகத்தை அருகில் கொண்டு வந்து , பூப் போன்ற இதழ்களை தன் முரட்டு இதழால் சிறைப்படுத்தினான்.
கணவனின் கழுத்தை மாலையாகக் கட்டி அவன் சிகைக்குள் கை நுழைத்தவளுக்கு பிரிய மனமில்லை , ஆயினும் சாலையில் நிற்கிறோம் என்ற உணர்வில் பிரிந்தவர்கள் மெளனமாகவே பயணித்தனர்.
சாலையோரம் இருந்த மோட்டலில் காரை நிறுத்தியவன் , வெளியே வந்து கார் மீது சாய்ந்து நின்றான். ராதிகாவும் இறங்கியவள் , ” நிறுத்திட்டீங்க…., எங்கப் போறோம்… இல்ல வந்துட்டமா..”
அந்த இடம் அவளுக்குத் தெரியவில்லை என்பது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் …, அவளிடம் அதை வெளிக்காட்டாது ,
“ம் ….என் ….. கேட்டுக்கோங்க மேடம் என் ….அதாவது என்னோட லவ் ஸ்டோரி சொல்ல சொன்னீங்கல்ல ….அதை தான் சொல்லப் போறேன்.” என்றவன்,
அவளை அந்த ரெஸ்டாரன்ட்க்கு அழைத்துச் செல்ல , வழக்கம் போல் இவர்களைக் கண்டதும் ஓடி வந்த கடை உரிமையாளர் நேரிடையாக கவனிக்க , இரண்டு காஃபி ஆர்டர் செய்தவன் அதை வாங்கிக் கொண்டு காரினருகே வந்தான்.
“அத்தான் , அந்த ஓனர் நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்களா … அவ்வளவு அன்பா பேசுறாரு….”
பெரிதாக வாய் விட்டு சிரித்தவன் …. கார் பானட் மீது காஃபியை வைத்து அதன் மீது ஏறி அமர்ந்துக் கொண்டான்.
“போங்கத்தான் … ” என்று சினுங்கியவளைப் பார்த்துக் கொண்டே காஃபியை எடுக்க , “அத்தான் அது நான் குடிச்சது… இது தான் உங்களது … “
மறுபடியும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தவனை போலியாக முறைத்து காஃபியை எடுத்துக் கொண்டு காரினுள் சென்று அமர்ந்துக் கொண்டாள். அவனும் வந்து அமர்ந்து ,
“எங்க சின்ன வயசு எப்படிப் போச்சுனு அனுமா சொல்லிருப்பானு நினைக்கிறேன். என்னைக் காலேஜ் வரைக்கும் கொண்டு வந்த தாத்தா அதுக்கு மேல முடியாம பொறுப்பெல்லாம் எங்ககிட்ட விட்டுட்டார். குடும்பம் மொத்தமும் இழந்த அம்மாவுக்கு அன்றைய நினைவுகள் தான் கடைசி …. அப்பா இல்லங்கிறத நம்பவேயில்லை….. என்னைய யார்னே தெரியலனப் பார்த்துக்கோ… குட்டி அரவிந்த்தான் அவங்களுக்கு தெரியும் …. முழுசா நார்மல் ஆக இத்தனை வருஷம் ஆச்சு…. இப்ப நீ ….. ” மேலும் சொல்ல முடியாது மூச்சு வாங்கி தன் துக்கத்தை அடைத்தவன்..
“இப்படியான நிலையில எனக்கு அந்த அந்த வயசுக்குரிய ஆசைகள் எங்க இருக்கும் சொல்லு…. தங்கச்சி கிளாஸ்மேட் பொண்ணு என்னைய சாமியார்னு சொல்லி கிண்டல் பண்ணுவாளாம்…. எப்பவும் பிஸ்னஸ்….அம்மா , தங்கச்சி … ரமேஷ் “
புன்னகைத்துக் கொண்டவன் …” அவன் என்னைப் பார்த்துக்கிட்டானா , நான் அவனப் பார்த்துக்கிட்டேனா தெரியாது … அவனே என் தங்கச்சி புருஷனா வந்தது…. எனக்கு வரம் தான் சொல்லுவேன்…. என் முதல் குழந்தை என் தங்கச்சி … அவளையும் அவன் கிட்ட ஒப்படைச்சுட்டேன் … இப்ப ஸ்ரீ…. ஸ்வீட்டி அப்படி இன்னொரு பிறவி இருந்தா அவன் இப்படியே எனக்கு நண்பனாதான் பிறக்கணும்…. அவன் மட்டும் இல்லனா நான் ….. அவனால தான் நீயும் எனக்கு கிடைச்ச ….. ” என்றவன் அவள் இடது கையை எடுத்து முத்தமிடவும் ,
” அனு சொன்னா … நான் இங்க திருப்பூர் ஆபிஸ்ல வேலைக்கு வந்த பிறகுதான் நான் உங்க மாமா பொண்ணுனு தெரியும்னு….”
“ம்… சீனியர் தங்கச்சினு சொன்னான் … அந்த லிப்ட் ஸ்டாஃப் யுஸ் பண்ண மாட்டாங்க…. தெரியுமா லிப்ட்ல போக பயந்த அந்த தேவதை என் பக்கத்துல வந்து நின்னு கண்ண விரிச்சு பார்க்கவும் தான் … நான் ஒரு சாதாரண ஆண் … ஆசைகள் அடக்கி வச்சுட்டு இருக்கேன்னு தோணிச்சு …ஒரு பொண்ண… அதுவும் அவ கண்ண பார்த்துட்டே இருக்க தோணுச்சு …..” என்று காரை மெதுவாக ஓரங்கட்டியவன் ….” இப்ப தெரியுதா இந்தக் கண்ணுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் கிஃப்ட் ” என்று அவளைப் பார்த்து புருவம் ஏற்றி இறக்கியவன்,
“இப்பவும் தரணும் தரட்டா…. “
முகத்தை வேகமாக மூடிக் கொண்டவள் , “ஐயோ வேண்டாம் அப்புறம் ….அப்புறம்….” அவள் கையை எடுத்து விட்டு சத்தமாக சிரித்தவன் வண்டியைக் கிளப்பிக்கொண்டே ,
” அப்புறம் ஒரு நாள் பிஸ்னஸ் விஷயமா கொடைக்கானல் வரும் போது , உன்னைய பஸ்ல பார்த்தேன் … அப்படியே ஃபாலோ பண்ணி வந்தா இப்ப காஃபி சாப்பிட்டோமே அங்க வந்து வண்டி நின்னுச்சு , உன்னைய பார்க்குற ஆசையில நானும் அங்க நின்னுட்டேன்.” என்றவன் அதன் பிறகு நடந்த ஒவ்வொன்றையும் அவள் ரசிக்க ரசிக்க சொன்னவன் , இடை இடையே முகம் சிவக்க வைத்து , அவளிடம் குறும்புடன் பேசி தோளில் அடி வாங்கி என அவர்களது வரவேற்பு வரை நடந்ததை அவளுக்கு தெரியப்படுத்தினான்.
ஆனால் அதன் பின்னர் நடந்த தங்களது அந்தரங்க பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டான். அவளாலும் அவனிடம் கேட்க முடியவில்லை. மெல்ல வேறு பேச்சுக்கு மாறியவர்கள் கொடைக்கானல் மலையை ஏறத் தொடங்கினர்.
போகும் வழியில் வழக்கம் போல் நின்று , அவளிடம் அதற்கான விளக்கத்தையும் கொடுத்து விட்டு அவர்களது கொடைக்கானல் வீட்டிற்கு வந்தனர்.
அவன் இறங்கவும் அவனருகில் வந்து நின்று ,
“அத்தான் … நான் இங்க தான் பிறந்து வளர்ந்தேன்னு சொல்றீங்க , ஆனா எனக்கு இங்க எதுவுமே நியாபகத்துல இல்லயே , ஊட்டிப் போல இதுவும் ஒரு மலைப்பிரதேசம்னு மட்டும் தெரியுது … ” என்று கண் கலங்கியவளை தோள் மீது கைப் போட்டு உள்ளே அழைத்து வந்தவன் ,
“உனக்கா எப்ப ஞாபகம் வருதோ அப்ப வரட்டும் … அதுவரைக்கும் எதுவும் போட்டுக் குழப்பமா நம்ம லைஃப புதுசா ஸ்டார்ட் பண்றதா நினைச்சுக்கோ.” என்று வீட்டினுள் அழைத்துச் சென்றான்.
மாலையானதால் அவளை விட்டு விட்டு , அங்கிருக்கும் அவர்களது தொழிற்சாலைகளை பார்வையிட்டு வருவதாக சொல்லிச் சென்றான். அந்த வீட்டை பராமரிக்கும் விஜயா சேகர் தம்பதியினர் ராதிகாவைக் கண்டு மகிழ்ந்துப் பேச ஆரம்பித்தனர் .
“என்ன சின்னம்மா நீங்க….. உங்கள வளைகாப்புக்கு வந்து பார்த்தது.ஐயாபிள்ளைப் பிறந்து பேர் வைக்க கூப்பிடுவாறுனு பார்த்தா நீங்க ரொம்ப முக்கியமான படிப்புனு பொறந்த பச்ச புள்ளைய விட்டுட்டு படிக்க போய்ட்டீங்களாமே …. பிள்ளைக்கும் ஒரு வயசு ஆகிப் போச்சு … இனி இப்படிலாம் ஐயாவையும் பிள்ளையவும் விட்டுட்டு போகாதீங்க மா…. ஐயா முகமே சரி கிடையாது … நம்ம சின்னவரு பொறந்த பொறவு ஒரு தடவை வந்தாரு , நாலு நாளா கொடைக்கானல் முழுசா சுத்தி சுத்தி வந்தாரு … அப்புறம் இப்பதான் வந்துருக்காங்க…”
ராதிகாவுக்கு இவர்கள் எல்லாம் சொல்லுவதைக் கேட்டு அப்படி எனக்கு என்ன தான் ஆச்சு … நான் இல்லாத நாட்கள்ல நான் அமெரிக்கால இருந்ததா சொல்லி வச்சுருக்காங்க , அரவிந்த் வந்ததும் கேட்க வேண்டும் என்று நினைத்தவள், மகனிடம் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தவள் , உடல் அயர்வில் உறங்கி விட்டாள்.
இரவில் வீடு வந்தவனுக்கு மெத்தை போன்ற ரஜாய்க்குள் பூ முகம் மட்டும் தெரிய கழுத்து வரை போர்த்திக் கொண்டு உறங்கும் மனைவியின் அழகில் ஈர்க்கப்பட்டவன் , தானும் ரஜாய்க்குள் புகுந்து அவளை அணைத்துக் கொண்டான். குளிருக்கு இதமான அணைப்பு அவளை மேலும் அவன் நெஞ்சில் புதையவைத்து ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுத்தது.
அதிகாலையில் அவளுக்கு முன்பாகவே எழுந்தவன் அவளைத் தயார் செய்து வெளியே அழைத்து சென்றான். முன்பு அவள் அவனுக்கு காட்டி பேசிய இடங்களை எல்லாம் இன்று அவளுக்கு அவன் நினைவூட்டினான். பூம்பாறை அழைத்துச் சென்று அவள் அம்மா வீட்டைக் காண்பித்து பேச , அக்கம் பக்கத்தில் அவளைத் தெரிந்தவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல், “அமெரிக்காலருந்து எப்போ வந்த ” என்பது தான். அவள் முகம் சுருங்குவதைக் கண்டு அவனே அனைவருக்கும் பதில் சொல்லி அழைத்து வந்தான்.
கொடைக்கானல் ஏரி அருகே வண்டியை நிறுத்திவிட்டு , ஏரியைச் சுற்றி இருந்த நடைபாதையில் அவள் கைப் பிடித்து நடத்திச் சென்றவன் , “என்னடா… எல்லாரும் நீ அமெரிக்கால இருந்து எப்ப வந்தனு கேட்கிறாங்கனு யோசிக்கிறியா … “
“ஆம்” என்பதாக தலையசைத்தவளிடம் , “உனக்கு நம்ம சொத்து மதிப்பு தெரியுமா….. தெரியாதானு எனக்குத் தெரியல…. அது இருக்கும் ஒரு ஆயிரம் கோடிகிட்ட… அதுல உன் ஷேர் மட்டும் சில நூறு கோடிகள்ல …” அவள் கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ,
“ஹேய் நமக்கு ஏகப்பட்ட பிஸ்னஸ் இருக்குடா…. இங்கயே தேயிலைத் தோட்டம் மட்டுமில்லாம பழத்தோட்டம் , காஃபி , இப்படி நிறைய ….”
புன்னகைத்துக் கொண்டே , ” நான் அதனால ஆச்சரியப்படலத்தான்… இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் அன்னைக்கு சர்ச் வாசல்ல எனக்காக உட்கார்ந்து இருந்தத நினைச்சுப் பார்த்தேன் … ஐ லவ் யூ அத்தான் … ” என்றவள் அவன் கைவளைவில் வந்து தோளில் நன்கு சாய்ந்துக் கொண்டாள்.
அவள் உச்சியில் முத்தமிட்டு , “இதுக்கு நான் என்ன சொல்றது … ம் .. நீ காணாமல் போனதும் உன்னைய வெளிப்படைய தேட முடியாதுடா … அது உன்னையப் பல விதத்தில கஷ்டப்படுத்தும்…. அப்புறம் பிஸ்னஸ்லயும் குழப்பம் உண்டாகும் … எதை சமாளிக்கிறது சொல்லு … அது தான் எல்லாரும் நம்பற மாதிரி அப்படி ஒரு பொய் சொல்லி … உன்னையத் தேடிட்டே இருந்தோம் ….. கொடுமைடா அந்த டைம் ….. நீ உயிரோட இருந்தாப் போதும்ங்கிற எண்ணம் மட்டும் தான் எங்களுக்கு …..” என்றவன் அன்றைய நாட்களின் நினைவில் அவள் இடுப்பில் கைப்போட்டு இறுக்கிக் கொண்டான்.
அன்று முழுவதும் கொடைக்கானலைச் சுற்றிக் காண்பித்தவனுக்கு அவளுக்கு எல்லாமே புதிதாக பார்க்கப்பட்ட இடங்களாகத்தான் இருந்தது. எந்த வகையிலும் அவளது ஞாபகங்கள் திரும்பவில்லை. குறிஞ்சி ஆண்டவரை தவறாது தரிசிப்பவளுக்கு அதுவும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகவேப் பட்டது. ஆனால் மலை உச்சியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தைக் கண்டவளுக்கு ஜெனிஃபராக உள்ளூர அப்படியொரு சந்தோஷம் … கடவுளிடம் என் கணவரோடு நன்றாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டு வந்தவளுக்கு, தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அரவிந்தின் மீதான காதல் பெருகித்தான் இருந்தது.
அந்த மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவளுக்கு அவனை விட்டு நகரவே மனம் வரவில்லை. வந்து குளித்து , விஜயா சமைத்து வைத்திருந்த உணவுகளை அறைக்கு எடுத்துச் சென்றவள் , குளியலறையிலிருந்த அரவிந்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.