“தாயம்மா நீங்க சொல்லுறது சரிதான் … நாளைக்கு எல்லாரையும் உக்கார வச்சுப் பேசுவோம்”
மறுநாள் ஊருக்கு கிளம்புவதற்கு முன் ரமேஷையும் அனன்யாவையும் அழைத்துப் பேசிய,தாயம்மாவும் ஜானகியும் அவர்கள் நால்வருக்குள் முதலில் பேசி முடிவெடுத்த பின் ,அரவிந்தையும் ராதிகாவையும் அழைத்து ,
“கால் பரவாயில்லயாமா…. “
“சின்ன வீக்கம் தான் சரியாகிடுச்சு அத்தை “
“அப்புறம்….ராதாம்மா உன் கூட ஊட்டில இருந்துச்சே அமுதவள்ளினு …, அந்தப் பொண்ண நம்ம சக்தி ஆசைப்படுறான் போல … அந்தப் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கும் போல ..நீ தான் அண்ணன் மனைவியா இருந்து சக்திக்கு கல்யாணத்தப் பண்ணனும் மா. தாய் தகப்பன் இல்லாத புள்ள நம்ம தான் முன்ன நின்னு செய்யணும் … அங்கமதர்கிட்ட பேசுறியா…”
முகமலர்ச்சியுடன் , “அத்தை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு …. அம்மு ரொம்ப நல்லப்பொண்ணு …. நான் இப்பவே மதர் கிட்ட பேசுறேன். “என்றவள் ஃபோன் பேச அறையை விட்டுச் சென்றாள். அவளையே கவனித்துக் கொண்டிருந்த அரவிந்த் புன்னகையோடு , ” ம்மா சக்திக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதே தெரியாம போச்சு … நான் அவன்கிட்ட பேசுறேன்…” என்றவன் ரமேஷுடன் வெளியேறினான்.
அனைவரது முகத்திலும் புன்னகையைக் கண்ட அனன்யா “ம்மா நான் சொல்றவரை சர்பிரைஸா தான் இருக்கணும் சரியா”
ஜானகியும் தாயம்மாவும் புன்னகையோடு தலையாட்டிக் கொண்டனர். அறைக்குச் சென்ற ராதிகா முதலில் கொச்சியிலிருக்கும் நான்சிக்கு ஃபோன் செய்து தான் தன் குடும்பத்துடன் இணைந்து விட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள். அவளை கோவைக்கு வந்துப் போகச் சொல்லி அழைப்பு விடுத்து , தானும் தன் மகனும் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்றையும் அனுப்பி வைத்தாள்.
மறந்தும் அரவிந்தோடு இருந்த அனன்யா அனுப்பி வைத்த ஃபோட்டோக்களை அனுப்பவில்லை. அவளும் அதைப் பார்க்கத் தோணினாலும் பார்க்கவில்லை.அமுதாவிற்கு பேசி வாழ்த்து தெரிவித்தவள் , “எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைனு எனக்கு ஞாபகம் வரும் போது வரட்டும் அம்மு … இப்ப தெரிஞ்சு … இவங்க எல்லாரும் பயப்படுற போல எனக்கு எதுவும் ஆகிடக்கூடாது அம்மு …… ஏன்னா ஏன்னா … என் புருஷனுக்கு நான் இல்லன பரவாயில்லை அம்மு ….. எம் புள்ளைக்கு அம்மா வேணும் …. எனக்கு குழந்தை இருக்குனு தெரிஞ்சதிலிருந்து நான் தவிச்ச தவிப்பு எனக்குத் தான் தெரியும் …. உன்னைய கஷ்டபடுத்தக்கூடாதுனு நானும் , என்னையக் கஷ்டப்படுத்தக்கூடாதுனு நீயும் இந்த விஷயத்தைப் பேசாமலே இருந்துருக்கோம்….இந்த ஃபிரண்ட்ஷிப் கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும்……இப்ப இந்த நொடி ஒரு தாயா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் … மதர் கிட்ட பேசி கல்யாணத்த ஏற்பாடு பண்ணப்போறோம். நீ ரொம்ப நல்லா இருக்கணும் அம்மு .உனக்கு என் வாழ்த்துக்கள்.”
அவளது பேச்சைக் கேட்டு மனம் நெகிழ்ந்த அமுதவள்ளி , ” ஜெனி…. நீ ராதிகா தான் …. ஆனா எனக்கு எப்பவும் நீ ஜெனி தான் … இப்ப தாயா சந்தோஷமா இருக்கிறதா சொல்ற நீ ஒரு நாள் , ‘மனைவியா ‘வும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்னு சொல்லுவ… அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்டி….”
புன்னகையோடே” சொல்றேன் சொல்றேன் … புதுப் பொண்ணு எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்கோ … சீக்கிரம் வருவோம் ” என மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைக்க , அரவிந்த் பின்னால் கைகட்டி ஜன்னலோரம் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அவளது புன்னகை நிறைந்த முகம் அவனை எப்போதும் போல் மயக்க , அருகில் வந்தவன் , அணைக்கத் துடித்தக் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு , அவள் முகம் நெருங்கினான்.
அவன் நெருங்க நெருங்க ஏதோ ஒரு படபடப்பு உடலில் தோன்ற …கண்களை படபடவென விரித்தவள் பின்னால் நகர முயல , கட்டில் தட்டி அப்படியே அதில் அமர்ந்துக் கொண்டாள்.
அவள் காதருகே உதடுகளைக் கொண்டு சென்றவன் , “அம்மா கூப்பிடுறாங்க” எனவும்… அவன் முத்தமிடுவது போல் நெருங்கிவிட்டு .. இப்படி சொல்லவும் வெட்கம் பூசிய முகத்துடன் …. அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டுக் கொண்டு அறையை விட்டு ஓடினாள்.
அவள் தள்ளி விடவும் தான் தன்னிலை உணர்ந்தவன் , அந்தக் கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.
“கடவுளே நான் நிதானம் தவறுறது போல இருக்கு …. இல்ல…. அவகிட்ட நானா இனி நெருங்கல …. கடவுளே என் ரதி நல்லா இருக்கணும்…. அவ எனக்கு மனைவிங்கிறத விட என் பிள்ளைக்குத் தாயா இருந்தாப் போதும்….. கன்ட்ரோல் யுவர் செல்ஃப் அரவிந்த் …. கன்ட்ரோல் யுவர் செல்ஃப் ….. இனி என்னைக் கட்டுப்படுத்திக்கணும்.”
கீழே ஜானகியின் அறை வந்தப் பிறகும் படபடப்பு அடங்கவில்லை.” இந்த அத்தான் ரொம்ப மோசம் … வேணும்னே இப்படி பண்றாங்க ….” என்று துப்பட்டாவை திருகி திருகி விளையாடிக் கொண்டே ஜானகியின் முன் நின்றவளுக்கு அவர் என்ன சொன்னார் என்றே காதில் விழவில்லை.
அவள் முகம் பார்த்தே அவள் நிலை அறிந்தவர் , அருகில் வந்து முகம் வழித்து திருஷ்டி கழிக்க , திடுக்கிட்டு நிமிர்ந்தவள் , “அத்தை ” என்றாள்.
” ரமேஷும் அனுவும்… இப்ப கிளம்பி ஊட்டிப் போகச் சொன்னேன். அரவிந்த் மதர்கிட்டயும் சக்தி கிட்டயும் பேசிட்டான். அவங்க நீங்களே எல்லா ஏற்பாடும் பண்ணுங்க , நான் கல்யாணத்துக்கு வாறேன்னு சொல்லிட்டாங்களாம். அனுமதர்கிட்ட நேர்ல பேசிட்டு அமுதாவ அழைச்சிட்டு திருப்பூர் போய்டுவா மா….. “
“அப்புறம் இன்னொன்னு….” என்று தயங்கியவர் , அமுதாவ கல்யாணம் பண்ணி சக்திக் கூட அனுப்புற வரை நீ திருப்பூர்ல அவளுக்கு துணையா இருக்கணும்….உன் பிள்ளையோட தான் …. இருப்பியா”
முகமலர்ச்சியுடன் , “அத்தை உங்க பேரன விட்டுட்டு நீங்க இருப்பீங்கன்னா ஓகே…. நான் உடனே கிளம்புறேன் அத்தை ” என்றாள்.
அவள் பின்னாலயே வந்திருந்தவன் , ” அடிப்பாவி என்னைய விட்டு இருந்துக்க எவ்வளவு வேகமா தலைய ஆட்டுறா…. நீ அப்படியே இரு … என் நினைப்பே உனக்கு வேண்டாம் … “
“சரி பேரனுக்கு நாளை உடம்புக்கு கொஞ்சம் பரவால்லனு தோணினா நாளைக்கே கிளம்புங்க. முதல்முகூர்த்தமே ஏற்பாடு பண்ணப் போறேன்.”
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன.அமுதாவைத் திருப்பூர் அழைத்து வந்து விட்டார்கள். மகன், தாய் தந்தை இருவரையும் தேடுகிறான் என்றக் காரணத்தால் அரவிந்தும் இரவில் திருப்பூர் வந்துவிட, காலையில் எழுந்து செல்லலானான்.அமுதாவும் ராதிகாவும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள, வருபவன் அவளை நேருக்கு நேர் பார்ப்பதுக்கூட இல்லை. மகனிடம் கொஞ்சி விட்டு செல்வதோடு சரி.
திருப்பூர் வீட்டில் முகூர்த்தப்பட்டு எடுக்க கடையையே வந்து குவிக்க , ஜானகி தாயம்மாவைத் தவிர ராணி சிவா உட்பட அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அனன்யாவும் ,ராணியும் தத்தம் கணவர்களிடம் நேரடியாகவே புடவையை மேலே வைத்து , இதை எடுக்கவா, அதை எடுக்கவா என்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் , அமுதா விழிகளாலயே அரவிந்த் அருகில் அமர்ந்திருந்த சக்திவேலிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ராதிகாவின் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டது. அரவிந்த் மகனோடும் மருமகனோடும், சிவாவின் குழந்தைகளோடும் விளையாடிக் கொண்டிருக்க ராதிகா புறம் திரும்பவேக் காணோம். அவன் தன்னைப் பார்ப்பான் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு அவனது இந்த பாராமுகம் மனதை என்னவோ செய்தது. அவன் அன்று மிகவும் நெருங்கி சலனம் ஏற்படுத்தியதோடு சரி. அதன் பிறகு அரவிந்திடம் இருந்து எந்தப் பேச்சுக்களும் இல்லாதது மனதை வேதனைப்படுத்தியது. அனைவரையும் போல் அவனும் தனக்குச் சொல்லமாட்டானா என்ற ஏக்கம் அதிகமாகி கண்ணீரை வரவழைக்க யாரும் அறியாவண்ணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து அறைக்குச் சென்று விட்டாள்.
அரவிந்த் குழந்தைகளோடு விளையாடினாலும் அவனது கவனம் ராதிகாவை விட்டு நொடிக் கூட நகராது என்பதை அவள் அறியவில்லை. அவளது தவிப்பைப் கவனித்துக் கொண்டே தானே இருந்தான்.அனன்யாவிடம் சொல்லி ராதிகா அதிகமாக ரசித்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று புடவைகளை தனியாக எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு மகனைத் தூக்கிக் கொண்டு அவளிருக்கும் அறைக்குச் சென்றான்.
தட்டிவிட்டு உள்ளே வந்தவன் மகனை இறக்கிவிட , குழந்தையும் இறங்கி “ம்மா” என்றுத் தாயிடம் சென்றது. ஜன்னலில் முகம் பதித்து வெளியே வெறித்துக் கொண்டிருந்தவள் குழந்தையை தூக்கிக் கொண்டு அரவிந்தைப் பார்க்க ,
மனைவியின் கண்களைப் பார்த்துக் கொண்டே , “ஸ்ரீ குட்டி அப்பா செலக்ட் பண்ணிருக்க புடவைங்க உங்கம்மாவுக்கு பிடிச்சிருக்கா தெரியல. முடிஞ்சா சித்தப்பா கல்யாணத்துல அதுல ஒண்ண கட்டச் சொல்லுங்க… சரி அப்பா கீழே வெயிட் பண்றேன்.” எனத் திரும்பப் போனவனை,
“அத்தான் “
அப்படியே நின்றவன் அருகில் வந்தவள் , “ஏன் அத்தான் அன்னைக்கு நான் சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டீங்களா….. என்கிட்ட பேச மாட்டிக்கிறீங்க , ஏன் பார்க்க கூட மாட்டிக்கிறீங்க…. நீங்க அப்படி பண்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குத் தெரியுமா ….” என அழுவது போல் பேசிய வளைப் பார்த்தவன் ,
அவள் கையிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். பதில் கூடச் சொல்லாமல் வெளியேறியவனைக் கண்டு அழுகைப் பொங்க , அப்படியே தரையில் அமர்ந்து அழுதவள் தோளைத் தொட்டு எழுப்பினான் அரவிந்த்.
திடீர் தொடுகையில் திடுக்கிட்டு எழுந்து நின்றவளைப் பார்த்துக் கொண்டே ,
“நான் உன்கிட்ட சொன்னது போல நானா விரும்பி உனக்கு கட்டாயத் தாலிக் கட்டினது போல கட்டி , என் விருப்பத்தை எல்லாம் உன் மேல திணிச்சு உன் கூட குடும்பமும் நடத்தி பிள்ளையையும் பெத்துக்கிட்டேன். இன்னொரு தடவை அந்தத் தப்பை நான் செய்ய விரும்பல. அதனால தான் நான் உன்கிட்ட சரியா பேசுறது இல்ல…..
மிகவும் நெருங்கி நின்றவன் , இடக்கையால் அவள் இடுப்பை அவனோடு இறுக்கி, வலக்கை விரல்களால் அவள் வதனத்தில் கோலமிட்டுக் கொண்டே … “உன்னைய ஏன் பார்க்கிறது இல்லன……”
அவளது ஈர நயனங்களில் அழுத்தமான முத்தங்களைப் பதித்து விட்டு , அவளது அழகிய அதரங்களின் துடிப்பை தன் இதழ்கள் கொண்டு அடக்கும் வேலையை வெகு நாட்களுக்குப் பிறகுச் செய்தான். அவளது கண்ணீரின் உப்புச் சுவையோடு , இதழ் தேனின் சுவையும் சேர்ந்து கொள்ள , தன்னை மறந்தவனின் கரங்கள் வெகு நாட்களுக்குப் பிறகு தன்னவளின் மேடு பள்ளங்களை ஆராயும் முயற்சியில் இறங்கி விட்டது.
ராதிகாவாக அவனது முத்தத்தைப் பெற்றவளுக்கு அவளினுள் இருந்த ஜெனிஃபர் விழித்துக் கொண்டதும் அவனை வேகமாகப் பிரித்தெடுத்து மூச்சு வாங்கினாள்.
அரவிந்துக்கு வாயருகே கொண்டு சென்ற உணவை யாரோ தட்டி விட்டது போல் இருக்க , திகைத்தவன் தலையை இரு கைகள் கொண்டு கோதி ,
“இப்ப புரியுதா நான் ஏன் உன்னைப் பார்க்கிறது இல்லைனு …. நீ வெறும் ஈர்ப்பு மட்டும் தான் இருக்குனு சொல்ற … அந்த ஈர்ப்பு எப்போக் காத….” நிறுத்தியவன் பெருமூச்சோடு ,
” கணவன் அப்படிங்கிற எண்ணமா மாறப்போகுதோ தெரியல ……ஆனா எனக்கு அப்படி இல்லையே …. நான் ஆசைப்பட்டு காதலிச்சு கட்டின மனைவி அப்படிங்கிற எண்ணம் தான் வருது ….. அப்படி இருக்கும் போது நான் எப்படி கணவன்கிற உரிமையை எடுத்துக்க முடியும்… உனக்கு எப்போ என்னைய முழுமையா கணவனா ஏத்துக்க முடியுமோ … அப்ப வரை காத்திருப்பேன்…. அதுவரை ….ஐ ம் சாரி டியர்….. என்னை இப்படியே இருக்க விட்டுரு…..”
வேகமாக கதவைத் திறந்து வெளியே சென்றவனையே இமைக்காதுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா ….
“எனக்கு ஈர்ப்பு மட்டும் தான் இருக்கா ….. இல்லையே … “
அவன் அழைத்து வந்த நாளிலிருந்து அவனது செய்கைகள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவளுக்கு முகம் பூரிப்பாக…..
“அந்த ஈர்ப்பு காதலாக மாறிப்போச்சே அத்தான்….. எஸ் ஐ லவ் யூ அத்தான்… இந்த உணர்வு ரொம்ப நல்லாருக்கே… அவன் இதழ் பதித்த இதழ்களை வருடிக் கொண்டவள்….. காதல் வந்துருச்சு எனக்கு…. உங்க மேல காதல் வந்துருச்சு….” புன்னகை சிந்திக் கொண்டாள்.
” அழகாய் பூக்குதே…… சுகமாய் தாக்குதே“
“காதல்” என்ற வார்த்தையை உச்சரிக்கவே முகம் சுழித்தவள்….இன்று முகம் நாண …… “காதல் அழகானது ” எனச் சொல்லிக் கொண்டாள்…..
காதல் அழகானது….. ராதிகாவுக்கு மட்டுமல்ல எனக்கும் …. உங்களுக்குமே…..