Advertisement

அழகு 11

        அத்தனை பேர் முன்னிலையிலும் கோபமாகவும் அழுது கொண்டும் ,

“ஏன் அப்படிச் சொன்னீங்க அத்தான் …ஏன் … எனக்கு என்ன ஆச்சு , ஏதாச்சுனு இப்பக் கேக்கல …. உயிரோட இருக்கிறவள ஏன் அப்படிச் சொன்னீங்க…… இவங்க யாருகிட்டயும் என் மனசுல உள்ளத நான் கொட்டல…. உங்ககிட்ட ஏதோ ஒன்னு ஈர்க்கப் போய்தானே… நான் ஹாஸ்பிட்டல்ல என் மனசுல உள்ளதல்லாம் கொட்டினேன்….. எம் புள்ளயவே இருக்கானா…. செ ……” அதற்கு மேல் பேச முடியாமல் அழுதவள் எழுந்து மாடிப்படியில் ஏறலானாள்.

“ஏன்னா … நான் தான் உன்னைய விரும்பினேன் … உன்னைய ஒரு இக்கட்டான சூழ்நிலைல காப்பாத்துறதா நினைச்சு … உன்னைக் கேட்காமலே தாலிக் கட்டினேன்….. என்னால தான் உனக்கு இப்படி பழையது எல்லாம் மறந்துச்சு…. இப்படி உன் நிலைமைக்கு நான் தான் காரணம்…. நீ என்னை விரும்பவே இல்ல…. அதான் ….அதான் நீ என்னை மறந்தது மறந்ததாவே இருக்கட்டும்னு நினைச்சேன். …. உண்மையைச் சொல்லி உனக்கு ஏதாவது ஆச்சுனா ….அதனால தான் எல்லாரும் அமைதியா இருந்தோம்.

எல்லாத்துக்கும் நான் தான் காரணம்….. இப்ப சொன்னது எல்லாம் உண்மை…..” என்ற மகனின் தவிப்பைக்  கண்ட ஜானகி….

” ராதாம்மா அரவிந்த் செய்தது சொன்னது எல்லாமே தப்புதான் …. நீ இவ்வளவு மனசொடிஞ்சு போவன்னு நினைக்கல …. உன்னால மன்னிக்க முடிஞ்சா ….”

ஜானகி அருகில் வந்தவள் , அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு , “ப்ளீஸ் அத்தை ” என்றவள் மறுபடியும் வேகமாக மாடிப்படி ஏற , கால் தடுமாறி அப்படியே படியில் “ஆ” என்று அமர்ந்து விட்டாள். அனைவரும் அவளருகில் ஓட , அரவிந்த் பதறிப் போய் அவள் பிடித்திருந்த காலை பிடித்துப் பார்த்துக் கொண்டே , “என்னடா… என்னடா ஆச்சு”

அவனது பதட்டத்தைப் பார்த்துக் கொண்டே , வலியில் , ” தெரியல வலிக்குது … ” என்றாள். காலைப் பார்த்தால் அது வீங்க ஆரம்பித்தது… அவளை அப்படியே கைகளில் ஏந்தி , ” ரமேஷ் வண்டிய எடுடா … ஹாஸ்பிட்டல் போகலாம்…”

அவன் தோளில் கை வைத்துக் கொண்டே , ” ண்ணா வேண்டாம் … தைலம் போட்டுக்கிறேன் …” என்றவள் அரவிந்தைப் பார்த்து , “என்னை இறக்கி விடுங்க , நான் நடந்துருவேன்”

சுற்றி நின்றவர்கள் இதற்கு மேல் அவர்கள் பாடு என்பது போல் , “அரு … மருந்துப் போட்டுப் பார்ப்போம் … ரொம்ப வலியிருந்தா ஹாஸ்பிடல் போகலாம் … போய் அவள படுக்க வை” என்ற ஜானகி அறைக்குச் செல்ல … அரவிந்தும் ராதிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவள் இறக்கி விட சொல்ல மட்டுமே செய்தாள்… இறங்க முயற்சிக்கவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டே அவர்களது அறை வாசல் செல்ல … கதவை திறக்க அவளை இறக்கி விட முயல , அவளோ கதவை திறந்துவிட்டு அவன் முகம் பார்த்தாள். அவனும் மேலும் எதுவும் பேசாமல் உள்ளே தூக்கிச் சென்றவன் கட்டிலில் இறக்கி விட்டு, கபோர்ட்டை திறந்து காலில் போட மருந்து எடுத்து வந்தான்.

அறையை நோட்டமிட்டவள் கண்களில் அவர்களது வரவேற்பு போட்டோ ஒன்றும், அவளது வளைகாப்பு போட்டோவில் , அவளது பெரிய வயிற்றில் புடவைக்கு மேல் அவன் முத்தமிட,  சிவப்பு நிற நாணம் பூசிய கன்னத்தை சந்தனம் பூசி மறைத்து இருக்க அவன் தலைமுடி மீது கை வைத்தது போன்ற அழகிய ஃபோட்டோ ஒன்றும் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.

 ராதிகா அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க , அவனோ மருந்தைத் தேடி எடுக்கும் போதே , ” இவள இங்க தூக்கிட்டு வரும் போதெல்லாம் இவ பண்ற ஆர்ப்பாட்டம் என்ன … இப்ப இறங்காம கதவு திறந்து விடுறதப் பாரு….” நினைத்துக் கொண்டே மருந்தை எடுத்து அவள் காலில் தடவி விட்டுக் கொண்டிருந்தான்.வலியில் , “ஷ்..” என சத்தம் கொடுக்கவும் ,

“சாரிடா …சாரிடா … ரொம்ப வலிக்குதுதா… ஹாஸ்பிடல் போயிரலாமா” என்று அவள் வலியை அவன் முகம் பிரதிபலிப்பதைப் பார்த்தாள்.

மென்மையாக தலையசைத்தவள்… “அத்தான் நீங்க சொன்னது போல … நீங்க என்னை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டீங்கனு தெரியுது….. இப்போவும் உங்க அன்ப வெளிப்படுத்துறத நான் புரிஞ்சுக்கிறேன் .

இவ்வளவு காதல என் மேல வச்சுருக்கிற உங்கள நான் வெறுத்தேனா….. உங்களால தான் எனக்கு இப்படி ‘என்னைய வே’யார்னு தெரியாத நிலைமையா……” மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி கால்களை விந்தி விந்தி அந்த போட்டோக்கள் அருகில் சென்றவள் ,

“இந்த ஃபோட்டோஸ் எல்லாம் உங்க மேல வெறுப்ப காட்டுறது போலயா இருக்கு … எனக்கு நம்ப முடியல … ஆனா அப்ப உள்ளது எதுவும் தானா எனக்கு ஞாபகம் வரட்டும்….. நீங்க எல்லாரும் சொல்ற ‘என்னோட நல்லதுக்குத்தான்னா ‘அது இப்போ வேண்டாம். எனக்கு என் குடும்பம் கிடைச்சிட்டு அது போதும்….” என்றவள், மறுபடியும் விந்தி விந்தி கதவருகே சென்றாள்.

அவள் வெளியேறுவதை உணர்ந்தவன் , அருகில் வந்து , “எங்கடா போற … வா வந்து ரெஸ்ட் எடு…” ,

“என் பையன் கிட்ட என்னைய கூட்டிட்டுப் போய் விடுங்க… “

“நான் அவரை இங்க கூட்டிட்டு வாறேன்…” என்று வெளியே போகப் போனவனை கைப் பிடித்து தடுத்தவள் ,

“என்னையப் பாருங்க … எப்படி இருக்கேன்….”

” உனக்கென்னடா … என் ரதி நிஜ ரதியவே தோற்கடிச்சிருவா…” என கண்களில் ரசனையோடு சொன்னவன் …வெகு நாட்களுக்கு பிறகு அந்தக் கன்னத்தின் மென்மைையை கைகள் கொண்டு வருட …. நாணத்தில் சிலிர்த்து சிவப்பு நிறம் பூசிய கன்னங்களிலிருந்து அவன் கைகளை பிடித்து , இறக்கி விட்டவள்.

“அத்தான் என்னைய மன்னிச்சிருங்க….. எனக்கு உங்க கிட்ட ஈர்ப்பு இருக்கிறது உண்மை…. இந்த ஃபோட்டோஸ் , பழைய வீடியோஸ்…. எல்லோரும் சொல்றது  ….இப்படி பார்த்தது கேட்டது வச்சு நான் உங்க மனைவிங்கிறத தெரிஞ்சுக்கிட்டது உண்மை….. ஆனா இப்ப ஜெனியா இருக்கிற எனக்கு எந்த வித அடையாளமும்…. அதாவது கிரிஸ்டினா இருந்தாமோதிரமும்….. இந்துவா இருந்தா தாலியும், அதோ நம்ம ஃபோட்டல இருக்கிறது போல நெத்தியில குங்குமமும்  போட்டுருப்பாங்க அப்படினு மட்டும் தெரியும்….இது எதுவுமே இல்லாம உங்க பக்கத்துல நான் இருக்கிறது…. சாரி அத்தான்….

எனக்கு …எனக்கு ஏதாவது விபத்து எதுவும் நடந்துச்சா….. தலையில எதுவும் அடிபட்டதா…. ஏதோ ஒன்னு நடந்திருக்கு … எனக்கு முடி நீளம்னு தெரியுது…. ஆனா கண்ணாடியில  அப்போ நான் என்னைப் பார்த்தப்போ ரொம்ப கம்மியா தான் முடியும் இருந்துச்சு….. ஏன் எப்படி …. இப்படி … இது எதுவும் எனக்கு இப்ப தெரிய வேண்டாம் … ஆனா அத்தான்…. நான் மதர் கூட வந்த நாளில் இருந்து என் கழுத்து கை காதுகள்ல ஒரு பிளாஸ்டிக் தோடோ , வளையலோ… ஏன் கழுத்துல சாதாரண மணி மாலைக் கூட கிடையாதுனு தெரியும்.. அது தொலைஞ்சுப் போச்சா , இல்ல உங்க கிட்ட இருக்கா….. ஃபோட்டோஸ் பார்க்கிறப்போ .. நான் நிறையப் போட்டுருக்கிறது தெரியுது….. உங்க கிட்ட இருந்தா தாங்க ,தொலைஞ்சு போயிருந்தா திரும்ப வாங்கி தாங்க ….

அப்போதான் என்னால இந்த ரூம்ல உரிமை எடுத்துக்க முடியும்… அதுவரை என்னை மன்னிச்சிருங்க அத்தான் …..” என்றவள் , குழந்தை உறங்கும் அறையை நோக்கி சுவற்றைப் பிடித்துக் கொண்டு சென்றாள்.

வேகமாக கபோர்டை நோக்கிச் சென்றவன் , அவளது பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் இடத்திலிருந்து அவளது நகைகள் அடங்கிய பெட்டியைத் திறந்து தாலி , மெட்டி, வளையல் , கொலுசு … என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இரண்டடி நகர்ந்தவன் , என்ன நினைத்தானோ பின் கட்டிலில் அப்படியே அமர்ந்து விட்டான்.

“உங்க மேல ஈர்ப்பு இருக்கு ….ம்ஹ்ம் , எப்படிச் சொல்லிட்டுப் போற…. ஈர்ப்பு மட்டும் வச்சிருந்தா இன்னைக்கு உனக்கு இந்த நிலை வந்துருக்காதே….” எழுந்து தாயின் அறைக்குச் சென்றான். அங்கு ஜானகி அப்போதுதான் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்க ,

“அரு என்னப்பா தூங்கல … நேத்திலருந்து உனக்கு ஒரே அலைச்சல் …. ரெண்டு நாளாவது ரெஸ்ட் எடுத்து ராதாகிட்ட பக்குவமா பேசி உண்மையபுரியவை …. என்னதாயம்மா நீங்களும் வந்துட்டீங்க , பேரனத் தூக்கிட்டு அரு ரூம்க்கு போய்ட்டாளா…. ” என அங்கு வந்துக் கொண்டிருந்தவரையும் கேட்க ….”

“எங்க ஜானு… பிள்ளைய நான் பார்த்துக்கிறேன்…. நீ இன்னிக்கு அரவிந்துகிட்ட பேசுனு சொன்னா…. கழுத்துல தாலி இல்லாம என்னால அங்க இருக்க முடியலனு அழுகுது…..”

ஜானகியின் மடியில் தலை வைத்துக் கொண்டு , ” ம்மா எங்கிட்டயும் அப்படி சொல்லிட்டுத்தான் வெளிய போனா…. ” என்றவன் அவன் கையிலிருந்த பையை எடுத்து ஜானகியிடம் கொடுத்து,

“ம்மா போன தடவை நான் என் விருப்பத்துக்கு நேரம் காலம் பார்க்காம போட்டதால தான் இப்படி எல்லாம் நடந்துச் சோனு ஒரு ஃபீலிங் … இந்த முறை நீங்களே சொல்லுங்கம்மா … அப்ப அவ கழுத்துல போடுறேன்.” நான் வாறேன் மா என்றவன் எழுந்து சென்று விட்டான்.

“ஜானு ….புள்ள சொல்றது சரிதான்…. நாளைக்கே ஜோசியர் கிட்ட நல்ல நாள் பார்க்கச் சொல்லு ,வர்ற முதல் முகூர்த்தத்திலயே குல தெய்வக் கோயில்லயே தாலிக்கட்ட வச்சுக்கலாம்” என்றவர், “அப்படியே சத்தி கல்யாணத்தையும் வச்சுருவோம் , ஊட்டில ராதிகா கூட இருந்தப் பொண்ணதான் விரும்புறான்னு பாப்பா சொல்லிச்சு , அரவிந்துகிட்ட சொல்லி மடத்துக்காரம்மாகிட்ட பேச சொல்லுவோம்.”

Advertisement