கோவையை அடைந்தவனுக்கு அவளது பேச்சுக்களே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. காரிலேயே உறங்கி விட்ட குழந்தை , வீட்டிற்கு வந்ததும் அழத் துவங்கியது. ஒரு வாரமாக தாயின் அணைப்பில் உறங்குவதும் , தாயின் முகம் பார்த்தே விழிப்பதுமாக இருந்த குழந்தைக்கு இப்போது தாயைக் காணவில்லை என்றதும் “ம்மா …ம்மா” என்று அழுது தன் தேடலை அனைவருக்கும் காட்டியது.
பசியில் அழுகிறானோ என்றுப் பாலைக் கொடுத்தாலும் சரியாகக் குடிக்காமல் அழுதுக் கொண்டே இருந்தான்.
அரவிந்த் தூக்கினாலும் சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கிய குழந்தையை அரவிந்தாலும் சமாளிக்க முடியவில்லை. வரவேற்பறையில் இருந்த பெரிய டிவியில் வழக்கமாக, “அம்மா பாருங்க” என்று சொன்னதும் ராதிகாவின் வீடியோ ஃபோட்டோக்களைப் பார்த்து சிரிக்கும் குழந்தை , இன்றும் அழுதுக் கொண்டிருந்த குழந்தை திரையில் தாயைக் கண்டதும் அழுகையை நிறுத்தி அரவிந்தின் தோளில் இருந்து இறங்கி தளிர் நடையிட்டு தொலைக்காட்சி அருகே சென்று ராதிகாவின் உருவத்திடம் கைகள் இரண்டையும் தூக்கி ,
“ம்மா ஊக்கு …ம்மா ஊக்கு” என்றது. பார்த்துக் கொண்டிருந்த மூவருக்குமே கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. மகனின் தவிப்பைக் கண்ட அரவிந்த் குழந்தையை தூக்கிக் கொண்டு மாடி படிகளில் ஏறிச் சென்று விட்டான்.
ஜானகியால் பேரனின் அழுகையையும் , மகனின் வேதனையையும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை , நேரம் பார்க்காமல் அனன்யாவிற்கு ஃபோன் அடித்து இங்கு நடந்தது அத்தனையும் சொல்லி அழ ஆரம்பித்து விட்டார்.அவளும் , ஜெனியின் நிலையைச் சொல்லி வருந்திக் கொண்டிருந்தாள்.
மாடியில் அறையில் தன் நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்து , பாட்டுப்பாடி ஒரு வழியாக அழுது கொண்டே உறங்கியக் குழந்தையிடம் , “உங்கம்மாவ நீங்கத் தேடுறீங்கனு அழுது காட்டிட்டீங்க ….. நான் …. எனக்கும் அழுகை வருது தெரியுமா …. அப்ப எங்கம்மாவுக்கு என்னைத் தெரியல , இப்ப உங்கம்மாவுக்கு என்னைத் தெரியல….. என்ன செய்ய சொல்றீங்க…. என்னையப் போல ரொம்ப நாள் உங்கள காக்க விடமாட்டேன். சீக்கிரமே உங்கம்மாவ கூட்டிட்டு வந்துருவோம்….” மகனிடம் ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தவன் எப்போது உறங்கினானோ …. உடல் முழுதும் சூட்டினை உணர்ந்தவன் , கண் விழித்துப் பார்க்க , குழந்தையின் உடல் தான் சிவந்து அனலாய் கொதித்தது.
அப்படியே நெஞ்சோடு அணைத்து எடுத்துக் கொண்டு கீழே ஓடியவன் , யாரையும் எழுப்பாது காரை நோக்கி ஓடினான். இரவுக் காவலாளி அரவிந்த் கையில் குழந்தையோடு வருவதைப் பார்த்து விட்டு வெளிக் கதவைத் திறந்துவிட்டு அவனருகில் வந்தார்.
காரில் குழந்தையை தனியாக அழைத்துச் செல்லும் வசதியுள்ள சீட்டில் படுக்க வைத்து பாதுகாப்பு பெல்டைப் போட்டுக் கொண்டிருக்க , செக்யூரிட்டி அருகில் உதவிக்கு வந்தவரிடம் , மருத்துவ மனைப் பெயரைச் சொல்லி அங்குச் செல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான்.
அதிகாலை நான்கு மணி என்பதால் அந்த இருபத்து நான்கு மணி நேர குழந்தைகள் மருத்துவமனையில் கூட்டம் அதிகமில்லை. கார் ஓட்டும்போதே ஃபோன் செய்து விட்டதால் , இவன் கார் வந்து நிற்கவுமே ஊழியர்கள் தயாராக நின்றனர் . குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அரவிந்திடம் உங்கள் மனைவியை வரச் சொல்லுங்கள் என்று விட்டார்.
தடுப்பூசிப் போடும் போதுக் கூட அருகில் நிற்க அச்சப்பட்டு தங்கையையோ தாயையையோ அனுப்பி வைப்பவனுக்கு , இப்பொழுது ஊசிப் போட்டதும் குழந்தை வீறிட்டு அழுவதைக் காணத் தாள முடியவில்லை. ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து விட்டேச் செல்லுங்கள் என்று விட்டார்.
அதற்குள் வீட்டில் குழந்தைக்கு பால் தயார் செய்து விட்டு காத்திருந்த தாயம்மா அரவிந்த் எண்ணிற்கு அடிக்க அவனும் விவரம் சொல்லிவிட்டு ரமேஷிற்கு ஃபோன் செய்தான்.
விடிகின்ற நேரம் என்பதால் ரமேஷும் ஃபோனை உடனே எடுத்து விட்டான். கேட்ட அனன்யா உடனே கிளம்பி விட்டாள். மகனைத் தூக்கிக் கொண்டு கீழேவர , அங்கே பூஜையறை வாசலில் அமர்ந்து நிலையில் தலைசாய்த்துக் கடவுளையே வெறித்துக் கொண்டிருந்தவள் அருகில் சென்றவள் , சொல்லிவிடலாமா, “நீ தான் ராதிகா ” என்று நினைத்துக் கொண்டே அவள் தோளில் கை வைக்க , கண்களைத் துடைத்துக் கொண்டே ,
“இந்தா அனு ….என் மருமகனுக்கு பால் ….. ” என்று அவள் கையில் சிப்பரைத் தந்தவள் … கண்கள் கலங்கிக் கொண்டே …, “தினமும் ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு வர்ற நியாபகத்துல ஸ்ரீ குட்டிக்கும் எடுத்துட்டு வந்துட்டேன்….. ” என்று இன்னொரு பால் சிப்பரைக் காட்டிய வளைக் கண்ட கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அண்ணி எழுந்திரிச்சு வா …. நாம கோவைக்குப் போறோம்…. கிளம்பு … “
“நிஜமாவா … ” என்று முகம் மலர்ந்தவள், வேகமாக எழுந்து நின்று , “ரெண்டு பேரும் கிளம்பித் தயாரா வந்துருக்கீங்க… ஏதும் ….ஏதும் பிரச்சினை இல்லையே” என்றுக் கலவரத்துடன் கேட்டவள் , தலையைப் பிடித்துக் கொள்ளவும் , பயந்து போன அனன்யா ,
“ஒன்னும் பிரச்சினை இல்லையண்ணி… நீயும் அழுதுட்டு இருக்க … குழந்தையும் உன்னைத் தேடுறாராம் ….அதுதான் நாம அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம் வா…” என்று அவளைத் தயார்படுத்தி அழைத்துச் சென்றாள்.
கோவைச் செல்லுகையில் இரவில் உறங்காமல் தவித்தவளுக்கு, குழந்தையைக் காணச் செல்கிறோம் என்ற நிம்மதியே சிறிது நேரத்தில் கண்ணயர வைத்தது.
மருத்துவமனை வாசலில் காரை நிறுத்திவிட்டு ராதிகாவைப் பார்க்க , அவள் மெல்ல விழிகளை கசக்கிப் பார்த்து விட்டு , வேகமாக காரை விட்டு இறங்கி அனன்யாவைப் பார்க்க , அவள் வலக்கைப் பிடித்து குழந்தையின் உடல்நிலையைச் சொல்லவும், கையை விடுவித்துக் கொண்டு உள்ளே ஓடியவள் அங்கிருந்த வரவேற்பாளரிடம் விவரம் கேட்டு குழந்தையின் அறை நோக்கி ஓடினாள் .அந்த அறைக்கதவை திறந்து உள்ளே மூச்சு வாங்க வந்தவள், கட்டிலில் அமர்ந்திருந்த அரவிந்தின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தக் குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கட்டிலில் அரவிந்த் அருகிலயே அமர்ந்து விட்டாள். அங்கிருந்த யாரையும் கவனிக்கவில்லை.
அனன்யாவும் ரமேஷும் அவள் பின்னாடியே உள்ளே வந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளருகில் எழுந்து வந்த ஜானகி ,அரவிந்தைப் பார்த்துக் கொண்டே , ராதிகாவின் தோள் தொடவும் தான் உணர்வுக்கு வந்தவள் , அரவிந்த் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்து எழப் போனாள்.
“இரு ராதாம்மா, உன் பிள்ளைய உங்கிட்டயே தந்துட்டோம் … நீ பார்த்துக்கோ… சாயந்திரம் வீட்டுக்குப் போகலாம் சொன்னாங்க … வந்துருங்க….” என்றவர் ,
” அனுமா குழந்தையை வச்சுட்டு நீயும் இங்க இருக்க வேண்டாம் , வா போகலாம்… தாயம்மா வாங்க … ரமேஷ் எங்களை வீட்டில விட்டிருப்பா ….”
“ம்மா… “என்ற அரவிந்தை ‘பேசாதே ‘ என்பது போல் சைகை செய்தவர் , அவள் வரும் வரை அவளிடம் உண்மையைச் சொல் என்றுக் கொண்டிருந்தார் என்பதால் ,
“அவ பிள்ளைய அவ பார்த்துக்க வந்துட்டா , எம் பிள்ளையை நான் தான் பார்க்கணும்… ராதிகா எனக்கு சொன்னது தான்… கசப்பா இருந்தாலும் மருந்து சாப்பிட்டுத்தான் ஆகணும் அரவிந்த் …. ” என்றவர் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அவர்கள் பேச்சை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் , அவர்கள் வெளியேறியதும் , அரவிந்த் அருகில் இருப்பதை உணர்ந்து ,குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கீழிறங்க போனவளை , “நீ உட்கார்” என்றான்.
எழுந்துக் கொண்டவன் “நான்..” என்று ஆரம்பிக்க , அவளும் “நான் …” என்று ஆரம்பிக்கவும் , “சொல்லு…” என்று கைகட்டிக் கொண்டான்.
“உங்களுக்கு …. உங்களுக்கு … என்னையப் பத்தி எல்லாம் தெரியுமா…..”
அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றான். என்ணங்களோ , ” தெரியாம இருக்கிறது எதுனு நீ தான் சொல்லணும்டா” என்பதாக இருந்தது. ஆனாலும் ” ம் … ” என்று மட்டும் சொன்னான்.
அவனது பார்வையை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை … அது ஏன் என்றும் புரியவில்லை .. விழிகளை தாழ்த்திக் கொண்டவள் ,
“மதர் உங்ககிட்ட எல்லாம் சொல்லிருப்பாங்க …ஏன்னா நம்பி உங்கக் கூட என்னை அனுப்புறாங்கன்னா … முழுமையா அவங்ககிட்ட வந்து சேர்ந்த நாள்லருந்து சொல்லிருப்பாங்க…. நான்….. நான் ….. கன்னிப் பொண்ணு இல்லணுக் கூட …..” என்றவள் அதைச் சொல்லும்போதே முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அருகில் நெருங்கித் தொடப் போனவன் , “எனக்குத் தெரியாதுனு மதர் நினைச்சிட்டு இருக்காங்க , ஆனா…. ஆனா … எனக்குத் தெரியும்… ஏன் நான் ஒரு குழந்தைப் பெத்துருக்கேன்னுக் கூட….எனக்கு நான் யார் என்னனு தெரியாம இருக்கலாம் ….. ஆனா ஒரு பெண்ணா என் உடல் மாற்றங்கள் எனக்குத் தெரியாதா….. கொச்சின்ல இருக்கிறப்ப எனக்கு சந்தேகம் தான் இருந்தது … ஆனா ஊட்டி வந்தப்போ ,ஹாஸ்டல்ல இருந்த நர்ஸ் பொண்ணு ஒருத்திக்கிட்ட என் சந்தேகங்களையும் என் மெடிக்கல் ரிபோர்ட்ஸ் யும் காட்டித் தெரிஞ்சுக்கிட்டேன். அதற்கப்புறம் என்னால எப்படி நிம்மதியா இருக்கமுடியும்….. என் ஹஸ்பன்ட் யாரு , என் குழந்தை .… “தேம்பிக் கொண்டே ..” இருக்கா இல்லையா ….இப்படி நிறைய கேள்விகள் …. செத்துரலாம் போல இருந்துச்சு….” என்று அழுதவள் அருகில் சென்று ,
அவள் முகத்தை கைகளில் ஏந்தி ” ரதி ” என்று ஏதோ சொல்ல வந்தவன் கைகளைத் தட்டி விட்டவள் ,
“ப்ளீஸ் ” சக்தி சார் எங்கண்ணிப் போலனு சொன்னப்ப , நான் அவங்க அண்ணியா இருக்கக் கூடாதா ……. நான் உன் புருஷன்னு நீங்க சொல்ல மாட்டீங்களானு எதிர்பார்த்தது உண்மை …. ஆனா அது எதுவுமே இல்லாமா ….. நான் உங்க மனைவியோட ட்வின்ஸ்னு சொன்னப்போ …. நான் யார் மனைவியோ ,யார் குழந்தைக்கோ அம்மா …. ஆனா உங்கள என்னால பார்க்க முடியல மனசுல ஒரு சலனம் …. அது தப்பு இல்லையா … அமுதாட்டக் கூட சொல்லத் தோணல … பாவம் அவ என்னையப் பார்த்து ரொம்ப வருத்தப்படுவா … என்னனாலும் சொல்லு , இப்படியே வெறிச்சுட்டு உக்காரதன்னு… இப்படி குழப்பங்கள் இருக்கும் போது எப்படி வரத் தோணும்….அதுனாலயே உங்களைத் தவிர்த்தேன்….. ஆனா ஒரு தாயா தாயா …. இவர் என் வயித்துல பிறந்திருக்கலாமேனு ஒரு ஆசை …..” குழந்தையை வருடிக் கொடுத்தவள் ….” இவரத் தவிர்க்க முடியல …. நான் கன்னிப் பொண்ணா இருந்திருந்தா நிச்சியம் என் பிறந்த வீட்டுக்காரங்களப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பேன்….. என் நிலைமைல கணவன் , குழந்தைனு புகுந்த வீட்டுக்காரங்களத்தான் தேடத் தோணுது….” என்று அழுதாள்.