Advertisement

அவள் பேசியதை எல்லாம் கேட்டு பேச்சு வராமல் உறைந்து போனவன், “அம்மா சொன்னது போல தப்பு செய்துட்டேனா …. கசப்பா இருந்தாலும் மருந்த சாப்பிட வச்சிருக்கணுமோ …..” மறுபடியும் அவளைத் தொட்டு “ரதி ” எனக் கரகரத்தக் குரலில் பேச ஆரம்பிக்க ,

மறுபடியும் அந்தக் கையைத் தட்டி விட்டு , “என் நினைப்பு அசிங்கமானது …. புருஷன் முகம் கூட ஞாபகம் இல்ல …. ஏன் நான் கல்யாணம் பண்ணி தான் பிள்ளைப் ……. ” என அழுதவள் பேச்சை அதற்கு மேலும் கேட்க இயலாது”ரதி ” என்றக் கத்தலுடன் குழந்தை உறங்குவதையும் மறந்து அருகில் இருந்த மேசையில் ஓங்கி கை முஷ்டியால் அடிக்க , அந்த மேசை மீதிருந்த பொருட்கள் சிதறி பெரிய சத்தத்தை உண்டு பண்ண , ஏற்கனவே தையல் போட்டிருந்த கையில் இரத்தம் வந்தது , ராதிகா பார்த்து திகைக்க , குழந்தையும் வீறிட்டு அழ , வெளியில் இருந்த நர்ஸ்களும் உள்ளே ஓடி வந்தனர்.

குழந்தையை கையில் அள்ளிக் கொண்டு சமாதானப்படுத்தியவாறே , “உங்க கைல இரத்தம் ” என , உள்ளே வந்த நர்ஸ்களில் ஒருவர் , “வாங்க சார் மருந்துப் போடலாம்” என அழைக்கவும் , ராதிகாவைப் பார்த்துக் கொண்டே வெளியேறினான்.

அந்த அறையை சுத்தம் செய்ய பணியாளர்களை அழைத்து வந்த ஒரு நர்ஸ் , “மேடம் அன்னைக்கு நீங்க பிரசவ வலியில இப்படிப் பண்ணுனீங்க , இதேப்போல வந்து எடுத்து வச்சோம்….. உங்க கைல ட்ரே கீறி இரத்தம் வந்தது ….இப்போ உங்க ஹஸ்பன்ட்… ரெண்டு பேரும் நல்ல பொருத்தம் தான் போங்க…” எனவும் ,

குழந்தைக்கு பால் எடுத்துக் கொடுத்தவாறு, “என்ன சிஸ்டர் சொல்றீங்க … அவங்க என் அக்காவா இருக்கும் …. “

“போங்க மேடம் என்னைத் தெரியலயா … நீங்க செக்கப் க்கு வரும் போது நான் தான் அதிகம் இருப்பேன். . நான் அப்ப மகப்பேறு மருத்துவமனை பிரிவுல இருந்தேன். இப்பதான் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தேன். அதுமட்டுமில்ல அன்னைக்கு நீங்க ரொம்ப வலில ஏதோ புலம்பிட்டே இருந்தீங்க … அது தான் ஞாபகம் இல்லைப் போல ….அவள் வலது கையில் மணிக்கட்டோரம் இருந்த தழும்பை காண்பித்து ,

“இந்தக் காயத்துக்கு நான் தான் ட்ரஸிங் பண்ணேன் …” என்றவர் வெளியே சென்று விட்டார்.

தன் வலது கையைப் பார்த்தவள் வெகுவாக குழம்பி போனாள். “பார்க்கிறவங்க எல்லாம் என்னை ராதிகானு நினைச்சுப் பேசுறாங்க தான் …. ஆனா இந்த தழும்பு…. அது எப்படி ராதிகாவுக்கும் எனக்கும் ஒரே மாதிரி ஆகும் … “.

கையில் மருந்து வைத்து விட்டு ராதிகா அறைக்குப் போகும் போது , முக்கியமான ஒரு ஒப்பந்தத்திற்கான கையெழுத்து அரவிந்த்தான் போட வேண்டும் என அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர , உள்ளே நுழைந்தவன் கண்டது … மகனை அணைத்துப் படுத்திருந்த ராதிகாவைத்தான்.

ஃபோனும் அடித்துக் கொண்டே இருக்க , வெளியே இருந்த நர்ஸிடம் அவர்களுக்கு தேவையானதை செய்யும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். போகும் போது எல்லாம் அவள் பேசியதே நெஞ்சை ரணமாக்க , வேலையை முடித்துவிட்டு மருத்துவரை அணுகி அவளிடம் பக்குவமாக சொல்ல வழிகேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தாயைக்கண்டக் குழந்தைக்கும் உடல் நிலைத் தேற , மாலையில் வீடு செல்லலாம் என்று விட்டார்கள். அனன்யாவிடம் தகவல் தெரிவித்தவள், “அனு உங்கண்ணா அண்ணி கொடைக்கானல் வீடியோ ஒன்னு அன்னைக்கு உன் மொபைல்ல பார்த்த ஞாபகம் , அதைக் கொஞ்சம் அனுப்பி விடேன்” என்றாள்.

அனுவும் காரணம் கேட்காது உடனே அனுப்பி விட்டாள். அதை மறுபடி மறுபடி கூர்ந்து பார்த்தும் , கேட்டும் ஏதோ புரிவதுபோல் இருக்க, இயலாமையும் , கோபமும் ஒருங்கேத் தோன்றி அரவிந்த் எப்போது வருவான் என்றுக் காத்திருக்கத் துவங்கினாள்.

தன் வேலையை முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு நண்பன் பிரேமிடமிருந்து அழைப்பு வர எடுத்துப் பேச ஆரம்பித்தவனிடம் ,தான் இப்போது அவனைப் பார்க்கத்தான் வந்துக் கொண்டிருப்பதாக கூற , அரவிந்தும் . குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதை தெரிவித்தான். தான் மருத்துவமனை அருகில்தான் வந்துக் கொண்டிருப்பதை தெரிவித்தவன் தான் அங்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டான்.

குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டே அரவிந்தின் வருகைக்காக காத்திருந்த ரதி கதவு தட்டும் சத்தம் கேட்டு , “யெஸ் கமின் ” என்றாள். யாரும் மருத்துவராக இருப்பார்களோ என்று நினைக்க , வந்தவனின் கையிலிருந்த குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியது.

“ஹாய் சிஸ்டர் ,ஐ ம் பிரேம்…”

“பிரேம் … ” என இழுத்தவளிடம் ,

“சாரி சிஸ்டர் , நான்  அரவிந்த் ஃபிரண்ட் …உங்க கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதான் இந்தியா வந்தேன். அதுதான் உங்களுக்குத் தெரியல….”

“ஓ.. .அப்படிங்களா நான் ….. ர”

“நீங்க ரதி… அரவிந்தோட லவ்வபிள் வொய்ஃப்”

அதிர்ந்து நின்றவளைப் பார்த்துக் கொண்டே குழந்தையிடம் விளையாட்டுப் பொருட்களை தந்து விளையாடவிட்டவன்….

குழந்தையின் உடல்நிலையைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,

“நீங்க ரொம்ப லக்கி சிஸ்டர் அரவிந்தோட காதல் உங்களுக்கு கிடைச்சிருக்குப் பாருங்களேன். ஸ்கூல் டேஸ்ல எந்த கேர்ள்ஸையும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான். எப்பவும் ஏதாவது சிந்தனையில இருப்பான். உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணான்னு ரமேஷ் சொன்னப்போ நாங்களாம் நம்பவே இல்லன பார்த்துக்கோங்க … அது மட்டுமா அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி காதல் பத்தி ஒருவரில சொல்லுடானு சொன்னோம் …. அவன் என்ன சொன்னான் தெரியுமா….”

பிரேமின் பேச்சுக்களை இமைக்காது கேட்டுக் கொண்டிருந்தவளிடம்,

“ம்…. சிஸ்டர் நான் சொன்னா புரியாது….நீங்களேப் பாருங்க அவன் உங்க மேல வச்ச லவ்வ ” என்றவன் , தன் கைப்பேசியில் எதையோ தேடி அவளிடம் காட்டினான் …….

பார்த்தவளுக்கு அரவிந்தின் மீது சொல்லெணாக் கோபமும் , அழுகையும் ஒருங்கே வந்தது. அதையேப் பார்த்துக் கொண்டிருக்க , உள்ளே வந்த அரவிந்த் நண்பனிடம் பேச ஆரம்பித்து விட்டான். பேசி முடித்து ,

“ஓகே சிஸ்டர் நான் ஏர்போர்ட் கிளம்புறேன். நாளை கனடா ஃபிளைட் … ஒரு தடவ ஃபேமிலியோட அங்க வாங்க….” என்றவன் , அவள் அந்த வீடியோவையேப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ,

“சிஸ்டர் … தாங்க அதை அரவிந்துக்கு அனுப்புறேன். பார்த்து பார்த்து ரசிக்கலாம்” என்ற பிரேம் கைப்பேசியை வாங்கி அதை அனுப்பி விட்ட பிறகே அவர்களிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

பிரேமை வழியனுப்ப சென்ற அரவிந்தைப் பார்த்து முறைத்துக் கொண்டே , “அத்தான் உங்க மொபைல் தந்துட்டுப் போங்க” எனவும், அவள் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்தவன் தந்துவிட்டுப் போனான்.

அதன் பிறகு அவனிடத்தில் பேசவே இல்லை. பேச வந்தாலும் “வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று விட்டாள். அதன் பிறகு குழந்தையைப் பரிசோதித்து வீட்டுக்கு காரில் அழைத்துச் செல்லும்போதுக் கூட அவன் புறம் திரும்பவில்லை.

வீட்டிற்குள் வந்தும் யாரிடமும் பேசவில்லை. கேட்டதிற்கு’ ஆம்’, ‘இல்லை’ என்ற பதில்கள் மட்டுமே .அரவிந்திடம் என்ன என்றுக் கேட்டதற்கும் ஒரு பதிலுமில்லை. குழந்தைகள் இருவரையும் உறங்க வைத்துவிட்டு தாயம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொன்னவள் , ஜானகியைப் பார்த்து ,

“அத்தை நான் கொஞ்சம் பேசணும் எல்லாரையும் வரச் சொல்லுங்க “என்றாள்.

அனைவரும் வரவும் ஜானகியிடம் , “அத்தை நீங்கப் பெரியவங்க இப்ப எனக்கு உண்மையச் சொல்லுவீங்கனு நினைக்கிறேன்.… “

“சொல்லு ராதாம்மா…. “அவர் கையைப் பிடித்துக் கொண்டவள் , “நீங்க சொல்ற ராதாம்மா மேல சத்தியம் நான் தானே ராதிகா ….”

அரவிந்தைப் பார்த்துக் கொண்டே , “ஆமாம்மா நீ தான் ராதிகா …. உன் நல்லதுக்குத்தான் அ…”

அழுது கொண்டே மேலே பேச விடாது தடுத்தவள், “வேண்டாம் அத்தை இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம் … “

 ரமேஷிடம் சென்றவள் , “அண்ணா  … நீங்க ஒரு நல்ல ஃபிரண்ட் அப்படினுத் தெரியுதுங்கண்ணா… ஆனா தங்கச்சியா என் நிலையை மறந்துட்டீங்களேண்ணா , ஒருவேளை நான் கூடப் பிறந்தவளா இருந்தா … ” ராதிகா செத்துட்டா” அப்படிங்கிற வார்த்தையைக் கேட்டுட்டு சும்மா இருந்துருப்பீங்களா… அது நல்லதுக்காவே இருந்தாலும்….”

பதறிப் போன ரமேஷ் “என்னம்மா இப்படி சொல்லிட்ட… எல்லாம் உன் நல்லதுக்கு ….”

அவனிடமும் அழுது கொண்டே கையெடுத்துக் கும்பிட்டவள், “அண்ணா ப்ளீஸ் … கேட்கணும்னு தோணிச்சு….கேட்டுட்டேன்” என்றவள் , அனன்யா அருகில் சென்று ,

” அனு அங்க இருந்த ஒவ்வொரு நாளும் உன்கிட்ட பேச வந்தேன்….” அனு ” இல்லண்ணி உன்… “அவளையும் பேசாதே என்பது போல் தடுத்தவள் ,

“நீயும் உன் நல்லதுக்குத்தான்னு சொல்லப் போற…. எப்படி அனு ….ஒரு பெண்ணா , ஒரு தாயா …என் மனசு பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் …. நீக்கூடப் புரிஞ்சுக்கலயே அனு….”

கைக்கட்டி சோஃபாவில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்த அரவிந்தனிடம் வந்தவள் , அவனருகே தரையில் மண்டியிட்டு அமர்ந்து , அவன் கைப்பேசியை இயக்கி அந்த வீடியோவை ஓட விட்டாள். அது அவன் ஊட்டியில் மேடையில் பேசியது ,

கண்கள் திறந்து அந்த வீடியோவையும், அவளையும் மாறி மாறி பார்த்தவனிடம் ,

” ராதிகாவும் நான் தான் ரதியும் நான் தான் அப்படித்தானே அத்தான்…. “

                        காதல் எப்போதுமே அழகானது தான்…….

Advertisement