Advertisement

கண்ணிலிருந்து நீர் சரசரவென இறங்க , மண்டைக்குள் ஏதேதோ செய்வது போல் இருக்க , குழந்தையின் அழுகுரல் கேட்கவும் பட்டென்று கண்களைத் திறந்தவள் , அருகில் ஓர் இளம் தாய் தன் குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டாள். குழந்தையின் அழகில் மயங்கியவள் , குழந்தையின் கன்னம் தொட்டு மகிழ்ந்து ரசித்துக் கொண்டே வெளியேறினாள்.

           அன்று மதர் வெனிஸ்தாவுக்கு அனைவரும் பிரியாவிடைக் கொடுத்து அனுப்பினர். ஜெனிஃபரும் அவருடனயே கிளம்பி விட்டாள்.இரவு நெருங்கியதால் இருவருமே உறங்கி விட்டனர். அதனால் அவள் . வெளியே பார்க்கவே இல்லை. இருவரும் வந்து இறங்கிய இடம் மலைகளின் அரசியான உதகைக்கு .ஆம் உதகமண்டலமான ஊட்டிக்குத் தான் வந்து இறங்கினர்.

பேருந்தை விட்டு இறங்கியவளுக்கு ஏதோ இனம் புரியா உணர்வு. பசுமையான இடங்களைப் பார்த்தவளுக்கு உடல் குளிர்ந்ததோ இல்லையோ , மனம் அப்படி ஒரு குளிர்ச்சியைத் தந்தது. அவர் கூடவே வந்தவள் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தாள். சிலர் யாரென யோசித்தாலும் , சிலர் முன்பே அறிந்திருந்ததால் புன்னகையோடு வரவேற்றனர்.

அவளுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு அவர் தன் அறைக்குச் சென்று விட்டார். இங்கும் இருவருக்கான அறையே தரப்பட்டிருந்தது. அங்கிருந்த ஜன்னல் வழியேப் பார்த்துக் கொண்டிருந்தவளை , “ஹாய் வெல்கம் ஜெனிஃபர் ” என்ற குரல் திரும்ப வைத்தது.

“ஹாய்” , ” ஜெனி… அப்படிக் கூப்பிடலாம் தானே…. ஐ திங்க் நம்ம ரெண்டு பேரும் ஒரே செட்டா இருக்கலாம். “

“கண்டிப்பா , அன்ட் தேங்க்ஸ் , கொச்சின்ல என் ரூம் மேட் நான்சிக் கூட இப்படித்தான் பேசுவா” என்றும் புன்னகைத்தாள்.

” ஜெனி … என்னைய ஒரு நாள் முழுதும் நீ சாப்பிடாம இருனு சொன்னாக் கூட கேட்டுக்குவேன், ஆனா பேசாம இருனு சொன்னா அவ்வளவுதான்… யாரும் அவங்களா வந்து பேசணும்னு எதிர்பார்க்க மாட்டேன் … நானே போய் பேசிருவேன். சரி ஓகே நான் என்னைப் பத்தி சொல்றேன். என் பெயர் அமுதவள்ளி … எல்லாரும் அமுதா , அம்மு , வள்ளி … இப்படி அவங்க விருப்பபடிக் கூப்பிடுவாங்க.

என் அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அம்மா இந்த கான்வென்ட் கேன்டீன் ல சமையல் வேலை செய்தாங்க. அதனால இங்கதான் படிச்சேன்.நானும் இந்த இன்ஸ்டியுட்லயே கேட்டரிங் முடிச்சு வந்தா .. அம்மா என் கடமை முடிஞ்சதுனு கடவுள் கிட்ட போய்ட்டாங்க. சரி அம்மா இருந்த இடத்துலயே வேலை பார்ப்போம்னு இங்கயே இருந்துட்டேன். ஓகே இப்ப உன்னைப் பத்தி சொல்லு”

” எப்படி அம்மு எல்லாத்தையும் இவ்வளவு சாதாரணமா சொல்ற…. “

” என்ன செய்ய சொல்ற ஜெனி … வாழ்க்கை எனக்கு இப்படித்தான்னு ஆகிப்போச்சு, நம்ம கான்வென்ட்ல என்னை விட சோகம் நிறைந்த நிறைபேர் இருக்காங்க.. அவங்கள கம்பேர் பண்ணும் போது எனக்கு ரொம்ப கம்மிதான். என்னை விடு உன்னைப் பத்தி சொல்லு.”

“நான் … “அறைக்கதவு தட்டப்படவும் , சென்று திறந்த அமுதா ” என்ன அனி…. டியுட்டிக்குப் போகல”

“அக்கா கிளம்பிட்டேன். அங்க புதுசா வந்த அக்காவ வரச் சொன்னாங்களாம்.”

“சரி நீ கிளம்பு நான் கூட்டிட்டுப் போறேன்.” திரும்பியவள் ,

” ஜெனி நீ சீக்கிரம் குளிச்சிட்டுப் போ உன்னைக் கூப்பிடுறாங்களாம். அநேகமா உனக்கு என்ன வேலைனு சொல்லக் கூப்பிடுவாங்க… “

குளித்து உடை மாற்றி மதர் இருந்த அறைக்குள் செல்ல , அங்கு அவருடன் இரண்டு மூன்று பேர் நின்றனர். உள்ளே வந்தவள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு நின்று கொண்டாள்.

அவளிடம் ஆங்கிலத்தில் “ஜெனி இங்க லைப்ரரில தேவையான அளவு ஆள் இருக்காங்களாம். இவங்க எல்லாம் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்  ஹெட் … மற்ற எல்லா டிபார்ட்மென்ட்லயும் கல்வித் தகுதி கேட்கிறாங்க … இங்க உள்ள ரூல்ஸ் மா… ஆனா “

“ஆனா …என்ன மதர்… நாந்தான் எந்த வேலையும் செய்வேன்னு சொல்லிருக்கேனே… கிளீனிங் கூட செய்றேன்…”

“இல்ல மா….இப்போதைக்கு கேன்டீன் ஹெல்பர்தான் தேவைப்படுறாங்க .., கொஞ்ச நாள் அது செய் அதற்கப்புறம் வேற ஏற்பாடு பண்றேன்.”

மகிழ்ச்சியுடன் கை கூப்பியவள் அனைவரிடமும் சொல்லிவிட்டு அவர்கள் சொன்ன கேன்டீன் நோக்கிச் சென்றாள்.

அப்பொழுதுதான் அங்கு வேலைக்கு வந்திருந்த அமுதா “ஹேய் ஜெனி நீயும் இந்த டிபார்ட்மென்ட் தானா”

“ம்.. இங்க ஹெல்பரா வந்துருக்கேன் அம்மு…உன் கூட வேலை செய்யுறது எனக்கும் சந்தோஷமா இருக்கு.”

அவள் ஹெல்ப்பர் (உதவியாளர்) என்றதில் யோசித்த அமுதவள்ளி , அவளிடம் மேலும் அவளைப் பற்றிய வேறு கேள்விகள் கேட்பது நாகரீகமற்றது என்பதை அறிந்து அதன் பிறகு அவள் வேலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டாள். ஏனெனில் அங்கு வேலைப் பார்ப்பவர்கள் அனைவருமே அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையின் மூலமே இங்கு பணிபுரிகின்றனர் .இந்த உதவியாளர் பணிக்கு மட்டும் கல்வித் தகுதி தேவையில்லை. படிக்காதவர்களையும் பணியில் அமர்த்தலாம். ஆனால் அமுதாவிற்கு குழப்பம் தான் , நடை, உடை .. அவளது பேச்சுக்கள் எல்லாமே பெரிய படிப்பு படித்தவள் போல் தான் தெரிந்தாள். ஆனால் இந்த வேலை … இப்படியாக அமுதாவின் யோசனைகள் செல்ல , ஜெனிஃபரோ அவளுக்கு தந்த பணிகளை ஆவலோடு செய்ய ஆரம்பித்தாள்.

பள்ளி விடுதி கேன்டீன் என்பதால் இரவில் வேலை முடிந்து வந்தவர்கள் அவர்கள் அறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர்.ஜெனிஃபர் அமுதாவிடம் ,

” அம்மு காலையில என்னைப் பத்திக் கேட்டியே… நான் … “

“நீ ஜெனிஃபர் , என் கொலீக், என் ரூம் மேட் , அதைவிட என் ஃபிரண்ட் அது போதும்… அப்புறம் நான் சாதாரண மனுஷிதான் …தெரியணும்னு தோணினா தேவைபடும் விஷயங்களை நானே கேட்டு தெரிஞ்சுக்குவேன். சரி ஊட்டி பிடிச்சிருக்கா… குளிரல …ஸ்வெட்டர் போட்டுக்கோ … “

அவள் கைப் பிடித்துக் கொண்டவள், “தேங்க்ஸ் அம்மு … உனக்கு சொல்லியே ஆகணும்னா நானும் சொல்லிருப்பேன். எனக்கு சொல்ற மாதிரி இனிப்பானதும் இல்ல. … அதே வேளை கசப்பானதும் இல்லை …. கொச்சியில லைப்ரரி ஹெல்ப்பர் , இங்க கேன்டீன் ஹெல்ப்பர்… அவ்வளவுதான் … அப்புறம் எனக்கு என்னமோ இது குளிராவே தெரியல … நார்மல் ஹீட்டாதான் இருக்கு…”

” என்ன நார்மல் ஹீட்டா … நானாவது இங்கயே வளர்ந்தேன்.. அதனால இந்தக் குளிர் பெரிசா தெரியல… ஒரு நிமிஷம் இரு…” என்றவள் , அப்பொழுதுதான் வேலை முடிந்து வந்த அனிதாவை அழைத்து , ” அனி இங்க வா .. உனக்கு குளிருதா “

“என்னக்கா இப்படி கேட்கறீங்க ரொம்ப குளிருது … “

” கேட்டுக்கோ ஜெனி… அனிதா மதுரைல நம்ம கான்வென்ட்ல வளர்ந்தவ , நர்சிங் முடிச்சு இங்க நம்ம ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு வந்து ஒரு வருஷமாகுது , இன்னும் அங்க பார் அவமுகத்த மட்டும் தான் பார்க்க முடியுது. குளிருதுகுளிருதுனு உடம்பு முழுசும் கவர் பண்ணிட்டு திரியுறா… “

“அமுதாக்கா… ” என்று சிணுங்கியவளை அனுப்பி விட்டு , “ஒருவேளை கேரளாவும் குளு குளு னு இருக்கிறதால உனக்கு அப்படி இருக்கு போல “

” இருக்கலாம் “என்று தான் நினைத்துக் கொண்டாள் ஜெனிஃபர்.

          இன்றோடு அவள் ஊட்டிக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வேலையோடும் அங்குள்ளவர்களோடும் நன்கு பொருந்தினாள். அன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது , யாரோ அவளை இழுப்பது போல் இருக்க , என்ன என்று யோசிக்கும் முன்னமே உடன் வேலை செய்யும் பார்வதியம்மா ‘ஆ’ என்றுக் கத்தினார்.

ஜெனிஃபர் சுதாரித்துப் பார்க்கும் போது , ஏதோ பாத்திரம் தட்டி முட்டை வேக வைத்த கொதி நீர் வழிந்து அவள் மேல் பட வேண்டியது பார்வதியம்மா கைகளில் பட்டிருந்தது.

அங்கங்கு வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் என்னவென்றுப் அருகில் வந்துப் பார்த்து அவருக்கு உடனே முதலுதவி செய்து மருத்துவமனை அனுப்பினர்.

தன் மேல் பட வேண்டியது அவர் மேல் பட்டுவிட்டது என்பதை உணர்ந்த ஜெனிஃபர் , அவருடனேயே மருத்துவமனை சென்றாள். அனி உடனே வந்து காயத்தினைப் பார்த்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.

அவரது கை முழுவதும் சேதமானதைப் பார்த்து அழுத ஜெனிஃபர் ” ஏன் மா ,,இப்படி எவ்வளவு காயம் பாருங்க. என் மேலப்பட்டா..பட்டிருக்கப் போகுது”

” என்ன கண்ணு சொல்ற, நான் வாழ்ந்து முடிச்சவ…எனக்கு என்ன ஆனா என்ன … நீ வாழ வேண்டியவ கண்ணு”

எப்போதும் அமைதியாக வேலைப் பார்க்கும் அவர் இன்று அவளிடம் பேசியதில் , அவர் பேச்சு ஏதேதோ ஞாபகத்தை கொண்டு வர முயன்றது. அதிகம் யோசிக்க தலைவலிப்பது போல் இருக்கவும், யோசனையை கைவிட்டவள் .. மருத்துவரின் பதிலுக்காக காத்திருந்தாள்.

கைக்காயம் அதிகமிருப்பதால் அதற்கான முறையான சிகிச்சையைப் பெற அவரை கோவையின் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லவும் , கேன்டீன் பொறுப்பாளர்களிடம் தெரிவித்து அவரை அவர்களது மருத்துவமனை அவசர ஊர்தியிலயே கோவை அனுப்பினார். பார்வதியம்மாவுக்கு துணையாக தானே செல்வதாக ஜெனிஃபர் தெரிவிக்கவே அவளும் மதரிடம் அனுமதிப் பெற்று கோவை சென்றாள்.

            கோவையின் பிரபலமான தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவரைப் பார்க்க உள்ளே செல்வதற்கு முன் அவளுக்குத் துணையாக கோவையில் இருந்த அவர்களது கான்வென்ட் உறுப்பினர்கள் இருவர் துணைக்கு வந்தனர்.

ஜெனிஃபரை உள்ளே அழைக்கவும் , மருத்துவர்கள் செவிலியர்கள் அணியும் பச்சை உடை , தொப்பி, முகம் மறைக்க மாஸ்க் அனைத்தையும் அணிந்துக் கொண்டு ஐசியு அறைக்குள் செல்ல முற்படுகையில் குழந்தை அழும் சத்தமும் , ஒரு பெண்ணின் சமாதானக் குரலும் கேட்டது. அந்தக் குரல் எங்கயோ கேட்டது போல் இருக்க , குழந்தையின் அழுகைச் சத்தமும் அவளை உந்த சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றாள்.

” ண்ணா … நீங்க பாடுங்க அப்பதான் அவர் அழுகைய நிறுத்துவார். அதற்குள்ள நான் உங்க மருமகனுக்கும் ஊசிப் போட்டுட்டு வந்துடுறேன்”. மருத்துவமனை காத்திருப்போர் அறையில் சத்தம் வந்ததை அடுத்து ஜெனிஃபர் அங்குப் போகும் போது , முதுகுப்புறம் மட்டும் தெரிய  அந்த குழந்தையை தோளில் போட்டுக் கொண்ட அந்த நெடிய மனிதன் ,

         பூவிலே மேடை நான் போடவா,

 

          பூவிழி மூட நான் பாடவா …..

குழந்தை அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்தது அந்தக் குரலில்.ஜெனிஃபர் தான் ஏனென்று தெரியாமல் அழ ஆரம்பித்தவள் … தலையைப் பிடித்துக் கொண்டே மயங்கிச் சரிந்தாள்.

                          காதல் அழகானது…. புரிந்துக் கொண்டவர்களால் மட்டுமே அந்த அழகும் உணரப்படும்.

Advertisement