Advertisement

           காதல் அழகானதே…

 

அழகு 1

அம்மே அம்மே தாயே

அம்மைகேக மகனே

ஆத்மாவில்லும் சத்யத்திலும் ஆராதிக்கின்னு …

இந்தப் பாடலின் நான்கு வரிகள் ஒலித்து முடித்ததும் நேரம் மதியம் ஒரு மணி என்பதை அந்த மணி கோபுரத்தின் ஒலிப்பெருக்கி அறிவித்தது.

       ‘ கடவுளின் தேசமான ‘கேரளாவின் ‘கொச்சி’ நகரத்தில் மிகப் பழமை வாய்ந்த ‘சாந்த குரூஸ் பேராலய ‘வளாகத்தில் , கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் தங்கியிருக்கும் மடத்தின் வளாகம். தலைமை கன்னியாஸ்திரி ‘மதர்’ வெனிஸ்தா   , அந்த வளாகத்தில் இருந்த பெண்கள் பள்ளியின் நூலகத்திற்குள் நுழைந்தார்.

அங்கிருந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ,

” ஜெனி மோள் …ஈ புக்ஸ் மாத்திரம் எடுத்து ஷெல்ஃபில் அடுக்கி வச்சிட்டு மோளு போயி கழிச்சுட்டு வா” என்றார். அவரிடம் ஆங்கிலத்தில் பதிலுரைத்தாள் ஜெனி எனப்படும் ஜெனிஃபர். (அவர்களது ஆங்கில , மலையாள உரையாடல்களை நாம் தமிழில் பார்ப்போம்)

“இல்ல மதர், இதையெல்லாம் அடுக்கி வச்சிட்டேப் போறேன்.. கரோலின் சேச்சி சாப்பிட போயிருக்காங்க , அவங்க வந்ததும் நான்  சாப்பிடப் போறேன்.”

“மோளே” , “மதர் …” என்றவள், அவள் சொன்னது போல் அந்த புத்தகங்களை சரியான முறையில் அடுக்கி விட்டேச் சென்றாள்.

சாப்பிட்டு விட்டு நூலகத்திற்குள் வந்தவளை , ” ஜெனி இதையெல்லாம் சிஸ்டம்ல ஸ்டோர் பன்னிட்டேன். இனி புதுசா நாளைக்கு வரும் புக்ஸ் மட்டும் நம்பர் போட்டு சீல் வைக்கணும்.” என்ற கரோலினிடம்,

” செய்துக்கலாம் சேச்சி. நீங்க எடுத்து வைங்க ” என்றவள் , அதன் பின் மற்ற புத்தகங்களை அடுக்கும் வேலைக்குச் சென்றுவிட்டாள். அங்கு அவர்களோடு சேர்த்து இன்னும் நான்கு பேர் வேலை செய்தனர்.

வேலைகளை முடித்துவிட்டு , அந்த வளாகத்திலயே இருந்த ஊழியர்களின் விடுதிக்குச் சென்றாள்.அவளறையைப் பகிர்ந்துக் கொள்ளும் தோழி நான்சி போனில் பேசிக் கொண்டிருந்தாள். பார்த்ததும் அவள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றுத் தெரியவும், புன்னகையோடு மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் வெளியே வரும் போது , போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த நான்சி, ஜெனிஃபர் வந்ததும் , ” ஜெனீ …..” என்று ஓடி வந்துக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

” ஜெனீ… எங்களுக்கு இந்த சன்டே மூன்றாம் அறிக்கை முடிந்ததும் புதன்கிழமையே  மதர் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க , ஜோசப் நாங்க இருக்க பக்கத்துலயே வீடு பார்த்துட்டாராம்.” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளின் மகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்த ஜெனி , “ரொம்ப சந்தோஷம் நான்சி, ஜோசஃப் அண்ணாக் கூட நீ ரொம்ப நாள் சந்தோஷமா வாழணும்.., அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னைக் கவனிச்சிக்கிற விதத்தைப் பார்த்து ‘லவ்’ மேல ஒரு ஆசையே வருது … ஆனா இனி நான் தனியா இருக்கணும்.” என்று சோகமாக சொன்னவளை ,

“நம்ம கம்ப்யூட்டர் சார் , புக்ஸ் எடுக்கிறேன்.. புக்ஸ் எடுக்கிறேன்னு லைப்ரரி பக்கம் அடிக்கடி வந்துட்டுப் போறாராம்…. அவர் புக்ஸ் எடுக்கத்தான் வராருனு நினைக்கிறியா ….பேசாம அவருக்கு எஸ் சொல்லிடேன்…” என்று கண் சிமிட்டியவளை , “போடி.. போடி” என்று முதுகில் அடித்தவள்,

“காதல் அழகானது டி ,…. அது ஒரு அழகான உணர்வு … பார்த்ததும் ஏன் எதுக்குனு தெரியாம பிடிக்கணும் … ” “ஜன்னல் அருகில் போய் நின்றவள் , ” இப்பவும் எனக்குப் பிடிச்சதெல்லாம் காதலிக்கிறேன்…. அந்தக் கடலைப் பாரேன் எவ்வளவு அழகு அதை காதலிக்கிறேன். இந்த ஊர் , இந்த சர்ச் , இந்த ஸ்கூல் , நம்ம லைப்ரரி , உன்னைய , நம்ம மதர்… எல்லாரையும் , எல்லாத்தையும் காதலிக்கிறேன்.

இந்த காதல் தான், என்னை வாழ வைக்குது. Love is beautiful..”

“ஆமாம் காதல் அழகானது.. நீ சொல்ற அத்தனை உணர்வையும் என் ஜோசப் னால உணர்றேன். அவர காதலிக்கிறதால நீ சொல்றது எல்லாம் அழகா தெரியுதோ எனக்கு … உனக்கும் காதல் வரும் ,,அதாவது ஓர்ஆண்  மேல…, அப்ப நீ என்ன சொல்றனுப் பார்க்கிறேன்.”

தோழியின் பேச்சில் , ” நீ சொல்ற கம்ப்யூட்டர் ஸார் , ரொம்ப நல்லவர்தான் , கண்ணியமா நடந்துக்கிறார் தான் … அவர் விருப்பத்தை எங்கிட்ட ஏதாவது ஒரு வகைல வெளிப்படுத்திட்டே இருக்கார்தான். ஆனா எனக்கு அவர் மேல காதல் வரலயே .. ஏன் … ஆனா நான் சொல்ற காதலுக்கான விளக்கமெல்லாம் அடிக்கடி யாரோ சொல்லிக் கேட்டுருக்கேன் ….” தலையை உலுக்கிக் கொண்டவள் ,

சரி அதை விடு ,நான்சி இங்க தமிழ் தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான் , நீயும் போய்டுவ, மதர் வேற இந்த வருஷம் அவங்களுக்கு டிரான்ஸ்ஃபர் கட்டாயம்னு சொல்றாங்க அதுவும் வேற ஸ்டேட் னு சொல்றாங்க. மலையாளத்துக்கே ரொம்ப சிரமப்பட்டுட்டேன். எப்படியோ இங்கிலீஷ்  தெரிஞ்சதால தப்பிச்சுட்டு இருக்கேன் … என்ன செய்யனே தெரியலடி .. ஏதோ தனிமையா இருக்கிற ஃபீல்”

தோழியின் அருகில் சென்றவள் , “பேசாம மதர் கூடயே போய்ரு….எனக்குத் தெரிஞ்சு , நாங்கலாம் பக்கத்துல இருந்தாலும் நீ மதர் தான் தேடுவ”அவர்கள் பேசிக் கொண்டிருக்கவும் மழையடிக்க ஆரம்பித்துவிட்டது.

மழையைக் கண்டு கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டவள் , “ஐயோ நான்சி ஜன்னல் குளோஸ் பண்ணுடி … மழை மழை …. வெள்ளம் வெள்ளம் ” என்றவள் … தோழியை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

” ஜெனி…..ஜெனி… நீ கட்டில்லப் போய் படு … போன வருஷம் போல எல்லாம் இங்க வெள்ளம் வராது…. நான் ஜன்னல் பூட்டுறேன்… என்னடி நீ கேரளால இருந்துட்டு இந்தச் சின்ன தூறலுக்கு இப்படி பயந்துட்டே இருக்க.” சொல்லிக் கொண்டே அவளைப் பார்க்க , குளிரில் உடல் நடுங்குவது போல் நடுங்கியவள் கட்டிலில் அப்படியே மயங்கிச் சரிந்து விட்டாள்.

பயந்து போன நான்சி, மதர் வெனிஸ்தா வுக்கு உடனே தகவல் சொல்லவும் , அவர் அந்த மடத்திலிருக்கும் செவிலியர் மற்றும் மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்தார். அவர்களும் கன்னியாஸ்திரிகளே .

மயங்கி விழுந்தவளின் உடல் சூடுஅதிகம் காட்டவும் , அவளுக்கு ஊசிப் போட்டு மருந்துகளை நான்சியிடம் தந்தவர்கள், அவளை மறுநாள் அழைத்துச் சென்று முழுப் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும் என்று விட்டனர் .மழையைக் கண்டாலே அதிகம் உடல் நடுங்குவதும் மயக்கம் வருவதுமாக முன்பே இருமுறை நடந்ததால் முழுப்பரிசோதனை அவசியம் என்று விடவே மதர் வெனிஸ்தாவும் ஒத்துக் கொண்டார்.

மறுநாள் காலை எழுந்தவளை நான்சி கிளம்புமாறு துரிதப்படுத்தவும் , “எங்கடி… இன்னைக்கு சனிக்கிழமை , நாளைக்குத்தானே சர்ச் போகணும்… பர்சேஸ் எதுவும் பண்ணனுமா கல்யாணத்துக்கு ….”

“ம்…நைட்டெல்லாம் அனத்தி எடுத்துட்டு இப்ப எங்கனு கேக்கறியா … கல்யாணத்துக்கு தேவையானத… அவரும் , சிஸ்டர் டயானாவும் ஏற்பாடு பண்ணிக்குவாங்க… நீ கிளம்பு….  மதர் ஆர்டர் இது… “

அதற்கு மேல் எதுவும் பேசாமல் உடல் கழுவி கிளம்பியவளை அழைத்துக் கொண்டு நான்சி கிளம்பினாள் . கொச்சினில் ஆற்றைக் கடந்து செல்ல படகு சவாரி சகஜம் என்பதால் அங்கிருந்த ஆற்றைக் கடந்து படகில் எதிர்புறம் சென்றவர்கள் , அவர்களுக்காக காத்திருந்த டாக்ஸியில் ஏறிக் கொண்டனர்.

அது சென்று நின்ற இடம் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை.” நான்சி , என்னடி இது சாதாரண குளிர் காய்ச்சல் , அதுக்குப் போய் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துருக்க , வா போகலாம். உனக்கு கல்யாணத்துக்கு எதுவும் வாங்கனும்னா வாங்கலாம் வா”

“நான் ஒன்னும் கூட்டிட்டு வரல… உன்னைய ஃபுல் செக்கப் பண்ணனும் சொல்லி நேத்து டாக்டர் சொல்லிட்டாங்க , மதர் சொல்படி  கேள் வா,வா” என்று உள்ளே கைப்பிடித்து அழைத்துச் சென்று விட்டாள்.

உள்ளே இவர்களுக்குத் தெரிந்த நர்ஸ்கள் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல , அவர் தேவையான பரிசோதனைகளை எழுதிக் கொடுக்கவும் எல்லா பரிசோதனைகளையும் முடித்துவிட்டு, அதன் முடிவுகள் மாலை தான் கிடைக்கும் என்பதால் இருவரும் கடைகளுக்கு கிளம்பி விட்டார்கள்.

மாலையில் ஜெனியை தன் அறைக்கு அழைத்த மதர் தனக்கு தமிழகத்திற்கு இடமாற்றல் கிடைத்திருப்பதையும் ,  நான்சி திருமணம் முடிந்து தான் செல்லும் போது அவளையும் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

நான்சியிடம் பகிர்ந்து கொள்ள , அவள் , ” நல்ல வேளை தமிழ் நாடு கிடைச்சிருக்கு … உனக்கு அவங்க இல்லனா முடியாது. நல்லபடியா கிளம்பு … எனக்கும் நீ தனியா இருப்பங்கிற கவலை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கும். சரி தமிழ் நாட்டுல எந்த ஊராம்”

“அது தெரியலயே , மதர் எங்கிட்ட சொல்லலடி , ஆனாப் பாரு , இந்த டேப்லட்ஸ் தந்து கரெக்ட்டா போட சொல்லி இருக்காங்க…. கரெக்ட்டா போடணுமாம்”

“போடு போடு… கன்னியாகுமரி  சுனாமில பெத்தவங்கள இழந்துட்டு நாலோ , அஞ்சோ வயசு ..அப்ப இருந்து என்னோட பத்து வயசு வரைக்கும் நான் மத்திரை மருந்துகள் சாப்பிட்டதா நியாபகம் .ஏன் எதுக்குனு இதுவரை நான் கேட்டதில்ல … மதர் எப்பவுமே இப்படித்தான். இது செய்னு சொன்னா செய்துடுவேன்… இப்ப ஜோசஃப் காட்டி இவர்தான் உனக்கு நான் பார்த்திருக்கும் வாழ்க்கைத் துணை … இந்த தேதில கல்யாணம்னு சொன்னாங்க… எப்படி இருந்துச்சு தெரியுமா … நாம அனாதை இல்ல… நமக்கும் ஒரு குடும்பம் வரப்போகுதுனு  சந்தோஷத்துல மிதந்த்துட்டு இருக்கேன்….அவங்க இல்லனா நீ நானல்லாம் என்னாகிருப்போமோ…. “

“ம்… ஆமா நான்சி” என்று முகம் வருந்தியவளைப் பார்த்தவள் , அவளருகில் சென்று

“இங்கப் பாரு … மதர் கூட தமிழ்நாட்டுக்குப் போற , இங்க பேச சங்கடப்பட்டு நீ இருக்கிறது போல , அங்க இருக்காது … சகஜமா பேசலாம். அப்ப அப்ப எனக்கு ஃபோன் பண்ணு”

நாட்கள் சென்றன….நான்சியின் திருமணம் காலையில் ஆலயத்தில் நடைபெற்று முடிந்துவிட்டது. மாலையில் அவளை அவர்களுக்கான வீட்டில் கொண்டு விட்டு வரவும் , ஜெனிஃபருக்கு அழுகை வந்துவிட்டது. கொச்சின் வந்த நாளிலிருந்து அவள் தான் துணை என்று இருந்தாள். இப்பொழுது அவள் அந்த அறையில் இல்லை எனவும்  அழுகை வந்துவிட்டது. மனதை அமைதிப்படுத்த ‘மதர்’ சொல்லித் தந்தபடி , அந்த மிகப் பெரிய ஆலயத்தினுள் நுழைந்தவள் , கண்கள் மூடி அமைதியாக அமர்ந்து விட்டாள்.

Advertisement