Advertisement

 அலை 15 ( 1 )

                    அதிகாலை காற்றே நில்லு 

                   இதமான பாடல் சொல்லு               

                   இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

                   இது ஒரு புது சுகமே…

             “இது என்ன ஃபீல் … செல்வி அண்ணன… என நினைத்தவள் , ம்ஹூம் என் மாமாவ நான் காதலிக்கிறேன்…” என யோசிக்க ஆரம்பிக்கையில் தாமரையின் அழுகை சத்தம் , அதை தடைசெய்ய தொலைக்காட்சி பெட்டியின் முன் முழங்காலிட்டு அமர்ந்து முகத்தை மூடி அழுதுக் கொண்டிருந்தவளைப் பார்த்தாள்.

மனம் உருகி அருகில் போய் அமர்ந்தவளிடம் , “திலோ இன்னும் கொஞ்ச நாள் என் கூட அம்மா இருந்து இருக்கலாம்ல… ” என்றவளை வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் தில்லைநாயகி. அவளைத் தேற்றி அந்த அறையை விட்டு அழைத்து வந்தவள் , அவளை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டே..

” இவ இப்படி அழுகிறதப் பார்க்கிறதுக்கா அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி வந்தேன்.. அந்த அறை சுவற்றில் எப்போதும் மாட்டப்பட்டிருக்கும் தாமரையின் மஞ்சள் நீராட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இருக்கும். மதுரை மீனாட்சி வேடமிட்ட தங்கையின் அருகில் அரும்புமீசைக்கூட அதிகம் தெரியாத ஒல்லியான நெடுநெடு உயரத்துடன் இருக்கும் ஆதவனைப் பார்த்தாள்.

சிறு வயதில் அவளுக்கு தெரிந்த ஆதவன் அப்படித்தான் இருந்தான். இந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் இந்த புகைப்பட ஆதவன் தான் கண்ணில் பட்டான். எப்போதும் எங்க அண்ணன்… எங்க அண்ணன் என தாமரை சொல்லும் போதும் இதே ஆதவன் தான்.

ஆனால் பல வருடங்களுக்குப் பின் பார்த்த ஆதவன் முற்றிலும் வேறாக இருந்தான்… அவள் சமீபமாக பார்த்த திரைப்படக் கதாநாயகர்களை நேரில் நிறுத்தியது போல் இருக்க… அவனது தோற்றம் சிறிது ஈர்ப்பைக் கொடுத்தது தான்… ஆனால் அது மட்டுமே அவன் மேல் காதல் வரக் காரணமில்லயே… யோசிக்க யோசிக்க நிறைய காரணங்கள் கிடைத்து அந்த உணர்வுகள் தில்லைக்கும் அழுகையைக் கொடுத்தது. மனதினுள் ,

“மாமா.. எனக்கு நிறையத் தோணுது… அதெல்லாம் உங்க கிட்ட சொல்லணும் போலவும் இருக்கு.. ஆனா அது இப்ப‍ முடியாது மாமா..” என நினைத்தவளுக்கு சத்தமாக அழ வேண்டும் போல் இருந்தது. மனதைப் பூட்டி வைக்கும் பழக்கம் அவளுக்கு கிடையாதே… சரியோ தவறோ மனதில் உள்ளதை உடனே வெளிப்படுத்தி விட்டுச் செல்லும் தில்லைக்கு மனதினுள் ஆதவன் வந்ததை அவனிடம் கூற முடியாத நிலை மனதை அமுத்தியது. எதிரில் இருந்த டிரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் ,

 “நாயகி அழாத அழாத நீ இப்படி அழுதுட்டு இருந்தா தாமரைய யார் கவனிக்கிறது … “வேகமாக மற்றொரு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் ,

” விடுடி விடுடி.. இப்ப என்ன ஆச்சு… நான் மாமாவ லவ் பண்றேன்… அத வாயால சொன்னாதான் உண்டா…தாமரை படிச்சு முடிக்கிற வரை அவருகிட்ட சொல்லாம லவ் பண்ணிட்டுப் போறேன்… அப்பாவ அம்மாவ அண்ணன இங்க  அடிக்கடி வராதீங்க ஃபோன் பேசாதீங்கனு சொன்னப்ப உனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்தது. அதை விட அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும் … இதையெல்லாம் யாருக்காக பொறுத்துட்டு இருக்க.. உன் செல்விக்காக தானே.. அதை போல இந்த காதலையும் கொஞ்சம் பொறுமையாக சொல்லிக்கலாம்… காதல் வந்தத நினைச்சு மெளன ராகம் ரேவதி போல புரியாத ஆனந்தம் புரியாத ஆரம்பம்னு பாடறத விட்டுட்டு அழுவியா…” என கண்ணாடியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.

மறுநாள் இருவரும் கல்லூரிக்கு தயாராகி வந்து காரில் ஏறிக் கொண்டனர். பின்னிருக்கையில் மூன்று பெண்களும் அமர்ந்துக் கொள்ள, சொக்கலிங்கம் காரை இயக்க அருணாச்சலம் அவரருகில் அமர்ந்துக் கொண்டார். அந்த ஊரிலிருந்து செல்லுகையில் முதலில் மருத்துவ கல்லூரி தான் வரும் , அதன் பிறகு தான் விவசாயக் கல்லூரி வரும் , எனவே அனைவரும் தாமரையை அவளது கல்லூரியில் விடுவதற்கு சென்றனர். 

காரிலிருந்து கீழே இறங்கும் போது இருவரும் உடுத்தியிருந்த புடவை சிறிது அங்கும் இங்குமாக இழுத்துக் கொள்ள தானும் சரி செய்துக்கொண்டு தரையில் அமர்ந்து தாமரை காலருகேயும் சரி செய்த தில்லை,

“ஏன்டி இதயம் பட டாக்டர் ஹீரோயின் போல பஸ் ஸ்டாப்  ட்ரெஸ் போட்டுக்கலாம் சொன்னா.. பொட்டு வைத்த காஸ்ட்யூம் தான்னு சொல்லிட்ட , பாரு இப்ப  நடக்க யாரு கஷ்டப்படுறது.. “

” மெட்ராஸ் போனப்ப அம்மா தான் இந்த சேலைய முதல் நாள் காலேஜ் போறப்ப கட்டணும்னு வாங்கினாங்க.. அதான் ” என்ற தாமரையிடம் ,

” சரி டி… இன்னைக்கு மட்டும் தான்.. இனி அதிகமா சல்வார் கமீஸ் போட்டுக்கலாம்.. வசதியா இருக்கும் … இப்படி இடுப்பு தெரியுதா.. மாராப்பு சரியா இருக்காணு அடிக்கடி டெஸ்ட் பண்ண வேண்டாம்பாரு…” என்ற தில்லையிடம்,

“நீ சொன்னா சரிதான்.. இனி எல்லாமே உன் செலக்ஷனாவே இருக்கும் ஒகே யா…” என்ற தாமரையை முதல் வருட மாணவர்கள் குழுமியிருந்த இடத்தில் விட்டு விட்டு அனைவரும் கிளம்பினர். 

நிறைய மாணவ மாணவிகள் … அனைவரும் தமிழ்நாட்டில் மெரிட்டில் வந்தவர்கள் தான்.. ஆனால் அவர்களது பேச்சு வழக்கு வேறு மாதிரி இருந்தது. அனைவரையும் பார்த்து மிரண்டு போய் நின்றிருந்தவள் அருகே, “ஆல் தி பெஸ்ட் … ” என்றொரு குரல்.. சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.. அறிந்த குரலாகிற்றே.. உதட்டோரம் புன்னகைப் பூத்தது.

விஜய் ஒரு ஒற்றை ரோஜா பூவோடு நின்றிருந்தான்.அவள் பார்த்ததும் அவளிடம் கொடுக்க… சிறிது தயங்கினாலும் வாங்கிக் கொண்டாள். பார்க்கவே நேர்த்தியான ஒரு அழகான அலுவலக உடையிலிருந்த விஜயைப் பார்த்து…

 “செண்பாக்கா சொல்ற கலெக்டர் மாதிரி தான் இருக்காங்களோ..” தாமரை  நினைத்தாள் என்றால்… அவனுக்கும் அவளைக் கண்டு அதே எண்ணம்தான்… முதன் முறையாக புடவையில் பார்க்கிறானே.. மனதை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தாள்.

மனதை மயிலிடம் இழந்தேனே..

மயங்கி தினம் தினம் விழுந்தேனே ..

தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்லும் தென் மாவட்டத்தின் மிகப் பெரிய மருத்துவமனை வளாகம் … அத்தனைக் கூட்டத்திலும் ,தாமரை வந்த போதே பார்த்து விட்டான்.அவளோடு வந்தவர்கள்  எல்லோரும் கிளம்பிய அடுத்த நொடி அவளருகில் வந்து நின்றான்.

முதல் நாள் பள்ளியில் விட்டுச் சென்ற குழந்தையின் நிலையில் தான் நின்றுக் கொண்டிருந்தாள். கரும்பச்சையில் இளஞ்சிவப்பு நிற பூக்கள் தூவப்பட்ட சில்க் காட்டன் புடவை அணிந்திருந்தாள்.தில்லையின் கைவண்ணத்தில் அடர்ந்து நீண்டிருந்த கூந்தல் ஒரு சிறிய கிளிப்பில் மட்டுமே அடக்கப்பட்டு இருந்தது. பார்க்க பார்க்க தெவிட்டவில்லை விஜயிற்கு…

கூந்தலா மேகம் தானா

கூடுது மோகம் தானா…

குறுநகையோடுதான் அவளருகில் சென்றான். அவன் வைத்திருந்தது சிவப்பு ரோஜா.. அது காதலின் சின்னமாக தான் இளைஞர்கள் மத்தியில் உலா அன்று வந்தது.. அது அவளுக்கு தெரியுமா என்றுக் கூடத் தெரியாது. தாமரைக்கு வேறு ஏதாவது பரிசுப் பொருளாக கொடுக்கவே விருப்பம் … ஆனால் அது பல கேள்விகளை எழுப்பலாம் என்பதாலயே அதனை அளித்தான்.

தாமரையும் கதிரவனைக் கண்ட தாமரையாக முகம் மலரவும்..விஜயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

வண்ணமயில் போல வந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே

உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே

அவனைப் பார்த்து முகம் மலர்கிறாள் என்பதே போதுமானதாக இருக்க..

“வருங்கால டாக்டர் எதுக்கும் பயப்படாம தைரியமா இருக்கணும்… ” என ஆங்கிலத்தில் உரைத்தவன், பேராசிரியர்கள் வரவும் சற்று தள்ளி நின்றுக் கொண்டாலும் அவள் கல்லூரி வகுப்பறைக்குள் செல்லும் வரை அங்கேயே நின்றான். வகுப்பறையில் நுழையும் முன் தாமரை திரும்பி பார்க்க , தலையசைத்து ” போ” என்பது போல் செய்தவன் , தாமரையிடம் பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தாலும் அவள் உள்ளே சென்றதும் தான் கிளம்பினான்.

தாமரையை விட்டு விட்டு வரும் வழியில் அருணாச்சலம் மதுரையில் இருக்கும் தங்கள் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டார். பின்னர்,தில்லை நாயகியை கல்லூரியில் விட வருகையில், “அம்மா நானே இருபது நாள் கழிச்சு கிளாசுக்கு வாறேன்.. எல்லாரும் பார்த்து கிண்டலடிக்க போறாங்க.. நீங்க எல்லாம் வாசல்லயே இறக்கி விட்டுருங்க… மதியம் மணி அண்ணா தானே வருவாங்க … நாங்க பத்திரமா வீட்டுக்கு போய்க்குவோம்…” என்றவளிடம்,

“பாப்பா இந்த காலேசு நம்ம ஊருலருந்து பக்கம் சாமி .. அங்கயிருந்து ரொம்ப தூரமாகுது.. உனக்கு வசதிபட்டா மருமவன் வர்ற வரை நம்ம வீட்லயிருந்து கூட அனுப்ப அண்ணன் நேத்து சொல்லிச்சு..” என அருணாச்சலம் கூறியிருந்ததை அவளிடம் தெரிவிக்க …

” என்ன நம்ம வீட்ல இருந்தா… அப்ப பெரிய மாமாவையும் செல்வியையும் யாரு கவனிச்சுப்பா..” என கோபமாக கேட்டவள் , அவர்களுக்கு துணைக்கு ஆட்கள் இருப்பர் என்ற தேவகியின் எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“அவ அவ அம்மா வீட்டுக்கு எப்படா போகலாம்னு இருக்காளுக.. நீ என்னனா இப்படி கோபப்படுற.. மருமவன் பக்கத்துல இருந்தாலும் பரவாயில்ல.. அவர் பக்கத்துல இல்லாததால தான கேட்கிறோம்…” என்ற தாயிடம், தாமரைக்காக தான் திருமணமே செய்துக் கொண்டேன் என்றா கூறமுடியும்.. ஆனால் இப்போது அப்படியும் இல்லையே.. தன் யோசனைகளுக்கு சென்றவள் , மேலும் எதுவும் பேசவில்லை , தில்லையின் கல்லூரியும் வந்து விட , அவள் வேண்டாம் என்றாலும் அவள் வகுப்பறை வரை வந்து சொக்கலிங்கமும் தேவகியும் விட்டுச் சென்றனர்.

உள்ளே வந்தவள் எங்கு உட்கார என இடம் பார்க்க ,கருப்பு நிற புர்கா அணிந்திருந்த பெண் கண்ணில் பட… வேகமாக அருகில் சென்றவள் ,

“அனீஸக்கா… எப்படி இருக்கீங்க… இது ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் தானே இங்க இருக்கீங்க..” என குதூகலமாகவும், வகுப்பறை மாற்றி வந்து விட்டோமோ என குழப்பமாகவும் கேட்டாள். தில்லைக்கு தெரியாத முகங்களுக்கு இடையே தெரிந்த ஒருவரைக் கண்ட உற்சாகத்துடன் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

தில்லை அழைத்த ‘அனீஸக்கா ‘ என்ற அனீஸ் ஃபாத்திமா பள்ளியில் தில்லைக்கு ஒரு வருட சீனியர் மாணவி … மேலும் அவர்களது ஊர் பக்கம் என்பதால் ஒரே பள்ளி பேருந்தில் வந்து பழக்கமும் கூட.. அந்த பழக்கத்தில் வந்து பேசினாள்.

அனீஸ் ஃபாத்திமாவுக்கும் தில்லையைக் கண்டதில் மகிழ்ச்சி தான்.. ஆனாலும் தில்லையிடம் , ” தில்லை எப்படி இருக்க .. நீயும் இங்க தான் ஜாயின் பண்ணியிருக்கியா..” என்றவள் , தில்லையை அருகமர்த்தி,

“தில்லை இது ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் தான் .. நான் போன வருஷம் கலேஜ் போகல இந்த வருஷம் தான் சேர்ந்தேன். அதுவும் எங்க சாச்சி ( சித்தி) இங்க வேலைப் பார்க்கவும் தான் படிக்கவே அனுப்பினாங்க… அப்புறம் ஒன்னு தில்லை, நான் உன்னை விட ஒரு வருஷம் தானே சீனியர், அதுவும் பதினோரு மாசம் தான் வயசு வித்தியாசம் கூட …அதனால அக்கானுலாம் சொல்லாத ப்ளீஸ் .. அனீஸ்னே கூப்பிடேன்…”

” எப்படிக் கா.. எனக்கு அனீஸக்கா பழகிருச்சேக்கா…” என்றவளிடம் , “ஷ் மெதுவா” என பக்கத்தில் யாரும் கேட்டு விட்டார்களோ எனப் பார்த்த அனீஸ் ,

“அதுக்கு இத்தனை அக்காவா போடுவ… அப்ப அனிஸ் வேண்டாம் ஃபாத்திமா …ஃபாத்தி… இப்படிக் கூப்பிடேன் .. ப்ளீஸ் ப்ளீஸ்… நீ சொல்றதப் பார்த்து எல்லாரும் அக்கானு கூப்பிட்டிராம… ” எனவும் ,

“அது எப்படி பெரிய கிளாஸ் பிள்ளைங்கள எனக்கு அக்கானு கூப்பிட்டுத்தான பழக்கம் … நான் வேணா ட்ரை பண்றேன்.. சரி ஏன் ஒரு வருஷ கேப்.. ஸ்கூல்ல நூறு சதவீத பாஸ் னு தானே கேள்வி பட்டேன் ” என்றவளைப் பார்த்து…

“அடியே நீ இருக்கியே … நான் ஆயிரத்து நூறு மார்க் … அது.. அது…” என்ற அனீஸின் முகம் சிவக்க துவங்க… இந்த நாணச் சிவப்பு தில்லைக்கு தன்னையே பிரதிபளிப்பது போல் தோன்ற… பட்டென முகமலர்ந்து ,

“அப்ப உங்களுக்கும் கல்யாணம் ஆகிருச்சா…” என்ற தில்லையின் கேள்வியில் அனீஸ் அவளை கேள்வியோடு பார்த்தாள்.

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது… 

இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது..

Advertisement