அத்தியாயம் 9

 

என்னை அழகான

சிற்பமாக செதுக்கும்

உளியாக நீ

இருப்பாயானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

ரிஷியோ, “ப்ளீஸ்  வேதா புரிஞ்சிக்கோ”, என்று மானசீகமாக அவளுடன் பேசி கொண்டிருந்தான்.

 

ஆனால் அறைக்குள் வந்த வேதாவோ அங்கு இருந்த ரிஷியின் புகை படங்களை தூர எறிந்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் போய் விழுந்தது.

 

எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள். “என்னை எப்படி அவன் வேண்டாம்னு சொல்லலாம்?”, என்று மட்டுமே அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது.

 

“என்னை வேண்டாம்னு சொன்னவன் எனக்கும் வேண்டாம்”, என்று தவறாக முடிவெடுத்தாள் வேதா. கோபத்தில் ரிஷியின் மனதில் உள்ளதை அறிய தவறி விட்டாள்.

 

அடுத்த நொடி தன்னுடைய போனை எடுத்தவள் தன்னுடைய டீம்லீடரை அழைத்தாள். அவர் எடுத்ததும் “பாரின் போக இப்ப ப்ரோஜெக்ட் வொர்க் இருக்கா சார்? அன்னைக்கு கேட்டீங்களே? அப்ப விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன். ஆனா இப்ப போகணும்னு நினைக்கிறேன். வாய்ப்பு கிடைக்குமா?”, என்று கேட்டாள்.

 

அவர் இருக்கு என்று சொன்னதும் தன்னுடைய பெயரை குறிக்க சொன்னவள் விசா அப்ளை செய்யணும் என்று முடிவெடுத்தாள்.

 

அதன் பின்னர் யாரிடமும் அவள் பேச வில்லை. வீட்டில் சாப்பிடவும் இல்லை.

 

சீதா சாப்பாடு கொண்டு போய் கொடுத்த போது அதை தூக்கி எறிந்து விட்டாள். மற்ற நேரமாக இருந்தால் சாப்பாட்டை தட்டி விட்டதுக்கு வேதா கன்னம் பழுத்திருக்கும். ஆனால் இப்போது மகளின் மன நிலை உணர்ந்து அமைதியாக வந்து விட்டாள் சீதா.

 

ராம கிருஷ்ணன் பேச சென்ற போது அவரிடம் பேச கூட விரும்பாதவள் போல முகத்தை திருப்பி கொண்டாள். சாருவும், சோமுவும் பேசும் போது அவர்களிடம் பேசவில்லை வேதா.

 

ரிஷி கதவை தட்டிய போதும் கதவை திறந்தவள் அவனை பார்த்ததும் கதவை அறைந்து சாற்றினாள். அடுத்து வந்த நாட்களில் அப்படியே தான் நடந்து கொண்டாள்.

 

காலையில் கிளம்பி வேலைக்கு செல்பவள், காலை மற்றும்  மதிய உணவை ஆபீஸில் சாப்பிட்டு கொள்வாள். இரவுக்கு வாங்கி வந்து விடுவாள். இதை பார்த்து பெற்றவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.

 

“வேதா, பொம்பளை பிள்ளைக்கு இப்படி பிடிவாதம் இருக்க கூடாது டி. அந்த அளவுக்கு நீ பெரிய பிள்ளையாகிட்டியா? இருபத்தஞ்சு வயசு தான ஆகுது? அதுக்குள்ளே உனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம் பொறுமையா இரு டி”, என்று சீதா திட்டியதுக்கும் “கண்டவங்களோட பேச்சை கேக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இருபத்தஞ்சு வயசா இருக்கும் போது தான கல்யாணத்துக்கு நாள் குறிக்க போனீங்க? இப்ப மட்டும் வயசு கம்மியாகிருச்சா? நீங்க நினைச்சு நினைச்சு பேசுறதை கேக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை”, என்று திமிராக பதில் கொடுத்தாள் வேதா.

 

“இரு, எத்தனை நாளைக்கு இப்படி திமிர் புடிச்சு போய் இருக்கன்னு பாக்குறேன்”

 

“உங்க முன்னாடி எல்லாம் நான் இருக்க கூட விருப்ப படலை. எப்ப டா இங்க இருந்து போவோம்னு இருக்கு”

 

“அப்படி என்ன டி நாங்க தப்பு பண்ணிட்டோம்? உன் நல்லதுக்கு தான சொல்றோம்?”

 

“என் நல்லதுக்கு எல்லாரும் செஞ்சதை தான்  பாத்துட்டேனே? என் மனசை அவன் கொல்லும் போது எல்லாரும் வேடிக்கை தான பாத்தீங்க? பெத்த பொண்ணை அம்போன்னு விட்டுட்டு  அவனுக்கு தான நீ சப்போர்ட் பண்ண? எனக்கு யாரும் வேண்டாம். சொல்ல மறந்துட்டேன். இன்னும் நாலு நாளில் நான் பாரின் கிளம்புறேன். சொல்லாம போனா ஓடி போய்ட்டேனு சொல்ல கூடாது பாரு. அதனால தான் இப்ப சொல்றேன் “, என்று சொல்லி அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தாள் வேதா.

 

சீதா சொன்ன இந்த செய்தியை கேட்டு மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். நேராக அவள் அறைக்கு சென்ற ரிஷி கதவை தட்டினான்.

 

கதவை திறந்தவள் அவனை பார்த்து வெறுப்பான  ஒரு பார்வையை வீசி விட்டு கதவை அடைக்க போனாள்.

 

அதை தடுத்து உள்ளே சென்றவன் அவளை முறைத்தான். கண்டு கொள்ளாமல் இருந்தாள் வேதா.

 

“இப்ப நீ பாரின் போகணும்னு என்ன அவசியம் வேதா? என்னை பிரிஞ்சு உன்னால இருக்க முடியாது. நீ போய்ட்டு உடனே திரும்பி வர தான் போற? தேவை இல்லாத வேலை செய்யாத?”

 

“எப்படி எப்படி உன்னை பிரிஞ்சு நான் இருக்க மாட்டேனா? அதெல்லாம் அப்ப. இப்ப இருக்குற வேதா அப்படி பட்டவ இல்ல. எப்ப என்னை குப்பையா நினைச்சு தள்ளி வச்சியோ, அப்பவே என் மனசுல இருந்த பாசம், எல்லாம் செத்து போச்சு. இன்னும் சொல்ல போனா உங்க எல்லாரையும் பாக்க கூடாதுன்னு தான் நான் போகவே செய்றேன். உன்னை எல்லாம் நான் பாக்க கூட விரும்பலை”

 

“நான் வேணும்னா செய்றேன் டி? கோபம் அறிவை மறைச்சிரும்னு சொல்லுவாங்க. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்னு இப்படி பிடிவாதம் பன்றியே வேதா? நான் ஏன் இப்படி செய்றேன்னு கொஞ்சமாவது யோசி டி”

 

“அதான் கோபம் அறிவை மறைச்சிரும்னு சொல்லிட்டியே? உன்னை பத்தி எல்லாம் நான் யோசிக்க கூட விரும்பல. கல்யாணத்தை நிறுத்திட்டல்ல? எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா? என்ன எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன்? எல்லாமே போச்சு. அதை எல்லாம் உன்கிட்ட சொன்னேன் தான? ஆனா நீ அதை எல்லாம் காது கொடுத்து கூட கேக்கலை. ஒரு நாய் மாதிரி நான் தான் உன் பின்னாடி அலைஞ்சிருக்கேன். ஒரு பொண்ணு நானே எனக்கு கல்யாணம் வேணும்னு கேக்குற நிலைமைக்கு என்னை கொண்டு வந்துட்டல்ல? சே, போடா”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவள் முன்பு போய் நின்றவன் அவளுடைய நாடியை பிடித்து முகத்தை பார்த்தான். அவன் கையை தட்டி விட்டவள்  வெறுப்பாக அவனை பார்த்தாள்.

 

எந்த உணர்வையும் காட்டாத அவளுடைய பார்வையில் ரிஷி தான் தவித்து போனான். இப்படி ஒரு பார்வையை இதற்கு முன்னால் அவளிடம் அவன் கண்டதில்லை.

 

அவனை பார்க்கும் போது அவளுடைய முகம் அப்படியே தாமரை போல் மலரும். ரிஷி என்று குதூகலிக்கும் அவள் குரலில் அவன் உடல் அப்படியே சிலிர்த்து போகும். ஆனால் இன்று அவள் சிந்தும் வெறுப்பை தாங்க முடியாமல் மனம் உடைந்தான் ரிஷி.

 

“வேதா, ப்ளீஸ் டா , உன்னை பாக்காம என்னால இருக்க முடியாது குட்டி”

 

“நடிக்காதீங்க சார். எப்படியும் நான் செத்து போன அப்புறம்  என்னை பாக்காம தான இருக்க போற? அப்புறம் என்ன?”

 

“செத்து போயிருவேன்னு அந்த ஜோசியர் சொன்னதை மட்டும் நம்புற? ஆனா கல்யாணம் நடக்கலைன்னா உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்றதை மட்டும் நம்பாம இருக்கியே டி?”

 

“என்னோட யோசனை எல்லாம் அதுல இல்லை. செத்து போறதை பத்தி எனக்கு பயமும் இல்லை. ஜெகன் என்கிட்டே காதலை சொன்னப்ப தான் நீ என் மனசுல இருக்குறதையே உணர்ந்தேன். அந்த நொடி எப்படி இருந்ததுன்னு உனக்கு தெரியுமா? அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சது. அதை உன்கிட்ட சொல்றதுக்கு அவ்வளவு தயக்கம். ஆனாலும் வெட்கத்தை விட்டு சொன்னேன். அப்ப கூட நீ உன் காதலை சொல்லலை. நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னப்பறம் எனக்குள்ள அவ்வளவு சந்தோசம். அதுக்கப்புறம் ஒவ்வொரு நொடியும் உன்னோட பொண்டாட்டியா தான் கற்பனை செஞ்சு பாத்தேன். எப்படினாலும் ஒரு நாள் எல்லாருமே சாக தான டா போறோம்? ஆனா நீ என் மனசை கொன்னுட்ட. என்னோட ஆசை, கனவு, ஏக்கம், எதிர்பார்ப்பு அத்தனையும் சாகடிச்சிட்ட. கல்யாணம் பத்தி பேச ஆரம்பிக்கும் போது கூட நம்ம மூணு வருஷம் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீ சொல்லிருந்தா இந்த அளவுக்கு என் மனசு எதிர்பார்த்துருக்காது. ஆனா, கடைசி நேரத்துல என் கற்பனையை உடைச்சிட்டல்ல? உடைஞ்சது  உடைஞ்சதாவே இருக்கட்டும். மறுபடியும் ஒட்ட வைக்க நினைக்காத ரிஷி”

 

“எனக்கும் கஷ்டமா தான் டி இருக்கு “

 

“நீ கஷ்ட பட்டா  எனக்கென்ன?”

 

“எனக்கு நீ வேணும் டி”

 

“அப்படியா? சரி, இப்ப கூட ஒண்ணுமே கெட்டு போகல. வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று நக்கலாக கேட்டாள் வேதா.

 

அமைதியாக இருந்தான் ரிஷி.  “சரின்னு உன்னால சொல்ல முடியாதுல்ல?  அப்ப மூடிட்டு போடா. கடுப்பை கிளப்பிகிட்டு. தேவை இல்லாம பாசமா பேசி சீன் போடலாம்னு நினைக்காத. அந்த ஏமாந்த வேதா எப்பவோ செத்துட்டா. வெளிய போ”

 

அடுத்த நொடி அங்கிருந்து வேதனையுடன் வெளியே சென்று விட்டான் ரிஷி.

 

அவன் சென்ற பின்னர் கதவை அறைந்து சாத்தியவள் அந்த கதவின் மீதே சாய்ந்து அமர்ந்து குமுறி அழ ஆரம்பித்தாள்.

 

சொன்ன படி அவள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.  எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் ரிஷி வாங்கி தந்த அனைத்தையும் மூட்டை கட்டினாள். பின் ஒரு முடிவோடு  அதை எடுத்து கொண்டு ரிஷி வீட்டுக்கு சென்றாள்.

 

“உள்ள வா வேதா”, என்று வரவேற்றாள் சாரு.

 

அவள் முகம் பார்க்காமல் உள்ளே சென்றவள் அங்கு அமர்ந்திருந்த ரிஷியையும் சோமுவையும் பார்த்தாள்.

பின் அவர்கள் முன்பு அந்த பையை வைத்தவள் “இதெல்லாம்  நீ வாங்கி தந்தது ரிஷி. இது வேஸ்ட்டா என் ரூம்ல இருந்து என்ன செய்ய போவுது. நீயே குப்பையில் போட்டுறு”, என்றவள் அனைவரையும் பார்த்து “நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வந்து விட்டாள்.

 

அவள் பின்னே சென்றான் ரிஷி. சோமுவும் சாருவும் கூட சென்றார்கள். அங்கே ராம கிருஷ்ணனும், சீதாவும் கண்களில் நீருடன் அமர்ந்திருந்தார்கள்.

 

அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அவளுடைய அறைக்கு சென்றான்.

 

இரண்டு பையை எடுத்து வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் வேதா. அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவள் அருகே சென்று அவள் காலடியில் அமர்ந்தவன் அவள் கையை பிடித்தான். அவன் கையை தட்டி விட்டாள் வேதா.

 

“ப்ளீஸ்  வேதா, போகாத டி”

 

 

“நீ இல்லாம இருக்க முடியாது டி”

 

 

“நீ வேணும்னு தான் நான் கல்யாணத்தை நிறுத்தினேன். உனக்கு ஆபத்துன்னா  நான் பாத்துட்டு இருக்க முடியுமா?”

 

“இந்த கதையை வேற யார் கிட்டயாவது சொல்லு”

 

“நம்புடி, ப்ளீஸ் போகாத வேதா”

 

….

 

“சரி திரும்பி எப்ப வருவ? ப்ராஜெக்ட் எப்ப முடியும்?”

 

“திரும்பி வர கூடாதுன்னு  போறேன்”

 

“ஏய், அத்தை மாமா பாவம் வேதா”

 

“அவங்களுக்கு என்னை விட நீ தான முக்கியம்? அப்புறம் என்ன?”

 

“சரி அங்க போய் போன் பண்ணுவியா? எங்க வேலை? எங்க தங்கிருப்பன்னாவது சொல்லுவியா?”

 

“உங்க யாரோட நினைவும் எனக்கு வர கூடாதுன்னு தான் போறேன்? பின்ன உங்களுக்கு போய் போன் பண்ணுவேனா?

 

“எங்களை எல்லாம் பிரிஞ்சு இருந்துருவியா வேதா?”

 

“முன்னாடி கேட்டுருந்தா  எப்படியோ? இப்ப கட்டாயம் முடியும்”, என்று சொல்லி விட்டு எழுந்தாள்.

 

“ஏர்‌போர்ட் வரைக்குமாவது வரேன்  டி. ப்ளீஸ்”

 

“வேற நாட்டுக்கே தனியா போக போறேன். இங்க இருக்குற இடத்துக்கு போக தெரியாதா? நோ தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு ஹேண்ட் பேகை தோளில் மாட்டியவள்  இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பையை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.

 

வெறித்த பார்வையுடன் அதே இடத்தில் அமர்ந்து விட்டான் ரிஷி. அவளுடைய பிரிவு  அவனுக்கு மிக பெரிய வலியையும் சிறு கோபத்தையும் கடுப்பையும் சேர்த்து கொடுத்தது. அதே மனநிலையில் பின் எழுந்து கீழே வந்தான்.

 

நால்வரும் அவளை சுற்றி நின்று கொண்டு “போகாத மா”, என்று கெஞ்சி கொண்டிருந்தார்கள்.

 

அதை பார்த்தவன் “உங்களுக்கு என்ன பைத்தியமா? நாம பேசுறது எல்லாம் இப்ப அவ காதில் விழாது. நம்மளை பிரிஞ்சு போறவ அப்படியே போகட்டும். எதுக்கு அவ கிட்ட கெஞ்சிட்டு  இருக்கீங்க? விடுங்க. அவ போகட்டும்”, என்று கடுப்புடன் சொன்னான் ரிஷி.

 

“உங்க பையன் சொல்லிட்டான்ல? யாரும் என் கிட்ட கெஞ்சாதீங்க. குட் பை”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள்.

 

அவள் பின்னாடியே வந்தவர்களை திரும்பி கூட பார்க்காமல் ஒரு ஆட்டோ பிடித்தவள் அதில் ஏறி சென்றே விட்டாள்.

 

இடிந்து போய் அமர்ந்தாள் சீதா. அவளுக்கு ஆதரவாக சாருவும் அமர்ந்து கொண்டாள்.

 

ரிஷியோ மறுபடியும் அவளுடைய அறைக்கே சென்று அவளுடைய கட்டிலில் அவளுடைய தலையணையில் முகம் புதைத்து படுத்து விட்டான். அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் தலையணையை நனைத்தது. அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே படுத்திருந்தான்.

 

“எப்படி டி என்னை விட்டு போக உனக்கு மனசு வந்தது? என்னால முடியலை. என்னை பத்தி இத்தனை வருசமா நீ புரிஞ்சிக்கவே இல்லையே வேதா. உனக்கு என் மேல காதலே இல்லை. அப்படி இருந்தா என்னை விட்டுட்டு இப்படி போயிருப்பியா?”, என்று வாய் விட்டே புலம்பினான் ரிஷி.  அவளுடைய வாசனை அந்த அறை முழுவதும் பரவியது போல இருந்தது.

 

சிறிது நேரம் கழித்து சாரு வந்து எழுப்பிய பின்னர் தான் சுயநினைவுக்கே வந்தான் ரிஷி. மகனின் கண்ணீரை பார்த்து அவளுக்கும் வேதனையாக இருந்தது.

 

அவனுக்கு  ஆறுதல் சொல்லி கீழே  அழைத்து வந்தாள். ஆனால் “நான் வேதா ரூம்ல தங்கிக்கிறேன் மா. என்னால முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்று சொன்னான் ரிஷி.

 

அவன் கேட்டதை பார்த்து அனைவருக்குமே வருத்தமாக இருந்தது. அதற்கு பின்னர் வேலைக்கு செல்வதும் வேதா ரூமிலே தூங்குவதுமாக இருந்தான் ரிஷி.

 

பாரின் சென்ற வேதாவோ ஒரு வெறுமையான வாழ்க்கையை வாழ தயாராக இருந்தாள். கம்பேனி அரேஞ் செய்திருந்த ஒரு வீட்டில் தங்கி இருந்தாள்.

 

அந்த மூன்று மாடி  கட்டிடத்தில் ஆண்கள் உட்பட பதினைந்து பேர் தங்கி இருந்தார்கள். அதில் வேதாவும் ஒருத்தி. முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பிறகு பழகி விட்டாள்.

 

வேலைக்கு செல்ல கேப் இருப்பதால் சரியான நேரத்தில் சென்று பின் தன்னுடைய அறைக்குள் முடங்கி விடுவாள்.

 

இப்படியே ஒரு மாத காலம் சென்றது. அங்கு சென்ற பின்னர் வீட்டுக்கு ஒரு போன்  செய்ய கூட முயல வில்லை. மனது வலித்தாலும் கஷ்ட பட்டு அடக்கி கொண்டாள்.

 

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெதுவாக எழுந்து குளித்து முடித்து தனக்கு தேவையான உணவை கீழே உள்ள கிச்சனில் சென்று செய்தவள் தன் அறைக்கு எடுத்து வந்தாள்.

 

வயிறு பசித்தாலும் மனமோ ரிஷியையே சுற்றி சுற்றி வந்தது. “எதுக்கு டா  கல்யாணம் வேண்டாம்ணு சொன்ன?”, என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கேட்டு தன்னையே வருத்தி கொண்டாள்.

 

பாதிக்கு மேல் சாப்பிட முடியாமல் “மதியம் அதையே சாப்பிட்டுக்கலாம்”, என்று நினைத்து மூடி வைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தாள்.

 

பின் அவனுடன் கழித்த நாட்களை எண்ணிய படியே  அப்படியே தூங்கி போனாள்.

 

இங்கே ரிஷியோ பித்து பிடித்த மாதிரி திரிந்து கொண்டிருந்தான். இந்த விசயத்தில் தன் மீது தவறே இல்லாத போதும் வேதா கொடுத்து விட்டு சென்ற பிரிவு என்ற வலியை அவனால் தாங்கவே முடிய வில்லை. மனமெல்லாம் அவள் தான் நிறைந்திருந்தாள்.

 

ஹாஸ்ப்பிட்டலில் வேலை செய்யும் போது மட்டும்  கவனமாக இருப்பவன், மற்ற நேரங்களில் தன்னையே மறந்து இருந்தான். பெரியவர்களுக்கே அவளுடைய பிரிவு வருத்தத்தை அளிக்கும் போது அவளை விட்டு  நொடி கூட பிரியாமல் இருந்த ரிஷிக்கு எப்படி இருக்கும் என்று அவர்களுக்கும் புரிந்தது.

 

ரிஷி பாடும் பாட்டை மௌனமாக வேடிக்கை பார்த்தவர்களுக்கு “இந்த வேதாவுக்கு இவ்வளவு கொழுப்பு இருக்க கூடாது”, என்று திட்ட தான் தோன்றியது.

 

சீதாவோ, “பத்திரமா இருக்காளா? ஒழுங்கா சாப்பிடுறாளா?”, என்று கவலை பட்டாள்.

 

“உன் பொண்ணு சரியான நேரத்தில் சாப்பிட்டுருவா. அது மட்டுமில்லாம அவ சின்ன பொண்ணு கிடையாது. நம்ம நாட்டை விட மத்த நாட்டில் பாதுகாப்பும் அதிகம் தான். அதனால அவளை அவ நல்லா பாத்துப்பா. எனக்கு இந்த ரிஷி பையனை நினைச்சா தான் கவலையா இருக்கு”, என்றார் ராம கிருஷ்ணன்.

 

எப்போது விடிவு  வரும் என்று அனைவரும் காத்திருந்தார்கள். மனதுக்குள் “வேதா வேதா”, என்று புலம்ப ஆரம்பித்தான் ரிஷி.

 

அவள் உபயோக படுத்திய ஒவ்வொன்றையும் கையில் தூக்கி வைத்து கொண்டு அவளை, அவளுடைய வாசனையை தேடினான். சாரு சரியான நேரத்தில் அவனை சாப்பிட வைக்க வில்லை என்றால் உணவையே மறந்து தான் போயிருப்பான்.

 

“இந்த வலியை தான் தாங்கணும்னு சித்தர் சொன்னாரா? என்னால முடியலையே? எப்படி டி உன்னால மட்டும் முடியுது. நீ எனக்கு வேணும் வேதா”, என்று அவன் மனம் முழுவதும் இப்படி தான் சிந்தித்தது.

 

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதுக்காக  கிளம்பிய ரிஷி சுஜாதா வராததால் அவளுக்காக காத்திருந்தான்.

 

“அடுத்த வாரம் எனக்கு டே ஷிப்ட் கிடைச்சிருச்சு ரிஷி”, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்த சுஜாதா  டேபிளில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த ரிஷியை பார்த்து புருவம் உயர்த்தினாள். பின் அவன் அருகே வந்து “ரிஷி”, என்று அழைத்தாள்.

 

“ஹான், வந்துட்டியா சுஜி? சரி நான் கிளம்புறேன்”, என்று எழுந்தான்.

 

“அப்படியே உக்காரு. உன்கிட்ட பேசணும்”

 

அமர்ந்தவன் “என்ன சுஜி?”, என்று கேட்டான்.

 

“உனக்கு என்ன ஆச்சு ரிஷி? ஆளே மாறி போயிட்ட? உனக்கு என்ன தான் டா பிரச்சனை?”

 

“வேதா பாரின் கிளம்பி போய் ஒரு மாசம் ஆகிருச்சு சுஜி. என்னால அவ நினைப்புல இருந்து வரவே முடியலை. அவ நினைவாவே இருக்கு சுஜி”, என்று சோகமாக சொன்னான் ரிஷி.

 

காதல் உயிர்த்தெழும்…..