அத்தியாயம் 8

 

உன் புண்

பட்ட இதயத்துக்கு

ஆறுதலாக நான்
இருக்கும் நொடிக்காக

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

பின் தன்னை நிலை படுத்து கொண்ட ரிஷி “சாமி நீங்க சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை”, என்று அதிர்ச்சியோடு சொன்னான்.

 

அவர் அனைத்தையும் சொல்லும் போதும் கண்களை மூடி இருந்த அவன் மனதில் அந்த காட்சிகள் அனைத்தும் விரிந்தன.

 

“சில விசயங்கள் அப்படி தானப்பா. அதை நாம் நம்பி தான் ஆக வேண்டும். இப்போது முடிவு உன் கையில் தான் இருக்கு”, என்றார் சித்தர்.

 

“என்னால என் வேதா சாகுறதை  பாத்துட்டு இருக்க முடியாது சாமி. மூணு வருசம் தான? நான் காத்துட்டு இருக்கேன். அதுக்கு பிறகே கல்யாணம் செஞ்சுக்குறோம்”

 

“அதுவும் அவ்வளவு எளிதல்ல பா. அன்னைக்கு பார்த்த அந்த பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு தீவிரம் இருந்தது. அதை மாற்றுவது கொஞ்சம் கடினம்  தான்”

 

“என் வேதா நான் சொன்னா கேப்பா சாமி. நான் கட்டாயம் அவளுக்கு புரிய வைப்பேன்”

 

“பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் தயாரா இரு. பிறகு ஒரு முக்கியமான விசயமும் உன்கிட்ட சொல்லணும்”

 

“என்ன சாமி?”

 

“உனக்கு முப்பது வயசு முடிந்து ஒரு மாதத்துக்குள் திருமணத்தை நடத்த வேண்டும். அது தாமதமானாலும் மற்றொரு கண்டம் உனக்கு ஆரம்பித்து விடும்.  அவளுடைய மாங்கல்ய பலம் தான் உன்னை அதிலிருந்து காப்பாற்றும். அதனால் அதுக்குள்ளாக திருமணத்தை முடிக்க வேண்டும்”

 

“மூணு வருசம் காத்திருப்பதே கொடுமையான விசயம் சாமி. அதுக்கு மேல  ஒரு நாள் கூட என்னால காத்துட்டு இருக்க முடியாது. ஒரு வாரத்துக்குள்ளே கல்யாணத்தை முடிச்சிறேன் சாமி. உங்க கிட்ட நான் ஒண்ணு கேக்கலாமா?”

 

“கேள் மகனே”

 

“நாங்க இந்த ஊர்ல  தான் வாழ்ந்தோமா?”

 

“ஆம், இங்கு தான்”

 

“அப்படின்னா திருச்சி போகும் வழியில் தான் வேதா இறந்து போனாளா?”

 

“ஆம்”, என்று சித்தர் சொன்னதும் வேதா அன்று பைபாசில் இறங்கி நின்றது ரிஷிக்கு நினைவில் வந்தது. அதை நினைத்து பார்த்தவன் பின் அவரிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான்.

 

பின் “சாமி எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்”, என்றான்.

 

“என்ன உதவி?”

 

“நான் ஒரு நாள் இங்க தங்கலாமா? வேதாவை சமாளிக்க நான் கொஞ்சம் யோசிக்கணும். எனக்கே கொஞ்சம் அமைதி வேணும். மனசெல்லாம்  குழம்பி கிடக்குது”

 

“தாராளமா தாங்கிக்கோ”, என்று அவனிடம் சொன்ன சித்தர் “சிவா”, என்று அழைத்தார்.

 

மற்றொரு துறவி அங்கு வந்ததும்  அவருடைய காதில் ஏதோ சொன்னார். பின் அவனை அவருடன் எழுந்து போக சொன்னார். இவனும் அவரை வணங்கி விட்டு அந்த துறவியுடன் சென்றான்.

 

அவனுக்கு ஒரு குடிலை காண்பித்தவர் “இங்க தங்கிக்கோங்க. சாப்பாடு அதோ அங்கு கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் போய் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

 

குழப்பமான மனநிலையில் இருந்தவன் அந்த அறைக்குள் சென்றான். உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு பாய் சுருட்டி வைக்க பட்டிருந்தது. மற்றொரு ஓரத்தில் மண்பானையில்  நீர் நிரப்பி வைக்க பட்டிருந்தது.

 

மெதுவாக உள்ளே சென்றவன் பேகை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு அந்த பாயை விரித்து படுத்து விட்டான்.

 

“எப்படி வேதா நான் உன்னை சமாளிப்பேன்? இது வரைக்கும் உனக்கு பிடிச்ச விசயம்னு வரும் போது என்னை தவிர வேற யாரோட பேச்சையும் கேக்க மாட்ட. ஆனா இந்த விசயத்துல என்னோட பேச்சை நீ கேப்பியா? எப்படி டி உன்னை சமாளிக்க போறேன்?”, என்று குழம்பி தவித்து யோசித்து கொண்டே படுத்திருந்தான்.

 

சுற்றி இருந்த மரங்களில் இருந்து வந்த குளுமையான  காற்று அவனை மெல்ல உறக்கத்திற்கு கடத்தி சென்றது. இத்தனை நாள் உறங்காததுக்கும் சேர்த்து நன்றாக உறங்க ஆரம்பித்தான்.

 

பதினொரு மணி போல் படுத்தவன் மாலை மூன்று மணிக்கு தான் எழுந்தான். எழுந்தவனுக்கு மனதில் இருந்த அனைத்து சஞ்சலங்களும் விலகியது போல இருந்தது.

 

இத்தனை நாட்கள் வந்த கனவு கூட இன்று வரவில்லை. இந்த நிமிடத்தில் கடவுளை முழுதாக நம்பினான் ரிஷி. இது வரை அவனுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை.

 

அதற்காக கடவுளே இல்லை என்று சொல்லும் ரகமும்  அவன் இல்லை. கோயிலுக்கு அதிகம் செல்ல மாட்டான். ஆனால் குடும்பமாக செல்லும் போது அவனும் போவான். சாருலதா விபூதி வைத்து விட்டால் பூசி கொள்வான். மற்ற படி பக்திக்கும் அவனுக்கும் வெகு தூரம். ஆனால் இன்று மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினான்.

 

அவன் எழுந்து வெளியே வரும் போது மற்றொரு துறவி அவன் எதிரே வந்து “எழுந்து விட்டாயா  தம்பி? உன்னை மதியம் சாப்பிட எழுப்ப வந்தேன். ஆனால் அசந்து தூங்கி கொண்டு இருந்ததால்  தூங்கட்டும்னு போய்ட்டேன். சாப்பிடுறியா?”, என்று கேட்டார்.

 

“சரிங்க சாமி, அதோ அங்க தான? நான் போய் சாப்பிட்டுக்குறேன்”, என்று சொல்லி விட்டு அங்கு போனான்.

 

ஒரு கலவை  சாதம் மற்றும்  ஒரு பொரியல் என்று அவர்கள் கொடுத்த உணவை விரும்பியே சாப்பிட்டான். பின் அறையில் வந்து யோசித்து கொண்டே படுத்திருந்தான். அப்போது தான் வீட்டுக்கு போன் பண்ண வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வந்தது.

 

தன்னுடைய போனை ஆன் செய்தான். அதில் பல மெஸேஜ்கள் வேதாவிடம் இருந்து குவிந்திருந்தது. “இப்படி தேடுறவ கிட்ட எப்படி இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ணு சொல்லுவேன்?”, என்று நினைத்து முதலில் அவளை அழைத்தான்.

 

போனையே கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் வேதா. இப்போது போன் அடிக்கவும் ஆவலாக அதை எடுத்து பார்த்தாள். ரிஷி தான் அவளை அழைத்திருந்தான். முகம் முழுவதும் சந்தோசமாக போனை எடுத்து காதில் வைத்து “ரிஷி”, என்று ஆவலாக அழைத்தாள்.

 

“வேதா குட்டி, என்னடி பண்ற?”, என்று கேட்கும் போதே ரிஷிக்கும் கண்கள் கலங்கியது.

 

“ஹ்ம் உன்னை திட்டிட்டே  படுத்துருக்கேன். எதுக்கு இவ்வளவு நேரம் போன் பண்ணல?”

 

“இங்க கான்பரன்ஸ் வேலை இருந்தது டி, அதான்”, என்று அவன் சொன்னதும் “இப்பவும் பொய் சொல்றானே?”, என்று வேதனையாக  நினைத்த வேதா “ஓ”, என்று மட்டும் சொன்னாள்.

 

“ஆமா நீ இன்னைக்கு ஆஃபீஸ் போகலையா? படுத்துருக்கேன்னு  சொல்ற?”, என்று கேட்டான் ரிஷி.

 

“உடம்பு சரி இல்லை டா. அதான் போகல. லீவ் போட்டுட்டேன்”

 

“ஏய் என்ன ஆச்சு மா?”

 

“என்ன ஆகும்? எப்பவும் போல தான். சரி நீ எப்ப வர?”

 

“நாளைக்கு மதியம் வந்துருவேன்”

 

“ம்ம், சீக்கிரம் வா. எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு”

 

“ஹ்ம் சரி டி, டாக்டர் என்ன சொன்னாங்க? எப்பவும் போல தானா?”

 

“இல்லை, புதுசா ஒரு ட்ரீட்மென்ட் சொல்லிருக்காங்க”, என்று சிரித்தாள் வேதா.

 

“புது ட்ரீட்மென்ட்டா ? என்ன டி அது?”

 

“சீக்கிரம் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டா  என் வயிறு வலி சரியாகிருமாம். சீக்கிரம் பெத்துக்கலாமா?”, என்று அங்கு அவள் கேட்டதும் இங்கே ரிஷிக்கு புரை ஏறியது.

 

“ஏய் என்ன டா ஆச்சு?”

 

“ஒன்னும் இல்லை. சரி வேதா. நான் அப்புறம் பேசுறேன். அம்மா அப்பா கிட்ட, அத்தை மாமா கிட்ட சொல்லிரு பை”, என்று சொல்லி போனை அணைத்து விட்டான்.

 

எவ்வளவு யோசித்தும் விடை தெரியாததால் “உண்மையை சொல்லி தான் அவளை சமாதான படுத்தனும்”, என்று முடிவு எடுத்து அன்றைய இரவை அங்கேயே  கழித்தான்.

 

அடுத்த நாள் கண் விழித்தவன் அங்கிருந்தவர்களுடன் சேர்த்து குளித்து விட்டு அவர்கள் கொடுத்த கூழையும் குடித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து பூஜை செய்து விட்டு சித்தரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பினான்.

 

மாலை ஆறு மணி போல் வீட்டுக்கு வந்த ரிஷி யாரிடமும் பேசாமல் தன் அறைக்கு போய் குளிக்க சென்றான்.

 

“இப்போதைக்கு எதையும் கேட்காத சாரு”, என்று சொல்லி விட்டார் சோமு.

 

குளித்து முடித்து வந்தவன் ஹாலில் அமர்ந்தான். அவன் வரவை அறிந்து வேதா வீட்டில் இருந்தும் வந்து விட்டார்கள்.

 

சோமு அருகில் ராமுவும் வந்து அமர்ந்து கொண்டார். ரிஷி அருகில் சென்று வேதா அமர்ந்து கொண்டாள். சாருவும் சீதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

 

“என்ன பா? கான்பரன்ஸ் எல்லாம் சரியா நடந்ததா?”, என்று நக்கலாக கேட்டார் சோமு.

 

“ஹ்ம் ஆமா பா”, என்றான் ரிஷி.

 

“நீ பொய் சொல்லுவன்னு எங்க எல்லாருக்கும் இப்ப தான் ரிஷி தெரியும்”, என்று அமைதியாக சொன்னாள் வேதா.

 

அவளை பார்த்து அதிர்ச்சி அடைந்ததவனுக்கு வேதா ஹாஸ்ப்பிட்டல் போனேன்னு சொன்னது நினைவு வந்தது. “அப்ப எல்லாருக்கும் கான்பரன்ஸ் போனது பொய்ன்ணு தெரிஞ்சு போச்சு போல? அப்புறம் ஏன் நேத்தே வேதா கேக்கலை?”, என்று நினைத்து கொண்டவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

“நீ என்ன டா  நினைச்சிட்டு இருக்க? பத்து நாளா ஒரு மார்கமா சுத்திட்டு இருக்க? இப்ப என்னன்னா பொய் சொல்லிட்டு எங்கயோ போய்ட்டு வர? என்ன ஆச்சு உனக்கு?”,  என்று திட்டினாள் சாரு.

 

“ஒண்ணும் இல்லைமா, சும்மா தான்”, என்று சமாளித்தான் ரிஷி.

 

“அத்தை விடுங்க. அவனை எதுவும் சொல்லாதீங்க. போனது போகட்டும். நாளைக்கு நகையும் டிரஸ்சும்  எடுக்க போகலாமா? இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இன்னும் பத்திரிக்கை கூட அடிக்க கொடுக்கல? நாளைக்கு போனா சரியா இருக்கும். போலாமா ரிஷி?”, என்று கேட்டாள் வேதா.

 

அவள் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பை  பார்த்தவனுக்கு கவலையாக இருந்தது.

 

“என்ன ரிஷி அமைதியா இருக்க? அதான் வேதா கேக்குறால்ல? பதில் சொல்லு பா”, என்றார் சோமு.

 

“இல்லை பா, வேண்டாம்”, என்று ரிஷி சொன்னதும் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் வேதா.

 

“நான் சொல்றதை எல்லாரும் பொறுமையா கேளுங்க. வேதா நீயும் தான்”, என்று ஆரம்பித்தான்.

 

“எதுவோ குண்டை தூக்கி போட போறான்”, என்று அவள் மனதில் பயம் சூழ்ந்தது. படபடப்பாக அவனை பார்த்தாள்.

 

“இந்த கல்யாணம் இப்ப வேண்டாம்”, என்று சொல்லி அவள் மனதில் பெரிய குண்டையே தூக்கி போட்டான்.

 

“ரிஷி நீ என்னப்பா சொல்ற?”, என்று கேட்டாள் சீதா.

 

“ஆமா அத்தை. அந்த சித்தர் சொன்னதை நாம கேட்டுருக்கணும். இப்ப என் தப்பு எனக்கு புரிஞ்சிட்டு. அவர் சொன்ன மாதிரி மூணு வருசம் கழிச்சே நானும் வேதாவும் கல்யாணம் பண்ணிக்கிறோம்”, என்று ரிஷி சொன்னதும் பெரியவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

 

ஆனால் வேதாவோ “நோ…..”, என்று கத்தி இருந்தாள். அவனை நெருங்கியவள் அவன் சட்டையை கொத்தாக பற்றி “என்ன டா சொன்ன? திருப்பி சொல்லு”, என்று கண்களில் கொலை வெறியோடு கேட்டாள்.

 

“ப்ச், புரிஞ்சிக்கோ வேதா, இப்ப வேண்டாம்ணு தான் சொன்னேன். ஒரேடியா வேண்டாம்னு சொல்லலை. நம்ம நல்லதுக்காக தான் சொல்றேன் மா”

 

“யார் நல்லதுக்கு? ஹான், யாரோட நல்லதுக்குனு சொல்ற? உன்னோட நல்லதுக்காகன்னு மட்டும்  சொல்லு”

 

“வேதா புரிஞ்சிக்கோ டா”

 

“ச்சி, என் பேரை சொல்லாத. என்னை பிடிக்கலைன்னு முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தான டா? என்னை எதுக்கு ஆசை காட்டி மோசம் பண்ண?”, என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

 

“வேதா, அவனை கொஞ்சம் பேச விடுமா”, என்றார் ராம கிருஷ்ணன்.

 

அவர் பக்கம் திரும்பிய வேதா, “யாரும் பேசாதீங்க? இப்ப உங்க எல்லாருக்கும் நிம்மதியா இருக்குமே? நீங்களும் இதுக்கு தான ஆசை பட்டீங்க? எல்லாரும் சேந்து என்னை ஏமாத்திட்டிங்கள்ல?”, என்று கேட்டாள்.

 

“யாரும் ஏமாத்தல டி. நடந்தததை முழுசா கேளு. அப்புறம்  நீயே என்னோட முடிவு தான் சரின்னு சொல்லுவ”, என்று சொன்ன ரிஷி அனைவரும் தன்னை கவனித்த உடன் பேச ஆரம்பித்தான்.

 

“அந்த சித்தர் தேதி குறிச்சு கொடுத்ததுல  இருந்து எனக்கு கெட்ட கெட்ட கனவா வர ஆரம்பிச்சது. யார் யாரோ வந்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அதை விட வேதாவும் என் கனவுல வந்தா. அது மட்டுமில்லாம வேதா  அழுற சத்தம், அவ தீயில் எறிஞ்சு போறது அப்படின்னு நிறைய காட்சிகள் வந்தது. எனக்கு தூங்கணும்னு நினைச்சே பயமா இருக்கும். இந்த பத்து நாளா சொல்ல முடியாத வேதனை எனக்கு இருந்தது.. அதனால தான் அந்த சித்தரை பாக்க போனேன்”

 

“ஐயையோ என்ன ரிஷி சொல்ற? அதனால தான் டல்லா  இருந்தியா? மதுரைக்கா போன?”, என்று கேட்டாள் சீதா.

 

“ஆமா அத்தை, இன்னொரு ஜோசியரையும் பாத்தேன். அவரும் அதையே சொன்னாரா? சரி முடிவா அந்த சித்தர் கிட்டயே கேக்கலாம்னு தான் போனேன் அத்தை. நீங்க எல்லாரும் பீல் பண்ணுவீங்கன்னு தான் கான்பரன்ஸ்ன்னு  சொன்னேன்”

 

“சாமி என்ன ரிஷி சொன்னாரு?”, என்று கேட்டாள் சாருலதா.

 

“என்னென்னமோ சொன்னார் மா. என்னோட பூர்வ ஜென்மம் பத்தி. நானும் வேதாவும் இந்த ஜென்மத்தை வரமா வாங்கிட்டு வந்துருக்கோமாம்”, என்று சொல்லி அனைத்தையும் சொன்னான் ரிஷி.

 

“எனக்கே பிரம்மிப்பா இருக்கு பா ரிஷி”, என்றார் ராமு.

 

“ஆமா மாமா. என்னாலயும்  நம்பவே முடியலை. அப்புறம்  அவர் கிட்டயே கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லிட்டேன். மனசுக்கு கஷ்டமா இருந்துச்சா? அதான் அங்கேயே தங்கிட்டு வந்தேன். அப்புறம் எனக்கு அந்த மாதிரி கனவே  வரலை மாமா”

 

“எல்லாமே கடவுள் சித்தம் பா. அதுக்கு தான் எல்லாரும் அப்படி சொல்லிருக்காங்க. இன்னும் மூணு வருசம் தான? சீக்கிரமா ஓடிரும்”, என்று சிரித்தார் சோமு.

 

“எல்லாரும் கொஞ்ச நேரம் உங்க டிராமாவை நிறுத்துறீங்களா?”, என்று ஆங்காரமாக கத்தினாள் வேதா.

 

“வேதா எதுக்கு இப்படி பேய் மாதிரி கத்துற?  பொண்ணு மாதிரி நடந்துக்கோ டி”, என்று கண்டிப்புடன்  சொன்னாள் சீதா.

 

“நான் பொண்ணே இல்லை. பேய் தான். போதுமா? இவ்வளவு நேரம் நீங்க எல்லாரும் பேசினீங்கள்ல? இப்ப நான் பேசுறதை கேளுங்க. டேய்  ரிஷி, உன்னை நிஜமாவே பாராட்டணும் . நீ சொன்ன கதை சூப்பர். படமா எடுத்தா சூப்பரா ஓடும். போன ஜென்மமாம், லவ்வாம், கல்யாணமாம், ஆக்ஸிடேண்டாம், பேயா வந்து லவ் பன்ணேனாம். ஹா ஹா இந்த கதையை ரெடி பண்ண தான் ரெண்டு நாள் காணாம போனேன்னு  இப்ப தான புரியுது”

 

“வேதா பொய் சொல்லலை டி. உண்மையை தான் சொல்றேன்”, என்றான் ரிஷி.

 

“இதை இங்க இருக்குற  இவங்க வேணா நம்பலாம். ஆனா இந்த வேதா நம்ப மாட்டா. புடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்குமே டா? எதுக்கு கதை எல்லாம் சொல்ற?”

 

“ஏய், எனக்கு உன்னை மட்டும் தான் டி பிடிக்கும். நான் சொல்றது எல்லாம் உண்மை. இன்னும் மூணு வருசம் தான குட்டி?”

 

“மூணு வருசம் முடிஞ்சா நான் தான் செத்து போய்ருவேனே? அதுக்கப்புறம் நீ நிம்மதியா வேற பொண்ணை கல்யாணம்  பண்ணனும்னு தான இப்படி சொல்ற?”

 

“என்ன டி உளறுற?”

 

“நான் உளறுறேனா? உளறலை. அது தான் உண்மை. ஆமா நான் செத்து போய்ருவேன். என்னை இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா மூணு வருசம் அப்புறம் நீ  வேற பொண்ணை கல்யாணம் பண்ணும் போது ரெண்டாந்தாரமா ஆகிருவியே? அதுக்கு தான இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?”

 

“உளராத வேதா. நீ செத்து போயிருவேன்னு ஏன் சொல்ற?”

 

“ஆமா, அது தான் உண்மை. அதுக்கு தான் எல்லா சாமியாரும் இப்படி சொல்லிருக்காங்க”

 

“அவங்க சொல்றதை நம்புற நீ காரணத்தை மட்டும் தப்பா புரிஞ்சு வச்சிருக்க டி”

 

“ஆமா எல்லாமே தப்பா தான் புரிஞ்சு வச்சிருக்கேன். நீ என்னோட ரிஷின்னு  நான் தப்பா தான் புரிஞ்சு வச்சிருக்கேன். சே, எவ்வளவு ஆசை பட்டேன். எல்லாமே போச்சு”

 

“ஏய், வேதா நான் உன் ரிஷி தான் டி”

 

“இல்லை, நீ என் ரிஷி இல்லை. உனக்கு ஏன் டா  நான் செத்து போனா கூட என்னையே நினைச்சு வாழணும்னு  தோணலை? நான் அப்படி தான் டா நினைச்சேன். ஒரு நாள் உன்கூட வாழ்ந்துட்டு செத்து போய்ரணும்னு ஆசை பட்டேன். ஆனா நீ என்னை என் அளவுக்கு லவ் பண்ணலைல?”

 

“வேதா”

 

“பேசாத. எல்லாருமே உன் பக்கம் சாஞ்சிட்டாங்கல்ல?? என்னோட அப்பா அம்மா கூட உன் பக்கம் தான் இல்ல?”

 

“வேதா, அப்படி இல்ல மா. அத்தை,  மாமா, அம்மா, அப்பா எல்லாருக்கும் நீ தான் முக்கியம். நம்ம கல்யாணம்  நடந்தா தான் டி நீ செத்துருவ”

 

“சரி செத்துருவேன்னு வச்சுக்குவோம். எனக்கு இந்த உலகத்துல வாழ எல்லாம் விருப்பம் இல்லை. இன்னைக்கே கல்யாணம் பண்ணி நாளைக்கே செத்து போயிறேன். உன் பொண்டாட்டியா செத்து போறதே எனக்கு சந்தோசம் தான். இப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”

 

“வேதா அறிவு கேட்ட தனமா உளராத”, என்றாள் சீதா.

 

“நீ சும்மா இரு மா. நான் அவன் கிட்ட பேசிட்டு இருக்கேன். சொல்லு டா. சாகுறதை பத்தி  நானே கவலை படலை. உனக்கு என்ன கவலை? உன் பொண்டாட்டியா சாகணும் அவ்வளவு தான். கல்யாணம் பண்ணிக்கிறியா?”

 

“முடியாது வேதா”

 

“ஓ”, என்று விரக்தியான குரலில் சொன்னவள், அங்கேயே மடங்கி அமர்ந்து  ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

 

அவளை சமாதானம் செய்ய அருகில் போனவர்களை ஒரு பார்வையாலே தள்ளி நிறுத்தினாள்.

 

“எப்ப என்னோட உணர்வுகளுக்கு யாரும் மதிப்பு கொடுக்கலையோ  எனக்கும் நீங்க யாருமே வேண்டாம். இந்த நிமிசத்துல இருந்து உங்க அஞ்சு பேரையும் நான் வெறுக்குறேன். உங்க ரிஷிக்கு அவனுக்கு பொருத்தமான ஒரு டாக்டர் பொண்ணை  கட்டி வச்சு சந்தோச படுங்க”, என்று அழுது கொண்டே சொன்னவள் தங்கள் வீட்டுக்கு வந்து அவளுடைய அறைக்கு ஓடியே போனாள்.

 

பின்னாடியே போக பார்த்த ரிஷியை “விடு ரிஷி. இப்ப போனா அவளை கட்டாயம் சமாதான படுத்த முடியாது. அவளை பத்தி நமக்கு தெரிஞ்சது தான? கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கிட்டு இருப்பா. உன்கிட்ட அவளால பேசாம இருக்க முடியாது. அவளை அவ போக்கில் விடுவோம்”, என்று சொன்னாள் சீதா.

 

அவனும் சோகத்தோடு தனது அறைக்கு  சென்று விட்டான்.

 

பெரியவர்கள் முகத்திலும் சிறிய சோகம் இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சிறிது நேரத்திலே சமையல் வேலை என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 

காதல் உயிர்த்தெழும்…..