Advertisement

அத்தியாயம் 5

 

இனிமை தரும்

உன்னை பற்றிய

அழகான கனவு

என் இரவில் வருமானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

ரிஷி நெஞ்சில் சாய்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த வேதா அப்படியே தூங்கி விட்டாள். சிறு பிள்ளை போல் தூங்கும் அவளை ரசித்தவன் “இவளை போய் மூணு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றாங்களே? எங்களுக்குள்ளே எப்படி பிரிவு வரும்? என் உயிரே இவ தான். இவளுக்கும் அதே மாதிரி தான். அப்படி இருக்கும் போது கல்யாணம் ஆனா நிரந்தரமா பிரிஞ்சிருவாங்களாம்? அப்படி எல்லாம் ஆக கூடாது கடவுளே? என் வேதா எப்பவும் சந்தோசமா இருக்கணும். அவளோட சந்தோசம் மொத்தமும் என்கிட்டே தான் புதைஞ்சு இருக்கு”, என்று எண்ணி கொண்டே அப்படியே அவனும் கண்ணயர்ந்தான்.

 

ஆழ்ந்த உறக்கத்துக்கு அவன் சென்ற போது அவனுக்கு அந்த கனவு வந்தது. நடு ரோட்டில் ரிஷி என்று வேதா அலறும் சத்தம். வலிக்குது டா என்று அவள் அழும் சத்தம், கண் முன் எரிந்து கொண்டிருந்த தீ என கனவில் வந்தது.

 

அதிர்ந்து போய் கண் விழித்தவனுக்கு உடலெல்லாம் வியர்த்து  விட்டது. நெஞ்சில் தூங்கி கொண்டிருந்த அவளை பார்த்த பின்னர் தான் ஆறுதலாக இருந்தது.

 

“எதுக்கு இப்படி கனவு? என்ன சத்தம்? என்ன தீ? எதுக்கு வேதா அழுறா? சே,  அந்த சாமியார் சொன்னதை யோசிச்சிட்டே வந்து அதுவே கனவா வருது. இனி சாஸ்திரம் சம்பிரதாயம்னு வீட்ல எதாவது பேசட்டும் அப்புறம் இருக்கு”, என்று எண்ணி கொண்டவனுக்கு மனதில் முதல் நெருடல் ஆரம்பித்தது.

 

விடியும் போது தான் வீட்டை அடைந்தார்கள். பின் அவரவர் அறைக்கு சென்று குளித்து முடித்து அரை குறை உணவை உண்டு விட்டு  தூங்க சென்று விட்டார்கள்.

 

அன்றைய நாள் பெரும்பாலும் தூக்கத்திலே கழிந்தது. அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக வேலைக்கு சென்று விட்டார்கள். சீதாவும், சாருவும் பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு கிளம்பினார்கள்.

 

ஆஸ்பத்திரிக்கு சென்ற ரிஷியோ தன் வேலைகளில் மூழ்கி விட்டான். வேதாவும் அதே போல் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கும் போது தான் அவள் அருகில் ஜெகன் வந்தான்.

 

அவனை பார்த்ததும் அன்று அவன் பேசிய அனைத்தும் நினைவு வந்தது. என்ன தான் பிரண்டா பழகலாம் என்று நினைத்தாலும் முன்னே பழகியது போல பழக முடியாது என்று எண்ணி கொண்ட வேதா அவனை பார்த்து சிரித்தாள்.

 

“சாரி வேதா”, என்றான் ஜெகன்.

 

“லீவ் இட் டா. இன்னைக்கு என்ன லேட்டா வந்திருக்க?”, என்று வேதாவும் சாதாரணமாக கேட்டாள். அதன் பின் அவர்களின் பேச்சும் சாதாரணமாக இருந்தது.

 

அதன் பின் வாழ்க்கை எப்பவும் போல சென்றது. ஆனால் அடிக்கடி ரிஷிக்கு தான் அந்த கனவு வர ஆரம்பித்தது. அதுவும் முதலில் தெளிவாக தெரியாத காட்சி மெல்ல மெல்ல ஒவ்வொரு நாளும் தெளிவானதாக மாற ஆரம்பித்திருந்தது.

 

வேதநாயகி அரிச்சந்திரன் என்று வேதா பேசுவது, வேதிகா ரிஷிநந்தன் என்ற ஒரு குழந்தையின் குரல் என அனைத்தும் அவனுக்கு கேட்டது. நாள் ஆக ஆக அவன் படுத்ததும் கனவு வருவதும், அதன் பின் அந்த கனவே நாள் ஆக ஆக விரிவடைந்து கொண்டிருந்ததையும் உணர்ந்தான் ரிஷி.

 

மொத்தத்தில் அவன் தூக்கம் அனைத்தையும் திருடி கொண்டது கனவு. இதை மற்றவர்களிடம் சொன்னால் வீணாக பதட்டமடைவார்கள் என்று சொல்லாமல் மறைத்தான். அவனுடைய நாள்கள் குழப்பமாக செல்ல, வேதாவின் நாட்களோ அழகாக சென்றது.

 

முழுமையான கல்யாண வாழ்க்கையை அவனுடன் வாழ்வதும் தயாராக இருந்தாள். அவள் மனதில் முழுவதும் சந்தோச கற்பனைகள் மட்டும் நிறைந்திருந்தது. அவனுடனான ஒவ்வொரு நிகழ்வையும் கற்பனை செய்து பார்த்து பார்த்து பூரித்து போனாள்.

 

தினமும் வேலை முடிந்து வரும் ரிஷி அவளை காண வரும் போது அவளாக அவன் மீது சாய்ந்து கொண்டு ஒவ்வொன்றாக சொல்லிய போது முதலில் ஆர்வமாக கவனித்த ரிஷி நாள் ஆக ஆக அவள் சொல்வதில் பற்றில்லாமல் கேட்டு கொண்டிருந்தான்.

 

முதலில் அதை உணராமல் இருந்தவள் அதை அறிந்த போதோ திகைத்து போனாள். பின் அவனுடைய வேலை டென்ஷன் என்று எண்ணி கொண்டாள்.

 

இப்படியே நாள்கள் சென்று கொண்டிருந்தது. திருமணத்துக்கு இன்னும் பதினைந்து நாள் இருக்கும் போது,  வேதாவின் வற்புறுத்தலால் “கல்யாணத்துக்கு நாளை நகை, புடவை எல்லாம் எடுக்க போகலாம்”, என்று அறிவித்தான் ரிஷி.

 

பெற்றவர்களும் சரி என்று சொல்லி விட்டார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு அப்பாக்களையும் பத்திரிகை அடிக்க கொடுக்க சொன்னான்.

 

“கல்யாணம் நடக்குமா நடக்காதா? நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு வீணான செலவு?”, என்று நினைத்து ராமுவும் சோமுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். ஆனாலும் அவனிடம் எதுவும் சொல்லாமல் சரி என்று மட்டும் சொன்னார்கள்.

 

அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு கிளம்பி முதலில் பத்திரிக்கை அடிக்க கொடுத்து விட்டு அதன் பின் நகை புடவை எடுக்க செல்லலாம் என்று பேசி வைத்தார்கள்.

 

அந்த நினைப்புடன் எழுந்தாள் வேதா. அவள் முகம் முழுவதும் வண்ணமயமான சிரிப்பு இருந்தது. “இன்னைக்கு ரிஷிக்கு புடிச்சதா செலெக்ட் பண்ணனும்? அவன் தான் எனக்கு சூப்பரா எல்லாம் வாங்கி தருவான்”, என்று எண்ணி கொண்டே கண்ணாடியில் தன் முகம் பார்த்தவள் “இன்னைக்கு சூப்பரா டிரெஸ் பண்ணி உன்னை அசத்த போறேன் பாரு டா. ஒரு வாரமா என்கிட்டே ஒழுங்காவே பேச மாட்டிக்க. பத்து, பத்தரை வரை பேசுவ? இப்ப ஒன்பது மணிக்கே தூங்க போற? இன்னைக்கு அப்படியே உன்னை சொக்க வைக்க போறேன்”, என்று எண்ணி கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.

 

அதே நேரம் ரிஷியோ வேதா என்ற அலறலோடு எழுந்தான். அவன் அறை கதவு மூடி இருந்ததால் ஒருவருக்கும் அவன் கத்தல் கேட்க வில்லை. ஆனால் எழுந்து அமர்ந்திருந்தவனோ வியர்வையில் குளித்திருந்தான்.

 

“ஒரே கனவு பத்து நாளுக்கு மேல வருமா? அதுவும் சின்ன சின்னதா வந்த கனவு அப்படியே பெருசா ஆகிட்டே போகுமா? எதுவோ சரி இல்லை. வேதாவுக்கு எதுவோ ஆபத்து. அப்ப அந்த சாமியார் சொன்னது உண்மை தானா? இல்லைன்னா எனக்கு ஏன் இப்படி வரணும்? அதுவும் யார் யாரெல்லாமோ கனவில் வாரங்க. அதெல்லாம் யாருன்னு கூட தெரியலையே”, என்று யோசித்தவன் “இதுக்கெல்லாம் விடை குழப்பத்தை உண்டு பண்ண ஆள் கிட்ட தான் இருக்கு. அவரை பாத்தா தான் எல்லாம் சரியாகும். அதுக்கு முன்னாடி இன்னொரு ஜோசியர் கிட்ட போய் கேக்கணும்”, என்று நினைத்து எழுந்தவன் குளித்து முடித்து கிளம்பி வந்தான்.

 

“சாயங்காலம் தான டா போறோம்? நீ இப்பவே கிளம்பிருக்க?”, என்று கேட்டாள் சாருலதா.

 

“நான் விக்னேஷை பாத்துட்டு வந்துறேன் மா”, என்று சொல்லி விட்டு யாருக்கும் தெரியாமல் இவருடைய ஜாதகத்தையும் எடுத்து கொண்டு சென்றான்.

 

பின் தன் நண்பன் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “விக்கி, வெளிய இருக்கேன் டா. சீக்கிரம் வா”, என்று சொல்லி போனில் சொன்னான்.

 

“உள்ளே வாயேன் டா”, என்றான் விக்கி.

 

“உள்ள வந்தா அம்மா அப்பா கிட்ட பேசணும் டா. அவங்க கிட்ட பேசுற மனநிலைல நான் இல்லை. நீ வா. அவங்க அவசரம்னு புரிஞ்சிப்பாங்க”, என்று ரிஷி சொன்னதும் விக்கியும் கிளம்பி வெளியே வந்து விட்டான்.

 

“என்ன டா? ஜோசியர் அட்ரஸ் வாங்கிட்டியா?”, என்று கேட்டான் ரிஷி.

 

“ம்ம், வாங்கிட்டேன் டா. என் அக்காவுக்கு அந்த ஆள் கிட்ட தான் கல்யாணத்துக்கு பொருத்தம் பார்த்தோம். இங்க கிட்ட தான். இதோ அட்ரஸ்”, என்று ஒரு பேப்பரை கொடுத்தான் விக்கி.

 

அடுத்த அரைமணிநேரத்தில் அந்த ஜோசியர் முன்னே அமர்ந்திருந்தார்கள் இருவரும். இரண்டையும் வாங்கி பார்த்தவர் அவர்களை பார்த்து முறைத்து கொண்டே “என்னப்பா? நான் போலியா இல்லையானு சோதனை செய்ய செத்தவங்களோட ஜாதகத்தை கொண்டு வந்துருக்கீங்களா?”, என்று கேட்டார்.

 

விக்கியோ அதிர்ச்சியாக ரிஷியை பார்த்தான். ரிஷியோ அமைதியாக இருந்தான். பின் அந்த ஜோசியரை பார்த்தவன் “அதை தெரிஞ்சிக்க தான் இங்க வந்தோம். இந்த ஜாதகம் என்னோடது. இது என்னோட வேதாவோடது. ரெண்டு இடத்துல ஜாதகம் பாத்துட்டோம். ஆனா அவங்க இப்ப கல்யாணம் நடக்காது. மூணு வருஷம் கல்யாணம் வேண்டாம். நடந்தா பிரிஞ்சிருவீங்க, வேதா செத்துருவான்னு சொன்னாங்க. ஆனா நீங்களோ செத்து போனவங்களோடதுன்னு சொல்றீங்க? எனக்கு விளக்கமா சொல்லுங்க”, என்றான்.

 

“ஒரு நிமிஷம் இருப்பா. பாக்குறேன்”, என்று பார்த்தவர் “என்னை மன்னிச்சிரு தம்பி. தெரியாம இது செத்து போனவங்களோடதுன்னு சொல்லிட்டேன். ஆனா இதுல அப்படி ஒரு குறிப்பும் இருக்கு. முடிஞ்சு போன ரெண்டு பேரோட வாழ்க்கை உங்க மூலமா  தொடருவதாவும் இருக்கு. நான் அந்த முடிஞ்சு போனதை மட்டும் பாத்துட்டு சொல்லிட்டேன். இப்ப தான் தொடருவதுல உள்ள குறிப்பு தெரியுது. அது தொடரவும் ஒரு சமையம் வேணுமே. அதுக்கு தான் அந்த மூணு வருஷம் சொல்லிருக்காங்க. இது எதுவோ கடவுளோட அற்புத ஜாதக படைப்புன்னு தான் தோணுது. எனக்கு இதுக்கு மேல கணிச்சு சொல்ல முடியலைப்பா”, என்றார்.

 

“சரிங்க ஐயா”, என்றவன் அவருக்கு தட்சணை கொடுத்து விட்டு வெளியே வந்தான். பின் விக்கி பல முறை கேட்டதுக்கு எதோ சொல்லி சமாளித்தவன் அவனை அவனுடைய வீட்டில் விட்டுவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தான்.

 

அவன் வீட்டுக்கு வரும் போது மணி ஐந்து ஆகி இருந்தது. எங்கே எங்கேயோ சுத்தி விட்டு வேண்டும் என்றே தான் நேரம் கழித்து வந்தான். “எருமை காலைலயும் சாப்பிடலை. மதியமும் வராம இந்நேரம் வார? ஒரு டாக்டர் மாதிரியா நடந்துக்குற? அதுலயும் எங்களை எல்லாம் நாலு மணிக்கு கிளம்ப சொல்லிட்டு. நீ இப்ப வர? போன் பண்ணாலும் எடுக்கலை. வேதா செம கடுப்புல இருக்கா. வா, வந்து சாப்பிட்டுட்டு அவ கிட்ட போய் வாங்கி கட்டு. பாவம் வேதா. எவ்வளவு ஆசையா கிளம்பி இருந்தா தெரியுமா?”, என்றாள் சாரு.

 

“நீ சாப்பாடு எடுத்து வை மா வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் போக பார்த்தான் ரிஷி.

 

“அப்படியே கிளம்பிரு டா.  நாங்க எல்லாம் கிளம்பி தான் இருக்கோம். பக்கத்துல தான கடை? அந்த பிள்ளையை கிளம்ப வச்சிட்டு வேண்டாம்னு சொன்னா மனசு கஷ்ட படுவா. நகை மட்டும் இன்னைக்கு எடுத்துட்டு வரலாம்”, என்று சிரித்த சாருவை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று மறைந்தான் ரிஷி.

 

அங்கே அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டிருந்த சோமுவிடம் “என்னங்க? இவன் இப்படி போறான்?”, என்று கேட்டாள் சாரு.

 

“அவன் முகமே சரி இல்லை சாரு. முதல்ல சாப்பிட வை. அப்புறம் என்னனு கேளு”, என்றார் சோமு.

 

அறைக்குள் சென்றவனோ ஒரு பையை எடுத்து அதில் சில உடைகளை எடுத்து வைத்தான். பின் வெளியே வந்தவன் அமைதியாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் அமைதி பெற்றவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் எதையும் கேட்காமல் அவனை சாப்பிட வைத்தார்கள்.

 

சாப்பிட்டு கை கழுவியவனிடம் எதுவோ கேட்க வந்தாள் சாரு. “நான் வேதாவை பாத்துட்டு வரேன் மா”, என்று சொல்லி நகன்றான் ரிஷி.

 

“சரி டா, இப்ப கிளம்புறோம் தான? நான் பணம் எல்லாம் எடுத்து வைக்கவா?”

 

“நாம இப்ப போகலை மா. நான் இப்ப ஒரு கான்பரன்ஸ்க்காக பெங்களூர் போறேன். வர ரெண்டு நாள் ஆகும். நீங்க அப்புறமா வேதாவை கூட்டிட்டு போய் எடுத்துக்கோங்க. இப்ப அவ கிட்ட நான் பேசிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு அவளுடைய வீட்டை நோக்கி சென்றான்.

 

“என்னங்க ஆச்சு இவனுக்கு?”, என்று கேட்டாள் சாரு.

 

“அனைத்தும் நன்மைக்கேன்னு நினைச்சிக்கோ. நானே வீணா பத்திரிக்கை அடிக்கணுமோன்னு நினைச்சேன். அப்புறம் நம்ம பையன் கல்யாணம் இப்ப இல்லை. மூணு வருஷம் அப்புறம் தான் அப்படின்னு உன் மனசுல தெளிவா எழுதிக்கோ. இல்லைன்னா எதிர்பார்ப்புகள் உனக்குள்ளயும் வந்து மனசு கஷ்ட படும் சாரு மா”, என்று அவளை சமாதான படுத்தினார் சோமசுந்தரம்.

 

கதவை திறந்த சீதா “எங்க ரிஷி போன? நீ வரலைன்னு வேதா போன் பண்ணிட்டே இருந்தா. உன் மாமாவும் இப்ப தான் வாக்கிங் கிளம்பினார்”, என்றாள்.

 

“ஒரு அர்ஜன்ட் ஒர்க் அத்தை. அதான் ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டேன். போன்ல சார்ஜ் இல்லை. அப்புறம் நகை எடுக்க நீங்க எல்லாரும் இன்னொரு நாள் போய்க்கோங்க. எனக்கு பெங்களூர்ல ஒரு கான்பரன்ஸ் இருக்கு. இன்னைக்கு நைட் கிளம்பனும். உங்களை அம்மா கூப்பிட்டாங்க. நான் வேதாவை போய் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு மேலே சென்றான்.

 

குழப்பமாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கதவை பூட்டி விட்டு சாருவை காண சென்றாள் சீதா.

 

மேலே சென்றவன் பூட்டி இருந்த அவளுடைய அறை கதவை பார்த்தான். ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து கொண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.

 

கட்டிலில் குப்புற படுத்திருந்தாள் வேதா. கதவு திறந்த சத்தத்தில் திரும்பி பார்த்தவள் அவனை கண்டு எழுந்து நின்று பின் ஜன்னல் அருகே இருந்தே சேரில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளுடைய கோபத்தை எப்போதும் ரசிப்பவன் இப்போது வெறுமையான மனநிலையில் அவளை பார்த்து கொண்டே அவள் அருகே சென்றான்.

 

அவள் எதிரே சென்று நின்றவன் ஜன்னல் கம்பியை பிடித்து கொண்டு “சாரி வேதா”, என்றான்.

 

“எனக்கு எதுக்கு சாரி சொல்ற? நான் உனக்கு அவ்வளவு முக்கியமா? போன் பண்ணா கூட நீங்க எல்லாம் எடுக்க மாட்டிங்க. நான் யாரோ தான?”, என்று கலங்கிய குரலில் கேட்டாள் வேதா.

 

“சாரி டி, முக்கியமான வேலை. அதனால தான். சொல்ல முடியாம போயிட்டு. அப்புறம் போன்ல சார்ஜ் இல்லை டி”

 

“உனக்கு பொய் சொல்ல வரல ரிஷி. இப்ப உன்னோட போனை எடுத்து காட்டு பாப்போம். அதுல புல் சார்ஜ் இருக்குன்னு என்னால நிரூபிக்க முடியும்”

 

“ப்ச், ஆமா சார்ஜ் எல்லாம் இருக்கு. இப்ப என்ன? அதான் வர முடியலைன்னு சொல்றேன்ல?”

 

….

 

“வர முடியாத படி ஒரு ஆக்சிடென்ட் கேஸ்ல மாட்டிகிட்டேன் டி. அதனால தான் போன் பேச முடியலை. சாரி மா”

 

“ம்ம் சரி நாளைக்கு போகலாமா?”

 

ஆசையுடன் கேட்ட அவள் கண்களில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தன்னையே வெறுத்தவன் “இன்னைக்கு நைட் நான் பெங்களூர் போறேன் டி. ஒரு முக்கியமான கான்பரன்ஸ் இருக்கு”, என்றான்.

 

அவள் முகம் அப்படியே வாடி போனது. அதை தாங்க முடியாமல் “நீ அம்மா அப்பா, அத்தை மாமா கூட போய் எடுத்துரு சரியா?”, என்றான்.

 

“நீ கான்பரன்ஸ் முடிஞ்சு வா. அப்புறம் எடுத்துக்கலாம்”

 

“ம்ம், சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே போக பார்த்தான்.

 

போகும் அவனையே பார்த்தவள் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து நின்று “ரிஷி”, என அழைத்தாள்.

 

“ம்ம்”, என்று திரும்பி பார்த்தான் ரிஷி.

 

“உனக்கு எதாவது ப்ராப்லமா  டா?”

 

“நம்ம வாழ்க்கைல தான் டி எதோ பிராப்லம்ன்னு தோணுது”, என்று நினைத்து கொண்டு “இல்லையே”, என்றான்.

 

“பொய் சொல்லாத. நீ சரியே இல்லை. நிறைய பொய் சொல்ற? காலைல இந்த டிரஸ்சல நீ போனதை நான் ஜன்னல் வழியா பாத்தேன். ஹாஸ்ப்பிட்டல் போனா வீட்டுக்கு வந்து குளிக்காம இருக்க மாட்ட. அது மட்டும் இல்லாம நீ என்னை பாக்கவே இல்லையே டா”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகி இருந்தது.

 

அவள் அழுவதை தாங்க முடியாமல் அவளை நெருங்கியவன் “வேதா என்ன இது? எத்தனை வாட்டி சொல்றது? இப்படி அழ கூடாதுன்னு”, என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

 

அவன் கையை தட்டி விட்டவள் “நான் இன்னைக்கு என்ன டிரெஸ் போட்டிருக்கேன்னு பாத்தியா? எப்படி இருக்கேன்னாவது பாத்தியா? என்னையே மறக்குற அளவுக்கு உன் மனசுல வேற எதுவோ இருக்குல்ல? உனக்காக எப்படி ஆசையா கிளம்பி இருக்கேனு பாரு. எவ்வளவு நேரமா கிளம்புனேன் தெரியுமா? நீ என்னை பாத்ததும் உன் முகம் எப்படி எல்லாம் மாறும், நீ என்ன என்ன செய்வேன்னு எல்லாம் கற்பனை செஞ்சு வச்சிருந்தேன் தெரியுமா? ஆனா நீ என்னை பாக்கவே இல்லையே டா”, என்று அவள் அழும் போது தான் அவளுடைய உடையையே கவனித்தான்  ரிஷி.

 

பிங்க் நிற டிசைனர் புடவையில் தேவதையாக இருந்தாள் அவனுடைய வேதா. ஆனால் அவளை அப்படி புடவையில் அழகான அலங்காரத்தில் பார்த்த பின்னர் கூட அவனுடைய மனது அதில் செல்ல வில்லை. அவன் மனம் முழுவதும் குழப்பமும் சூழ்ந்திருந்தது.

 

“என்னை உனக்கு பிடிக்கலையா ரிஷி?”, என்று கண்ணீருடன் கேட்டவளை இழுத்து அணைத்தவன் அவளுடைய தோள் வளைவில் முகம் புதைத்தான்.

 

அவன் நெஞ்சில் சாய்ந்தவளோ அழுது கொண்டே இருந்தாள். ரிஷி கண்களிலும் கண்ணீர் வந்தது. அவனுக்குமே இந்த அணைப்பு தேவையாக இருந்தது. இருவருமே மற்றவர் அணைப்பில் தங்களை மறந்து இருந்தார்கள்.

 

அவனுடைய  கண்ணீரை அவள் முதுகு உணர்ந்தது. அதை பார்த்து பதறி போனவள் அவனிடம் இருந்து விலகி அவனுடைய கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

“சாரி டி”, என்று சொன்னவனுடைய கண்களிலும் கண்ணீர் தேங்கி இருந்தது.

 

“உன்னையே அழ வச்சிட்டேன்ல டா? ஆசையா கிளம்பி இருந்தேனா? அதான் நடக்கலைன்னு ஏமாற்றமா ஆகிட்டு. உனக்கு தான் தெரியுமே என்னை பத்தி. ஆசை பட்டது கிடைக்கலைன்னா ரொம்ப அப்செட் ஆவேன்னு. இப்ப என்ன? ரெண்டு நாள் நீ  கான்பரன்ஸ் போற? போய்ட்டு வந்த அப்புறமே நாம கடைக்கு போகலாம். சரியா?”, என்று அவனை சமாதானம் செய்தாள். அவனை சமாதானம் செய்தாலும் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டு தான் இருந்தது.

 

“ரெண்டு நாள் கழிச்சு வந்த அப்புறமும் நாம கடைக்கு நகை, புடவை வாங்க போவோமான்னு தெரியலையே டி?”, என்று மனதில் எண்ணி கொண்டவன் அவளுடைய உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.

 

“எருமை நான் எதிர்பார்த்தப்ப தரலை. எதிர்பார்க்கத்தப்ப கொடுக்கிறான் பாரு”, என்று மனதில் நினைத்து கொண்ட வேதாவும் அவனுடைய முத்தத்தில் கரைந்தாள். அவளுடைய உதடுகளை சிறை செய்தவனோ அவளை விட்டு விலக கூட தோன்றாமல் அவள் உதட்டிலே மூழ்கி இருந்தான். வேதா தான் மூச்சு முட்டி போனாள்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement