அத்தியாயம் 4

 

உனக்காக நான் எழுதிய

கவிதைகளை உன்

காலடியில் சமர்ப்பிக்கும்

நாள் வருமானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

சித்தர்  பார்வை சென்ற பக்கம் அங்கிருந்த மக்களும் திரும்பி பார்த்தார்கள். பின் சித்தரை பார்த்தார்கள். அவரோ ரிஷி மற்றும் வேதாவை தான் பார்த்து கொண்டிருந்தார்.

 

சித்தரின் அருகில் வந்தவர்கள் அவரை வணங்கினார்கள். “இதெல்லாம் சும்மா”, என்ற எண்ணத்துடன் வந்த ரிஷி கூட சித்தரின் தீட்சண்யமான பார்வையில் இரு கரம் குவித்து வணங்கினான்.

 

அமைதியாக இருந்த அந்த இடத்தில் சாருலதா தான் பேச ஆரம்பித்தாள். “ஐயா, இவன் என் பையன். அவ என்னோட மருமக. ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு இருக்கோம். ஒரு நல்ல நாளை நீங்க தான் குறிச்சு தரனும்”

 

“நடக்காத கல்யாணத்துக்கு நாள் குறிச்சி என்ன பண்ண தாயி?”, என்று கேட்டு அனைவரின் தலையிலும் இடியை இறக்கினார் சித்தர்.

 

“ஐயா, எதனால இப்படி சொல்றீங்க? இன்னொரு ஜோசியரும் இப்படி தான் சொன்னார். அது உண்மையானு தெரிஞ்சிக்க தான் இங்கயே வந்தோம். அவர் மூணு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ண சொன்னார். எதனால இப்படி? எதாவது பரிகாரம் இருக்கா?”, என்று கேட்டாள் சீதா.

 

ஆண்கள் இருவரும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள்.

 

வேதாவும், ரிஷியும் சித்தர் காலடியில் அமர்ந்திருந்தார்கள்.

 

“இவங்க ஜாதகத்துலே அந்த உண்மை புதஞ்சி இருக்கும் போது எந்த இடத்துக்கு போனாலும் இதையே தான் தாயி சொல்லுவாங்க?”

 

“ஆனா நீங்க ஜாதகத்தையே பாக்கலையே ஐயா?”

 

“ஜாதகம் என்னமா  ஜாதகம் ரெண்டு பேரோட  முகத்தை வச்சே கண்டு பிடிச்சிரலாம்”

 

“ஒரு வேளை ரெண்டு பேரோட ஜாதகத்துலயும்  பொருத்தம் இல்லையோ?”, என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

 

“இவங்க ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தி இருக்குற மாதிரி வேற யாரோடதும்  பொருந்தாது. இவங்களை தவிர வேற வரன் பாத்தாலும் அவங்க கூடவும் இவங்களோடது  பொருந்தாது”

 

“அப்புறம் எதுக்காக சித்தரே அந்த மூணுவருச  கெடு?”, என்று கேட்டார் சோமு.

 

“அது தான் காலம் விதிச்சிருக்க  விதி. இந்த பையனுக்கு முப்பது வயசு முடியாம கல்யாணம் பண்ணா இவங்க பிரியனும் அப்படிங்குறது விதி”

 

“கல்யாணம் செஞ்சு வச்சா பிரிஞ்சிருவாங்களா? அப்படி நடக்கவே செய்யாது ஐயா. ரெண்டு பேரும் அவ்வளவு அன்பா இருப்பாங்களே? அப்புறம் எப்படி பிரியுவாங்க?”, என்று கேட்டாள் சீதா.

 

“இந்த பொண்ணு செத்து போய்ட்டா பிரிஞ்சு தான ஆகணும்?”

 

“சாமி” என்று கர்ஜித்தான்  ரிஷி. வேதாவோ அழுது கொண்டிருந்தாள்.

 

“எதுக்காக இப்படி சொல்றீங்க? என் வேதா, ரொம்ப நாள் வாழ்வா. பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க சொல்லிட்டேன். அம்மா இந்த ஆள் சொல்றதை எல்லாம் நம்ப வேண்டாம். நான் வேதாவை கட்டிக்க தான் போறேன். வாங்க போகலாம்”, என்றான் ரிஷி.

 

“அமைதியா ரிஷி”, என்றாள் சாரு.

 

“சும்மா இருங்க மா. எனக்கு வேதா வேணும், அவ்வளவு தான். அவளை கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குவேன்”

 

“நீ கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்கிட்டாலும், காருல  போகும் போது அப்படியே விபத்து ஏற்பட்டு கார் எறிஞ்சு அவளே செத்துட்டா  என்னப்பா பண்ணுவ?”, என்று கேட்டு அனைவரையும் அதிர வைத்தார் சித்தர்.

 

“இதுக்கப்புறமும் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம் சோமு. எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது. இந்த அய்யா சொல்றது பாத்தா பயமா இருக்கு. எனக்கு என் பொண்ணு வேணும் “, என்றார் ராமகிருஷ்ணன்.

 

“மாமா, இந்த ஆள் பேச்சை கேட்டு என்னையும் வேதாவையும் பிரிக்க பாக்குறீங்களா? எனக்கு என் வேதா வேணும் அவ்வளவு தான். அவளுக்கு ஒண்ணும் ஆகாது. வேதா நீ சொல்லு. மூணு வருசம் கழிச்சு நாம கல்யாணம் பண்ணிக்கணுமா? இல்லை இந்த மாசமே பண்ணிக்கணுமா? உன் முடிவு தான் என் முடிவு”, என்றான் ரிஷி.

 

கண்ணீருடன் அவனை பார்த்தவள் “எனக்கு ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்கூட வாழனும்  ரிஷி. இவங்க எல்லாம் சொல்றதை பார்த்தா மூணு வருசம் கழிச்சு நான் செத்து போயிருவேன்னு தோணுது. அதனால தான் இந்த கல்யாணம் வேண்டாம்ணு சொல்றாங்க. அட்லீஸ்ட் நான் செத்து போனா கூட இந்த மூணு வருசம் உன்கூட வாழ்ந்த நிம்மதியோட போவேன்”, என்று மனதில் எண்ணி கொண்டவள் “எனக்கும் இந்த மாசமே தான் கல்யாணம் வேணும். மூணு வருஷம் காத்திருக்க எல்லாம் வேண்டாம். ஜாதகம், யோசியம் எல்லாம் பொய்”, என்றாள்.

 

சந்தோசமாக எல்லாரையும் பார்த்தான் ரிஷி. பெரியவர்கள் எதையோ பேச வர அவர்களை அமைதியாக இருக்க  சொன்ன சித்தர் நாள்காட்டியை எடுத்து வர சொல்லி அதை பார்த்தார். “இந்த மாசம் போய் அடுத்த மாசம் மூணாவது நாள் நல்ல நாளா இருக்கு. நிறைந்த மூகுர்த்த நாள். நாள் குறிக்க தான இங்க வந்தீங்க? நான் குறிச்சு  கொடுத்துட்டேன். உங்க விருப்ப படி அன்னைக்கே கல்யாணம் வச்சிக்கோங்க”, என்று சொல்லி அவனை பார்த்து சிரித்தார் சித்தர். அவரை கோபமாக முறைத்தான் ரிஷி.

 

“கல்யாணம் முடிஞ்சு உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்க நாங்க வருவோம்”, என்று எழுந்த ரிஷி வேதா கை பற்றி அழைத்து சென்று விட்டான்.

 

“ஐயா, கல்யாணம் இப்ப செய்ய வேண்டாம்னு சொன்னீங்க? இப்ப தேதி குறிச்சு கொடுத்துருக்கீங்க.  நாங்க கல்யாணம் ஏற்பாடு செஞ்சாலும் நின்னுருமா? இல்லை கல்யாணம் நடக்கணுமா? ஒண்ணுமே புரியலையே”, என்று கேட்டாள் சீதா.

 

“கல்யாணம் இப்ப வைக்க வேண்டாம்னு சொன்னது எதிர்காலத்துல நடக்க போறதை கணிச்சு சொன்னது. ஆனா அப்படி கட்டயாமா கல்யாணம் நடக்க இருக்கும் போது அதை தடுத்து அவர்களுக்கு நல்ல வழிகாட்ட கடவுள் முடிவு பண்ணிருக்கான். அது நீ பூர்வ ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தாயி. போன ஜென்மத்துல மாதிரி இந்த ஜென்மத்துல உன் மகளை நீ பிரியவேண்டி வராது. அவ உங்க கூடவே இருப்பா. அதுக்காக தான பிறப்பெடுத்துருக்கா. சின்ன பசங்களுக்கு இருக்குற வேகம் தான் அவங்களுக்கு இருக்கு. காலம் அவங்களை பக்குவ படுத்தும். மாப்பிள்ளையே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவான். கடவுள் நிச்சயம் அவன் மனதை மாத்துவார். அது வரைக்கும் பொறுமையா இருங்க”

 

“சரி”, என்று சொல்லி அவரை வணங்கி விட்டு சஞ்சலமான மனதுடன் காரில் ஏறினார்கள்.

 

கார் கிளம்பும் போது ஜன்னல் வழியாக அந்த சித்தரை கோபத்துடன் பார்த்தான் ரிஷி. அவர் அவனை பார்த்து சாந்தமாக சிரித்தார்.

 

அவர்கள் கார் கிளம்பியதும் சித்தர் அருகில் இருந்த மற்றொரு துறவி “இந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் வாழ்க்கைல ஆபத்து வருமா சுவாமி? அதுல இருந்து இவங்களுக்கு விடுதலை கிடைக்குமா?”, என்று கேட்டார்.

 

“கடவுள் ஆடுற விளையாட்டை நம்மளால வேடிக்கை மட்டும் தான் பாக்க முடியும்? அனைத்தையும் கணித்து சொல்ல முடியாது.  இந்த ஜென்மத்தில் வாழ்வதுக்காகவே பிறந்தவர்கள் அவர்கள். வாழ ஆரம்பிக்க போகும் நாள் வரை பொறுமை அவர்கள் இருக்கிறதா இல்லையா என்று சோதிக்கிறார் கடவுள் அவ்வளவே”, என்று சிரித்த சித்தர் மற்ற மக்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.

 

வேதா, சாரு மடியில் படுத்து அழுது கொண்டே இருந்தாள்.  “வேதா இப்ப எதுக்கு அழுதுட்டு வர?”, என்று கத்திய ரிஷி “என் வேதா பாப்பாவை எல்லாரும் அழ வச்சிடீங்கள்ல? அவன் அவன் நிலால போய் எப்படி டின்னர் சாப்பிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கான். நீங்க ஜாதகம் ஜோசியம்னு பேசிட்டு இருக்கீங்க?”, என்று பெற்றவர்களை பார்த்து சீறினான்.

 

“சின்ன பையன் மாதிரி நடந்துக்காத ரிஷி. விஞ்ஞானத்தை தாண்டி இன்னும் இந்த உலகத்தில் பல விஷயம் இருக்கு. ஒருத்தருக்கு ரெண்டு பேர் சொன்னா கன்சிடர் பண்ணுறதுல தப்பே இல்லை. அது மட்டுமில்லாம பெத்த அம்மா, அப்பா முன்னாடியே உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா இறந்திருவானு சொல்லும் போது அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க தோணுமா? அவங்க மனநிலைல இருந்து யோசிச்சு பாரு ரிஷி”, என்று சாரு சொன்னதும் அமைதியான ரிஷி “சாரி மா. நான் இதை யோசிக்கல. ஆனா நாம எல்லாரும் இருக்கோம் தான மா? அவளை நாம பாத்துக்கலாம் மா. எனக்கு மூணு வருஷம் அப்படிங்குறது ரொம்ப பெரிய கேப்பா தெரியுது? ஆனா அத்தை, மாமா மனநிலைல இருந்து யோசிக்க தவறிட்டேன். சாரி. அத்தை, மாமா இப்ப நீங்க சொல்லுங்க. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இந்த கல்யாணம் இப்ப நடக்க வேண்டாம். உங்களுக்காக நான் என் ஆசையை விட்டு கொடுக்குறேன்”, என்றான்.

 

ஆனால் அடுத்த நொடி சாரு மடியில் இருந்து எழுந்து “இந்த கல்யாணம் இப்ப நடக்கலைன்னா யாரும் என்னை உயிரோட பாக்க முடியாது”, என்று சொன்னாள் வேதா.

 

அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ரிஷி. “என்ன டி  நினைச்சிட்டு இருக்க? ஆளாளுக்கு சாவு சாவுன்னு பேசிட்டு இருக்கீங்க? அவன் என்னடான்னா கல்யாணம் நடந்தா நீ செத்துருவன்னு சொல்றான். நீ என்னடான்னா கல்யாணம் முடியலைன்னா செத்துருவேன்னு சொல்ற? அம்மா அப்பா என்னன்னா என்னை எல்லார் பக்கத்துல இருந்தும் யோசிக்க வச்சு பிரஷர் கொடுக்குறாங்க. எனக்கு நிம்மதியே போச்சு”, என்று சொன்ன ரிஷி அப்படியே சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

 

“யாருக்கும் எந்த மனக்குழப்பமும் வேண்டாம். ரிஷியும், வேதாவும் ஆசை பட்ட மாதிரி இந்த கல்யாணம் நடக்கட்டும். அதனால அதை பத்தி யோசிக்காம அமைதியா வாங்க”, என்று சொன்ன சோமு காரை ஊட்டி கொண்டிருந்த ராம கிருஷ்ணனுடன் கதை பேச ஆரம்பித்து விட்டார்.

 

சாரு கண்களை மூடி அமர்ந்து விட்டாள். அவள் மாதிரியே சீதாவும் அமர்ந்து விட்டாள்.

 

ரிஷியும், வேதாவும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்கள். கண்களை மூடி அமர்ந்திருந்த அவனையே பார்த்தாள் வேதா. “நான் உன்னை விட்டுட்டு செத்து போயிருவேனா டா? அது வரைக்கும் உன் பொண்டாட்டியா நான் வாழணும்னு ஆசை பட கூடாதா? அப்படி தான் படுவேன். உன்னை கட்டிக்கிட்டு உனக்கு ஒரு குழந்தையை பெத்து கொடுத்துட்டு போயிருவேன். எப்படியும் நான் செத்தாலும் நீ வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண போறது இல்லை. உன்னோட காதலுக்கு நம்ம பொண்ணு சாட்சியா இருக்கட்டும். நீ இப்படி சோகமா இருந்தா நல்லாவே இல்லை டா மாமா”, என்று நினைத்து சிரித்து கொண்டவள் இரண்டு அம்மாக்களையும் பார்த்தாள்.

 

பின் மெதுவாக தன் கையை நீட்டி அவன் கையை பிடித்தாள். கண்களை திறக்காமலே அவள் கையை தட்டி விட்டான் ரிஷி. மறுபடி மறுபடி அவளும் அதையே செய்தாள். அவனும் அதையே செய்தான்.

 

பின் மெதுவாக அவள் கையை அவனுடைய உதட்டருகே கொண்டு சென்றவள் அவன் உதட்டின் மீது தன் விரலை வைத்தாள். அதையும் தட்டி விட்டான் ரிஷி.

 

“ரொம்ப பண்றான்”, என்று உதட்டை சுளித்தவள் அவனுடைய கீழ் உதட்டை தன்னுடைய விரலால் பிடித்தாள். அடுத்த நொடி அவள்  விரல் அவனுடைய பல்லுக்குள் சிக்கி இருந்தது.

 

கண்களை திறந்து அவளை பார்த்தான். “விடு டா”, என்று கண்களால் மிரட்டினாள். முடியாது என்னும் விதமாய் தலை அசைத்த ரிஷி அவள் விரலை கடிக்க போனான்.

 

அப்போது வண்டியை நிறுத்திய ராமு “இங்கயே நைட் சாப்பிட்டுறலாம். பைபாஸ்ல நல்லா இருக்காது சாப்பாடு”, என்று சொல்லி ஒரு ஹோட்டலை காட்டினார். அதில் இருவரும் தங்கள் செய்கைகளை நிறுத்தி விட்டு அமைதியானார்கள்.

 

பின் அனைவரும் இறங்கி சாப்பிட்டு வந்தார்கள். சாப்பிடும் போதே ரிஷி கோபம் குறைந்து விட்டதால் வேதாவுடன் வாயடிக்க ஆரம்பித்தான். அவளும் பதிலுக்கு சண்டை போட்டு கொண்டே சாப்பிட்டதால் பெற்றவர்களும் சந்தோசமாக சிரிக்க ஆரம்பித்தார்கள்.

 

சாப்பிட்டு முடித்த பின்னர் இப்போது சோமு காரை ஓட்டினார். இப்போது ரிஷியும், வேதாவும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.

 

அவன் தோளில் சாய்ந்த படியே எல்லாரிடமும் கதை பேசி கொண்டே வந்தாள் வேதா. வண்டி திருச்சியை நெருங்கும் போது மணி பத்தரை ஆகி இருந்தது.

 

“ரெண்டு பேரும் முன்னாடி லைட்டை மட்டும் போட்டு ஊரு கதை பேசுங்க. பின்னாடி உள்ள லைட்டை ஆப் பண்ணுங்க”, என்று சாரு சொன்னதும் பின்னால் இருந்த லைட்டும் அணைக்க பட்டது.

 

சாருவும், சீதாவும் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார்கள். “நீ தூங்கலையா வேதா?”, என்று கேட்டான் ரிஷி.

 

“மெதுவா பேசுடா தவளை வாயா? அம்மா, அத்தை தூங்குறாங்க. கழுதை மாதிரி கத்தாதே. எனக்கு தூக்கம் வரலை. நீ தூங்கலையா?”, என்று கேட்டாள் வேதா.

 

“தூக்கம் வரலை”

 

“ம்ம், சரி  எதுக்கு என் கையை அப்ப தட்டி தட்டி விட்ட?”

 

“அது எதுக்கு இப்ப? அதான் இப்ப உன்னை நெஞ்சுல சாச்சு படுக்க வச்சிருக்கேன்ல? போதாதா டி?”

 

“போதாது. காரணம் சொல்லு”

 

“நீ அப்படி சொல்லலாமா வேதா? நீ இல்லைன்னா நானும்  இருக்க மாட்டேன் டி”

 

“எனக்கு நீ வேணும்னு தான் நான் அப்படி சொன்னேன் ரிஷி. அது தப்பா?”

 

“இல்லை டி, ஆனா தேங்க்ஸ்”

 

“தேங்க்ஸ்சா? எதுக்காம்?”

 

“நீயும், இந்த கல்யாணம் மூணு வருஷம் அப்புறம் தான் வேணும்னு சொல்லுவியோன்னு நினைச்சேன். ஆமா நீ எதுக்கு சீக்கிரம் வேணும்னு கேட்ட?”

 

“அது.. அது… கல்யாணம் முடிஞ்சா உன் கூட குளோசா இருக்கலாம்ல? அதுக்கு தான்”

 

“இப்பவும் அப்படி தான இருக்கோம்?”

 

“இதை விட ரொம்ப குளோசா இருக்கணும். அதுக்கு தான்”

 

“இதை விட குளோசா?”, என்று அவள் காதில் குறுகுறுப்பாக கேட்டவன் அவள் இடையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்து கொண்டான்.

 

“டேய், சும்மா இரு டா. எல்லாரும் இருக்காங்க”, என்று சிணுங்கினாள் வேதா.

 

“எல்லாரும் கனவுல இருக்காங்க. அதனால நான் இப்படி தான் இருப்பேன்”, என்ற படியே அவள் காதில் சொன்னவன் அவளுடைய கன்னத்தில் தன் இதழை பதித்தான். அதில் மேலும் அவனுடன் ஒண்டினாள் வேதா.

 

ஏசியின் குளிர், அவளுடைய நெருக்கம் ரிஷிக்கு ஒரு வித மயக்கத்தை கொடுத்தது. வாய் அவளுடன் எதையோ பேசி கொண்டிருந்தாலும் அவன் கை அவளுடைய இடையில் ஊர்ந்தது.

 

அவன் நெஞ்சில் இருந்து தலையை மட்டும் திரும்பிய வேதா “அந்த சாப்ட்வெர் எப்படி முடிச்சன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கு உன் வாய். ஆனா உன் கை என்ன வேலை செய்யுதுனு தெரியுமா?”, என்று கேட்டாள்.

 

“என் கை செய்ற வேலை பிடிக்கலைன்னு சொல்லு. நான் எடுத்துறேன்”, என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தான் ரிஷி.

 

அது பிடித்தமான வேலை தான் என்று வார்த்தையால் சொல்லாமல் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து செயலால் பதில் கூறினாள் வேதா.

 

அப்படி சம்மதம் கிடைத்த பின்னர் சும்மா இருப்பானா அவன்? அவன் கைகள் அவளுடைய இடையில் இஷ்டத்துக்கு அலைந்து கொண்டிருந்தன. அதை தடுக்க தோன்றாமல் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்து கொண்டு அவனுடன் இழைந்தாள் வேதா. உணர்ச்சி வேகத்தில் அவன் கைகள் அவளுடைய கைகளால் நெறி பட்டது.

 

சிறிது நேரத்திலே தன்னுடைய செய்கையை நிறுத்தி விட்டு சாதாரணமாக அவளை அணைத்த படி அமர்ந்து கொண்டான் ரிஷி. என்னவாயிற்று என்ற கேள்வியை கண்களால் தாங்கி அவனை பார்த்தாள் வேதா.

 

அவள் காதருகே குனிந்தவன் “உன்னை சீண்டணும்னு ஆரம்பிச்சு எனக்கு முடியாம போச்சு டி. ப்ளீஸ் இங்க வேண்டாம். இப்போதைக்கு நல்ல பையனாவே இருக்கேன்”, என்று சொல்லி சிரித்தான்.

 

அதில் முகம் சிவந்தவள் அவனுடைய வயிற்றிலே கிள்ளி விட்டாள்.

 

காதல் உயிர்த்தெழும்…..