அத்தியாயம் 3

 

எத்தனை ஜென்மமானாலும்

எனக்கு நீ

தந்த அழகான

நினைவுகளுக்காகவே

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

“இப்படி உன்னை காதலியா கட்டி புடிக்கணும்னு எத்தனை நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா வேதா?”, என்று கேட்டான் ரிஷி.

 

அவன் மார்பில் சாய்ந்த படியே முகத்தை மட்டும் தூக்கி அவனை பார்த்தவள் “நீ முன்னாடியே என்னை லவ் பண்ணியா ரிஷி?”, என்று கேட்டாள் வேதா.

 

“ம்ம்”

 

“எப்ப இருந்து டா?”

 

“எப்ப இருந்துன்னு எல்லாம் சொல்ல தெரியாது. முதல் தடவை உன்னை பாத்ததுல இருந்து, என்னை அம்மா திட்ட கூடாதுன்னு எனக்காக பேசினதுல இருந்து, என் கையை பிடிச்சிக்கிட்டு ஸ்கூலுக்கு வந்ததுல இருந்து, எனக்கு ஊட்டி விடுன்னு அடம் பிடிச்சதுல இருந்து, எல்லா விஷயத்துலயும் உன்னை பிடிக்கும் டி”

 

…..

 

“நம்ம ரெண்டு பேருக்குள்ள நடந்த ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு அழகான பொக்கிஷம் தான்.  ஆனா அதெல்லாம் காதல்னு எனக்கு தெரியாது. ஆனா என்னை அறியாம மெய் மறந்து உன்னை ரசிச்சது எப்ப தெரியுமா? நீ பெரிய பொண்ணா ஆனப்ப  உங்க மாமா வந்து உனக்கு சீர் செஞ்சு எல்லார் முன்னாடியும் உன்னை கூட்டிட்டு வந்தாங்க தெரியுமா? அப்ப நிஜமாவே உன்னை ரொம்ப நேரம் ரசிச்சேன். அப்ப விக்கி இருக்கான்ல? அவன் உன் ஆளை இப்படியா டா கண்ணெடுக்காம பாப்ப அப்படின்னு கேட்டானா? அப்ப இருந்தே நீ என் ஆளுன்னு என் மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன்”

 

“அட பாவி, அப்பவேயா? சொல்லவே இல்லை”

 

“எங்க சொல்ல? உனக்கே இப்ப தான் பல்ப் எரிஞ்சிருக்கு. இதெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்க முடியும்? எனக்கு வந்த உணர்வை நீயும் உணரணும்னு நினைச்சேன். அப்புறம் சொல்லிக்கலாம், எங்க போயிற போறான்னு நினைச்சிப்பேன். கட்டாயம் உனக்கு என்னை விட்டுட்டு இருக்க பிடிக்காதுன்னு தெரியும். நான் டூர் போனாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்றவ, என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கட்டிட்டு போயிருவியா என்ன?”

 

“ம்ம். ஆமா டா. நானும் அங்க தான் யோசிக்கவே ஆரம்பிச்சேன். சரி இது அம்மா அப்பாக்கு எப்படி தெரியும்? நீ காலேஜ் படிக்கும் போதே சொல்லிட்டியா?”

 

“படிக்கும் போதே நான் காதலிக்கிறேன்னு சொன்னா ரெண்டு அம்மா அப்பாவும் கட்டையை தூக்கிட்டு அடிக்க வந்திருப்பாங்க டி. நான் ஹாஸ்ப்பிட்டல பிராக்டிஸ் முடிச்சு டுயூட்டி டாக்டரா ஜாயின் பண்ணேன் நினைவு இருக்கா?”

 

“ம்ம்ம்”

 

“அன்னைல இருந்தே ரெண்டு அம்மா அப்பா கிட்ட சொல்லணும்னு நாளை எதிர் பார்த்துட்டு இருந்தேன். ஆனா ஒரு ரெண்டு நாளுல என் அம்மாவே அதுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துட்டாங்க”

 

“என்ன? அத்தையா?”

 

“ம்ம், சும்மா உன்னோட சேட்டையை பத்தி அப்பா கிட்ட சொல்லி சிரிச்சிட்டு இருக்கும் போது வேதாவும் பெரிய பொண்ணா வளந்துட்டா. இன்னும் அவ கல்யாணத்தை பத்தி சீதாவை யோசிக்க சொல்லணும், நல்ல மாப்பிள்ளையா பாக்க  சொல்லணும்னு சொன்னாங்க. நான் உடனே அது தான் சாக்குன்னு, அது எதுக்கு மா அத்தை யோசிக்கணும்? அதான் மாப்பிள்ளையா நானே இருக்கேனேன்னு சொன்னேனா?”

 

…..

 

“ரெண்டு பேரும் அடப்பாவி, இதனை வருஷம் என்கூடவே வளந்துருக்குறவளை எப்படி மா கட்டிக்கன்னு நீ கேப்பன்னு நினைச்சோமே டா? அப்படின்னு அம்மா திட்டுனாங்க.  உன்னை பிரண்டா மட்டும் நினைக்க நான் என்ன லூசா? நீங்க அத்தை மாமா கிட்ட பேசுங்க. ஆனா உன்கிட்ட யாரும் இதை பத்தி பேச கூடாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் எங்க வீட்ல இருந்து உன் வீட்ல பேசி அவங்களுக்கும் சரி சொல்லிட்டாங்க. ஐயாவை பிடிக்காம போகுமா?”

 

“ரொம்ப பெருமை பட்டுக்காத. நான் இப்ப யோசிச்சதுனால தான் நல்ல முடிவா வந்துருக்கு. இல்லைன்னா காலம் முழுக்க பிரம்மசாரியா தான் இருந்துருக்கனும்”

 

“அம்மு குட்டி, கண்ணுக்கு முன்னாடி இப்படி ஒரு அழகான பெண்குட்டியை வச்சிக்கிட்டு எவனாவது பிரம்மசாரியா இருப்பானா? நான் இத்தனை நாள் பொறுமையா இருந்ததே அதிசயம் தான்”

 

“என்ன டா சொல்ற?”

 

“என்ன என்ன சொல்றன்னு கேக்குற? ஆபிஸ் பங்க்சன்னு சொல்லி கண்ணு முன்னாடி சேலை கட்டிட்டு வந்து நிப்ப பாரு. அப்படியே தூக்கி சுத்தணும்னு இருக்கும். ரூமை கிளீன் பண்றேன்னு சொல்லி பாவாடையை முட்டி வரை கட்டிட்டு லூட்டி அடிக்கும் போது  சும்மா கும்முன்னு இருப்ப. சாக்லேட், ஐஸ்கிறீம்ன்னு தின்னுட்டு முகமெல்லாம் ஆக்கி வச்சிருப்ப. அதை என்னோட உதட்டாலே சுத்தம் செய்ய தோணும் தெரியுமா? இன்னும் நிறைய நிறைய இருக்கு”

 

“போதும் போதும் சொல்லாத ப்ளீஸ்”

 

“என்னை என்ன செல்லம் பண்ண சொல்ற? லவ் பண்ணாம இருந்திருந்தா  இதெல்லாம் தோணிருக்காது. காதலிச்சு வேற தொலைச்சிட்டேனா? அப்படியே என்னை படுத்துவ டி”

 

“இப்படி எல்லாம் என்னை பாத்துருக்கியா? நான் ஒரு லூசு. இது புரியாம இருந்துருக்கேனே?”

 

“நீ லூசுன்னு எனக்கு தான் தெரியுமே?”

 

“வேண்டாம் டா. அடிப்பேன்”

 

“அடிச்சிக்கோ. உங்கிட்ட நான் வாங்காத அடியா? இன்னும் காலம் முழுக்க உன் கையால அடி தான் வாங்க போறேன். ஆனா எத்தனை அடி அடிச்சாலும்  கூடவே இப்படி ஒரு முத்தமும் கொடுத்துரு என்ன?”, என்று சொல்லி அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.

 

அப்போது “ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”, என்ற சீதாவின் குரல் கேட்டது.

 

“வரோம் அத்தை”, என்றவன் “வா சாப்பிட போகலாம்”, என்றான்.

 

“போ, எனக்கு அம்மாவை  பாக்க கூச்சமா இருக்கு. நீயே கல்யாணத்தை பத்தி பேசிரு. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்”, என்று சிணுங்களாக சொன்னாள் வேதா.

 

அவளை இன்னும் தன் கைக்குள் இறுக்கியவன் “சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கலாம் டி. எனக்கு நீ வேணும்னு தோணுது. இப்பவே போய் எல்லார் கிட்டயும் சொல்லிறேன்”, என்று சொல்லி விட்டு கீழே சென்றான்.

 

“என்ன ரிஷி, நீ மட்டும் வர? எங்க அவ?”, என்று கேட்டாள் சீதா.

 

“அவளுக்கு உங்களை பாக்க வெக்கமா இருக்காம் அத்தை. அதனால அப்பறமா சாப்பிட வருவாளாம்”

 

“என்னது என் பொண்ணுக்கு வெட்கமா? நம்புற மாதிரி சொல்லுப்பா”

 

“உங்க பொண்ணுக்கு வெட்கம் வராது. ஆனா என் பொண்டாட்டிக்கு வெட்கம் வருமே”

 

“ரிஷி????”

 

“சீக்கிரம் மாப்பிள்ளைக்கு சாப்பாட்டை போடுங்க. கூடிய சீக்கிரம் எங்க கல்யாண சாப்பாட்டையும் போடணும்”

 

“அவ சரின்னு சொல்லிட்டாளா?”

 

“ஹ்ம்ம், கூட வேலை பாக்கும் ஜெகன் காதலை சொல்லி மேடமை யோசிக்க வச்சிருக்கான்”

 

“ரொம்ப சந்தோசம் பா. மாமாகிட்ட சொன்னா ரொம்ப சந்தோச படுவார். சரி நீ சாப்பிட வா. சுட சுட சப்பாத்தி இருக்கு. அப்புறம் ஆறிரும்”

 

“ரெண்டு போதும் அத்தை. அம்மா இட்லி ஊத்திருக்காங்க”

 

“சரி சரி வா”, என்று சந்தோஷமாகவே அவனுக்கு பரிமாறினாள். சாப்பிட்டு விட்டு தங்கள் வீட்டுக்கு சென்றவன் “அம்மா சாப்பாடு தா”, என்றான்.

 

“அங்க கொட்டிட்டு தான வந்த? அப்புறம் ரொம்ப பசி மாதிரியே சீனை போடுறது”, என்று சிரித்த படியே அங்கு வந்த சாரு அவனுக்கு தட்டில் நாலு இட்லியை வைத்தாள்.

 

“நாலு வேண்டாம் மா, மூணு போதும்”

 

“ஏண்டா?”

 

“சந்தோசமா இருக்கேனா? அதனால பசி இல்லை”

 

“சந்தோசமா? வேதாவை அழ வச்சிட்டு  வந்தியா? அவ இங்க வரவே இல்லை டா. நீ கூட கொஞ்சம் அவளை கோப படுத்திட்டியா?”

 

“அதெல்லாம் இல்லை. மேடம் செம சந்தோசமா இருக்காங்க”

 

“என்ன சந்தோசமா? என்ன விஷயம் ரிஷி?”

 

“அவளுக்கு காதல் வந்துவிட்டது”, என்று ரிஷி சொன்னவுடன் சோகமான சாரு “ஐயோ, கடவுளே என் பையன் வாழ்க்கை இப்படியா ஆகணும்? வேதாவும் இவனை விரும்பினா உனக்கு பொங்கல் எல்லாம் வைக்கிறேன்னு வேண்டிகிட்டேனே? இப்ப இப்படி பண்ணிட்டியே”, என்று புலம்ப ஆரம்பித்தாள்.

 

“அம்மா”, என்று அதட்டு போட்டவன் “இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி புலம்புற?”, என்று கேட்டான்.

 

“உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை லவ் பண்றேன்னு சொல்லிட்டாளே டா? அப்புறம் புலம்பாம என்ன செய்ய?”

 

“நீ சோக ரசத்தை ஊத்தாம அந்த சாம்பாரை ஊத்து. நீயே அவளுக்கு வேற ஒருத்தனை லவ் பண்ணுனு ஐடியா கொடுப்ப போல? அவ லவ் பண்றது என்னை?”

 

“என்னது உன்னையா? நிஜமாவா?”

 

“ம்ம், சீக்கிரம் மிஸ்டர் சோமு கிட்ட பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை செஞ்சு வை சொல்லிட்டேன். இல்லைனா என் டார்லிங்கை கூட்டிட்டு தனி குடித்தனம் போயிருவேன்”

 

“கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நானும் உன் அப்பாவும் எங்கயாவது தனி குடித்தனம் போகலாம்னு தான் பா யோசிச்சு வச்சிருக்கோம்”

 

“என்ன மா இப்படி சொல்ற? அப்படி எல்லாம் எங்களை விட்டுட்டு நீங்க போக முடியுமா? நான் விளையாட்டுக்கு தான் மா அப்படி சொன்னேன்”

 

“ஆனா நான் சீரியஸா தான் டா  சொன்னேன். ஒரு வீட்ல ஒரு குரங்கு இருக்குறதையே தாங்க முடியலை. இதுல ரெண்டும் சேந்தா எங்க பாடு என்ன ஆகுறது?”

 

“நக்கலா? விக்கல் வருது. தண்ணி கொடு”

 

“உன் ரைமிங் டயலாக் நல்லாவே இல்லை டா”

 

“போமா, சும்மா சும்மா கடி ஏத்தாம காலண்டரை பார்த்து நல்ல நாள் பாரு”

 

“உனக்கு வயசு இருபத்தி ஏழு தான ஆகுது? அதுக்குள்ளே என்ன கல்யாணத்துக்கு அவசரம். ஒரு முப்பதுல பண்ணி வைக்கிறோம். அது வரைக்கும் ரெண்டு பேரும் லவ் பண்ணுங்க”

 

“அப்படின்னா மூணு வருஷம் கழிச்சு மணமேடைல எங்க பிள்ளைங்க கூட தான் உக்காருவோம். உங்களுக்கு பரவல்லாயா?

 

“அட ச்சி, அம்மா கிட்ட பேசுற மாதிரியா டா பேசுற? ஆனா நீ  செஞ்சாலும் செய்வ டா”

 

“நீ மட்டும் அம்மா மாதிரியா நடந்துக்குற? மூணு வருஷம் லவ் பண்ண சொல்ற? அதெல்லாம் முடியாது. அடுத்த முகுர்த்ததுல எங்க கல்யாணம் நடந்தே ஆகணும் ஆமா”, என்று சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சொல்லி விட்டு “தயவு செஞ்சு உப்பு போட்ட சாம்பாரை கொடு மா. அத்தை என்னடான்னா உப்பை அள்ளி தட்டி வச்சிருக்காங்க. நீ உப்பை கண்ணுலே காட்ட மாட்டிக்க. இப்படியே இருந்தா நானும் வர போற என் பொண்டாட்டியும் தினமும் ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம் பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டான்.

 

சாம்பாரை சிறிது கரண்டியில் எடுத்து சுவை பார்த்த சாரு, “ஆமா, உப்பு போடலை. இதை எப்படி மறந்தோம். ஆனாலும் முன்னாடியே சொல்லாம நல்லா தின்னுட்டு சொல்றான் பாரு லூசு”, என்று நினைத்து தன்னுடைய கணவருக்கு போனை போட்டு கல்யாண விஷத்தை பத்தி பேச தொடங்கினாள் சாரு.

 

கேட்ட அவருக்கும் சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாள் அனைவருக்குமே அழகானதாக விடிந்தது.

 

ரிஷியின் வீட்டில் அமர்ந்து பெற்றவர்கள் நால்வரும் அமர்ந்து கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள். நாள் குறிப்பதுக்காக ஜோசியரை போய் பார்க்கலாம் என்று முடிவு எடுக்க பட்டு அடுத்த நாளே தெரிந்தவர்களிடம் கேட்டு நல்ல ஜோசியர் ஒருவரை காண சென்றார்கள்.

 

ஜோசியரை காண சென்ற சீதாவும், சாருவும் முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தார்கள். ஜோசியர் என்ன சொன்னார் என்பதை கேட்க  இரண்டு அப்பாக்களும், ரிஷியும், வேதாவும் ஆவலாக காத்திருந்தார்கள்.

 

“என்ன மா ஆச்சு? என்னைக்கு நல்ல நாள்?”, என்று கேட்டார் சோமசுந்தரம்.

 

“நாள் குறிக்கலைங்க”, என்று சோகமாக சொன்னாள் சாரு.

 

“என்ன ஆச்சு சீதா? சாரு ஏன் அப்படி சோகமா  பேசுறா? ஜோசியர் என்ன சொன்னார்?”, என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

 

“அதை எப்படி சொல்றதுன்னு தான் கவலையா இருக்குங்க. ஜோசியர் இந்த கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டார்”, என்றாள் சீதா.

 

“அத்தை, அதுக்கு எதுக்கு இப்படி பீல் பண்றீங்க? இந்த மாசம் நாள் நல்லா இல்லைன்னா என்ன? இன்னும் ரெண்டு மாசம்  கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறோம்”, என்றான் ரிஷி.

 

“அது இல்லை பா. இன்னும் மூணு வருசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க கூடாதாம்”

 

அதிர்ச்சியாக ரிஷியை பார்த்தாள் வேதா. அவளை கண்களால் அமைதியா இருக்க சொன்ன ரிஷி “நடந்தா? என்ன அத்தை? நடந்தா என்ன ஆகுமாம்?”, என்று கேட்டான்.

 

“உங்க ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தாத ஜாதகமாம். அப்படி பொருந்தி வரணும்னா மூணு வருஷம் காத்திருக்கணுமாம். அதுக்கப்புறம் தான் எல்லா கண்டமும் விலகுமாம். அப்படி இல்லாம இப்பவே கல்யாணம் செஞ்சா நீங்க ரெண்டு பேருமே நிரந்தரமா பிரிஞ்சுருவீங்களாம்”, என்று சொல்லி அனைவர் தலையிலும் இடியை தூக்கி போட்டாள் சீதா.

 

“இருவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்”, என்று ஜோசியர் சொன்னதை சொல்லாமல் நிறுத்தி விட்டாள் சீதா.

 

வேதா அழுவதுக்கு தயாராக நின்றாள். அதை பார்த்து கவலை கொண்ட ரிஷி “அத்தை எவனோ ஒருத்தன் பணத்துக்கு ஆசை பட்டு ஏதோ சொன்னான்னா நீங்களும் இப்படி நினைக்கணுமா? நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்துருக்குறதை பாத்துருக்கீங்க தான? அப்படி இருக்கும் போது நாங்க பிரிஞ்சு இருப்போமா?”, என்றான்.

 

“இல்லை ரிஷி, கேட்டதுல இருந்தே எனக்கும் சாருக்கும் மனசுல நெருடலாவே இருக்கு”

 

“அதெல்லாம் கிடையாது. பாருங்க வேதா அழ தயாரா இருக்குறா. எப்பவுமே நான் அவளை பிரிய மாட்டேன். அவ என்னை விட்டு பிரிஞ்சு போகவும் விட மாட்டேன். நீங்க தயவு செஞ்சு அது இதுன்னு பேசி கல்யாணத்தை நிறுத்தாம பண்ணி வைங்க சொல்லிட்டேன்”, என்று கடுப்புடன் சொன்னான் ரிஷி.

 

“அவன் சொல்றதும் சரி தான சீதா. எனக்கும் இந்த சாமி ஜோசியம் இதுல எல்லாம் நம்பிக்கை எல்லாம் இல்லை.  வேதாவும் ரிஷியும் பிரியுவாங்கன்னு சொன்னா சின்ன குழந்தை கூட நம்பாது. நம்ம பிள்ளைங்க சந்தோசம் தான முக்கியம்?”, என்றார் சோமு. அவர் சொன்னதையே தான் ராமகிருஷ்ணனும் சொன்னார்.

 

“எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையாங்க? ஆனா மனசுக்குள்ள உறுத்தல் வந்துடுச்சே”, என்றாள் சாரு.

 

“அம்மா, இப்ப நீ என்ன தான் சொல்ல வர? எங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைப்பியா மாட்டியா? மூணு மாசம் வேணும்னா காத்திருக்கலாம். ஆனா மூணு வருஷமெல்லாம் முடியாது. நீ நேத்தே வாய் வச்ச. அப்படியே ஆகிட்டு. போ உன் கூட சண்டை. என் வேதா பாப்பா அழுறா. நீ அழாத டா குட்டி. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று அவளை தோளோடு அணைத்து கொண்டான்.

 

“உங்க கொஞ்சலை பாக்க சகிக்கலை. சொல்ல வரதை முழுசா கேளேன் டா குறை மாசத்துல பிறந்தவனே? திருச்சில ஒரு பெரிய சித்தர் இருக்காராம். அவரை போய் பாப்போம். அவர் சொல்றது எலலாமே அப்படியே பலிக்குதாம். அவரை அங்க எல்லாரும் சாமியா தான் கும்பிடுறாங்களாம். அவர் கிட்ட கேப்போம். அவர் சொல்றது படி நடக்கட்டும்”, என்றாள் சாருலதா.

 

“அம்மா, அவனும் ஏமாத்துவான் மா”

 

“அவன் இவன்னு பேசுனா பல்லை தட்டிருவேன். நீயும் நாளைக்கு வா. அவர் என்ன சொல்றார், பொய் சொல்றாரா, உண்மையை சொல்றாரான்னு நீயே கேளு. எல்லாரும் போவோம். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்”

 

“வரேன், அந்த ஆள் மட்டும் அப்படி எதாவது சொல்லட்டும். அங்க வச்சே அவரை ஒரு வழி செய்றேன்”, என்று முறுக்கி கொண்டான் ரிஷி.

 

“சரி மா நீங்க பிள்ளைகளை கூட்டிட்டு போங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு”, என்றார் சோமு. ராமகிருஷ்ணனும் “ஆமா எனக்கும் வேலை இருக்கு”, என்றார்.

 

அதற்கு இரண்டு மனைவிகளும் அவரவர் கணவர்களை மிரட்டினார்கள்.  “என்னமோ சொன்னீங்க? பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம்ன்னு. அவங்களுக்காக உங்க வேலையை மூட்டை கட்டி வச்சிட்டு வாங்க. கண்டிப்பா வரணும் சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார்கள் சீதாவும் சாருவும்.

 

ராமுவும், சோமுவும் ஒருவரை ஒருவர் பரிதாப பார்வை பார்த்து விட்டு எழுந்து சென்றார்கள். தன் தோள்களில் சாய்ந்திருந்த வேதாவை பார்த்தவன் “ஏண்டி அம்மாவும் அத்தையும், அப்பாவையும் மாமாவையும் மிரட்டுற மாதிரி நீயும் என்னை மிரட்டுவியா?”, என்று கேட்டான் ரிஷி.

 

“ப்ச், போடா. எனக்கு கல்யாணத்தை நினைச்சா கவலையா இருக்கு”

 

“விடு வேதா பாத்துக்கலாம். அந்த சாமியார் அப்படி எல்லாம் சொல்ல மாட்டார். எப்படி எல்லா சாமியாரும் ஒரே மாதிரி  சொல்லுவாங்க? அப்படியே அவர் மட்டும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு சொல்லட்டும் அவரை அங்கேயே ஒரு வழி பண்ணிருவேன்”

 

“எல்லாம் நல்ல படியா நடக்கும் தான ரிஷி?”

 

“நடக்கும் மா. கவலை படாத”

 

அடுத்த நாள் அனைவரும் காரில் குடும்பத்துடன் திருச்சியை நோக்கி சென்றார்கள். பாதி நேரம் ராமுவும் மீதி நேரம் சோமுவும் காரை ஓட்டினார்கள். ரிஷி ஆர்வமாக பார்த்து கொண்டு வந்தான். ஆனால் திருச்சியை நெருங்க நெருங்க  வேதா தான் ஏதோ பட படப்பாக உணர்ந்தாள்.

 

ஏதோ தன்னுடைய இடத்துக்கு வருவது போல ஒரு நிம்மதியும், ஒரு வித பயமும் என மாறி மாறி அவள் மனதில் தோன்றியது.

 

திருச்சி அவுட்டரில் கார் பயணித்து கொண்டிருக்கும் போது அந்த நெடுஞ்சாலையில் கண்களை மூடி ரிஷி தோள்களில் சாய்ந்திருந்த வேதா “மாமா ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்களேன்”, என்றாள்.

 

காரை நிறுத்திய பின் அனைவரும் அவளை கேள்வியாக பார்த்தார்கள். அவளோ எதுவும் சொல்லாமல் காரில் இருந்து இறங்கியவள் அந்த இடத்திலே அசையாமல் நின்றாள்.

 

அவள் மனது அமைதி இழந்து தவித்தது. ஓவென்று கதறி அழ வேண்டும் போல் மனதில் துக்கம் அவளை வாட்டி வதைத்தது. ஆனால் அதற்கான காரணம் தான் அவள் அறியாள். அவள் அப்படி இருக்க ரிஷிக்கோ அந்த இடத்தை பார்த்து எரிச்சலாக வந்தது. கோபம் அவன் மனதில் ஒரு எரிமலையை  உருவாக்கியது. அடுத்த நிமிடம் சிங்கத்தின் கர்ஜனை மாதிரி “வேதா காரில் ஏறு”, என்று கத்தியவன் அவளை கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை அடைத்தான். “அப்பா காரை எடுங்க”, என்று சொல்லி விட்டு அவளை முறைத்து விட்டு பின் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து விட்டான்.

 

இருவரின் செயல்களையும் ஆச்சர்யமாக பார்த்து விட்டு பின் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள் பெரியவர்கள்.

 

கண்களை மூடி அமர்ந்திருந்த ரிஷியின் தோள்களின் சாய்ந்த வேதா அவன் கைகளுக்குள் தன் கையை பொதிந்து கொண்டாள்.

 

மாலை ஐந்து மணிக்கு கார் திருச்சியை அடைந்தது. போனை எடுத்து அட்ரஸை கேட்டாள் சீதா. பின் அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டவர்கள் அந்த சாமியார் மடத்தை அடையும் போது ஆறாகி இருந்தது.

 

ஒரு ஆலமரத்தின் அடியில் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சித்தர். அவரை சுற்றி பல மக்கள் அமர்ந்திருந்தார்கள். குண்டூசி சத்தம் கூட கேட்காத அளவுக்கு அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது.

 

இவர்களின் கார் அந்த மடத்துக்குள் நுழைந்ததும் சித்தரின் உடல் ஒரு முறை குலுங்கி பின் சமநிலைக்கு வந்தது. கண்களை திறந்து பார்த்தார். எதிரே ரிஷியும், வேதாவும் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து வந்தார்கள்.

 

அவர்களையே வெறித்த பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தார் சித்தர்.

 

காதல் உயிர்த்தெழும்…..