அத்தியாயம் 11

 

உன் உயிரையே

என் உயிராக

எண்ணி வாழும்

வரம் கிடைத்தால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.

 

“என்னை கூப்பிட தான நீ வந்த?”, என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.

 

“ஆமான்னு சொல்லு ரிஷி, ஆமான்னு சொல்லு ரிஷி. எனக்காக வரலைன்னு சொல்றதை கண்டிப்பா என்னால தாங்கிக்க முடியாது டா”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அவனை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்தாள்.

 

அவள் கேட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “உண்மையை சொல்லி தான ஆகணும்?”, என்று நினைத்து கொண்டு “நான் உன்னை தேடி தான் வந்தேன். ஆனா உன்னை கூட்டிட்டு போக வரலை”, என்றான்.

 

“ஓ”, என்று உதடு குவித்தாள் வேதா. அந்த ஒற்றை வார்த்தையில் அவளுடைய அடக்க பட்ட கோபம் அப்பட்டமாக தெரிந்தது. எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்தால் கோபம் வருவது இயல்பு தானே?

 

எச்சில் விழுங்கி கொண்டே அவளை பார்த்தவன் “நான் இங்க எம். எஸ்க்கு அப்பளை பண்ணேன். சீட் கிடைச்சிருக்கு. அதனால இங்க இருந்து தான் படிக்க போறேன். படிக்க ரெண்டு வருஷம், ஒரு வருஷம் ப்ராக்டிஸ். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேந்து இந்தியா போகலாம்”, என்றான்.

 

அவள் மனதில் இருந்த சந்தோசம் அனைத்தும் வடிந்தது போல இருந்தது.  அவளை தேடி இவ்வளவு தூரம் அவன் பார்க்க வந்ததில் கோபத்தை மறந்து சந்தோச பட்டவள் அவன் படிப்புக்காக வந்திருக்கிறான். தனக்காக வரலை என்றவுடன் அப்படியே அவனை வெறித்து பார்த்தாள்.

 

அவள் பார்வையை கண்டு அவனுக்கும் வலித்தது. “நீ என்னை தேடி வரலைல?”, என்று கேட்டாள் வேதா.

 

“ஏய், லூசு உன்னை தேடி தான் டி வந்தேன்”, என்று அவசரமாக பதில் சொன்னான் ரிஷி.

 

“பொய் சொல்லாத. நீ என்னை தேடி வரலை. நான் தான் என்னை தேடி தான் வந்துருக்கேன்னு ஒரு நிமிஷம் பைத்திய காரி மாதிரி குதிச்சிட்டேன். உனக்கு நான் எப்பவுமே முக்கியம் இல்லைல ரிஷி. எப்பனாலும் உனக்கு நான் ரெண்டாம் பட்சம் தான் இல்ல”, என்று விரக்தியோடு சொல்லி விட்டு எழுந்து ஜன்னல் பக்கம் சென்றாள்.

 

“அப்படி இல்லை மா, சத்தியமா நான் உனக்காக தான் வந்தேன்”

 

“நடிக்காதேன்னு சொன்னேன். இனி உங்கிட்ட பேச ஒன்னும் இல்லை. வெளிய போ”

 

“ஏய், புரிஞ்சிக்கோடி. உனக்காக தான் வந்தேன். ஆனா நீ இப்படி பொசுக்குன்னு சமாதானம் ஆக மாட்டேன்னு நினைச்சேன். அதனால தான் இங்க படிக்க முடிவு எடுத்து வந்தேன்”

 

“இப்ப எல்லாம் நீ ரொம்ப அழகா கதை சொல்ற ரிஷி. வீணா எனக்கு கடுப்பை ஏத்தாத? வெளிய போ”

 

“போக மாட்டேன். சொல்றதை கேளு டி  பக்கி”

 

“இது வரை நீ சொன்னதை கேட்டதே போதும்”

 

“ப்ளீஸ் வேதா”

 

“நானும் சொல்றேன் ப்ளீஸ் ரிஷி. என்னை தேடி வராத”

 

“ஏய் நிலைமையை புரிஞ்சிக்கோ டி. நீ ஏன் என்னோட சூழ்நிலைல இருந்து யோசிக்க மாட்டிக்கிற?”

 

“ஏன்னா, நான் உன்னை விரும்புறேன். அதை வெட்கத்தை விட்டு நான் தான் உன்கிட்ட சொன்னேன். ஆனா என்கூட நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லி என்னை நிராகரிச்சிட்ட. உன் மனசுல எனக்கு முக்கியத்துவமே இல்லை ரிஷி. சரி விட்டுரு. படிக்க தான வந்துருக்க? போய் படி. என்னை தேடி வராத”

 

லூசு நான் படிக்க மட்டும் வரலை. அது ஒரு சாக்கு தான்.  நான் வந்தது உன்னை லவ் பண்ண “

 

……

 

“ப்ளீஸ் வேதா லவ் பண்ணலாம் டி”

 

“தேவை இல்லாம பேசாத. என் மனசுல இப்ப காதல் எல்லாம் இல்லை. நீ போ”

 

“சரி இப்ப போறேன். ஆனா நாளைக்கு வருவேன்”

 

“எனக்கு உன்னை பாக்க பிடிக்கலை. அதனால இங்க வராத”

 

“நிஜமா உனக்கு என்னை பிடிக்கலையா டி?”

 

“ஆமா”

 

“ஹா ஹா, நம்புற மாதிரி பொய் சொல்லு சரியா?”

 

“நான் ஒன்னும் பொய் சொல்லலை. நீ இங்க இருந்து போ”

 

“ப்ச், போடி ரொம்ப பசிக்குது. நீ எதாவது செஞ்சு தருவேன்னு மதியத்துல இருந்து எதுவுமே சாப்பிடலை. ஹாஸ்டலயும் நைட் தான் சாப்பாடு. போற வழியிலே மயங்கி விழ போறேன். அதனால உனக்கு என்ன? நீ நிம்மதியா இரு நா போறேன்”, என்று சொல்லி விட்டு இரண்டடி எடுத்து வைத்தவன் அவளை அடி கண்ணால் பார்த்தான்.

 

ஆனால் அவளோ “என்ன சாப்பாடு கொடுக்கலாம்”, என்று யோசித்து கொண்டிருந்தாள்.

 

கதவருகே போய் நின்ற ரிஷி “நான் போறேன்”, என்றான்.

 

அவன் குரலில் கலைந்தவள் “ஓவரா சீன போடாத.இரு. எப்படி தான் இவ்வளவு

நேரம் சாப்பிடாம இருந்தியோ? நான் போய் எதாவது செஞ்சு எடுத்துட்டு வரேன்.

தின்னுட்டே மூட்டையை கட்டு”, என்று சொல்லி விட்டு  ஒரு கவரை எடுத்து

கொண்டு வெளியே சென்றாள்.

 

பசிக்குது என்று சொன்னால் கட்டாயம் கோபத்தை மறந்து விடுவாள் என்று

தெரிந்தே தான் அதை சொன்னான்.

 

அவன் நினைத்தது நடந்ததும் அவன் உதட்டில் ஒரு அழகான புன்னகை உதயமானது.

 

சிரித்து கொண்டே அவளுடைய கட்டிலில் அமர்ந்தான்.  சிறிது நேரத்தில் எதையோ

செய்து அவன் கையில் கொடுத்தவள் “இது என்ன? அது என்னன்னு எல்லாம் கேக்காத.

எதோ ஒரு பேரு. இது தான் இங்க கொஞ்சம் சாப்பிடுற மாதிரி இருக்கும்.

அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு”, என்றாள்.

அதை வாங்கி கொண்டவன் “நீ சாப்பிட்டியா?”, என்று கேட்டான்.

அந்த கேள்வியில் உள்ளுக்குள் இளகினாலும் அதை முகத்தில் காட்டாமல் இருந்தாள்.

 

“திமிர் பிடிச்சவளே சாப்பிட்டியான்னு கேட்டேன்”

 

“ஹ்ம்ம், சாப்பிட்டேன். ரொம்ப தான் அக்கறை”

 

“அக்கறை எல்லாம் நிறைய இருக்கு. ஒழுங்கா இங்க வா”

 

“எதுக்கு? நீ சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்பு”

 

“ப்ச்,  வான்னு சொன்னா வா. அப்ப தான் சாப்பிடுவேன்”

 

“சொல்லி தொலை”, என்று சொல்லி கொண்டே அவன் அருகில் வந்தவளின் கையை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தவனை முறைத்தாள்  வேதா.

 

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஸ்பூனை எடுத்து அவளுக்கு ஊட்டி விட போனான்.

 

“எனக்கு வேண்டாம், நீ சாப்பிடு”, என்று முகத்தை திருப்பி கொண்டாள் வேதா.

 

“நான் உனக்காகவும் தான் பசிக்குதுனு சொன்னேன். நீயும் இத்தனை நாள் சரியா சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்.ஒழுங்கா சாப்பிடு “, என்று சொல்லி ஊட்டி விட்டான்.

 

மனதில் ஒரு நிம்மதியுடன் அவன் ஊட்டியதை சாப்பிட்டவள் அவனையும் சாப்பிட வைத்தாள். வெகு நாள்களுக்கு பிறகு இருவரும் பசி தெரிந்து சாப்பிட்டார்கள்.

 

சாப்பிட்டு முடித்ததும் அவள் முகத்தை பார்த்தான். அவனையே பார்த்து கொண்டிருந்தவள் அவன் பார்வையை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவள் செய்கையில் சிரித்து கொண்டவன் “இங்க வேலை எல்லாம் எப்படி போகுது வேதா?”, என்று கேட்டான்.

 

“அதெல்லாம் நல்லா தான் போகுது. நீ கிளம்பு”

 

“நான் இங்கயே தங்கிகிட்டா?”

 

“என்னது???”

 

“எதுக்கு இப்படி அதிச்சியாகுற? நாம ஒரே ரூம்ல தங்கினதே இல்லையா?”

 

“கிறுக்கு தனமா பேசாத. சாப்பிட்டல்ல? கிளம்பு”

 

“விரட்டத்துலே குறியா இரு. போறேன் டி. போறதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேக்குறியா?”

 

“ம்ம்”

 

“என்னை சின்ன வயசுல இருந்து நீ பாத்துருக்க வேதா. அப்படி இருக்கும் போது நீ என்னை நம்பாதது எனக்கு கஷ்டமா இருக்கு டி”

 

“இப்ப எதுக்கு சென்டிமெண்டா பேசுற?”

 

“பேசணும்னு தோணுச்சு. என்னை என்னை விட நீ தான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்னு நினைச்சேன் டி. ஆனா நீ இல்லைனு நிரூபிச்சிட்ட”

 

“கொன்னுருவேன் இப்பவும் எனக்கு தான் உன்னை பத்தி எல்லாமே தெரியும்”

 

“அப்படியா? இல்லை வேதா. நீ என்னை இத்தனை வருசமா புரிஞ்சிக்கவே இல்லை. சரி அது கூட உன்னோட கல்யாண ஆசை நிறைவேறாததுனால என் மேல உள்ள கோபம்னு வச்சிக்கிறேன்.  ஆனா நான் ஒரு விஷயம் செஞ்சா அதுக்கு சரியான காரணம் இருக்கும்னு உனக்கு ஏன் தெரியலை வேதா?”

 

“ஆன் அது? அது? உனக்கு என்னை பிடிக்கலைனு நினைச்சு….”

 

“அப்படியா? உன்னை எனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு உனக்கு தெரியாதா? இதுல இருந்தே தெரியுது, நீ என்னை புரிஞ்சு வச்சிருக்கிற லட்சணம். உண்மையான காதலை என் மேல வச்சிருந்தா கட்டாயம் என்னை நீ புரிஞ்சி வச்சிருப்ப. சரி விடு. அந்த காதலை நானும் உனக்கு புரிய வைக்கணும். இனி வச்சிரேன். ஆனா இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளது டி. உன் கோபம் எல்லாத்தையும் என் மேல காட்டு. ஆனா நாம ரெண்டு பேர் தான் உலகம்னு இருக்குற பெரியவங்களை கஷ்ட படுத்தாத டி.  அவங்க பாவம். நாலு பேரும் உன்னை பத்தி நினைக்காத நிமிஷமே இல்லை தெரியுமா? அவங்க கிட்ட தயவு செஞ்சு பேசு டா குட்டி”

 

…..

 

“இந்த கல்யாண விசயத்துல தான் நமக்குள்ள இவ்வளவு பெரிய பிளவு வந்திருக்கு. அதை பத்தி கொஞ்ச நாள் யோசிக்க வேண்டாம் வேதா. நாம முன்னாடி மாதிரி நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம். நீ பேசலைன்னா என்னால நிம்மதியாவே இருக்க முடியல டி. உனக்கும் அப்படி தான? எனக்கு தெரியும். வாழ போற கொஞ்ச நாள்ல சந்தோசமா இருக்கலாம் வேதா. ப்ளீஸ் டி”

 

“ம்ம், நீ சொல்றதும் சரி தான். ஆனா முன்னாடி மாதிரி சாதாரணமா  பழக முடியுமான்னு தெரியலை. ஆனா முயற்சி செய்றேன்”, என்று எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள் வேதா.

 

அவள் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே போதும் என்று நினைத்து கொண்டான் ரிஷி.

 

“தேங்க்ஸ் வேதா, வீட்டுக்கு போன் பண்ணி பேசுவ தான?”

 

“ம்ம், பண்றேன்”

 

“சரி நான் கிளம்புறேன்”

 

“ம்ம் , அங்க ரூமெல்லாம் எப்படி இருக்கு?”, என்று அவனை போக விடாமல் பேச்சை வளர்த்தாள் வேதா.

 

“நல்லா இருக்கு டா. கிளம்பவா?”

 

“இத்தனை மணிக்குள்ள போகணும் அப்படின்னு எதாவது ரூல் இருக்கா?”

 

“பாரு டா என் செல்லம் ரொம்பவே   கணிஞ்சிட்டா”, என்று நினைத்து கொண்டு “அப்படி எல்லாம் இல்லையே. போகாம கூட இருக்கலாம். இங்கயே இருக்கட்டா?”, என்று சிரித்து  கொண்டே கேட்டான் ரிஷி.

 

“கொன்னுருவேன், ஒழுங்கா ஹாஸ்டல் போ. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு போ”

 

வாவ் செல்ல குட்டி லவ் பண்ண தான இருக்க சொல்ற?”

 

“செருப்பு பிஞ்சிரும். ஒழுங்கா அடங்கி உக்காரு. லவ்லாம் நமக்குள்ள இல்ல. பிரண்ட்ஷிப்  தான் இருக்கு”

 

“சரிங்க மேடம், இப்ப வீட்டுக்கு போன் பண்ணலாமா?”

 

“ஹ்ம்ம் சரி பண்ணு”

 

“பண்ணுன்னா, எப்படி பண்றது? நான் இன்னும் சிம் வாங்கல. உன் போன் தா”

 

“இந்தா”, என்று எடுத்து கொடுத்தாள். அதை ஆன் செய்தவன் அவனுடைய பெயரையே பாஸ்வேர்டில் அடித்தான். அதுவும் உள்ளே சென்றது. “கோபத்துல பாஸ்வேர்ட்  கூட மாத்தலை. சரியான டம்மி பீஸ். இவளும் இவ கோபமும். ஆனா என்ன, இனி பிரண்டு பிரண்டுன்னு படுத்தி எடுப்பா”, என்று நினைத்து கொண்டு சந்தோசமாக தன் அப்பாவை அழைத்தான்.

 

வெளிநாட்டு எண்ணை பார்த்த சோம சுந்தரம் “ரிஷி தான் பேசுறான் ராமு”, என்று எதிரில் இருந்த ராமகிருஷ்ணனிடம் சொல்லி விட்டு போனை எடுத்தார்.

 

“அப்பா”, என்று கூவினான் ரிஷி.

 

“என்ன டா? எப்படி இருக்க? என்ன இவ்வளவு சந்தோசம்?”, என்று கேட்டார் சோம சுந்தரம்.

 

“நல்லா இருக்கேன். வந்த வேலை முடிஞ்சிட்டே. அதான்”

 

“அடேய், ஒரே நாள்ல முடிஞ்சிட்டா? என் பேங்க் அக்கவுண்ட்டை காலி பண்ணி பணம் கொடுத்திருக்கேன் டா. கிளம்பி இங்க வந்த, கொன்னுருவேன். ஒழுங்கா டிகிரியை வாங்கு”

 

“ஹா ஹா, போ பா. அதெல்லாம் ஒன்னும் இல்லை. படிச்சிட்டு தான் வருவேன்”

 

“அப்பாடி நெஞ்சுல பாலை வார்த்த. சரி சரி புது நாடு எப்படி இருக்கு?”

 

“சூப்பரா இருக்கு. இங்க புது பிரண்ட் கிடைச்சிருக்காங்க. இருங்க அவங்க கிட்ட கொடுக்குறேன் பேசுங்க”

 

“புது பிரண்டா? படிக்கிற வேலையை தவிர எல்லாம் செய்வியா டா?”, என்று சோம சுந்தரம் சொல்லி கொண்டிருக்கும் போதே போனை வாங்கிய வேதா, “அப்ப நீங்களும் உங்க பிள்ளையை படிக்க தான் அனுப்பிருக்கீங்க? என்னை கூட்டிட்டு வர அனுப்பலை? அப்படி தான மாமா?”, என்று கேட்டாள்.

 

அதிர்ச்சியில் போனை நழுவ விட்டு பிடித்தவர் “வேதா”, என்று சந்தோசத்துடன் கத்தினார். அவர் கத்தலில் ராமு ஆச்சர்யமாக பார்த்தார். உள்ளே இருந்து சீதாவும், சாருவும் கூட வந்து விட்டார்கள்.

 

“இப்ப எதுக்கு டா இப்படி கத்துற?”, என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

 

“வேதா பேசுறா டா”, என்றார் சோமசுந்தரம்.

 

“அவருக்கு அவ போனதுல இருந்தே கிறுக்கு புடிச்சிருச்சு அண்ணா. அவ தான் நம்ம மேல கோபமா இருக்காளே”, என்றாள் சாரு.

 

“அடியே, உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்”, என்று சாருவை முறைத்து விட்டு போனை ஸ்பீக்கரில் போட்டார் சோமசுந்தரம்.

 

“வேதா கண்ணு எப்படி டா இருக்க? அவனை உன்னை கூட்டிட்டு வர தான் செல்லம் நாங்க அனுப்புனோம்”

 

“பொய் சொல்லாதீங்க? சரி என்னை கூப்பிட தான அனுப்புனீங்க? நாளைக்கே நாங்க கிளம்பி வந்துரட்டுமா?”, என்று துள்ளலாக கேட்ட வேதாவின் குரலில் அனைவர் முகத்திலும் ஒளி வந்தது.

 

“ஏண்டி, நீ வெட்டி கோபத்துல போவ? உன்னை கூட்டிட்டு வர அவன் லட்ச  லட்ச மா செலவு பண்ணி வருவான். நீ கிளம்பணும்னா அவன் கிளம்பணுமா? எங்க இருந்தாலும் உன் திமிர் மட்டும் அடங்கவே இல்லை. நீ வந்தா வா, வராம அங்கேயே கிட. ஆனா ரிஷி இங்க வரும் போது ஒரு சர்ஜனா தான் வரும்”, என்றாள் சீதா.

 

“அம்மா எப்பவும் என்னை திட்டலைன்னா உனக்கு தூக்கம் வராதே. உன் மருமகன் படிச்சிட்டே வருவான் சரியா?”, என்று சிரித்தாள் வேதா.

 

“உன்னை திட்ட மட்டும் இல்லை டி. உன்னை பாக்கலைன்னா கூட எனக்கு தூக்கம் வர மாட்டிக்கு”, என்று கண்ணீருடன் சொன்னாள் சீதா.

 

அன்னையின் குரலில் நெகிழ்ந்தவள் தன்னை சரி செய்து கொண்டு “அத்தை உங்க அழுகுணி பிரண்டை அழ வேண்டாம்னு சொல்லுங்க. அப்புறம் எல்லாரும் நம்ம வீட்ல வந்து கண்ணீரை தண்ணீர்னு நினைச்சு பிடிச்சிட்டு போக போறாங்க”, என்றாள் வேதா.

 

“உங்க அம்மா மட்டும் இல்லை வேதா கண்ணா, உன் அத்தையும் அழுதுட்டு தான் இருக்கா”, என்றார் ராமகிருஷ்ணன்/

 

“அப்பா, எப்படி இருக்கீங்க?”

 

“நல்லா இருக்கேன் மா. உனக்கு கோபம் போய்ட்டா?”

 

“இந்த ரிஷி பண்ணி தான் பேசியே என்னை ஏமாத்திட்டான். உங்க மேல எல்லாம் கோபம் போச்சு. அவன் மேல தான் கோபம் இருக்கு”, என்று சொன்னவள் அவனுடைய தோளில் சாய்ந்து பேசி கொண்டிருந்தாள்.

 

அவளை தன் கை வளைவில் வைத்திருந்த ரிஷி அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டினான்.

 

“ஆ போடா பண்ணி”, என்று திட்டினாள் வேதா.

 

“கல்யாணம் பண்ணிக்க போறவனை அப்படி சொல்லாத டி”, என்று கடிந்து கொண்டாள் சீதா.

 

“கல்யாணமா? யாருக்கு யாரோட கல்யாணம்? நானும் ரிஷியும் இனி பிரண்ட் மட்டும் தான். எங்களுக்கு கல்யாணம் எல்லாம் கிடையாது. தேவை இல்லாம எதாவது பேசாதீங்க மா”

 

“வேதா, என்ன டி சொல்ற? நீ இன்னும் திருந்தலையா?”

 

“அத்தை, சும்மா இருங்க? அதை பத்தி பேச இப்ப நேரம் இல்லை. இப்ப தான் வேதாளத்தை கீழே இறக்கிருக்கேன். மறுபடியும் மேல ஏறி உக்காந்திர போறா?”, என்று ரிஷி சொன்னவுடன் அவனை வேதா அடிப்பதை உணர்ந்தார்கள் பெரியவர்கள்.

 

அதன் பிறகு எல்லாரும் சிறிது நேரம் சந்தோசத்துடன் பேசி விட்டு தினமும் போன் செய்யணும் என்ற கட்டளையோடு போனை வைத்தார்கள்.

 

ரிஷியும் கிளம்ப தயாரானான். ஆனால் போகும் முன் அவளை நோக்கி ஒரு காதல் பார்வையை வீசினான். அந்த பார்வையில் எழுந்த  தடுமாற்றத்தை மறைத்து கொண்டு அவனை முறைத்தாள் வேதா.

 

காதல் உயிர்த்தெழும்…..