Advertisement

அத்தியாயம் 7

 

உனக்கு நிழலாக

வாழும் பொக்கிஷ

தருணம் என்

வாழ்வில் வருமானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

ஒரு விதமான குழப்பத்துடனும் தயக்கத்துடனும் உள்ளே சென்றான் ரிஷி. அன்று அமர்ந்திருந்த இடத்திலே அந்த சித்தரை அவன் கண்கள் தேடின.

 

அங்கே யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. மேலும் முன்னேறி நடந்தவன் எதிரே வந்த காவி உடை அணிந்திருந்தவரிடம் “சாமி எங்க?”, என்று கேட்டான்.

 

“சாமி உள்ள பூஜைல இருக்காங்க. நீங்க வாங்க தம்பி, கூட்டிட்டு போறேன்”, என்று அவனை அழைத்து சென்றார்.

 

தடதடக்கும்  மனதுடன் அவருடன் சென்றான். ஒரு அறைக்குள் அவனை அழைத்து சென்றவர் “இங்கே உக்காருங்க. குருஜி இப்ப வருவார்”, என்று சொல்லி அவனை  அமர வைத்து விட்டு சென்றார்.

 

அவனும் அவருக்காக காத்திருந்தான். அதே நேரம் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த வேதா, அடி வயிற்றில் ஒரு சுருக்கென்ற வலி எழ “அம்மா”, என்று அலறினாள்.

 

எப்போதும் வரும் வயிற்று வலி தான். ஆனால் முதல் நாள் மாத்திரை போட வில்லை என்றால் அவளால் வலியை தாங்கவே இயலாது என்பதால் அடுத்த நொடி ஹாஸ்பிடல் போகணும் என்று எண்ணி கொண்டு கிளம்பினாள்.

 

கீழே வந்த மகளின் முகத்தை வைத்தே அவள் நிலை அறிந்த சீதாவும் அவளுடன் கவலையாக கிளம்பி விட்டாள்.

 

ரிஷி எப்போது அந்த தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தானோ அப்போதில் இருந்தே இருவர் வீட்டிலும் யாருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு தான் செல்வார்கள். அதுவும் வேதாவுக்கு ஒன்று என்றால் ரிஷி தான் அவளை அழைத்து செல்வான்.

 

அதனால் அங்கிருக்கும் டாக்டர்களுக்கு வேதாவை தெரியும். “அம்மா இந்த தடவை அந்த டாக்டர் கிட்ட தெளிவா கேளு மா. இது எப்ப தான் சரியாகும்னு. வேலை நேரத்துல வந்துட்டா என்னால அங்க இருக்கவே முடியலை தெரியுமா? அடிக்கடி பாத்ரூம் போக வேண்டி இருக்கு”, என்று வலியுடன் சீதாவை சாடினாள் வேதா.

 

“என்ன டி செய்றது? அவங்க ஒவ்வொரு தடவையும் இது சில பேருக்கு இப்படி தான் இருக்கும்னு சொல்றாங்க. என்ன செய்ய? இந்த தடவை கேட்கலைன்னா வேற டாக்டரை பாப்போம்”, என்றாள் சீதா.

 

“ம்ம்”, என்ற படியே வேதா சீதாவுடன்  ஹாஸ்ப்பிட்டல் சென்றாள். உள்ளே நுழைந்தவர்கள் அந்த பெண் டாக்டர் மோகனாவை சந்திக்க வரிசையில் காத்திருந்தார்கள்.

 

அப்போது அந்த காரிடாரில் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த சுஜாதா இவர்களை பார்த்ததும் இவர்கள் அருகில் வந்தவள் “ஏய் வேதா எப்படி இருக்க? ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.

 

“ஹாய் சுஜி”, என்று வேதாவும் “எப்படி மா இருக்க?”, என்று சீதாவும் கேட்டார்கள்.

 

“நல்லா இருக்கேன். வேதாவுக்கு பாக்க தான் வந்தீங்களா?”, என்று கேட்டாள் சுஜாதா.

 

“ஆமா, மா வலில துடிக்கிறா”

 

“என்னை கேட்டா மாத்திரை மருந்து எல்லாம் இதுக்கு சரி இல்லை ஆண்ட்டி. சத்தான ஆகாரமா சாப்பிட்டாலே சரியாகிரும். சரி ரிஷி லீவ் போட்டுட்டு எங்க போனான்?”, என்று கேட்டு இருவரின் தலையிலும் இடியை இறக்கினாள்.

 

“என்ன சுஜி இப்படி சொல்றீங்க? ஹாஸ்பிடல் கான்பரன்ஸ் னு சொன்னானே”, என்று குழப்பமாக கேட்டாள் வேதா.

 

“ஐயோ ஏதோ பொய் சொல்லிட்டு எங்கயோ போயிருக்கானா? நான் தான் உளறிட்டேனா? அவன் கிட்ட நான் தான் போட்டு கொடுத்துட்டேன்னு உளறிராத வேதா. கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுருவான். சரி சரி நீங்க டாக்டரை பார்த்துட்டு கிளம்புங்க. அப்புறம் சத்தானதை  சாப்பிடு வேதா. வரேன் ஆண்ட்டி”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் சுஜாதா.

 

குழப்பமாக சீதாவை பார்த்தாள் வேதா. சீதா முகத்திலும் குழப்பம் தான் இருந்தது. “அமைதியா இரு வேதா. வீட்ல போய் பேசிக்கலாம். இப்ப டாக்டரை பாப்போம்”, என்றாள் சீதா.

 

டாக்டரும் வழக்கமான பல்லவியை பாட ஏற்கனவே வயிற்று வலியிலும், ரிஷியை நினைத்தும் கடுப்பில் இருந்த வேதா டாக்டரிடம் “எப்பவும் இதை தான் சொல்றீங்க? இதுக்கு உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியுமா முடியாதா?”, என்று பொரிந்து விட்டாள்.

 

“சும்மா இரு வேதா. மன்னிச்சிருங்க டாக்டர். வலியில் ரொம்ப துடிக்கிறா. அதான் இப்படி கோப பட்டுட்டா?”, என்று சமாதான படுத்தினாள் சீதா.

 

“புரியுது சீதா. அப்புறம் வேதா, இதுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் இருக்கு. நீ செய்ய தயார்னா நான் அதை சொல்றேன்”, என்று சிரித்தாள் டாக்டர்.

 

அவர் சிரிப்பில் தன தவறை உணர்ந்த வேதா “சாரி டாக்டர் உங்க மேல வீணா கோப பட்டுட்டேன். அது என்ன ட்ரீட்மெண்ட்?”, என்று கேட்டாள்.

 

“இட்ஸ் ஓகே வேதா. உனக்கு தான் ஏஜ் இருபத்தஞ்சு ஆகிருச்சே. பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. சீக்கிரம் ஒரு குழந்தை பெத்துக்கோ. அது தான் உன்னோட ப்ரோப்லம்க்கு  சரியான வழி. நீ எந்த டாக்டர் கிட்ட போனாலும் இதை தான் சொல்லுவாங்க”, என்று சிரித்தார் டாக்டர்.

 

“கல்யாணம் பண்ணுனா சரியாகிருமா டாக்டர்?”, என்று கேட்டாள் சீதா.

 

“ஆமா சீதா, சரியாக தொன்னுத்தி ஒன்பது சதவீதம் வாய்ப்பு இருக்கு. பேபி பிறக்கிற நேரத்துல நிறைய பொண்ணுங்களுக்கு இந்த ப்ரொப்ளாம் சரியாகும். சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க”

 

“மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு டாக்டர்”, என்று சிரித்தாள் வேதா.

 

“பாத்தாச்சா? வெரி குட். யாரு அது? எப்ப கல்யாணம்?”

 

“உங்க ரிஷி டாக்டர்  தான்”

 

“ஏய், சூப்பர். உங்க ரெண்டு பேரையும் முதல் டைம் பாக்கும் போதே நினைச்சேன். ஆனா என்னோட கற்பனைன்னு விட்டுட்டேன். ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடி. கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடுங்க”

 

“ஓகே டாக்டர்”

 

“சரி, இந்த விட்டமின் டேப்லெட் மட்டும் பாலோவ் பண்ணுங்க சரியா?”, என்று சொல்லி எழுதி கொடுத்தார்.

 

ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு சென்றார்கள் இருவரும். அவர்களுக்காக வாசலிலே காத்திருந்தாள் சாரு.

 

“ரெண்டு பேரும் எங்க போயிட்டீங்க? நான் அப்ப இருந்து தேடிட்டு இருந்தேன்?”, என்று கேட்டாள் சாரு.

 

“வேதாவுக்கு வயிறு வலி வந்துருச்சு சாரு. அதான் உன்கிட்ட சொல்ல கூட முடியாம கிளம்பிட்டேன்”

 

“ஓ, இப்ப எப்படி இருக்கு மா?”

 

“பரவால்ல அத்தை. ஆனா மனசு தான் சரி இல்லை. நான் ரூமுக்கு போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

“என்ன ஆச்சு சீதா? ரொம்ப வலி எடுத்துட்டா?”

 

“அதெல்லாம் இல்லை சாரு. அது எப்பவும் இருக்குறது தான? ஆனா இப்ப ஒரு புது குழப்பம். அது தான் இப்படி?”

 

“என்ன குழப்பம்? உன் முகமும் சரியே இல்லை. முதல்ல உள்ள வா”, என்று அவள் கையை பிடித்து அழைத்து வீட்டுக்குள் சென்ற சாரு சீதாவை அமர வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்து கொண்டாள்.

 

“இப்ப சொல்லு? வேதா ஏன் அப்படி சொல்லிட்டு போறா? நீயும் ஏன் டல்லா இருக்க?”

 

“எப்படி சொல்லன்னு தெரியலை சாரு. நாங்க ஹாஸ்ப்பிட்டல சுஜாதாவை பாத்தோம்”

 

“ரிஷி பிரண்ட் டாக்டர் சுஜாதாவையா?”

 

“ம்ம்”

 

“அவளுக்கென்ன?”

 

“அவளுக்கு ஒன்னும் இல்லை. ஆனா ரிஷி தான்”

 

“என்ன சீதா குழப்புற? வெளிப்படையா சொல்லு மா”

 

“ரிஷி கான்பரன்ஸ் போகல”

 

“என்ன?”, என்று அதிர்ச்சியானாள்  சாருலதா.

 

“ம்ம், ஆமா சாரு. பெங்களூர்ல ஒரு கான்பரன்சுமே நடக்கலையாம். ஹாஸ்ப்பிட்டல்ல அவன் லீவ் போட்டுட்டு தான் எங்கயோ போயிருக்கான்”

 

“என்ன சீதா இப்படி குண்டை தூக்கி போடுற? ரிஷி அப்படி செய்ய மாட்டானே”

 

“எனக்கும் அதான் குழப்பம். அதை கேட்டதுல இருந்தே வேதாவும் மூடவுட். இந்த பையன் அப்படி எங்க போனான்னு தெரியலையே”

 

“இரு நான் போன் பண்றேன்”, என்று சொல்லி போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.

 

சாமியார் முன்பு அமர்ந்திருந்த ரிஷி போனை அணைத்து வைத்திருந்தான். “சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான் சீதா. எனக்கு பயமா இருக்கே”, என்று பயந்தாள் சாரு.

 

“பயப்படாத சாரு. அவனை அவன் பார்த்துப்பான். அவனுக்கு எதுவும் ஆகாது. ஆனா என்னோட குழப்பம் என்னன்னா? அவன் கொஞ்ச நாளா சரியாவே இல்லை. அது மட்டும் இல்லாம இப்ப நம்ம எல்லார் கிட்டயும் பொய் சொல்லிட்டு ஏன் போகணும்? இவங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை பத்தி பேசுனதுல இருந்து தான் இப்படி எல்லாம் நிம்மதி இல்லாம இருக்குது. அதுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ?”

 

“எனக்கும் அப்படி தான் தோணுது சீதா. அவன் முகமே சரி இல்லை. கல்யாணம் நின்னா எல்லாருக்குமே நல்லது தான். எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா வேதா. அவ நிலைமையை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு. எதுக்குமே ஆசை படாத நல்ல பொண்ணு. ஆனா ஒன்னு வேணும்னு பிடிவாதம் பிடிச்சிட்டா மாற மாட்டா. அவளையும் வருத்திகிட்டு நம்மளையும் கஷ்ட படுத்தி சின்ன குழந்தை மாதிரி நடந்துக்குவா. ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்கன்னே தெரியலை சீதா”

 

“ம்ம், கடவுள் விட்ட வழின்னு இருக்க வேண்டியது தான். அவங்க தலையில என்ன எழுதி இருக்குன்னு பாப்போம். சரி அவளுக்கு எதாவது சாப்பிட செஞ்சு கொடுக்குறேன்”

 

“அதெல்லாம் நீ செய்ய வேண்டாம். அவளுக்கு நான் சாப்பாடு எடுத்துட்டு போறேன். நீ அண்ணாவுக்கு மதியம் சமைக்கிற வேலையை பாரு”, என்று எழுந்து கொண்டாள் சாரு.

 

அறைக்குள் வந்த வேதாவோ அவனுக்கு பல முறை போனில் முயற்சி செய்து அதை அணைத்து வைத்திருப்பதால் அழுகையில் கரைந்தாள். அவன் தன்னை அவாய்ட் பண்றான் என்று நினைத்து துடித்தது அந்த பேதை மனம்.

 

அதே நேரம் அந்த சாமியார் முகத்தையே ஒரு படபடப்புடன் பார்த்த படி அமர்ந்திருந்தான்.

 

“என்னப்பா? எங்க உன் மனைவி?”, என்று கேட்டு நக்கலாக சிரித்தார் சித்தர்.

 

“இவருக்கு இருக்குற நக்கலை பாரு?”, என்று மனதில் எண்ணி கொண்டு “அது தான் பெரிய சூனியத்தை செஞ்சு வச்சிருக்கீங்களே? அப்புறம் எப்படி கல்யாணம் நடக்க?”, என்று அவரை முறைத்த படி கேட்டான்.

 

அவனுடைய கோபத்தை உணர்ந்தவர் “என் மீது நீ கோப பட்டு ஒன்றும் ஆக போவதில்லை மகனே. கடவுள் நிர்மாணித்திருக்கிறதை நான் உனக்கு சொன்னேன் அவ்வளவே”, என்றார்.

 

“எனக்கு பயமா இருக்கு சாமி. உங்களை பாத்துட்டு போனதுல இருந்து நான் நிம்மதியாவே இல்லை. ஏதேதோ கனவு வருது. நீங்க சொன்ன மாதிரி வேதா சாகுற மாதிரி எல்லாம் கனவு வருது”

 

“அது ஏதேதோ கனவு இல்லையப்பா. அது உன் பூர்வ ஜென்ம நினைவுகள். அது உனக்கு நினைவில் வரும் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் அன்றே உன்னை பெற்றவர்களிடம் மாப்பிள்ளையே திருமணத்தை நிறுத்துவான் என்று சொல்லி அனுப்பினேன்”

 

“அப்படியா? ஆனா கல்யாணத்தை நிறுத்துனா ரொம்ப மன கஷ்டம் வரும் சாமி. வேதா துடிச்சு போயிருவா”

 

“சில நாள் வலியை பொறுத்து கொள்வதில் தவறில்லை மகனே. ஆனால் விதியை மீற நினைத்தால் அது பெரிய பேரழிவுகளை அல்லவா ஏற்படுத்தும்?”

 

“ப்ச். அது தான் குழப்பமா இருக்கு. அதுக்காக தான் உங்களை தேடி வந்தேன். நான் சாதாரண பையன். எல்லார் மாதிரியும் நானும் ஒருத்தன். அதே மாதிரி தான் வேதாவும். ரெண்டு பேரும் படிச்சோம். நல்ல வேலைல இருக்கோம். அடுத்த படியா கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறோம். இது எல்லாருமே செய்றது தான? ஏன் என்னோட வாழ்க்கைல மட்டும் பூர்வ ஜென்மம், தோஷம் அது இதுனு ஏன் இருக்கு?”

 

“நீ சாதாரண பையன்னு யாரப்பா சொன்னது?”

 

“சாமி”

 

“ஆம், நீ சாதாரண பையனும் இல்லை. அந்த பெண் சாதாரண பெண்ணும் இல்லை. நீங்கள் இந்த ஜென்மத்தில் வாழவேண்டியவர்களே இல்லை. அப்படி இந்த ஜென்மத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், நீங்கள் கடவுளிடம் விரும்பி கேட்ட வரம். அந்த வரத்தை அடைவதுக்காக தான் கடவுள் உங்களை படைத்திருக்கிறார். ஆனால் அதிலும் சில சிக்கல் இருக்கிறது. அது சரியானால் உங்கள் வரம் பூர்த்தியாக உங்களை அடையும்”

 

“என்ன சாமி சொல்றீங்க? என்ன வரம்? எதுக்கு எனக்கு அப்படி கனவு வருது?”

 

“சொல்கிறேன் மகனே”, என்று ஆரம்பித்து அவன் தலை மீது கை வைத்தவர் கண்களை மூடி ஒரு மோனா நிலையில் பேச ஆரம்பித்தார்.  

 

“போன பிறவியில் தாய் தந்தை யாரென்று தெரியாமல் பிறந்தவன் நீ. நீ கனவில் கண்டவர்கள் போன பிறவியில் உன்னுடன் இருந்தவர்கள். ஒரு ஆஸ்ரமத்தில் உன் நண்பனுடன் வளர்ந்த நீ படிக்கும் இடத்தில் ஒரு பெண்ணை விரும்பினாய். அந்த பெண்ணும் நீ தான் உலகம் என்று இருந்தாள். நீ படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு அவளை பெண் கேட்க சென்ற போது அவளுடைய தாய் தந்தையர் உங்கள் காதலை ஏற்காமல் எதிர்த்தார்கள். ஆனால் நீ தான் வேண்டும் என்று அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறினாள். உன் நண்பன் தான் உனக்கு திருமணமும் செய்து வைத்தான்”

 

…..

 

“அவளுடைய பெற்றோரும் தங்கள் மகள் கார் விபத்தில் எரிந்து சாம்பலானாள் என்று தங்கள் சொந்தங்களிடம் சொன்னார்கள். அதன் பின் இருவரும் சந்தோஷமாகவே வாழ்ந்தீர்கள். உங்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஆனால் விதி உங்கள் வாழ்க்கையில் விளையாடியது. அது அந்த பெண்ணின் மூதாதையர் செய்த பாவத்தின் பலனாய் அவள் வாழ்வு அற்ப ஆயுசில் முடிய வேண்டும் என்பது விதி. சந்தோஷமாக சென்று கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையில் ஒரு கார் பயணத்தில், படிக்கும் போது அவளை விரும்பிய ஒருவன் உங்கள் வாழ்வையே திசை திருப்பி விட்டான். அவன் உன்னையும் அவளையும் அடித்து கொல்ல முடிவு செய்து அடித்தான். அதில் நீ சாகாமல் மயக்கமானாய். அவளோ சாவோடு போராடி கொண்டிருந்தாள். உங்கள் குழந்தை அந்த நேரம் அவளுடைய தோழியுடன் வீட்டில் இருந்தது”

 

….

 

“உங்கள் இருவரையும் அடித்து போட்டு விட்டு அவன் சென்றவுடன் வேறு ஒரு குடும்பம் வந்து உங்களை காப்பாத்த முடிவு செய்தது. ஆனால் உன் மனைவி மயக்கத்தில் இருந்த  உன்னை மட்டும் காப்பாற்றும் படியும் அவள் கூடிய விரைவில் இறந்து விடுவாள் என்றும் சொல்லி உன்னை அவர்களோடு அனுப்பினாள். அதன் பின் உயிரை விட்ட அவள் அந்த காரோடு எரிந்து சாம்பலாகி ஒரு ஆத்மாவாக உன் பின்னே சுற்றி திரிந்தாள். ஆனால் நீயோ உன்னை பற்றிய அனைத்தையும் மறந்து புதிய மனிதனாக இருந்தாய். உன் குழந்தையோ அவளுடைய தோழி பொறுப்பில் வளர்ந்தது. உன்னை காப்பாற்றிய அந்த குடும்பமும் உன்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக எண்ணி அனைத்து சொத்தையும் உன் மீது எழுதி வைத்து சொந்த பிள்ளையாக வளர்த்தார்கள்”

 

…..

 

“ஆனால் ஆத்மாவாக இருக்கும் உன் மனைவியோ உன்னுடன் உரையாட உன்னோடு இருக்க வெகுவாக ஆசை பட்டாள். ஆனால் பேய் என்று அவளை கண்டு பயந்து நடுங்கினாய். கடைசியில் ஒரு பேய் உன்னுடன் இருப்பதை உணர்ந்த நீ அது உன் மனைவி என்பதை மட்டும் அறியாமல் இருந்தாய். உன்னை சொந்த பிள்ளையாக வளர்த்த அந்த குடும்பமும் உன் மனைவி இறந்து போனதால் அதை உன்னிடம்  மறைத்து உனக்கு வேறு ஒரு பெண்ணை மனைவியாக்க முடிவு செய்தார்கள். ஆனால் உன்னையே மனதில் நினைத்து கொண்டு உன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஆத்மா உன்னை வேறு திருமணம் செய்ய விடுமா? விட வில்லை. அது உடனே தன்னுடைய தோழிக்கு நீ இருக்கும் இடத்தை சொல்லி அவளை குழந்தையோடு உன்னருகே வரவைத்தது. அவர்கள் வந்த பிறகு கடந்த காலத்தை பற்றி நீ தெரிந்து கொண்டாய். அதன் பிறகு திருமணத்தை துறந்து உன் குழந்தையை பாசமிகு தந்தையாக வளர்த்து கொண்டே அந்த ஆத்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தாய்”

 

….

 

“உன் மகளுக்கு திருமணம் முடிந்து அவளுக்கும் பிள்ளைகள் பிறந்தவுடன் தற்கொலை செய்து உன் வாழ்வை நீ முடித்து கொண்டாய். அது எதற்கு தெரியுமா? உன் மனைவியுடன் மற்றொரு பிறவியில் வாழ? நீ இறந்த பிறகு உங்கள் இருவரின் ஆத்மாவும் கடவுளின் காலடியில் சரணடைந்து மற்றொரு வாழ்வை வரமாக வேண்டினீர்கள். உங்களுக்கு கடவுள் அளித்த  வரமே இப்பிறவி. ஆனால் அதை அடைய தான் அந்த மூன்று வருட கால கெடு. உனக்கு முப்பது வயது முடியும் போது தான் உங்களின் முன்னோர்கள் செய்த பாவங்களின் கெடு முடிகிறது”, என்று முடித்தார்.

 

அவர் அவனுடைய தலையில் இருந்து கையை எடுத்ததும் அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான் ரிஷி. “என்னப்பா குழப்பமா இருக்கிறதா? நான் கூறிய அனைத்தும் மெய். நான் சாதாரணமாக உரைத்து விட்டேன். ஆனால் நீங்க வாழ்வில் பல கஷ்டங்கள் அடைந்திருக்கிறீர்கள். உனக்கு கனவு வருவதும் உன் வாழ்க்கை தான். இப்போது நீ தான் முடிவெடுக்க வேண்டும். மூன்று வருடம் காத்திருந்து வரத்தை முழுமையாக பெற போகிறாயா? இல்லை இப்போதே மணந்து கொண்டு கிடைத்த வரத்தை இழந்து இப்பிறவியை முடிக்க போகிறாயா?”, என்று அவர் கேட்டதும் இமைக்க மறந்து அவரையே பார்த்திருந்தான் ரிஷி.

 

[இவர்களின் பிளாஷ் பேக் கதையை முழுவதுமாக படிக்க என்னுடைய ‘உயிர்தெழுமோ காதல்’ கதையை படிக்கவும்]

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement