அத்தியாயம் 6

என் இதய கூட்டுக்குள்

உன் நினைவுகளை

பத்திர படுத்தும்

தருணத்துக்காகவே

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

வேதாவை தன்னை மறந்து  முத்தத்தில் மூழ்கடித்து கொண்டிருந்த ரிஷி சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்துவிட்டு  சிவந்திருந்த அவள் முகத்தையே பார்த்தான்.

 

“இந்த மென்மையான முகம் தீயில் வேகுற மாதிரி கனவு வந்து என்னை தவிக்க வைக்குது டி. எனக்கு இந்த கனவு பிடிக்கலை. உன்னை கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னதுல இருந்து தான் அந்த கனவு வருது. கல்யாணத்தை நிறுத்த கனவு வருதா? இல்லைன்னா கல்யாணம் நின்னா கனவு வரது நின்றுமா? நீ யார், நான் யார்? நமக்கு எதுக்கு இந்த சோதனை? எல்லாம் தெரிஞ்சிக்கணும் டி. அதுக்கு தான் போறேன். உனக்காக எந்த ஆபத்தையும் நான் தாங்குவேன் வேதா. ஆனா உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது”, என்று மனதுக்குள் பேசி கொண்டவன் அவளை பார்த்து சிரித்தான்.

 

அவன் சிரிப்பில் உயிர்ப்பில்லாததை கண்டவளுக்கு குழப்பமாக இருந்தது.

 

“என்ன ஆச்சு ரிஷி?”

 

“ஒன்னும் இல்லை டி. சரி நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுறேன் சரியா?”

 

“ம்ம், ஆனா நான் எப்படி இருக்கேன்னு நீ சொல்லவே இல்லையே”, என்று சிணுங்கினாள் வேதா.

 

அவளுடைய சிணுங்களில் தடுமாறியவன் “அதுக்கு பதிலை இப்ப நான் சொன்னதா எனக்கு ஞாபகம். அது உனக்கு தெரியலையா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

 

“நீ எங்க பதில் சொன்ன? வந்ததுல இருந்து அளந்து அளந்து தான பேசுற? போடா. நீ சரியே இல்லை. இப்ப சொல்லு. சேலை எனக்கு நல்லா இருக்கா?”

 

“இந்த கேள்விக்கு எனக்கு பதில் வார்த்தையால் சொல்ல தெரியாது. செய்கையில் தான் சொல்ல தோணும்”, என்றவன் மறுபடியும் அவளுடைய உதடுகளில் முத்தமிட்டான்.

 

அவன் விலகியதும் அவன் மார்பில் குத்தியவள்  “போ நீ ரொம்ப மோசம். சும்மா சும்மா முத்தம் கொடுத்துட்டே இருக்க? நான் கேட்ட கேள்விக்கு இது பதிலா?”, என்று கேட்டாள்.

 

“இது தான் பதில். இப்பவே உன்னை பொண்டாட்டியா ஆக்கிக்கணும்னு எனக்கு தோணுற அளவுக்கு நீ அழகா இருக்க. போதுமா?”

 

“ச்சி போடா, அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. இனி உனக்கு புடிச்ச சேலையே கட்டுறேன் சரியா? நீ போய் ரெஸ்ட் எடு. கிளம்பும் போது அப்படியே போயிராத. என்னை கூப்பிட்டு சொல்லிட்டு போ. அங்க போனதுக்கப்புறமும் எனக்கு போன் பண்ணிட்டே இருக்கணும் சரியா?”, என்று சொல்லி சிரித்தாள்.

 

“சரி டி”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தவன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

 

உள்ளே சென்றவன் மனதில் முழுவதுமாக ரணம் சூழ்ந்திருந்தது. அதற்கு காரணம் இப்போது அவன் மனமே மூணு வருசத்துக்குள்ளே கல்யாணம் முடிந்தால் வேதா மரணம் அடைவது உறுதி என்று நம்பி இருந்தது.

 

இரவு ஏழு மணியை நெருங்கும் போது தன்னுடைய பையுடன் வெளியே வந்தான் ரிஷி.

 

“அங்க தங்க ஏற்பாடு செஞ்சிருக்காங்களா? கூட எத்தனை பேர் வராங்க?”, என்று கேட்டார் சோமு.

 

“ஹ்ம்ம் ஆமா பா. எங்க ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து நாலு பேர் போறோம். ஹோட்டல்ல ரூம் அரேஞ் பண்ணிருக்காங்க. கிளம்புறேன். அம்மா வரேன் மா”, என்றான் ரிஷி.

 

“சாப்பிட்டுட்டு போ டா”, என்றாள் சாரு.

 

“சாயங்காலம் லேட்டா தான மா சாப்பிட்டேன். பசிக்கல. நான் கிளம்புறேன்”

 

“அத்தை, மாமா, வேதா கிட்ட சொல்லிட்டு போ டா”

 

“அதெல்லாம் நீயே சொல்லிக்கோ. எனக்கு நேரம் ஆகிட்டு”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

 

அவன் போய் அரைமணி நேரம் கழித்து அவன் வீட்டுக்கு வந்த வேதா  “கிளம்பிட்டானா அத்தை அவன்?”, என்று சாருவிடம் கேட்டாள்.

 

“அவன் அப்பவே போய்ட்டான் மா”

 

“என்கிட்டே சொல்லவே இல்லை”

 

“நேரமாகிட்டுனு சொல்லிட்டு கிளம்பிட்டான் வேதா. வர வர உன் புருசனுக்கு கிறுக்கு புடிச்சிருச்சு. சரி உனக்கு புடிச்ச இடியாப்பம் செஞ்சிருக்கேன் சாப்பிடுறியா?”

 

அவள் புருஷன் என்று சொன்னது மனதுக்கு இதத்தை கொடுத்தாலும் அவன் சொல்லாமல் சென்றது மனதுக்கு வருத்தத்தை அளித்தது.

 

“அப்புறம் சாப்பிடுறேன் அத்தை. அவன் சாப்பிட்டானா?”

 

“சாயங்காலம் தான் சாப்பிட்டேன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான் மா”

 

“ஓ, சரி அத்தை”, என்ற படி சோமு அருகில் அமர்ந்தவள் அவருடன் சேர்த்து டிவி பார்க்க உக்கார்ந்து விட்டாள்.

 

அதே நேரம் மதுரைக்கு  செல்லும் பேருந்தில் ஏறி இருந்தான் ரிஷி. “அங்கே போய் மிட் நைட்ல தான் சேருவேன். ஒரு மூணு மணி நேரம் கழிச்சு வீட்ல இருந்து கிளம்பிருக்கலாம். ஆனா அப்ப கிளம்புனா வேதாவை பார்த்துட்டு வர வேண்டி இருக்கும். அது கூட கொஞ்சம் தான் கஷ்டமா இருக்கும்”. என்று எண்ணி கொண்டு பஸ் கிளம்புவதுக்காக காத்திருந்தான்.

 

அப்போது அவனுடைய போன் அடித்தது. வேதா தான் அவனை அழைத்திருந்தாள். அதை பார்த்தவன் “அந்த சாமியார் என்ன சொல்லுவாரோன்னு கவலையா இருக்கு செல்லம். அவர் கல்யாணம் வேண்டாம்னு மறுபடியும் சொன்னா நானும் அதையே தான் டி உன்கிட்ட சொல்லுவேன். அப்ப நீ தாங்கிப்பியா?”, என்று எண்ணி கொண்டவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

 

“எருமை மாடே, எதுக்கு டா சொல்லாம போய்ட்ட?”, என்று அந்த பக்கம் கத்தினாள் வேதா.

 

“நேரம் ஆகிருச்சு குட்டி. அதான் சீக்கிரம் வந்துட்டேன். சாரி என்ன?”

 

“நீ வர வர அதிகமா தப்பு செஞ்சிட்டு அதிகமா சாரி கேக்குற டா? என் மனசு கஷ்ட படுற மாதிரி நீ நடந்துக்க மாட்ட தான? ஆனா இப்ப பத்து நாளா நீ அப்படி தான் இருக்க. சரி சரி கல்யாணம் ஆகட்டும். உனக்கு மூக்கணாங்கயிறு மாட்டுறேன். சரி பஸ் கிளம்பிட்டா?”

 

“இன்னும் இல்லை டி”

 

“சரி கூட யார் வாரா?”

 

“நாலு பேர் வராங்க”

 

“சரி டா அங்க போய் இறங்கிட்டு, எனக்கு போன் பண்ணு சரியா? நான் முழிச்சு தான் இருப்பேன்”

 

“ஏய் லூசு நான் எந்த நேரத்துல இறங்குவேனோ தெரியாது. அப்ப வர நீ முழிச்சு இருக்க போறியா? ஒழுங்கா தூங்கு. அங்க போய் சிட்டுவேஷன் எப்படி இருக்குனு பாத்துட்டு நானே கால் பண்றேன் சரியா?”

 

“சரி டா. அப்புறம்…”

 

“என்ன வேதா?”

 

“உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டா. இப்ப எல்லாம் உன்னை ரொம்ப தேடுது எனக்கு”

 

“ப்ச், பீல் பண்ணாத டி. நான் உன்கூடவே தான இருக்கேன். சரி நாளைக்கு ஷிபிட்க்கு போகணும்ல? போய் சாப்பிட்டு படு”

 

“ஹ்ம்ம், இன்னைக்கு இடியாப்பம் சாப்பிட போறேன். அத்தை தான் செஞ்சிருக்காங்க. இப்ப தான் அங்க இருந்து எடுத்துட்டு வந்தேன்”

 

“என் பங்கையும் சேத்து காலி பண்ணு டி”

 

“ஐயையோ நிறைய சாப்பிட்டா நான் வெயிட் போட்டுருவேன் பா”

 

“வெயிட் போட்டா என்ன? நீ எப்படி இருந்தாலும் அழகு தான் டி செல்லம்”

 

“ஆமா நேர்ல இருக்கும் போது உர்ருன்னு இரு. போன்ல ரொமான்ஸா பேசு. போடா. உனக்கு அறிவே இல்லை”

 

“அடி பாவி. எங்க யோசிச்சு சொல்லு. நேர்ல நான் இன்னைக்கு உர்ருன்னா உங்கிட்ட பேசுனேன்? ரொமான்ஸ் பண்ணலையோ?”

 

“ப்ச், அது இன்னைக்கு மட்டும் தான கிஸ் பண்ண? மித்த நாள் எல்லாம் சும்மா தான இருந்த?”

 

“அடியே, சாயங்காலம் எப்ப பாத்தாலும் முத்தம் கொடுத்துட்டு இருக்குற மாதிரி என்னை திட்டின? ஆனா நீ இப்ப நினைக்கிறதை பாத்தா எப்பவுமே உன்னை உரசிட்டே இருக்கணும்னு போலயே?”

 

“போடா பக்கி”

 

“ஹா ஹா, மிஸ் யு லூசு. சரி வைக்கவா?”

 

“ரிஷி”

 

“என்ன மா?”

 

“எனக்கு எனக்கு…”

 

“என்ன டி உனக்கு?”

 

“சொல்லுவேன் சிரிக்க கூடாது”

 

“அது நீ சொல்றதை பொறுத்து தான்”

 

“எனக்கு உன்கிட்ட இருக்கணும்னு தோணுது டா. பேசாம என்னையும் நீ கூட்டிட்டு போயிருக்கலாம். சமத்தா உன் தோள்ல சாஞ்சிட்டு தூங்கிருப்பேன். இவ்வளவு நாள் இப்படி எல்லாம் யோசிக்கல. ஆனா இப்ப என்னோட நினைவு எல்லாமே உன்னை சுத்தி தான் டா இருக்கு. கல்யாணம் அப்புறம் நீ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போயிரு டா. நீ பக்கத்து வீட்ல இருக்கிறதே எனக்கு தூரமா இருக்குற மாதிரி இருக்கு. இதுல என்னை தனியா விட்டுட்டு போனா நான் தாங்க மாட்டேன் சரியா?”

 

அவளுடைய குரலில் நெகிழ்ந்தவன் தன்னை சமாளித்து கொண்டு “நான் விக்ரமாதித்யனா இருந்து உன்னை வேதாளம் மாதிரி தூக்கிட்டு போறேன் சரியா?”, என்று சிரித்தான்.

 

“பேச்சு மாற மாட்ட தான? என்னை விட்டு பிரிஞ்சா உன்னை கொன்னுருவேன் டா. சரி நீ பாத்து போ. காலைல போன் பண்ணு. ஒர்க் முடிச்சிட்டு சீக்கிரம் வா. எனக்கு உன்கிட்ட நிறைய சொல்லணும்”

 

“ஹ்ம்ம் சரி டி. பை குட் நைட்”, என்ற படி போனை வைத்தவனுக்கு அவளிடம் பேசிய பிறகு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

 

பஸ் கிளம்பியதும் பேகை இறுக்கி பிடித்து கொண்டு அப்படியே பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை மூடினான் ரிஷி.

 

தூங்கினால் கனவு வரும் என்று பயம் வந்தது. ஆனாலும் சிறிது நேரத்திலே அவனுக்கு உறக்கம் வந்து விட்டது. அவன் உறங்கிய சிறிது நேரத்தில் அவனை தொடர்ந்து கனவும் வந்து விட்டது.

 

இந்த முறை பல பேருடைய முகம் அவன் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது. எல்லாருடைய முகமும் மின்னி மின்னி மறைந்து கடைசியில் வேதா முகம் நினைவில் வந்தது.

 

சட்டென்று கண் விழித்தவன் “சே, எனக்கு வர வித்தியாசமான கனவை வச்சு ஒரு படமே எடுத்துறலாம் போல? யார் டா நீங்க எல்லாம்? எதுக்கு நீங்க எல்லாம் என் கனவுல வாறீங்க? வேதாநாயகி அரிச்சந்திரன்ன்னு எதுக்கு வேதா சொல்றா? இந்த லூசு பெரிய இவளாட்டம் வேதநாயகி ராமகிருஷ்ணன்னு தான சொல்லுவா?”, என்று யோசித்தவனுக்கு தலை வலியே வந்தது.

 

மூன்று மணி போல் மதுரையில் இறங்கினான். இதுக்கப்புறம் உள்ள நேரத்தை எப்படி ஓட்ட என்று எண்ணி கொண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்தவன் எதாவது லாட்ஜ் கண்ணுக்கு தெரியுதா? என்று நோட்டம் விட்டான்.

 

அருகிலே தெரிந்தது. அங்கே சென்றவன்  தூங்கி கொண்டிருந்த ரிஷப்சனிஸ்ட்டிடம் ரூம் கேட்டு அறைக்கு சென்றான்.

 

உள்ளே சென்றவன் பையை சோபாவில் போட்டு விட்டு குப்புற படுத்து தூங்கி போனான்.

 

அவன் எழும் போது மணி ஏழு ஆகி இருந்தது. குளித்து கிளம்பியவன் அறையை பூட்டிவிட்டு கீழே வந்தான். ரூம்க்கான பணத்தை கொடுத்தவன் ஒரு அட்ரஸை சொல்லி எந்த பஸ்ஸில் போக வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.

 

அவர் சொன்னதை குறித்து கொண்டவன் அங்கேயே இரண்டு தோசையை சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

 

அந்த சாமியார் மடத்தை அவன் அடைந்திருந்த போது மணி ஒன்பது.

 

காதல் உயிர்த்தெழும்…..