உயிர்தெழுமோ காதல் கதையின் ஹீரோ, ஹீரோயின் தான் இந்த கதையிலும் ஹீரோ ஹீரோயின்.

 

இந்த கதையை உயிர்தெழுமோ காதலின் தொடர்ச்சியாக பார்த்தாலும் சரி, இல்லை புது கதையாக பார்த்தாலும் சரி.

 

அந்த கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

தலைப்பு: உயிர்த்தெழுந்த காதல்

கதாநாயகன்: ரிஷி வர்மன்

கதாநாயகி: வேதநாயகி

 

அத்தியாயம் 1

 

உயிரோவியமாய்

மனதில் பதிந்த

உன்னை பிரியும்

நொடி வந்தாலும்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

சோகமாக தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள் வேதா. சீதா மற்றும் ராமகிருஷ்ணனின் தவ புதல்வி.  அவள் தான் அந்த வீட்டின் இளவரசியும் கூட. ராமகிருஷ்ணன் ரெயில்வேஸில் வேலை செய்கிறார். சீதாவுக்கு தன் கணவரும் மகளும் தான் உலகம். வேதநாயகியோ  என்ஜினீரிங் முடித்து விட்டு ஒரு பெரிய ஐ. டி கம்பெனியில் பணி புரிகிறாள். இருபத்தி ஐந்து வயது மங்கை.

 

அவள் அழகில் மயங்காத ஆண்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அடர்த்தியான முடி அவள் இடுப்பு வரை இருந்தது. அதையும் சரியாக  வெட்டி அழகாக்கி இருந்தாள். இப்போது வேலை முடிந்து வந்த பிறகு தலைக்கு குளித்து விரித்து போட்டிருந்தாள். எந்த வித செயற்கை பூச்சு இல்லாமல் இயற்கையாகவே வனப்பாக இருந்தாள் வேதா.

 

ஆனால் அவளுடைய அழகை பற்றி எல்லாம் யோசிக்க தோன்றாமல் அவள் மனம் முழுவதிலும் கவலை மேகம் சூழ்ந்திருந்தது. யாரிடமும் சொல்ல முடியாத அந்த கவலை அவளை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.

 

தான் செய்வது சரியா தப்பா என்று தெரியாத மனநிலையில் இருந்தாள் வேதா. அப்போது ரிஷி நினைவு வந்தது. இவளுடைய வீட்டுக்கு எதிர் வீடு தான் அவனுடைய வீடு. ரிஷி இருபத்தி ஏழு வயது துடிப்பான இளைஞன். ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் டாக்டராக பணி புரிகிறான். அவனுடைய அப்பா சோமசுந்தரமும், வேதாவின் அப்பா ராமகிருஷ்ணனும் ஒன்றாக பணிபுரிகிறார்கள். இருவரும் நண்பர்களும் கூட. அவர்கள் மட்டும் அல்ல. வேதாவின் அம்மா சீதாவும், ரிஷியின் அம்மா சாருலதாவும் தோழிகள் தான்.

பதினெட்டு வருடமாக இரன்டு குடும்பமும் நட்பாக தான் இருக்கிறது. இப்போது வேதாவுக்கு ரிஷி மேல் இருக்கும் நட்பின் மீது தான் சந்தேகமே. அதை தான் யோசித்து கொண்டிருந்தாள்.

 

யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகரித்தது தான் மிச்சம். எல்லாம் இந்த ஜெகனால் வந்தது என்று எண்ணி கொண்டே அமர்ந்திருந்த திண்டில் இருந்து எழுந்து நடந்தாள்.

 

மாலை வேலை முடிந்து வரும் போது நடந்த நிகழ்வை மனதினுள் ஓட்டி பார்த்தாள். ஜெகன் இவளுடன் ஒன்றாக வேலை செய்பவன்.  இவள் அந்த கம்பெனியில் சேரும் போது தான் அவனும் சேர்ந்தான். அவன் மட்டும் அல்ல கூட இருக்கும் விஜி, இளங்கோ, மது, கீதா என அனைவரும் ஒன்றாக தான் சேர்ந்தார்கள்.

ஏனோ, இந்த ஆறு பேருக்குக்குள்  மட்டும் எப்படியோ ஒரு வித ஒற்றுமை இருந்து  ஒரே குரூப்பாக சேர்ந்து விட்டார்கள். வேலைக்கு சேர்ந்து நான்கு வருடம் முடிய போகும் வரைக்கும் நண்பனாக பழகிய ஜெகன் திடீரென காதலை சொல்லுவான் என்று கனவிலும் நினைக்க வில்லை.

 

விஜியுடன் தன்னுடைய வண்டியை எடுப்பதுக்காக வந்து கொண்டிருந்தாள் வேதா. அப்போது எதிரில் வந்தான் ஜெகன்.

“என்ன ஜெகன் கிளம்பி போன? இப்ப திருப்பி வர?”, என்று கேட்டாள் விஜி.

“அதுவா சும்மா தான். வீட்டுக்கு போய் என்ன செய்ய? அதான், கேன்டீன் போய் ஒரு டி சாப்பிடலாம்னு நினைச்சேன். நீங்களும் வாங்களேன்”, என்றான் ஜெகன்.

“ஐயோ, வீட்டுக்கு நேரம் கழிச்சு போனா என்னை ஒரு வழி செஞ்சிருவாங்க. நீ வேதாவை  வேணும்னா கம்பெனிக்கு கூட்டிட்டு போ. நான் கிளம்புறேன்”, என்றாள் விஜி.

“சரி விஜி. நீ கிளம்பு. எனக்கும் லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு. ஜெகன் கூட எதாவது சாப்பிட்டுட்டு கிளம்புறேன்”, என்று நின்றாள் வேதா.

 

இப்படி அவளிடம் தனித்து பேச சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஜெகனே எதிர்பார்க்கவில்லை. அவன் மனதுக்குள் முடிவு செய்து கொண்டான். “இந்த வாய்ப்பை விட்டால் தன்னுடைய காதலை சொல்லவே முடியாது. இப்பவே சொல்லிரனும்”, என்று முடிவு எடுத்து “வா வேதா”, என்று முன்னே நடந்தான்.

அவளும் அவனுடன் நடந்தாள். கேன்டீன் சென்று அமர்ந்ததும் “என்ன வாங்கிட்டு வர வேதா? பீசா வாங்கிட்டு வரவா?”, என்று கேட்டான் ஜெகன்.

அந்த பீசா என்ற வார்த்தையில் வேதா முகம் தன்னால் புன்னகையை சுமந்தது. அவளுக்கு ரிஷியின் நினைவு வந்தது. அவனுக்கு பீசா என்றாலே பிடிக்காது. அவளையும் சாப்பிட விட மாட்டான்.

“இன்னைக்கு இதை சாப்பிட்டு வீட்டுக்கு போன அப்புறம் அவனை வெறுப்பேத்தனும்”, என்று எண்ணி கொண்டு “சரி ஜெகன். அதே வாங்கலாம். கூடவே டீயும் வேணும். நானும் வரேன்”, என்று சொல்லி அவனுடன் வாங்க சென்றாள்.

எதை எதையோ பேசிய படியே இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். கிளம்பும் நேரம் வந்ததும் தான் “ஒரு நிமிஷம் வேதா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, என்றான் ஜெகன்.

“என்ன ஜெகன்?”, என்று கேட்டு கொண்டே அமர்ந்தாள் வேதா.

“நான் சொல்றதை கேட்டு கோப பட மாட்ட தான?”

 

“இல்லை ஜெகன் சொல்லு”

 

“ரொம்ப நாளா, இல்லை இல்லை ரொம்ப வருசமா உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா தயக்கமா இருந்தது. இப்பவும் அப்படி தான் இருக்கு. ஆனா சொல்லணும்”

“என்னது வருஷ கணக்காவா? சரி சொல்லு”

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு வேதா. உன்னை பாத்ததுல இருந்தே உன்னை லவ் பண்றேன்”, என்று அவள் தலையில் குண்டை தூக்கி போட்டான் ஜெகன்.

அதிர்ச்சியில் அவன் முகத்தையே பார்த்தாள் வேதா. அவள் உடனே திட்டாதது ஜெகனுக்கு கொஞ்சம் தைரியத்தை தந்தது. “நீ என் காதலுக்கு எல்லாம் சரி சொல்ல வேண்டாம் வேதா. என்னை பிடிச்சிருக்குனு மட்டும் சொல்லு. காதல்னு பேச்சையே எடுக்காம எங்க வீட்ல உன்னை பொண்ணு பாக்க வர சொல்றேன். அரேஞ்சுடு மேரேஜா இருக்கட்டும். சரியா?”

“சாரி ஜெகன். என்னால உன்னை அப்டி யோசிச்சு பாக்க முடியலை. இன்னும் சொல்ல போனா நான் கல்யாணத்தை பத்தியே இது வரைக்கும் யோசிக்கல”, என்று எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள் வேதா.

அவள் பதிலில் சோர்ந்து போனாலும் “இனிமே யோசிச்சு பாக்கலாம்ல வேதா?”, என்று கேட்டான் அவன்.

 

“ப்ச்,அதெல்லாம் தோணலை ஜெகன். சாரி”

 

“ஏன், வேதா? எப்படியானாலும் கல்யாணம் செஞ்சுக்குவ தான?”

 

“ம்ம், ஆனா எங்க அம்மா, அப்பாவை விட்டு எப்படி பிரிய முடியும்?”

 

“நான் வேணும்னா வீட்டோட மாப்பிள்ளையா வந்துறேன் வேதா. எனக்கு நீ தான் வேணுமே ஒளிஞ்சு வேற எதுவும் பெருசு இல்லை”

 

“ஓ, அப்ப எனக்காக உன் அப்பா, அம்மாவை விட போற அப்படி தான? ரொம்ப நல்லா இருக்கு. உன்னை மாதிரி என்னால இருக்க முடியாது ஜெகன். அப்புறம் எனக்கு அம்மா அப்பா மட்டும் இல்லை. அத்தை மாமாவும் இருக்காங்க. அவங்களையும் என்னால விட்டுட்டு வர முடியாது. இது வரைக்கும் எனக்கு நீ நல்ல பிரண்டா இருந்திருக்க. இனியும் அப்படியே நினைச்சா என்கிட்ட பேசு. இல்லைன்னா விட்டுரு. உன்னை ஹுர்ட் பண்ணிருந்தா ரொம்ப சாரி. அப்பறம் நம்ம பிரண்ட்ஸ்க்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் பை”, என்று சொல்லி விட்டு எழுந்து வந்தவள் வண்டியை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

 

அவள் முகத்தை பார்த்தே எதுவோ சரி இல்லை என்று புரிந்து கொண்டு சீதா கேட்டதுக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய  அறைக்கு சென்றவள் குளித்து விட்டு மாடிக்கு வந்து விட்டாள்.

 

முதலில் அந்த ஜெகன் மீது கோபம் கோபமாக வந்தது. “பிரண்டுன்னு சொல்லிட்டு எப்படி சொல்லிட்டான்”, என்று அவள் யோசிக்கும் போது “நீ மட்டும் என்ன செய்றன்னு தெரியுதா வேதா? அந்த ஜெகன் கல்யாணம்னு பேச்சை எடுத்த உடனே உனக்கு எதுக்கு ரிஷி ஞாபகம் வந்தது? நீ பிரண்டா பழகுறவனை கல்யாணம் பண்ண யோசிக்கலாம். ஆனா இன்னொருத்தன் நினைக்க கூடாதா?”, என்று கேட்டது மனசாட்சி.

 

இப்போது தான் அவள் மனதையே அவள் யோசிக்க துடங்கினாள். என்ன நினைத்து பார்த்தாலும் கல்யாணம் என்று வந்தால் ரிஷி தான் நினைவில் வந்தான்.

 

“இதை பத்தி எல்லாம் இது வரைக்கும் நான் யோசிச்சது இல்லை. இன்னைக்கு என்னை அப்படி யோசிக்க வச்சது அந்த ஜெகன் தான?”, என்று யோசித்து யோசித்து எரிச்சலாக வந்தது வேதாவுக்கு.


“இது வரை நீ இதை பத்தி யோசிக்கல தான். ஆனா ஜெகன் இல்லாட்டி கூடிய சீக்கிரமே எதாவது குப்பனோ, சுப்பனோ உன்னை யோசிக்க வச்சிருப்பான்”, என்று பதில் சொன்னது மனசாட்சி.

“அதுவும் சரி தான். ஜெகன் என்கிட்ட காதலை சொல்லாமல் இருந்திருந்தாலும்  கூடிய சீக்கிரமே என் அம்மா, அப்பா என் கல்யாணத்தை பத்தி பேசுவாங்க. நான் அப்ப இதை பத்தி யோசிச்சு தான் ஆகணும்? ஆனா நான் மட்டும் யோசிச்சு என்ன பண்ண? ரிஷியும் யோசிக்கணுமே? அவன் மனசுல என்ன இருக்குன்னே தெரியலையே. நான் இப்படி யோசிக்கிறது தெரிஞ்சாலே என்னை வெறுத்துருவானா? இதுக்கப்புறம் என்கிட்டே பேச மாட்டேன்னு சொல்லிருவானோ?”

 

“அப்படி மட்டும் நடந்துருச்சுன்னா, என் ரிஷி என்கிட்டே பேசமா இருந்தான்னா நான் இந்த ஊர்லே இருக்க மாட்டேன்.  நான் வேலை பாக்குற ஐ. டி கம்பேனி இங்க மட்டும் தான் இருக்கா? அதே பிரான்ச் லண்டன்ல இருக்கு. அங்க போய் செட்டில் ஆகிற வேண்டியது தான். ஆனா அங்க போணும்னா  அம்மா, அப்பா, சாரு அத்தை, சோமு மாமா எல்லாரையும் பிரிஞ்சு போகணுமே? அதுவும் முக்கியமா என் ரிஷியை பாக்காம எப்படி இருக்க முடியும்? ஐயோ திருப்பி திருப்பி அவன் கிட்டயே வந்து என் யோசனை நிக்குது? எந்த ஜென்மத்துல டா நான் உன்னை பாத்தேன்? இப்படி மனசளவுல அல்லாடுறேனே? நட்பா காதலான்னு தவிக்கிறேனே?”

 

“இப்ப வேற வேலை முடிச்சு இங்க வந்து கண்ணு முன்னாடி நிப்பான். அப்படியே அழகான வந்து நின்னா எனக்கு சைட் அடிக்க தோணாதா?”

 

“ஏய் நிறுத்து நிறுத்து நீ எப்ப இருந்து அவனை சைட் அடிக்க ஆரம்பிச்ச?”, என்று கேட்டது மனசாட்சி.

 

அப்போது தான் வேதாவே அதை யோசித்தாள். “நான் எப்ப அவனை ரசிக்க ஆரம்பிச்சேனு தெரியலையே. அவனை  அப்படி சைட் அடிக்கிறதையே நானே இன்னைக்கு தான் உணர்ந்திருக்கேன். ஐயோ, அவன் முகத்தை பாத்து நான் உன்னை காதலிக்கிறேன்னு எப்படி என்னால சொல்ல முடியும்? கண்டிப்பா காரி துப்பிருவான். பதினேழு வருசமா இருக்குற நட்பை உடைச்சிருவானோ? அவன் மட்டும் என்கிட்ட முகம் கொடுத்து பேசாம போனா அம்மா, அப்பா, அத்தை, மாமான்னு எல்லாருமே உடைஞ்சு போயிருவாங்களே. இவங்க எல்லாரையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டு போக முடியுமா?”

 

“எவனுமே என் ரிஷி மாதிரி அழகா இருக்கா மாட்டான். அவனை மறந்துட்டு வேற ஒருத்தனை எப்படி கல்யாணம் செய்ய? ஐயோ பேசாம அவ்வையார் மாதிரி ஆகிரலாமா? ப்ச் எங்க? எல்லாரும் பாசக்கரங்களா இருக்காங்களே. பாசமா பிளாக்மெயில் பண்ணியே சம்மதிக்க வச்சிருவாங்க. செத்து போயிறலாமா? செத்து போனா ரிஷியை எப்படி பாக்க?”, என்று மறுபடியும் அவனை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தாள்.

“டாக்டரா இருக்கியே டா பண்ணி. கொஞ்சமாவது என் மனசை புரிஞ்சிக்கணும்னு தோணிருக்கா? நான் இப்ப யோசிக்கிற மாதிரி நீயும் கல்யாணத்தை பத்தி யோசிச்சா நான் உன்னோட மனக்கண்ணுல வருவேனா டா “, என்று அவள் கேட்ட கேள்விக்கு “நீயே உன் மனசை இது வரைக்கும் புரிஞ்சிருக்கியா? இப்ப தான் உனக்கே புரிஞ்சிருக்கு. அப்புறம் தான அவனுக்கு புரியும்?”, என்று திருப்பி கேள்வி கேட்டது மனசாட்சி.


“இந்த மனசாட்சி என்னையே கேள்வி கேக்குது. இப்படி தனியா புலம்ப வச்சிட்டானே”, என்று கடுப்புடன் நினைத்தவளுக்கு முதல் முறை அவனை பார்த்த நாள் நினைவில் வந்தது.

இந்த ஊருக்கு ராமகிருஷ்ணனுக்கு டிரான்ஸ்பர் கிடைத்து இங்க வந்ததும் அடுத்த நாள் இவளை சீதா பார்க்குக்கு அழைத்து சென்றிருந்தாள். அங்கே யாரையும் தெரியாததால் தனியே பால் விளையாடி கொண்டிருந்தாள் வேதா.

அப்போது பாலை எடுக்க சென்ற போது தான் ரிஷி ஊஞ்சல் ஆடுவது தெரியாமல் அவன் அருகே சென்று ஊஞ்சலில் அடிபட்டு கீழே விழுந்தாள். அப்போது பதறி துடித்து அவள் அருகே ஓடி வந்த பத்து வயது ரிஷி இப்போது வேதாவின் கண்களுக்குள் வந்தான்.

“அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவன் என் மேல வச்சிருக்க அக்கரைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”, என்று சலிப்புடன் நினைத்தாலும் மனம் அவனை நினைத்து பூரிக்க தான் செய்தது.

 

அவளுக்கு அடி பட்டுருச்சோன்னு அவன் துடிச்ச துடிப்பு, அவனை அவனுடைய அம்மாவிடம் மாட்டி விட கூடாது என்று நான் தான் தெரியாம விழுந்துட்டேன் என்று சொல்லி இவள் சமாதானம் செய்தது எல்லாமே இப்போது நடந்தது போல இருந்தது வேதாவுக்கு.

 

எப்படி கொஞ்ச நேரத்திலே வேதாவும் ரிஷியும் நண்பர்கள் ஆனார்களோ அதே போல் சீதாவும் சாருவும் தோழிகளாகி விட்டார்கள்.

வேதாவை சேர்க்க நல்ல ஸ்கூல் எது என்று சீதா கேட்டதுக்கு ரிஷியின் ஸ்கூலையே பரிந்துரை செய்தாள் சாருலதா.

அடுத்த நாளே ரிஷி ஸ்கூல் கிளம்பும் போது அவனுடனே சென்று வேதாவையும் அதே பள்ளியில் சேர்த்து விட்டாள் சீதா.

அது மட்டும் இல்லாமல் “ரிஷி குட்டி, இனி வேதா பாப்பாவை நீ தான் பத்திரமா பாத்துக்கணும் சரியா?”, என்று சீதா கேட்டதுக்கு வெறும் மண்டையை மட்டும் ஆட்டாமல் அவளை குழந்தை போலவே பார்த்து கொண்டான் ரிஷி. அவனுக்கு அவள் மேல் அன்பு பொங்கும் போதெல்லாம் வேதா பாப்பா என்றே அழைப்பான்.

அதன் பின்னர் சோமுவும், ராமகிருஷ்ணனும் நண்பர்கள் ஆகி விட்டார்கள். சில வருடங்களில் இரண்டு குடும்பமும் ஒன்று போல ஆனது. அது மட்டும் இல்லாமல் மூன்று வருடம் கழித்து ரிஷியின் எதிர் வீட்டுக்கே வேதா வீட்டினர் வந்து விட்டார்கள்.

 

காதல் உயிர்த்தெழும்…..