Advertisement

“என்ன டி முறைக்கிற?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“எனக்கு கொழுப்புன்னு சொல்ற? எங்க என்னை நல்லா பாத்து சொல்லு. எங்கயாவது எக்ஸ்டரா கொழுப்பு இருக்கான்னு. சும்மா சிக்குன்னு இருக்கேன். என்னை பாத்து கொழுப்புன்னு சொல்ற?”, என்று சண்டைக்கு வந்தாள் கீர்த்தி.
“அம்மாடி பேய் தேவதையே. தெரியாமல் வாயை விட்டுட்டேன்.  என்ன சொன்னாலும் கடைசில என்னை பார். என் அழகை பார்னு ஆரம்பிச்சிருவியே?”, என்று அவளிடம் கூறியவன் “பாத்தா பிளாட் ஆகி விழுந்துருவேன் டி, என் செல்ல ராட்சசி”, என்று மனதில் எண்ணி கொண்டான்.
“ஏன் உன்கிட்ட மட்டும் தான சொல்றேன்? என்னை பார் என் அழகை பாருன்னு, வேற யார் கிட்டயுமா சொல்றேன்? நீ பாத்து நான் எப்படி இருக்கேன்னு சொன்னாதான் என்னவாம்?”
“சொல்லிட்டாலும்…”
“என்ன மகி இழுக்குற?”
“கேவலமா இருக்க டி. போதுமா? சின்னதா நெத்தி, குண்டு குண்டு கண்ணு, கொழு கொழுன்னு கன்னம், சிப்பி மாதிரி உதடுன்னு நல்லாவே இல்லை டி. அசிங்கமா இருக்க டி குள்ளச்சி”, என்று புன்னகையுடன் கூறினான் மகேந்திரன்.
“மகி எனக்கு ஒரு சந்தேகம்”
“என்னனு கேட்டு தொலை”
“நீ என்னை ரசிச்சு வர்ணிக்கிறியா? இல்லை உண்மையாவே உனக்கு என்னை பிடிக்கலையா?”
“இந்த ஆராய்ச்சி இப்ப தேவை தான் டி. ஒழுங்கா வா கிளம்பலாம். நேரம் ஆகிட்டு”
“நீ, நான் எப்படி இருக்கேன்னு சொல்லு மகி. அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும். ப்ளீஸ் டா”
“ஏண்டி, நீ இப்படியே இங்க நின்னு வாயாடிட்டு இருந்தன்னு வை, பேய்ன்னு கூட பாக்காம உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க குள்ளச்சி. தயவு செஞ்சு வாயை மூடிட்டு என் கூட வா”
“ஆனா நீ கடைசி வரைக்கும் நான் அழகு தான்னு ஒத்துக்குவே இல்லையே”
“ஏண்டி, நீ ஆவி டி.  நீ சாதிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு?  இதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க? அதான் சொல்லிட்டேன்ல? இங்க நின்னா எல்லாரும் உன்னை சைட் அடிப்பாங்கன்னு. அதுல இருந்தே தெரியலையா? நீ அழகி தான்னு. இப்ப சொல்லிட்டேன்ல? வாடி பேயே”
“எதுக்கு டா என்னை பேய் பேய்னு சொல்ற?”, என்று பாவமாய் கேட்டாள் கீர்த்தி.
“பேயை பேய்ன்னு சொல்லாம பொண்ணுனா சொல்ல முடியும்? அப்புறம் டா சொல்லாதேன்னு சொன்னேன்ல? நீ என்ன இஷ்டத்துக்கு டா சொல்ற?”
“நீ மட்டும் மனுசனா என்ன? நீயும் பேய் தானே டா? பரதேசி”
“ஏய், டா சொல்லாதேன்னு சொன்னா அடங்க மாட்டியா?”
“அடங்காம தான் அலைவேன். முடிஞ்சா நீயே அடக்கு”
“ஆமா உன்னை அடக்க தான் இப்படி செத்து பேயா அலையுறேன் பாரு? என்னோட குறிக்கோளே வேற டி”
“ஆமா பெரிய புடலங்கா குறிக்கோள். போடா”
“என் குறிக்கோளை கிண்டல் செஞ்சா உன்னை கொன்னுருவேன்”
“செத்த பிறகும் எத்தனை தடவை டா கொன்னுருவேன் கொன்னுருவேன்னு மிரட்டுவ?”
“அது பழக்க தோஷம். நீ வா”
“சரி எனக்கு ஒரு ஸ்பெஷல் தோசை வாங்கி தா”
“இப்ப எல்லா ஹோட்டலும் கூட்டமா இருக்கும் டி. இப்ப நாம போனா, தோசையை நீ சாப்பிடும் போது வானத்துல தோசை பறக்கிற மாதிரி எல்லாரோட கண்ணுக்கும் தெரியும். அலறி அடிச்சு ஓடுவானுங்க. இப்போதைக்கு உன் வயித்தையும், வாயையும் கட்டிக்கிட்டு பின்னாடி வா”
“மகி, செமயா பசிக்குது டா. ஒரு சாப்பாடு கூட வாங்கி தர மாட்டிக்க?”
“பேயானா கூட உன் பசி போகாதது எனக்கே ஆச்சர்யமா இருக்கு டி குள்ளச்சி”
“நீ ஆச்சர்ய பட்டது போதும். எனக்கு தோசை வாங்கி தர முடியுமா முடியாதா?”
“முடியாது டி”
“சரி நான் கிரியை கூப்பிடுறேன். கிரி எங்க டா இருக்க?”, என்று வானத்தை நோக்கி குரல் கொடுத்தாள் கீர்த்தி.
“இங்க தான் இருக்கேன் செல்லம்”, என்ற படியே அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் கிரி.
அவனை பார்த்து முறைத்த மகேந்திரன் “உனக்கு வேற வேலையே இல்லையா டா? எப்ப பாத்தாலும் இவ பின்னாடியே அலையுற?”, என்று கேட்டான்.
“என் டார்லிங் பின்னாடி தான் நான் அலைவேன்? உனக்கு என்ன மகி? கீர்த்தி  செல்லம். நீ சொல்லுமா? உனக்கு என்ன வேணும்? நான் செய்றேன் டா? நாம ரெண்டு பேரும் இமயமலைக்கு போவோமா?”, என்று கேட்டான் கிரி.
“ஆமா டா, பேயும் பேயும் சேந்து இமையமலைல போய் டூயட் பாடுங்க”, என்று எரிச்சலுடன் கூறினான் மகேந்திரன்.
“அவன் கிடக்கிறான். நீ கண்டுக்காத கிரி. நாம இமயமலைக்கு இன்னொரு நாள் போவோம். எனக்கு இப்ப ஸ்பெஷல் தோசை சாப்பிடணும் போல இருக்கு”, என்றாள் கீர்த்தி.
“ஏய் குள்ளச்சி, சும்மா என்னை வெறியேத்தாத சொல்லிட்டேன். இந்த கரண்டி வாயனை போக சொல்லு”, என்று கத்தினான் மகேந்திரன்.
“மகி சொல்றதை பெருசா எடுக்காத கீர்த்தி செல்லம். என்கூட வா. நான் உனக்கு தோசை வாங்கி தரேன்”, என்றான் கிரி.
“ஆமா டி, அவன் கூடவே போ. திரும்பி வந்துறாத”, என்று கத்தி விட்டு அங்கிருந்து நகர பார்த்தான் மகேந்திரன்.
அவன் கையை பற்றி கொண்ட கீர்த்தி கிரியை பார்த்து “சாரி, கிரி. மகி கோப பட்டுட்டான். உன்னை தொந்தரவு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு. எனக்கு பசியே போயிட்டு”, என்றாள் கீர்த்தி.
“இவன் கூட சேந்துட்டா போதுமே, என்னை நீ கழட்டி விட்டுருவியே? போ கீர்த்தி. சரி நீ அவன் கூடயே போ. ஆனா எப்ப என்ன வேணும்னாலும் என்னை கூப்பிடு. நான் பறந்து வந்துறேன். பை டார்லிங்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தான் கிரி.
தன் கையை பற்றி இருந்த கீர்த்தியின் கையை உதறி விட்டான் மகேந்திரன்.
“இப்ப எதுக்கு மகி கோப படுற? அவனை தான் போக சொல்லிட்டேன்ல? இனி கூப்பிட மாட்டேன்”, என்று சமாதானம் செய்தாள் கீர்த்தி.
“ஹ்ம்ம்”, என்று கூறி கோபம் பாதி குறைந்து விட்டது என்று சொல்லாமல் சொன்னான்  மகேந்திரன்.
மறுபடியும் அவன் கையுடன் தன் கையை கோர்த்து கொண்டவள் குதித்த படியே அவனுடன் நடந்தாள்.
“உனக்கு ஒன்னு தெரியுமா மகி? இவ்வளவு நேரம் அலையையே பாத்துட்டு இருந்தேனா? அந்த அலையும் தரையும் சண்டை போட்டது மாதிரியே தோணுச்சு. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போல?”, என்றாள் கீர்த்தி.
“அந்த லவ்ல அப்படி என்ன தாண்டி இருக்கு? எப்ப பாத்தாலும் லவ் லவ்னு உளறுற?”, என்று கோபம் அனைத்தையும் மறந்து புன்னகைத்தான் மகேந்திரன்.
“அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது டா”
“உனக்கு தெரியாதுன்னு சொல்லு”
“ஹ்ம்ம் தெரியாது தான். நான் தான் லவ் பண்ணது இல்லையே. அதனால எனக்கு எப்படி தெரியும்? ஆனா பண்ணனும்னு ரொம்ப ஆசை தெரியுமா?”
“யாரை வேணாலும் லவ் பண்ணு. அந்த கிரியை மட்டும் பண்ண, நானே உன்னை கொன்னுருவேன்”
“மகி நான் ஏற்கனவே செத்துட்டேனே”, என்று சோகமாக ஒலித்தது அவள் குரல்.
“விடு டி, நான் தான் உன் கூட இருக்கேன்ல? சரி வா, அந்த ஹோட்டலுக்கு போவோம்”
“சாப்பாடு வாங்கி தர மாட்டேன்னு சொன்ன?”
“அது விளையாட்டுக்கு சொன்னது. உடனே நீ அவனை கூப்பிடுவியா? மவளே இனி அவனை கூப்பிடு, உனக்கு அப்பறம் இருக்கு”
“அதை விடு, என் மேல உள்ள அக்கறைல தான எனக்கு சாப்பாடு வாங்கி தர?”
“உன்மேல நான் அக்கறை படாம வேறு யாரு படுவா குள்ளச்சி? உன் மேல கோபமும் நான் தான் படணும். அக்கறையும் நான் தான் படணும். சரி சரி அதெல்லாம் அப்புறம் பேசலாம். தோசையை திருடனும். அது யாரோட கண்ணுக்கும் தெரிய கூடாது. அதனால தரை ஒட்டி தான் எடுக்கணும். காத்துல பறக்கிற மாதிரி எல்லாம் எடுக்க கூடாது சரியா?”
“ம்ம் சரி. ஆனா தோசைல மண்ணு படாம பாத்துக்கோ”
“நீ அடங்கவே  மாட்டியா டி? தோசைல மண்ணு விழுறது தான் முக்கியமா? அப்புறம் முக்கியமா ஒரு கண்டிஷன் கீர்த்தி”
“என்ன மகி?”
“அங்க இருக்கு பாரு, பிரிட்ஜ். அந்த பக்கம் நீ போகவே கூடாது”
“மகி, உள்ள ஐஸ் கிரீம் வச்சிருக்காங்க டா”, என்று ஆர்வத்துடன் கூறினாள் கீர்த்தி.
“அது தெரிஞ்சு தான் சொல்றேன். அங்க நீ போனா  எல்லாரும் நம்மளை பாத்துருவாங்க டி. அப்புறம் இங்க ஒரு கலவரமே வந்துரும். அதனால உன் கையை அடக்கி வச்சுக்கணும். எதாவது சேட்டை செஞ்ச, கடிச்சு குதறிருவேன்”, என்று சொல்லி விட்டு அவள் கையை பற்றி அழைத்து போனான்.
அந்த ஐஸ் கிரீம் உள்ள  பிரிட்ஜையே ஏக்க பார்வை பார்த்து கொண்டு சென்றாள் கீர்த்தி.
தோசை சூடுபவர் அருகில் சென்றார்கள் இருவரும்.
“கீர்த்தி, இது தான் சரியான சந்தர்ப்பம். அவர் வரிசையா சுட்டு அடுக்குறார். அதுல ஒன்னு எடுத்துறலாம். நீ டேபிள் அடியில் உக்காந்து சாப்பிடு சரியா?”
“இது டயர் தோசை டா. எனக்கு  இது வேண்டாம். எனக்கு ஸ்பெஷல் தோசை தான் வேணும்”
“படுத்தாத  டி. அது கஷ்டம். ஒன்னு ஒண்ணா  தான் சுடுவாங்க”
“அதெல்லாம் கிடையாது. எனக்கு அது தான் வேணும்”
“சரி இரு, அவன் ஊத்தி எடுத்து  தட்டுல  வச்ச  உடனே  எடுத்து  தரேன். அந்த சட்டினி, இந்த சட்டினி  வேணும்னு  கேக்க  மாட்டில்ல?”
“மாட்டேன்  டா. வெறும்  தோசை போதும்”
“சரி”, என்று அவளிடம்  சொல்லி விட்டு  தோசையை அமுக்க  காத்திருந்தான்  மகேந்திரன்.
“இது தான் சரியான நேரம் கீர்த்தி”, என்று சொல்லி கொண்டே  அவள் இருந்த பக்கம் திரும்பியவன்  திகைத்தான். அவள் அந்த பிரிட்ஜை நோக்கி சென்று  கொண்டிருந்தாள்.
அவள் பிரிட்ஜ்  கதவை  திறப்பதுக்கு  முன்னே  அவளை  நெருங்கியவன்  “எருமை  மாடே  உன்னை என்ன சொன்னேன் ?”, என்று திட்டி  தடுத்து  நிறுத்தினான்.
“அந்த ஆளுக்கு  தோசையே  சுட  தெரில  மகி. மொறு  மொறுன்னே  இல்லை”, என்றாள்.
“மொறு  மொறுன்னு இல்லைன்னு  உனக்கு எப்படி தெரியும் கீர்த்தி? நீ தான் சாப்பிடவே  இல்லையே”
“அங்க பாரு, அந்த குண்டு அம்மா  உக்காந்திருக்கே? அது தோசை வந்த  அப்புறம் தான் கையை கழுவ  போச்சு? அந்த நேரத்துல  ரெண்டு வாய்  எடுத்து  சாப்பிட்டேன் “
அங்கே திரும்பி பார்த்தான் மகேந்திரன்.  அந்த குண்டு அம்மா  குறைந்திருந்த  தோசையை வியப்பாக  பார்த்து விட்டு பேரரை அழைத்து சத்தம் போட்டு கொண்டிருந்தாள்.
“வந்தவுடனேயே உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? வேண்டாம் கீர்த்தி. ஐஸ் கிரீம்  எடுத்தா யாராவது  பாப்பாங்க”
“பாத்தா பாக்கட்டும். நாம எடுத்துட்டு ஓடிறலாம்”, என்று சொல்லி கொண்டே எடுக்க ஆரம்பித்தாள்.
“சீக்கிரம் எடு டி”
“எடுத்துட்டேன் ஓடிறலாம்”, என்று அவள் கூறியதும் அவளை பார்க்காமல் அவள் சத்தத்தை மட்டும் கேட்டு அவள் கையை பற்றி ஓடியே போனான் மகேந்திரன். யாரும் இல்லாத இருட்டுக்குள் வந்த பிறகு தான் பார்த்தான். அவள் ஒரு ஐஸ் கிரீமை எடுத்து வர வில்லை. பல ஐஸ் கிரிம்களை அள்ளி கொண்டு வந்ததை.
“எத்தனை பேர் ஐஸ் கிரீம் பறந்ததை பாத்து மயக்கம் போட்டு விழுந்தானுகளோ தெரியலை”, என்று எண்ணி தலையில் அடித்து கொண்டான் மகேந்திரன்.
உயிர் உருகுதல் தொடரும்……

Advertisement