Advertisement

அத்தியாயம் 1
உன் உணர்வோடு
மட்டும் அல்ல
உன் உயிரோடும்
கலந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சென்னை கடற்கரையில் கால்களில் முகத்தை புதைத்து கடலை ரசித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சூரியன் மெதுவாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கடல் நீர் பொன்னிறமாக காட்சி அளித்தது.
வெண்ணிற உடையில் தேவதை போல இருந்தாள் கீர்த்தி. இடுப்பை தாண்டி தொங்கிய கருங்கூந்தலை அவள்  விரித்து போட்டிருந்ததால் கடற்கரை மணலில் அது புரண்டு கொண்டிருந்தது.
பிறை போல் நெற்றி, அதில் சின்னதாக ஒரு கருப்பு பொட்டு அவளுக்கு தனி அழகை கொடுத்தது. மை போடாமலே கருமையாக இருந்த இமை, ஒளி பொருந்திய அவள் கண்களுக்கு பாதுகாவலாக இருந்தது.
கூரான மூக்கு, சிவந்த மென்மையான உதடுகள், எந்த ஆபரணமும் அலங்கரிக்காமலே அழகாக இருந்த சங்கு கழுத்து, மெல்லிய இடை, நீளமான கால்கள், மென்மையான பாதம்   என்று தேவதையை போன்ற  எழிலுடன் இருந்தாள் கீர்த்தி.
ஜில்லென்ற கடல்காற்று அவள் முகம் தீண்டி சென்றது. கண்களை மூடி அதை ஆழ்ந்து அனுபவித்தாள் கீர்த்தி. பின் கண் திறந்தவளுக்கு வேகமாக வந்த அலை மீது கவனம் சென்றது.
விதவிதமான வேகத்தில் அலை வருவதும், அது திரும்பி போவதுமாக இருந்த அந்த காட்சியையே பார்த்து கொண்டிருந்தாள். கடலுக்கும், கரைக்கும் இருந்த விளையாட்டை ரசித்த படியே இருந்தாள்.  கடலும், கரையும்   சண்டை போட்டு கொண்ட காதலர்கள் போன்று அவளுக்கு தோன்றி வைத்தது.
“எங்க சுத்துனாலும் கடைசில காதல்ல  வந்து நிக்குற கீர்த்தி நீ? சே”, என்று நினைத்து தன் தலையிலே கொட்டி கொண்டாள்.
காதல் என்ற வார்த்தை நினைவில் வந்ததும் அவளுக்கு மகேந்திரன் நினைவில் வந்தான். அவனை பற்றி நினைத்ததும் அவள் முகம் வாடி போனது. “அந்த பண்ணி பயலை பத்தி நினைக்க கூடாது. எருமை மாடு. தடிமாட்டு தாண்டவராயன்”, என்று வாய் விட்டே திட்டினாள்.
பின் மறுபடியும் அலையை ரசிக்க ஆரம்பித்தாள். தூரத்தில் ஒரு சாதாரண கட்டை போல இருந்த கட்டு மரத்தில் ஒரு முதியவர் பயணித்து கொண்டிருந்தார். அவர் மீது அவள் கவனம் சென்றதும் வியப்பாக அவரையே பார்த்தாள்.
அந்த சின்ன கட்டுமரம் அவரை வெகு பயங்கரமாக அலைக்கழித்தது. அவரும் அந்த அலை போன போக்கிலே கட்டுமரத்தை செலுத்தினார். அந்த கட்டுமரத்தின் ஆட்டத்தில் எப்போது அது கவிழும் என்று பயந்து இவள் தான் நடுங்கினாள்.
அவரோ எந்த பயமும் இல்லாமல் காலை ஊன்றி நின்றிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த கட்டு மரம் அவள் கண்ணுக்கு சிறு புள்ளியாக தெரிந்தார். “மீன் பிடிக்க போகிறார் போல?”, என்று நினைத்து கொண்டாள்.
இப்படி நிம்மதியாக இயற்கையை ரசித்து கொண்டு உலகையே மறந்து அமர்ந்திருந்தவளை, மெதுவாக வயிறு “நான் இருக்கிறேன்”, என்று அழைத்தது.
வயிற்றின் குறுகுறு சத்தத்தில் “சே, அதுக்குள்ள பசி வந்துரும். என்ன தான் வயிறோ? எப்படி தான் சரியான நேரம் ஆகிட்டுனா இப்படி கூப்பிடுதோ?”, என்று நினைத்து கொண்டு “இல்லை இல்லை நான் கோபமா இருக்கேன். அதனால சாப்பாடை பத்தி நினைக்க கூடாது. சோகமா இரு கீர்த்தி”, என்று தனக்கு தானே சபதம் செய்தாள்.
ஆனால் சிறிது நேரத்திலே வயிறு பசியால் மிக பெரியதாக ஓலமிட்டது. “பேய் பசி வந்துட்டு. இனி தாங்காது. கோபமாவது ஒண்ணாவது? நமக்கு சாப்பாடு தான் முக்கியம். மானம் ரோசம் பாத்தா வயிறு எப்படி நிறையும்?”, என்று நினைத்து கொண்டு எழுந்தவள் தலையை சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள்.
நிறைய மக்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தார்கள். எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டே  “யார் கிட்ட இன்னைக்கு பிடுங்கி திங்கலாம்?”, என்று நினைத்து எழுந்து மெதுவாக நடை போட்டாள்.
அப்போது கையில் ஒரு பேப்பர் பிளேட்டில் இரண்டு பப்ஸை வாங்கி கொண்டு மணலில் அமர்வதற்காக இடம் பார்த்து கொண்டிருந்தான் ஒரு குண்டு இளைஞன்.
“ஆள் சிக்கிட்டான். இன்னைக்கு அவன் வாங்கின ரெண்டு  பப்ஸ்ல ஒன்னு எனக்கு”, என்று நினைத்து கொண்டு மெதுவாக அவன் பின்னே சென்றாள் கீர்த்தி.
அவனோ அமராமல் இடம் பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான்.
“தடியன் ஒரு இடத்துல உக்காருறானா பாரு? நடந்து கிட்டே இருக்கு. இவன் சீக்கிரம் உக்காந்தா தான அசந்த நேரம் ஒரு பப்ஸை நான்  அடிக்க முடியும்?”, என்று நினைத்து கொண்டே அவன் பின்னே நடந்தாள்.
சிறிது தூரம் சென்ற பின்னரும் அவன் அமராததால் வேறு வழி இல்லாமல் அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினாள்.
ஆ என்று கத்திய அவனும் ஒரு கையால் தலையை தடவி கொண்டு திரும்பி பார்த்தான். ஆனால் அங்கே யாருமே இல்லை. பின் மேலே பார்த்தான். ஒரே ஒரு காக்கா தான் மேலே பறந்து கொண்டிருந்தது.
“பப்ஸை சாப்பிட காக்கா தான் என் மண்டைல அடிச்சிருச்சு போல?”, என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்த படகு அருகே சென்றவன் அந்த படகில் சாய்ந்து அமர்ந்தான்.
பக்கத்தில் பப்ஸை வைத்து விட்டு கடலையே பார்த்தான். கீர்த்தியும் அந்த படகு அருகே அவனுடைய பப்ஸ் கைக்கு எட்டும் தொலைவில் அமர்ந்து கொண்டாள்.
ஒரு பப்ஸை அவன் எடுத்து கொண்டான். கீர்த்தியும் மற்றொன்றை எடுக்க ஆயத்தமானாள். அந்த குண்டு இளைஞன் பப்ஸை முகம் அருகே வைத்து கொண்டு “என்னை போய் குண்டா இருக்கேன்னு சொல்லிட்டாளே? அவளை லவ் பண்ணுணதுனால தினமும் பதிமூணு தோசை சாப்பிடுறவன் ஏழு தான் சாப்பிடுறேன். இப்ப கூட சாயங்காலம் குறைஞ்சது ஆறு பப்ஸாவது உள்ள போகும். ஆனா இப்ப ரெண்டு தான் வாங்கிட்டு வந்துருக்கேன். ஆனாலும் உடம்பு குறைய மாட்டிக்கு. இனி  அவளுக்காக எல்லாம்  சாப்பாட்டை  குறைக்க கூடாது. இவ  இல்லைன்னா  இன்னொருத்தி. நமக்கு  சாப்பாடு தான் முக்கியம்”, என்று நினைத்து கொண்டு அதை  ரசித்து  ருசித்து  சாப்பிட  ஆரம்பித்தான்.
“இவன்  நம்மளை  மாதிரி  கேஸ்  போல?”, என்று நினைத்த கீர்த்தி மற்றொரு  பப்ஸை எடுத்து கொண்டு படகுக்கு  அந்த பக்கம்  சென்று  அதை  சாப்பிட  ஆரம்பித்தாள்.
ஒன்றை  சாப்பிட்டு  விட்டு அடுத்ததை  எடுக்க  போனவன்  வெறும்  தட்டை  பார்த்து திகைத்தான். “இங்க  காக்கா  கூட இல்லையே? அப்புறம்  இன்னொன்னு  எங்க   போச்சு ?”, என்று வியப்பாய்  இருந்தது அவனுக்கு.
அவன் பப்ஸை ஆட்டைய  போட்டு  தின்னு  முடித்த  கீர்த்தியோ  அடுத்த  ஆளிடம்  
எதை  பிடுங்கி  திங்கலாம்  என்று நினைத்து எழுந்து சென்றாள். 
பின் மற்றொரு  ஆளிடம்  இருந்து  இரண்டு  பஜ்ஜியை  திருடி  வாய்க்குள்  தள்ளியவள்  “இப்போதைக்கு  இது போதும்”,  என்று முடிவு  எடுத்து மறுபடியும் அலையை பார்வையிட  அமர்ந்து விட்டாள். 
அலையை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே யாரோ நடந்து வரும் செருப்பு சத்தம் கேட்டது. “யார் வாரா?”, என்று நினைத்து தலையை திருப்பி பார்த்தாள்.
ஒரு பெண் தன்னுடைய மகளை  கையில் பிடித்து கொண்டு இவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
கொழுகொழுவென்று இருந்த அந்த குழந்தையை பார்த்து புன்னகைத்தாள் கீர்த்தி. அதுவும் அவளை பார்த்து சிரித்தது. அதை பார்த்த அந்த குழந்தையின் அன்னை “யாரை பார்த்து பாப்பா சிரிக்கிற?”, என்று கேட்டாள்.
“அக்கா”. என்று கீர்த்தி இருந்த திசை பக்கம் பார்த்து கை காட்டி சிரித்தது அந்த குழந்தை.
தன் மகள் கை காட்டிய இடத்தில் பார்த்த அந்த பெண் திகைத்தாள். அவள் கை காட்டிய இடத்தில் யாருமே இல்லாமல் வெறுமையாக இருந்தது. 
“என்ன டா, அங்க யாரு இருக்கா? யாருமே இல்லையே? நம்ம அக்கா  வீட்ல இருக்கா. நீ வா”, என்று சொல்லி  அந்த குழந்தையை தூக்கி கொண்டு அமர்ந்திருந்த கீர்த்தியை கடந்து சென்றாள் அந்த பெண்.
அந்த பெண்ணின் தோள் வளைவில் முகம் புதைந்திருந்த அந்த குழந்தை அதே இடத்தில் அமர்ந்திருந்த கீர்த்தியை பார்த்து “பை அக்கா”, என்று சொன்னது.
இவளும் பதிலுக்கு சிரித்து கொண்டே கை ஆட்டினாள்.  பத்தாதுக்கு அந்த குழந்தைக்கு பிளைன் கிஸ்ஸையும் கொடுத்தாள்.
“யாருக்கு அர்ச்சனா பை சொல்ற? இங்க எந்த அக்காவுமே இல்லையே”, என்று குழம்பினாள் அந்த பெண்.
அந்த குழந்தையோ  கீர்த்தியை பார்த்து சிரித்து கொண்டே இருந்தது. மகளின் உடல் நிலையை பற்றிய கவலையுடன் அங்கிருந்து அகன்று விட்டாள் அந்த பெண்.
“அழகான குழந்தை. பெரியவளானால் என்னை போல தான் இருப்பாள்”, என்று எண்ணி கொண்ட கீர்த்தி பின் மறுபடியும் கடலை பார்த்து கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு தாத்தா, தன்னுடைய நாயை கையில் பிடித்து கொண்டு வாக்கிங்  வந்திருந்தார். இவள் அருகே வந்ததும் அந்த நாய் இவளை பார்த்து குரை குரை என்று குரைத்தது. அவளோ அதையே முறைத்த படி அமர்ந்திருந்தாள்.
கீர்த்திக்கு நாய் என்றாலே பயம். எங்கே கண்டாலும் ஓட்டம் பிடித்து விடுவாள். ஆனால் இன்று அதையே முறைத்த படி அமர்ந்திருந்தாள். “என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது”, என்று அதை பார்த்து கையை காட்டி உதடு வேற சுளித்தாள்.
வெறி வந்தது போல அது மேலும் குரைத்தது. அதை மேலும் கடுப்பேத்த “உன்னை கொன்னுருவேன்”, என்று சைகை வேறு செய்தாள் கீர்த்தி.
“டாம் எதுக்கு இந்த இடத்தை பார்த்து இப்படி குரைக்கிற? வா”, என்று கூறி நாயை  இழுத்து கொண்டு போனார் அந்த பெரியவர்.
அதுவும் திரும்பி திரும்பி அவளை பார்த்து குரைத்துக் கொண்டே போனது. “லூசு நாய் எப்படி கத்திட்டு போகுது பாரு”, என்று திட்டியவள் மறுபடி அலையை பார்வையிட ஆரம்பித்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக இருட்டாகி கொண்டே இருந்தது. அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தார்கள். இவள் மட்டும் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
முழுவதும் இருட்டானதும் கொஞ்சம் பயம் வந்தது. “அவனை கூப்பிடலாமா?”, என்று யோசித்தாள்.
“ம்ம் மாட்டேன். என்னை திட்டிட்டு போய்ட்டான். அவன் கூட நான் பேசவும் மாட்டேன். துணைக்கு கூப்பிடவும் மாட்டேன்”, என்று வீராப்புடன் நினைத்து கொண்டாள்.
தலையை திருப்பி திருப்பி பார்த்தாள். சுற்றி ஒருவருமே இல்லை. சிறிதாக இருந்த பயம்  கொஞ்சம்  கொஞ்சமாக கூட ஆரம்பித்திருந்தது.
“மகியை கூப்பிடலாம். ஆனால் அவன் திட்டுவானே? பெரிய இவன் மாதிரி சீன போடுவான்? அட்வைஸ் பண்ணியே கொலை செய்வான். என் காது சவ்வு பிய்யும். ஆனா இங்க இருக்கவும் பயமா இருக்கு. இந்த இருட்டு எதுக்கு வருது? சே”, என்று நினைத்தவள் அங்கிருந்து எழுந்தாள்.
பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு மெதுவாக நடந்தாள். நடக்கும் போது அவளை யாரோ பின் தொடருவது போல இருந்தது. திரும்பி பார்த்தாள். யாருமே இல்லை. பயம் கவ்வி கொண்டது. நடுக்கத்துடன் அடுத்த நிமிடம் “மகி”, என்று கத்தினாள்.
அவள் அழைத்த அடுத்த நொடி அவள் எதிரே நின்றான் மகேந்திரன். அதுவும் சும்மா இல்லாமல் பேண்ட் உள்ளே  கை  விட்ட  படி காலை சாய்த்து  வைத்து நின்ற  அவன் அவளை பார்த்து நக்கல் சிரிப்பு வேற சிரித்தான்.
அதில் எரிச்சல் ஆனவள் “இப்படி சிரிச்ச எனக்கு கோபம் வரும் சொல்லிட்டேன்”, என்று ஒரு விரலை நீட்டி மிரட்டினாள். நீட்டிய அவள் விரலை பிடித்தவன் “கையை நீட்டி பேசுன, விரலை உடைச்சிருவேன். யாரு கிட்ட?”, என்று தெனாவெட்டாய் திட்டினான்.
“டேய் வலிக்குது டா, விடு”, என்று கத்தினாள் கீர்த்தி. “வாடா போடான்னு பேசுன மூஞ்சை உடைச்சிருவேன். உனக்கும் எனக்கும் தான் ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு தான? ரெண்டு பேரும் இனி சந்திக்க கூடாதுன்னு காலைல தான முடிவு பண்ணுனோம்? அப்புறம் எதுக்கு டி என்னை கூப்பிட்ட?”, என்று அவளை முறைத்த படி கேட்டான் மகேந்திரன்.
“அப்ப நீ மட்டும் எதுக்கு டா என்னை பாத்து டி சொல்ற? தடியா?”
“இன்னைக்கு நீ என்கிட்ட அடி வாங்காம போக மட்ட கீர்த்தி”
“ஆமா நீ அடிக்கிற வரைக்கும் என் கை பூ பரிச்சிட்டு இருக்கும்”
“இப்படி வாய் கிழிய பேசுறவ எதுக்கு வெக்கமே இல்லாம என்னை கூப்பிட்ட?”
“ஒரு அவசரத்துல போயும் போயும் உன்னை போய் கூப்பிட்டேன் பாரு . சரி எனக்கு தான் மானம் ரோசம் இல்லைன்னு வச்சிக்கோ. நான் கூப்பிட்ட உடனே நீ ஏன் டா ஈ ன்னு இளிச்சிட்டு வந்து நிக்குற?”
“ஆமா இவ பெரிய உலக அழகி?  இவளை பாத்து ஈன்னு இளிக்கிறாங்க?”
“நான் உலக அழகிய விட அழகு டா”
“குள்ளச்சி, உன் வாய் தான் டி உன்னை வாழ வைக்குது”
“யாரு டா குள்ளச்சி? என்னையா சொல்ற? உனக்கு எவ்வளவு தைரியம்?”
“ஆமா இவ பெரிய இவ? இவ கிட்ட பேச தைரியம் வேணுமாக்கும்? ஒரு தட்டு தட்டுனா நாலு குட்டிக்கரணம் போடுவ. எங்க பயந்து நின்னு அழுதுட்டு இருக்கியோன்னு  நினைச்சு பாவ பட்டு வந்தா என்னா பேச்சு பேசுற?”
“நீ பாவ பட்டு வந்தியா? நம்பிட்டோம் நம்பிட்டோம். என் மேல உள்ள அக்கறையினால தான் வந்தேன்னு எனக்கு தெரியாதாக்கும்?”
“வாட்? அக்கறையா? உன் மேலயா? இது தான் இந்த வருடத்தின் சிறந்த பொய்”
“புளுகாத. உனக்கு என் மேல பாசம் இருக்கும்னு எனக்கு தெரியும்”
“பாசம் வைக்க இவ கிளியோபாட்ரா  பாரு? பாசமும் இல்லை. பாயசமும் இல்லை”
“கிளியோபாட்ராவா இருந்தா தான் பாசம் வைப்பியா? நான் அவளை விட அழகு டா. காலேஜ் படிக்கும் போது எத்தனை பேர் என் பின்னாடி சுத்திருக்காங்க தெரியுமா?”
“அது தெரியாது. ஆனா அவங்க சுத்துன அடுத்த நாள் நீ குளிக்கும் போது பாத்ரூமில் இருந்து ஒரே மேக்கப்பா கரைஞ்சு வந்ததாம்”
“அப்ப என்னை அழகின்னு ஒத்துக்க மாட்ட?”
“சான்ஸே இல்ல. உன்கிட்ட ஒரு மண்ணும் அம்சமா இல்லை. ஒன்னை தவிர”
“என்னது மகி?”, என்று ஆசையாக கேட்டாள் கீர்த்தி.
அவளை தலை முதல் கால் வரை பார்த்து விட்டு “ஹ்ம்ம் ஒன்னும் இல்லை. மொக்க பிகர் நீ”, என்று சொல்லி விட்டு திரும்பி நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டான். “சூப்பர் பிகர்”, என்று  குரல் கொடுத்தது அவன் மனசாட்சி.
“சரிங்க பாஸ் நாங்க அழகே இல்லை போதுமா? தெரியாம உன்னை கூப்பிட்டுட்டேன். என்னை மன்னிச்சிரு. நான் அந்த கிரியை கூப்பிட்டுருக்கணும்”, என்று கூறினாள் கீர்த்தி.
“ஏய், பொறு பொறு. இப்ப எதுக்கு அவனை பத்தி பேசுற? அவனை மட்டும் நீ கூப்பிட்டிருந்தா  உன்னை சக்கையா புழிஞ்சிருப்பேன் டி”
“கிழிப்ப. நீ என்னை திட்டிட்டே இருக்க. நீ போ. நான் அவனையே கூப்பிட்டுக்குறேன்”, என்று சொன்னவளின் வாயை கையால் பொத்தியவன் “சொல்லிட்டே இருக்கேன்ல அவனை பத்தி பேசாதேன்னு”, என்று முறைத்தான்.
“தள்ளி போடா”, என்று அவனை தள்ளி விட்டாள் கீர்த்தி. “இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. சரி வா போகலாம்”, என்று முன்னே நடந்தான் மகேந்திரன்.
அவனுடன் நடந்தவள் “இப்ப நாம எங்க போறோம்?”, என்று கேட்டாள்.
“வேற எங்க? தூங்க தான் டி போகணும்”
“தூங்கவா? அப்ப நைட் சாப்பாடு?”
“என்னது நைட் சாப்பாடா?”
“எதுக்கு டா இப்படி அதிர்ச்சியாகுற?”
“உனக்கு இருக்குறது வயிறா? அண்டாவா டி?  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான பப்ஸ், பஜ்ஜின்னு உள்ள தள்ளுன? இப்ப அதுக்குள்ள சாப்பாடு கேக்குற? இனி நாளைக்கு தான்”
“ஏய் இரு இரு. நான் சாப்பிட்டது உனக்கு எப்படி தெரியும்?”
“ஆமா பெரிய ரகசியம் பாரு. நீ திருடி தின்னதை நான் பாத்துட்டு தான இருந்தேன்?”
“அட பாவி, உனக்கு உடம்பு முழுக்க திமிர் டா. என்னை உளவு பாத்துருக்க?”
“நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாடி குள்ளச்சி, உன்னை உளவு பாக்க? ஆனா செத்து பேயா அலையும் போது கூட உன்னோட கொழுப்பு அடங்கவே இல்லை பாரேன்”, என்று சிரித்தான் மகேந்திரன். அவனை முறைத்தாள் கீர்த்தி.

Advertisement