Advertisement

அத்தியாயம் 9

 

காலையில் மலர்ந்து

மணம் பரப்பி

மாலையில் மடியும்

பூவை போலவா

என் பள்ளி பருவ காதல்?!!!

 

அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு, விட்டால் போதும் என்று நினைத்து அறைக்குள் சென்று மறைந்தான் செழியன். சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளும் செழியனை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டாள் வளர்மதி.

 

அறைக்குள் சென்றவன் அந்த டைரியை முன்னால் வைத்து  கொண்டு அதை திறந்தான். “ஒரு வேளை இதுல என்னை பத்தி எதுவுமே எழுதி இருக்க மாட்டாளோ? வளர் தெரியாம எடுத்துட்டு வந்திருப்பாளோ? யார் இப்ப டைரி எல்லாம் எழுதுறா? ஆமா கண்டிப்பா இதுல என்னை பத்தி இருக்காது.ஓவரா ஆசை படாத”, என்று தனக்கு தானே பேசி கொண்டு அதை படிக்க ஆரம்பித்தான்.

 

அவன் நினைத்ததுக்கு மாறாக அவன் மனம் விரும்பிய படி அவனை பற்றி தான் எழுதி இருந்தாள். அதுவும் வெறும் வார்த்தையாக அல்லாமல் கவிதையாக வடித்திருந்தாள்.

 

அவன் மீதான தேடலில் அவன் மனதில் ஒரு பெரிய நிம்மதி குடி கொண்டது. அனைத்து கவிதைகளும் அவள் காதலையே அவனுக்கு உணர்த்தியது.

 

தன்னை ஒருவர் தேடும் போது அது எவ்வளவு ஆனந்தம் தரும் என்று அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். நமக்கென்று ஒரு இதயம் இருக்கும் போது மனதெல்லாம் பஞ்சு பொதி போல மென்மையாக பறக்கும். அதை தான் செழியன் உணர்ந்தான்.

 

அவனுக்கு நிகரான காதலை அவளும் அவன் மேல் வைத்ததுக்கு இதுவே சாட்சி. இருவர்  மேலும் தவறு இருக்கிறது தான். அதை நியாய படுத்தவும் முடியாது.அவள் மேல் மட்டும் பழி சொல்லவும் கூடாது.

 

பள்ளி பருவம் ஒவ்வொருவர்  வாழ்க்கையிலும் ஒரு விதமான அனுபவத்தை உருவாக்கும்.  

 

செழியன் மற்றும் மதுவின் வாழ்க்கையிலும் பள்ளி பருவம் முக்கியமான இடத்தை பிடித்தது.

 

சிறகடித்து பறக்க துடிக்கும் பருவம் அது. ஆனால் றெக்கை சரியாக உனக்கு முளைக்க வில்லை என்று யாராவது சொன்னால் அதை அவர்களால் ஒத்து கொள்ள முடியாது.

 

மதுமிதா இயற்கையிலே அமைதியான பெண். அவள் கேட்காமலே அவளுக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்தார்கள் மல்லிகாவும் வாசுதேவனும். மல்லிகாவாது தேவையானதை மட்டும் வாங்கி கொடுப்பாள். ஆனால் வாசு தேவன் தன் மகள் பார்க்கும் அத்தனையும் வாங்கி கொடுக்க நினைப்பவர்.

 

அது தான் வினை. பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுப்பது பெற்றவர்கள் கடமை. அதை வாசுதேவன் செய்ய வில்லை.மல்லிகாவையும் செய்ய விட வில்லை.

 

நினைத்தது கிடைக்கும் இறுமாப்பில் இருந்த மதுவுக்கு என்ன நினைத்தாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவானது. தன் அப்பா எதையுமே தனக்கு மறுக்க மாட்டார் என்ற எண்ணம் அவள் மனதில் பதிந்து போனது.

 

ஒரு வேளை அவள்  எதாவது கேட்டு மல்லிகா வாங்கி தர மாட்டேன் என்று சொன்னால் ஒரு வித பிடிவாதம் அவளுக்குள் உருவானது. அந்த பிடிவாதத்தால் ஒரு வேளை சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தால் போதும், வாசுதேவன் அதை வாங்கி கொடுத்து விடுவார்.

 

அதனால் அவள் அப்பா செல்லமானாள். கண்டிக்கும் தாய்க்கும் அவள் மரியாதை கொடுக்க வில்லை.

 

சென்னையில் தான் வாசுதேவன் பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தார். அவருடைய பிஸ்னஸ் பார்ட்னர் சண்முகத்தின் தங்கை தான் மல்லிகா. சண்முகத்தை காண சென்ற போது தான் மல்லிகாவை கண்டு அவள் அழகில் மயங்கி தன்னுடைய பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டார்.

 

மது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். இது வரை வாசுதேவனின் பெற்றோரை மதுவும் மல்லிகாவும் கண்டதில்லை.

 

அவருக்கு கிராமத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது, அவருடைய தந்தை காலமானார் என்று.

 

குடும்பத்துடன் அந்த ஊருக்கு பயணமானார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்டு ஒடுங்கி இருந்த அன்னைக்கு ஆறுதல் சொல்லி விட்டு ஒரு வாரத்தில் சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.

 

அதன் பின் சிறிது நாட்களிலே வாசுதேவன் பாரின் போக வேண்டி இருந்தது. இது வரை பாரின் போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தவர் இப்போது முழுதாக ஒரு வருடம் அங்கே தங்கும் நிலை வந்ததால் குடும்பத்தை நினைத்து தவித்தார்.

 

மல்லிகாவின் அண்ணன் சண்முகம் இருந்தாலாவது அவரிடம் விட்டு விட்டு சென்றிருப்பார். சண்முகமும் குடும்பத்துடன் வெளி நாட்டில் செட்டில்  ஆகி விட்டதால் வேறு வழி இல்லாமல் விழித்தார்.

 

அவர் மனம் அறிந்து அவர் அருகே வந்த மல்லிகா “இப்ப என்ன ஒரு வருஷம் தான? நொடியில் ஓடிரும். எங்களை நினைச்சு கவலையா இருந்தா எங்களை வேணா உங்க கிராமத்துல உங்க அம்மா கூட விட்டுட்டு போங்க. நீங்க வருகிற வரைக்கு நாங்க அங்க இருக்கோம்”, என்று யோசனை சொன்னாள்.

 

“நீங்க எப்படி மல்லி அந்த கிராமத்தில் இருக்க முடியும்?”, என்று கேட்டார் வாசுதேவன்.

 

“அதெல்லாம் முடியுங்க. நான் பாத்துக்குறேன்”

 

“மது ஸ்கூல்க்கு போகணுமே? அவ இங்க படிச்சிட்டு இருக்கா.திடிர்னு வேற ஊர், வேற ஸ்கூல் னா அவ ஸ்டடிஸ் பாதிக்கும் மா”

 

“இப்படி யோசிச்சா எதுவுமே செய்ய முடியாதுங்க. ஊருல நல்ல ஸ்கூல் இல்லாம போனாலும் பக்கத்துக்கு ஊருல சேப்போம். இப்ப தான் அவ பத்தாவது முடிச்சிட்டாளே? பதினொன்னு பன்னிரண்டு அங்க படிக்கட்டும்”

 

“அவ சரி சொல்லுவாளா?”

 

“இது தான் எரிச்சல் வரும். அவ வாழ்க்கையை நாம தான் இப்ப முடிவு பண்ணனும். அவளுக்கு அந்த வயசு வரலை”

 

“இல்லை மல்லி, அது வந்து…”

 

“மது இங்க வா”, என்று அழைத்தாள் மல்லிகா.

 

“என்ன மா?”

 

“நாம அப்பாவோட ஊருக்கு ஒரு வாரத்துல போக போறோம்”

 

“சரி மா, எத்தனை நாள் அங்க இருப்போம்?”

 

“இனி அங்க தான் இருப்போம். அப்பா பாரின் கிளம்புறாங்க. அவங்க வர வரைக்கு நாம இங்க தனியா இருக்க முடியாது. இதுவே அப்பாவோட ஊர்னா உன்னோட ஆச்சி இருப்பாங்க”

 

“அம்மா என்ன விளையாடுறீங்களா? நான் ஸ்கூல்க்கு போக வேண்டாமா? அதெல்லாம் வேண்டாம். அப்பா வர வரைக்கு நாம இங்கயே இருப்போம்”

 

“உங்கிட்ட யாரும் ஐடியா கேக்கலை. நாம போறோம் அவ்வளவு தான். அங்க தான் நீ ஸ்கூல் படிக்க போற. அப்பா ஒரு வருசத்துல வந்தாலும் நீ பிளஸ் டூ வரை அங்க தான் படிக்கணும்”, என்று மல்லிகா சொன்னதும் கோபத்துடன் அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள் மது.

 

“அவ குழந்தை மது, அவ கிட்ட இப்படி நடந்துக்காத. இப்ப பாரு கோபமா உள்ள போய்ட்டா”, என்றார் வாசுதேவன்.

 

“நீங்க உடனே கொஞ்ச ஆரம்பிச்சீராதீங்க. இப்போதைக்கு இது தான் தீர்வு. உங்க மக கஷ்ட படுறானு நினைச்சா நீங்க பாரின் போகவே வேண்டாம். இங்கயே இருங்க”

 

“அது எப்படி முடியும் மல்லி? நான் போயே ஆகணும்”

 

“அப்புறம் என்ன?  அவ ரெண்டு நாளில் சரியாகிருவா.நீங்க எல்லா வேலையும் செய்ங்க. இன்னும் ரெண்டு நாளில் ரிசல்ட் வருது. ஊருல எங்களை விட்டுட்டு, அவளை நல்ல ஸ்கூல்ல சேத்து விட்டுட்டு நீங்க கிளம்புங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மல்லிகா.

 

மகளின் அறை கதவையே பார்த்த படி இருந்தார் வாசுதேவன். அதன் பின் வேலைகள் வேகமாக நடந்தது.

 

இரண்டு நாளில் ரிசல்ட் வந்ததால் மது மன நிலை அதன் பக்கம் சென்றது. நல்ல மார்க் வாங்கி இருந்ததால், தன் அப்பா தன்னை தாங்கு தாங்கென்று தங்கியதால் அவள் சந்தோசமாக இருந்தாள்.

 

அதன் பின் அங்கு எல்லா வேலையையும் முடித்து விட்டு ஊருக்கு கிளம்பும் போது முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் மதுமிதா.

 

ஊருக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் உம்மென்று தான் இருந்தாள்.

 

தன்னுடைய  மறுப்பை மெளனமாக தான் மது காட்டுவாள். அமைதியாகவே அவள் கோபத்தையும் புரிய வைத்து விடுவாள்.

 

தாத்தா இறந்ததுக்கு வந்த போது சுற்றிலும் பார்வையை ஓட்டி பார்த்து கொண்டே வந்தாள். இந்த முறை அவள் மனநிலை வேறு மாதிரி இருந்தது. பாசத்துக்குரிய அப்பா ஊருக்கு செல்வது, பிரண்ட்ஸ் விட்டு வந்தது, புது ஊர், புது ஸ்கூல் எப்படி இருக்குமோ என்ற கவலை பயம் அனைத்தும் சேர்ந்து அவள் மனதை வெகுவாக சுருட்டி போட்டது.

 

பெற்றவர்களுக்கும் அதே கவலை என்பதால் அவளை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவிட்டனர்.

 

அவர்கள் ஊருக்கு செல்லும் சாலையில் திரும்பி சிறிது தூரம் சென்றதும் இரண்டு இளைஞர்கள் அந்த பாதையில் முட்களை போட்டு அடைத்த படி நின்றனர்.

 

அவர்களை கண்டு வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிய வாசுதேவன் “ஏன் தம்பி வழியை அடைக்கிறீங்க? நாங்க ஊருக்கு போகணுமே”, என்றார்.

 

“இந்த வழில தண்ணி குழாய் போடுறதுக்கு தோண்டி போட்டுருக்காங்க ஐயா. இப்படி போனா கண்டிப்பா போக முடியாது. பிரசிடெண்ட் ஐயா தான் இந்த வழியை அடைச்சா  எல்லாருக்கும் உதவியா இருக்கும்னு சொன்னார். அதான் அடைச்சிட்டு இருக்கோம்”, என்று பதில் சொன்னான் செழியன்.

 

“ஓ அப்ப நாங்க எப்படி போறது?”

 

“அதோ அந்த வழில போங்க. அதுவும் நம்ம ஊருக்கு போற வழி தான்”

 

“சரி தம்பி நீங்க ரெண்டு பேரும் என்ன படிக்கிறீங்க? என்ன பேரு?”

 

“என் பேரு இளஞ்செழியன், இவன் சின்ன துரை. ரெண்டு பேரும் பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிருக்கோம். காலேஜ்ல சேரனும்”

 

“ஓ நல்ல விஷயம்.மார்க் எல்லாம் நல்லா வாங்கிருக்கீங்களா?”

 

“நல்லா மார்க் தான் வாங்கிருக்கோம். நீங்க ஊருக்குள்ள தான் போகணுமா?”

 

“ஹ்ம்ம் ஆமா, நான் சிதம்பரத்தோட பையன்”

 

“சிதம்பரம் தாத்தா பையனா? தாத்தா உங்களை பத்தி நிறைய சொல்லிருக்காங்க. பாவம், அவர் இறந்தது கஷ்டமா இருந்துச்சு. இப்ப பாட்டி ஒத்தைல இருக்கு”

 

“அதுக்கு தான் நாங்க வந்துருக்கோம். இங்க நல்ல ஸ்கூல் எது? நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?”

 

“எட்டாப்பு வரைக்கும் உள்ளூர்ல தான் படிச்சோம்.அப்புறம் பக்கத்து டவுனுக்கு தான் போகணும்”

 

“சரி தம்பி, நீங்க வேலைய பாருங்க”, என்று சொல்லி விட்டு காரில் ஏறி விட்டார்.

 

செழியனும் சின்ன துரையும் காரை பார்த்து கொண்டே நின்றனர்.

 

காருக்குள் இருந்த மது, தன்னுடைய தந்தை காரை நிறுத்தியதில் இருந்து அங்கு நடந்தவற்றை பார்த்து கொண்டு தான் இருந்தாள்.

 

அவள் கண்ணில் முதலில் பட்டது செழியனின் தோள் பக்கம் இருந்த சட்டை கிழிசல் தான். ஏனோ அது அவள் மனதில் பதிந்து போனது. அது பதிந்ததால் அவன் பேசியதை கவனமாக கேட்டாள்.

 

தன் அப்பாவிடம் மென்மையாக பேசிய அவன் மேல் ஒரு தனி கவனம் வந்தது. “பாக்க எங்க ஸ்கூல் பசங்க மாதிரி நீட்டா இருக்கான். ரொம்ப சாப்டா பேசுறான். அப்புறம் ஏன் கிழிஞ்ச சட்டையை போட்டிருக்கான்?”, என்று நினைத்தாள் மது.

 

கார் கிளம்பியதும் அவனை திரும்பி திரும்பி பார்த்த படி தான் சென்றாள் மது.

 

அவர்கள் சென்றவுடன் சின்ன துரையை திரும்பி முறைத்தான் இளஞ்செழியன். “எதுக்கு டா என்னை முறைக்கிற?”, என்று கேட்டான் சின்ன துரை.

 

“முறைக்காம என்ன செய்ய? ஒரு பெரிய மனுஷன் வந்து நம்ம கிட்ட பேச்சு கொடுக்குறார். நீ பதிலே சொல்லாம வாயை மூடிட்டு இருக்க?”

 

“அதான் நீ பதில் சொன்னியே டா?”

 

“நம்ம ரெண்டு பேரையும் தான கேட்டார்? நீயும் சொல்லணும்ல? நீ என்ன பண்ணிட்டு இருந்த?”

 

“ஒரு முக்கியமான வேலை  செஞ்சிட்டு இருந்தேன் டா”

 

“முக்கியமான வேலையா? அது என்ன?”

 

“காருக்குள்ள ஒரு பொண்ணு இருந்துச்சு டா. பாக்க எப்படி இருந்தா தெரியுமா? அவளை தான் பாத்துட்டு இருந்தேன்”

 

“என்னது பொண்ணா, நான் பாக்கலையே? ஒரு அம்மா தான் வெளிய எட்டி பாத்தாங்க”

 

“இருந்தா டா. ஆள் சூப்பரா இருந்தா. வாறியா ஊருக்குள்ள போவோம்”

 

“இன்னும் வேலை முடியலை. அப்புறம் அவ அழகா இருந்தா நீ ஏன் அவளை பாக்குற?”

 

“நீ ஒரு வேஸ்ட் பெல்லோ டா. சும்மா பாத்தா தப்பா?”

 

“அவ அப்பாவை பாத்த தான? மிலிட்டரி காரர் ,மாதிரி இருக்கார். அடி வாங்காம இருந்தா சரி தான். வா வேலையை பாப்போம்”, என்று சொல்லி விட்டு தன் வேலையை தொடர்ந்தான் செழியன்.

 

காரில் இருந்து இறங்கிய மது யாரிடமும் பேசாமல் முறைத்து கொண்டே உள்ளே சென்றாள். “வா கண்ணு”, என்று அழைத்த பாட்டியையும் முறைத்து கொண்டே நின்றாள்.

 

“அவளுக்கு இங்க வர விருப்பம் இல்லை மா. அதான் அப்படி இருக்கா”, என்றார் வாசுதேவன்.

 

“சரிப்பா உள்ளாரா வா, நீயும் வா மா மல்லிகா”, என்று அழைத்தாள் கோதை பாட்டி.

 

 

Advertisement