Advertisement

வாசுதேவன் கோதையிடம் விசயத்தை சொன்னதும் “உன்அப்பா இருந்த வரைக்கும் உங்களை எல்லாம் பாக்க விடலை. இனியும் உங்களை பிரிஞ்சு இருக்க முடியாம அங்க வந்துரலாமான்னு கூட யோசிச்சேன் பா. இப்ப இங்கயே என் மருமகளும் பேத்தியும் இருப்பாங்கன்னா அதை விட சந்தோசம் வேற என்ன வேணும்? நான் நல்லா பாத்துக்குவேன் ராசா”, என்றாள் பாட்டி.

 

அன்று அவர்களுக்கு சாப்பாடு பறி மாறி அன்பாக  பார்த்து கொண்டாள் கோதை பாட்டி. அன்று இரவு தூங்கும் போது மதுவின் அறைக்குள் படுக்க வந்தாள் பாட்டி.

 

நீ எதுக்கு இங்க வர? உன் ரூம்ல போய் தூங்கு. இது என்னோட ரூம்”, என்றாள் மது.

 

இந்த வயசுலே உனக்கு எதுக்குட்டி தனி ரூம்? தினமும் நீ என் கூட தான் படுக்கணும். ஒழுங்கா படு”, என்று அரட்டினாள் பாட்டி.

 

கழுத்தை ஒரு சிலுப்பு சிலுப்பி விட்டு படுத்தாள் மது.

 

பாத்து, கழுத்து எலும்பு முறிஞ்சிர போகுது. இந்த வயசுலே இவ்வளவு கோபமா? இந்த கோதை கிட்ட வந்துட்டல்ல? இனி நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன பாட்டி அவள் அருகில் படுத்தாள்.

 

எதோ வெறுமையான மனநிலையை உணர்ந்தாள் மது. பிடிக்காத ஊர், பிடிக்காத இடம் என்று மனது முழுவதும் வெறுப்பாக இருந்தது.

 

அந்த மனநிலையிலும் அவளை அறியாமலே செழியன் நினைவு வந்தது. நான் எல்லாம் லைட்டா சுருங்கி போனாலே அந்த டிரெஸ்ஸை எல்லாம் போடா மாட்டேன். அவன் ஏன் கிழிஞ்சி போனதை எல்லாம் போட்டுருக்கான். ரொம்ப கஷ்ட படுற குடும்பமோ? காலேஜ் எல்லாம் படிக்க போறான். அங்க எல்லாம் கிழிஞ்சதை போட்டா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களே?”, என்று அவனை பற்றி யோசித்த படியே தூங்கி போனாள்.

 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. மது மல்லிகா வாசுதேவன் மூவரும் கிளம்பி செழியன் படித்த பள்ளிக்கு சென்றார்கள். மது அதிக மார்க் எடுத்திருந்தால் அங்கேயே அவள் விரும்பிய பாட பிரிவு கிடைத்தது.

 

ஆனால் வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு கால் மணி நேரமாவது நடக்க வேண்டும் என்பதால் அவளுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்க முடிவு செய்தார் வாசுதேவன்.

 

பின் அவளுக்கு பிடித்த சைக்கிளை வாங்கி காரின் மேல் கட்டி கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

 

அடுத்த ரெண்டு நாளில் வாசுதேவன் கிளம்புவார் என்பதால் அவருடனே ஒட்டி கொண்டே இருந்தாள் மது. அவருக்கும் அவளை பிரிந்து இருப்பது வருத்தமாக தான் இருந்தது. “போன் இருக்கு குட்டி. நீ எப்ப வேணும்னாலும் டேடி கிட்ட பேசு என்ன?”, என்று ஆறுதல் சொல்லி கொண்டே இருந்தார்.

 

அவர் கிளம்பும் நாளில் ஏங்கி ஏங்கி அழுதாள் மது. ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து விட்டு போவதுக்குள் அவர் தான் சோர்ந்து விட்டார். அவர் சென்ற பின்னும் அழுது அழுது ஓய்ந்து போனவள் அப்படியே காச்சலில் விழுந்தாள்.

 

“மல்லிகா ரெண்டு நாளில் காச்சல் சரியாகிரும். நீ இவளுக்கு காச்சல்னு வாசு கிட்ட சொல்லிராத. அப்புறம் அவனும் வருத்த படுவான்”, என்று கோதை சொன்னதும் மல்லிகா “சரி அத்தை”, என்று சொன்னாள்.

 

அடுத்த இரண்டு நாளில் அவளுக்கு ஜுரம் விட்டு விட்டது. எப்போதுமே அதிகம் மது பேச மாட்டாள். அவள் பேச்சு வாசுதேவனிடம் மட்டும் தான் இருக்கும். இப்போது அவரும் இல்லாமல் போனதால் இன்னும் அமைதியாகி விட்டாள்.

 

கோதை பாட்டி எவ்வளவு பேசினாலும் ஒன்று இரண்டு வார்த்தையில் பதில் சொல்லி அவளுடைய  பி. பி யை சோதிப்பாள். அறிவுரை என்று கோதை எவ்வளவு சொன்னாலும் அதை மது காதில் வாங்கி கொள்ளவே இல்லை. கோதையிடம் அவள் அதிகம் பேசுவதே இல்லை.

 

காச்சல் சரியானதும் புது சைக்கிளை எடுத்து கொண்டு அன்று தான் முதல் முறையாக வெளியே செல்ல நினைத்தாள். அவள் செய்கையை பார்த்த மல்லிகா, “இந்த வெயிலுக்குள்ள போகாத மது. சாயங்காலம் போ”, என்றாள்.

 

“இப்ப ஒன்னும் வெயில் அடிக்கல. சாயங்காலம் போனா ஆச்சி எதுக்கு இருட்டு நேரத்துல போறன்னு சொல்லுவாங்க. நான் போறேன் போ”, என்று சொல்லி விட்டு சென்றே விட்டாள். ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு தன் வேலையை பாக்க போனாள் மல்லிகா.

 

சைக்கிளை எடுத்து கொண்டு வந்து விட்டாளே ஒழிய அவளுக்கு இங்கு எந்த இடமும் தெரியாது. முதலில் இரண்டு முறை அவர்கள் வீடு இருந்த தெருவையே வட்டமிட்டாள். அதுவும் போர் அடிக்க பக்கத்து தெருவுக்குள் வந்தவள் அப்படியே சுற்றி வீடு இல்லாத பகுதிக்கு வந்தாள்.

 

அங்கு இரண்டு மூன்று கோயில் இருப்பதை பார்த்தவள் மெதுவாக சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்தாள்.

 

“அம்மன் கோவில்”, என்று எழுதி இருந்த கோயிலை பார்த்தாள். அது பூட்டி இருந்தது. வெளியே இருந்தே கும்பிட்டு விட்டு அடுத்த கோவிலுக்குள் நுழைந்தவன் அரண்டு விட்டாள்.

 

அங்கிருந்த சிலை கருப்பாக பெரிய அரிவாளுடன் காட்சி அளித்தது. இப்படி ஒரு சிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதால் அவள் முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்து விட்டது.

 

அங்கிருந்த அமைதி ஒரு வித அச்சத்தை கொடுத்தது. மெதுவாக நடந்து வந்தவள் எதிரே  வந்த ஆள் மீது மோதி “ஆ அம்மா”, என்று கத்திய படியே கீழே விழ போனாள்.

 

அவளை தாங்கி பிடித்து நேராக நிப்பாட்டிய செழியன் “ஏய், ஏன் கத்துற? என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

 

அவன் குரலில் கண் திறந்து அவனை பார்த்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள்.

 

“இங்க எதுக்கு தனியா வந்த?”, என்று கேட்டான் செழியன்.

 

“சும்மா சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன். இந்த சிலையை பாத்து பயந்துட்டேன். இந்த சாமி பாக்க பயமா இருக்கு”, என்றாள் மது.

 

“இது கருப்பண்ண சாமி. பாக்க அப்படி தான் இருக்கும். சாமி பாத்து எல்லாம் நாம பயப்பட கூடாது. வா நான் கூட்டிட்டு போறேன்”,என்று சொல்லி முன்னே நடந்தான்.

 

ஒரு வித தயக்கத்துடன் அவன் பின்னே சென்றாள் மது.

 

அவளுக்கு சாமி கும்பிட சொல்லி கொடுத்தவன் “இப்ப பயமா இருக்கா?”, என்று கேட்டான்.

 

இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள். “இனி இந்த பக்கம் வராத வீட்டுக்கு போ”, என்ற செழியன் அங்கிருந்த திண்டில் தாவி ஏறி அமர்ந்தான்.

 

அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மது. “என்னாச்சு வீட்டுக்கு போகலையா?”, என்று கேட்டான் செழியன்.

 

“ஹ்ம்ம் போகணும். நீ போகலையா?”

 

“நீயா??? நீங்கன்னு சொல்லணும். நான் போகலை. நீ தான் நேத்து கார்ல வந்தியா?”

 

“ஹ்ம்ம் ஆமா, நீங்க என்னை பாக்கலையா?”

 

“இல்லை, உங்க அப்பா கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்”

 

“ஹ்ம்ம்”,என்று சொல்லி அவனை பார்த்தாள். இன்றும் கிழிந்த சட்டையை தான் போட்டிருந்தான்.

 

“எதுக்கு கிழிஞ்ச சட்டையை போட்டுருக்கீங்க? யாரவது பாத்தா கிண்டல் பண்ணுவாங்க தான?”

 

“நான் மரம் வெட்ட போறேன். இங்க நல்ல சட்டையா போட்டுட்டு வர முடியும்? வெளிய எங்கயாவது போனா நல்லா துணி போடுவேன். சரி இனி இங்க தான் நீ இருக்க போறியா?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“உன் பேர் என்ன?”

 

“என் பேர் மதுமிதா. கே வீ ஸ்கூல்ல தான் படிக்க போறேன்”

 

“எங்க ஸ்கூல் தான் அது. நல்லா சொல்லி தருவாங்க. எந்த கிளாஸ்?”

 

“லவன்த் பர்ஸ்ட் குரூப்”

 

“நானும் அந்த கிளாஸ் தான் படிச்சேன்.  நல்லா சொல்லி தருவாங்க. இது வரைக்கும் எங்க படிச்ச?”

 

“சென்னைல படிச்சேன். அப்பா பாரின் போறாங்க. அதான் இங்க வந்துட்டோம்.

உங்க போட்டோவை ஸ்கூல்ல பாத்தேன். பர்ஸ்ட் மார்க்ன்னு போட்டுருந்தது”

 

“ஹ்ம்ம் பாத்தியா? இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு உன் போட்டோவும் அங்க வரும்னு நினைச்சு படி”

 

“சரி இப்ப எங்க போய் மரம் வெட்ட போறீங்க?”

 

“அதோ அந்த காட்டுக்குள்ள போவோம்”

 

“தனியாவா?”

 

“ஏன் பிரண்டு சின்னதுரை வருவான்”

 

“அங்க பயமா இருக்காதா?”

 

“பயமெல்லாம் இருக்காது. நாங்க மரம் வெட்டிட்டு தேன் எடுப்போம். அப்படியே தட்டோட சாப்பிட நல்லா இருக்கும். அதுக்கு தான் லீவ் நாள் இங்க வருவோம்”

 

“நானும் வரட்டுமா?”

 

“அங்க ரொம்ப முள்ளா இருக்கும். எங்களுக்கு பழகிருச்சு. நீ இங்கயே இரு. நாங்க வரும் போது உனக்கும் கொண்டு வரோம்”

 

“வர ரொம்ப நேரம் ஆகுமா? இங்க தனியா இருக்க பயமா இருக்கே”

 

“அப்படியா? சரி அதோ என் பிரண்ட் வாரான். நாங்க போய் முதல்ல உனக்கு தேன் எடுத்துட்டு வரோம். நீ போன அப்புறம் விறகு வெட்டிக்கிறோம்”

 

“ஹ்ம்ம் சரி”, என்று அவள் சொல்லும் போது அங்கு வந்த சின்னத்துரை அவளை பார்த்து ஈ என்று சிரித்தான்.

 

செழியன் பால்வடியும் முகத்தில் இருப்பான். ஆனால் சின்னதுரையோ கருப்பாக கொஞ்சம் பெரிய மனிதன் போல இருப்பான்.

 

அவன் தோற்றத்தை வைத்து “ஹாய் அண்ணா”, என்றாள் மது. இதயம் வெடித்தது போன்ற உணர்வை அடைந்த சின்னதுரை செழியனை பாவமாக பார்த்தான்.

 

அவனோ வேறுபக்கம் பார்த்து கொண்டு சிரிப்பை அடக்க போராடினான். தூரத்தில் இருந்தே அவளை பார்த்து விட்ட சின்னதுரை அவளிடம் பேச வேக வேகமாக ஓடி வந்தான். ஆனால் இப்படி அண்ணா என்று அழைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

இனி என்ன பண்ண என்று நினைத்து அவளை பார்த்து லேசாக சிரித்து விட்டு செழியனை பார்த்து “போகலாம் டா”, என்றான்.

 

“நீ இங்கயே இரு மது. நாங்க இப்ப வந்துருவோம்”, என்று சொல்லி விட்டு சென்றான் செழியன்.

 

அவன் அமர்ந்திருந்த திண்டில் இப்போது மது ஏறி அமர்ந்தாள். சின்னதுரை மரம் வெட்ட ஆரம்பிக்க, “முதலை தேன் தட்டை தேடு டா. மது கேட்டா”, என்றான் செழியன்.

 

“அவளுக்கு வேணும்னா நீயே கொடு. பாவி, சைட் அடிக்கலாம்னு பாத்தா அண்ணனு கூப்பிடுறா”, என்றான் சின்னதுரை.

 

“நீ பாக்க அப்படி இருந்தா என்ன பண்றது டா. என்னை வா போ னு சொன்னா. அப்புறம் தான் வாங்க போங்கன்னு சொல்றா”

 

“ஆனா அண்ணனு உன்னை கூப்பிடலை தான?”

 

“உனக்கு உன் கவலை. போடா. சரி அவ அங்க பயந்துட்டு நிப்பா.நாம தேன் எடுத்து கொடுக்கலாம்”

 

“அதோ அந்த மரத்துல இருக்கு பாரு. நீயே கொண்டு போய் கொடு நான் வரலை”, என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்த்தான் சின்னதுரை.

 

தேன் தட்டை எடுத்து கொண்டு அவள் அருகே வந்தான் செழியன். “இந்தா மது சாப்பிடு.டேஸ்ட்டா இருக்கும்”, என்று சொல்லி அவள் கையில் கொடுத்தான்.

 

“இல்லை வேண்டாம். பூச்சியா இருக்கு”, என்றாள் மது.

 

“அதெல்லாம் செத்து போய்ட்டு. நீ இதை மட்டும் சாப்பிடு”, என்று சொல்லி அவளுக்கு எடுத்து கொடுத்தான்.

 

“ஹ்ம்ம் நல்லா இருக்கு”, என்று சொல்லி அனைத்தையும் காலி செய்தாள். “சரி மது, நீ வீட்டுக்கு போ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் செழியன்.

 

வீட்டுக்கு வந்த மது அன்று முழுவதும் நடந்ததையே நினைத்து கொண்டு அடுத்த நாளும் அதே இடத்தில் காத்திருந்தாள் அவனுக்காக.

 

தாகம் தணியும்……

 

Advertisement