Advertisement

அத்தியாயம் 8

 

கனவுகள் பல கண்டு

கற்பனையில் திளைத்த

என் காதலின்

தாகங்கள் அனைத்தும்

எப்போது தீருமோ?!!!

 

வளர் கொடுத்த காகிதத்தில் அவள் பெரியதாக ஒன்றும் எழுதி விட வில்லை.

 

செழியனும் மதுவும் சிறு வயதிலேயே விரும்பியதாகவும், இப்போது செழியன் மது ஞாபகத்திலே இருப்பதாகவும், அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தாள்.

 

ஆனால் அவர்கள் எதனால் பிரிந்தார்கள் என்று அவனுக்கும் தெரியாது. வளருக்கும் தெரியாது.

 

அது எதனால் என்று தெரியாமல் போனாலும் அவர்களை சேர்த்து வைத்தே தீர வேண்டும் என்று நினைத்து தான் அவனை காண வந்தான். ஆனால் எப்படி அவனிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று மித்ரனுக்கு புரிய வில்லை.

 

அடுத்தவர்களின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது மித்ரனுக்கு பிடிக்காத விசயம். ஆனால் இன்று தன் தோழிக்காக முடிவெடுத்து வந்து விட்டான்.

 

ஆனாலும் உள்ளுக்குள்ளே பயம், செழியன் அவனை அவமான படுத்தி விடுவானோ என்று.

 

என்ன யோசித்தும் விடை கிடைக்காததால் கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு ஆஃபீஸ் உள்ளே நுழைந்தான்.

 

அவனை பார்த்ததும் வந்த கிளர்க் “என்ன ஸார் வேணும்?”, என்று கேட்டான்.

 

“நான் வி.எ.ஓ சாரை பாக்கணும்”, என்றான் மித்ரன்.

 

“நிலம் விசயமாவா சார்?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“சரி இருங்க. இன்னொரு ஆள் கிட்ட பேசிட்டு இருக்காங்க. அவர் வந்த அப்புறம் நீங்க போங்க”, என்று அவன் சொல்லி விட்டு சென்றான்.

 

“திரும்பி போய்ருவோமா?”, என்று யோசித்தான் மித்ரன்.

 

மதுவுக்காக பேச வேண்டும் என்று ஒரு மனதும், செழியன் இதற்கு என்ன சொல்வான் என்ற பயமும் அவனை வெகுவாக அலைக்கழித்தது.

 

அவன் யோசிக்கும் போதே ஆள் வெளியே வர இவன் உள்ளே சென்றான். இவனை கண்டதும் செழியனின் புருவம் உயர்ந்தது. அடுத்த நிமிடம் தன்னை சரியாக்கி கொண்டு “உக்காருங்க”, என்றான்.

 

மித்ரனோ செழியனை கண்டு வியப்பின் எல்லைக்கே போனான். அவனுடைய மிடுக்கும் கம்பீரமும் மித்ரனையே அசைத்து பார்த்தது. “இவனை கண்டு மது மயங்காமல் இருந்தால் தான் அதிசயம்”, என்று எண்ணி கொண்டு அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான்.

 

அவன் புன்னகையில் தைரியம் வர பெற்ற மித்ரன் “நான்…”, என்று ஆரம்பித்தான்.

 

“நீங்க மித்ரன், மதுவோட பிரண்ட்”, என்றான் செழியன்.

 

“உங்களுக்கு என்னை தெரியுமா?”

 

“ஹ்ம்ம் வளர் சொல்லிருக்கா .என்ன விசயமா என்னை பாக்க வந்தீங்க?”

 

“அது அது வந்து…”

 

“எதுக்கு தயக்கம்? என்ன உதவினாலும் கேளுங்க”

 

“அது தான் எப்படி கேக்கன்னு தெரியலை. நான் பேச வந்தது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை”

 

“எனக்கு பிடிக்காத விசயம் நீங்க என்ன பேச போறீங்க?”

 

“நான் மதுவை பத்தி  பேசணும்”

 

“மதுவை பத்தியா? மது உங்க கிட்ட எதுவும் சொன்னாளா?”

 

“அவ சொல்லலை. ஆனா நானா கண்டு பிடிச்சேன்”

 

“ஓ”

 

“நான் இது பத்தி உங்க கிட்ட பேசலாம் தான?”

 

“ஹ்ம்ம் பேசலாம். ஆனா இப்ப இல்லை. ஒரு பத்து நிமிசம் வெளிய வெயிட் பண்றீங்களா? நான் பெர்மிஷன் சொல்லிட்டு வரேன்”

 

“ஹ்ம்ம் சரி ஸார்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் மித்ரன்.

 

அவன் வெளியே சென்றதும் வாசலையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் செழியன். அவனுக்கு குழப்பமாக இருந்தது.  “இந்த மித்ரன் எதுக்கு வந்திருக்கான்? என்னை பத்தி இவனுக்கு யார் சொல்லிருப்பா. நான் இவன் கிட்ட இப்ப என்ன பேசணும். எங்களை பத்தி இவனுக்கு எந்த அளவுக்கு தெரியும்?”, என்று யோசித்தான்.

 

“இப்ப இவனும் மதுவும் இந்த ஊருக்கு வந்திருக்குறது நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்ன செய்யணும்னு தெரியாம தவிக்கிறேனே?”, என்று நினைத்து கொண்டவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றி விட்டு வெளியே வந்தான். அங்கே பியூனிடம் சொல்லி விட்டு மித்ரனை காண சென்றான்.

 

அந்த ஆலமரத்தின் கீழே இருந்த திண்டில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். மித்ரனை பார்த்து புன்னகைத்த இளஞ்செழியன் “இப்ப சொல்லுங்க என்ன விஷயம்? உங்களுக்கு என்ன தெரியணும்?”, என்று கேட்டான்.

 

“இல்லை எனக்கு பெருசா ஒன்னும் தெரியாது. ரெண்டு பேரும் லவ் பண்ணி பிரிஞ்சிட்டிங்கன்னு தெரியும். ஆனா மது உங்க நினைப்புல தான் இருக்கா. ஆனா நீங்க….”

 

“என் வாழ்க்கையிலயும் மதுவை தவிர வேற யாரும் இல்லை”

 

“ரொம்ப சந்தோசம். அப்ப மதுவை கல்யாணம் பண்ணி வாழலாம்ல? எதுக்கு பிரிஞ்சி இருக்கணும்?”, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் மித்ரன்.

 

“உங்களுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும்னு எனக்கு தெரியாது மித்ரன். எல்லா விஷயத்தையும் என்னால உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கவும் முடியாது. என் மனசுல மது மேல உள்ள காதல் வத்தாம அப்படியே தான் இருக்கு. ஆனா மது மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியாது. அவ என்னை வாழ்க்கையிலே வேண்டாம்னு நினைக்கலாம் இல்லையா?”

 

“ஹா ஹா, குட் ஜோக். அவ உங்களை வேண்டாம்னு நினைப்பாளா? எனக்கு பல விஷயம் அவளை பத்தி புரியாமலே இருந்தது. ஆனா அவ காதலை பத்தி தெரிஞ்ச பிறகு இத்தனை வருஷம் புரியாம இருந்த எல்லாமே புரியுது. பதினொன்னு முடிச்ச வருஷம் தான் நான் அவளை பாத்தது. அப்ப எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பா. என் கூட தான் ஸ்கூல்க்கு வருவா. ஆனா பேசவே மாட்டா”, என்று மித்ரன் சொன்னதும் அது எதனால் என்று உணர்ந்த செழியனின் இதயத்தில் ரத்தம் வடிந்தது.

 

“எல்லாம் என்னால தான். நான் தான் பாவி. சிறகடிச்சு பறக்க வேண்டிய பறவையை சிறகை ஓடிச்சு முடக்கி போட்டுட்டேன்”, என்று எண்ணி அவனுக்குள்ளே ஒரு வலி உருவானது. செழியனின் மனநிலையை பற்றி உணராமல் மித்ரன் பேசி கொண்டே இருந்தான்.

 

“பன்னிரெண்டாம் வகுப்பு பாதில தான் அவ என்கிட்ட பேசவே ஆரம்பிச்சா தெரியுமா?  நான் அவளை பார்த்து கொஞ்ச நாள் முன்னாடி தான் என் தங்கச்சி ஒரு விபத்துல இறந்து போனா. அதனால மதுவை நான் என் தங்கச்சியா தான் நினைச்சேன். ஆனா மது என் கூட சரியா பேசவே மாட்டா. கொஞ்ச நாள் எங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கி இருந்தாங்க. அப்புறம் வேற இடம் போய்ட்டாங்க. ஆனாலும் தினமும் அவளை ஸ்கூல்ல பாப்பேன். அப்ப அவளோட ஒதுக்கத்துக்கான அர்த்தம் புரியலை. ஆனா இப்ப புரியுது. உங்களை பிரிஞ்சு வந்ததுனால தான் அப்படி ஆகிட்டா போல? அப்புறம் காலேஜ்லயும் ஒண்ணா தான் இருப்போம். அப்பா கொஞ்சம் நார்மலா ஆனா. ஆனா கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்பா. ஆனா சூப்பரா படிப்பா”

 

…..

 

“ஆனா சில டைம் அழுவா. காரணம் கேட்டா சொல்லவே மாட்டா. எங்க ஹாஸ்ப்பிட்டல்லே ஜாப் இருக்கு. ஆனா அவ கவர்ன்மென்ட் வேலைக்கு அப்ளை பண்ணா. ஆனா அது நல்ல விஷயம் தான். ஆனா அங்க கிடைச்ச போஸ்டிங் எல்லாம் விட்டுட்டு இங்க வந்தா. இப்ப எனக்கு என்ன தோணுது தெரியுமா? அவ உங்களுக்காக தான் இங்க வந்துருக்காளோன்னு தோணுது சார்”

 

“அப்படியும் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம் மிஸ்டர் மித்ரன். எதையும் அவசர பட்டு செய்யவோ உடனே முடிவு எடுக்கவோ நான் பழைய செழியன் இல்லை.மதுவே பொறுமையா முடிவு எடுக்கட்டும்”

 

“அவ முடிவை விடுங்க. நீங்க என்ன சொல்றீங்க? அவளை கல்யாணம் பண்ண உங்களுக்கு சம்மதமா?”

 

“நான் தான் சொன்னேனே? அவளை தவிர வேற வாழ்க்கை எனக்கு இல்லை. ஆனா அவங்க அப்பா ஒத்துக்க மாட்டார்”

 

“என்னது மாமா வா? அவருக்கு உங்க காதல் பத்தி தெரியுமா?”

 

“ஹ்ம்ம், அதனால தான் சொல்றேன். அவர் ஒத்துக்க மாட்டார்”

 

“ஒரு வேளை அவர் ஒத்து கிட்டா?”

 

“ஒரு சான்ஸாவது கிடைக்காதான்னு காத்துட்டு இருக்கேன். நான் எப்படி அவளை வேண்டாம்னு சொல்லுவேன்? சரி எனக்கு வேலைக்கு நேரம் ஆகிட்டு,. நான் கிளம்புறேன்.என் தலை எழுத்து படி எல்லாம் நடக்கட்டும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் செழியன்.

 

வெகு நேரம் அதே இடத்தில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்த மித்ரன் பின் ஒரு முடிவுடன் வீட்டை நோக்கி சென்றான்.

அன்று  மாலை வளரிடம் “உங்க அண்ணன் கிட்ட பேசுனேன்”, என்றான் மித்ரன்.

 

ஆச்சர்யமாக அவனை பார்த்த வளர் “என்ன பேசுனீங்க? அண்ணா என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள்.

 

தான் பேசியதை மித்ரன் சொன்னதும் அவனை முறைத்தாள் வளர். அதை கண்டு புருவம் உயர்த்தியவன் “எதுக்கு முறைக்கிற?”, என்று கேட்டான்.

 

“பின்ன நேரடியா போய் அண்ணா கிட்ட கேட்ருக்கீங்க? அவங்க உங்களுக்கு எப்படி தெரியும்னு யோசிக்க மாட்டாங்களா?”

 

“அதெல்லாம் சமாளிச்சிக்கலாம். அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும்”, என்று சொல்லி விட்டு யோசனையில் ஆழ்ந்தான் மித்ரன்.

 

பின் ஒரு முடிவுடன் வாசுதேவனை காண சென்றான். “வா மித்ரா, பசிக்குதா?”, என்று பாசமாக விசாரித்தார் வாHIசுதேவன்.

 

“இல்லை மாமா, மது வந்த அப்புறம் சாப்பிடுறேன். நீங்க சாப்டீங்களா?”

 

“நான் சாப்பிட்டேன்.உங்க அத்தையும் சாப்பிட்டாச்சு”

 

“ஹ்ம்ம் சரி, அப்பா கால் பண்ணாரா?”

 

“ஹ்ம்ம் கோகுல் தான் தினமும் போன் செய்றானே? நீ  தான் அங்க போய்ட்டா எங்களை எல்லாம் மறந்துருவ?”

 

“என்ன மாமா செய்றது? உங்க பிரண்டு ஹாஸ்ப்பிட்டல் பொறுப்பை எல்லாம் என்கிட்டே கொடுத்துட்டு நிம்மதியா ரெஸ்ட் எடுக்குறார். எல்லா வேலையும் என் தலைல தான்”

 

“உன்னால முடியும் மித்ரா. சரி எப்ப கல்யாண சாப்பாடு போட போற?”

 

“அதுக்கு என்ன மாமா அவசரம்?”

 

“காலா காலத்துல கல்யாணம் பண்ணனும் பா”

 

“ஏன் மாமா பையன் என்னையே கல்யாணம் பண்ண சொல்றீங்க? என் வயசு தான மதுவுக்கும்? அவ கல்யாணத்தை பத்தி யோசிக்கலையா மாமா?”

 

 

“நான் வேணா அப்பாவை நல்ல மாப்பிள்ளையா பாக்க சொல்லட்டுமா மாமா? ஏற்கனவே அப்பா சொல்லிட்டு தான் இருக்காங்க”

 

“அதெல்லாம் வேண்டாம் மித்ரா”

 

“ஏன் மாமா? மதுவுக்கு கல்யாணம் பண்ண வேண்டாமா? பண்றதுல உங்களுக்கு விருப்பம் இல்லையா?”

 

“ஒரே மகளுக்கு  கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எந்த அப்பனுக்கு தான் ஆசை இருக்காது? அதுக்கு தான் எனக்கு கொடுத்து வைக்கலையே?”

 

“என்ன மாமா சொல்றீங்க?”

 

“என்னத்தை சொல்ல? நாம மாப்பிள்ளை பாத்தாலும் உன் பிரண்ட் கட்டிக்கணுமே? அவ மாட்டேன்னு தான் சொல்லுவா”

 

“கல்யாணம் வேண்டாம்னு எல்லா பொண்ணுங்களும் சொல்ல தான் செய்வாங்க மாமா. நாம தான செஞ்சு வைக்கணும். கூட பிறக்காம போனாலும் மது எனக்கு தங்கச்சி. அவ கிட்ட நான் பேசுறேன் மாமா”

 

“நீ பேசுனாலும் அவ கேக்க மாட்டா பா”

 

“ஏன் மாமா, அது எப்படி வேண்டாம்னு சொல்லுவா. சரியான காரணம் கேட்டா அவ சொல்லுவா மாமா”

 

“காரணம் தான் எங்களுக்கே தெரியுமே”

 

“தெரியுமா? அப்புறம் என்ன, பேச வேண்டியது தான?”

 

“அது முடியாது பா”

 

“எனக்கு புரியவே இல்லை மாமா. எனக்கு தெரிஞ்சு அவ யாரையும் லவ் பண்ணலை. லவ் பண்ணாலும் நீங்க ஒத்துக்காம இருக்க மாட்டிங்க? வேற என்ன தான் காரணமா இருக்க முடியும்?”

 

“அவ லவ் பண்றாளா இல்லையானு என்னால சொல்ல முடியாது. ஆனா அவ ஒருத்தனை தான் கட்டிப்பா. அந்த ஒருத்தனை கல்யாணம் செஞ்சு வைக்க என் மனசு ஒத்துக்க மாட்டிக்கு”

 

“நீங்க சொல்றது எனக்கு புரியலை மாமா. அது என்னனு தெளிவா சொல்லுங்கன்னு கேட்டு உங்களை சங்கட படுத்த மாட்டேன். ஆனா மதுவோட சந்தோசம் நமக்கு முக்கியம் மாமா. அவ சிரிச்சா தான நாம எல்லாரும் சந்தோசமா இருக்க முடியும்? அவ கல்யாணம் அப்புறம் தான நான் என்னோட கல்யாணத்தை பத்தி கூட யோசிப்பேன். அவ ஒரு பையனை விரும்புனா அவங்களை நாம தான மாமா சேத்து வைக்கணும்? எதனால உங்களுக்கு அந்த பையனை பிடிக்கலை? வசதி இல்லைனு நினைக்கிறீங்களா?”

 

“ஒரு காலத்துல கவுரவம் பிடிச்சு இருந்தது உண்மை தான் மித்ரா. ஆனா நான் இப்ப அப்படி இல்லை. அந்த பையன் இப்ப கஷ்ட படுற நிலைமைலயும் இல்லை. நானும் ஒரு வாரமா எப்படி எல்லாமோ யோசிக்கிறேன். அவங்க வீட்ல போய் பேச தைரியம் வர மாட்டிக்கு”

 

“அப்ப நீங்களும் ஒத்து கிட்ட மாதிரி தானா? அவங்க வீட்ல இருந்து வந்து பேசுனா, உங்களுக்கு சந்தோசம் தானா?”

 

“சந்தோசம் தான். ஆனா அது நடக்காது. நான் தான் போய் பேசணும். ஏன் மித்ரா நாம ரெண்டு பேரும் நாளைக்கு போய் பேசுவோமா? நீ வந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்”

 

“மது வாழ்க்கைல சந்தோசம் வந்தா அதை விட எனக்கு பெருசு என்ன மாமா? நாளைக்கு நாம போகலாம். நீங்க நிம்மதியா தூங்குங்க”

 

“இன்னைக்கு தூக்கம் எப்படி பா வரும்? நீ போய் சாப்பிடு”, என்று சோர்வான குரலில் வாசுதேவன் சொன்னதும் தன்னுடைய அறைக்கு வந்த மித்ரன் எதை எதையோ யோசித்த படியே இருந்தான்.

 

சிறிது நேரம் கழித்து மதுவின் அறைக்குள் அவன் சென்ற போது மது தீவிரமாக வளருக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள். அவர்களை தொல்லை செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

 

அதே நேரம் தன்னுடைய அறையில் கட்டிலில் படுத்து கொண்டு தன்னுடைய கடந்த காலத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தான் செழியன்.

 

வாழ்க்கை என்னும் சக்கரம் தன்னுடைய வாழ்க்கையில் பல சுழற்சிகளை சுழற்றியதை நினைத்து ஒரு புறம் வேதனையாக இருந்தது. மற்றொரு புறம் மது கிடைத்தது அவனுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது.

 

எதையும் நினைக்காதே என்று மனதுக்கு கடிவாளம் போட்டாலும் அது அவன் சொன்னதை கேட்காமல் அதன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தது.

 

“காதல் அழகான வார்த்தை தான்,

வலி கொடுக்காத வரை!!!”

 

என்ற கவிதையை நினைத்த இளஞ்செழியன் அந்த காதலையும், அது தந்த மென்மையான உணர்வையும் அசை போட்டான்.

 

தன்னுடைய தேவதையாகவே எண்ணிய மதுவை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் தித்தித்தது. அவளை அவனால் மறக்க முடியுமா? நினைக்காமல் இருக்கவே அவன் தவிக்கும் போது அவளின் நினைவுகள் அவனை விட்டு சென்று விடுமா என்ன?

 

தன்னை ஆணாக உணர வைத்தவள், அவளுடைய  பெண்மையை அவனுக்கு பரிசளித்தவள் அவனுடைய இதய தேவதை மதுமிதா.

 

“காதல் அழகானது தான், ஆனால் என் வாழ்க்கையில் மட்டும் என் கசப்பானதாக மாறி விட்டது. வயது கோளாறில் செய்த தவறு வாழ்க்கையை எப்படி எல்லாமோ புரட்டி போட்டு விட்டது.

 

இனியும் அது நேராகுமா? எனக்காக இங்கே வந்தாளாம்? இத்தனை வருஷம் என் நினைவே அவளுக்கு வர வில்லையா? இப்போது வந்ததும் என் நினைவாகவா? இல்லை குற்ற உணர்ச்சியா? எதுவாக இருந்தாலும் அவள் எனக்கு வேண்டும்”

 

அவள் இல்லையேல் அவன் ஒன்றும் இல்லாதவனாகி போவான். “நாளைக்கு அவங்க வீட்ல போய் பேசணும்”, என்று நினைத்து கொண்டான்.

 

அப்போது “செழியா “, என்று பூங்காவனம் அழைக்கும் குரல் கேட்டது.

 

“என்ன மா?”, என்று கேட்டு கொண்டே வெளியே வந்தான்.

 

“இந்த வளரை இன்னும் காணும் பா. ஓரெட்டு பாத்துட்டு வாயேன்”

 

“இதோ போறேன் மா”, என்று சொல்லி விட்டு சட்டையை போட்டு கொண்டு வெளியே வரும் போது வளர் வந்து விட்டாள்.

 

“ஏன் பாப்பா நேரம் ஆகிட்டு இன்னைக்கு?”, என்று கேட்டான் செழியன்.

 

“போச்சு போ, அம்மா தான் இன்னும் மணி பாக்கலைன்னா நீயுமா பாக்கலை? எப்பவும் விட இன்னைக்கு சீக்கிரம் தான் வந்துருக்கேன். நீயும் கனவுல இருந்தியாண்ணே”

 

“நீ இருக்கியே, போ பாப்பா. அம்மா திடிர்னு சொன்னதுல நான் மணியை பாக்கலை. சரி முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்”

 

“ஹ்ம்ம் சரிண்ணே. ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒன்னு கொடுக்கணும்”, என்று சொல்லி அவளுடைய பேகை திறந்தாள்.

 

உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தாலும் “இப்படி எல்லாம் அவங்க வீட்ல இருந்து திருடிட்டு வர கூடாது. அது தப்பு பாப்பா”, என்றான்.

 

“என் அண்ணனோட பொருளை எடுத்தா திருட்டா? இல்லை தான? அப்ப என் அண்ணியோட பொருளை எடுக்குறது எப்படி தப்பாகும்? எனக்கு அண்ணனும் ஒன்னு தான். அண்ணியும் ஒன்னு தான்”, என்று சொல்லி கொண்டே மதுவின் டைரியை கொடுத்தாள்.

 

“இருந்தாலும் உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிட்டு பாப்பா”, என்று சொல்லி கொண்டே அதை வாங்கி கொண்டான்.

 

“நீ அப்புறம் என்னை கொஞ்சிக்கோ. நாளைக்கு இதை அண்ணி வீட்டுக்கு கொண்டு போகணும். அதனால நைட் குள்ள படிச்சிரு. சீக்கிரம் போய் சாப்பிட்டு படி. சாப்பிடாம போனா அம்மா உன்னை தொல்லை செஞ்சிட்டே இருப்பாங்க”

 

“சரி குட்டி முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்”, என்று அவன் சொன்னதும் அவள் உள்ளே சென்று விட்டாள். செழியன் மனதோ “அந்த டைரியில் என்ன இருக்கும்?”, என்று சிந்தித்து கொண்டிருந்தது.

 

தாகம் தணியும்……

 

Advertisement