Advertisement

 

“அப்பாடி அவளே விசயத்துக்கு வந்துட்டா”, என்று எண்ணி கொண்டு “அவங்க ரெண்டு பேரும் யாரு மது?”, என்று கேட்டான் மித்ரன்.

 

“டியூஷன் படிக்க வருவாங்க”

 

“என்னது டியூஷனா? காலேஜ் படிக்கிறவங்களுக்கு எதுக்கு டியூஷன்?”

 

“காலேஜா? அதெல்லாம் இல்லை டா. ரெண்டு பேரும் பிளஸ் டூ படிக்கிறாங்க”

 

“என்னது ப்ளஸ் டூ வா?????”

 

“ஹ்ம்ம் நீ ஏன் இவ்வளவு சாக் ஆகுற?”

 

“சும்மா தான்”, என்று சொன்ன மித்ரனுக்கு கடுப்பாக இருந்தது. ஒரு சின்ன பிள்ளை பேச்சை கேட்டு அதுவும் அவளை பெரிய பொண்ணு ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கொண்டு இங்கு வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்து கொண்டான்.

 

அதே கொலை வெறியோடு வளரின் வரவுக்காக காத்திருந்ததான் மித்ரன். வளரும் அவனை பார்க்க ஆவலாக இருந்தாள். தன் அண்ணனின் வாழ்க்கையை கண்டிப்பாக அவன் செழிக்க செய்வான் என்று நம்பினாள்.

 

மதுவும் மித்ரனும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். ஆறு மணிக்கு கவிதாவும் வளரும் மது வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களை பார்த்த மல்லிகா “மது மேல இருக்கா. நீங்க போங்க”, என்றாள்.

 

கவிதா எப்போதும் போல சாதாரணமாக தான் இருந்தாள். ஆனால் வளருக்கு தான் உள்ளுக்குள் ஒரே படபடப்பு. “எப்படி அவன் கிட்ட பேசுறது? பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அண்ணன் காதலை எப்படி சொல்ல? அண்ணியும் கவிதாவும் கூட இருப்பாங்களே?”, என்று சிந்தித்த படியே உள்ளே வந்தாள்.

 

“ஹேய் வந்துட்டீங்களா? இன்னைக்கு மாடல் டெஸ்ட் எப்படி பண்ணீங்க?”, என்ற மதுவின் குரலில் திரும்பி அவள் பார்வை போன திக்கில் பார்த்தான் மித்ரன்.

 

அங்கே கவிதாவும் வளரும் நின்றிருந்தார்கள். “இதுல யார் வளர்”, என்று சிந்தித்தான் மித்ரன்.

 

“நல்லா எழுதிருக்கோம் கா”, என்றாள் கவிதா.

 

வளரோ எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.  அந்த பார்வையை வைத்தே அவள் தான் என்று முடிவு செய்த மித்ரனுக்கு “அப்படி ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை”, என்று தான் தோன்றியது.

 

குண்டு கண்களும் கொலு கொலு கன்னங்களுமாக அழகாக இருந்த வளரை கண்ட அவனுக்கு அவள் அழகு மனதில் பதிந்தது.

 

“இது என்னோட பிரண்ட் மித்ரன்…. மிட்டு இது கவிதா, இது வளர்”, என்று சொல்லி அறிமுக படுத்தி வைத்தாள் மதுமிதா.

 

அதன் பின் நால்வரும் அங்கு தான் அமர்ந்திருந்தார்கள். மது கேட்கும்  கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாலும் அடிக்கடி வளரின் பார்வை மித்ரனையே தான் சுற்றி வந்தது.

 

வளருக்கு அவன் அழகன் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதை விடுத்து “இவன் கிட்ட எப்படி தனியே பேச?”, என்று மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து மது அனைவருக்கும் ஜூஸ் எடுக்க கீழ சென்று விட கவிதா கீழே குனிந்து எழுதி கொண்டிருந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தலையை தூக்கி அவனை பார்த்தாள் வளர். அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

 

பேசுவதுக்கு பயமும் தடுமாற்றமும் வந்த போதும் தவிப்பாக அவனை பார்த்தாள். அவள் பார்வையை கண்டவன் அவள் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்று புரிந்து “எழுதி கொடு “, என்னும் விதமாய் சைகை செய்தான்.

 

அவன் ஐடியா கொடுத்ததில் அவள் முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சியை கண்டு மித்ரன் தான் எதுவோ சுழலுக்குள் சிக்கியது போல உணர்ந்தான். எந்த முக பூச்சும் இல்லாமல் இயற்கையான அழகுடன் அந்த வயதுக்கே உரிய துடிப்புடன் இருந்தவளை கண்டு “எப்பா என்னா எக்ஸ்பிரெஷன் டா? செம. இவ ஒரு ரெண்டு வருஷம் முன்னாடியே பிறந்துக்குற கூடாதா?”, என்று எண்ணி கொண்டான்.

 

ஒரு நோட்டை எடுத்து எழுதிய வளர் அதை ஓரமாக வைத்தாள். சில நொடிகளுக்கு பின்னர் “வளர், அந்த நோட்டை ஒரு நிமிசம் தாயேன்”, என்று கேட்டு வாங்கி கொண்டான் மித்ரன்.

 

சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டு திருப்பி பார்த்து அவள் எழுதியதை வாசித்தான். “அது பெரிய கதை நேரில் சொல்ல முடியாது. நாளைக்கு எழுதி கொண்டு வரேன்”, என்று எழுதி இருந்தாள் வளர்.

 

படித்து விட்டு நிமிர்ந்தவன் தன்னையே அவள் பார்ப்பதை உணர்ந்து “சரி”, என்னும் விதமாய் தலை அசைத்தான். இப்போது அவனுடைய சிரிப்பு அவளிடமும் தொற்றி கொண்டது.

 

அதன் பின் மதுவும் வந்துவிட தன்னுடைய நினைவுகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு படிப்பில் கவனத்தை செலுத்தினாள் வளர்.

 

“இங்கேயே இருந்தால் அவளையே பாப்போம்”, என்று எண்ணி கீழே வந்து விட்டான் மித்ரன். அதன் பின் அவர்கள் போகும் போது அவன் அவர்கள் கண்ணில் படவில்லை.

 

வீட்டுக்கு சென்றதும் வளர் பார்த்தது செழியனின் சோக முகம் தான்.

 

“இன்னைக்கு எதுக்கு இப்படி இருக்கான்னு தெரியலையே. அண்ணியை பத்தி பேசினா ரொம்ப சந்தோசமா ஆகிருவான்”, என்று எண்ணி கொண்டு “அண்ணா”, என்று அழைத்தாள்.

 

“என்ன பாப்பா?”

 

“இன்னைக்கு டாக்டர் வீட்டுக்கு ஒருத்தங்க வந்துருக்காங்க தெரியுமா?”

 

அதை நினைத்து தான் அவனே கடுப்பில் இருக்கிறான். இவள் அது தெரியாமல் பேசியதும் அவன் முகம் மேலும் சிறுத்தது.

 

“என்ன அண்ணா அமைதியா இருக்க? அது யாரு தெரியுமா? டாக்டருக்கு பிரண்டாம்”

 

“ஓ”

 

“ஹ்ம் ஆமா அண்ணா. அன்னைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா? எப்படி நீயும் நானுமோ அது மாதிரி தான் அவங்க ரெண்டு பேருமாம். அவங்க என்ன சொன்னாலும் கேப்பாங்களாம்”, என்று சொல்லி அவன் வயிற்றில் பாலை வார்த்தாள் வளர்.

 

கூம்பி இருந்த செழியனின் முகம் அப்படியே ஒளிர்ந்தது. அவனுடைய புன்னகையை பார்த்ததும் வளருக்கும் இதமாக இருந்தது.

 

“நிஜமாவே அப்படி தான் சொன்னாளா பாப்பா?”

 

“ஆமாண்னே, நான் யாருன்னு கேட்டதுக்கு அப்படி தான் சொன்னாங்க. ஒரே வயசு அதனால பிரண்டாம். ஆனா அண்ணா மாதிரியாம். அவங்க பேரு என்ன தெரியுமா? மித்ரன். சென்னைல பெரிய ஹாஸ்பிட்டல் வச்சிருக்காங்களாம். அவங்களும் அண்ணி கூட தான் படிச்சாங்களாம்”

 

“ஹ்ம்ம், சரி பாப்பா. நீ படி. நான் ரூம்க்கு போறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான்.

 

முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தவன் இப்போது சந்தோசமாக போவதை பார்த்து புன்னகைத்தவள் ஒரு பேப்பரை எடுத்து தன்னுடைய மனதில் உள்ளதை எல்லாம் எழுதினாள்.

 

தனக்கு தெரிந்தது, யூகித்தது, செழியன் சொன்னது, செழியனை பார்த்ததும் மதுவின் முக மாறுதல் அனைத்தையும் ஒன்று விடாமல் எழுதினாள் வளர்.

 

எழுதி முடித்து விட்டு அதை மடித்து தன்னுடைய பேகில் வைத்தவள் அதன் பின்னர் தான் தூங்க சென்றாள்.

 

காலை எழுந்ததுமே எப்போது தான் சாயங்காலம் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.

 

அன்று மாலை கவிதா வீட்டுக்கு சென்றவள் அவளை அழைத்தாள். “அவளுக்கு உடம்பு முடியலை வளர். படுத்துருக்கா”, என்றாள் மங்கை.

 

உள்ளே விரைந்தவள் “என்ன ஆச்சு கவி? ஸ்கூல்ல நல்லா தான இருந்த?”, என்று கேட்டாள் வளர்.

 

“ஹ்ம்ம் ஆமா டி. அப்றம் லைட்டா தலை வலிச்சது. இப்ப பாத்தா காச்சல் வர மாதிரி இருக்கு. மது அக்கா ஊசி போட்டுட்டு தான் போனாங்க. நீ மது அக்கா வீட்டுக்கு போறியா?”

 

“ஹ்ம்ம் நீ வரலையா?”

 

“நான் வரலைனு அக்கா கிட்ட சொல்லிரு. நான் நாளைக்கு வரேன்”

 

“ஹ்ம்ம் நாளைக்கு ஸ்கூல்க்கு வருவியா?”

 

“மாடல் டெஸ்ட் இருக்கே? வருவேன் வளர்”

 

“சரி கவி. நீ கொஞ்ச நேரம் தூங்கு. காலைல பாப்போம்”, என்று அவளிடம் மங்கையிடமும் சொல்லி விட்டு மது வீட்டுக்கு சென்றாள் வளர்.

 

மது இல்லாத சமயம் பார்த்து மித்ரனிடம் அதை கொடுத்து விட்டாள் வளர். அவனும் அதை படிக்க சென்று விட்டான்.

 

அப்போது அவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொண்டு வந்த மது “மித்ரன் எங்க?”, என்று கேட்டாள்.

 

“ஐயோ இப்ப இவங்க அவனை தேடி போனா நான் மாட்டிப்பேனே”, என்று எண்ணி கொண்ட வளர் “அவங்களுக்கு போன் வந்துச்சு”, என்று பொய் சொன்னாள்.

 

“சரி பேசிட்டு வரட்டும். நீ சாப்பிடு. அப்புறம் வளர் உங்க அத்தை பொண்ணு வள்ளி அப்புறம் வீட்டுக்கு வரலையா?”

 

“அவளுக்கு தீவிரமா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்களாம். கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும்”

 

“ஹ்ம்ம்”, என்று சொன்ன மதுவின் குரல் சற்று நிம்மதியாக ஒலித்தது. அதன் பின் இருவரும் படிப்பை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். மித்ரனோ வளர் எழுதியதையே படித்து விட்டு அதிர்ச்சியாக அமர்ந்திருந்ததான்.

 

“மது மனசுக்குள்ள வளரின் அண்ணனா? மது அடிக்கடி அழுறதுக்கு காரணம் இந்த காதலா? இப்ப பிரிஞ்சிட்டாங்கன்னா மது எதுக்கு இந்த ஊருக்கு வரணும். மது சென்னைக்கு வரும் போதே பதினொன்னு தான முடிச்சிருந்தா. அதுக்கப்புறம் அவ இந்த ஊருக்கே வரலையே? அப்பறம் எப்படி காதலிச்சிருக்க முடியும்?”, என்று என்னனென்னவோ யோசித்தாலும் அவனுக்கு விடை கிடைக்க வில்லை.

 

“எப்படியும் மது வாழ்க்கை நல்லா இருக்கணும்”, என்று நினைத்து கொண்டு அவர்கள் இருந்த அறைக்குள் வந்தான். உள்ளே வந்தவனை ஆவலுடன் பார்த்தாள் வளர்.

 

கண்களை மூடி திறந்து தான் பார்த்து கொள்வதாய் அவளுக்கு புரிய வைத்தான் மித்ரன். அதை புரிந்து கொண்டு மெல்லியதாக சிரிப்பை சிந்தினாள் வளர். அந்த சிரிப்பில் ஒரு நிமிடம் மெய் மறந்தான் மித்ரன். எட்டு மணிக்கு “சரி டாக்டர் நான் கிளம்புறேன்”, என்றாள் வளர்.

 

“சரி வளர் போய்ட்டு வா. நாளைக்கு பாப்போம். எக்ஸாம் நல்லா பண்ணு”, என்றாள் மது.         

 

“எனக்கு ஒரு டவுட். கவிதா மட்டும் உன்னை அக்கான்னு சொல்றா. வளர் மட்டும் அக்கானு ஏன் சொல்ல மாட்டிக்கா?”, என்று கேட்ட மித்ரன் மது முகத்தை ஊன்றி கவனித்தான்.

 

“எனக்கு அப்படியே பழகிருச்சு சார். நான் வேணும்னா இனி அக்கான்னு கூப்பிடவா டாக்டர்?”, என்று கேட்டாள் வளர்.

 

“ஐயையோ அதெல்லாம் வேண்டாம் வளர். நீ எப்பவும் போல டாக்டர்னே கூப்பிடு. அக்கா எல்லாம் சொல்ல கூடாது”, என்று அவசரமாக சொன்னாள் மது.

 

வளரும் மித்ரனும் தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறி கொண்டார்கள். “நாளைக்கு இளஞ்செழியனை பார்க்கணும்”, என்று எண்ணி கொண்டான் மித்ரன்.

 

அதன் பின்னர் வளர் சென்றதும் மித்ரனும் மதுவும் சாப்பிட சென்றார்கள். இரவு முழுவதும் “செழியனை எந்த காரணத்தை வைத்து பார்ப்பது”,  என்று எண்ணி கொண்டே இருந்தான் மித்ரன். அடுத்த நாள் காலை பதினொரு மணியளவில் வி.எ.ஓ ஆபிசுக்கே சென்று விட்டான்.

 

தாகம் தணியும்……

 

Advertisement