Advertisement

அத்தியாயம் 7

 

வலிகள் நிறைந்த

வாழ்க்கையில் மருந்தென

வந்து வலி நீக்கியவனே

என் தாகத்தையும்

தீர்த்து விடு!!!!

 

ரிங் போய் கொண்டிருந்ததே ஒழிய அதை அவன்  எடுத்த பாடில்லை. நெஞ்சம் திக் திக்கென்று இருந்தது.

 

“சரியான லூசா இருப்பான் போல? இன்னும் எடுக்க மாட்டிக்கான். அண்ணன் கல்யாணத்துக்கு பிறகு அண்ணி கிட்ட இவன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லணும் “, என்று எண்ணி கொண்டு மறுபடி அழைத்தாள் வளர்.

 

அப்போதும் எடுக்க  வில்லை என்பதால் கோபம் போய் பயம் வந்தது வளருக்கு. “இப்ப அவன் எடுக்கலை. ஆனா ஒரு வேளை வீட்ல எல்லாரும் இருக்கும் போது என்னோட மிஸ்ட் கால் பாத்து  கூப்பிட்டா என்ன செய்றது?”, என்று நினைத்து கதி கலங்கி விட்டாள்.

 

போனை வைத்து விட்டு நகத்தை கடித்த படி அமர்ந்திருந்தாள். “ஐயையோ எதுக்கு இந்த வேண்டாத வேலை? அண்ணனை கூட சமாளிச்சிறலாம். ஆனாலும் கண்டிப்பா அடிப்பான். ஆனா இந்த அம்மா பேசியே கொன்னுருமே”, என்று நினைத்து கொண்டு மறுபடி அழைத்தாள்.

 

மூன்றாவது முறை போன் கால் கட் ஆகும் நேரத்தில் அதை எடுத்தான் மித்ரன்.

 

ஏதோ புது நம்பர் என்று எண்ணி கொண்டு தான் அதை எடுத்தான். அந்த பக்கம் அமைதியாக இருந்ததும் “யாரா இருக்கும்?”, என்று நினைத்து கொண்டு “ஹலோ யாரு?”, என்று கேட்டான்.

 

“மிட்டு இருக்காங்களா?”, என்ற அழகான பெண் குரல் கேட்டதும் திகைத்தான் மித்ரன். அதுவும் அந்த மிட்டு என்ற பெயரில் புருவம் உயர்த்தினான்.

 

“என் பேர் எப்படி தெரியும்? அதுவும் இது மது மட்டும் கூப்பிடுற பெயராச்சே?”, என்று எண்ணி கொண்டு “ஆமா நான் தான் பேசுறேன். நீங்க யாரு?”, என்று கேட்டான்.

 

அவன் தான் என்று தெரிந்ததும் “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”, என்று கேட்டாள் வளர்.

 

அதில் கொதித்து போன மித்ரன் எரிச்சலுடன் “ஹலோ போன் பண்ணது நீங்க? சம்பந்தமே இல்லாம என்னை திட்டுறீங்க? நீங்க யாருனு சொல்லுங்க முதல்ல? அதுக்கு முன்னாடி எதுக்கு என்னை திட்டுனீங்கன்னு சொல்லுங்க”, என்றான்.

 

“பின்ன நான் அப்ப இருந்து போன் செஞ்சிட்டு இருக்கேன். நீங்க எடுக்காம இருக்கீங்க? நான் பயந்துட்டேன் தெரியுமா?”

 

என்ன டா இது என்று ஆகி விட்டது மித்ரனுக்கு. “இவளா போன் செஞ்சா, திட்டுனா. இப்ப என்னன்னா போன் எடுக்காததுக்கு பயந்துட்டேனு சொல்றா”, என்று குழம்பியவன் “ஹலோ மேடம், நீங்க வேற யார் கிட்டயோ பேசுறதா நினைச்சு என்கிட்ட பேசுறீங்கன்னு நினைக்கிறேன். என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று  கேட்டான்.

 

“நீங்க மது அண்ணி.. சே.. மது டாக்டர் பிரண்ட் தான?”

 

“மதுவா? ஆமா நான் மது பிரண்ட் தான். நீங்க யாரு?”

 

“அப்ப நான் சரியா தான் போன் பண்ணிருக்கேன். எனக்கு உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கணும்”

 

“முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லா இருக்கும்”

 

“நான் வளர்”

 

“வளர்னா பிரைம் மினிஸ்ட்டரா?”

 

“அதெல்லாம் இல்லை. நான்…நான் எப்படி சொல்றது? நான் இப்ப மது டாக்டர் இருக்குற ஊருல இருக்கேன்”

 

“ஓ மதுக்கு எதுவும் பிரச்சனையா? நான் அவளுக்கு போன் பண்ணவா?”

 

“ஐயையோ! காரியத்தையே கெடுத்தீங்க போங்க. நான் உங்களுக்கு போன் பண்றது யாருக்கும் தெரிய கூடாது. அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

 

“அது என்னனு தான் நானும் கேக்குறேன்”

 

“இப்ப தெளிவா சொல்ல முடியாதே. ஆனா அவங்க வாழ்க்கை பிரச்சனை. நீங்க இங்க உடனே வர முடியுமா? அவங்க நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொன்னாங்க. அதனால தான் உங்க நம்பரை திருடி யாருக்கும் தெரியாம போன் பண்றேன். இப்ப யாராவது வந்தா நான் மாட்டிக்குவேனே? நீங்க இங்க வாங்க. நான் தெளிவா சொல்றேன்”

 

“மதுக்காக வரேன். எனக்கும் அவளை பத்தி தெரிஞ்சிக்கணும். ஆமா நீங்க யாரு?”

 

“அதெல்லாம் வந்த பிறகு சொல்றேன். நீங்க எப்ப வருவீங்க?”

 

“இன்னைக்கு நைட் கிளம்பி நாளைக்கு வரேன்”

 

“சரி நாளைக்கு சாயங்காலம் டாக்டர் வீட்ல வச்சு  பாக்கலாம். இப்ப வைக்கவா? திருப்பி போன் பண்ணிராதீங்க?”

 

“ஹ்ம்ம் சரி”, என்று அவன் சொன்னதும் அவள் போனை வைத்து விட்டாள்.

 

வெகு நேரம் போனையே பார்த்து கொண்டிருந்த மித்ரன் “இந்த வளர் யாரா இருக்கும்? இவளுக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த பொண்ணு வாய்ஸ் நல்லா இருக்கு. ஆள் எப்படி இருப்பா? நல்ல தைரியமான பொண்ணு தான். என்னையே திட்டுறா பாரேன். என்ன டா, மது இல்லாம வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குதேன்னு நினைச்சேன். இனி நல்லா போகும்னு தோணுது. என்ன செஞ்சாவது மதுவை சந்தோசமா வாழ வைக்கணும்”, என்று எண்ணி கொண்டான்.

 

காலை ஆறு மணிக்கு கதவை தட்டும் சத்தத்தில் கதவை திறந்தாள் மல்லிகா.

 

“யாரா இருக்கும்?”, என்ற நினைவுடன் வாசலை பார்த்தார் வாசுதேவன். வெளியே புன்னகையுடன் நின்ற மித்ரன் “என்ன அத்தை எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டான்.

 

“டேய் மித்ரா நீயா? உள்ள வா பா? வரேன்னு சொல்லவே இல்லை. அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”

 

“நல்லா இருக்காங்க. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லாமல் வந்தேன்”

 

“ஏங்க யாருன்னு பாத்தீங்களா?”

 

“வா மித்ரா எப்படி இருக்க?”, என்று கேட்டார் வாசுதேவன்.

 

“நல்லா இருக்கேன் மாமா. மது எங்க, இன்னும் எந்திக்கலையா அத்தை?

 

“அவ எந்திக்கல. நீ கொஞ்ச நேரம் தூங்குறியா மித்ரா?”

 

“ஹம்ம் சரி, அதுக்கு முன்னாடி பாத்ரூம் போகணும்”

 

“பின் வாசல் கிட்ட பாத்ரூம் இருக்கு. போய் முகம் கழுவிட்டு வா. நான் டீ கொடுக்குறேன். அப்புறம் தூங்கு”

 

“டீ குடிச்சா தூக்கம் போயிரும் அத்தை. டீ வேண்டாம். அப்புறம் நான் வந்ததை மது கிட்ட சொல்லாதீங்க?”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா.

 

ஏழு மணிக்கு எழுந்த மது குளிக்க சென்றாள். அவள் குளித்து கிளம்பி கீழே வரும் போது மணி எட்டு ஆகி இருந்தது.

 

“அம்மா டிபன் ரெடியா?”, என்று கேட்டாள் மது.

 

“ஹ்ம்ம் தயாரா இருக்கு மா. சாப்பிட வா”

 

“ஹ்ம்ம் டேடி எங்க?”

 

“வெளியே கொஞ்சம் நடந்துட்டு வரேன்னு சொன்னார்.  நீ சீக்கிரம் சாப்பிட வந்துட்ட?”

 

“கிளம்பிட்டேன் மா அதான். நீங்க வேலை இருந்தா பாருங்க. நான் கொஞ்ச நேரம் நியூஸ் பாக்குறேன்”, என்று சொல்லி கொண்டே சோபாவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்தாள்.

 

அவள் சாப்பிட்டு முடிக்கும் போது வாசுதேவனும் வந்து விட்டார். இருவரும் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருக்கும் போது பின்னே வந்து மதுவின் கண்களை பொத்தினான் மித்ரன்.

 

“ஹேய் யாரு? மங்கை அக்காவா? யார் நீங்க?”, என்று கேட்டாள் மது.

 

மல்லிகாவும் வாசுதேவனும் சிரித்தார்கள். “எனக்கு சத்தியமா தெரியலை. நீங்களே சொல்லுங்க ப்ளீஸ். அம்மா நீங்களாவது சொல்லுங்க”

 

“போ மது, நீ என்னை மறந்துட்ட?”, என்று சொல்லிய படி அவள் கண்களை விட்டான் மித்ரன்.

 

“ஏய் மிட்டு நீயா? நீ இங்க வருவேன்னு எனக்கு எப்படி தெரியும்? நீ வருவேன்னு எதிர் பாக்கவே இல்லை டா”, என்று சந்தோசத்துடன் புன்னகைத்தாள் மது.

 

“சும்மா உங்க எல்லாரையும் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு வந்தேன்”

 

“ரெண்டு நாள் என்ன பா? ஒரு வாரம் கூட இங்க இரு. நான் உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னாள் மல்லிகா.

 

“இப்ப வேண்டாம் அத்தை கொஞ்ச நேரம் ஆகட்டும். அப்புறம் மது ஊர் எல்லாம் புடிச்சிருக்கா?”

 

“ரொம்ப புடிச்சிருக்கு டா?”, என்று மது சொன்னதும் மேலும் இருவரும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

“சரி மிட்டு நான் கிளம்புறேன். உனக்கு நேரம் போகலைன்னா அங்க வா. எனக்கும் கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும்”

 

“அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் மது”, என்றார் வாசுதேவன்.

 

“இல்லை மாமா எனக்கும் போர் தான் அடிக்கும். நானும் மது கூட போறேன். கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் வந்து சாப்டுட்டு ரெஸ்ட் எடுக்குறேன். ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு மது நானும் வரேன்”, என்றான் மித்ரன்.

 

இருவரும் கிளம்பி ஹாஸ்ப்பிட்டல்க்கு பேசிய படியே நடந்து செல்வதை சில பேர் வேடிக்கை பார்த்தார்கள். பார்த்த எல்லாருடைய விழிகளிலும் ஒரு ஆராய்ச்சி தான் இருந்தது.

 

ஒரு ஜோடி விழிகள் மட்டும் பொறாமையில் பொங்கியது. அந்த ஜோடி கண்களுக்கு சொந்த காரன் செழியனே தான்.

 

அந்த பக்கமாக வண்டியில் போன செழியன் அவள் வரவை கண்டு அவளை பார்ப்பதற்காக ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தினான். ஆனால் கூட இன்னொருவன் வரவும் முதலில் திகைத்தவனுக்கு “இவளுக்கு என்னை தவிர மித்த எல்லார்கிட்டயும் சிரிச்சு பேச தோணும்”, என்று எண்ணம் வந்து அவன் மனது சிணுங்கியது.

 

“இவன் யாரா இருக்கும்?”, என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. அவர்கள் ஹாஸ்ப்பிட்டல் உள்ளே சென்றதும் அவன் வண்டியை கிளப்பி கொண்டு சென்று விட்டான். அவன் மனது சலன பட்டு நிம்மதியில்லாமல் தவித்தது.

 

ஹாஸ்ப்பிட்டலில் தாயம்மா மற்றும் இரண்டு நர்ஸ்கள் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுக படுத்தி கொண்டார்கள். நோயாளிகள் வர ஆரம்பித்ததும் நேரம் றெக்கை கட்டி கொண்டு பறந்தது. பதினோரு மணி வரை மதுவுக்கு உதவியாக நோயாளிகளை பார்த்து கொண்டு இருந்த மித்ரன் “நான் வீட்டுக்கு போறேன் மது”, என்றான்.

 

“வீடு தெரியும் தான?”

 

“ஹ்ம்ம். நான் போய்க்கிறேன். நீ எப்ப வருவ?”

 

“ரெண்டு மணிக்குள்ள வந்துருவேன் டா. நீ சாப்பிட்டு தூங்கு பை”, என்று விடை கொடுத்தாள்.

 

மதியம் மது வீட்டுக்கு வந்ததும் எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் மதுவும் மித்ரனும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.”வளர் யாருன்னு இவ கிட்ட எப்படி கேக்குறது?”, என்று யோசனையில் இருந்தான் மித்ரன்.

 

நேரடியாக கேட்டால் உனக்கு எப்படி அவளை தெரியும் என்று மது கேட்கும் அபாயம் இருப்பதால் அமைதியாக இருந்தான்.

 

“என்ன மிட்டு யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள் மது.

 

“சும்மா தான், இங்க ஒரே போர் அடிக்கலையா மது?”

 

“என்னவன் இருக்கும் ஊர் எனக்கு போர் அடிக்குமா என்ன?”, என்று எண்ணி கொண்டு “அப்படி எல்லாம் இல்லை டா. எதாவது வேலை பாத்துட்டே இருந்தா நேரம் போயிரும். இப்ப போய் தூங்குவேனா? சாயங்காலம் அஞ்சு மணி ஆயிரும். அப்புறம் ஆறு மணிக்கு வளரும் கவிதாவும் வந்துருவாங்க. எட்டு மணி வரைக்கு அவங்க கூட நேரம் போகும்”, என்றாள்.

Advertisement