Advertisement

ஹாஸ்பிட்டலுக்கு முதல் ஆளாய் கிளம்பி இருந்த வளர், முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“ஏட்டி சீக்கிரம் வா. சும்மா சும்மா வம்பு பண்ணாத. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டல்ல? அப்புறம் என்ன அசையாம உக்காந்துருக்க?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“நான் உன் கூட வர மாட்டேன் போ. அண்ணனை கூட்டிட்டு போக சொல்லு”

 

“அவன் தான் வேலை இருக்குன்னு சொல்லுறான்ல? நீ வா”

 

“போ நான் வர மாட்டேன். அண்ணன் கூட தான் வருவேன்”

 

“பாப்பா வீணா பிடிவாதம் பிடிக்காத. நான் சொன்னா கேப்ப தான? ஒழுங்கா அம்மா கூட போ. எனக்கு வேலை இருக்கு. நீ கூட்டிட்டு போ மா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் செழியன்.

 

“இந்த அண்ணன் என்ன இப்படி இருக்கான்? நேத்து அண்ணி எவ்வளவு ஆசையா நாளைக்கு உங்க அண்ணனை கூட்டிட்டு வர சொல்லுன்னு சொன்னாங்க. இவன் என்னன்னா ரொம்ப பிகு பண்றான்”, என்று நினைத்து கொண்டு “சரி வா மா. உன்கூடயே வரேன்”, என்றாள்.

 

அவளை முறைத்த பூங்காவனம் “எதுக்குடி இந்த சேட்டை பண்ற? வா போவோம். வந்து தான் உங்க அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போகணும் வா”, என்று திட்டி கொண்டே வளரை அழைத்து சென்றாள்.

 

மதுவும் நோயாளிகளை கவனித்து கொண்டே வளரையும் செழியனையும் தான் எதிர்பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவன் வராமல் பூங்காவனம் வந்ததும் உள்ளே ஏமாற்றம் பரவியது. அவனை பார்க்கும் ஆவலில் தான் மனதில் இருந்த கவலை அனைத்தையும் மறந்து விட்டு சிரித்த முகமாக இருந்தாள்.

 

இப்போது அவனை பார்க்காதது வருத்தமாக இருந்தது. வளரும் மதுவின் ஏமாற்றத்தை கண்டு கொண்டாள். ஆதரவாக மதுவை பார்த்து புன்னகைத்தாள்.

 

அவள் சிரிப்பு மதுவையும் தொற்றி கொண்டது. “வா வளர் உக்காரு. நீங்களும் உக்காருங்க மா”, என்றாள் மது.

 

“வளருக்கு பெரிய ஊசியா போட்டு விடுங்க டாக்டரம்மா. சொன்ன படி கேக்க மாட்டிக்கா”, என்று வெகுளியாக சிரித்தாள் பூங்காவனம்.

 

“டாக்டரம்மான்னு எல்லாம் சொல்ல வேண்டாம் மா. மதுமிதான்னு சொல்லுங்க. சின்ன வயசுல உங்க வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கேன். நினைவு இருக்கா?”, என்று கேட்டாள் மது.

 

“நினைவு இல்லாம இருக்குமா மா? நல்லா நினைவு இருக்கு. அப்பயே அழகா இருப்ப. இப்ப அப்படியே தாங்க விக்ரகமாட்டம் இருக்கத்தா. அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?”

 

“நல்லா இருக்காங்க”

 

“வேலை எல்லாம் உனக்கு புடிச்சிருக்கா? கஷ்டமா இல்லையே?”

\

“அதெல்லாம் இல்லை மா. எனக்கு புடிச்சிருக்கு. உதவிக்கு தான் ஆள் இல்லை. ஆனா நாளைக்கு நர்ஸ் வந்துருவாங்க. அப்புறம் கவலை இல்லை”

 

“சரி இந்த பிள்ளைக்கு ஊசியை போடு”

 

“ஹ்ம்ம் சரி, வளர் வாயை திற”, என்று சொல்லி அவளை பரிசோத்தாள் மது.

 

பூங்காவனம் வெளியே சென்றதும் “என்ன உங்க அண்ணனை காணும்”, என்று கேட்டாள் மது.

 

“அண்ணனுக்கு சரியான வேலை. சீக்கிரம் கிளம்பி போயிருச்சு டாக்டர்”

 

“ஓ சரி நீ ரெண்டு நாள் கழிச்சு வா. இப்போ போகலாம்”

 

“ஹ்ம்ம் போய்ட்டு வரேன் டாக்டர்”, என்று சொல்லி விட்டு சென்ற வளருக்கு அண்ணனை எதிர்பார்த்து ஏமாந்த மதுவின் நினைவாகவே இருந்தது.

 

இரண்டு நாள் கழித்தும் பூங்காவனத்துடன் தான் ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்தாள் வளர். செழியன் “வர மாட்டேன்”, என்று சொல்லி விட்டான். இந்த முறை உங்க அண்ணன் எங்கே என்று மதுவும் கேட்க வில்லை.

 

மது வீட்டில் வாசுதேவனோ பயங்கர சிந்தனையில் இருந்தார். அவர் மதுவிடம் கல்யாணம் பற்றி பேசாமல் இருந்ததே மதுவுக்கு நிம்மதியாக இருந்தது.

 

ஒரு வாரம் கழித்து அன்று தான் பள்ளிக்கு சென்றாள் வளர். “ஏய் நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு வரேன்னு சொல்லவே இல்லை”, என்று கேட்டாள் கவிதா.

 

“வீட்ல போர் அடிச்சது கவி. சரி மருந்தை குடிச்சது இங்க யாருக்காவது தெரியுமா?”, என்று கேட்டாள் வளர்.

 

“இல்லை வளர் டைபாயிட் காச்சல்னு தான் சொல்லி வச்சிருக்கோம்”

 

“ஹ்ம்ம் நல்லது”, என்று அவளிடம் பேசிய படியே அன்றைய வேலையை செய்தாலும் மனதுக்குள் மதுவையும் செழியனையும் எப்படி சேர்த்து வைக்க என்ற கவலை  அரித்தது கொண்டு தான் இருந்தது.

 

அதன் பின் செழியனும் மதுவும் பார்த்து கொள்ளவே இல்லை. “இதுக்கு எதாவது செய்யணுமே”, என்று யோசித்த வளர் “ஏய் கவி உனக்கு தான் கணக்கு வர மாட்டிக்கே. நீ டியூசன் போகலாம்ல?”, என்று ஆரம்பித்தாள்.

 

“ஹ்ம்ம் நம்ம ஊருல யாருமே டியூசன் எடுக்கலையே”, என்றாள் கவிதா.

 

“யார் எடுக்கணும்? அதான் உங்க பக்கத்துல தான டாக்டர் இருக்காங்க. அவங்க கிட்ட கேக்கலாம்ல?”

 

“நல்ல யோசனை தான். அந்த அக்கா எடுப்பாங்களோ என்னவோ?”

 

“உங்க அம்மாவை விட்டு கேளு டி”

 

“ஹ்ம்ம் கேக்குறேன். ஆனா தனியா எப்படி படிக்க?”

 

“இது தான் உன் கவலையா? நானும் வேணும்னா வரேன். நமக்கு இன்னும் பரிட்சைக்கு ஒரு மாசம் தான் இருக்கு. அவங்க கிட்ட படிச்சா இன்னும் கொஞ்சம் மார்க் வாங்கலாம்ல?”

 

“சரி வளர், நான் இன்னைக்கு சாயங்காலம் அம்மா கிட்ட கேட்க சொல்றேன்”, என்று கவிதா சொன்னதும் “பிளான் சக்ஸஸ்”, என்று எண்ணி கொண்டாள் வளர்.

 

அதன் பின்னர் கவிதா மங்கையிடம் என்ன சொன்னாளோ, ஏது சொன்னாளோ? அன்று மாலை மது வீட்டுக்கு சென்றாள் மங்கை. அவளை பார்த்ததும் புன்னகைத்த மது “அம்மா மங்கை அக்கா வந்துருக்காங்க”, என்றாள்.

 

மல்லிகாவும் வந்து பேசி கொண்டிருக்கும் போதே கவிதாவுக்கு சொல்லி கொடுக்க சொல்லி பேச்சை ஆரம்பித்தாள் மங்கை.

 

மல்லிகா மதுவை பார்த்தாள். “அதுக்கென்ன அக்கா வர சொல்லுங்க. நானும் சாயங்காலம் நேரம் போகாம தான இருக்கேன்? நான் சொல்லி கொடுக்குறேன்”, என்று சொன்னாள் மது.

 

“ரொம்ப நன்றி மது. அப்புறம் தங்கராசு மச்சான் மகளும் கூட வருவா. அவளுக்கும் சொல்லி கொடுத்துரு. எப்படியோ இந்த ஒரு மாசம் நல்ல படிச்சதுக்கன்னா நல்ல காலேஜ்ல சேக்கலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மங்கை.

 

இப்போது பாவமாக மல்லிகாவை பார்த்தாள் மது. வளருக்கு சொல்லி கொடுக்க எதாவது சொல்லுவார்களோ என்று கவலை வந்தது.

 

“நாலு பேருக்கு சொல்லி கொடுக்குறது ரொம்ப நல்ல விசயம் மது”, என்று சொல்லி விட்டு அகன்று விட்டாள் மல்லிகா.

 

அடுத்த நாளே பூங்காவனம் மற்றும் தங்கராசுவிடம் சொல்லி விட்டு, இளஞ்செழியனிடம் மட்டும் சொல்லாமல் கவிதாவை அழைத்து கொண்டு மது வீட்டுக்கு வந்து விட்டாள் வளர்மதி.

 

மதுவும் அவர்களை வரவேற்று தன் அறையில் அமர வைத்து விட்டு அவர்களுக்கு தண்ணீர் எடுக்க கீழே வரும் போது அவளை புரியாத பார்வை பார்த்து கொண்டிருந்த வாசுதேவனின் அருகில் வந்து “நான் செஞ்ச பாவத்துக்கு அந்த சின்ன பிள்ளை மனசை கஷ்ட படுத்திராதீங்க டேடி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

அவளுக்கு அவர் வளரை எதுவும் சொல்லி விடுவாளோ என்று பயம்.

 

இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்த செழியன் “அம்மா பாப்பாவை எங்க காணும்? கவிதா வீட்டுக்கு போயிருக்காளா?”, என்று கேட்டான்.

 

“இல்லப்பா மது வீட்டுக்கு போயிருக்கா”

 

“என்னது? மதுவா?”

 

“ஆமா பா அந்த பிள்ளை அப்படி தான் கூப்பிட சொல்லுச்சு. தங்கமான பிள்ளை”

 

“அம்மா இப்ப வளர் எதுக்கு அங்க போயிருக்கா?”, என்று கடுப்புடன் கேட்டான்.

 

“பாடம் படிக்க பா”

 

“கடுப்பை கிளப்பாதீங்க. என்கிட்ட கேட்டா நான் சொல்லி தர மாட்டேனா?”

 

“கவிதா அங்க படிக்க போறாளாம் டா. அதான் இவளும் போயிருக்கா”

 

“ப்ச் அவங்க எல்லாம் ரொம்ப பெரிய இடம் மா. நம்மளை எல்லாம் மதிக்க மாட்டாங்க. இவ ஏன் இப்படி பண்றா?”

 

“செழியா, அப்படி எல்லாம் சொல்லாதப்பா. அந்த பிள்ளையை பாத்தா எனக்கு அப்படி தெரியலை. ஆனா உனக்கு பிடிக்கலைன்னா வளர் கிட்ட சொல்லு. அவ  கேட்டுக்குவா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பூங்காவனம்.

 

எட்டு மணிக்கு வளரின் வரவுக்காக காத்திருந்தான் இளஞ்செழியன். “இவ எதுக்கு முடிஞ்சு போன உறவை புதுப்பிக்க நினைக்கிறா?”, என்று கோபமாக வந்தது.

 

“அப்படி புதுப்பிச்சா அதுல உனக்கு சந்தோசம் இல்லையோ?”, என்று கேட்டு காரி துப்பியது மனசாட்சி.

 

வாசலில் நிற்கும் அண்ணன் வண்டியை பார்த்து விட்டு “இன்னைக்கு செத்தோம்”, என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றவள் அங்கே கோபமாக நின்ற செழியனை பார்த்து எச்சில் விழுங்கினாள்.

 

“வாங்க பெரிய மனுசி, என்ன போய்ட்டு வந்தாச்சா? உனக்கு நான் இது வரைக்கும் சொல்லி கொடுத்ததே இல்லையோ? அப்படி இல்லைன்னா உனக்கு சொல்லி கொடுக்குற அளவுக்கு எனக்கு மூளை இல்லைன்னு நினைச்சு அங்க போனியோ?”, என்று அவன் கேட்டதும் வளர் அழுது விட்டாள்.

 

அவள் அழுத்ததும் செழியனுக்கு உருகி விட்டது. அவளை சமாதான படுத்த

அவள் அருகில் அவன் செல்லும் போது தன்னுடைய பேகை திறந்து அதில் இருந்த ஒரு போட்டோவை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

 

என்னவென்று திருப்பி பார்த்தவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. “வளர் சுட்டுட்டு வந்துருக்கா”, என்று நினைத்து கொண்டு தன்னுடைய அறைக்குள் போட்டோவுடன் மறைந்தான்.

 

அடுத்து அவன் அறையை விட்டு வெளியே வருவதற்குள் பூங்காவனம் பல முறை அவனை அழைத்து களைத்திருந்தாள்.

 

யாரையும் கவனிக்காமல் அவ்வளவு நேரம் அவனும் அந்த போட்டோவும் என்ன செய்தார்கள் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

 

இரவு உணவை அனைவரும் சாப்பிடும் போது முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் வளர். “நீ என்ன டி இப்படி இருக்க? யார் என்ன சொன்னா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“ப்ச் ஒன்னும் இல்லை மா”, என்றாள் வளர்மதி.

 

“நாளைக்கு இன்னும் கொஞ்சம் சீக்கிரமே வந்துரு. ரெண்டாவது தெரு வழியா வர வேண்டாம் கண்ணு. நாளைக்கு வெள்ளி கிழமை”

 

“நான் நாளைக்கு போகலை மா. வீட்லயே இனி படிக்கிறேன்”, என்று வளர் சொன்னதும் “பாப்பா இதுக்கெல்லாமா கோபம்? இப்ப என்ன? அங்க போய் படிக்கணும், அவ்வளவு தான? நீ போ. அண்ணன் தெரியாம திட்டிட்டேன் போதுமா?”, என்று இறங்கி வந்தான் இளஞ்செழியன்.

 

ஈ என்று அனைத்து பல் தெரியும் படி அவனை பார்த்து சிரித்தவள் அவன் காதருகில் குனிந்து “நாளைக்கு எதுவும் சுட்டுட்டு வரணுமா அண்ணா?”, என்று கேட்டாள்.

 

“பாப்பா எனக்கு பயமா இருக்கு. என் விசயத்தை நினைச்சு படிப்பை விட்டுருவியோன்னு. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு பரிட்சைக்கு. இந்த நேரத்துல உன் மனசுல என்னை பத்தின சிந்தனை வரணுமா?”

 

“அண்ணே, அது வேற இது வேற. அதெல்லாம் நாங்க சூப்பரா படிப்போம்”

 

“ஹா ஹா, அப்படின்னா சரி தான். அப்புறம் எப்படி சொல்லி தந்தாங்க உங்க மேடம்?”

 

“சூப்பரா சொல்லி தந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்வீட் தெரியுமா? நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. உன்னை பத்தி சொன்னா ஆசையா கேப்பாங்க. நீ தான் விலகி போற”

 

ஒரு பெரு மூச்சு விட்ட செழியன் “சூடு கண்ட பூனை பாப்பா. மறுபடி பால் மேல ஆசை வர மாட்டிக்கு”, என்று எண்ணி கொண்டு எழுந்து சென்று விட்டான்.

 

நாட்கள் அப்படியே நகர்ந்தது. இன்றோடு மது வீட்டுக்கு படிக்க போய் ஒரு வாரம் ஆகி இருந்தது. அப்போது ஒரு நாள் மது அறையில் அமர்ந்து மூவரும் படித்து கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது.

 

தன்னுடைய மொபைலை எடுத்து டார்ச் ஆன் செய்த மது  “மொட்டை மாடிக்கு போவோமா? காத்து வரும்”, என்று சொல்லி அழைத்து சென்றாள்.

 

மூவரும் காற்று வாங்கி கொண்டே பேசி கொண்டிருந்தார்கள். கவிதாவும் வளரும் ஸ்கூலில் நடப்பதை பற்றி மதுவுக்கு சொல்லி கொண்டிருந்தார்கள்.

 

அப்போது மித்ரனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து காதில் வைத்த மது “சொல்லு மிட்டு”, என்றாள்.

 

ஒரு மூன்று நாளாக “இந்த மிட்டு யாரா இருக்கும்?”, என்று குழப்பத்தில் தான் இருந்தாள் வளர்.

 

மித்ரனிடம் பேசி விட்டு இவர்கள் அருகே வந்ததும் “மிட்டு யாரு டாக்டர்?”, என்று கேட்டாள் வளர்.

 

“என்னோட குளோஸ் பிரண்ட். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவனை. அவன் சொன்னா நான் என்ன வேணா செய்வேன். ஹ்ம்ம் எப்படி சொல்றது? நீ உங்க  அண்ணன் என்ன சொன்னாலும் கேப்ப தான வளர்? அதே மாதிரி தான் நாங்களும். என்னை விட வயசுல பெரியவன்னா அண்ணனு கூப்பிட்டுருப்பேன். ஒரே வயசு, அதனால பிரண்ட்”

 

“அப்பாடி”, என்று மூச்சு விட்டாள் வளர்.

 

“சரி கரண்ட் வரலை. நாம வீடியோஸ் பாப்போம். மிட்டு கூட இருக்கான். வாங்க காட்டுறேன்”, என்று சொல்லி பழைய வீடியோக்களை இருவருக்கும் காண்பித்தாள்.

 

அப்போது கரண்ட் வந்து விடவே “படிக்க போகலாமா?”, என்று கேட்டாள் மது.

 

“இந்த ஒரு வீடியோ டாக்டர்”, என்று வளர் சொன்னதும் “சரி பாருங்க. நான் அம்மா என்ன செய்றாங்கன்னு பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மது.

 

கவிதாவுடன் வீடியோ பார்த்து கொண்டிருந்த வளர் எப்படியோ அதில் இருந்த மித்ரனின் நம்பரை தன்னுடைய புத்தகத்தில் குறித்து கொண்டாள். மித்ரனின் நம்பரை வளர் திருடி இரண்டு நாள்கள் ஆகி விட்டது.

 

ஆனால் அவனிடம் பேச தைரியம் வர வில்லை வளருக்கு. அவளுக்கு என்று தனி  போன் இல்லாமல் போனாலும் வீட்டு உபயோகத்துக்கு என்று ஒரு செல் போனை வாங்கி வைத்திருந்தான் இளஞ்செழியன்.

 

அந்த போனை யாருமில்லாத நேரம் எடுப்பதும் பின் பயத்துடன் வைத்து விடுவதுமாக இருந்தாள். அவள் அவனுடைய நம்பரை திருட காரணம் “அவன் சொன்னா நான் என்ன வேணா செய்வேன்”, என்ற மதுவின் வார்த்தைகள் தான்.

 

“அவன் கிட்ட சொன்னா அண்ணியையும் அண்ணனையும் சேத்து வச்சிருவான்” இது மட்டும் தான் வளரின் எண்ணமாக இருந்தது. இருந்தாலும் அவனுக்கு அழைக்க பயமாக இருந்தது. அன்று ஞாயிற்று கிழமை. செழியன் எங்கேயோ சென்று விட்டான்.  பூங்காவனமும் தங்கராசுவும் ஒரு கல்யாணத்துக்கு சென்று விட்டார்கள்.

 

தைரியத்தை வரவழைத்து கொண்டு போனை கையில் எடுத்தாள் வளர். “என்ன பேச வேண்டும்”, என்று கோர்வையாக யோசித்து வைத்து கொண்டு அவனுடைய எண்ணை போனில் டைப் செய்தாள். ரிங் போனதும் அவள் இதயம் பந்தைய குதிரை போல வேகமாக தடதடத்தது.

 

தாகம் தணியும்……

 

Advertisement