Advertisement

அத்தியாயம் 6

 

முகவரியை

தொலைத்து விட்ட

முகிலினமாய் உன்

வாசனையை

தேடுகிறது என் உயிர்!!!!

 

வீட்டுக்கு வந்ததும் வளரை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தார்கள் தங்கராசுவும் பூங்காவனமும்.

 

“உன் அண்ணனுக்கு எப்படி பட்ட பொண்ணை கட்டி வைக்கணும்னு இனி நீயே முடிவு பண்ணு ஆத்தா. அண்ணன் தங்கச்சி விசயத்துல இனி நாங்க குறுக்க வர மாட்டோம்”, என்று பூங்காவனம் சொன்னதும் தங்கராசும் “பூவு சொன்னது சரி தான்”, என்று சொல்லி விட்டார்.

 

வளரை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு வேலையை பார்க்க சென்றான் இளஞ்செழியன். இங்கே ஹாஸ்ப்பிட்டலில் மதுவோ தனியாக அமர்ந்திருந்தாள். அவள் வாழ்க்கையும் தனியாக இருப்பது போல இருந்தது. தனிமை அவளை அச்சுறுத்தியது.

 

“எத்தனை நாள் இது தொடருமோ? ஒரு வார்த்தை என்கிட்ட பழைய படி பேசுனா என்னவாம்? நானா நெருங்கும் போது எதாவது சொல்லிட்டா சத்தியமா என்னால தாங்க முடியாது. அவனாவே வரட்டும்”, என்று நினைத்து கொண்டாள்.

 

நான்கு மணிக்கு வீட்டுக்கு வரும் மகளை கவலையுடன் மல்லிகா பார்த்தாள் என்றால் கடுப்புடன் பார்த்தார் வாசுதேவன். மகளின் சோர்ந்த முகமே அவள் சாப்பிட வில்லை என்ற உண்மையை மல்லிகாவுக்கு விளக்கியது. அதை மெய்ப்பிப்பது போல கொண்டு போன சாப்பாட்டை அப்படியே திருப்பி எடுத்து கொண்டு வந்திருந்தாள்.

 

இப்போது சாப்பிட சொன்னாலும் அவள் சாப்பிட போவதில்லை என்று நினைத்து கொண்டு ஒரு டம்பளர் ஜூஸை அவளிடம் கொடுத்தாள் மல்லிகா. மதுவுக்கும் தெம்பு தேவை பட்டது. அதை வாங்கி கொண்டவள் தன்னுடைய தந்தைக்கு எதிரே அமர்ந்து அதை பருக ஆரம்பித்தாள்.

 

ஜூஸ் குடித்ததும் டம்பளரை வைத்து விட்டு அறைக்கு செல்லலாம் என்று எழுந்தவளிடம் “மது மா கொஞ்சம் உக்காறேன். அப்பா உன்கிட்ட ஒரு விசயம் பேசணும்”, என்றார் .

 

மறுபடியும் அமர்ந்தவள் “சொல்லுங்க டேடி”, என்றாள்.

 

“நான் உனக்கு…. உனக்கு …. மாப்பிள்ளை பாக்க போறேன்”, என்று வாசுதேவன் சொன்னதும் அதிர்ந்து போய் அவரை பார்த்தாள் மது.

 

“என்னைக்காவது அப்பா இப்படி வந்து சொல்லுவாரோ?”, என்று பல தடவை கலங்கி இருக்கிறாள். ஆனால் இன்று நடந்ததும் பதறி போனாள்.

 

அருகில் அமர்ந்திருந்த மல்லிகாவை பார்த்தாள் மது. அவள் முகமும் தவிப்புடன் தான் இருந்தது. தன்னுடைய பதிலுக்காக வாசுதேவன் காத்திருக்கிறார் என்று புரிய அவரை பார்த்தவள் “அதெல்லாம் வேண்டாம் டேடி. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் ரூமுக்கு போறேன்”, என்றாள்.

 

“என்ன வேண்டாம்? ஏன் வேண்டாம்?”, என்று கேட்ட வாசுதேவனின் குரலில் சூடு சற்று ஏறி இருந்தது.

 

“வாழ்க்கைல ஒரு தடவை தான் பா கல்யாணம் ஆகும்”, என்று தளர்ந்த குரலில் சொன்னாள் மது.

 

“அது கல்யாணமே கிடையாது. அந்த கயிறையே அத்து எறிஞ்சுட்ட தான? அப்புறம் என்ன?”

 

“அன்னைக்கு நான் அதை செய்யலைன்னா உங்களை இழந்துருப்பேனே டேடி?”, என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

 

“அதெல்லாம் முடிஞ்சு போன விசயம் மது. எல்லாத்தையும் மறந்துட்டு புது லைப் ஸ்டார்ட் பண்ணு. எனக்கு நீ இப்படி இருக்குறது பிடிக்கலை. அப்பா சொன்னா கேப்ப தான?”

 

“கல்யாணமே மறக்க முடியாத ஒன்னு. ஆனா அதை விடவும் அவர் கூட வாழ்ந்துருக்கேன். அதை எப்படிப்பா மறக்க முடியும்?”

 

“மது அது ஒரு ஆக்சிடென்ட்”

 

“ப்ச் , இல்லை அது என்னோட வாழ்க்கை”

 

“என்னை கோப படுத்தாதே மது. நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறேன்”

 

“ஒரு கேள்வி கேக்கட்டுமா டேடி?”

 

“ம்ம்”

 

“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துறாது. என்னோட நிலைமையை புரிய வைக்க தான் நான் இப்படி கேக்குறேன். உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு அஞ்சு வருசம் கழிச்சு உங்களையும் என்னையும் விட்டுட்டு அம்மா இறந்துருந்தா நீங்க என்ன டேடி செஞ்சிருப்பீங்க?”

 

“மது”, என்று கத்தினார் வாசுதேவன்.

 

“கத்தாதீங்க டேடி. என் மனசை புரிய வைக்க தான் கேள்வி கேக்குறேன். அந்த நேரத்துல நீங்க ரெண்டாவது கல்யாணம் பன்னிப்பீங்களா?”, என்று மது கேட்டதும் தன்னுடைய காதுகளை மூடி கொண்டாள் மல்லிகா.

 

ஆனாலும் அவள் கணவரின் ஒற்றை பதிலுக்காக காத்திருந்தாள்.

 

“இடியட் மாதிரி பேசாத மது. நான் எப்படி உங்க அம்மாவை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிப்பேன்? அவளை தவிர என் மனசுல யாரும் இருக்க முடியாது. வேற பொண்ணோட நிழலை கூட நான் தொட மாட்டேன்”, என்று வாசு தேவன் சொன்னதும் உயிர்த்தாள் மல்லிகா.

 

ஒரு விரக்தி சிரிப்பை சிந்தினாள் மது. “உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா டேடி? ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கை வாழ்க்கை தான். இந்த ஜென்மத்துல எனக்கு அவர் தான். அதுல எந்த மாற்றமும் இல்லை”, என்று சொன்னதும் விக்கித்து போய் அவளை பார்த்தவர் “இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என்னை மீறி அவன் கூட போய் வாழ போறியா?”, என்றார்.

 

“கண்டிப்பா மறுபடியும் உங்களுக்கு பிடிக்காத விசயத்தை செய்ய மாட்டேன் டேடி. எனக்கு துணையா நீங்க இருக்கீங்க. அம்மா இருக்காங்க. உங்க காலத்துக்கு அப்புறமும் நான் இந்த ஊர்ல தான் இருக்க போறேன். அவர் இருக்குற ஊருல நான் இருக்கேன் அப்படிங்குறதே எனக்கு போதும் டேடி. ஒரு டாக்டரா வளரை நான் காப்பாத்திட்டேன். நீங்க வேற எதாவது முடிவு எடுத்தா என்னை காப்பாத்த எந்த டாக்டரும் வர மாட்டாங்க”, என்று சொல்லி விட்டு மாடிக்கு சென்று விட்டாள்.

 

தளர்ந்து போய் செல்லும் மகளை பார்க்கையில் இருவருக்கும் வலித்தது. தன் கணவனை முறைத்தாள் மல்லிகா. அறைக்குள் வந்த மதுவுக்கோ நெஞ்சு வெடிப்பது போல அழுகை வந்தது. உடனடியாக செழியனிடம் தஞ்சம் புக வேண்டும் போல் மனது துடித்தது.

 

அவன் காலடியில் விழுந்தால் தான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்பது அவள் அறிந்ததே. ஆனால் அதை செய்ய விடாமல் அவளை கட்டி போட்டது அவள் செய்த தவறு.

 

தெரியாமல் செய்தால் தான் அது தவறு. தெரிந்தே அவள் செய்தது பாவம். அதை ஒரு நாளும் அவன் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். அன்பான பெற்றோர் இருக்கிறார்கள். உயிரினும் மேலாக எண்ணும் கணவனும் காதலனுமான செழியனும் அதே ஊரில் தான் இருக்கிறான்.

 

ஆனால் மனதில் மட்டும் வெறுமை. யாருமே இல்லாதது போல உணர்ந்தவள் கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுது கொண்டே இருந்தாள்.

 

அப்போது அவளுடைய போன் ஒலித்தது. மித்ரன் தான் அழைத்தான். அப்போதைய மனநிலையில் “நான் இருக்கிறேன் உனக்கு”, என்று சொல்வது போல இருந்தது அவனுடைய அழைப்பு.

 

எந்த அப்பழுக்கும் படியாத சுயநலம் பாக்காத அழகான உறவு என்று ஒன்று உண்டென்றால் அது நட்பு மட்டுமே.ஒரே ஒரு தூய்மையான நட்பு கிடைத்தால் போதும். ஒருவன் வாழ்க்கையில் சோகம் என்று ஒன்று இருக்கவே செய்யாது.

 

“இவன் மட்டும் இல்லாம போயிருந்தால் நான் என்னவாகி இருப்பேன்?”, என்று எண்ணி கொண்டவள் அவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

“ஹேய் குரங்கு குட்டி”, என்று அழைத்த மித்ரனின் காதில் விழுந்தது இதயமே வெடித்து சிதறுவது போல அழுத மதுவின் அழுகுரல் தான்.

 

தவித்து துடித்து போனவன் போன் காலை கட் செய்து விட்டு வீடியோ காலில் அழைத்தான். அதை அவள் எடுத்ததும் அவள் முகத்தை பார்த்து பதறினான்.

 

“மது, மது என்ன ஆச்சு? ஏன் இப்படி?”, என்று ஒவ்வொரு வார்த்தையாக அவன் கேட்டும் பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.

 

அவள் இப்படி அழுது அவன் பார்த்ததே இல்லை. அவன் எவ்வளவு கேட்டும் அவள் பதில் சொல்லவே இல்லை. தன்னுடைய கேள்வி எதுவும் அவள் மனதை சென்றடையவில்லை என்று புரிந்தவன் “அவள் அழுது தன் சோகத்தை கரைக்கட்டும்”, என்று எண்ணி பேசாமல் அவளை பார்த்த படியே இருந்தான்.

 

கலகலவென்று புன்னகைத்து கொண்டு எப்போதும் வற்றா புன்னகையோடு இருக்கும் மதுவா இது? அப்படி என்ன இவள் மனதில் இருக்கிறது என்ற கேள்வி அவனுக்குள் உதயமானது.

 

கொஞ்சம் கொஞ்சமாக அழுகை குறைந்து கடைசியில் விசும்பி கொண்டே அவனை பார்த்தாள் மது. கண்களில் வலியுடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான் மித்ரன்.

 

தன் தவறை உணர்ந்த மது அழுகையை கட்டு படுத்தி கொண்டு “சாப்டியா மிட்டு?”, என்று கேட்டாள்.

 

“ஹ்ம்ம் நீ சாப்டியா?”

 

“இல்லை ஜூஸ் குடிச்சேன்”

 

“சரி எதுக்கு இந்த அழுகை? இப்படி உயிரையே உருக்குற மாதிரி நீ அழ காரணம் என்ன மது?”

 

“அப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னார். என்னால தாங்கிக்கவே முடியலை. கஷ்டமா இருந்துச்சு. யாருமே எனக்கு இல்லாத மாதிரி இருந்துச்சு. அதான் அழுதுட்டேன் இப்ப கொஞ்சம் பெட்டரா பீல் பண்றேன் டா”

 

“அதுக்கு தான் அழட்டும்னு விட்டேன். அழுததுனால கண்ணு வலிக்கும். கொஞ்ச நேரம் தூங்கு மது”

 

“ஹ்ம்ம் சரி வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு அவள் வைத்ததும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் மித்ரன்.

 

“டேய் என்ன டா உக்காந்துட்டே தூங்கிட்டு இருக்க?”, என்று கேட்ட படி அவன் அருகில் அமர்ந்தாள் அவனுடைய அன்னை வைதேகி.

 

மகனும் மனைவியும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார் மித்ரனின் அப்பா கோகுல்.

 

“இந்த மதுவை தான் புரிஞ்சிக்கவே முடியலை மா. எப்பவுமே புரியாத புதிரா இருக்கா”, என்று யோசனையுடன் சொன்னான் மித்ரன்.

 

“என்ன டா இது? அவ கூடவே இருக்க? உனக்கு அவளை பத்தி புரியலையா?”, என்றார் கோகுல்.

 

“ப்ச் உண்மையிலே புரியலைப்பா. சென்னைல கிடைச்ச போஸ்டிங்கை வேண்டாம்னு சொல்லிட்டு அந்த பட்டிக்காட்டுக்கு போனா. அங்க போன நாளில் இருந்து தினமும் மூடவுட் ஆகுறா.. இன்னைக்கு என்னடான்னா அப்படி ஒரு அழுகை.. மது அப்படி அழுது நான் பாத்ததே இல்லை பா”

 

“மது அழுதாளா? என்ன ஆச்சு டா?”

 

“தெரியலை பா, மாமா கல்யாணம் பத்தி பேசுனாங்களாம். அதுக்கு அழுதாளாம்”, என்று மித்ரன் சொன்னதும் வைதேகி கண்களை ஒரு நொடி மூடி திறந்தாள்.

 

தனக்கு உண்மை தெரிந்தும் அதை சொல்ல முடியாமல் தொண்டை குழிக்குள் மறைத்தவள் “விடு மித்ரா அவ சரியாகிருவா. நீ எழுந்து சாப்பிட வா. நீங்களும் வாங்க”, என்று சொல்லி விட்டு பேச்சை திசை திருப்பி விட்டாள்.

 

அன்று இரவும் உணவு வேண்டாம் என்று மறுத்த மதுவை பாலை மட்டும் குடிக்க கொடுத்து தூங்க வைத்தாள் மல்லிகா.

 

காலை எழுந்ததும் கொஞ்சம் புத்துணர்வாக உணர்ந்தாள் மது. பின் குளித்து கிளம்பி கீழே வந்தவளை சாப்பிட சொன்னாள் மல்லிகா.

 

“நேத்து காலைல சாப்பிட்டது”, என்று நினைத்து கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அவள் எதிரே வந்து அமர்ந்த வாசுதேவனை பார்த்து புன்னகைத்தாள். அவருக்கு உள்ளுக்குள் உருகியே விட்டது.

 

இந்த புன்னகையை அவள் முகத்தில் எப்போதும் பார்க்க வேண்டும் என்பது தானே அவருடைய ஆசையே.

 

“அப்பா மேல கோபமா மது மா?”, என்று கேட்டார் வாசுதேவன்.

 

“செய்றதையும் செஞ்சிட்டு உங்க அப்பா கொஞ்சுறார் மது ஏமாந்துராத”, என்ற படியே அங்கு வந்தாள் மல்லிகா.

 

“சும்மா இருங்க மா. உங்க மேல எனக்கு கோபமே இல்லை டேடி”, என்றாள் மது.

 

“யாருக்கும் யாரு மேலயும் கோபம் இல்லை. நிஜமான அக்கறை தான் இருக்கு. ஆனா நம்மளை சுத்தி பின்னிருக்குற சிக்கல்கள் தான் நம்மளை இப்படி ஆட்டி படைக்குது. ரெண்டு பேரும் பேசாம சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் மல்லிகா.

 

சாப்பிட்டு முடித்ததும் இருவரிடமும் சொல்லி விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள் மதுமிதா. அவள் போனதும் மல்லிகா அருகில் சென்று அமர்ந்தார் வாசுதேவன்.

 

“எப்படி இருந்த மனுஷன்?”, என்று நினைவு வந்தது மல்லிகாவுக்கு. அவள் பார்வை புரியாமல் “என் மேல உனக்கு கோபமா மல்லி?”, என்று கேட்டார் வாசுதேவன்.

 

“உங்க மக கிட்ட கேட்ட கேள்வியை என்கிட்டயும் கேக்குறீங்க? என்ன விஷயம்?”

 

“ப்ச் தெரியலை மல்லி. எனக்கு மனசே சரி இல்லை. என்ன செய்றதுன்னு ஒண்ணுமே புரியலை”

 

“என்ன ஆச்சுங்க?”

 

“வேற என்ன ஆகணும்? மதுவை பத்தின கவலை தான். அவளை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஊருல இருக்குற யாராவது தினமும் கேக்காங்க. பொண்ணுக்கு கல்யாணம் எப்பன்னு? அவளுக்கு  இருபத்தி ஆறு வயசாகுது மல்லி. கவலை இல்லாம எப்படி இருக்க முடியும்?”

 

….

 

“என்ன மல்லி அமைதியா இருக்க?”

 

“நான் இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? நீங்களாச்சு உங்க மகளாச்சு”

 

“இப்படி சொன்னா எப்படி மல்லி? உனக்கு அவ மகள் இல்லையா?”

 

“பெத்தா மட்டும் மகள் ஆகிருவாளா? என் பிள்ளையை சரியா வளக்கலையேன்னு ஒவ்வொரு நிமிஷமும் மனசு ரணமா இருக்கு”

 

“அது என்னால தான மல்லி? அவளை கண்டிக்க விடாம செல்லம் கொடுத்தது நான் தான். அதுக்கு தான் அவஸ்தை படுறேன். ஆனா அவளும் உள்ளுக்குள்ள வலில துடிச்சிட்டு தான் இருக்கா”

 

“ஹ்ம்ம்”

 

“முடிஞ்சு போனதை மாத்த முடியாது மல்லி. இனி என்ன செய்யன்னு எதாவது சொல்லு மா. எனக்கு யோசிச்சு யோசிச்சு குழப்பமா இருக்கு”

 

“இது எல்லாத்துக்கும் ஒரு தீர்வு தான் இருக்குங்க. ஆனா அது நடக்காது”

 

“நீ என்ன சொல்றன்னு புரியுது. அதுக்கு என் மனசு ஒப்பமாட்டிக்கு. அது தப்பு மா”

 

“ஏற்கனவே நடந்த தப்பை சரி பண்ண தாங்க நினைக்கணும். அதுக்கு பதிலா புது தப்பை செய்ய கூடாது. அதுக்கு மது மனசு தயாரா இல்லை. அவ கண் முன்னாடி உயிரோட இருக்கணும்னு எப்படி அழுதோம்? இப்ப மறுபடி அந்த நிலைமை வரணுமா? அவளுக்கு எது சந்தோஷமோ அதை தானங்க நாம செய்யணும்”

 

“ஆனா அந்த பையன்….”

 

“நல்ல வேலைல இருக்கான். நல்ல குடும்பம். அதை விட மது மனசு. இதை விட வேற என்னங்க வேணும்”

 

“இருந்தாலும் பழசை நினைச்சு….”

 

“இங்க பாருங்க நான் சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கப்புறம் குத்துதே குடையுதேன்னு என்கிட்ட வந்து புலம்பாதீங்க. இவர் மட்டும் இவரோட பொண்டாட்டியை தவிர வேற பொண்ணை தொட மாட்டாராம். அவளை மட்டும் இன்னொருத்தனுக்கு கட்டி வைக்கலாமா? நேத்து நீங்க சொல்லும் போது உங்க காதலை நினைச்சு பெருமையா இருந்துச்சு. ஆனா அவ காதலை மதிக்காம இருக்கீங்களே?”

 

“அது காதலே இல்லை மல்லி பருவ கோளாறு”

 

“ப்ச் முன்னாடி வந்தது வேணும்னா அப்படி இருக்கலாம். இப்ப அவளுக்கு வயசு என்ன? இப்ப அவ குழந்தை இல்லைங்க. எல்லாம் தெரிஞ்சவ. உலகத்தை பத்தி நல்லா புரியும். அப்புறம் நீங்களும் உங்க பொண்ணும் சேந்து அந்த பையனை காய படுத்திருக்கீங்க? அதை எப்படியாவது சரி செய்யணும்”

 

“அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத”

 

“அவன் பக்கம் சப்போர்ட் பண்ணலைங்க. அவனும் தப்பு பண்ணிருக்கான் தான். ஆனாலும் நம்ம பொண்ணோட வாழ்கையாச்சே. அவனுக்கு கோபம் எல்லாம் போயிருச்சானு கூட தெரியலை. கூடிய சீக்கிரம் சரி ஆயிட்டுன்னா சந்தோசம். யோசிச்சு முடிவெடுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

Advertisement