Advertisement

அத்தியாயம் 5

 

என் இதயத்தை

தென்றலாய்

வருடி செல்லும்

உயிரின் தாகம் நீயே!!!!!

 

“என்ன பாக்குற? நீ மறந்துட்டியா எல்லாத்தையும்? பழசை பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை மது. அவங்க அவங்க நியாயம் அவங்க அவங்களுக்கு. அங்க நோயாளிங்க உனக்காக காத்திருப்பாங்க. முகம் கழுவிட்டு போ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மல்லிகா.

 

“அம்மா சொல்றது நியாயம் தான். எதையுமே நினைக்க கூடாது. முதல்ல எதையும் எதிர்பார்க்க கூடாது. ஆசையும் எதிர்பார்ப்பும் தான் மனுஷனோட துன்பத்துக்கு காரணம். எதிர்பார்ப்பு இல்லைன்னா எந்த விதமான ஏமாற்றமும் இருக்காது. இத்தனை நாள் மாதிரி எதையும் யோசிக்காத”, என்று தனக்குள் சொல்லி கொண்டு முகம் கழுவ சென்றாள்.

 

முகம் கழுவி வந்தவள் சேலையை ஒழுங்காக கட்டி தலையை சீவி விட்டு கீழே வந்தாள். அங்கே குற்ற உணர்வுடன் அவளை எதிர் பார்த்த படி நின்றார் வாசு தேவன். அவரை பார்த்து மது  மென்மையாக சிரித்ததும் அவர் முகமும் மலர்ந்தது.

 

“மது சாப்பிட வா. நீங்களும் வாங்க”, என்றாள் மல்லிகா. சாப்பிட விருப்பம் இல்லை என்றாலும் பெற்றவர்களுக்காக சாப்பிட அமர்ந்தாள் மது.

 

ரெண்டு இட்லியை கூட அவள் கஷ்ட பட்டு தான் உள்ள தள்ள வேண்டி இருந்தது. “எனக்கு போதும் மா. நான் கிளம்புறேன். வரேன் பா”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

 

இவள் அங்கே போகும் போது தாயம்மா வளரை திட்டி கொண்டிருந்தாள். “அண்ணன் மேல பாசத்துல கல்யாணத்தை நிறுத்த தற்கொலை தான் செஞ்சிக்கணுமா? இந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னா அண்ணன் கேட்டுக்க போறான். வேற எதாவது செஞ்சு நிறுத்திருக்கலாம்ல?  என்ன பொண்ணு போ”, என்று புலம்பி கொண்டே இருந்தாள்.

 

அவள் பேச்சை கேட்ட படி அமர்ந்திருந்தான் இளஞ்செழியன். வளரோ கண் விழிக்காமல் படுத்திருந்தாள். “வாங்க டாக்டரம்மா எல்லாம் சுத்தம் செஞ்சுட்டேன். தண்ணி பிடிச்சு வச்சிட்டேன். வேற எதாவது செய்யணுமா?”, என்று கேட்டாள் தாயம்மா.

 

தாயம்மா சொன்னதும் திரும்பி வந்த மதுவை பார்த்தவன் முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகத்தை கண்டதுமே அவன் முகம் கூம்பி போனது. அவள் போகும் போது அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது இல்லாதது போன்று உணர்ந்தான்.

 

“வீட்ல எதாவது சொல்லிருப்பாங்க. அதான் அழுதிருக்கா”, என்று நினைத்து கொண்டான். அவளோ எங்கே அவனை பார்த்தால் மேலும் அழுதுவிடுவோம் என்பதால் அவன் புறமே திரும்பாமல் இருந்தாள். அதை அவனும் உணர்ந்து தான் இருந்தான்.

 

“நோயாளிகள் வந்து விட்டார்கள்”, என்று தாயம்மா சொன்னதும் “இதுக்கு மேல அவள் எதிரே நின்று அவளை சலன படுத்த வேண்டாம்”, என்று நினைத்தவன் “நான் வெளியே இருக்கேன் அக்கா. எதாவதுன்னா கூப்பிடுங்க”, என்று தாயம்மாவிடம் சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அவன் போனதும் மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. அவனை வைத்து கொண்டே அவள் வேலையை எப்படி செய்வதாம்.

 

வெளியில் அமர்ந்திருந்த செழியனும் அவள் நினைப்பில் தான் இருந்தான். “நான் உண்டு, என் மனசு உண்டு கனவு உண்டுன்னு இருந்தேன். இவளை யாரு இப்ப இங்க வர சொன்னது. மனசு பழசை எல்லாம் நினைக்க சொல்லுதே. அதே நேரம் வருத்தமாவும் இருக்கே”, என்று மனதுக்குள்ளே அவளை திட்டி கொண்டிருந்தான்.

 

மதுவோ எதையும் யோசிக்காமல், யோசிக்க கூடாது என்ற வைராக்கியத்தோடு வேலையில் கவனம் செலுத்தினாள். இடையில் வளருக்கு டிரிப்சையும் மாற்றினாள்.

 

“டாக்டரம்மா செழியன் தம்பியை உள்ளார கூப்பிடவா? வரிசையில நிக்குற ஊருகாரங்க எல்லாம் என்னன்னு விசாரிக்காங்க. தம்பி சங்கடமா நிக்குது”, என்றாள் தாயம்மா.

 

“அவரை உள்ள கூப்பிடுங்க”, என்றாள் மதுமிதா. “தம்பி உங்ககளை டாக்டரம்மா உள்ள கூப்பிடுறாங்க”, என்று தாயம்மா சொன்னதும் “வளருக்கு எதுவோ?”, என்று நினைத்து பதட்டத்துடன் உள்ளே வந்தான்.

 

தவிப்பான அவன் முகத்தை பார்த்தவள் “வளர் கண் முழிக்க மதியம் ஆகும். அது வரை நான் இங்க தான இருக்கேன். நான் பாத்துக்குறேன். நீங்க இங்க இருக்க வேண்டாம். வீட்டுக்கு போங்க”, என்றாள்.

 

“இல்லை வீட்டுக்கு போனா நிம்மதியா இருக்காது. நான் இருக்கேனே”, என்றான் இளஞ்செழியன்.

 

“இங்க இருந்தாலும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. எதாவது கேட்டு காய படுத்துவாங்க. நான் வளரை பாத்துக்குவேன். என் மேல நம்பிக்கை இருந்தா…”

 

“அது அதிகமா இருக்கு. எப்பவும் இருக்கும். நீ… நீங்க…. பாத்துக்கோங்க. நான் மதியம் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். ஒரு புன்னகை அவள் உதட்டில் உதயமானது.

 

வீட்டுக்கு சென்றவனிடம் பெற்றவர்கள் வளரை பற்றி விசாரித்தார்கள். அவர்களிடம் நிலைமையை சொன்னவன் தளர்வாக அமர்ந்தான்.

 

ஹாஸ்ப்பிட்டலில் இருந்த மது வளர் அருகே ஒரு ஸ்கிரீனை இழுத்து போட்டு அவளை மறைத்து வைத்து விட்டு மற்ற நோயாளிகளை பார்வையிட்டாள்.

 

மதியம் ஒரு மணி வரை வீட்டில் இருந்த செழியன் அதற்கு மேல் இருக்க முடியாமல் ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்தான். அங்கே மது மட்டும்  தான் அமர்ந்திருந்தாள். அவனை பார்த்ததும் எழுந்த தடுமாற்றத்தை மறைத்து கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டாள்

 

“வளர் கண்ணு முழிச்சாளா?”, என்று கேட்டான் செழியன்.

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிருவா”

 

“நீங்க சாப்பிட போகணுமா?”

 

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க தான் ரொம்ப சோர்வா தெரியுறீங்க. நீங்க சாப்பிடலையா?”

 

“என் பாப்பாவை இந்த நிலைமைல வச்சிட்டு நான் என்ன சாப்பிட? எல்லாம் என்னால தான்”

 

“கல்யாண பிரச்சனை தான? எதுக்கு உங்க தங்கச்சி உங்களை கல்யாணம் பண்ண விடாம தடுக்குறா? உங்க சொந்த அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?”, என்று மது கேட்டதும் அவள் அருகில் வந்த செழியன் “நீ இப்ப என்ன சொன்ன?”, என்று கடுப்புடன் கேட்டான். அவன் கண்கள் கோபத்தில் சிவந்து விட்டது.

 

அவன் கோபத்தில் மிரண்டவள் “இல்லை அந்த வள்ளியை… கல்யாணம்…”, என்று சொன்னதும் அடுத்த நொடி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் இளஞ்செழியன்.

 

“எவ்வளவு கொழுப்பு இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ? திமிரா டி? எத்தனை வருஷம் ஆனாலும் உன் திமிர் உன்னை விட்டு போகாதுள்ள? நான் என்ன செய்யணும் எது செய்யணும்னு நீ ஒன்னும் சொல்ல தேவை இல்லை, புரிஞ்சதா? என் தங்கச்சி என்னை புரிஞ்சு வச்சிருக்கிற அளவு கூட உனக்கு என்னை பத்தி தெரியலைல? ப்ச் போடி. உன்னை போய்…”, என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வெளியேறினாள் மதுமிதா.

 

“இப்பவும் பேசிட்டு இருக்கும் போது பாதிலே போறா பாரு?”, என்று நினைத்து கொண்டு வளர் அருகில் சென்று அவள் கையை பற்றி கொண்டான்.

 

“அவசர பட்டு கை நீட்டிட்டனே”, என்று மனதுக்குள் வருந்தவும் செய்தான் செழியன்.

 

ஹாஸ்ப்பிட்டலில் இருந்து வெளியே வந்த மதுவின் கன்னங்கள் எரிந்தது, கண்கள் கலங்கியது. ஆனால் உதடுகளில் மட்டும் புன்னகை இருந்தது.

 

அவன்  அடித்ததை மனதுக்குள் நெடு நாள் இருந்த வலிக்கு அவன் மருந்து போட்டது போல உணர்ந்தாள். வீட்டுக்கு வந்ததும் அவள் கன்னத்தில் இருந்த தடத்தை மல்லிகா கண்டு கொண்டாள்.

 

ஆனால் எதுவும் சொல்லாமல் “சாப்பாடு எடுத்து வைக்கவா மது?” என்று கேட்டாள்.

 

“இன்னும் வளர் கண்ணு முழிக்கலை மா. நான் அங்க போய் சாப்பிடுறேன்”, என்று சொன்ன மது கிட்சன் சென்று கையை கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் சாப்பாடை அடைத்தாள்.

 

ஹாலில் அமர்ந்து அங்கே நடப்பதை பார்த்து கொண்டு இருந்த வாசுதேவன் புருவம் உயர்த்தினார். மல்லிகாவும் குழப்பத்துடன் பார்த்து கொண்டு தான் இருந்தாள்.

 

சாப்பாடு எடுத்த மதுவோ அதை ஒரு பையில் வைத்து எடுத்து கொண்டு “கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் மா”, என்று அவசரமாக சென்று விட்டாள்

 

மது போனதும் “இதுக்கு தான்,… இதுக்கு தான்…. இந்த ஊருக்கு வர வேண்டாம்னு சொன்னேன். நீ சொன்ன பேச்சு கேட்டியா? வந்து அதுக்குள்ளே பிரச்சனை முளைக்குது பாத்தியா? இப்ப உனக்கு நிம்மதியா?”, என்று கத்தினார் வாசுதேவன்.

 

அவரை முறைத்த மல்லிகா “இப்ப என்ன நடந்துச்சுன்னு குதிக்கீங்க?”, என்று கேட்டாள்.

 

“என்ன நடந்துச்சா? இப்ப அவ அந்த குடும்பத்துக்கிட்ட ஒட்டி உறவாட தான் சாப்பாடு எடுத்துட்டு போறா. அது புரியுதா?”

 

“உங்களுக்கே புரியும் போது எனக்கு புரியாதா? நானா எடுத்துட்டு போக சொன்னேன்? என் கிட்ட கோப படுறீங்க? போகும்போதே தடுக்க வேண்டியது தான?”

 

“விளையாடாத மல்லி. எனக்கு கோபமா வருது. மதுவுக்கு கல்யாணம் பண்ற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது”

 

“இப்ப என்னை என்ன தான் பண்ண சொல்றீங்க?”

 

“நீ எதுக்கு இந்த ஊருக்கு அவ போறேன்னு சொன்னதும் சரின்னு சொன்ன? இப்ப பாத்தியா? எனக்கு என்ன நடக்க போகுதோன்னு பயமா இருக்கு. இதுக்கு முடிவு கட்டணும்”

 

“என்ன செய்ய போறீங்க?”

 

“அவளுக்கு மாப்பிள்ளை பாக்க போறேன்”

 

“ப்ச் என்ன உளறுறீங்க?”

 

“உளறுறேனா? உனக்கு கொஞ்சமாவது பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைப்பு இருக்கா, இல்லையா?”

 

“ஏங்க நாம நினைக்கிறது முக்கியம் இல்லை. அது மது கைல தான் இருக்கு. தேவை இல்லாம நீங்களும் பிரச்சனை பண்ணாதீங்க”

 

“நான் கவலை படுறது உனக்கு பிரச்சனை பண்ற மாதிரி இருக்கா?”

 

“அப்படி தான் இருக்கு. அவ வாழ்க்கையை முடிவு பண்ற நிலைமைல நாம இல்லை. அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க. இதுக்கு மேல உங்க இஷ்டம். நீங்க அவ கிட்டயே பேசிக்கோங்க”, என்று சொன்ன மல்லிகாவின் கண்களில் கண்ணீர் வந்தது.

 

ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்த மதுவோ செழியன் எதிரே போய் நின்றாள். காலையில் அவனை கண்டதும் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது மீண்டும் வந்திருந்தது.

 

தன்னுடைய டேபிளை ஒதுங்க வைத்த மது அவனை திரும்பி பார்த்து “இங்கே வாங்க”, என்று அழைத்தாள்.

 

குழப்பத்துடன் எழுந்து வந்தவனை “உக்காருங்க”, என்று சேரை காண்பித்தாள்.

 

அப்போது தான் அவள் கையில் இருந்த உணவு கூடையை கண்டவன் அவளை முறைத்தான். ஆனால் அவனை அறியாமலே அவன் பார்வை அவள் கன்னத்தில் பதிந்தது. அவன் கை மெதுவாக அவள் கன்னத்தை வருட மேலே உயர்ந்தது. பின் தன்னை கட்டு படுத்தி கொண்டான்.

 

அவளோ அதை கவனிக்காமல் “உக்காருங்க. காலைல இருந்து சாப்பிடலை. இப்பவாது சாப்பிடுங்க”, என்றாள்.

 

“உன்னோட பிச்சைகார சாப்பாடு எனக்கு தேவை இல்லை”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னவன் முறைப்புடன் வளர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

கண்களில் நீர் வழிய அதை எல்லாம் உள்ளே எடுத்து வைத்து விட்டு அவள் டேபிளில் தலை வைத்து படுத்து விட்டாள் மது. அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. செழியனும் பழசை தான் நினைத்து கொண்டிருந்தான்.

 

கண் விழித்த வளர் மெதுவாக அந்த அறையை நோட்டம் விட்டாள். காலையில் நடந்தது அனைத்தும் நினைவில் வந்தது. “அண்ணனை காப்பாத்திட்டோம்”, என்ற நிம்மதி உள்ளுக்குள் உதித்தது.

 

அங்கு செழியனும் மதுவும் வேறு பக்கம் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார்கள். “இப்படி இருக்காங்களே. இவங்களை எப்படி சேத்து வைக்க?”, என்று கவலை பிறந்தது.

 

உடம்பெல்லாம் அடித்து போட்டது போல வலித்தது. வலி தாங்க முடியாமல் அவளை அறியாமலே வெளி வந்தது முனங்கல்.

 

வளரின் முனங்களில் தங்கள் நினைவுகளில் இருந்து வெளியே வந்தார்கள் செழியனும் மதுவும்.

 

அண்ணனாக பதறிய படி “வளரு”, என்று சொல்லி கொண்டே அவள் கையை பற்றி கொண்டான் செழியன். ஓடி வளர் அருகில் வந்து அவள் உடல் நிலையை பரிசோதித்த மது “ஏன் வளர் இப்படி பண்ண? இப்ப எப்படி இருக்கு?”,என்று கேட்டாள்.

 

“பரவால்ல டாக்டர்”, என்று சோர்வாய் புன்னகைத்தாள் வளர். தன் அண்ணணை பார்த்தவள் “என்னை மன்னிச்சிருண்ணே. நான் பேசி பாத்தேன் முடியலையா? அதனால தான்”, என்றாள்.

 

“அதுக்காக இப்படி செய்யணுமா பாப்பா? நான் உன்கிட்ட இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கலை. என்னை மீறி எதுவும் நடந்துறாது குட்டி. நான் பாத்துக்குவேன். நீ இப்படி செஞ்சு உனக்கு எதாவது ஆகிருந்தா நான் உயிரோடே இருந்துருக்க மாட்டேன்”

 

“அண்ணே”

 

“ஆமா பாப்பா உன்னை காவு கொடுத்துட்டு நான் மட்டும் சந்தோசமா இருப்பேனா? பதறிட்டேன் தெரியுமா?”

 

“எனக்கு இந்த ஜென்மத்துல கிடைச்சிருக்குற செல்ல அண்ணனை விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிருவேனா? எல்லாரும் பாக்குற மாதிரி தான மருந்தை குடிச்சேன். கண்டிப்பா காப்பாத்திருவாங்கன்னு தெரியும். நான் எப்படிண்ணே உன்னை விட்டு போவேன்? உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அண்ணி கூட செல்லம் கொஞ்சணும். என் மருமகனை நானே வளக்கணும். இவ்வளவு ஆசை இருக்கும் போது அவ்வளவு சீக்கிரம் போயிருவேனா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் வளர்.

 

செழியன் உதடுகளிலும் அழகான புன்னகை பிறந்தது இருவரின் பாசத்தை வியந்து போய் பார்த்தாள் மதுமிதா. அவள் வாழ்க்கையை அல்லவா வளர் காப்பாற்றி இருக்கிறாள். அந்த நன்றி கடன் அவள் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.

 

அதை வெளி காட்டி கொள்ளாமல் அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள். அப்போது தான் செழியனும் மதுமிதாவை பார்த்தான்.

 

“கொஞ்சம் சீண்டணும்”, என்ற எண்ணம் வந்து “ஏன் பாப்பா உனக்கு அண்ணின்னா அவ்வளவு பிடிக்குமா? எனக்கு பொண்ணு எல்லாம் பாத்துட்டியா?”, என்று கேட்டான்.

 

மது அவனை முறைத்தாள். இருவரையும் சிரிப்புடன் பார்த்த வளர் “பொண்ணு பாக்கலை ஆனா என் அண்ணி இப்படி தான் இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கு”, என்றாள் வளர்.

 

ஒரு வித குறு குறுப்போடு அவளை பார்த்தாள் மது.

 

“என்ன ஆசை பாப்பா?”, என்று கேட்டான் இளஞ்செழியன்.

 

மண்டையை தட்டி யோசித்த வளர் “ஒரு வார்த்தைல சொல்லனும்னா இந்த டாக்டர் மாதிரி இருக்கணும்”, என்றாள்.

 

முகம் சிவந்து போனாள் மது. அதை ரசனையோடு பார்த்தான் செழியன். இருவரையும் பார்த்து நிறைவான புன்னகை புரிந்தாள் வளர்.

 

“வீட்டுக்கு போவோமா அண்ணே?”

 

“டாக்டர் நான் வளரை வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?”, என்று கேட்டான் செழியன்.

 

“நான் உனக்கு டாக்டரா டா?”, என்ற கேள்வியை கண்களில் தேக்கி அவனை முறைத்த மது “வளர் இனி இப்படி செய்ய கூடாது. அப்புறம் வயிறு புண்ணா இருக்கும். அதனால கடினமான சாப்பாடு வேண்டாம். தண்ணி ஆகாரமா சாப்பிடு. அப்புறம் காரம் ரொம்ப சேத்துக்க வேண்டாம். உங்க அண்ணனை நாளைக்கு உன்னை இங்க கூட்டிட்டு வர சொல்லு. ஒரு தடவை செக் பண்ணனும். இப்ப வயித்து புண்ணு ஆற மருந்து கொடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

 

“அண்ணி ரொம்ப அழகு அப்படி தான அண்ணே?”

 

“ஹ்ம்ம்” என்று சொன்ன செழியனிடம் இருந்து ஒரு பெருமூச்சு வந்தது. :நீ உள்ள போய் மருந்து வாங்கிட்டு வா அண்ணே”, என்று சொல்லி அவனை உள்ளே பத்தி விட்டாள்.

 

மருந்தை எடுத்து கொண்டிருந்த மது அவன் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள். பின் “சில பேர் டாக்டர்னு சொன்னா எரிச்சலா வருது”, என்று அவனுக்கு கேட்கும் வகையில் யாரிடமோ சொல்வது போல சொன்னாள்.

 

“உரிமை இருக்குறவங்க தான் உறவு முறை சொல்லி கூப்பிட முடியும். அது இல்லாதவங்க மரியாதை கொடுத்து தான் சொல்லணும்”, என்றான் இளஞ்செழியன்.

 

அவன் கண்ணை நேருக்கு நேராக பார்த்தவள் தன்னுடைய கன்னத்தில் கை வைத்தாள். அதில் இருந்த பொருளை உணர்ந்து கொண்டான் செழியன்.

 

“உரிமை இல்லைன்னு சொல்லி எந்த உரிமையில் கையை நீட்டி என்னை அடிச்ச?”, என்று கேட்பதை போல் இருந்தது அவள் செய்கை.

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தாலும் மன்னிப்பு கேட்க மட்டும் அவனுக்கு மனதில்லை.

 

அவன் வேறு ஒன்றும் பேச போவதில்லை என்று அறிந்து அவன் கையில் மருந்தை கொடுத்தாள். அதை வாங்கும் போது அவள் விரலை பிடித்த படியே வாங்கியவன் அவள் கையை ஒரு தடவை அழுத்தி விட்டு தான் விலகினான்.

 

அந்த சிறு தொடுகையை தாங்க முடியாமல் கீழுதட்டை பற்களால் கடித்த படி நின்றாள் மது. அவள் முகத்தில் இருந்த வெட்கத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் மயங்கினாலும் அடுத்த நொடி பழைய விஷயங்கள் அனைத்தும் அணிவகுத்து மேல் எழும்பி வர விருட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

 

அவனுடைய உதாசீனம் பெரிதாக வலித்தது மதுவுக்கு. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போது தானே அவனை பார்க்க முடியும் என்ற மனதின் கூக்குரலை தட்ட முடியாமல் வெளியே சென்றாள்.

 

வளரை கை தாங்களாக அழைத்து செல்லும் போது அவன் கூடவே தான் நின்றாள் மது. தன்னுடைய ஒற்றை பார்வைக்காக ஏங்கி நிற்கும் பறவை போல அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

 

வீறாப்புடன் அவள் முகத்தை பார்க்காமல் இருந்தவன் சரியாக வெளியே செல்ல போகும் போது திரும்பி அவளை பார்த்தான். அதில் அவள் முகம் ஒளிர்ந்தது. அந்த நிம்மதியுடன் அங்கிருந்து சென்றான் இளஞ்செழியன்.

 

தாகம் தணியும்……

 

Advertisement