Advertisement

அத்தியாயம் 14
எட்டு திசை இருந்தும்
நீ போகும்
பாதையில் உன்னுடனே
பயணிக்க துடிக்கிறது
என் பாதங்கள்!!!
அந்த ஞாயிற்று கிழமை காலை எழும் போதே பரபரப்புடன் எழுந்தாள்.குளித்து முடித்து கீழே   வரும் போது மித்ரன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருந்தார்கள்.
அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களிடம் பேசி கொண்டிருந்தாள். மல்லிகாவும்    வாசுதேவனும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
காலை பத்து மணிக்கு பட்டு சேலை கட்டி நின்றவளை அலங்கரித்து விட்டாள் வைதேகி. முழு அலங்காரத்தில் தேவதை என இருந்தவளை கண்டு மல்லிகாவுக்கு சந்தோசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
“இத்தனை நாள் இவ முகத்தில் இப்படி ஒரு மலர்ச்சி இல்லையே. என் பொண்ணு இனியாவது நல்லா இருக்கணும்”, என்று நினைத்து கொண்டாள் அந்த தாய்.
செழியன் வீட்டிலோ எல்லாரும் கிளம்பி இருந்தாலும் செழியன் மட்டும் ஒரு வித பதட்டத்துடன் கிளம்பாமல் இருந்தான். அனைவரையும் பார்க்க அவனுக்கு தடுமாற்றமாக இருந்தது.
எல்லாவற்றையும் மறந்து அவனால் சாதாரணமாக மாப்பிள்ளையாக நினைக்க முடியவில்லை. பழைய விசயம் அவனுக்கு குற்ற உணர்வை தந்தது.
“நான் வரலை. நீங்க  மட்டும் போய்ட்டு வாங்க”, என்றான் செழியன்.
“அவங்களுக்கு மாப்பிள்ளையை பாக்கணும்னு இருக்காதா? ஒழுங்கா கிளம்பு டா”, என்று தங்கராசு சொன்னதும் வேண்டா வெறுப்பாக கிளம்பினான்.
“அண்ணே, உங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி எல்லாரும் பேசுறது எனக்கு சிரிப்பா வருதுண்ணே”, என்று அவனை கிண்டல் செய்து சிரித்தாள் வளர்.
அவள் கிண்டலில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவன் அவர்களுடன் சென்றான். அங்கு சென்ற போது இவர்களை அனைவரும் அன்புடன் வரவேற்றார்கள்.
செழியன் மட்டும் தான் நெருப்பின் மீது இருப்பது போல உணர்ந்தான். வாசுதேவன் சகஜமாக அவனிடம் பேசியதும் அவன் கொஞ்சம் நிம்மதியானான்.
“இப்படி பட்ட அப்பாவுக்காக மது அப்படி ஒரு காரியம் செய்யாமல் எப்படி இருந்திருக்க முடியும்?”, என்று எண்ணி கொண்டான். மல்லிகா விழுந்து விழுந்து அனைவரையும் கவனித்தாள்.
அழகு சிலை என அழைத்து வர பட்ட மதுவை கண்டதும் பூங்காவனம் மற்றும் தங்கராசுவுக்கு பூரிப்பாக இருந்தது.
நிமிர்ந்து பார்த்த செழியனும் இமைக்க மறந்தான். அவன் கண்களில் மின்னலை கண்ட மதுவுக்கு மனம் மலர்ந்தது.
தான் கொண்டு வந்திருந்த பூவை மதுவுக்கு சூட்டி விட்டு உறுதி படுத்தி கொண்டாள் பூங்காவனம். நிச்சய தாம்பூலம் மாற்றி கொள்ள பட்டது. “நல்ல நாள் பார்க்கலாம்”, என்று பேச பட்டது.
“எனக்கு ரிசல்ட் வந்து நான் காலேஜ்ல சேந்த அப்புறம் தான் கல்யாணம் வைக்கணும்”, என்று அந்த வீட்டின் இளவரசி வளர் உத்தரவு போட்டதும் எல்லாரும் சிரித்து கொண்டே சரி என்றார்கள்.
அவளை மித்ரனின் கண்கள் உரிமையுடன் ரசித்தது. அவன் பார்வையில் ஒரு வித படபடப்பை உணர்ந்த வளர் முதல் முறை வெட்கமென்னும் போர்வைக்குள் நுழைந்து கொண்டாள்.
மூன்று மாதம் கழித்து தான் திருமணம் என்று முடிவு செய்ய பட்டது. இடையில் வள்ளி கல்யாணத்துக்கு தாய் மாமனாக தங்கராசு மட்டும் அழைக்காமலே சென்று வந்தார்.
வளருக்கு ரிசல்ட் வந்தது. எல்லாருடைய ஆசை படி அவள் தான் அந்த மாநிலத்திலே முதலாவதாக வந்திருந்தாள். எல்லாரும் அவளை பாராட்ட, வளரோ கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்.
“பாப்பா எதுக்கு அழுற? நீ தான பர்ஸ்ட். அப்புறம் என்ன?”, என்று கேட்டான் செழியன்.
“போண்ணே, உன்னை விட முந்தனும்னு நினைச்சேன். ஆனா நடக்கலை”
“நீ என்னை விட கூட மார்க் தான பாப்பா?”
“ஆனா ஒரு பாடத்துல உன்னை விட குறைஞ்சிட்டேனே? எனக்கு சொல்லி கொடுத்த உன் ஆள் சரி இல்லை”, என்று சிரித்தாள் வளர்.
“ஏய், அண்ணியையா சொல்ற?”, என்று அவள் மண்டையில் கொட்டினான் செழியன்.
“பாருடா, பொண்டாட்டியை சொன்ன உடனே சாருக்கு கோபம்”, என்று சிரித்தாள்.
அதன் பின் என்ஜினீரிங்க்கு அப்ளை செய்தாள். மெடிகளுக்கு  அப்ளை செய்ய சொல்லி செழியனும் மதுவும் சொன்ன போது “வீட்ல ஒரு டாக்டர் போதும். நான் என்ஜினீயர்க்கு  படிக்கிறேன்”, என்று சொன்ன வளர் ஒரு டாக்டர் போதும் என்று மதுவை சொன்னாளோ மித்ரனை சொன்னாளோ யாருக்கு  தெரியும்?
கவுன்சிலிங்க்கு அழைப்பு வந்திருந்தது. வளரும் செழியனும் சென்னை போக பிளான் செய்த போது வாசுதேவன் அவர்களை மித்ரன் வீட்டில் தங்க சொல்லி வற்புறுத்தினார்.
வளரை பார்க்க இப்படி ஒரு வாய்ப்பு இருக்கு என்று அறிந்த மித்ரன் கோகுலிடம் சொல்லி செழியனிடம் பேச வைத்து வளரை தங்கள் வீட்டுக்கு வர வைக்க அவனால் ஆன மட்டும்  வேலை செய்தான்.
எல்லாருடைய வற்புறுத்தலால் ஒத்து கொண்ட செழியன் வளரை அழைத்து கொண்டு மித்ரன் வீட்டுக்கு சென்றான். வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றான் மித்ரன்.
தன்னை கண்டு கொள்ளாமல் செழியனை நண்பனாக்கி கொள்ள முயன்று கொண்டிருந்த மித்ரனை பார்த்து குழம்பிய வளர் முதல் முறையாக அவன் ஏன் தன்னிடம் பேச வில்லை என்று கவலையாக யோசித்தாள்.
சென்னை அண்ணா யூனிவெர்சிட்டியே கிடைக்க சந்தோசத்துடன் அங்கிருந்து கிளம்பினார்கள். மித்ரனோ “இனி என் வளர் பக்கத்துலே இருப்பா”, என்று சந்தோஷத்தில்  குதுகளித்தான்.
“உன் பையன் கிட்ட எதுவோ வித்தியாசம் தெரியுதே கவனிச்சியா?”, என்று கேட்டார் கோகுல்.
“என் பையன் மட்டும் தானா? உங்களுக்கு சம்பந்தம் இல்லையா?”, என்று கேட்ட வைதேகி “காதலிச்ச நமக்கு தெரியாதா நம்ம பையனோட காதல். ஆனா இன்னும் நாலு வருசம் பொறுமையா இருக்கணும். அப்ப இவனுக்கு கிட்ட தட்ட முப்பது வயசு நெருங்கிரும். வயசு வித்தியாசம் அதிகமா இருக்குமோன்னு தான் யோசிக்கிறேன்”, என்றாள்.
“ஹ்ம்ம் எனக்கும் அதான் கவலையா இருக்கு. பாப்போம்”, என்று முடித்து விட்டார் கோகுல்.
செழியன் மது கல்யாணம் உறுதி செய்ய பட்டிருந்த தேதியில் இருந்து இரண்டு வாரம் கழித்து வளர் காலேஜில் சேரும் படி இருந்தது. வளர்  “நான் காலேஜ் சேந்த அப்புறம் வச்சிக்கலாம்ல?”, என்று சொல்லி முகத்தை தூக்கினாள்.
“இப்ப தான் நிறைஞ்ச முகுர்த்தம்”, என்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்தார்கள்.
இடை  பட்ட நாட்களில் செழியனும் மதுவும் பேசவும் இல்லை, பார்த்து கொள்ளவும் இல்லை. இருவரும் அதற்கு முயற்சி செய்யவும்இல்லை. இருவருக்குள்ளும் இருந்த காதல் அப்படியே இருந்தாலும் அதை விட அதிகமாக குற்றவுணர்வு இருந்தது. அது அவர்களை இயல்பாக இருக்க விட வில்லை.
இது பெரியவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொண்டார்கள். முகத்தில் மலர்ச்சியுடன் திரியும் மணமக்களை கண்டு யாருக்கும் சந்தேகம் வர வில்லை.
ஆனால் இருவருக்குள்ளும் ஒரு மௌன யுத்தமே நடந்து கொண்டிருந்தது.  அவளுக்கு தீராத வேதனையை கொடுத்து விட்டோம் என்ற வலி அவனுக்குள்ளே.
யாரும் செய்ய கூடாத காரியத்தை செய்து அவன் காதலையே கொன்ற குற்றவுணர்ச்சி அவளுக்குள்ளே.
வாசுதேவனும் தங்கராசுவும் போனிலும் நேரிலும் கல்யாண வேலையை பற்றி பேசி கொண்டார்கள்.
துணி எடுக்க இரண்டு குடும்பமும் மதுரைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள். அவனை காணும் ஆவலில் இருந்தாள் மது.
வழக்கம் போல் “நான் வரலை, நீங்க போய்ட்டு வாங்க”, என்று  சொன்னான் செழியன்.
அவனை சமாதான படுத்தி வர வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது.  “சரி சரி வரேன். சுடர் எப்ப வருவா?”, என்று கேட்டான் செழியன்.
“அவ நேரா கடைக்கு வரேன்னு சொல்லிட்டா டா. நாம தான் போகணும். கிளம்பு”, என்றாள் பூங்காவனம்.
“மது வீட்ல கார்ல போவாங்க. நாம எப்படி போக?”, என்று கேட்டான் செழியன்.
“நாங்க பஸ்ல வரோம்னு தான் சொன்னேன். ஆனா சம்பந்தி தான் நான் மதுவையும் அவங்க அம்மாவையும் கடைல விட்டுட்டு உங்களை கூப்பிட கார் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டார்”, என்று தங்கராசு சொன்னதும் “எதுக்கு பா அவங்களுக்கு சிரமம்? நாம பஸ்ல போய்ரலாம்”, என்றான்.
“நான் சொன்னேன் அவர் கேக்கலையே”
“அப்படின்னா ஒண்ணு செய்யலாம். கார்ல ஒரே தடவையா போய்ரலாம். நானும் பாப்பாவும் என் பைக்ல வரோம். அம்மா அத்தை மது மூணு பேரும் பின்னால உக்காரட்டும். நீங்களும் மாமாவும் முன்னால உக்காந்துக்கோங்க. பெட்ரோல் செலவு எதுக்கு?”
“இதுவும் நல்ல யோசனை தான். சரி அவங்க இன்னும் கிளம்பிருக்க மாட்டாங்க. நாம அங்க போய்ருவோம்”, என்று தங்கராசு சொன்னதும் அனைவரும் கிளம்பி மது வீட்டுக்கு சென்றார்கள்.
இவர்கள் அங்கே போன போது மது வீட்டில் அனைவரும் பர பரப்பாக கிளம்பி கொண்டிருந்தார்கள். இவர்களை கண்டதும் மல்லிகா வரவேற்றாள்.
செழியன் சொன்ன பிளானை சொன்னதும் வாசுதேவனும் “சரி”, என்று சொன்னார்.
சிறிது யோசித்த வளர், அனைவரும் கிளம்பியதும் “அம்மா நான் அண்ணன் கூட போகலை. நான் கார்ல வரேன்”, என்றாள்.
“அடியே, நீயும் கார்ல ஏறினா எப்படி நாலு பேர் உக்காற முடியும்?”
“ரொம்ப வெயிலா இருக்கு மா”
“சரி, அப்ப நான் செழியன் கூட உக்காந்துக்குறேன்”
“காரியத்தை கெடுக்காத மா”, என்று எண்ணி கொண்டு “அம்மா உனக்கும் பிரஷர் இருக்கு. பேசாம அண்ணி அண்ணன் கூட வரட்டும். அவங்களும் ஒண்ணா போன மாதிரி இருக்கும்ல ?”, என்றாள்.
“அட ஆமா, இது எனக்கு தோணலையே. இதுவும் நல்ல யோசனை தான். மது நீ செழியன் பின்னாடி உக்காரு மா”, என்று பூங்காவனம் சொன்னதும் எல்லாரும் சிரித்து விட்டு காரில் ஏறினார்கள்.  மதுவோ திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.
காரை கிளப்பிய வாசுதேவன் “ரெண்டு பேரும் பாத்து வாங்க”, என்றார்.
“மெதுவா பொறுமையா வாங்க. வழில இருக்குற முருகர் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வா பா. நாங்க முன்னாடி போய் பாத்துட்டு இருக்கோம்”, என்றார் தங்கராசு.
கார் கிளம்பியதும் வண்டியை எடுத்தான் செழியன். அவன் அருகில் சென்றவள் ஏறாமல் தயக்கத்துடன் நின்றாள்.
ஏறு என்று சொல்ல முடியாதவனோ பைக் சத்தத்தை கூட்டினான். அந்த சத்தத்தில் வண்டியை பிடித்து கொண்டே ஏறியவள் அவனை சிறிது உரசிய படியே அமர்ந்தாள்.
அதில் அவன் தேகம் சிலிர்த்தது. “இன்னும் கொஞ்சம் நெருங்கி உக்காரலாம்ல?”, என்ற எண்ணம் அவனுக்குள் உதயமானது.
“கையை கூட பாரு, வண்டில வச்சிருக்கா. இடுப்பை பிடிக்கலைன்னாலும் தோள்ல கை வைக்கலாம்ல?”, என்று நினைத்தவன் “என்னை பிடிக்காம விதியென்னு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா?”, என்று கோபத்துடன் எண்ணினான்.
அந்த கோபத்தை வண்டியில் காண்பித்தான். வேகம் கூட்டியதும் பயந்து போனவள் அவளை அறியாமலே அவன் தோளை பிடித்தாள்.
அதில் அவன் வேகம் குறைத்தான். அதை புரிந்து கொண்ட மது கோயில் வரும் வரை அவன் தோளில் இருந்து கையை எடுக்க வில்லை.
இருவரும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்தாலும் இருவர் மனதுக்குள்ளும் நிம்மதியாக இருந்தது. கோயிலுக்கு அழைத்து சென்று சாமி கும்பிட்ட பின்னர் மீண்டும் பயணம் தொடர்ந்தது.
இந்த முறை அவன் வேகம் கூட்டாமலே அவன் தோளை பிடித்து கொண்டாள் மது.
இவர்கள் கடைக்கு போன போது அங்கே அனைவரும் உடை தேர்வில் இருந்தார்கள். சுடர் தன்னுடைய கணவன் மற்றும்  குழந்தைுயுடன் வந்திருந்தாள்.
வளர் சுடர் இருவருமே அண்ணி அண்ணி என்று மதுவிடம் ஒட்டி கொண்டார்கள். மது அவனுடைய பார்வைக்காக தவம் இருந்தாள். அவன் அவள் எதிர்பார்த்த பார்வையை அவள் பார்க்காத போது கொடுத்தான்.
மதிய உணவை கடையில் சாப்பிட்டு விட்டு தாலி செயின் எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வரும் போது ஆறு மணி ஆகி இருந்தது. மது வீட்டில் அனைவரும் இறங்கினார்கள். பின் செழியன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.
மற்ற மூவரும் மது வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு நடந்து சென்றார்கள். கல்யாண நாளும் வந்தது. ஒரு வாரம் முன்பே மித்ரன் வந்து விட்டான்.
கோகுலும் வைதேகியும் இரண்டு நாள் முன்பு வந்திருந்தார்கள். கல்யாண நாள் அன்று அந்த ஊரே அந்த மண்டபத்தில் நிறைந்திருந்தது.
பட்டுசேலை அணிந்து அழகான ஆபரணங்களால் அலங்கரிக்க பட்டு அழகு சிலை என வந்த மதுவை கண் இமைக்காமல் பார்த்தான் செழியன்.
பட்டு வேஸ்ட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் செழியன். இவன் தான் எவ்வளவு அழகாய் இருக்கிறான்?”, என்று நினைத்து கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் மது.
ஐயர் மந்திரம் ஓத  அனைவரின் ஆசியோடு அவள் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை கட்டினான் செழியன். தாலி கட்டியதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மது.
ஒரு நொடி பழைய விஷயம் நினைவில் வந்தது. இருவர் கண்ணிலும் ஒரே மாதிரியான வேதனை பிரதிபலித்தது. அந்த வேதனையை மல்லிகாவும் வாசுதேவனும் புரிந்து கொண்டார்கள்.
தாலி கட்டியதும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இருவரும் ரிசப்ஷன் உடை அணிந்து மேடையில் நின்றார்கள்.
ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருந்த ஜோடியை பார்த்து அனைவரும் வியந்தார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லையே தவிர இருவர் முகமும் சந்தோசத்துடன் மலர்ந்திருந்தது.
இரண்டு மணிக்கு ரிசப்ஷன் முடிந்ததும் மறுவீட்டுக்கு மது வீட்டுக்கு வந்தார்கள். அங்கேயும் நான்கு மணியில் இருந்து மறு வீடு விருந்து ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.
ஏழு மணிக்கு சீர்வரிசையுடன் செழியன் வீட்டுக்கு கிளம்பினார்கள். சொந்தங்கள் கிளம்பியதும் அங்கு குடும்பமாக அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
ஒன்பது மணி போல் “அண்ணி கசகசன்னு இருந்தா குளிங்க”, என்றாள் சுடர். மதுவுக்கும் குளிக்க வேண்டும் போல் இருந்ததால் “சரி”, என்று சொல்லி அவனுடைய அறைக்குள் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் செழியன் வெளியே வந்து விட்டான். முகத்தில் அறைந்ததை போல் உணர்ந்தாள்  மது. காலையில் இருந்து இது வரை இருந்த இதம் தொலைந்தது போல உணர்ந்தாள் மது.
குளித்து முடித்து வெளியே வரும் போது அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
“தலையை உளர்த்து கண்ணு. சளி பிடிக்க போகுது”, என்றாள் பூங்காவனம்.
பத்து மணி யாகும் போது செழியன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். மற்ற அனைவரும் கிளம்பினார்கள். புரியாமல் மாமியாரை பார்த்தாள் மது.
“உங்க வீட்டுக்கு தான் மா எல்லாரும் போறோம். அண்ணி வர சொன்னாங்க. அடுப்புல பால் இருக்கு. அவனுக்கும் கொடு. காலைல நாங்க வாறோம்”, என்று பூங்காவனம் சொன்னதும் எல்லாரும் கிளம்பி விட்டார்கள்.
கிடைத்த தனிமையில் திகைத்து நின்றாள் மது. செழியனோ கட்டிலில் படுத்து யோசித்து கொண்டிருந்தான்.
மது வீட்டில் வானத்தை பார்த்து கொண்டு வாசலில் அமர்ந்திருந்தான் மித்ரன். அவனுக்கு வளர் நினைவு தான் வந்தது.
அவன் அவள் பின்னேயே கல்யாணத்தில் திரிந்தான் என்றால் அவளோ அவன் ஒருவன் இருப்பதையே மறந்து கல்யாணத்தில் புன்னகை பூத்த முகத்துடன் உலாவினாள்.
அவனுடைய மனதில் தோன்றிய காதல் அவனை நிம்மதி இழக்கவைத்தது. அதே காதல் அவள் மனதில் தோன்ற வில்லை என்று எண்ணி நிம்மதி இழந்தான்.
அதை அவளிடம் சொல்லவும் மனதில்லை. எப்படி சொல்வது என்றும் அவனுக்கு புரிய வில்லை. அவளை பற்றியே யோசித்து கொண்டிருக்கும் போது தான் செழியன் குடும்பமே வந்தது.
அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்தது. செழியனுக்கும் மதுவுக்கும் தனிமை கொடுக்க தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது.
“வாங்க எல்லாரும்”, என்று சொன்னவன் பார்வை அவனை கேக்காமலே வளர் பக்கம் சென்றது.
அவளோ நட்புடன் அவனை பார்த்து சிரித்தாள். அதில் விரக்தி புன்னகையை சிந்தியவன் அவள் பக்கம் பார்வையை திருப்பாமலே உள்ளே சென்றான்.
பின் அனைவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள். பின் வாசுதேவனும் மல்லிகாவும் அவர்களுக்கு  தூங்க அறையை ஏற்பாடு செய்தார்கள்.
இங்கே செழியனோ அறையில் அவள் வரவுக்காக காத்திருந்தான். அறைக்கு வெளியே திரு திருவென்று விழித்து கொண்டிருந்த மதுவோ அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் சிந்தித்தாள்.
எவ்வளவு நேரம் தான் அப்படியே இருப்பது? காலையில் இருந்து ஓய்வில்லாமல் இருந்த உடல் களைத்து போனது. ஓய்வுக்காக உடல் கெஞ்சியது. வேறு வழி இல்லாமல் பாலை சூடு செய்து எடுத்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே வந்ததும் கண்களை திறந்து அவளை பார்த்தான். சாதாரண புடைவையிலும் அழகாக இருந்தாள். கழுத்தில் இருந்த தாலி அவனுடைய உரிமையை சொன்னது.  ஆனால் அந்த உரிமையை நிலை நாட்ட விடாமல் எதுவோ ஒன்று தடுத்தது.
அவன் அருகே வந்த மது பால் டம்ளரை அவன் கையில் கொடுத்தாள். அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தவன் “உனக்கு இல்லையா மது?”, என்று கேட்டான்.
அவன் பேசியதில் அவள் முகம் மலர்ந்தது. சந்தோசத்துடன் “எனக்கு வேண்டாம்”, என்று சிரித்தாள். அவன் குடித்து முடித்து விட்டு டம்ளரை டேபிள் மீது வைத்ததும் மது ஒரு மூலையில் இருந்த பாயை கையில் எடுத்தாள்.
“ஏய் என்ன கீழ படுக்க போறியா? மேல படு மது”
“இல்லை பரவால்ல உங்களுக்கு சங்கடமா இருக்கும். நீங்க ப்ரீயா படுங்க”
“அப்படி எல்லாம் இல்லை. நீயும் மேல படு. சொல்றேன்ல கேளு”, என்று சொன்னதும் பாயை வைத்து விட்டு மற்றொரு ஓரத்தில் கட்டிலில் அமர்ந்தாள்.
“பெட்ஷீட் வேணுமா மது?”
“ஹ்ம்ம் வேணும்”
“இந்தா இதை வச்சிக்கோ. எனக்கு வேண்டாம்” என்று சொல்லி கொடுத்தான். அதை சிரித்து கொண்டே வாங்கி கொண்டாள். உள்ளுக்குள் இருவருக்குமே நெருடலாக இருந்தாலும் இருவருடைய புன்னகையும் இருவருக்கும் இதத்தை கொடுத்தது.
அவள் படுத்ததும் “லைட் ஆப் பண்ணவா ?”, என்று கேட்டான் செழியன்.
“இல்லை கொஞ்ச நேரம் இருக்கட்டுமே. நான் அப்புறமா ஆப் பண்ணிக்கவா?”
“ஹ்ம்ம் சரி”,என்று சொல்லி விட்டு அவள் அருகில் படுத்தான்.
இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் இருவருக்குமே பழைய எண்ணங்கள் அணிவகுத்தது.
தாகம் தணியும்……

Advertisement