Advertisement

அத்தியாயம் 13
என் வானவில்லே
நீ தான் என்று
அறிந்த பின் தான்
உணர்கிறேன் அழகான
வர்ண ஜாலங்களை!!!
அவனோ “ஒரு வார்த்தை வான்னு சொல்றாளா. எப்படி முழிச்சிட்டு இருக்கா பாரு”, என்று நினைத்து கொண்டிருந்தான்.
“என்ன மது, யாரு வந்திருக்கா?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்த மல்லிகா செழியனை கண்டு திகைத்தாள்.
செழியனை இப்போது அவள் பார்த்ததில்லை. சிறு வயதில் பார்த்தது தான்.
ஆனால் மது மற்றும் அவன் முகத்தை வைத்து அது அவனாக தான் இருக்கும் என்று நினைத்து “தம்பியை உள்ள கூட்டிட்டு வந்து உக்காற வை மது”, என்று சொல்லி விட்டு கிட்சன் உள்ளே சென்று விட்டாள்.
அப்போது தான் உயிர் வந்தது போல உணர்ந்த மது ஒரு பரபரப்புடன் “உள்ள வாங்க”, என்றாள்.
“உள்ள வரதுக்கே அவங்க அம்மா தான் கூப்பிட வேண்டி இருக்கு”, என்று  நினைத்து கொண்டு ஒரு இறுக்கத்துடன் உள்ளே வந்தான்.
“உக்காருங்க”, என்று சோபாவை கை காட்டியவள் அவன் முறைப்பை கண்டதும் வாயை மூடி கொண்டாள்.
“மது இங்க வா”, என்று மல்லிகா அழைத்ததும் உள்ளே சென்றாள்.
“இவ அப்பா எங்க? அவர் கிட்ட தான பேசணும்”, என்று நினைத்து கண்களை சுழல விட்டான்.
அப்போது கையில் காபி டம்ளரை எடுத்து கொண்டு வந்தாள் மது.
“இந்தாங்க காப்பி குடிங்க”, என்று கொடுத்தவளை அவன் பார்க்க கூட இல்லை. அந்த டம்ளரையே வெறித்தான். அவன் வாங்க போவதில்லை என்பதை உணர்ந்தவள் அவன் முன்னே இருந்த டீப்பாயில் வைத்தாள்.
சிறிது நேரம் அந்த இடமே அமைதியாக இருந்தது.
கிட்சன் உள்ளே இருந்த மல்லிகாவோ நிலை கொள்ளாமல் தவித்தாள். செழியன் வந்தது அவள் மனதுக்கு இதமாக இருந்தது. தன்னுடைய மகளின் மன துயரை அறிந்தவளாயிற்றே?
எப்படியாவது அவளுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று காத்திருக்கும் நேரத்தில் வரம் தரும் சாமியே வீடு தேடி வந்தால் அவளும் தான் என்ன செய்வாள். சந்தோசத்தில் திக்கு முக்காடி போனாள்.
“முன்னாடி விட பாக்க வாட்ட சாட்டமா இருக்கார். ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும். நல்லதா போச்சு. இந்நேரம் மது அப்பா இங்க இல்லை. இருந்திருந்தா ஏதாவது வாக்குவாதம் வந்திருக்கும். இப்ப எதுக்கு இந்த தம்பி வந்துருக்கு தெரியலையே”, என்று யோசித்து கொண்டிருந்தாள்.
மனது மூளையை கிண்டி யோசித்து கொண்டிருந்தாலும் கைகள் காலை சமையலை செய்து கொண்டிருந்தது.
மதுவோ நிலை கொள்ளாமல் தவித்தாள். அவன் வந்தது மனதுக்கு சந்தோசமாக இருந்தாலும் வந்த காரணத்தை யூகிக்க முடியாமல் தவித்தாள். அவனோ தனக்குள்ளே யோசனையில் மூழ்கி இருந்தான்.
அவன் பேச மாட்டான் என்று நினைத்து “யாருக்கும் உடம்பு சரி இல்லையா?”, என்று தயக்கத்தை உதறி கேள்வி கேட்டாள் மது.
தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த செழியன் “ஏன் உன்னை டாக்டரா நினைச்சு தான் தேடி வந்திருக்கேன்னு நினைக்கிறியா?”, என்று கண்களில் கூர்மையுடன் கேட்டான்.
“அப்ப என்னை தேடியா வந்துருக்கான்? எனக்காகவா என் வீட்டு படி ஏறி வந்துருக்கான்?”, என்று நினைத்து மனது குதூகலித்தது.
.
“இல்லை திடீர்னு வந்துருக்கீங்களா? எனக்கு ஒண்ணும் புரியலை அதான்”, என்று இழுத்தாள் மது.
“ஆமா உனக்கு என்னைக்கு தான் புரிஞ்சிருக்கு”, என்று நக்கலாக கேட்டதும் உதட்டை கடித்தாள் மது.
அவள் உதட்டின் மீது அவன் பார்வை சென்றது. அவன் மனதும், முகமும் மென்மையானது. அவள் இதழில் தேன் குடித்த நிமிடங்கள் கால நேரம் தெரியாமல் நினைவில் வந்து இம்சித்தது.
அவன் மன நிலை புரியாதவளோ “சாரி”, என்றாள்.
தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவன் “எதுக்கு இந்த சாரி? சரி விடு. உங்க அப்பா எங்க? அவர் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான்.
“அப்பா கிட்டயா? அப்பா வீட்ல இல்லையே”
“எங்க போய்ருக்கார்?”
“அப்பாவும் மித்ரனும் வெளிய போனாங்க”, என்று சொன்னவள் “மித்ரன் யார்னு கேப்பானோ ?”, என்று நினைத்தாள்.
அவனோ அதை பற்றி எதுவும் சொல்லாமல் “எப்ப வருவார்?”, என்று கேட்டான்.
“இருங்க, அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு மல்லிகாவை தேடி சென்று “அப்பாவை பாக்க வந்துருக்காங்க மா. அப்பா எப்ப வருவாங்க ?”, என்று கேட்டாள்.
“இப்ப வந்துருவாங்க. நீ அவரை வெயிட் பண்ண சொல்லு. சாப்பிடுறீங்களான்னு கேளு”
 “சரி மா”, என்று சொல்லி விட்டு வந்தவள் “அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்களாம்”, என்றாள்.
 “சரி நான் அப்புறம் வந்து பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்தான்.
“சாப்பிட்டுட்டு வெயிட் பண்ணுங்களேன். அப்பா வந்துருவாங்க”
“இல்லை வேண்டாம்”
“நிஜமாவே நீங்க அப்பாவை பாக்க தான் வந்தீங்களா?”, என்று கேட்ட மதுவின் குரலில் சிறு சிணுக்கம் இருந்தது.
அதை உணர்ந்த செழியனுக்கு பழைய மதுவை கண்டது போல இருந்தது. “ஆமா உங்க அப்பாவை பாக்க தான் வந்தேன். ஆனா என் பொண்டாட்டியை கூட்டிட்டு போக பெர்மிஷன் கேக்க வந்தேன்”, என்று சொன்னதும் முகம் மலர்ந்து அவனை பார்த்தாள்.
இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் விழுங்கி கொண்டது.
அவன் கண்களில் தொலைந்து போக அவள் துடித்தாள் என்றால் அவனோ “மறுபடி மயங்காத டா”, என்று தனக்குள் சொல்லி கொண்டான்.
இருவரும் பார்வையாலே பேசி கொண்டிருக்க “சாப்பாடு எடுத்து வைக்கவா?”, என்று கேட்ட படியே அங்கு வந்தாள் மல்லிகா.
அவள் குரலில் கலைந்தனர் இருவரும். “எனக்கு வேண்டாம். நான் மதுவோட அப்பா கிட்டயும் உங்க கிட்டயும் பேச தான் வந்தேன். அவ அப்பா வந்ததும் வரேன். இப்ப கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு விருட்டென்று வெளியே வந்த செழியன் அடுத்த தெருவுக்கு போய் தான் நிம்மதியாக மூச்சு விட்டான்.
“மாமியார் எப்பவுமே சாப்ட் தான் போல. மாமனார் தான் டெரர் பார்ட்டி. எப்படி சமாளிக்க போறேனோ?”, என்று நினைத்து கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.
வேறு தெரு வழியாக வந்த மித்ரனும் வாசுதேவனும் அப்போது தான் தங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மதுவோ சோபாவில் சிலையாக அமர்ந்திருந்தாள்.
“அத்தை, என்ன இது? சிலை எல்லாம் நடு ஹாலில் வந்து உக்காந்துருக்கு?”, என்று சிரித்த மித்ரன் பேச்சை கூட கவனிக்காமல் இருந்தவளை மண்டையில் நங்கென்று கொட்டி நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தான்.
“என்ன ஆச்சு மது? ஏன் இப்படி இருக்க?”, என்று கேட்டார் வாசுதேவன்.
“ஆன், அது…. அது வந்து பா…”, என்று இழுத்த மதுவை கண்ட மல்லிகா  “அந்த தம்பி வந்துருச்சுங்க. உங்க கிட்ட ஏதோ பேச வந்துச்சாம். காப்பி தண்ணி கூட குடிக்காம போய்ருச்சு. நீங்க கோப படாதீங்க. நம்ம பொண்ணோட வாழ்க்கை பிரச்சைனங்க”, என்றாள்.
“கோபமா? என் மருமகன் மேல நான் கோப பட முடியுமா? அப்படி கோப பட்டா என் மகள் சும்மா விட்டுருவாளா?”, என்று சொல்லி சிரித்தார் வாசுதேவன்.
“நீங்க உங்க மருமகன் மேல கோப பட்டப்ப நான் சும்மா தான பா இருந்தேன்”, என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் வாசுதேவன்சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது.
அடுத்த நொடி “டேடி”, என்று அழைத்த படி அவர் அருகில் வந்தாள். மல்லிகாவும் ஆச்சர்யமாக தன் கணவனை பார்த்தாள்.
இப்ப தான் மாப்பிள்ளை வீட்டில போய் பேசிட்டு வரோம். வர வெள்ளிக்கிழமை அவங்க வீட்டில இருந்து பொண்ணு பாக்க வருவாங்க”, என்று சொல்லி இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை கொடுத்தார்.
கண்களில் நீர் வழிய உதட்டில் புன்னகையுடன் நின்ற மதுவை அணைத்து கொண்டவர் கண்களும் கலங்கியது.
மித்ரன் தான் அவர்களை அழவிடாமல் காமெடி செய்து சிரிக்க வைத்தான்.
நேராக வீட்டுக்கு சென்ற செழியனை வரவேற்றது வளர் தான். அவள் முகம் முழுவதும் பூவாக மலர்ந்திருந்தது.
அவள் சந்தோசம் அவனையும் தொற்றி கொண்டது. “என்ன பாப்பா இப்படி ஒரு சந்தோசம். சுடர் வாராளா?”, என்று கேட்டான் செழியன்.
“அதெல்லாம் இல்லைண்ணே. என்னோட செல்ல அண்ணனுக்கு கல்யாணம் நடக்க போகுது, அதனால தான்”, என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கினாள்.
“வளர் நீ என்ன சொல்ற? எனக்கு கல்யாணமா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான்.
 “பின்ன என் அண்ணன் நீ தான?”
“விளையாடாத பாப்பா. நீ என்ன சொல்ற?”
“ஆமாண்ணே, கல்யாணம் உனக்கு தான். உனக்கு பிடிச்ச பொண்ணு கூட”
“எனக்கு பிடிச்ச பொண்ணா? அது யாருன்னு உனக்கே தெரியுமே? ஒரு வேளை காலைல அவங்க வீட்டுக்கு போனேன்ல?  பேசி முடிச்சிட்டேன்னு நினைச்சு சந்தோச படுறியா? இல்லை பாப்பா. நான் மது வீட்ல பேசலை. அவங்க அப்பா வீட்ல  இல்லை. நான் சாயங்காலம் போய் பேசின அப்புறம் சந்தோச படு. இப்பவே கற்பனை கோட்டை கட்ட வேண்டாம் பாப்பா”
“அண்ணா அண்ணா உனக்கு தான் விசயம் தெரியலை. நீ அண்ணியோட அப்பா கிட்ட பேசலைன்னு எனக்கு தெரியும். ஆனா என் சந்தோசம் நிஜம் தான்”
“வளர் ப்ளீஸ், என்னை குழப்பாத. நான் மது வீட்ல பேசாதது உனக்கு எப்படி தெரியும்?”
“அண்ணியோட அப்பா இங்க தான வந்துருந்தாங்க? அப்ப நீ எப்படி பேசியிருக்க முடியும்?”
“என்ன? மது அப்பா இங்க வந்துருந்தாரா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் இளஞ்செழியன்.
“ஹ்ம்ம் ஆமா  அண்ணா”
“வளர் இங்க வா. இப்படி உக்காரு. என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு பாப்போம்”
அவன் அருகில் அமர்ந்தவள் “நானே எதிர் பாக்கலைண்ணே. அப்படியே சாக் ஆகிட்டேன். ஆனா உங்க கல்யாணம் விசயம் தான் பேசினாங்க”, என்றாள்.
“அப்படியா? என்ன சொன்னாரு?”
“உங்க காதலை பத்தி ஒண்ணுமே சொல்லலைண்ணே. அண்ணிக்கு மாப்பிள்ளை பாக்குறோம்னு சொல்லி தான் ஆரம்பிச்சாரு. அப்பா என்கிட்ட கேட்டாரு. நானே அதுக்கு தான வெயிட் பண்றேன். உடனே சரின்னு சொல்லிட்டேன். வர ஞாயிற்று கிழமை நாம பொண்ணு பாக்க போறோம்”
“நிஜமாவா?”
“ஆமாண்ணே”
“நான் மது கிட்ட பேசவே இல்லையே. அவ என்ன நினைக்கிறான்னு தெரியலையே”
“போன் பண்ணி பேசு. அவங்க முடிவு உன்னோட முடிவா தான் இருக்கும். நீ பேசு”
“ஹ்ம்ம் சரி. நீ சாப்பிட்டியா?”
“சாப்பிடலை. நீ வா சேந்து சாப்பிடலாம்”, என்று சொல்லி அழைத்து கொண்டு சென்றாள் வளர்.
மதுவோ சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளால் நடப்பதை நம்பவும் முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் செழியனை நினைத்து பார்த்தால் மனதின் ஒரு ஓரத்தில் சிறு பயம் மட்டும் மிச்சம் இருந்தது.
“இன்னைக்கு அவன் வந்தது, அப்பா போய் பேசினது எல்லாம் எப்படி நடந்தது? செழியன் வந்து போனதை அம்மா அப்பா கிட்ட சொன்னப்ப அப்பா கோபமே படலை? அவனும் அப்பா கிட்ட கல்யாண விசயம் பத்தி பேச தான் வந்துருக்கான்? அப்பா எப்படி சம்மதிச்சாங்க? செழியன் பழசை எல்லாம் மறந்துருவானா? அப்படி மறந்துருந்தா என் காதலும் அழிஞ்சிருக்குமா? கல்யாணம் அப்புறம் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? “, என்று பலவாறு யோசித்து தவித்தாள்.
அவள் அருகே வந்த மித்ரன் “என்ன மது தீவிரமா யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான்.
“இல்லை என் கல்யாண விசயத்துல உன் பிளான் எதுவும் இருக்குமோன்னு யோசிக்கிறேன்”
“என்னது என் பிளானா? எனக்கு ஒண்ணும் தெரியாது பா”
“நம்பிட்டேன். என் மேல எதுவும் கோபமா மிட்டு? என் காதல் விசயம் அப்பா உன்கிட்ட சொல்லிருப்பாங்க. நான் உன்கிட்ட சொல்லலைன்னு என் மேல கோபமா?”
“என் மது மேல நான் எப்படி கோப படுவேன்? நீ என்னோட செல்ல தங்கச்சி, ஸ்வீட் பிரண்ட். சொல்ல கூடிய விசயமா இருந்தா நீசொல்லிருப்பியே மது? மாமா சொன்னப்ப ஷாக்கிங்கா தான் இருந்தது. பட் செழியன் வீட்ல பேச அவர் ரொம்ப தயங்கினார்.  நான் தான் மது சந்தோசம்  முக்கியம். தயக்கம் வேண்டாம்ன்னு சொல்லி கூட்டிட்டு போனேன்”
“தேங்க்ஸ் டா. அவங்க வீட்டில என்ன சொன்னாங்க?”
“உன்னை மருமகளா ஏத்துக்க அவங்களுக்கு கசக்குமா? எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். ஆனா நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன். பதில் சொல்ல முடியும்னா சொல்லு”
“என்ன டா?”
“நீங்க எதுக்காக மது பிரிஞ்சீங்க?”
“அது அது வந்து…”
“சொல்ல முடியலைன்னா விடு மா”
“அந்தரங்கம் புனிதமானது மிட்டு, அடுத்தவங்க கிட்ட ஷேர் பண்ணாத வரை. புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்”
“புரியுது. என் மது சந்தோசமா இருந்தா போதும். சரி நான் ஊருக்கு கிளம்புறேன் இப்ப”
“என்னது இப்பவா?”
“ஹ்ம்ம், பொண்ணு பாக்குற பங்க்சனுக்கு அம்மா அப்பாவை கூட்டிட்டு வரணும்ல? அப்பா, அம்மா உன்னை பாத்தா ரொம்ப சந்தோச படுவாங்க. மாப்பிள்ளை வேற சூப்பரா இருக்கார்”
“உண்மையாவா மிட்டு? செழியன் அழகா?”
“ரொம்ப ரொம்ப அழகு. என்ன ஒரு கம்பீரம். பாத்தாலே அழுத்தம்னுதெரியுது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“சரி அத்தை மாமாவை கூட்டிட்டு வா. பாத்து போய்ட்டு வா. போய்ட்டு போன் பண்ணு”
“ஹ்ம்ம் சரி”
“பஸ் ஸ்டாண்ட்க்கு அப்பா வரேன்னு சொன்னாங்களா?”
“ஹ்ம்ம் ஆமா, வா சாப்பிட போகலாம். கிளம்பணும்”, என்று சொல்லி அவளை அழைத்து சென்றான் மித்ரன்.
அன்று இரவு கையில் இருக்கும் போனை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் செழியன். மதுவின் எண் இருந்தும் அழைக்க தான் மனதில்லை.
அழைத்தாலும் என்ன பேசவென்று தெரிய வில்லை. பேச ஆயிரம் விசயம் இருக்கிறது தான். ஆனால் எப்படி பேச என்று தெரியாமல் தவித்தான்.
எவ்வளவு யோசித்தாலும் அவளை அழைக்க கடைசி வரை மனது வர வில்லை, போனை வைத்து விட்டு கடந்த காலத்தை நினைத்து கொண்டிருந்தான்.
அதே நேரம் மதுவும் அதை பற்றி தான் எண்ணி கொண்டிருந்தாள்.
வாழ்க்கை எப்படி இருக்கும் . பயம் வந்தது. செழியன் கட்டாயம் தன்னை மன்னிக்க மாட்டான்.
“அவன் கூட இருந்து அவன் என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கணும்”, என்று எண்ணி கொண்டாள்.
தாகம் தணியும்……

Advertisement